அன்று இரவு மெத்தையில் படுத்த அபய் ஸ்ரீ வத்ஸனுக்கு படுக்கை முள்ளாய் குத்தியது. இன்று மட்டுமல்ல வீட்டிற்கு வந்து சேர்ந்த நாளிலிருந்து அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.
நயனிக்கு இழைக்கப்பட்ட அநீதி, யாருமில்லாத அநாதை போல அவள் தனித்திருப்பது அவனை தூங்க விடவில்லை. இத்தனைக்கும் திருமணத்திற்கு முன்பு அவள் எப்படி இருந்தால் என்பதை பற்றி அவனுக்கும் தெரியும். சஞ்சு நயனியின் குடும்ப பின்னணி அவள் ஹாஸ்டல் வாழ்க்கை பற்றி பகிர்ந்து இருக்கிறாள்.
அப்போதெல்லாம் அதை செய்தியாக கடந்து விட்டவனுக்கு இப்போது அப்படி இருக்க முடியவில்லை.
பாடம் படிப்பிக்கும் ஆசிரியை மீது கல்லூரி மாணவன் அளித்திருக்கும் பொய் புகாரை நம்பிய தந்தை தொடங்கி தன் அன்னை, அவள் பெற்றோர் என்று அனைவர் மீதும் கோபம் பெருகியது. அதிலும் இதற்கு காரணமான ராஜனை எதுவும் செய்ய முடியாமல் இருப்பதில் தன் மீதே அவனுக்கு அத்தனை வெறுப்பு.
பின்னே ராஜன் கல்லூரி மாணவன் என்பதால் அவனிடம் தனிப்பட்ட முறையில் கை வைப்பது என்ன பேச்சு கூட வைத்து கொள்ள வேண்டாம் என்று விஜயகுமார் சொல்லி இருந்தார்.
அதனால் கல்லூரியில் அவனைப் பார்க்கும்போதெல்லாம் விடும் கோபத்தை கடினப்பட்டு கட்டுப்படுத்தி இருந்தான்.
சுதர்ஷனின் வீட்டில் இருப்பவள் எந்த நிலையில் இருக்கிறாளோ என்று உண்ணும் போதும் உறங்கும் போதும் மனம் முழுக்க நயனியை தான் தேடியது.
சுதர்சன் வீட்டில் அவன் அன்னை மனைவி மற்றும் கைக்குழந்தை மட்டும் தான். சுதர்சனின் அன்னை அன்பே வடிவானவர்! நிச்சயமாக நயனியை தவறாக நினைக்க மாட்டார். ஆனால் அவன் மனைவி எப்படி அவளிடம் நடந்து கொள்கிறார் என்று புரியாதவனுக்கு அக்கம் பக்கத்தில் வேறு யாரேனும் அவள் மனதை காயப்படுத்தி விடுவார்களோ என்று அச்சமும் இருந்தது.
எப்படியாவது அவளை வீட்டிற்கு அழைத்து வந்து விட வேண்டும் என்ற முடிவோடு கண்களை மூடினான். ஆனால் மூடிய இமைகளுக்குள் ஊடுருவி நின்றது உணர்வுகளற்ற போன நயனியின் முகமும் உயிர்ப்பற்றுப்போன அவள் விழிகளும்.
இப்போதெல்லாம் எந்த வேலையும் அவனால் இயல்பாக செய்ய முடியவில்லை. எதை செய்தாலும் நயனிகாவின் ஞாபகம் வாட்டி வதைத்தது.. அவள் தன் வீட்டில் இருந்தாலாவது ஓரளவு நிம்மதியாக இருப்பானோ என்னவோ!
ஆனால் அவள் சொன்னது போல நிச்சயம் தன் வீட்டில் இருப்பவர்கள் அவளை குத்திக்காட்டாமல் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தவனுக்கு இதற்கு என்னதான் தீர்வு என்று புரியாமல் மண்டையை பிடித்துக் கொண்டான்.
ராஜனை கண்காணிப்பதற்காக திவ்யா மட்டுமின்றி நம்பகமான இரண்டு ஆசிரியர்களையும் நியமித்து இருந்தான்.
காலை விடிந்ததுமே குளித்துவிட்டு அன்றாட வேலைகளை முடித்து உணவை கூட எடுக்காமல் அவளை தேடித்தான் சென்றான்.
சுதர்சன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது திவ்யா அவனுக்கு அழைத்தாள்.
"சொல்லுமா.."
"சார் இந்த வீக் என்ட் அவன் பார்ட்டி அட்டென்ட் பண்ண போறான்.."
"எங்க நடக்கிற பார்ட்டி? யாரெல்லாம் கலந்துப்பாங்க.."
"ஸார் அது பொதுவாவே அவனோட கெஸ்ட் ஹவுஸ்ல தான் நடக்கும். அது ஊருக்கு ஒதுக்குபுறமா வில்லேஜ்க்கு நடவுல இருக்கும்..."
"அட்ரெஸ் தெரியுமா திவ்யா? நீ அங்க போயிருக்கியா?"
"போயிருக்கேன் ஸார். ஃபோட்டஸ் கூட இருக்கு, உங்களுக்கு அனுப்பறேன்" என்றவள்,
"ஸார் பொதுவாக அவன் கேர்ள்ஸ் கூட சேர்ந்து தான் போவான் ஆனா இந்த முறை அவனுக்கு வேற ஏதோ ஒரு பிளான் இருக்கிறதால கொஞ்சம் லேட்டா வந்து ஜாயின் பண்ணிப்பேன்னு சொல்லி இருக்கான்..'
"அப்போ அவன் தனியா போக போறானா?!"
"ஆமா ஸார்!"
"ஏன் நீ போகலையா?"
"இல்ல ஸார் எங்க அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியல. அதனால இந்த முறை வர முடியாதுன்னு சொல்லிட்டேன்"
"எத்தனை மணின்னு தெரியுமா மா. எந்த ரூட்ல போவான்னு தெரியுமா"
"தெரியும் ஸார்" என்றவள் அவன் வழக்கமாக செல்லக்கூடிய பாதையை சொன்னவள், "அது நைட் பார்ட்டி! அதனால எப்படியும் ஒரு ஆறு ஏழு மணி போல தான் கிளம்புவான். இப்போ லேட்டாகும் சொல்லி இருக்கிறதால எத்தனை மணின்னு சரியா தெரியலை ஸார்"
"இட்ஸ் ஓகே மா நான் பார்த்துக்கிறேன்" என்றவன் சுதர்ஷன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.
அவன் வீட்டினுள் நுழைய அங்கே நயனிகா சுதர்ஷன் அன்னையின் மடியில் முகம் புதைத்து விசும்பிக் கொண்டிருந்தாள்.
"கவலப்படாதம்மா எல்லாம் சீக்கிரம் சரியாகும்" என்று அவளை தேற்றிக் கொண்டிருந்தார்.
அதை கண்டதுமே பதறிக் கொண்டு வந்தவன் "என்ன ஆச்சு மா" என்றான்.
"இன்னைக்கு நயனியோட தங்கச்சிக்கு நிச்சயதார்த்தமாம்! அவளால போக முடியலைன்னு வருத்தப்படுறா அபய்.. தங்கச்சி என்றால் ரொம்ப பிடிக்குமாம். அவளுக்காக எதையும் தைரியமா பேசுறது அந்த பொண்ணு தானாம் ஆனா அவளோட விசேஷத்துக்கு போக முடியாததுல அவளுக்கு மனசு தாங்கல" என்றிட நயனிகா கண்களை துடைத்தபடி எழுந்தமர்ந்தாள்.
"என்ன ஆச்சு நயனி, ஆர் யூ ஓகே நவ்!" என்று கேட்க அவளிடம் கனத்த அமைதி..
"உன்னை தான் கேட்கிறேன் என்ன ஆச்சு.."
"அது தெரிஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க?"
"நீ முதல்ல விஷயம் என்னன்னு சொல்லு.."
"அதுதான் ஆன்ட்டி சொன்னாங்களே கேட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்.." என்றவளுக்கு அவன் மீது அப்படி ஒரு கோபம்.
அவள் மீது சுமத்தப்பட்ட வீண்பழியினால் துவண்டு போகாமல் நிமிர்வோடு எதிர்கொள்பவளுக்கு இப்போது உயிருக்கு உயிராய் நேசிக்கும் தங்கையின் நிச்சயத்திற்கு செல்ல முடியவில்லை என்றுஆதங்கம் மேலோங்கியது அதற்கு 'காரணம் இவன்தானே!' என்று தோன்றாமல் இல்லை.
அபய்யை திருமணம் செய்யும் முடிவுக்கு வந்த போது நிச்சயமாக அவன் தன்னை உடனடியாக ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். தெரிந்தே தான் மணந்தால் மறுப்பதற்கு இல்லை.. ஆனால் இப்படி தன்னை விட்டு கண் காணாத தூரத்திற்கு செல்வான் என்று அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
தன் மீது எல்லையில்லா கோபம் கொண்டிருந்தவன் பேசிய பேச்சில் தன் உடனிருந்து தன்னை வார்த்தைகளால் செயலால் காயப்படுத்துவான் என்று தான் அவள் எண்ணி இருந்தாள். அதனால் அதை எதிர்பார்த்து அவனை எதிர்கொள்ளவும் துணிந்திருந்தாள்.
ஆனால் இப்படி ஒரு இக்கட்டில் தன்னை நிறுத்துவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
இரண்டு வருடம் வீட்டின் மருமகளாக தன் கடமையை சிறப்பாக செய்தவளை யாரும் பெரிதாக மதித்தது கிடையாது.
அங்கிருக்கும் சேர், சோஃபா, டேபிள் போல தான் இவளும்!!
ஒரே வீட்டில் இருந்தாலும் சக்கரவர்த்தியை அவள் காண்பது மிகவும் அரிதே! வினோதனும் அவன் மனைவியும் காலை ஏழு மணிக்கெல்லாம் அவர்களின் ஃபேக்டரிக்கு கிளம்பி விடுவார்கள் இரவு வந்து சேர 10 மணி ஆகிவிடும்.
முரளிதரனும் இளங்கொடியும் அவளை எதிரி போலவே பார்ப்பார்கள். அவர்கள் பெண்ணான சௌந்தர்யாவை அவளிடம் பேசக்கூடாது என்று கட்டுப்படுத்தி இருந்தனர். ஒருவேளை நயனியே பேச நெருங்கினாலும் பெற்றோர் சொல்படி இவளை கண்டதும் சௌந்தர்யா முகத்தில் அடித்தார் போல ஏதாவது சொல்லி சென்று விடுவாள்.
காலை கல்லூரிக்கு கிளம்பி மாலை வீடு திரும்பும் அவளுக்கு பேச்சுத்துணை என்று கூட யாரும் கிடையாது.
நிர்மலா அவளை வேதனைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளாவிட்டாலும் பேசாவிட்டாலும் பெரிதாக அவளோடு ஒட்டுதல் இல்லாமல் தான் இருந்தார்.
குறைந்தபட்சம் தனக்கு அவரது அன்பாவது கிடைக்கும் என்று வெகுவாக நம்பி இருந்தால் நயனிகா ஆனால் அவரும் தன் மகன் அவளை மனைவியாக ஏற்றுப் பிறகு மருமகளாக ஏற்பேன் என்பது உறுதியாக இருந்தார்.
அதனால் கேட்கும் கேள்விக்கு அவரிடம் இருந்து ஒற்றை வார்த்தையில் அல்லது ஒற்றை வாக்கியத்தில் பதில் கிடைக்கும் அதற்கு மேல் எதுவும் பேச மாட்டார்.
சக்கரவர்த்தி தன் வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு இரவு அவளை டைனிங் டேபிள் சந்திப்பவர் அன்றைய நாள் குறித்து விசாரித்து கொள்வரே தவிர அதற்கு மேல் எதுவும் பேச்சு இருக்காது.
அதனால் மாலையில் வந்ததும் தனக்கு காபி போட்டு குடித்துவிட்டு அறைக்குள் சென்று முடங்கி விடுவாள். ஆனால் தினமும் அவனுக்கு அழைப்பதை நிறுத்தவில்லை. என்றாவது ஒருநாள் தன் அழைப்பை ஏற்பான் என்ற நம்பிக்கையோடு அழைப்பதை நிறுத்தவில்லை.
ஆனால் அவள் நம்பிக்கை வருடம் ஒன்றை கடந்தும் பொய்த்து போனது .நான்கு சுவர்களுக்கும் தனிமையில் இருப்பவளுக்கு துணை என்று பெரிதாக யாரும் கிடையாது நிதிஷாவை தவிர..
கல்லூரியிலிருந்து வந்ததுமே அவளுக்கு வீடியோ காலில் அழைப்பவள் குறைந்தது ஒரு மணி நேரமாவது கதை அளந்து அவளை சிரிக்கச் செய்த இயல்பாக இருக்க வைக்க முயல்வாள்.
என்ன தான் தனலட்சுமியும் அவளிடம் பேசுவார் என்றாலும் தினமும் அவர் பேச்சில் மகள் வாழ்க்கை குறித்த கவலை மேலோங்கி இருக்கும்... சில நேரம் அவர் அழுது நயனியையும் அழ வைத்துவிடுவார்.
ஆனால் நிதிஷா அக்காவை புரிந்து கொண்டு அத்தான் பற்றிய கேள்விகளை எழுப்பாமல் நயனியுடனான உரையாடலை நகைச்சுவையோடு எடுத்துச் செல்வாள். சொல்லப் போனால் அபய் பற்றிய சிந்தனை அதிகமாக இல்லாமல் நயனி இருப்பது நிதிஷாவுடன் செலவிடும் நிமிடங்களில் தான்!!
கல்லூரியில் கூட அவளால் இப்படி இருந்து விட முடியாது.
ஒவ்வொரு நாளும் யாரவது ஒருவரின் அனுதாபப் பார்வை அவளை தீண்டி செல்லாமல் இருந்தது கிடையாது. அவள் வேறு இடத்தில் பணிபுரிந்திருந்தால் கூட இது நேர்ந்திருக்காது. கணவனின் கல்லூரியில் வேலை செய்கையில் தினமும் அவன் வருகைக்கு அனைவருமே பழகி இருந்தனர்.
என்ன தான் ஆசிரியர்கள் அவனோடு நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய நிலை இல்லை என்றாலும் அவன் வருகைக்கு அனைவருமே பழகி இருந்தனர்.
அதனால் இப்போது அபய் இந்தியாவில் இல்லை என்பதை அறிந்திருந்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடி போனாள்.
அதிலும் சிலர் "திருமணமான புதுப்பொண்டாட்டியை பிரிய எப்படி தான் மனசு வந்ததோ?! நானெல்லாம் அப்படி பட்ட பணமே வேண்டாம் என் பொண்டாட்டி தான் முக்கியம் என்று தூக்கி போட்டிருப்பேன்.." என்று அவள் எதிரிலேயே பேச சிறு புன்னகையோடு அவர்களை கடந்துவிடுவாள்.
சில நெருங்கிய நட்புகள் "கால் வந்ததா? ஏதாவது மெசேஜ் அனுப்பினாரா? சீக்கிரம் சரியாயிடும் நயனி டோன்ட் வொரி" என்று ஆறுதல் சொல்கிறோம் என்ற பெயரில் அவள் ரணத்தை கிளறி விட்டுப் போய்விடுவார்கள்.
ஸ்டாஃப்ரூமில் இருந்தால் நிச்சயம் இது போன்ற பேச்சுக்களை தவிர்க்க முடியாது என்பதாலேயே தன்னை மற்றவர்களிடம் இருந்து விலக்கிக் கொண்டு முடிந்தவரை வகுப்பு முடிந்ததும் மற்ற நேரங்களில் லைப்ரரியில் சென்று அமர்ந்து கொள்வாள்.
நயனி நினைவுகளில் மூழ்கி இருக்க, "சொல்லு நயனி, உன்னை தான் கேட்கிறேன்.." என்றான்.
"என் தங்கச்சிக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம் ஆனா என்னால போக முடியல அதுக்கு காரணம் என்னங்கிறது திரும்ப என் வாயால சொல்ல வச்சு கேட்கணுமா... சொல்லுங்க? அப்படி கேட்டா தான் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கும் என்றால் அதையும் சொல்லி தொலைக்கிறேன்" என்று கட்டுப்படுத்த முடியாத அழுகையோடு உரக்க கத்தி விட்டாள்.
ஆனால் அவள் கோபத்தை பெரிதாக எடுத்துக்காதவன், "இப்போ உனக்கு உன் தங்கச்சி நிச்சயத்துக்கு போகணும் அவ்வளவு தானே! கிளம்பு.." என்றான்.
"எதுக்கு அங்க போய் அசிங்கப்படவா ப்ளீஸ் நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க.."
"இதுவும் என் வேலை தான் நயனிகா.."
"எந்த உரிமையில சொல்றீங்க நீங்க" என்று பொறுக்க முடியாமல் வெடித்து விட்டாள்.
"இதுக்கு உரிமை இருக்கணும்னு கிடையாது மனிதாபிமானம் இருந்தா போதும்.. அதோட நான் செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் செய்ய நினைக்கிறேன்.. ஸோ ப்ளீஸ் எந்திரி போகலாம்" என்ற கணவனை நயனி மறுக்கும் முன்,
"அதுதான் அபய் இவ்வளவு தூரம் சொல்றானே மா போயிட்டு தான் வாயேன். அவன் கூட இருக்கிறப்போ உன்னை யார் என்ன பேசிட போறாங்க தைரியமாக கிளம்புமா.."
"இல்லம்மா வேண்டாம். இது சரிவராது, இது அவளோட சந்தோஷமான நாள்! இதுல நான் போய் எதையும் கெடுக்க விரும்பல.."
"நீ போகாம இருந்தால் அவ சந்தோஷமா இருப்பாள் என்று நினைக்கறியா?"
"இல்ல மா, ஆனாலும்..." என்று அவள் தயங்கி நிற்பதை கண்டவர்,
"சொன்னால் கேளு போய் ரெடியாகு நயனி" என்று அவளை சமாதானப்படுத்தி அனுப்பினார்.
நிதிஷாவின் நிச்சயத்தை அவர்கள் வீட்டின் அருகில் இருந்த மண்டபத்தில் தான் வைத்திருந்தனர்.
காலை 11 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க இருப்பதால் அனைவரும் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தனர்.
அபய் ஸ்ரீவத்ஸனும் நயனிகாவும் மண்டபத்தின் படிகளில் ஏறிட முதலில் அவர்களை பார்த்தது தனலட்சுமி தான்.
மகளைக் கண்டதும் ஓடோடி வந்தவருக்கு அவள் வரவு கனவா நிஜமா? என்று புரியாது திகைத்திருக்க, "அம்மா.." என்று அவள் குரலில் தான் மீண்டார்.
கண்ணீரோடு மகளைக் கட்டிக் கொண்டவர் "நீ வர மாட்டியோன்னு நினைச்சேன். அந்த மனுஷன் கிட்ட எவ்வளவோ போராடிட்டேன் ஆனாலும் சம்மந்தி ஆளுங்களை சாக்கு வச்சு உன்னை வரவே கூடாதுன்னு சொல்லிட்டார். நிதுவுக்கு நீ வந்தது தெரிஞ்சா எவ்ளோ சந்தோஷப்படுவா தெரியுமா?" என்றவர் அப்போதுதான் ஸ்ரீவத்ஸன் அருகில் இருப்பதை உணர்ந்தார்.
"மாப்பிள்ளை நீங்க எப்போ வந்தீங்க? ஏன்மா மாப்பிள்ளை வந்த விஷயத்தை என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல.."
"அவர் எனக்கே சொல்லல அப்புறம் எங்க இருந்து நான் உங்களுக்கு சொல்றது" என்றாள் விட்டேர்த்தியாக..
"நான் வந்து நாலு நாள் ஆகுது அத்தை நீங்க எப்படி இருக்கீங்க?"
"மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை, நீங்க வந்த விஷயத்தை யாருமே எங்களுக்கு சொல்லல போன வாரம் தான் உங்க அப்பாவுக்கு பத்திரிக்கை வச்சிட்டு வந்தோம் அதனால விஷயம் தெரியல.."
"பரவால்ல அத்தை அதனால என்ன?" என்றவன் மண்டபத்தினுள் நுழைய நயனிகா தனலட்சுமியுடன் பேசியபடி அங்கே நின்று விட்டாள்.
மேடை அலங்காரத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த சேதுராமன் மருமகனை கண்டதும் ஓடி வந்தார்.
"வாங்க வாங்க வாங்க மாப்பிள்ளை எப்ப வந்தீங்க நீங்க வருவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல.. வாங்க உட்காருங்கள், என்ன சாப்பிடறீங்க" என்று அவரை அழைத்துச் சென்று முதல் வரிசையில் அமர்த்தி உபசரித்தவர் அங்கே நயனிகா தனலக்ஷ்மியோடு வருவதை கண்டு ஆவேசமாக அவளை நெருங்கினார்.
"ஏய் யாருடி உன்னை உள்ள விட்டா? எப்படி நீ இங்க வரலாம்? எந்த முகத்தை வச்சுக்கிட்டு வந்த?" என்று எகிறினார்.