நயனியை பார்த்ததும் எகிறிக்கொண்டு சென்ற சேதுராமன் அவளை தடுத்து நிறுத்தவும், "எதுக்கு அவளை இங்க நிறுத்தியிருக்கீங்க?" என்று அவர் எதிரில் வந்து நின்றான் அபய் ஸ்ரீவத்ஸன்.
"இல்ல மாப்ள இவ பண்ணின காரியத்துக்கு எங்களால வெளியில தலை காட்ட முடியலை.."
"அப்படி என்ன பண்ணிட்டா?"
"என்ன மாப்பிள்ளை இவ்ளோ சாதாரணமா கேட்கறீங்க? உங்க குடும்ப மானத்தோடு சேர்த்து எங்க குடும்ப மானத்தையும் சேர்த்து வாங்கியிருக்கா இவளை எப்படி சேர்க்க சொல்றீங்க?"
"அவளை சேர்க்க முடியாதென்றால் எனக்கு இங்க என்ன வேலை?" என்றதும் பதறிப்போனார் சேதுராமன்.
"மாப்பிள்ளை.."
"நீங்க இப்படி கூப்பிட காரணமே நயனி தான். உங்களுக்கும் எனக்குமான உறவுக்கு பாலமே அவள் தான்! அவளுக்கே இங்க இடமில்லை எனும் போது நான் மட்டும் எதுக்கு?"
"மாப்பிள்ளை அவர் பேச்சை பெருசா எடுத்துக்காதீங்க. வாங்க வந்து உட்காருங்க, நீயும் வா மா" என்று மகன் மருமகளை அழைத்து சென்று முதல் வரிசையில் அமர்த்தினார்.
இதைக்கண்டு அங்கு குழுமியிருந்த உறவினர்கள் மத்தியில் சலசலப்பு.
நிதிஷாவின் மாமனார் அபய் ஸ்ரீவத்ஸனிடம் சாதாரணமாக பேசியவர் நயனிகாவுடனும் இயல்பாக நலம் விசாரித்தார்.
"ப்பா ஸ்டுடென்ட்டை கட்டாய படுத்தின ப்ரஃபசர் பற்றி நியூஸ் சொன்னேனே உங்களுக்கு மறந்துடுச்சா?!"
"தெரியும் பரணி ஆனால் அபய் ஸ்ரீவத்ஸன் இவங்களோடு பொது நிகழ்ச்சிக்கு வந்திருப்பதிலேயே உனக்கு புரியலையா?"
"என்னப்பா புரியணும்?"
"கல்யாணமான அடுத்த நாளே மனைவியை பிரிந்து இரண்டு வருஷம் கழிச்சு வந்தவருக்கு அவங்க மேல நம்பிக்கை இருக்கப்போ நாம யார் அவங்களை ஜட்ஜ் பண்ண?!"
"ப்பா..."
"அங்கொன்றும் இங்கொன்றுமாக நீ சொல்றதெல்லாம் நடந்துட்டு இருந்தாலும் அதை வச்சு மட்டும் முடிவு பண்ணிடாத.. பொறுமையா இரு" என்றவர், "என்ன சம்மந்தி பார்த்துட்டு இருக்கீங்க மேடைக்கு கூட்டிட்டு போங்க தங்கச்சியோட நிச்சயத்தை அக்கா எடுத்து செய்யாம எப்படி?!" என்றதில் மீண்டும் அங்கே சலசலப்பு.
"நன்றி மாப்பிள்ளை.. என் மகளை பற்றி எத்தனையோ பேச்சு வந்தது ஆனா யாருமே நான் சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனா நீங்க அவளோடு வந்ததுல எல்லாருக்கும் சொல்லாமலே புரிய வச்சுட்டீங்க" என்று நன்றியோடு கைக்கூப்பினார்.
அதேநேரம் அங்கே வந்த நிதிஷா, "அக்கா..." என்றபடி நயனியை கட்டிக்கொள்ள இருவர் விழிகளும் கசிந்து உருகியது.
"நான் அவ்ளோ தூரம் சொல்லியும் நீ வரமாட்டேன் சொன்னதுல நான் எவ்ளோ அழுதேன் தெரியுமா? அம்மாவையே கேட்டுப்பார்.."
"உன் அக்காவும் தான் இங்க வர முடியலைன்னு அழுதுட்டு இருந்தா.." என்று அபய் புன்னகையோடு சொல்ல அவளுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
"அத்தான் உங்களுக்கு அக்கா மேல கோபமில்லையா?" என்றாள் நம்ப முடியாமல்.
"உன் அக்காவுக்கு என் மேல கோபமில்லையான்னு தான் இப்போ நீ கேட்கனும்" என்றான் இலகுவாக.
மற்றவர்கள் அவன் மாற்றத்தில் மகிழ்ந்திருந்தாலும் நயனியோ பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை. அன்னை தங்கையோடு மணமகள் அறைக்கு சென்றவள் தங்கையின் அலங்காரத்தை சரி பார்த்து நல்ல நேரத்தில் மேடைக்கு அழைத்து வந்தாள்.
நிச்சய சடங்குகள் தொடங்கிட, நிதிஷா அவளை தன்னை விட்டு விலக அனுமதிக்கவில்லை.
மதிய உணவை முடித்த பிறகு அனைவரும் கிளம்பி வீட்டிற்கு வந்திருந்தனர். முதல்முறை அபய் ஸ்ரீவத்ஸன் அவர்கள் வீட்டிற்கு வந்திருப்பதால் சேதுராமனை கையில் பிடிக்க முடியவில்லை.
மகளை அபய் விட்டு சென்றதை பற்றி யாருமே கேள்வி கேட்கவில்லை. இப்போது மகள் மருமகனோடு நன்றாக இருக்கிறாள் என்ற நிம்மதியே போதும் என்ற நிலையில் தனலட்சுமி. நிதிஷாவிற்கோ அவனிடம் கேட்பதற்கு கேள்விகள் பல இருந்த போதும் மீண்டும் பழையதை கிளறி தேவையில்லாத சங்கடம் உருவாக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்தாள்.
ஆனால் சேதுராமனுக்கோ இன்னமும் ரிஜிஸ்டர் ஆகாத நிலம் அவர் கைக்கு வரவேண்டி இருப்பதால் மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனித்தார்.
ஆம் திருமணமான அடுத்த நாளே அபய் ஸ்ரீவத்ஸன் கிளம்பிவிட்டதால் சக்கரவர்த்தியை அவரால் எளிதாக சந்திக்க முடியவில்லை.
மூன்று நாட்களுக்கு பிறகு சந்தித்த போதும் மகனே ஊரில் இல்லாத நிலையில் தற்போது இது அவசியமா? எல்லாம் அவன் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் அதற்குள் நயனியின் புகைப்படங்கள் வெளியாகி அவர்களை அழைத்திருந்தனர்.
சேதுராமனும் அத்தோடு உறவு முடிந்தது என்று தான் நயனியை வீட்டு வாசற்படி ஏறக்கூடாது என்று சொன்னார். ஆனால் அவர் எதிர்பாரா விதமாக அபய் ஸ்ரீவத்ஸன் இங்கே வந்ததில் அதுவும் நயனியோடு இணக்கமாக வந்ததில் அவர் கனவு மீண்டும் நினைவாகி விடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
"என்ன சாப்பிடறீங்க மாப்பிள்ளை? உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லுங்க ஒரு மணி நேரத்துல சமையல் தயாராகிடும்"
"இப்போ தானே சாப்ட்டுட்டு வந்தோம்.. எனக்கு எதுவும் வேண்டாம்" என்றவனிடம், "கிளம்பலாமா?" என்றாள் நயனிகா.
"எங்க?"
"இது என்ன கேள்வி? சுதர்ஷன் வீட்டுக்கு தான்!"
"தேவையில்லை உன் தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருக்காங்க உன் அம்மாவுக்கு உதவி தேவைப்படும் நீ இங்கே இரு.."
"அதை சொல்ல நீங்க யாரு?!"
"நயனி.."
"லிசென் அபய் நான் எங்க இருக்கணும் என்று நான் தான் முடிவு செய்ய வேண்டும் உங்க இழுப்புக்கு நான் ஆளில்லை" என்றவள் மறுநொடியே தனலக்ஷ்மியிடம் சொல்லிக்கொண்டு வெளியில் சென்றுவிட்டாள்.
"நயனி இது உன் வீடு தானே?!"
"ப்ளீஸ் அபய் இந்த பேச்சு வேண்டாம். இப்போ நீங்க என்னை கூட்டிட்டு போறீங்களா இல்லை நான் பஸ் எடுத்துட்டு கிளம்பட்டுமா?" என்றிட அதற்குமேலும் அங்கிருக்க முடியாமல் காரை கிளப்பினான்.
"ஓகே எனக்கு புரியுது. ஆனா என் வீட்டுக்கு போகலாம் தானே?!" என்றவனை நயனி அழுத்தமாக பார்க்க..,
"என் அப்பா மட்டுமில்லை வேற யாருமே உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க நான் பேசிட்டேன்.."
"எனக்கு நிரந்தரமில்லாத இடத்துக்கு எதுக்காக என்னை திரும்ப திரும்ப கூப்பிடறீங்க?!"
"நயனி உனக்காக தான் உன்னை கூப்பிடறேன்னு இன்னுமா உனக்கு புரியலை.."
"இப்பவும் எனக்காக தான் என்னை கூப்பிடறீங்களே தவிர உங்களுக்காக கூப்பிடலையே அபய்.." என்று வேதனையோடு பார்த்தவள் அதற்கு மேலும் அவனை மறுக்க முடியாது, "எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நானே வரேன்" என்றாள்.
"எவ்ளோ நேரம்?!"
"நேரமா?!"
"ஆமா நாள் கணக்கில் கொடுக்க முடியாது நயனி.."
"உங்களோட அவசரத்திற்கு நான் ஆளில்லை அபய், அங்க வந்தபிறகு எனக்கான இடம் என்னன்னு தெரியனும், இன்னொருமுறை அசிங்கப்பட நான் தயாரா இல்லை அதனால் எனக்கு டைம் வேணும்.. நானே கூப்பிடறேன் இப்போ கிளம்புங்க" என்றபடி சுதர்ஷன் வீட்டின் முன் இறங்கிகொண்டாள்.
மேலும் நான்கு நாட்கள் கடந்த நிலையில்...
அன்று திவ்யா சொன்ன வழியில் ராஜனுக்காக அவை சுதர்சன் மற்றும் விஜயகுமார் மூவரும் காத்திருந்தனர்..
ஏற்கனவே அபய் ஸ்ரீவத்ஸன் ராஜன் மீது நயனியை கொண்டு புகார் கொடுக்க செய்திருந்தான். ஆனால் அவன் தந்தை மேலிடத்தில் அழுத்தம் கொடுத்து விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இழுத்தடித்துக் கொண்டு இருந்தனர்.
ஆள் அரவமற்ற இடத்தில் பெரிதாக வெளிச்சமும் இல்லாத இடத்தில் தனியாக வந்த ராஜனை மடக்கிப் பிடித்தனர்.
அவனை பிடித்த மறுநொடியே அவனிடம் இருந்த கைபேசியை தான் பறிமுதல் செய்திருந்தனர். அவன் மீது கஞ்சா வழக்கு போட்டு உள்ளே தள்ளுவதாக தான் முடிவு செய்திருந்தார் விஜயகுமார். அதற்கு ஏற்ப ஏற்கனவே அவர்கள் கட்டுபாட்டில் இருந்த போதை வஸ்த்துகளை எடுத்து வந்திருந்தார்.
அதற்கு முன் அவன் காரை சோதனையிட்டதில் அவருக்கு வேலையே வைக்காமல் கஞ்சா, அபின் உட்பட பல போதை மருந்துகளை அவன் காரில் கண்டெடுத்தார். இங்கே ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு அவனை இழுத்து சென்ற சுதர்ஷனும், அபய்யும் ராஜனை கட்டி போட்டனர்.
"என்ன ஸார் காலேஜ்ல என்னை எதுவும் பேச முடியாதன்னு இங்க மடக்கி இருக்கீங்களா?" என்று கொஞ்சமும் பயமில்லாமல் கேட்ட நொடி ஓங்கி அவன் வாயில் குத்து விட்டான் அபய்.
"இதோ பாரு நடந்தது என்னன்னு உன் வார்த்தையால வாக்குமூலம் கொடுத்துடு போதும். வேற எதுவும் உன்னை கேட்கலை" என்றிட மீண்டும் 'முடியாது' என்றான் திமிராக.
"ஸார் உங்க பொண்டாட்டிய நீங்க ஒழுங்கா வச்சிருந்தா அவங்க ஏன் ஸார் என்னை தேடி வர போறாங்க" என்றான் நக்கலாக..
அதைக் கேட்டதும் இத்தனை நேரம் கட்டுபடுத்தி கொண்டிருந்த அவன் கோபம் கரை உடைக்க ஓங்கி அவனை எட்டி உதைத்து புரட்டி எடுத்தான்.
வலி தாங்காமல் அவள் அலறிய போதும் விடாமல் அடித்து நொருக்கியவன், "இன்னொருமுறை இப்படி பேசுவியா?" என்று கேட்டு கேட்டு அடித்தான்.
"ஸாரி ஸார் இனி பேச மாட்டேன் ஸார் பேச மாட்டேன்" என்று அலறினான்.
"மச்சான் போதும் விடுடா இதுக்கு மேல அடிச்சா தாங்க மாட்டான். ஏதாவது பிரச்சனையாகிட போகுது ஸார் விசாரிக்கட்டும்" என்று அவனை தடுத்து பிடித்தான்.
அதேநேரம் அவன் கைபேசியில் பல பெண்களுடன் அவன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை இருப்பதை கண்ட விஜயகுமார் திகைத்து போனார். உடனே அதை தன் மேலதிகாரிக்கு அனுப்பி வைத்து அவனை கைது செய்வதற்கான வாரண்ட்டை இஷூ செய்யும் படியும் கேட்டுக்கொண்டார்.
"ஏன்டா பாடம் சொல்லி கொடுக்கிற குரு மேல இப்படி அபாண்டமா பழி போடும் துணிச்சல் உங்களுக்கு யாருடா கொடுத்தா?" என்று அடுத்து வந்த விஜயகுமார் அவனை கவனித்த கவனிப்பில் நடந்ததை ஒன்று விடாமல் சொல்ல ஆரம்பித்தான்.
"ஒரு பொண்ணுக்கு தெரியாமல் ஃபோட்டோ எடுத்து அதை பொதுவெளியில் போடறதுக்கு பேரு தான் வீரமா?" என்று மீண்டும் ஓங்கி மிதித்தான்.
"தப்பெல்லாம் என் மேல தான் அவங்களுக்கு எதுவும் தெரியாது.. நான் போட்டோ எடுத்தது கூட அவங்களுக்கு தெரியாது போட்டோஸ் மட்டும் தான் நிஜம் வீடியோ நிஜம் கிடையாது. அது ஃபேக்கா ரெடி பண்ணது என்னை விட்டுடுங்க" என்று வாக்குமூலம் கொடுக்க சுதர்சன் அனைத்தையும் வீடியோவாக மாற்றி இருந்தான்..
வீடியோவை எடுத்த கையோடு உடனே அதை சோசியல் மீடியாவில் பதிவிட்டான்.
சக்கரவர்த்தி முதல் மாணவர்கள் பேராசிரியர்கள் என்று அனைவருக்கும் அவன் அளித்த ஒப்புதல் வீடியோவை அனுப்பி வைத்தான்..
ஆசிரியர் மீது தவறான புகாரை பரப்பிய மாணவன் இன்று தன் தவறை ஒப்புக்கொண்டு வாக்குமூலம்" என்ற தலைப்புச் செய்தியில் நயனி மீது எந்த தவறும் இல்லை என்று ஊடகங்கள் செய்தி வாசித்துக் கொண்டிருந்தன.
ஏற்கனவே அபய் ஸ்ரீவத்ஸன் புகார் கொடுத்து இருந்ததால் நயனி மேல் தவறான வதந்தி பரப்பியது, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது, அவருக்கும் அவர் பணிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது போதை மருந்து எடுத்தது, மட்டும் அல்லாமல் அதை கடத்த முயற்சித்தது, பெண்களை சீரழித்தது என்று பல பிரிவுகளில் அவன் மீது வழக்கு பதிவிட்டு சிறையில் தள்ளப்பட்டான்.
Last edited: