இன்றோடு நயனிகா வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது.
தனக்கு பிடித்தவனுக்காக தன் பிடித்தங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு வந்துவிட்டாள்.
அன்று ராஜன் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் நயனிகாவை தவறாக பேசிய அத்தனை பேரின் வாயையும் அடைத்து போக செய்திருந்தது. நயனிகாவிற்கு எதிராக இருந்தவர்கள் அனைவரும் இப்போது ராஜனுக்கு எதிராக திரும்பி இருந்தனர்..
அதிலும் அவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் அவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் அனைத்தும் மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
சக்கரவர்த்தியின் பார்வைக்கும் வந்து சேர அவருக்கு என்ன செய்வது என்று புரியாத நிலை. அன்று அவசரப்பட்டு மருமகளை பேசி விட்டதை எண்ணி வருந்திய மனிதற்கு அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் அபய் ஸ்ரீவத்ஸன் அவளை வீட்டிற்கு அழைத்து வந்த போது எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
ஆனால் முரளிதரன் தான் அபய் ஸ்ரீவத்ஸனிடம் சக்கரவர்த்திக்காக பேசி வாங்கி கட்டிக்கொண்டார். உங்களால ஏத்துக்க முடியலை என்றால் வீட்டை விட்டு கிளம்புங்க என்றதில் ஆடிப்போனார்.
அதைவிட இதை கேட்டுக்கொண்டு இருந்த நிர்மலா எதுவும் சொல்லாததில் மேலும் கலங்கி போனார்.
"பார்த்தியாக்கா நேத்து வந்த பொண்ணுக்காக என்னையே வெளியே போக சொல்லிட்டான்" என்று குறைபடித்தார்.
"நான் உனக்கு ஏற்கனவே யார் கிட்ட எப்படி பேசணும் என்று தெரிஞ்சு பேசுன்னு சொல்லி இருக்கேன். உன் இஷ்டத்துக்கு நடந்தால் இப்படிதான் ஆகும்.."
"அக்கா அப்போ நீயும் அந்த பொண்ணு பக்கம் தானா?!"
"என் பையனே ஏத்துகிட்ட பிறகு எனக்கு என்ன கோபம் இருக்க போகுது" என்றவர் அன்று மாலையே மனம் தாளாது நயனியை தேடி சென்றார்.
"தன் உடைகளை மடித்து வைத்துக்கொண்டிருந்தவளிடம், "இரண்டொரு முறை பார்த்து பேசி இருந்தாலும் எனக்கு உன்னை பத்தி அவ்வளவா தெரியாது மா.. எல்லாமே உனக்கு எதிரில் இருந்ததாலும் இதை வச்சு ஊர் உறவு பேசின பேச்சுக்களில் உன்மேல என்னையும் அறியாமல் ஒருவித வெறுப்பு உண்டாகிடுச்சு இல்லைன்னு சொல்ல மாட்டேன்.."
"சுயநலமா இருக்கிறதா தோணலாம்... ஆனால் நேத்து வந்த உன்னை விடவும் என் புருஷன், பிள்ளை, குடும்பம் முக்கியம் என்று நினைக்கற சராசரி பெண் தான் நான்!! ஆனால் இனி உன்னையும் என் பெண்ணாக பார்க்க முயற்ச்சிக்கிறேன்" என்று பட்டவர்த்தனமாக பேசியவர் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.
எந்த வித பூச்சும் இல்லாத அவர் பேச்சு நயனிக்கு பிடித்துவிட்டது. கணவனே அவளை மனைவியாக மட்டுமல்லாமல் மனுஷியாக கூட மதிக்காத பட்சத்தில் மற்றவர்களிடம் அதை எதிர்பார்க்குமளவு நயனி முட்டாளில்லை.
அதனால் அவனை சார்ந்தவர்களில் சக்கரவர்த்தி தவிர்த்து மற்றவர்களின் பார்வையோ பேச்சோ அவளை சுனங்க செய்தாலும் பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் எப்படி சக்கரவர்த்தி தன்னை நம்பாது போனார் என்ற ஆதங்கம் அவளுக்கு அளவுக்கதிகமாகவே இருந்தது.
வீட்டிலும் கல்லூரியிலும் அவளை பார்ப்பவர் அதோடு தன் தாய்க்கு சேதுராமன் இரண்டாவது கணவன் என்ற நிஜமும் அவர் அறிவார்!! அனைத்தும் தெரிந்தே மகனுக்கு தன்னை பெண் கேட்டு வந்த மனிதருக்கு அவள் மீது குறைந்த பட்ச நம்பிக்கை கூட இல்லாமல் போனதில் நயனிக்கு மனத்தாங்கல் உண்டு.
வீடு வந்து சேர்ந்து நான்கு நாட்கள் ஆனபோதிலும் அபய் ஸ்ரீவத்ஸன் நயனிகா வர்ஷிக்கு இடையிலான உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை.
தான் செய்த தவறினால் பாதிக்கபட்டவளை பாதுகாப்பான இடத்தில் கொண்டு வந்து சேர்த்துவிட்டதில் அவன் நிம்மதியான உறக்கம் கொண்டான். மற்றபடி இயல்பான கணவனாக அவன் இருக்கவில்லை.
இங்கு வந்தபிறகு நயனியின் வழக்கமான பணிகளும் தொடங்கிவிட்டது.
காலை நிர்மலாவிற்கு உதவுவது கல்லூரிக்கு செல்வது திரும்புவது என்று இருக்கிறாள். ஆனால் மூன்றாம் நாளே என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான் என்ற சலிப்பு தட்டிவிட்டது. முன்பாவது அவளை தேடி வந்து பேசியவன் இப்போது முழுதாக ஒதுங்கி தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறாள்.
அவனிடம் இறங்கி சென்று மனம் விட்டு பேசவும் நயனியின் தன்மானம் இடமளிக்கவில்லை.
அதேநேரம் பிடித்தவனை இழந்துவிட கூடாது என்று அவளுடைய பிடித்ததை எல்லாம் இழந்து தனிமையில் வெந்து கொண்டிருக்கிறாள்.
அன்று வினோதனின் மனைவி ராகவிக்கு வளைகாப்பு நடக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
முந்தைய தினமே நயனிக்கும் புதுப்பட்டு புடவை எடுத்து வந்திருந்தார் நிர்மலா.
"நாளைக்கு பங்க்ஷனுக்கு இதை கட்டிக்கோ மா"
"சரி அத்தை.. எத்தனை மணிக்கு பங்க்ஷன்?"
"பத்து மணிக்கு நல்ல நேரத்துல தொடங்கிடுவோம்.."
"நான் ஏதாவது செய்யணுமா?"
"தேவைபடாது மா எல்லாமே ஈவென்ட் மேனேஜ் பண்றவங்க கிட்ட கொடுத்திருக்கு. ராகவி மருதாணி வேணும் என்று ஆசையா கேட்டிருந்தா அரைச்சு வச்சிருக்கேன் கொடுத்துட்டு வந்துடுறியா?" என்றார்.
"சரி அத்தை.." என்றவள் மாடிக்கு சென்றாள். என்ன தான் ராகவியும் அன்றைய பிரச்சனையில் அவளிடம் பேசுவதை நிறுத்திவிட்டார் என்றாலும் மற்றவர்களை போல அவளை தவறாக பேசவில்லை. அதேநேரம் நயனி வீடு திரும்பியபோது எந்த ஈகோவும் இல்லாமல் அவளே வந்து பேசாமல் இருந்தது குறித்து விளக்கம் கொடுத்து,
"எல்லாரும் சொன்னதை வச்சு ஒருவேளை உன்மேல தப்பு இருக்குமோ என்று நினைச்சுட்டேன் ஸாரி நயனி.." என்றாள்.
அன்றைய நாளை நினைத்தபடி மாடிக்கு சென்ற நயனி தன் அறையில் இருந்தவளிடம் மருதாணியை கொடுக்க, "நீயே வச்சுவிடு என்றாள்"
நயனியும் அவளுக்கு வைத்துவிட, "நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா நயனி" என்றார்.
"கேளுங்க..."
"இதை நான் உன்னை காயபடுத்தவோ கஷ்டபடுத்தவோ கேட்கலை உன்னோட வெல்விஷரா தான் கேட்கிறேன் தப்பா எடுத்துக்க மாட்டியே"
"இல்லை.. ஆனா என்ன இவ்ளோ பீடிகை போடறீங்க? சும்மா சொல்லுங்க நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேன்"
"இல்லை அபய் இப்பவும் உன்னோடு.. ஐ மீன் அன்னைக்கு பர்ஸ்ட் நைட்ல உன்னை வெளியே அனுப்ப நினைச்சவர் இப்பவும் அப்படிதான் இருக்காரா இல்லை ஏதாவது மாற்றமிருக்கா?" என்று கேட்க அவளிடம் கசந்த புன்னகை.
"எந்த முன்னேற்றமும் இல்லை.. அவருக்கு என்னை விட்டுட்டு போனதால ஏற்பட்ட குற்ற உணர்ச்சிக்கு பிராயச்சித்தம் தேடிட்ட நிம்மதி அதுவே நல்ல தூக்கத்தை கொடுக்குது" என்றாள்.
"நீ எதுவும் பேசலையா?"
"நான் என்ன பேசணும் என்று எதிர்பார்க்கறீங்க?"
"இல்லை மா யாராவது ஒருத்தர் முன்னெடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வந்தால் தானே லைப் பேலன்ஸ்டாக இருக்கும்"
"என்னால ஓர் அளவுக்கு மேல இறங்கி போக முடியாது.. கல்யாணம் என்றால் என்னன்னு தெரியாதவர் இல்லை. மனைவியை எப்படி நடத்தனும் என்று நான் கிளாஸ் எடுத்து தான் அவர் என்னோடு இணைக்கமாக இருக்கணும் என்றால் அப்படி ஒரு இணக்கம் எனக்கு தேவையில்லை" என்றால் உறுதியாக.
அடுத்தநாள் சொந்தங்கள் அனைவரும் சூழ்ந்திருக்க நல்ல நேரத்தில் விழா ஆரம்பமானது.
"ஏன் மா ஒதுங்கி நிற்கிற? வா ராகவி பக்கத்துல நில்லு" என்று உறவினர்களில் ஒருவர் அவளை ராகவியின் அருகில் நிற்க வைத்திருந்தனர்.
ஒவ்வொருவரும் அவளுக்கு சந்தானம் குங்குமம் வைத்து வலையளிட்டு அக்ஷதை அளிப்பதை பார்த்திருந்த நயனியின் மனதில் சொல்லென்னா உணர்வு!!
தாய்மை எத்தனை பெரிய வரம்! ஆனால் அது அத்தனை எளிதாக அனைவர்க்கும் கிடைத்துவிடாது போலும் என்று அவள் யோசனையில் இருக்க,
வளைகாப்பு வைபவம் சிறப்பாக முடியவும் நிர்மலாவிடம் நயனியையும் மனையில் அமர்த்தி வளையல் போட்டுக் கொள்ள சொன்னார்கள் அங்கிருந்த மூத்த பெண்மணிகள்.
"இப்போ நீ மனையில் உட்காருமா" என்றார் நிர்மலா.
"நானா? நான் எதுக்கு அத்தை..."
"என்னம்மா இப்படி கேட்டுட்ட.. மனையில் உட்கார்ந்தது வளையல் போட்டுகிட்ட அடுத்த வருஷமே நாங்க உனக்கு வளையல் அடுக்க வேண்டி இருக்கும் அதுக்காக தான் உட்கார சொல்றோம்" என்றிட அவளுக்கோ அன்று அபய் ஸ்ரீவத்ஸன்,
"உனக்கு குழந்தை பாக்கியமே கிடைக்காதுடி" என்று சொன்னது தான் காதில் ரீங்காரமிட்டது.
கண்களில் படர்ந்த மெல்லிய நீர்படலத்துடன், "இல்லை பரவால்ல எனக்கு வேண்டாம்.." என்றவளை விடாமல் பிடித்து அமர்த்தி சந்தானம் குங்குமம் வளையல் என்று அடுக்க நயனியின் மனதில் அப்படி ஒரு வலி பெருகியது.
உடைப்பெடுத்த கண்களை கட்டுபடுத்த முடியாமல் தலை குனிந்த படி அமர்ந்திருந்தவள் அவர்கள் அவளை விடுவிக்கவும் தன் அறைக்கு வந்துவிட்டவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது.
அன்று முக்கிய வேலையாக வெளியில் சென்றிருந்த அபய் ஸ்ரீவத்ஸனை இருண்டு போயிருந்த அறையே வரவேற்றது.
அறையின் விளக்கை போட்டவன் விழிகளில் விழுந்தது என்னவோ அறையின் மூலையில் சுவரில் சாய்ந்து அமர்ந்து கால்களை கட்டிக்கொண்டு விசும்பி கொண்டிருந்த நயனிகா தான்.
"என்னாச்சு நயனி? எதுக்கு அழற? யாராவது உன்னை ஏதாவது சொன்னாங்களா?" என்று பதறிக்கொண்டு அவளிடம் சென்றான்.
ஆனால் அவளிடம் எந்த அசைவும் இல்லை.
"உன்னை தான் கேட்கிறேன் நயனி. இங்க பார்" என்று அவள் முகத்தை நிமிர்த்த கண்ணீரில் கரைந்திருந்தவளின் முகத்தில் இருந்த சந்தனமும் குங்குமமும் வழிந்து அவள் கழுத்தை நனைத்திருந்தது.
அப்போது தான் அவளிருந்த கோலம் கண்டவன், "என்ன உனக்கு சந்தனம் பூசியிருக்காங்க" என்று புரியாமல் கேட்க அதற்கு மேலும் தாள முடியாத நயனிகா,
"ஏன் பூசினாங்கன்னு போய் உங்க அம்மாவை கேளுங்க. நான் அவ்ளோ தூரம் வேண்டாம்னு சொல்லியும் என்னை கட்டாயபடுத்தி மனையில் உட்கார வச்சவங்க அவங்க தான்.. போங்க, போய் அவங்ககிட்ட உங்க மருமகளுக்கு இந்த ஜென்மத்துல குழந்தை பாக்கியமே இல்லைன்னு சொல்லுங்க.."
"என்ன பேசற?"
"ஏன் நீங்க சொன்னது உங்களுக்கே மறந்து போச்சா? போய் சொல்லுங்க அப்படி ஒரு பாக்கியம் எனக்கு கிடைக்காவிட மாட்டேன்னு சொன்னதை நீங்களே போய் அவங்க கிட்ட சொல்லுங்க அப்பவாவது இன்னொருமுறை இப்படி செய்து என்னை நோகடிக்காம இருக்காங்களான்னு பார்க்கிறேன்" என்றாள் கட்டுபடுத்த முடியாத கண்ணீரோடு.
இதைக்கேட்ட அபய் ஸ்ரீவத்ஸன் முகத்தில் ஈயாடவில்லை. அமைதியாக சென்று அமர்ந்துவிட்டவன் மனதில் எண்ணற்ற நினைவுகளின் ஊர்வலம்.
அதன் கனம் தாளாது நெற்றியை பிடித்துக்கொண்டு மேஜை மீது தலை கவிழ்த்தவன் இருபது நிமிடங்கள் கழித்து நிமிர அவன் முகம் வெகுவாக கசங்கி போயிருந்தது.
ஒரு முடிவோடு நயனியிடம் வந்தவன், "நாம டிவோர்ஸ் பண்ணிக்கலாம் நயனி" என்று அவள் தலையில் இடியை இறக்கினான்.
அதிர்வோடு நயனி அவனை நிமிர்ந்து பார்க்கவும், "ஆமா, நான் நிஜமா தான் சொல்றேன். என்னால நீ கஷ்டபட்டது எல்லாம் போதும் இனியும் உன்னை கஷ்டபடுத்த விரும்பலை. நான் டிவோர்ஸ் கொடுத்துடுறேன் நீ உன் மனசுக்கு பிடிச்சவங்களை கட்டிக்கோ"
"என்ன பேசறீங்க நீங்க? உங்களுக்கு என்ன அறிவு கேட்டு போச்சா? இப்படி ஒரு முடிவோடு இருக்கிறவர் எதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க?" என்றால் ஆவேசத்தோடு..
"ப்ச் என் மனசுல சஞ்சு தவிர வேற யாருக்கும் இடமில்லை புரிஞ்சுகோ நயனி.."
"குழந்தையை கூட்டிட்டு போய் ஆசையோடு அது கேட்கிறது கேட்காதது எல்லாத்தையும் வாங்கி கொடுத்து அது சந்தோஷமா வாயில எடுத்து சாப்பிட போற அதை தட்டி விடுற மாதிரி இருக்கு நீங்க பண்ற காரியம்.."
"என்னை டிவோர்ஸ் பண்றதா இருக்கிறவர் அப்பவே பண்ணிட்டு போக வேண்டியது தானே?! எதுக்காக பிராயச்சித்தம் தேடுறேன் பாயாசம் பண்றேன்னு இங்க வர சொல்லி என் உயிரை எடுத்தீங்க.."
"இப்ப நான் உனக்கு இதெல்லாம் செய்தது உன் மேல இருக்க பாசத்தாலயும் காதலாலயும் கிடையாது. ஒரு நல்ல பொண்ணு மேல அப்பாண்டமா குற்றம் சுமத்தினால் அதை பார்த்துட்டு சும்மா இருக்குற அளவுக்கு நான் கல் மனசுக்காரன் கிடையாது.."
"அது என்னோட குணமும் கிடையாது. நிச்சயமா உன் இடத்தில வேற எந்த பொண்ணு இருந்தாலும் நான் இதை தான் செய்திருப்பேன்.. சொன்னா புரிஞ்சுக்கோ நயனி என்னால.." என்று ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன்,
"எனக்கு.. என்.. என்னால என் சஞ்சுவை மறக்கவும் முடியல அதேநேரம் கட்டாயத்துக்காகவோ, கடமைக்காகவே உன்னையும் ஏத்துக்க முடியல.."
"ரியாலிட்டியை ஏத்துக்க முடியாதளவு அப்படி என்ன காதல்?! பொல்லாத காதல்?"
"உங்களை தவிர வேற யாருமே காதலிச்சது கிடையாதா? அப்படி காதலிச்ச எல்லாரோட காதலும் கல்யாணத்தில் தான் முடிஞ்சு இருக்கா என்ன?! உங்க காதல் கை கூடாத போது அடுத்த லைஃப்க்கு மூவ் ஆன் பண்ண முடியலன்னா அப்புறம் உங்களுக்கு ஆறு அறிவு இருந்து என்ன பிரயோஜனம்?!" என்றதில் அதிர்ந்து போனான் அபய் ஸ்ரீவத்ஸன்.
"கொஞ்சம் கூட அதை உபயோகப்படுத்த மாட்டீங்களா? நானும் நீங்க எப்போ சஞ்சு இல்லாத நிஜத்தை பக்குவமா எதிர்கொள்வீங்க என்று காத்திருக்கேன். ஆனா நீங்க பிடிவாதம் பிடிக்கிற குழந்தை மாதிரி நீங்க பிடிச்ச முயலுக்கு மூணு காலு என்பது போல பேசிட்டு இருக்கீங்க"
"போதும் அபய் நான் பட்டதெல்லாம்.. இதற்கு மேலும் என்னால் இந்த வலியை தாங்க முடியும் என்று தோணலை இத்தனை நாள் அவளுக்காக அவள் சொன்ன வார்த்தைக்காக எல்லாத்துக்கும் மேல என் காதலுக்காக பொறுத்து போனேன். ஆனா எனக்கு இனி இந்த வாழ்க்கை வேண்டாம்" என்று ஒரு முடிவோடு தன் பீரோவை திறந்தவள் அதிலிருந்து குறிப்பிட்ட கடிதத்தை தேடி எடுத்து அவன் முன் போட்டாள்.
'என்ன இது?' என்பதாக பார்த்தான்.
"இது சஞ்சு உங்களுக்காக எழுதின லெட்டர்! என்ன தான் நான் உங்களை காதலிச்சு இருந்தாலும் அவள் எங்கிருக்கா அவளுக்கு என்ன ஆச்சு என்று தெரியாம நீங்க அலைஞ்சுட்டு இருந்த போதும் சஞ்சு சொன்ன ஒரே காரணத்துக்காக தான் இந்த உண்மையை சொல்லாமல் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"
"என்ன சொல்ற?"
"எஸ் என்ன நடந்தாலும் உங்களை விட்டுட கூடாது. உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கணும் என்பது எனக்கு அவ போட்ட அன்புக்கட்டளை!! அதை மீறக்கூடாது என்பது அவளோட வேண்டுகோள்.. அதை எப்படி நான் மீற முடியும்?!"
"அப்போ சஞ்சு எங்க இருக்கா என்று உனக்கு தெரியுமா?"
"தெரியும் "
"யூ இடியட்" என்று நாற்காலியை தள்ளிக் கொண்டு வேகமாக எழுந்தான்.
"அப்போ இவ்ளோ நாளா எதுவும் தெரியாத மாதிரி நடிச்சிட்டு இருக்கியாடி" என்று கோபத்தோடு அவளை நெருங்கி,
"இத்தனை வருஷமா அவளை தேடி நாயா பேயா திரியறேன் ஆனா அவள் எங்க இருக்கா என்று தெரிந்தும் ஒரு வார்த்தை சொல்லல... என்னடி நெனச்சிட்டு இருக்க? அவளுக்கு என்ன ஆச்சு?" என்று வெறி பிடித்தவன் போல நயனியை உலுக்கினான்.
"நீங்க எவ்ளோ தேடினாலும் அவ கிடைக்க மாட்டா.."
"ஏன்? என் சஞ்சுவுக்கு என்ன ஆச்சு?"
"சஞ்சு இப்போ உயிரோடு இல்லை" என்ற நயனியின் வார்த்தைகள் அமிலமாய் அவன் காதில் ஊடுருவியதில் அப்படியே சிலையாய் சமைந்து போனான்.
Last edited: