• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் கேட்கும் அமுதம் நீ - 17

kkp11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
78
116
33
Tamil nadu

"சஞ்சு உயிரோடு இல்லை" என்ற செய்தியை கேட்ட அபய் ஸ்ரீவத்ஸன் கலங்கிய விழிகளோடு வேரறுந்த மரமாக அப்படியே சாய அவன் விழும் முன் பிடித்த நயனி, "அபய் பார்த்து.. வாங்க இப்படி உட்காருங்க" என்று அவனை மெத்தையில் அமர்த்தினாள்.​

நிச்சயம் இந்த செய்தி அவனுக்கு எப்பேர்பட்ட அதிர்ச்சி என்பதை அவள் நன்கு அறிவாளே?! முதல் முறை இந்த செய்தி கிடைக்க பெற்ற போதும் அதை நம்ப முடியாத நயனியும் அல்லவா மயங்கி விழுந்திருந்தாள்.​

இருவராலும் அத்தனை எளிதில் ஜீரணிக்க கூடிய விடயம் கிடையாது இது!!​

அதனாலேயே சஞ்சு சொன்னது போல அவர்களின் குழந்தை பிறந்த பிறகு பக்குவமாக இந்த விஷயத்தை அவனிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்று அவள் நினைத்திருக்க இன்றைய சூழல் அனைத்தையும் தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது.​

ஆம் தான் இறப்பதற்கு முன்பாக நயனிக்கு கொரியர் அனுப்பி இருந்தாள்.​

அதை பிரித்து பார்க்க அதனுள் மூன்று உரைகள் இருந்தது. முதலில் "மிசர்ஸ் அபய் ஸ்ரீவத்ஸன் (நீதான் டி)" என்று அடையாளபடுத்தி கடிதம் எழுதியவள் அடுத்த உரையில் "மிஸ்டர் நயனிகா வர்ஷி" என்று அபய் ஸ்ரீவத்ஸனை குறிப்பிட்டும் அடுத்த உரையில் "பேபி சஞ்சனா அபய் ஸ்ரீவத்ஸன்" என்று குறிப்பிட்டிருந்தாள்.​

அவளுக்கு எழுதபட்டிருந்த கடிதத்தை நயனி பிரித்து பார்க்க,​

"மை டியரஸ்ட் டியர் நயனி.."​

"எப்படி இருக்க? என்னை ரொம்ப மிஸ் பண்றியாடி? இல்லை இத்தனை நாள் எதுவுமே சொல்லாம கொள்ளாம போயிட்டேனேன்னு என் மேல கோபமா தான் இருப்ப எனக்கு தெரியும். எனக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு ரொம்ப பயந்து போயிருப்பன்னு எனக்கு தெரியும்டி.."​

"ஆனா உன்னோட பயம் அனாவசியமானது என்று சொல்ல தான் எனக்கும் ஆசை.. ஆனா நிஜம் அப்படியில்லடி. என்னை ரொம்பவே பயமுறுத்திடுச்சு உன்னையும் பயமுறுத்த வேண்டான்னு தான் இத்தனை நாள் உன்னை நான் காண்டாக்ட் பண்ணவே இல்லை..."​

"இப்போ மட்டும் ஏன் திடீர்னு பண்ணி இருக்கேன்னு பார்க்கிறியா? இனி நானே நினைச்சாலும் உன்னை கான்ட்டாக்ட் பண்ண முடியாதே அதனால தான்.." என்று சிரிக்கும் பொம்மைகளை வரைந்திருந்தவள்,​

"நான் போறேன் நயனி? இதுக்கு மேலயும் என்னால இந்த கொடுமையை அனுபவிக்க முடியாது அதனால இனி வலி தெரியாத படி மொத்தமா போயிடலாம் என்று முடிவு பண்ணிட்டேன்.."​

"ஏன் போறே எங்க போறேன்னு உனக்கு தெரியாதில்லை.." என்றதை படித்த நயனியின் மனம் படபடத்து போனது.​

"ஏன் சஞ்சு இவ்ளோ பீடிகை போடற? அப்படி எங்க தான்டி போக போற..." என்று முனுமுனுத்தபடி அடுத்த வரியை படிக்கலானாள்.​

"அன்னைக்கு நான் உன்னை பார்க்க ஹாஸ்டலுக்கு வந்திருந்தேன் அப்போ நீ லைப்ரரிக்கு போயிருந்த.. பொதுவாவே நான் ஹாஸ்டலுக்கு வருவதே உன்னை பிக்கப் பண்ணிக்க தான் அதனால பெருசா உன்னோட ரூமை எக்ஸ்ப்ளோர் பண்ணினது இல்லை"​

"என்னமோ தெரியல அன்னைக்கு நீ வர வரைக்கும் உன்னோட ரூமை எனக்கு ஆராய தோணுச்சு. சரின்னு ஒவ்வொன்னா பார்த்துட்டு வந்தப்போ உன் கப்போர்ட்ல வித்யாசமா ஒரு டைரியை பார்த்தேன்.."​

"இதுவரைக்கும் நாம இதை பார்த்தது இல்லையே.. எப்போ வாங்கி இருப்பா? எதையும் நம்ம கிட்ட மறைக்க மாட்டாளே ஆனா எப்படி இது நமக்கு தெரியாம போச்சு, அப்படி என்ன தான் இதுல இருக்கும்" என்று நினைச்சுட்டு தான் பிரிச்சேன்..,​

"ஆனால் ஏன் பிரிச்சேன்னு அடுத்த நிமிஷமே நொந்து போயிட்டேன் நயனி.." என்றவளின் கண்ணீர் அந்த இடத்தில் தெறித்து சில எழுத்துக்களை அழித்திருந்தது.​

"ஏன் நயனி நான் உன்னோட பெஸ்ட் ஃபிரெண்ட் தானே?! உன்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கிறதா நினைச்சேன் ஆனா இல்லைன்னு அவ்ளோ பெரிய உண்மையை நீ என்கிட்டே மறைச்சு இருக்கிறதை பார்த்த பிறகு தான் தெரிஞ்சது..."​

"ஸ்ரீயை நீ லவ் பண்ற விஷயத்தை ஏன் என்கிட்டே இருந்து மறைச்ச? நான் என்ன அவ்ளோ கொடுமைக்காரியா? எனக்கு லவ் பிடிக்காது தான் இல்லைன்னு சொல்லலை அதுக்காக உன் மனசை புரிஞ்சுக்க மாட்டேன்னு எப்படி நினைச்சுட்ட? இதுதான் நீ என்னை புரிஞ்சுகிட்ட அழகா? சொல்லுடி.. சொல்லு!!"​

"அதுவும் பத்தாவது படிக்கிறப்போ இருந்தே அவரை உனக்கு பிடிச்சிருக்கு அதை பற்றி என்கிட்டே மூச்சு கூட விடலை என்கிற கோபம் இப்பவும் எனக்கு இருக்கு... அப்படி என்னடி உன் விருப்பம், காதல், எதிர்காலத்தை விட நான் முக்கியமா போயிட்டேன்.. ஸ்ரீ எனக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணினப்போதும் எனக்காக தானே நீ இந்த விஷயத்தை மறைச்சுட்ட..."​

"ஒருவார்த்தை சொல்லி இருக்கலாமே நயனி சந்தோஷமா நான் விட்டு கொடுத்திருப்பேனே.. அப்படி என்னடி நான் பண்ணிட்டேன்? உன் வாழ்க்கையை விட நான் உனக்கு முக்கியமா போயிட்டேன்?!" என்ற சஞ்சுவின் ஆதங்கத்தில் நயனிக்கு தொண்டை அடைத்து கொண்டது.​

"சஞ்சு..." என்று உதட்டை கடித்தபடி சொன்னவள், "நீ எனக்கு ஃபிரெண்ட் இல்லடி என்னோட அம்மா, அப்பா எனக்கு எல்லாமே நீ தான்!! உனக்கு அடுத்து தான் எனக்கு யாருமே... நீ இல்லைன்னா பாசம் என்றாலே என்னன்னு எனக்கு தெரிஞ்சிருக்காது..."​

"என்னடி செய்யலை நீ எனக்கு?! ஹாஸ்டல்ல இருக்கிற எனக்காக உன்னோடு சேர்த்து தினமும் எனக்கும் சாப்பாடு கொண்டு வருவயே.., என் அம்மாவை விட உங்க அம்மா சாப்பாட்டை உன் கையாள நான் சாப்பிட்டது தான் அதிகம் அப்போ நீ எனக்கு அம்மா இல்லாம வேற யார்?!"​

"பலநேரம் என் படிப்புக்கு அந்த ஆள் பணம் கொடுக்காம போனாலும் நீ எனக்காக கொடுக்காம இருந்தது இல்லை. அதுவும் எனக்கு தேவைன்னு நான் கேட்கும் அளவுக்கு கூட நீ வச்சுக்கிட்டது கிடையாது. எனக்காக பேசி உன் அப்பாவை தொல்லை பண்ணி உன்னோடு சேர்த்து ஃபீஸ் கட்டுறதுல இருந்து டூர் வரை எல்லாமே எனக்காக அப்பா ஸ்தானத்துல இருந்து நீ செய்திருக்க சஞ்சு.."​

"இவ்ளோ செய்திருக்க நீ எனக்கு முக்கியமில்லாம வேற யார் முக்கியம்?!" என்று கேட்டபடி கண்களை துடைத்தவள் அடுத்த வரியில் விழிகளை நிலைக்க விட்டாள்.​

"சரி நடந்தது நடந்து போச்சு.. இனி நான் சொல்றதை மட்டும் செய்யறேன்னு எனக்கு சத்தியம் பண்ணிட்டு அடுத்த லைனை படிடி.." என்றாள் கட்டளையாக..​

நயனி அதே வரிகளில் தேங்கியிருக்க, "சொன்னது புரியலையா நான் சொல்றதை செய்வேன்னு சத்தியம் பண்ணு சீக்கிரம்" என்றதில் நயனியும் மனதார சத்தியம் செய்தவள் அடுத்த வரிக்கு சென்றாள்.​

"எனக்கு என்னோட ஸ்ரீ எவ்ளோ ஸ்பெஷல்னு உனக்கு தெரியும் தானே?! அவரோடு நான் என்ன மாதரியான வாழ்க்கையை கற்பனை பண்ணி வச்சிருந்தேன்னு உனக்கு தெரியுமேடி.. அதனால நீ என்ன பண்ற அவரை கல்யாணம் பண்ணிக்கிற.." என்றதில் நயனி அதிர்ந்திருக்க..,​

"ஷாக்கை குறைடி!! எதுக்கு இவ்ளோ ஷாக்காகிற? நான் தான் மொத்தமா போக போறதா சொன்னேனே மறந்துட்டியா?! அப்படி நான் போன பிறகு என் ஸ்ரீமாவை யார் பார்த்துப்பா.. அதனால கண்டிப்பா அவரை கல்யாணம் பண்ணிட்டு என்னை விடவும் நல்லா பார்த்துக்கணும்.. புரியுதா?!" என்றதில் புரியாமல் கலங்கிய விழிகளை துடைத்தாள்.​

"ப்ச் நீ ஒரு ட்யூப்லைட்டி! இன்னமும் நான் எங்க போக போறேன்னு புரியாமலே நிற்பியே.. சரி நல்லா கேட்டுக்கோ நீ இந்த லெட்டரை படிக்கிறப்போ நான் உயிரோடு இருக்க மாட்டேன்" என்றதில் வெலவெலத்து போனாள் நயனிகா.​

"நிஜம் தான் நயனி நான் இறந்த பிறகு உனக்கு இந்த கொரியர் கிடைக்கும் படி செய்ய சொல்லியிருக்கேன்.. உனக்கு சந்தேகம் இருந்தா இந்த லெட்டரோட கடைசி பக்கத்தை திருப்பி பார் என்று சொல்ல உடனே வேகமாக திருப்பிய நயனிகா அடுத்த நிமிடமே மயங்கி விழுந்திருந்தாள்.​

ஆம் இறுதி பக்கத்தில் இறந்து போயிருந்த சஞ்சனாவின் சடலமும் அவளின் இறுதி ஊர்வல புகைப்படங்களும் இருப்பதை கண்டு மயங்கி விழுந்துவிட்டாள்.​

அரை மணி நேரம் கழித்து அவள் அறை தோழி உதவி செய்யவும் எழுந்தவள், "சஞ்சு... சஞ்சு..." என்று கண்ணீர் மல்க கடிதத்தை தேடினாள்.​

"என்ன தேடற நயனி?"​

"சஞ்சு.. என் சஞ்சு.." என்றவளின் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்க ஓவென்று கதறிக்கொண்டே மடங்கி அமர்ந்தவளின் கண்ணீரும் கதறலும் பக்கத்து அறையில் இருந்தவர்களை அங்கே வர செய்திருந்தது.​

"எதுக்கு அழற நயனி. சஞ்சு தான் கிடைக்கலையே.." என்றிட அவளோ தன் மனம் முழுக்க ஆக்கிரமித்திருந்த தோழியின் சடலத்தில் கொண்ட அதிர்ச்சியில் மேலும் கதறிக்கொண்டு இருந்தாள்.​

"என்னாச்சு ஊர்வசி?"​

"தெரியலைடி நான் ரூமுக்கு வந்த போது மயங்கி இருந்தா எழுந்ததுமே அழ ஆரம்பிச்சுட்டா.." என்றவள் குளிர்ந்த நீரை கொண்டு வந்து நயனிக்கு கொடுத்து குடிக்க செய்து அவளை இயல்பிற்கு கொண்டு வந்தனர்.​

"எதுக்கு நயனி அப்படி கதறின?" என்று கேட்டவர்களுக்கு பதிலளிக்காதவள் கடிதத்தை தேட அது கட்டிலுக்கு அடியில் இருந்தது.. வேகமாக அதை எடுத்தவள் விட்ட இடத்தில் இருந்து படிக்க தொடங்கினாள்.​

"என்ன என்னோட போட்டோஸ் பார்த்து அழுதியா நயனி?! நான் ரொம்ப கொடூரமானவளா தெரியறனா?! பராவால்ல தெரிஞ்சுட்டு போறேன் இல்லைன்னா நீயும் அவரும் நம்ப மாட்டீங்களே அதனால் தான்.. நான் உன்னோட சஞ்சுகுட்டி தானே? ரொம்ப அழ வச்சதுக்கு மன்னிச்சுடுடி.." என்று கையெடுத்து கும்பிடும் படி வரைந்திருந்தாள்.​

"இப்போ நான் சொல்றதை செய்வ தானே?!"​

"அதுக்கு முன்ன எனக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க நீ துடிக்கிறது எனக்கு புரியுது.. ஆனால் அதை முழுசா தெரிஞ்சா நீ தாங்குவன்னு எனக்கு நம்பிக்கை இல்ல நயனி. அதனால வேண்டாமே!"​

"ஒரு விஷயம் மட்டும் சொல்லியே ஆகணும். இந்த ஜென்மத்துல எனக்கு என் ஸ்ரீமாவோடு வாழ கொடுத்து வைக்கலை.. ஆனா சீக்கிரமே நான் உங்க இரண்டு பேருக்கும் மகளா பிறக்கணும் என்பது தான் என்னோட ஆசை, வேண்டுதல் எல்லாமே நயனி... என் கடைசி ஆசையை நிறைவேற்றுவியா?" என்றவளின் கண்ணீர் அவள் போட்டிருந்த கேள்விக்குறியோடு இறுதி வார்த்தையின் இறுதி இரு எழுத்துக்களையும் அழித்து "நிறைவேற்று" என்று மாற்றியிருந்தது.​

"ஆனால் இதுல ஒரு கண்டிஷன் இருக்கு..."​

"என்னன்னு கேட்கிற நிலைமையில நீ இல்லைன்னு தெரிஞ்சதால நானே சொல்லிடுறேன்.."​

"உனக்கே தெரியும்... ம்ஹும் உன்னை விட வேற யாருக்குமே ஸ்ரீமா என்னை எந்தளவு உயிரா நேசிக்கிறார் என்று தெரியாது.. அதனால நான் இந்த உலகத்துல இல்லை என்கிற உண்மை தெரிஞ்சா நிச்சயம் அவர் இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டார்.."​

"காலம் முழுக்க என் நினைவில் இருப்பார் என்பது ஒருபுறம் என்றால் என்னை இந்த கதிக்கு ஆளாக்கினவங்களை அவர் ஏதாவது செய்யப்போய் அதனால அவரோட வாழ்க்கை கேள்விக்குறியாகுவதை நான் விரும்பலை.."​

"ஏன்னா இந்த கொடுமைக்கு ஆளாகும் முதல் பெண் நான் கிடையாது. இதுக்கு ஆண் வர்க்கம் மனம் திருந்தினால் ஒழிய தீர்வு கிடையாது. ஆனால் அப்படி ஒரு சூழல் இனி அவருக்கு கிடையாது என்றாலும் இந்த கட்டத்துல வாழ்க்கையோட அருமை புரிஞ்சதால மற்றதை விட எனக்கு உங்க ரெண்டு பேரோட சந்தோஷம் தான் முக்கியம்.."​

"இந்த இடத்துல ஸ்ரீ எப்படி உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பார் என்ற கேள்வி உனக்கு வரலாம்.. கண்டிப்பா வரணும்!"​

"அவர் சம்மதிக்கிறது ரொம்ப கஷ்டம் ஆனா நீ விடாத அவர்கிட்ட இல்லல அவரோட அப்பா கிட்ட போய் அவரை விரும்புறதை சொல்லு.. என்னை வேண்டாம்னு சொன்னவர் உன்னை நிச்சயம் வேண்டாம்னு சொல்ல மாட்டார்.." என்று புன்னகைக்கும் பொம்மைகளை வரைந்திருந்தாள்.​

"நல்லா கேட்டுக்கோ நான் உனக்கு அனுப்பி இருக்கும் லெட்டரை படிக்க மட்டும் தான் உனக்கு அனுமதி... ஸ்ரீக்கு எழுதியிருக்கும் லெட்டரை அவர் தான் படிக்கணும் ஆனா இப்போ இல்லை.. உங்க கல்யாணத்துக்கு அப்புறம் நான் உங்களுக்கு பிறந்த பிறகு என் முன்னிலையில் தான் இந்த லெட்டரை நீ அவர்கிட்ட கொடுக்கணும்..."​

"எனக்கு என்ன நடந்தது என்று அவர் அப்போ தான் தெரிஞ்சுக்கணும்.. அதேபோல பேபி சஞ்சனா என்று இருக்கும் லெட்டரை என்னோட முதல் பர்த்டே அன்று தான் நீங்க பிரிக்கணும்..."​

"அதை எதுக்கு பிரிக்கணும் என்று யோசிக்கிறியா..?!"​

"நீ நினைக்கிற மாதிரி அதுல எந்த அணுகுண்டும் இருக்காது பதிலா நான் இருப்பேன்..."​

"புரியலையா?! நான் நிரந்தரமா தூங்கிட்டு இருக்கும் இடம் பற்றின விபரம் அதுல இருக்கும்.. இப்போ நீ ப்ச் நீங்க அதை பிரிக்கவும் கூடாது அங்க வரவும் கூடாது.. இது என்னோட ஆர்டர்!! நிச்சயம் மீற மாட்டீங்கன்னு நம்பறேன்.."​

"வேற என்ன சொல்ல?! ப்ச் சொல்ல நிறைய இருக்கு நயனி ஆனா என் செல்லத்துக்கு நான் இதுக்கு மேல கஷ்டம் கொடுக்க விரும்பலை.. இதையெல்லாம் மறந்துட்டு நான் உனக்கு கொடுத்த வேலையை மட்டும் பார்க்கணும் அதை விட்டுட்டு நான் இல்லை என்ற விஷயத்தை என் ஸ்ரீமாவுக்கு சொல்றதோ என்னை தேடி வரக்கூடிய தேவையில்லாத வேலையை வச்சுக்கிட்டாலோ அப்புறம் நான் உங்களுக்கு (மகளா) கிடைக்க மாட்டேன்.."​

"பாதியிலேயே முடிஞ்சு போன என் வாழ்க்கையை திரும்ப எனக்கு உங்களோட வாழ ரொம்ப ஆசையா இருக்கு நயனி. என் வாழ்க்கையை வாழற எண்ணம் உனக்கு எப்பவுமே வரக்கூடாது.. ஏன்னா உன் டைரியை படிச்சதுல இருந்தே உன் வாழ்க்கையை தட்டி பறிச்சுட்டேனோ என்ற கில்ட் எனக்கு அதிகமா இருந்தது..."​

"பொதுவாவே சொல்லுவாங்களே யாருக்கு யாருன்னு ஆண்டவன் முடிச்சு போட்டிருப்பான் என்று. அப்படி ஒருவேளை நீங்க இரண்டு பேரும் சேர வேண்டும் என்பது தான் ஆண்டவன் எடுத்து முடிவுன்னு நினைக்கிறேன் இடையில் வந்த நான் இடையிலேயே போறேன்.."​

"அதுவும் நீங்க ரெண்டு பேரும் சேரப்போறீங்க என்ற சந்தோஷத்தோடு!! நிச்சயம் என் நயனியும் என் ஸ்ரீமாவும் என்னை ஆசையோடு வளர்க்க போறாங்க என்ற நிறைவோடு நான் போறேன்.. பை நயனி! பட் ப்ளீஸ் என் கடைசி ஆசையை மறுக்காமல் நிறைவேற்று.." என்பதோடு கடிதம் முடிவு பெற்றிருந்தது.​

 
Last edited:

Indhumathy

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 8, 2021
102
39
43
Madurai
sad update 🙁🙁🙁
என்ன ஆச்சு சஞ்சுக்கு 😳 எதுவும் ஹெல்த் இஸ்யூனால இறந்து போயிருப்பா ன்னு நினைச்சேன் அப்படி இல்ல போலவே 🫤🫤🫤
 
  • Love
Reactions: kkp11