"நான் சொன்ன விஷயம் உங்களுக்கு எந்தளவு அதிர்ச்சியை கொடுத்து இருக்கும் என்று எனக்கு தெரியும் ஸ்ரீமா.. ஆனால் அது தான் நிஜம்! அவ ஸ்கூல் படிக்கிறப்போ இருந்தே உங்களை விரும்பிருக்கா ஆனால் அவளோட குடும்ப பின்னணி, சூழ்நிலை அவளுக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுத்திருக்கு. உங்ககிட்ட தன்னோட விருப்பத்தை சொல்ல அவளுக்கு தைரியம் வரலை...."
"உங்களுக்கு தெரியாது ஸ்கூல்ல எவ்வளவோ பேரு எல்லாருக்கு ஒரு அம்மா ஒரு அப்பா தான் இருப்பாங்க உனக்கு மட்டும் எப்படி நயனி ஒரு அம்மா ரெண்டு அப்பான்னு கேட்டு கிண்டல் பண்ணி அவளுக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுத்திருக்காங்க.. இதனால பல நாட்கள் தூக்கமில்லாம கிளாஸ்ல என் மடியில் படுத்து தூங்கியிருக்கா..."
"அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி என்று வெளில சொல்லிக்கிட்டாலும் உண்மையில் நயனிக்கு நெருக்கமானவங்கன்னு யாருமே கிடையாது. அவ தனியாவே தன்னை தானே செதுக்கிக்கிட்டவள்.. அப்பாவுடைய பாசமே தெரியாம வளர்ந்தவளுக்கு அம்மாவுடைய பாசமும் முழுமையா கிடைத்தது கிடையாது.. தனக்கு இது வேணும் என்று கேட்டு பெற தெரியாது நயனிக்கு..."
"எங்கே உங்க கிட்ட தன் விருப்பத்தை சொல்லி நாளைக்கு நீங்க இந்த காரணத்துக்காக அவளை மறுத்துடுவீங்களோ என்று ரொம்ப பயந்திருக்கா.. ஒருவேளை என்கிட்டே சொல்லி இருந்தா எப்படியாவது அவளை உங்களோடு சேர்த்து வச்சிருப்பேன் ஆனா நம்மோட காதலுக்கு மதிப்பு கொடுத்து நமக்கு இடையில் வராமல் அழகா விலகிட்டவ அவளோட காதலை மனசுக்குள்ளே போட்டு பொதைச்சுட்டா ஸ்ரீமா.."
"எனக்கு கூட பிறந்தவங்க யாருமில்லைங்கிற குறையே தெரியாம பார்த்துகிட்டவ நயனி தான். எனக்கு ஒண்ணுன்னா பதறிப்போயிடுவா அதனாலேயே எனக்கு நடந்த கொடூரத்தை அவளுக்கு நான் சொல்லல நீங்களும் முழுமையா சொல்ல வேண்டாம் அவளால தாங்க முடியாது.."
"நான் அவளோட டைரி படிக்கிற வரைக்கும் இந்த உலகத்திலேயே அவளுடைய மொத்த பாசமும் கிடைக்கபெற்ற ஒரே ஆள் நான் மட்டும் தான் என்று நினைத்திருந்தேன் ஆனா படிச்ச பிறகு தான் அவளோட மனசுல உங்களுக்கான இடம் என்னன்னு தெரிஞ்சுகிட்டேன்.."
"நம்மோட கல்யாணம் மட்டுமில்லை என் நயனியோட கல்யாணம் பற்றியும் அவளுக்கு வரப்போற மாப்பிள்ளை பற்றியும் நான் நிறைய கனவு கண்டிருந்தேன். அவளுக்கு வரப்போறவன் அவளோட அருமை தெரிஞ்சவனா இருக்கணும், அவளை புரிஞ்சுகிட்டவனா இருக்கணும், அப்பா கிட்ட அவ அனுபவிக்காத அன்பையும், அரவணைப்பையும், பாசத்தையும், பாதுகாப்பையும் கொடுக்க கூடியவனா இருக்கணும் என்று எவ்ளோ ஆசைபட்டிருப்பேன் தெரியுமா?!"
"ஆனா நீங்க அவ மனசுல இருக்கிறதை தெரிய வந்ததுல எனக்கு அவ்ளோ சந்தோஷம். நிச்சயமா என் ஸ்ரீமாவை விட வேற யாரும் அவளை நல்லபடியா பார்த்துக்க முடியாது..."
"ஒருவேளை எனக்கு எந்த அசம்பாவிதமும் நேராமல் போயிருந்தாலும் நயனி உங்களை விரும்புற விஷயத்தை உன்கிட்ட நிச்சயம் சொல்லியிருப்பேன். ஆனா உங்களை விட்டு கொடுத்திருப்பேனான்னு கேட்டா நிச்சயம் என்னால முடியாது.. என் நயனியும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாள்..."
"நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும்னு தான் நினைச்சிருப்பா ஆனா எனக்கு தான் அவளோட வாழ்க்கையை தட்டி பறிச்சுட்ட குற்ற உணர்வு காலம் முழுக்க ஒரு ஓரத்துல உறுத்திட்டு இருந்திருக்கும்.."
"ஆனா இப்போ அதுக்கெல்லாம் வழி இல்லாம போயிடுச்சு. நயனியும் ஸ்ரீமாவும் சேரவேண்டும் என்பது தான் விதிச்சிருக்கு! என்னை நீங்க கல்மனசுக்காரியா நினைக்கலாம் ஆனா நீங்களும் நயனியும் எனக்கு இரண்டு கண்களை போல அதுதான் உங்களை ஒன்னு சேர்ப்பதன் மூலமாக பார்வையை ஒன்றாக மாற்ற என்னாலான முயற்சி.."
"என்ன தான் இந்த லெட்டரை நான் தொடங்கின போது நீங்க படிக்கிற சூழல் நான் பிறந்த பிறகு தான் இருக்கும் என்று சொன்னாலும் இப்போ இந்த நிமிஷம் தோணுது ஸ்ரீ.., அதுக்கு வாய்ப்பு இருக்காதுன்னு..." என்றவளின் புரிதலில் அவனுக்கு மூச்சடைத்து போனது.
"ஏன்டி எனக்கு ஒரு வார்த்தை சொல்லாம போன?!" என்று வாய்விட்டு கதறியவனால் சஞ்சுவின் கடிதத்தை முழுதாக கூட படிக்க முடியவில்லை.. தன் சஞ்சு இல்லை என்ற நிஜத்தை இந்த நிமிடம் வரை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனால் கையில் வைத்திருந்த அவள் இறுதி புகைப்படங்கள் நொடிக்கு நொடி நிதர்சனத்தை அவனுக்கு உணர்த்தியது ஆனாலும் மழலையாய் மனம் பிதற்ற ஏதேனும் ஒரு அதிசயம் நிகழ்ந்து 'அவள் மீண்டு வந்து விட மாட்டாளா?' என்ற ஏக்கம் உண்டானது.
"உண்மையை சொல்லுங்க ஸ்ரீமா., இன்னும் நான் உங்களுக்கு மகளா பிறக்கலை அது நிஜம் தானே?!" என்று கேட்க கடிதத்தை தன் நெஞ்சோடு பிடித்துக்கொண்டவனின் இருதயத்துடிப்பின் வேகம் இரண்டு மடங்காக அதிகரித்திருந்தது.
"நீங்க இன்னும் நயனியோடு சேர்ந்து வாழலை தானே?! எனக்கு தெரியும் ஸ்ரீமா.. ஆனா ப்ளீஸ் எனக்காக இல்லாமல் அவளோட காதலுக்காக காத்திருப்புக்காக அவளோடு நீங்க சேர்ந்து வாழனும். நான் வேற நயனி வேற இல்லைன்னு உங்ககிட்ட பலமுறை சொல்லி இருக்கேன். அது சாத்தியமான உண்மை!"
"என்னோட ஸ்ரீ மாவுக்கு அன்பை மட்டும் தான் கொடுக்க தெரியும், கண்டிப்பா நீங்க அவளையும் நல்லா பாத்துப்பீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அவளை எந்த காலத்திலும் வெறுத்து ஒதுக்கிடாதீங்க நான் வேற நயனி வேறு இல்லைன்னு உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை"
"ப்ளீஸ் ஸ்ரீமா என்னோட நயனியை நீங்க காயபடுத்தினா அது எனக்கு வலி கொடுக்கும். அவளை புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க.. இந்த லெட்டரை இப்போதான் உங்கிட்ட கொடுக்கணும் என்பது நான் அவளுக்கு போட்ட ஆர்டர்... ஒருவேளை முன்னாடியே கொடுத்திருந்தா நீங்க நயனியை என்று கிடையாது யாரையும் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டீங்கன்னு தெரிஞ்சு தான் அப்படி சொன்னேன்.."
"அதேபோல நான் பிறந்த பிறகு நயனி நான் எங்கே இருக்கிறேங்கிற அடுத்த லெட்டரை உங்ககிட்ட கொடுப்பா.. என் முதல் பர்த்டே முடிச்சுட்டு தான் நீங்க அங்க வரணும்.. ப்ளீஸ் ஸ்ரீமா எனக்காக இதை மட்டும் செய்வீங்களா? உங்க சஞ்சுவோட கடைசி ஆசை இது"
"அப்புறம் இது நான் சாகும் முன்னாடி எழுதுற லெட்டர் ஸ்ரீமா.. சாகும் முன்னாடி என்றால் எப்படின்னு யோசிக்கிறீங்களா? ஆமா நான் தற்கொலை பண்ணிக்க போறேன்.." என்றிட உயிரை வேரோடு பிடுங்கி எறிந்த வலி அவனுக்கு.
"ப்ளீஸ் அழாதீங்க.. என் மேல கோபப்படாதீங்க?! இந்நேரம் இதை படிக்கிறப்போ நீங்க என்ன பாடு படுவீங்கன்னு நினைச்சு பார்த்தாலே என்னால அடுத்த வார்த்தை எழுத முடியலை.. நான் இந்த முடிவுக்கு வருவேன்னு நீங்க மட்டுமில்ல நானும் எதிர்பார்க்கலை.."
"காதலிக்க மறுத்த பெண்களை கற்பழித்து, ஆஸிட் ஊற்றின்னு எத்தனையோ கொடுமைகளை படிக்கிறப்போ அதுல இருந்து மீண்டு புது வாழ்க்கைக்கு வராமல் தற்கொலை என்ற எண்ணம் ஏன் இவங்களுக்கு வந்ததுன்னு நானே எத்தனையோ முறை திட்டியிருக்கேன்..."
"ஆனா நிதர்சனம் ரொம்ப கொடுமையா இருக்கு ஸ்ரீமா.. என்னால மீள முடியலை, உங்களுடனான வாழ்க்கையை வாழ முடியாம செய்துட்ட அந்த நாளை மறக்க முடியலை. ஏதாவது அதிசயம் நடந்து என் உடம்புல எச்ஐவி வைரஸ் இல்லைன்னு யாராவது சொல்லிட மாட்டாங்களா?! இதெல்லாம் கனவா இருந்திடக்கூடாதான்னு எத்தனை முறை டெஸ்ட் எடுத்து பார்த்திருப்பேன் தெரியுமா ஸ்ரீமா..." என்றிட கண்களை மூடிய அபய் ஸ்ரீவத்ஸன் விழிகளில் இருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது.
"ஏன்டி ஏன் இப்படி பண்ண? என்று தன் அறையில் இருந்த சஞ்சுவின் புகைப்படத்தின் முன் சென்று நின்றான்.
"நீ மட்டும் என்னை பார்த்துட்டு உன்னை ஒருமுறை பார்க்கிற பாக்கியத்தை கூட கொடுக்காம போயிட்டியே எவ்ளோ கல்நெஞ்சக்காரிடி நீ!"
"ஏன் சஞ்சு இப்படி பண்ணின?" என்று அவள் புகைபடத்தை கட்டிக்கொண்டவனின் கதறல் கீழிருந்த நயனியை மேலே வர வைத்திருந்தது.
"சாகும் முன்ன ஒரே ஒருமுறை உங்களையும் நயனியையும் பார்க்கணும் என்று தோணுச்சு அதுதான் ஊருக்கு வந்து உங்க ரெண்டு பேரையும் தூரத்தில் இருந்து பார்த்துட்டு கிளம்பிட்டேன்" என்றதில் அத்தனை நேரம் அவன் கொண்டிருந்த திடம் மொத்தமாக வடிந்தது.
"கடைசியா உன் முகத்தை ஒருமுறை பார்க்க விடாம பண்ணிட்டியேடி அப்படி என்ன உனக்கு கல்நெஞ்சம்? நீயில்லாம நான் மட்டும் எப்படி இருப்பேன்னு நினைச்ச சஞ்சு?!" என்று தலையை பிடித்துக்கொண்டவனால் நிஜத்தை ஏற்க முடியவில்லை.
வெறி பிடித்தவன் போல அறையில் இருந்த பொருட்களை போட்டு உடைத்தவன் மீண்டும் கடிதத்தை எடுத்து எங்காவது மொபைல் நம்பர் அட்ரெஸ் கிடைக்குமா என்று தேட, "அபய் ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ஃப்" என்று நயனிகா அவனை பிடித்து சமாதனப்படுத்த முயன்றாள்.
ஆனால் அதை ஏற்காதவன், "நயனி சஞ்சு கொடுத்த மூணாவது லெட்டர் எங்கே? கொடு" என்றான்.
"இல்ல இப்போ கொடுக்க முடியாது..."
"ஏன் முடியாது?"
"நம்ம குழந்தைக்கு அதாவது சஞ்சுவுக்கு ஒரு வருஷமான பிறகு தான் கொடுக்கணும்"
"எனக்கு இப்பவே என் சஞ்சுவை பார்க்கணும் லெட்டரை கொடுடி.." என்றபடி கப்போர்டில் இருந்த அவள் துணிமணிகளை எல்லாம் எடுத்து வீசியவன் கடிதத்தை தேட அங்கே கிடைக்கவில்லை.
"அபய் ப்ளீஸ் நான் சொல்றதை கேளுங்க.. ஏற்கனவே சஞ்சு சொன்னதை மீறி உன்கிட்ட முன்னாடியே லெட்டரை கொடுத்துட்டேனேன்னு எனக்கு கில்டா இருக்கு இப்போ இதையும் நான் கொடுத்தா அவளுக்கு என்மேல இருக்கிற நம்பிக்கையே போயிடும்.. அவளுக்கு நீங்க முக்கியம் அதுக்காக தான் சொல்லியிருக்கான்னு கூட உங்களுக்கு புரியலையா?"
"எனக்கு லெட்டர் வேணும்.." என்று தன் பிடியிலேயே அவன் நிற்க..,
"நிச்சயம் நம்ம குழந்தை பிறந்த பிறகு தான் கொடுப்பேன் அதுக்கு முன்ன நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்" என்றதும் தான் தாமதம் அபய் அவளை ஓங்கி அறைந்திருந்தான்.
"அபய் நீங்க இப்போ லெட்டரை படிக்கிறதால சஞ்சு உயிரோட வரப்போறதில்லை ப்ளீஸ் ட்ரை டூ அண்டரஸ்டான்ட்.."
"எனக்கு அதெல்லாம் தெரியாது இப்போவே லெட்டர் வேணும் கொடுக்க முடியுமா முடியாதா? சொல்லுடி" என்றிட முரளி, சௌந்தர்யா, நிர்மலா அனைவரும் தோட்டத்தில் இருந்து இங்கே வந்துவிட்டனர்.
"என்னாச்சு?" என்றவர்களை அறை இருந்த கோலமே கலவரப்படுத்த, "என்னமா ஆச்சு?" என்றார் நிர்மலா.
"சஞ்சு உயிரோட இல்லைன்னு அவர் கிட்ட சொன்னேன் அத்தை ஆனா புரிஞ்சுக்க மாட்டேங்கிறார்" என்று சொல்லிகொண்டிருக்கும் போதே வேகவேகமாக கீழே இறங்கி சென்ற அபய் அடுத்த சில நிமிடங்களில் தன் காரை புயல் வேகத்தில் கிளப்பிக்கொண்டு போனான்.
Last edited: