• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 1

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அத்தியாயம் 1

ஜிகே கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்டி கௌதம் கிருஷ்ணா தனது ஆஃபிஸில் தன் அறை சுழல்நாற்காலியில் அமர்ந்து சுற்றிக் கொண்டே பாடல் பாடிக் கொண்டிருந்தான்.

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்...
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்...
இளவேனில் உன் வாசல் வந்தாடும்!

இளந்தென்றல் உன் மீது பண்பாடும்!..

அறை கதவு தட்டும் சத்தம் கேட்க, வருவது யார் என தெரிந்ததால் அதே நிலையில் அமர்ந்திருந்து, "உள்ள வா டா" என்றவன்

ஓ ஹோ...ஹோ.. ஓ ஹொ..ஹோ...
ஓ ஹோ...ஹோ..


என தொடர்ந்து சோகக் குரலில் பாடி ஹம் செய்ய, வந்தவன் டேபிள்மேல் இருந்த ஒரு பேப்பரை தூக்கி அவன் மேல் வீசினான்.

"ஏன்டா..! உன்னை யாரு இங்கே வர சொன்னது? உன் ஆபிஸ்க்கு லீவு விட்டுட்டியா?" என வந்தவனை பார்த்து கௌதம் கேட்க, கொலைவெறியில் நின்றான் அவன்.

"டேய் ஆஃபீஸ் பிரஷர் தலைக்கு மேலே இருந்தும் நீ கூப்பிட்டனு ஓடி வந்தா நீ என்னடா சாவகாசமா உட்கார்ந்து பாட்டு பாடுற?" என்றான் கோகுல் ராம்.

கோகுல் ராம். ஜிஆர் கன்ஸ்ட்ருக்ஷன்ஸ் எம்டி. கௌதமின் உயிர் நண்பன். தொழில் வட்டாரத்தில் கோகுல், சொந்தங்களுக்கு ராம். பிசினஸில் இருவருக்கும் ஏற்றம் இறக்கம் உண்டு. இருவரும் ஒரு ப்ராஜெக்ட்டிற்காக தனித்தனியாக தயார் செய்து சென்றாலும், அது யாருக்கு கிடைத்தாலும் மற்றவனுக்கும் மகிழ்ச்சியே! இதுவே அவர்களின் சிறு வயது முதலான நட்பு.

இப்போதும் கௌதம், "உடனே வா" என்றதும் அடித்துபிடித்து ராம் ஓடி வந்திருந்தான்.

"சொல்லு டா எதுக்கு கூப்பிட்ட?" என்றவனை சோகமாக பார்த்த கௌதம்,

"என் லவ்வர்க்கு இன்னைக்கு கல்யாணம் டா" என்றதும் அவனை கேள்வியாய் பார்த்தான் ராம்.

"நிஜமா டா! அதான் சோகம் தாங்க முடியாட்டியும் அவ சந்தோசமா இருக்கனும்னு பாட்டு பாடுறேன்" என்றவனை,

"என்ன டா உளறுற? நீ லவ் பண்ணியா? என்கிட்ட சொல்லவே இல்ல? இன்னைக்கு கல்யாணம்னா நீ ஏன்டா இங்க இருக்க?" கௌதம் முகத்தில் அவ்வளவு சோகம் தேங்கி இருக்க, அதை உண்மை என்று நினைத்து நிஜமாகவே வருந்தி கேட்டான் ராம்.

"ப்ச்.. நானும் போகலாம்னு தான் டா நினச்சேன். ஆனால்… அங்கே பிரியாணி இல்ல, ஒன்லி வெஜ்தான்னு தகவல் வந்துச்சி. அதான் எதுக்கு அங்கே போய்கிட்டுன்னு..." என இழுக்க, இப்போது உச்ச கடுப்பிற்கு சென்றான் ராம்.

"டேய்.. டேய்! மூளை கெட்டவனே! உன்னயெல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா டா? உன்னை நம்பி இவ்வளவு பெரிய கம்பெனி வேற. எனக்குன்னு வந்து சேர்ந்திருக்க பாரு.. ச்சை" என தன் தலையிலே அடித்து கொண்டான் அவன்.

"என்ன டா இப்படி சொல்லிட்ட! பின்ன நான் போய் கல்யாணத்தை நிறுத்தவா முடியும்? எனக்குன்னு யாரு டா இருக்கா?" மீண்டும் அவன் சோக கீதம் வாசிக்க அவனின் கடைசி வார்த்தைகளை கேட்க முடியாத இளகிய மனம் கொண்ட ராம் மீண்டும் இளகினான்.

கௌதம் கிருஷ்ணா பல கோடி சொத்துக்களுக்கு ஒரே வாரிசு. அம்மா அப்பா சொந்தம் என அனைத்தையும் இழந்த ஒருவன். பள்ளி முதல் கல்லூரி வரை தனக்கென்று இருந்த ஒரே ஒரு ஒன்றுவிட்ட சித்தப்பாவும் இறந்துவிட அவன் இப்போது யாருக்காகவும் எதற்காகவும் பெரிதாக அலட்டி கொள்வதில்லை ராமை தவிர.

"ஹேய் லூசு! இப்ப என்ன? கல்யாணத்தை நிறுத்தணும் அவ்வளவு தானே? கிளம்பு போலாம்.. எந்த மண்டபம்?" என்றவன் உடனே யாருக்கோ அழைத்து ஆட்களை திரட்ட, கேட்டுக் கொண்டிருந்த கௌதம் திருட்டு முழியுடன் எச்சில் விழுங்கினான்.

"என்ன டா பாக்குற? இனிமேல் யாரும் இல்லனு சொன்ன... அப்ப இருக்கு உனக்கு! ஆமா பொண்ணு யாரு? பேரு என்ன?" என மொபைலை நோண்டிக் கொண்டே ராம் கேட்க,

"கா... கா... " என சத்தம் வெளிவராமல் அவனுக்கு தொண்டை அடைக்க, மொபைலை நோண்டிக் கொண்டிருந்தவன் திரும்பி அவனை பார்த்தான்.

"என்ன டா? பேர் என்ன?" என மீண்டும் கேட்க,

"காஜல் அகர்வால்!" என பம்மியபடி கூறியவன், அடுத்து ராம் என்ன செய்வான் என தெரிந்ததால் அதிர்ச்சியில் நின்ற ராம் சுதாரிப்பதற்குள் எழுந்து வெளியே சிரித்து கொண்டே ஓடினான்.

ஆண்மைக்கு இலக்கணமாய் ஆறடியில் ஒருவன் அதுவும் எம்டி சிரித்துக் கொண்டே ஆஃபிஸில் ஓட, அங்கே வேலை பார்க்கும் பெண்கள் எல்லாம் எப்போதும் போல அவனை விழி எடுக்காமல் சைட் அடித்தனர். அதை எல்லாம் பார்த்தும் பார்க்காதது போல காருக்கு சென்றான் கௌதம்.

பின்னால் நடந்து வந்த ராம் முகத்தில் கடுகு போட்டு தாளிக்கும் அளவுக்கு கோபம் இருக்க, அங்கு வேலை பார்க்கும் அனைவருக்கும் கௌதம் வால்தனம் தெரியும் என்பதால் ராமின் கோபம் ஓரளவு யூகித்து அதே ‘சைட்’டை ராம் மேலும் தெளித்து விட்டு வேலையை தொடர்ந்தனர்.

"நிஜமா நான் காஜலை லவ் பண்ணேன் டா. மை லவ் ஸ் ட்ரூ. ஆனால் பாரேன் மாப்பிள்ளை என் அளவுக்கு கூட பெர்சனாலிட்டி இல்லை… என்ன பண்றது காஜல் குடுத்து வச்சது அவ்வளவு தான்" காருக்குள் ஏறியது முதல் ராம் அமைதியாக வர, கௌதம் தான் அவனை சீண்டிக் கொண்டிருந்தான்.

வீடு வந்ததும் நேரே உள்ளே ஓடிய ராம் “அம்மா! அம்மா!” என கத்த அவன் அலறலில் வெளியே வந்தார் சகுந்தலா.

"ஏன்டா வந்ததும் வராததுமா இப்படி கத்துற? அவனை பாரு வந்த தடம் தெரியாமல் எவ்வளவு அமைதியா உட்கார்ந்திருக்கான்" என கௌதமை கை காட்ட, அவனோ எதுவும் தெரியாதது போல டிவியில் காஜல் பாடல் கேட்டுக் கொண்டிருந்தான்.

அதில் மேலும் கடுப்பான ராம், "ம்மா, இவன் என்ன பண்ணான் தெரியுமா?" என ஆரம்பித்து அனைத்தையும் கூற, அதை கேட்ட சகுந்தலா "ஏன்டா இப்படி சின்னபுள்ள தனமா அவன்கூட சண்டை போட்டதும் இல்லாமல் அதை என்கிட்டயே வந்து கம்பளைண்ட் பண்றியே உனக்கு வெக்கமா இல்ல?" என தன் மகனையே திட்ட, இதை முன்பே அனுமானித்த கௌதம்,

"விடுங்க மா! அவன் சின்ன புள்ள தானே!" என இன்னும் ஏத்திவிட்டான்.

கௌதம், ராம் சிறுவயது முதலே நண்பர்கள். ராம் வீட்டு பக்கத்தில் தான் கௌதம் வீடு. அவன் சித்தப்பா குடும்பம் இருந்தவரை அவன் அவர்களோடு இருந்துவிட, அவர் இறந்ததும் சித்தியும் அவர் ஊருக்கே சென்றுவிட்டார். இப்போது கௌதம் அவன் வீட்டிற்கு எப்போதாவது தான் செல்வான். கடந்த 6 வருடமாக சாப்பிடுவது முதல் தூங்குவது வரை ராம் உடனே தான்.

ராமிற்கு பொய் சொன்னால் பிடிக்காது. எவ்வளவு இளகிய மனம் உடையவனோ அதே அளவுக்கு கோபமும் உடையவன். அதனாலேயே அவனை சீண்டி அடிக்கடி இவ்வாறு கோபப்பட வைப்பான் கௌதம்.

ஒருவாறு ராம் சமாதானம் அடைந்து பிரெஷ்அப் ஆகி வர, சுடசுட பஜ்ஜியும் காபியும் கொண்டு வந்தார் சகுந்தலா. கௌதம் கைகள் கூட கழுவாமல் அதை பாய்ந்து எடுக்க,

"டர்ட்டி பெல்லொவ்! போய் பிரெஷ் ஆகிட்டு வா டா" என அனுப்பி வைத்தவரை முறைத்து கொண்டே செல்ல, ராம் வேண்டுமென்றே பஜ்ஜியை கௌதம் கண்களுக்கு முன் கொண்டு வந்து ஆட்டி ஆட்டி சாப்பிட்டான். அதற்குமேல் பொறுக்க முடியாமல் வேகமாக கைகளை கழுவிக் கொண்டு ஓடி வந்தான் கௌதம்.

"ஏன்டா இப்படி சின்ன புள்ள தனமா அடிச்சிக்கிட்டு இருக்கீங்களே, உங்களுக்கு வயசு 30 ஆச்சுன்னு கொஞ்சமாவது கவலை இருக்கா?" என சகுந்தலா கேட்க,

"30 வயசுல பஜ்ஜிக்கு அடிச்சிக்க கூடாதுனு எதாவது சட்டம் இருக்கா என்ன?" என்றவன் அதே அதே கௌதம் தான்.

"வேண்டாம் டா… ராம் உன்னை அடிக்காமல் விட்டான். நான் அப்படி விடுவேன்னு நினைக்காத, பஜ்ஜில பாம் வச்சு தந்திடுவேன்" என அவர் சொல்ல,

"பஜ்ஜில பாம்மா?" என கௌதம் பாதி வாயில் வைத்த பஜ்ஜியுடன் இருக்க, "உனக்கு இது தேவையா" என சிரித்தான் ராம்.

"சரி இந்த போட்டோ பாருங்க" என இருவரிடமும் ஒரு போட்டோவை கொடுக்க, அதை பார்த்த இருவரும் திருப்தி அடைந்தனர். ஆனாலும் அப்படியே விடுவானா கௌதம்.

"என்னடா, மாப்ள நம்மை விட அழகா இருக்கான். ப்ஃயூச்சர்ல நமக்கு இதனால் ஏதாவது ப்ரோப்லேம் வருமா?" என கேட்க, அவனை முறைத்த ராம்,

"நல்லா தான் இருக்காரு மா. நந்தினிகிட்ட காட்டினிங்களா? அவளுக்கு ஓகேவா?" என தன் தங்கையை கேட்க, சரியாக வீட்டிற்குள் நுழைந்தாள் நந்தினி.

"என்ன என் பேச்சு அடிபடுது?" என்றவாறு இரு அண்ணன்களுக்கும் நடுவில் அமர அவள் கையில் போட்டோவைக் கொடுத்தான் ராம்.

அவளும் என்னவோ என்று பார்க்க, பார்த்தும் புரிந்து அதை அவனிடமே கொடுத்து விட்டவள், "இந்த வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம். இதெல்லாம் உங்கள் பொறுப்பு தான். நான் பார்க்க மாட்டேன்" என்றுவிட, அனைவரும் சிரிப்புடன் அவளையே பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது இன்னொரு போட்டோவை கையில் வைத்திருந்த சகுந்தலா "ராம்! இப்ப நான் சொல்றதை நல்லா கேளு! நான் யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்துருக்கேன்" என்று சொல்ல, புருவ முடிச்சுகளுடன் அவரை பார்த்தான் ராம்.

"இதோ பாரு ராம்! உனக்கு தான் முதலில் கல்யாணம் பண்ணணும்" என்றதும் அவன் சலித்து கொள்ள, "சரி.. சரி.. நீ நந்தினிக்கு அப்றம் தான் பண்ணுவேன்னு சொல்லிட்ட. பட் உன் ஜாதகப்படி இந்த வருஷம் உனக்கு கல்யாணம் ஆகலைனா இன்னும் 2 வருஷத்துக்கு கல்யாணம் நடக்காதாம். அதனால உனக்கும் ஒரு பொண்ணு பார்த்திருக்கேன்" என அந்த போட்டோவை நீட்ட, கொஞ்சமும் யோசிக்காமல் உடனே ராம் கேட்ட கேள்வி "அப்போ கௌதம்?" என்றது தான்.

"டேய்! ஏன்டா? ஏன் உனக்கு இந்த கொலவெறி? என்னவோ உனக்கு கறிக்குழம்பு ஊத்திட்டு எனக்கு சாம்பார் ஊத்தின மாதிரி கேட்குற? நான் கொஞ்ச நாள் சந்தோசமா இருந்துகிறேன்.. அதோட உன்னை விட நான் 6 மாசம் சின்னவன் தான். அதனால் எனக்கு இப்ப வேண்டாம்" என்க,

சகுந்தலாவும், "ஆமாம் டா! கௌதமை நான் கவனிச்சுக்குறேன். உங்கள் ரெண்டு பேர் கல்யாணமும் முதலில் நடக்கட்டும்" என சொல்ல, அமைதியாய் யோசித்தான் ராம்.

அவர் போட்டோவை நீட்ட அதை வாங்கி பார்த்த ராம் கண்கள் ஒரு நொடி பளிச்சிட்டது. அதை கௌதமும் கண்டு கொண்டான். மற்றவர்கள் கண்டுகொள்ளும் முன் அதை உடனே மறைத்தவன், "நாட் பேட்" என்றான்.

நெஞ்சில் கைவைத்து அடப்பாவி என கௌதம் பார்க்க, காலையிலேயே அன்னை காட்டிய போட்டோவை பார்த்திருந்த நந்தினியுடன் சகுந்தலா கூட இவ்வளவு தானா உன் ரியாக்ஷன் என பார்த்து நின்றனர்.

"என்ன டா இப்படி சொல்ற? உனக்கு பிடிக்கலையா?" என சகுந்தலா கேட்க, "ம்ம்ம்ம் வேற என்ன சொல்லுவேன்னு நினச்சீங்க?" என்றான்.

"அண்ணா! நிஜமா நானே போட்டோ பார்த்து பொறாமை பட்டேன். வாவ்! சூப்பர்னு சொல்லாட்டியும் இப்படியா நாட் பேட்னு சொல்லுவ?" என கேட்க,

"நீ நினச்ச பதிலை நான் சொல்லி இருந்தால் என்ன பண்ணி இருப்பிங்க?" என மீண்டும் ராம் கேள்வியே கேட்க, கௌதம் அவனையே குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன பண்ணியிருப்போம்? கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருப்போம்" என சொல்ல, "அப்ப அதையே பண்ணுங்க" என எழுந்து கொண்டான்.

"யப்பா! டேய் சாமி! இது உலக மகா நடிப்பு டா" என அவனை நன்கு தெரிந்த கௌதம் அபிநயத்துடன் சொல்ல, கையில் இருந்த போட்டோவை யாரும் அறியாமல் எடுத்து கொண்டு அறைக்கு ஓடினான் ராம்.

"என்னடா இவன் இப்படி பேசிட்டு போறான்?" என புரியாமல் சகுந்தலா கேட்க,

"அட நீங்கள் வேற மா! அவனுக்கு ரொம்ப புடிச்சிருக்கு! என்னைக்கு தான் அவன் வெளிப்படையா பேசியிருக்கான்? நின்னா மாட்டிக்குவோம்னு தான் போட்டோவோட எஸ்கேப் ஆகிட்டான்" என்றதும் அப்போதுதான் போட்டோ இங்கில்லை என உணர்ந்த சகுந்தலா ஒரு சிரிப்புடன்

"டேய் போட்டோ பின்னால பொண்ணு டீடெயில்ஸ் இருக்கு டா" என கத்தி கூறினார்.

'அய்யயோ நந்தினிக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளையோட தங்கை தான் அந்த பொண்ணுனு சொல்லாமல் விட்டுட்டோமே' என அவர் வருந்த, "அட விடுங்க மா! எங்கே போய்ட போறான்! மெதுவா சொல்லிக்கலாம்" என்றான் கௌதம், நடக்க போகும் விபரீதம் தெரியாமல்...

தொடரும்..