• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 12

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
512
93
Chennai
அத்தியாயம் 12

அடுத்த நாள் காலை வழக்கத்திற்கு மாறாக கௌதம் டிப்டாப்பாய் கிளம்பி, சட்டைக்கு மேல் ஏதோ வாசனை திரவியத்தை தெளித்து விட, அதை தூங்குவது போல நடித்துக்கொண்டே ராமும் சிரித்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். இதில் பாடல் வேறு

இவள் யாரோ இவள் யாரோ
வந்தது எதற்காக?
சிரிக்கின்றாள் ரசிக்கின்றாள்
எனக்கே எனக்காக!
என்னாச்சு எனக்கே தெரியவில்லை?
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை!
அட என்ன இது? என்ன இது?

இப்படி மாறிவிட்டேன்!

எவ்வளவு முணு முணுப்பாய் பாட முடியுமோ அவ்வளவு முணுமுணுத்து கௌதம் பாட, எவ்வளவு மெதுவாக சிரிக்க முயன்றும் ராம் தோற்று வாய்விட்டு கத்தி சிரித்தான்.

அதில் பாட்டை நிறுத்திய கௌதம் சட்டென திரும்பி ராமை பார்க்க, ராம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

"என்னடா என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு உனக்கு?" அசிங்கப்பட்டது வெளிப்படையாய் தெரிந்தாலும் அதை மறைத்து கௌதம் கேட்க,

எதுவுமே தெரியாதது போல ராமும் "இல்ல, எங்க கிளம்புற?" சிரிப்புடனே கேட்டான்.

"நீதானடா நேத்து சொன்ன! வாசுவை பிக்கப் பண்ணி அவங்க ஆபிஸ்ல டிராப் பண்ணனும்னு?"

"ஆமாம் சொன்னேன் தான். அதுக்காக பால்காரன் மாதிரி காலைல 6 மணிக்கு போய் நிக்க போறியா?" நக்கல் கிலோ கணக்கில் இருந்தது ராம் பேச்சில்.

அப்போதுதான் மணியை பார்த்தான் கௌதம். காலை 7:45. "ஏண்டா அதான் எட்டு ஆகப்போகுதே! இப்ப கிளம்பினால் தான சரியா இருக்கும்" முகத்தில் அசடு வழிய அதை மறைக்க படாதபாடு பட்டு கௌதம் கேட்க, ஒருபுறம் சிரித்தாலும் கௌதமின் இந்தப் புதிய முகம் ராமிற்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது

"சரி சரி ரொம்ப வழியாத, நானும் வரேன். ஒரு எய்ட் தெர்ட்டிக்கு கிளம்பலாம்" என்ற ராம் குளியலறைக்குள் சென்றவன் திரும்ப வெளிவந்து "எல்லாம் ஓகே தான்! இந்த சிரிக்கின்றாள் ரசிக்கின்றாள் தான் கொஞ்சம் டூ மச்" என்று மீண்டும் உள்ளே ஓடிவிட்டான்.

வெளியே முறைத்து உள்ளே சிரித்து, அவன் வெளிவரும் வரை ஒவ்வொரு நொடியையும் தனது வாட்ச்சில் பார்த்துக்கொண்டிருந்தான் கௌதம்.

"ஆனாலும் உன்னை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்குடா. நேத்து அந்தப்பொண்ணு விட்ட அறைக்கு இன்னைக்கு நீ போக மாட்டேன்னு சொல்லுவேன்னு நெனச்சா இப்படி வழிஞ்ச முகத்தோட கிளம்பி நிக்கிறியே? நீ எல்லாம் வேற லெவல் மச்சி" ராம் குளித்துமுடித்து வந்தும் அவன் கிண்டலை தொடர,

"ஆமாண்டா உன்ன மாதிரிதான் நானும். இவ்வளவுநாள் ஒரு நாலு வார்த்த உன்ன பேச வைக்க நான் படாதபாடு படுவேன். இப்ப நீ என்னை கலாய்க்கிற அளவுக்கு வந்துட்ட இல்ல! இதுதான்டா காதல்ன்றது. உன்ன மாதிரி தானே நானும்?" கொஞ்சமும் சளைக்காமல் கௌதம் ராமை பதிலுக்கு கிண்டல் செய்ய அதற்குப் பதில் பேசுவானா என்ன? கண்ணாடியில் தலைவாரிக் கொண்டே சிரித்துக் கொண்டான்.

இருவரும் ஒன்றாய் சீக்கிரமே கிளம்பி கீழே வர, பார்த்த சகுந்தலாவிற்கே அதிசயமாய் போனது. "என்னடா மழை ஏதாவது வரப்போகுதா? ரெண்டு பேரும் ஒரே மாதிரி சீக்கிரமே கிளம்பி இருக்கீங்க?" சகுந்தலா அவர் பங்கிற்கு கிண்டல் செய்ய, இருவருமே சிரித்து மட்டும் வைத்தனர்.

"நந்தினி எங்கம்மா?" கௌதம் கேட்க, "அவ ரூம்ல தான் டா இருக்கா. இன்னைக்கு அவளுக்கு லீவு" என்றார் சகுந்தலா.

நல்ல பிள்ளையாய் அமைதியாய் இருந்து சாப்பிட்டு விட்டு இருவரும் ஒரே நேரத்தில் வேறு வேறு கார்களில் கிளம்பினர். அப்போதும் சகுந்தலா அவரவர் ஆபிஸிற்கு செல்வர் என நினைத்துக் கொண்டதால் எதுவும் கேட்கவில்லை.

ஒரே வழியிலேயே இருவரின் கார்களும் ஒருவரையொருவர் தொடர்ந்து செல்ல, முதலில் வாசுவின் வீட்டருகில் நின்று கொண்டது கௌதமின் கார்.

அதைக் கடந்து ராம் செல்ல, உள்ளிருந்தே கட்டைவிரலை தூக்கி காண்பித்து சிரிப்புடன் சென்றான். அப்போதும் கௌதம் வாசுவுக்கு அழைக்காமல் நிவிக்கு அழைத்து வாசு வீட்டு முன் நிற்பதாக சொல்ல, நிவி வாசுவிற்கு சொல்லாமல் அவள் அன்னை மல்லிகாவிற்கு அழைத்து கௌதம் நிற்பதாக சொல்லவும், கண்ணாடியை மாட்டிக் கொண்டு கையில் குச்சியுடன் சரியாய் கேட்டருகே வந்துவிட்டார் மல்லிகா கௌதமிடம் பேசிவிடும் ஆவலில்.

மல்லிகா படி இறங்கும் போதே கௌதம் கவனித்து விட, வேகமாக கேட்டை திறந்து கொண்டு உள்ளே ஓடவும் அந்த காலடி சத்தத்தில் மல்லிகா அவன் வருகையை புரிந்து கொண்டார்.

"வாங்க தம்பி! ஏன் வெளியிலேயே நிக்கிறீங்க. நிவி இப்பதான் போன் பண்ணினா" என்றதும் நிவியை உள்ளுக்குள் திட்டி கொண்டவன், "அதனால என்னம்மா! வாசு கிளம்பி இருந்தா கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன்" என்று சாதாரணமாகவே பேசினான்.

அவன் பேச்சில் துளிகூட தடுமாற்றம் இல்லை. அப்படி தடுமாற்றம் இருந்தால் அவன் வீடு வரை வாசுவை அழைத்து செல்ல வந்திருப்பானா என்ன? அதை மல்லிகாவும் குறித்துக் கொண்டார்.

"அவ இப்பதான் குளிக்க போனா தம்பி. தப்பா எடுத்துக்காதீங்க! எப்பவுமே இப்படித்தான் லாஸ்ட் மினிட்லதான் கெளம்புவா. நிவி கூட எப்பவும் வெளியில் இருந்துதான் ஹார்ன் அடிச்சுக்கிட்டே இருப்பா. எவ்வளவு சொல்லியும் மாறவே மாட்டுறா" மல்லிகா கௌதமிடம் வாசுவின் கதையை விட்டுக் கொண்டிருக்க, சாவதானமாய் குளித்து முடித்து தலையை உலர்த்திக் கொண்டு வந்தாள் வாசு

சுத்தமாய் எதிர்பார்க்காத சந்திப்பு. தன் அன்னை அருகே கௌதம் அதுவும் சிரித்த முகமாய். முட்டைக் கண்ணை விரித்து தான் காண்பது கனவா என்ற சந்தேகத்தில் வாசு பார்க்க, அதன்பின்தான் கௌதம் அவளை கவனித்தான்.

அவன் பார்த்ததும் தன் முகத்தை அவனுக்கு காட்டாமல் வேகமாக உள்ளே சென்று துப்பட்டாவை முகத்தில் சுற்றிக் கொண்டு வந்தாள்.

மல்லிகா அப்போதும் அவள் வந்தது தெரியாமல் வாசுவை பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்க "அம்மா" என்று அழுத்தமாக வாசு அழைத்த பிறகுதான் அவள் வருகையை உணர்ந்தார்

"ஏன்டி நேத்து நைட்டே அந்த பொண்ணு போன் பண்ணி கௌதம் வருவாருன்னு சொல்லிச்சுல? கொஞ்சமாவது சீக்கிரம் எழுந்து கிளம்பி இருக்கலாம் இல்ல! போ போய் தம்பிக்கு காபி கொண்டு வா!" ஏதோ படபடப்பில் அவர் பேச, அதே சிரித்த முகத்துடன் வாசுவை பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.

நேத்து அடித்த அடிக்கு பிறகு இவளிடம் பேசுவான் என்றே அவள் எதிர்பார்க்கவில்லை. நிவி இரவு போன் செய்து சொல்லிய போதும் எங்காவது வெளியில் நிற்பான் போய் சாரி சொல்லிவிட வேண்டும் என இவள் நினைத்திருக்க நடுவீட்டில் நாயகமாய் அமர்ந்திருந்த அவனை பார்த்து ஆச்சர்யம் ஆச்சர்யம் ஆச்சர்யம் மட்டுமே!.

அனமிதாவும் அப்போது தான் அவள் அறையில் இருந்து வர ஏற்கனவே வாசுவின் குடும்பம் பற்றி நிவி சொல்லியிருந்ததால் நட்புடன் மட்டுமே அவர்களை பார்த்தான். துளியும் முகத்தில் வேறு எந்த உணர்வையும் கொண்டு வரவில்லை. மனதிலும் தான்.

இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனக் கூட அவன் முடிவெடுத்த பின் இதெல்லாம் அவனுக்கு சாதாரண விஷயம் அல்லவா?.

வாசு எதுவுமே பேசாமல் சென்று காபி எடுத்து வர, அதற்குள் அனுவிடமும் நட்பாகி ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் மூவரும்.

காபி குடித்து முடித்து "கிளம்பலாமா வாசு?" அவனே அவளிடம் முதலில் பேச, எதுவும் பேச தோன்றாமல் தலையை அசைத்து கிளம்பி வந்தாள். கௌதமை நினைத்து ஒரு பிரமிப்பு கூட.

காரில் ஏறியது முதல் கௌதம் எதுவும் பேசவில்லை. அவள் போக்கிலேயே விட்டு பிடிக்க முடிவெடுத்தான். வாசுதான் அம்மா சொல்லியபடி சாரி கேட்க வேண்டுமே என்ற நினைப்பில் கொஞ்சம் நிதானம் இழந்து இருந்தாள்.

நேற்று அடிக்கும் போது இருந்த தைரியம் இன்று மன்னிப்பு கேட்க நினைக்கையில் இல்லை. ஓரக்கண்ணால் வாசுவை பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டிய அவனுக்கு அவளின் நெர்வஸ் அவள் கைகள் லேசாய் நடுங்குவதிலேயே தெரிந்தாலும் கேட்டால் மட்டும் சொல்லவா போகிறாள் என்ற நினைப்பில் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

"ஐ அம் சாரி!" திக்கி திணறவெல்லாம் இல்லை சில நிமிட யோசனைகளுக்கு பிறகு தெளிவாய் கூறினாள்.

"என்ன திடீர்னு?" அவனும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சாதாரணமாகவே கேட்டான்.

"இல்ல நான் நேத்து கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன். நிஜமாவே சாரி" அவள் மீண்டும் கேட்க, "பரவால்ல விடு! எப்பவுமே நீ இப்படித்தானே ஏதாவது உளறுவ?" இதுதான் நான் என்பதை அவன் வார்த்தைகளில் காட்ட,

"ஹலோ நான் அடிச்சதுக்குதான் சாரி கேட்டேன். ஆனா நீங்க பேசுனது தப்புதான்"

"சாரி வாசு! நான் தப்பா எதுவும் சொல்லல. என் மனசுல இருக்கிறதை தான் சொன்னேன். அண்ட் நவ் இதை பத்தி பேச வேண்டாம். அதுக்கு இன்னும் டைம் இருக்கு" என்றவன் ஏதோ யோசனையில் வர, அவளும் அதன் பின் வாயை திறக்கவில்லை.

இங்கு நடப்பதற்கு நேர் எதிராய் நடந்துகொண்டிருந்தது நிவி ராமின் சந்திப்பு.

நிவி வீட்டின் அருகே ராம் செல்லும் முன் வீட்டு வாசலையும் தாண்டி வெளியே வந்து நடந்து கொண்டிருந்தாள் நிவி.

'என்ன இவ! வீட்டுக்கு கூப்பிட்டு உபசரிப்பான்னு பார்த்தா இங்க வரை வந்துட்டா' தனக்குள் புலம்பிக்கொண்டே ராம் அவள் அருகே வண்டியை நிறுத்தினான்.

"என்ன மேடம்! வீட்டுக்கு கூப்பிடுற எண்ணமெல்லாம் இல்ல போல. நான் சொல்றதுக்கு முன்னாடியே கரெக்ட் டைம்ல இவ்வளவு தூரம் வந்துட்டீங்க?"

"குட் மார்னிங் ராம்! வீட்டுக்கு கூப்பிடலாம் ஆனா அம்மாவுக்கு நாம பேசுறது இன்னும் தெரியாது. அதான் மெதுவா சொல்லிக்கலாமேன்னு நினைச்சேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க!" என்று அவள் இழுக்க, வீட்டிற்கு தெரியாமல் அவனுடன் பேசி இருப்பதை அம்மா எப்படி புரிந்து கொள்வார்களோ என்ற தயக்கத்தில் அவள் ராம் பற்றி அம்மாவிடம் கூறவில்லை.

"ஹேய் நோ ப்ராப்ளம்! நான் சும்மா தான் கேட்டேன். உனக்கு எப்ப சொல்லனும்னு தோணுதோ அப்ப சொல்லு"

"நீங்க நெனச்சாலும் இப்ப சொல்ல முடியாது. ஏன்னா வீட்ல யாரும் இல்ல!" நிவி அதன்பின் சாதாரணமாய் பேச "வாவ்! வீட்ல யாரும் இல்லையா? அப்ப வா வீட்டுக்கு போகலாம்" என்றதும்,

'அடப்பாவி நீயா பேசியது?' என்ற ரேஞ்சில் நிவி அவனை உறுத்து முழிக்க,

"ஏன் இப்படி முறைக்கிற? நான் காலையில சாப்பிடல! சோ மெதுவா சாப்பிட்டுட்டு அப்புறமா போகலாம்னு நினைச்சேன். நீ என்ன நெனச்ச?" அவன் கிண்டல் குரலிலேயே அவன் சொன்ன எண்ணமும், இப்போது சொல்வதன் அர்த்தமும் நிவிக்கு நன்றாய்ப் புரிந்தது.

ஒற்றை விரலைக் காட்டி அவனை கண்களால் எச்சரித்துவிட்டு, உதட்டால் சிரித்தாள்.

"சரி விடு! இன்னொரு நாள் பாத்துக்கலாம். சாப்டியா?"

"ம்ம் ஆச்சு நீங்க?"

"ம்ம் சாப்பிட்டேனே! உன் அண்ணா தான் வாசுவை நினைச்சுட்டு சரியாவே சாப்பிடாம வந்துட்டான்" ராம் சிரிப்புடன் சொல்ல, "அப்ப இன்னிக்கும் அடிதான் வாங்குவார்" என்றால் அதே சிரிப்புடன் நிவி.

"உனக்கும் தெரியுமா?"

"ஏன் தெரியாம! அதான் நேத்து கொய்யாப்பழம் மாதிரி அண்ணா கண்ணம் செவந்து இருந்துச்சே!"

"அடப்பாவி இப்படி சிரிக்கிற?"

"இதெல்லாம் காதல்ல சாதாரணமப்பா!" என சொல்லி மீண்டும் நிவி சிரிக்க, அவளுடன் இணைந்து கொண்டான் ராம்.

தொடரும்..