• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 17

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 17

நந்து வெட்ஸ் ராஜ்
&

ராம் வெட்ஸ் நிவி

மண்டபத்தில் பெயர்பலகை அழகாக அலங்கரித்திருக்க விடிந்தால் திருமணம் என்ற நிலையில், உள்ளே ஓர் அறையில் ராஜ்குமாருடன் சண்டையிட்டு கொண்டிருந்தாள் நிவி.

"அடச்சீ நீ எல்லாம் ஆம்பளையா? வெளில சொல்லிடாத! ஓஹ் காட்.. ஏண்ணா.. ஏன் இப்படி பண்ணின? கல்யாணம்ன்றது உனக்கு விளையாட்டா போச்சா?"

"இல்ல நிவி! அம்மா தான்..."

"பேசாத! பேசாத..."

"அய்யோ கத்தாதே நிவி. யாராச்சும் வந்துட போறாங்க"

"உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? ஒரு பொண்ணை ஏமாத்திட்டு இன்னொரு பொண்ணுக்கு தாலி கட்ட தயாரா இருக்க?"

"நிவி ப்ளீஸ்! என்னையும் புரிஞ்சிக்கோ. அம்மா பத்தி தெரியும்ல? அந்த பொண்ணை கல்யாணம் பண்ணினா செத்துடுவேன்னு சொல்றாங்க. நான் என்ன பண்ணட்டும்?"

"ஓஹ் காதலிக்கும் போது அம்மா இப்படி பேசுவாங்கனு தெரிலையா? தோ பாரு! விடிஞ்சா கல்யாணம்.. என் கல்யாணம் நிக்குறதை பத்தி எனக்கு கவலை இல்ல. நீ மட்டும் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டின.. நானே போலீஸ் ஸ்டேஷன் போவேன்!"

"நிவி!.."

"நான் சொன்னா செய்வேன்" என சொல்லியவள் நிற்காமல் சென்றாள் ராம் திருமணம் செய்ய கனவோடு காத்திருக்கும் நிவிதா. ராஜ்குமாரின் தங்கை.

தங்கைக்கு பயந்து என்று இல்லாமல் நிஜமான காதலின் அடிப்படையில் நடுஇரவில் அந்த மண்டபத்தில் இருந்து வெளியேறி இருந்தான் ராஜ்குமார்.
அடுத்த நாள் விடியும் நேரம் முகூர்த்தம். இதோ பட்டுடையில் முகம் முழுதும் புன்னகையாய் அண்ணன் தங்கை ராம், நந்தினி. கொஞ்சம் அல்ல அதிகமாய் தான் நிவியின் பயம்.

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவள் அதிகாலைக்கும் முன்பே எழுந்துவிட்டாள். ராமிடம் சொல்ல ஏனோ தைரியம் இல்லாமல் போக அனைவரும் கிளம்பிய நிமிடம் சுத்தமாய் முடியாமல் கௌதமிடம் ஒடி வந்தாள். அதற்குள் ௳எடை ஏறி இருந்தாள் நந்தினி.

கௌதமுடன் சகுந்தலாவும் இருக்கவே தனக்கு தெரிந்த அனைதையும் கூறி இப்போது ராஜ் குமார் இங்கில்லை என்பதுவரை சொல்லி முடித்தாள்.

"வாட் த ஹெல் இஸ் கோயிங் ஆன்?" ராமின் அலறலுக்கு மொத்த மண்டபமும் அடங்கி அமைதி மட்டுமே அந்த இடத்தில்.

அதிர்ச்சியுடன் நிவி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த கௌதமும் சகுந்தலாவும் ராம் சத்தம் கேட்டு ஹாலிற்கு வந்தனர். மண்டபத்தில் இருந்த அனைவருக்கும் இப்போது தான் மாப்பிள்ளை காணவில்லை எனும் செய்தி பரவிக் கொண்டிருந்தது. உபயம் நிவி அன்னையின் அழுகைக் குரல்.

முகூர்த்த நேரம் வரை சொல்லாமல் சமாளித்தவர் அதற்குமேல் முடியாமல் கதறிக் கொண்டிருந்தார்.

"ம்மா, யாரு மா அவனோட அம்மா அப்பா?" சகுந்தலாவிடம் ராம் கேட்க, அவர் பார்வை சென்ற இடத்தில் நின்றவர்களை நோக்கி சென்றான் ராம். அவன் மனதில் அப்படி ஒரு ஆதங்கம். தான் முன் நின்று விசாரிக்காமல் போய்விட்டோமே என்று.

"டேய் கொஞ்சம் அமைதியா இரு டா! என்னனு நான் கேட்குறேன்" என கௌதம் எவ்வளவோ எடுத்து சொல்ல, அதை கேட்கும் நிலையில் எல்லாம் ராம் இல்லை.

"என்ன கேட்ப டா? என்ன கேட்ப? அங்க பாரு. நந்தினியைப் பாரு! அவ என்ன சொன்னானு உனக்கு ஞாபகம் இருக்கா? எனக்கு இருக்கு டா. நீங்க பார்த்தால் போதும்னு மாப்பிள்ளை போட்டோ கூட பார்க்க மாட்டேன்னு சொன்னவ டா. என்னை நம்புனா டா! நம்மள நம்புனா! ஆனா.. ஆனா இப்போ? எப்படி டா பார்த்துட்டு இருக்க முடியும்?" ராம் கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் நியாயமானதே!

ஆனால் இப்போது அதை மட்டும் பார்த்தால் கண்டிப்பாக ராமின் திருமணம் நடக்காது. அதுவும் நிவி தான் ராஜ்குமார் சென்றதற்கு காரணம் என்று தெரிந்தால் சொல்லவே வேண்டாம்! கண்டிப்பாக ராம் நிவியை ஏற்று கொள்ள மாட்டான். நிவி செய்ததில் நியாயம் இருக்கலாம் ஆனால் தங்கை என்று வரும்போது ராமிற்கு அது தெரியாதே!

இப்போது தான் நிவிக்கும் ஒன்று புரிந்தது. தான் இதை இரவே இவர்களிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று.

"உங்க பையன் வேறொரு பெண்ணை விரும்பினது உங்களுக்கு தெரியுமா?" ராமின் கேள்வியில் அவன் பெற்றோர் கைகளை பிசைந்தபடி தலைகுனிந்து நின்றனர்.

"தெரியுமா? தெரியாதா?" அழுத்தமாக அதே சமயம் கோபம் ஏற ராம் கேட்க, "தெரியும் மாப்பிள்ளை! ஆனால் இப்படி பண்ணுவான்னு.. " என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே கைநீட்டி தடுத்தவன் ஓய்ந்துபோய் அமர்ந்தான்.

அவன் இருந்த மன உளைச்சலில் அவர் சொன்ன மாப்பிள்ளையை அவன் கவனிக்கவில்லை போலும்.

ராஜ்குமார் அம்மா அப்பா என்ற நிலையில் மட்டும் அவர்கள் இருந்திருந்தால் அது வேறு! ஆனால் இப்போது மகள் வாழ்வும் இதனால் கேள்விக்குறி ஆகிவிடுமோ என்ற பயத்தில் பேசாமல் நின்றனர்.

நிவி அங்கு நடப்பதை பார்வையாளராய் மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள். சகுந்தலா கௌதம் மறந்த ஒரு விஷயம் 'நிவி ராஜ்குமாரின் தங்கை என்பது இன்னும் ராமிற்கு தெரியாது' என்பதே!

அது தெரிந்தால் என்னவாகும்?

"நிவி இங்கே என்ன நடந்தாலும் நீ தயவு செஞ்சு வாயை திறக்காதே! மறுபடியும் சொல்றேன் ராம் ரொம்ப நல்லவன். நந்தினிக்காக யோசிச்சு தான் அவன் உங்க அம்மா அப்பாவை கேள்வி கேக்குறான். புரிஞ்சுக்கோ டா! அண்ட் நீ ராஜை அனுப்பி விட்டது இப்போ ராம்க்கு தெரிய வேண்டாம். நான் மெதுவா அவன்கிட்ட சொல்லிக்கிறேன். கண்டிப்பா இன்னைக்கு உங்க கல்யாணம் நடக்கணும். காட் இட்" கௌதம் நிவிக்கு புரியும் விதமாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் அவள் அருகே சென்று கூறினான்.

"ஏண்டி ராம் அண்ணாக்கு புத்தியே இல்லையா? இன்னொரு பெண்ணை லவ் பண்றாங்கனு சொல்லியும் இப்படி கோபப்படுறாங்க?" வாசு நிலமை புரியாமல் பேச,

"அண்ணா, எல்லாம் ஓகே! ஆனால் நான் தப்பு பண்ணலையே? வாசு சொல்ற மாதிரி ராஜ் மட்டும் நந்தினியை கல்யாணம் பண்ணியிருந்தால் ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை போயிருக்கும். அப்புறமா ஏன் நான் மறைக்கணும்?" நிவி கோபமாகவே கேட்டாள்.

"எல்லாரும் எல்லா நேரத்திலும் அடுத்தவங்க சூழ்நிலையை புரிஞ்சிகிட்டு அவங்க முடிவுக்கு சம்மதம் சொல்ல மாட்டாங்க வாசு! அவங்க அவங்களுக்குனு ஒரு மனசு இருக்கு" இரு பொருள் பட வாசுவிடம் கூறிய கௌதம்,

"நிவி ப்ளீஸ்! நான் கெஞ்சி கேட்டுக்குறேன். எனக்கு ராம் பத்தி நல்லா தெரியும். அவனுக்கு புரிய வைக்க கொஞ்சம் டைம் வேணும். அதனால் தான் சொல்றேன். நீ பேசாமல் இருந்தால் தான் நல்லது" என பேசிக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் ஒரு சந்தேகம் வந்தது.

மீண்டும் ஒருமுறை நிவியிடம் சொல்லிவிட்டு வாசுவை முறைத்துவிட்டே சகுந்தலா அருகே சென்றான். கௌதம் சொல்லிய செய்தி வாசுவிற்கு புரிந்து அமைதியாக நின்றாலும் மனம் ஊமையாய் அழுதது.

செல்லம்மாவிற்கு மகனை நினைத்து கவலையில் கல்யாணத்திற்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்தவரை சக்தி தான் வருந்தி அழைத்து வந்திருந்தான்.

அவ்வளவு நேரமும் மண்டபத்தில் இருந்தவனுக்கு ஏனோ திருமணத்தை தன்னால் பார்க்க முடியாது என தோன்ற அம்மாவை இருக்க சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டான்.

மண்டபத்தில் சிறு சலசலப்பு ஏற்படவும் செல்லம்மா காதிற்கு நந்தினிக்கு பார்த்த மாப்பிள்ளை காணவில்லை என்ற செய்தி வரவும் சரியாய் இருக்க, சகுந்தலா இதை எல்லாம் தாங்கி கொள்ள மாட்டார் என தோன்றவும் அவர் அருகே ஓடினார்.

நீண்ட வாக்கு வாதம் ஓடிக் கொண்டிருக்க, அதன் பாதியில் தான் செல்லம்மாவிற்கு முழு விபரம் தெரிந்தது. மனம் தன் மகனுக்காக தான் இந்த திருமணம் நின்றதோ என்று தோன்றினாலும் அதை எவ்வாறு கேட்பது? இவர்கள் எவ்வாறு எடுத்து கொள்வார்கள்? என தோன்றவும் செய்ய, இறுதியில் மகன் பாசமே வென்று சகுந்தலாவிடம் கேட்டுவிட்டார் செல்லம்மா.

கேட்ட சகுந்தலாவிற்கு சக்தியை பிடித்திருந்தாலும் நந்தினி படிப்பு முதல் யோசிக்க யோசிக்க இருவருக்கும் எப்படி ஒத்து போகும் என்றே தோன்ற அமைதியாய் இருந்தவரிடம் கௌதம் பேசினான்.

கௌதம் சகுந்தலா அருகே வர, செல்லம்மா கூறிய விஷயம் அவன் காதுகளிலும் விழுந்தது. சக்திவேல் மேல் நல்ல மதிப்பு உண்டு எப்போதுமே. சகுந்தலா ஊருக்கு குடும்பத்துடன் செல்லும் போது கௌதமும் உடன் செல்வான். அவர்களை பொறுத்தவரை ராம் கௌதம் இருவரும் ஒன்றே!

கௌதமும் பலவித யோசனைகளுக்கு பிறகு தான் சகுந்தலாவிடம் நந்தினிக்கு சக்தியை திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்ல, சகுந்தலா பார்வை ராமிடம் சென்றது.

"கௌதம், ராம் ஏற்கனவே கோபமா இருக்கான் பா. எப்படி சக்தியை?.." என முடிக்க, ராமிடம் செல்ல இருந்த கௌதம் மீண்டும் சகுந்தலாவிடம் திரும்பி "அம்மா! ராஜ் குமார் தங்கை தான் நிவினு ராம்கிட்ட எப்பாவது சொன்னிங்களா?" என கேட்க,

‘அய்யோ’வென தலையில் கை வைத்து கொண்டார் சகுந்தலா.

"கௌதம் எனக்கு படபடனு வருது. அய்யோ நான் இப்ப என்ன பண்ணுவேன். ஏற்கனவே நிவி தான் அவ அண்ணன அனுப்பி விட்டானு ராம்க்கு தெரிஞ்சா என்னாகுமோ. இதுல அவனோட தங்கச்சி தான் நிவின்னு இப்ப தெரிஞ்சுச்சுன்னா...! அய்யோ எனக்கு.. எனக்கு ஒரு மாதிரி வருது டா. கௌ..கௌதம்.."
இரு பிள்ளைகளின் வாழ்வும் இப்படி ஒரே இடத்திலா சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டும் என நினைத்தவருக்கு இதயத்தில் ஊசி குத்தியதை போல வலி ஏற்பட்டது.

"அம்மா.. அம்மா.. என்னம்மா நீங்க. அதான் நான் இருக்கேன்ல ஏன் இவ்வளவு டென்ஷன்? ஒன்னும் இல்ல. ஒன்னும் இல்ல" என கௌதம் சகுந்தலாவை சமாதானப்படுத்த, அருகில் இருந்த செல்லம்மாவும் பதறி தண்ணீர் கொண்டுவந்து அவர் முகத்தில் தெளித்தார். அதற்குள் ராம் நந்தினி, நிவி என அனைவரும் அவரை சூழ, மண்டபம் இன்னும் கலவரம் கொண்டது.

ராம், நந்தினி இருவரும் மாப்பிள்ளையை காணும் என்ற பயத்தில் தான் சகுந்தலாவிற்கு இப்படி ஆனதாக நினைக்க, நிவிக்கு ஓரளவு சகுந்தலாவின் மனம் புரிந்தது.

"ராம்... நிவி..நிவி.." சகுந்தலா எதையோ சொல்லவர அது புரியாமல் பார்த்தான் ராம்.

"அம்மா என்னம்மா நீங்க? நான் ராம்கிட்ட பேசுறேன். நீங்க அமைதியா இருங்க. ஆண்ட்டி நீங்க அம்மாவை அந்த ரூம்க்கு கூட்டிட்டு போங்க, அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும்" கௌதம் சொல்ல, செல்லம்மாவும் அவ்வாறே செய்தார்.

"ஆண்ட்டி ஒரு நிமிஷம்!" என்றதும் செல்லம்மா திரும்பி பார்க்க, "சக்தி எங்கே?" என்றான்.

அவன் வெளியில் நிற்பதாக சொல்லி அவன் போன் நம்பரை கொடுக்க அதை வாங்கி கொண்ட கௌதம், ராம் நந்தினி பக்கம் திரும்பினான்.

"நந்தினி உனக்கு நான் நல்லது செய்வேன்னு நம்பிக்கை இருக்கா?" கௌதம் கேட்க, அவளும் தெளிவாக ஆம் என உடனே தலையாட்டினாள்.

"ராம்! செல்லம்மா ஆண்ட்டி பையன் சக்தியை உனக்கு மாப்பிள்ளையாக்க சம்மதமா?" கௌதம் கேட்க, அதை ராம் நினைத்து பார்க்க கூட விரும்பாதவன் போல நின்றான்.

"படிச்சவங்க எல்லாம் மட்டும் தான் புத்திசாலியா ராம்? சக்தி படிக்கலையே தவிர, அவனுக்கு என்ன இல்ல சொல்லு" என நிதானமாக கேட்க ராமும் யோசிக்க ஆரம்பித்தான்.

"இப்ப நிவியை என்ன பண்றதா இருக்க?" யோசிக்கவே விடாமல் அடுத்தடுத்த கேள்விக்கு கௌதம் தாவ, ஓய்ந்து தான் போனான் ராம்.

"என்ன கௌதம் சொல்ற? எவனோ பண்ணின தப்புக்கு நிவியும் அவ பேமிலியும் என்ன செய்வாங்க?" ராம் கேட்க,

"அப்போ நந்தினியை விட்டுட்டு உங்க கல்யாணம் மட்டும் இப்ப நடக்கும்னு சொல்றியா?" எங்கேயும் நகர முடியாமல் கௌதம் அனைத்து வழிகளையும் அடைக்க, ராம் நிலையோ மிகவும் மோசம்.

"சத்தியமா என்னால முடியல டா கௌதம்! நந்தினி என்னை மன்னிச்சுடு டா. நான் என்ன செய்யணும்னு எனக்கே தெரியல. நான் கௌதமை நம்புறேன். அவன் நல்லது தான் செய்வான்" என சொல்ல, சக்தியை அவன் ஒத்துக் கொண்டான் என புரிந்தது.

"உன் அண்ணா பரவாயில்லை. கொஞ்சம் மூளை இருக்கு" வாசு கௌதமை நிவியிடம் சொல்ல, நிவி எதுவும் சொல்லாமல் திரும்பி அறைக்கு நடந்தாள்.

"நிவி ஒரு நிமிஷம்!" ராமின் குரலில் இதயம் தாறுமாறாக துடிக்க, திரும்பாமல் அப்படியே நின்றாள்.

"இப்ப நிவிகிட்ட என்ன பேச போற? இரு சக்திகிட்ட பேசணும்" கௌதம் அவனை தடுக்க பார்க்க, அவனோ அதை கேட்காமல் நிவி முன் போய் நின்றான்.

"உனக்கு இந்த கல்யாணத்துல எதாவது குழப்பம் இருக்கா? ஐ மீன் இந்த மாப்பிள்ளை விஷயம்.. உங்க வீட்ல யாருக்கும் ப்ரோப்லேம் இல்லையே?" ராம் பயத்துடனே கேட்க, அவனை புரியாமல் பார்த்தாள் நிவி.

"டேய் ஏன்டா படுத்துற? அவங்க வீட்ல ஒன்னும் சொல்லமாட்டாங்க. நான் பேசிட்டேன்" என கௌதம் சொல்ல, இவனுக்கு நான் யார் என்றே தெரியாதா? என அதிர்ந்தாள் நிவி.

நான் செய்தது சரியாக இருந்தாலும் ராமிற்கு புரிந்து கொள்ள நேரம் வேண்டும். அதை மறைத்து திருமணம் செய்வதே ராமை ஏமாற்றும் வேலை. இதில் நான் யார் என்றே தெரியாமல் இருக்கும் அவனை திருமணம் செய்யவா? எத்தனை பொய்கள். வேண்டாம். ராமை எனக்கு பிடிக்கும் அதற்காக பொய்யை மட்டுமே வைத்து அவன் வாழ்வில் நுழைவதா? என நினைத்தாள்,

"அண்ணா ஒரு நிமிஷம்" நிவி கௌதமிற்கும் ராமிற்கும் இடையில் வர, கௌதமிற்கு அனைவரையும் சமாளிப்பது பெரும் வேலையாய் போனது.

"நிவி நான்...." கௌதம் எதுவோ சொல்ல வர, அவனை கை நீட்டி தடுத்த நிவி "ராம்! என்னோட அம்மா அப்பா.." என அவள் கை நீட்டிய பக்கம் பார்த்த ராம் அங்கே ராஜ்குமார் பெற்றோரை பார்த்து குழம்பினான்.

தொடரும்..
 
  • Like
Reactions: Lakshmi murugan