• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 20

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
683
512
93
Chennai
அத்தியாயம் 20

எப்போது தூங்கினாள் என்றே தெரியாமல் தூங்கியிருந்த நந்தினிக்கு காலை எட்டு மணிக்கு கண் விழிக்கும் போது கண் எல்லாம் அப்படி எரிந்தது.

அறையை சுற்றி பார்க்க எங்கும் அவன் தென்படவில்லை. நிம்மதியுடன் எழுந்து காலை வேலைகளை தொடர்ந்தாள்.

இரவு முழுதும் உறங்காமல் இருந்த சக்தியும் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தவன் கீழே செல்ல, செல்லம்மா மட்டும் விழித்திருந்தார்.

"என்னடா இப்பவே எழுந்து வர்ற? நந்தினி என்ன பண்றா?"

"அவ தூங்குறாம்மா. எனக்கு தூக்கம் வர்ல. நான் கொஞ்ச தூரம் போய்ட்டு வர்றேன்" என்றவன் காலையில் ஊரில் எழுந்ததும் எப்போதும் வயலுக்கு போவது போல இன்றும் எழுந்து நடக்க சென்றான்.

"நீங்க ஏன்மா தூங்கல?" சக்தி கேட்க, செல்லம்மா அவன் பதிலில் இருந்தே அவனை ஆராயும் பார்வை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

"பழக்கதோஷம் தான்டா. நீ போய்ட்டு வா" என்றவருக்கு தெளிவாக தெரிந்தது தன் மகன் இப்போதும் தன் மகனாக மட்டும் தான் இருக்கிறான் என்று.

ஆனாலும் மகன் மனதை மட்டும் அல்லாது ஒரு பெண்ணின் வாழ்வையும் நினைத்து பார்த்தவர் நந்தினியின் மனநிலையை யோசித்து எதுவும் கேட்காமல் அவர்களுக்கான காலம் சீக்கிரமே வரும் என நம்பி காபி தயாரிக்க உள்ளே சென்றார்.

"குட் மார்னிங் பேபி" குளித்து கிளம்பி தயாராய் நின்று தூக்கத்தில் கண்களை கசக்கிய தன் கணவன் மேல் ஈரமாய் இருந்த முடியின் தண்ணீரை தெளித்து வணக்கம் வைத்தாள் நிவி.

"குட் மார்னிங் டா! என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட?" ராம் கேட்க,

"மணி ஆறு ஆயிடுச்சு ராம்! எப்பவும் எழுந்துக்குற நேரம் தான்" என்றவள் தலைவார, பெட்டில் இருந்து எழாமல் ஒரு கையால் தலையை தாங்கி அவளை கண்களால் பருகிக் கொண்டிருந்தான்.

அவளும் கண்ணாடி வழி அவனை பார்த்து என்ன என புருவம் உயர்த்த, "என்னை என்ன சொல்லி கூப்ட?" என்றான்.

"நான் எதுவும் சொல்லலையே!" குறும்பு சிரிப்புடன் அவள் கூற, அவன் வேகமாய் எழுந்தான்.

"பேபி! பேபினு கூப்பிட்டேன்!" அவன் எழுந்தால் கண்டிப்பாக அருகே வருவான் என பயந்து அவள் வேகமாக சொல்ல, அதே போல தான் அவனும் வந்தான்.

ஆனாலும் அவள் பதிலில் நிதானிக்கவெல்லாம் இல்லை. இடையை பிடித்து தன்னோடு சேர்த்தவன்,

"காலையில டெய்லி கௌதம் மூஞ்சில முழிச்சு தான் பழக்கம். இப்படி ஒரு பொண்ணு ஈர முடி சொட்ட சொட்ட பேபினு கூப்பிட்டு எழுப்பினா எழுந்துக்கவே தோணாது பேபி"

"ராம்! தெரியாம கூப்டுட்டேன். விடுங்க!" அவள் கெஞ்ச, "ஒரே ஒரு இச் மட்டும். ப்ளீஸ்" என்று அடம் பிடித்தான் அவன்.

"நேத்து சொன்னது ஞாபகம் இருக்குல்ல?" நிவி கேட்க,

"ஹேய்! ஒரு இச் வேணும்னு தானே கேட்டேன். அதுக்கே இப்படி தடா போட்டா எப்படி? மத்ததெல்லாம் நீ சொல்றது மாதிரி நான் நல்ல புள்ளயா இருந்துக்குவேனாம் ஆனா அதுக்காக ரொமான்ஸ் எல்லாம் கலைக்க கூடாது. கம் ஆன்! கம் ஆன்! கிவ் மீ ஒன் இச்" என்று அவன் கன்னத்தை காட்ட,

அவனை பழித்தவாறே அவள் அவன் அருகில் சென்ற நேரம், திரும்பியவன் இதழில் விழுந்தது அவள் முதல் முத்தம்.

சில விளையாட்டுக்களோடு அவள் இறங்கி சென்றுவிட, ராமும் சிரித்துக் கொண்டே குளியலறை சென்றான்.

கொஞ்சமும் அச்சு பிசகாமல் அக்மார்க் மனைவியாய் நிவி அவனுக்கு தேவையான அனைத்தயும் அங்கு தயாராக வைத்திருக்க, மீண்டும் அவன் இதழில் ஒரு விரிந்த புன்னகை.

"அத்தை நான் எதாவது ஹெல்ப் பண்ணவா?" நிவி போய் சமையலறையில் சகுந்தலா முன் நிற்க,

சிரித்துக் கொண்டே "உனக்கு சமைக்கவெல்லாம் தெரியுமா?" என்றார். இதையெல்லாம் அங்கு காய் நறுக்கிக் கொண்டே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் செல்லம்மா.

"ப்ச்! சாரி அத்தை எனக்கு தெரியாது தான். ஆனா இப்ப கத்துக்க தோணுது. சொல்லி தர்றிங்களா?"

குழந்தை போல அவள் கேட்க, மறுக்க தோன்றவில்லை போலும். "நேத்து கல்யாணம் ஆன பொண்ணை இன்னைக்கு நான் சமைக்க சொன்னா, அப்புறம் எல்லாரும் என்னை கொடுமை படுத்துற மாமியார்னு சொல்ல மாட்டாங்க?" என்றார்.

"ஹாஹாஹா! வாவ் அத்தை சூப்பரா பேசுறீங்க. இதை கொஞ்சம் உங்க மகனுக்கும் சொல்லி குடுத்துருக்கலாம்ல வாய திறக்கவே காசு கேட்பாரு போல" நிவி சொல்ல,

"அடிப்பாவி! என் மகனை என்கிட்டயே குறை சொல்றியா உன்னை.." கரண்டியுடன் அவர் விரட்ட வர, செல்லம்மாவிடம் தஞ்சம் கொண்டாள் அவள்.

"பெரியம்மா! உங்க புள்ளையாச்சும் பேசுவாரா? இல்ல அவருக்கும் நந்தினி தான் பேச கத்துக் கொடுக்கணுமா?" அவள் வாயை நிறுத்துவது போல இல்லை.

"சக்திய கேக்குறையா மா?. அவனுக்கு தோதான ஆளா இருந்தா வாய் மூடாம பேசுவான். தெரியாதவங்க கிட்ட பேச கொஞ்சம் கூச்சப்படுவான்" செல்லம்மா சொல்லவும், மூவரும் சிரித்துக் கொண்டனர்.

"என்ன சிரிப்பு சத்தம் வெளில பயங்கரமா கேட்குது?" என்று உள்ளே வந்தாள் நந்தினி.

"வாடா மா! உன் புருஷன பத்தி தான் பேசிட்டு இருக்கோம்" செல்லம்மா சொல்ல, சிரிப்புடன் வந்தவள் ஒரு நொடி அமைதியாகி பின் தெளிந்தாள்.

"அம்மா எனக்கு காபி" சொல்லிக்கொண்டு சோஃபாவிற்கு அவள் செல்ல, அவளுடன் நந்தினியும் சென்றாள் காபி ட்ரேயுடன்.

"நீங்க ஏன் அண்ணி எடுத்துட்டு வர்றிங்க?" நந்தினி கேட்டுக் கொண்டே ஒன்றை எடுக்க, ஒரு சிரிப்புடன் தன்னுடைய கப்பை எடுத்துக் கொண்டாள் நிவி. அந்நேரம் சரியாய் வீட்டிற்குள் வந்தான் சக்தி.

"ஹாய் அண்ணா! காபி சாப்பிடுறீங்களா?" நிவி கேட்க, நந்தினி கண்டு கொள்ளவே இல்லை.

அவன் பதில் சொல்லும் முன் "இருங்க நான் எடுத்துட்டு வர்றேன்" என்றவள் உள்ளே ஓட, நந்தினியை பார்க்கவே சங்கடமாய் இருக்க சக்தி உள்ளே செல்ல முயலும் முன் மீண்டும் காபியுடன் அவனிடம் வந்தாள் நிவி.

"நன்றி மா" என்றவன் வாங்கிக் கொண்டு நகர பார்க்க, "இப்படி உட்காருங்க அண்ணா" என்று நந்தினி அருகே இடம் கொடுத்து விட்டு, தனியாய் அங்கேயே அமர்ந்தாள்.

தயங்கி சக்தி நிற்க, நந்தினி வேகமாக எழுந்து சென்றுவிட்டாள். தன் வாழ்வு என்ன என்று புரியாமல் இவ்வளவு நேரமும் கால் போன போக்கில் நடந்து களைத்து வந்தவன் நந்தினி முகம் பார்த்து இன்னுமே சோர்ந்து விட்டான்.

இதை எப்படி சரி செய்வதென்று சுத்தமாய் தெரியாமல் காபியுடன் அமர்ந்தான்.

"டேய் மாடு! மணி பத்தாக போகுது இன்னும் என்ன டா தூக்கம் உனக்கு?" கௌதம் அறையில் வந்து ராம் கத்தினான்.

"ஏன்டா உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? கல்யாண வேலை கல்யாண வேலைனு நான் தூங்கியே நாலு நாள் ஆச்சு. இப்பவாச்சும் ரெஸ்ட் எடுக்கலாம்னா ஏன்டா ஏன் உயிர வாங்குற? ஆமா நிவிய விட்டுட்டு இப்ப ஏன் நீ இங்க வந்த?" நியாயமாய் கேட்டான் கௌதம்.

"அதென்னவோ உன்னை பாக்காமல் விடிஞ்ச மாதிரியே தெரியல டா" ராம் சிரிப்புடன் சொல்ல, பதறி எழுந்த கௌதமும் "ஏய்.. அவனா நீ?" என்று கேட்க, அவனை நாலு மொத்து மொத்தினான் ராம்.

"சீக்கிரம் குளிச்சிட்டு வா! நிவி கோவிலுக்கு போகணும் சொன்னா. எல்லாரும் போயிட்டு வரலாம்" ராம் சொல்லவும் அவனை புரியாத பார்வை பார்த்தான் கௌதம்.

"ஏன்டா அப்படி பாக்குற?"

"டேய் புதுசா கல்யாணம் ஆனவன் எல்லாம் பொண்டாட்டிய தனியா கூட்டிட்டு போனும்னு தான் ஆசபடுவான். நீ என்னை வந்து கூப்பிட்டுட்டு இருக்க? நிவியும் உன்கூட தனியா போக தான் ஆசைப்பட்டிருக்கும். நீ போய்ட்டு வா. ஆஃபீஸ் ஒர்க் நிறைய பெண்டிங் இருக்கு. நான் போகணும்" கைக்குள் கொட்டாவியை மறைத்தவாறே கௌதம் சொல்ல,

"அந்த வெண்ணையை எல்லாம் ஒருநாள் அப்புறம் பார்த்துக்கலாம். உன் தங்கச்சி தான் உன்னையும் கூப்பிட சொன்னா. ஓவரா பேசாத! நாங்க தனியா போக வேண்டிய நேரத்துல போய்க்குவோம். இப்ப கிளம்பு! நம்மோட நந்தினி சக்தியும் வர்ராங்க" என்று சொல்லிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தான்.

கௌதமும் அவனிடம் எந்த மாற்றமும் தெரியாமல் குழப்பத்துடன் குளிக்க சென்றான்.

"ஹாய் சக்தி!" என்று அழைத்துக் கொண்டே ராம் அவன் அருகில் வந்து அமர, சக்தியும் புன்னகைத்தான்.

"கோவிலுக்கு போகலாம். நீங்க ரெடி தானே?" ராம் கேட்க, "இல்லை அத்தான்" பட்டென சக்தி சொல்ல, ராம் முகம் கேள்வியாய் சுருங்கியது.

"நீங்க எப்ப வா சக்தி கோவிலுக்கு போகலாம்னு உரிமையா சொல்றிங்களோ அப்ப தான் நான் வருவேன்" சகஜமாய் சக்தி சொல்ல, அப்போது தான் சில நொடிகளுக்கு பிறகு தான் அதன் அர்த்தம் புரிந்து சிரித்தான் ராம்.

"சரி சக்தி வா போகலாம்" என சிரிப்புடன் கூறியவன், "நந்தினியையும் கிளம்ப சொல்லு" என்று சொல்ல, சக்தியிடம் இருந்த இலகுத்தன்மை மீண்டும் காணாமல் போனது.

'நான் போய் சொல்லவா?' என யோசனையுடன் அவன் இருக்க, "சக்தி! போய் சொல்லு" என மீண்டும் ராம் சொல்லவும் வேறு வழி இல்லாமல் அறைக்குள் சென்றான் சக்தி.

அவனை பார்த்தும் பார்க்காதது போல அவள் ஹெட்போனில் பாட்டு கேட்க, அவனோ அயர்ச்சியாய் நின்றான்.

அவளின் கோபம் நியாயம் தான் என்றாலும் இதற்கு முடிவு தான் என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்க, அவள் வேண்டுமென்றே புறக்கணிப்பது வேறு அவனுக்கு இன்னும் ஆயசமாய் ஆனது.

"நந்தினி" அவன் அழைக்க, அவளுக்கு அது கேட்கவே இல்லை, எல்லாம் ஹெட்போன் புண்ணியம்.

'இது வேலைக்கு ஆகாது' என்று எண்ணியவன் அவள் முன் போய் நிற்க, முறைத்து பார்த்துக் கொண்டே காதில் இருந்து கழட்டினாள்.

"ராம் அத்தான் கோவிலுக்கு போக கிளம்ப சொன்னாங்க" செய்தியாய் அவன் சொல்ல, அவளின் அடுத்த கேள்வியே "நீயும் வர்றியா?" என்பது தான்.

"ரெண்டு பேரையும் தான் கூப்பிட்டாங்க" அப்போதும் பொதுவாய் தான் கூறினான்.

"அப்ப நான் வர்ல" என்றவள் மீண்டும் காதுக்குள் அதை திணிக்க, "நந்தினி! நமக்குள்ள இருக்குற பிரச்சனையை நான் எப்பாடு பட்டாவது தீர்க்க பாக்குறேன். வீட்ல எல்லாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம். முதல்ல கிளம்பு. வந்து பேசிக்கலாம்" அமைதியாய் அவன் சொல்ல, அதுவும் சரி என அவளுக்கு தோன்றியதால் மட்டுமே கிளம்ப சென்றாள்.

நிவியை சகுந்தலாவிற்கு மட்டும் இல்லாமல் செல்லம்மாவிற்கும் பிடித்து போனது. துருதுருவென ஒரு இடத்தில் இருக்காமல் ஏதாவது செய்து கொண்டே இருப்பவளை அவ்வளவு ரசித்தனர் எல்லோரும்.

ராம் தன் அறையில் கிளம்பிக் கொண்டிருக்க, நிவி சகுந்தலா, செல்லம்மாவுடன் சமையலறையில் இருக்க, சக்தியும் கௌதமும் ஹாலில் இருந்தனர்.

வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்கவும் சக்தி எழ, கௌதம் தான் பார்த்து கொள்வதாக சொல்லி வெளியே சென்றான். சென்றவன் தன் கண்களை கசக்கி கசக்கி மீண்டும் மீண்டும் பார்க்க, அது வாசுவை தான் காட்டியது.

சில நொடிகள் பொறுத்து பார்த்தவள் "நிவி இல்லையா?" என எரிச்சலை மறைத்த குரலில் கேட்டாள்.

"வாசு! வாட் அ ஸர்ப்ரைஸ்! இந்த வீட்ல எல்லாம் ஜோடி ஜோடியா இருக்காங்களே, நம்ம ஆளு இப்ப என்ன பண்ணிட்டு இருக்கும்னு இப்ப தான் உன்னை பத்தி நினச்சேன். அதுக்குள்ள வந்து நிக்குற" கௌதம் முகத்தில் புன்னகையே சொன்னது அவன் எவ்வளவு சந்தோசமாய் இருக்கிறான் என்பதை.

"ஹெலோ! நிவி எங்க? அவ போன் பண்ணி உடனே வா அர்ஜென்ட்னு சொன்னா. அதுனால தான் வந்தேன்" என்றாள் காட்டமாய். அதற்குள் நிவியும் வாசலுக்கு வர, கௌதம் இரு கைகளாலும் நிவிக்கு திருஷ்டி எடுப்பது போல செய்து தன் நெற்றியில் குட்டிக் கொண்டான்.

வாசு அவளை முறைத்து கொண்டிருக்க, நிவி கௌதம் தோளில் தன் கையின் முட்டியை வைத்து "அப்புறம்! என்ன இந்த பக்கம்?" என வாசுவை பார்க்க, உச்சகட்ட கோபத்தில் இருந்த வாசுவோ எதையோ தேடியவள் அங்கிருந்த பூந்தொட்டியை எடுத்து உடைக்க போக, சகுந்தலா அங்கு வந்ததால் அது பிழைத்தது.

"வா மா! நிவி இப்ப தான் சொல்லிட்டு இருந்தா, நீ வர்றனு" அவர் சொல்லிக்கொண்டு உள்ளே செல்ல, நிவி, கௌதம் இருவரையும் முறைத்துக் கொண்டே வாசு அவர்களை தாண்டி உள்ளே சென்றாள்.

"வா வாசு! அம்மா எப்படி இருகாங்க?" ராம் வரவேற்க, அவனுக்கு பதில் சொல்லியவள், திருமணம் ஆன அடுத்த நாளே ஏன் இவள் தன்னை இங்கு அழைத்தாள் என யோசித்துக் கொண்டே அமர்ந்தாள்.

"நிவி போலாமா?" ராம் கேட்க, "நான் ரெடி பாஸ். நந்தினி எங்கே?" நிவி கேட்க, அனைவரும் சக்தியை பார்க்கவும் வேறு வழி இல்லாமல் அவனும் உள்ளே எழுந்து சென்றான்.

"ஏய்! என்னடி நடக்குது? கோவிலுக்கு போறிங்கனா என்னை எதுக்குடி இங்க வர சொன்ன?" வாசு நிவி அருகில் வந்து கேட்க,

"இன்னுமா உனக்கு தெரில? நீயும் எங்களோட தான் வர்ற" என்றாள் நிவி.

"நிவி! உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? இன்னும் சின்ன புள்ள மாதிரி பிகேவ் பண்ணாத! எல்லாரும் என்னை என்ன நினைப்பாங்க" அமைதியான குரலில் நிவியிடம் வாசு சீறிக் கொண்டிருக்க,

"கௌதம் ஆளுனு நினைப்பாங்க" என்று அவர்கள் பேச்சின் உள்ளே வந்தான் கௌதம்.

"ஓஹ்! இது உங்க பிளானா? ஏன் இப்படி என்னை படுத்துறீங்க?" கௌதம் மேலும் அவள் கோபத்தை கொட்ட,

"வாசு! கௌதம் அண்ணாக்கு நான் உன்னை கூப்பிட்டதே தெரியாது . இப்ப என்ன எல்லாரும் என்ன நினைப்பாங்கனு தானே பீல் பண்ற?" என்றவள், "அத்தை! கொஞ்சம் இங்க வாங்களேன்" என்று கத்த,

"ஏய்! இப்ப எதுக்குடி அவங்கள கூப்பிடுற?" பதறினாள் வாசு.

"இரு சொல்றேன்" நிவி சொல்ல, கௌதம் சிரிப்புடன் நின்றான்.

"அத்தை இவ ஏதோ சொல்றா?" சகுந்தலாவிடம் நிவி சொல்ல, "என்னமா? எதாவது வேணுமா?" என்று அருகில் வந்தார் சகுந்தலா.

"அய்யயோ அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. நிவி.. ஏதோ தெரியாம... என்னை வர சொல்லிட்டா.." திக்கி திக்கி அவள் சொல்ல,

"இதுல என்னம்மா இருக்கு. சின்ன பசங்க எல்லாரும் ஒன்னா போனா தான கலகலனு இருக்கும்! அதான் உன்னை வர சொல்லியிருப்பா. சந்தோசமா போய்ட்டு வாங்க" கொஞ்சமும் அவர்கள் முகத்தில் எந்த சங்கடமும் இல்லை மனதிலும் தான் என்பதை பார்த்ததும் தெரிந்து கொண்டாள் வாசு.

"ஆனாலும் குடும்பமா போகும் போது.." என்று அவள் இழுக்க, "உன்னை நிவி இன்னைக்கு, இப்ப இங்க வர சொல்லி கூப்பிட்டு இருக்கா அப்டினா நிவிக்கு நீ முக்கியம்னு தானே அர்த்தம்? அப்ப நீ வர்றதுல என்ன இருக்கு?" சகுந்தலா கேட்டுவிட்டு அர்த்தத்துடன் கௌதமை பார்க்க அவனுமே திறந்த வாய் மூடாமல் சகுந்தலாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

வாசுவிற்கு அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை. மாமியார் விஷயத்தில் நிவி கொடுத்து வைத்தவள் என நினைத்துக் கொண்டு தலையாட்டிக் கொண்டாள்.

"போதுமா? இப்ப சந்தோசமா? இப்ப வருவியா எங்களோட?" நிவி கேட்க, சம்மதமாய் தலையசைத்தாள் வாசு.

சக்தி நந்தினியுடன் வர, கிளம்பலாம் என சொல்லிக்கொண்டு சிறியவர்கள் அனைவரும் வாசலுக்குச் செல்ல, கௌதம் மட்டும் சகுந்தலா தோளைக் கட்டிக் கொண்டு நின்றான்.

"என்னடா? திடிர்னு பாசத்த கொட்டுற?" சகுந்தலா கேட்க,

"ம்மா! சும்மா சொல்லக் கூடாது. பின்றிங்க போங்க".

"ம்ம்! நீ சொல்லலைனா எனக்கு தெரியாதா? நிவி எல்லாம் எனக்கு சொல்லிட்டா" என்றவர் அவனை முன்னே இழுத்து காதை திருக, "ஸ்ஸ்.. ஆஹ்.. அம்மா.. அம்மா.." என்று செல்லமாய் கத்தினான் கௌதம்.

பர்சை வைத்துவிட்டு வந்ததாக சொல்லி உள்ளே வந்த வாசு கண்ட காட்சி இது தான். குழந்தை தாயிடம் செல்லம் கொஞ்சுவது போல இருவரும் கொஞ்சுவதை பார்த்தவள் அப்படியே நின்றாள் அவர்களை பார்த்து.

"உன்னோட சந்தோசம் தான்டா எனக்கு முக்கியம்" என்றவர் திரும்ப, வாசுவை பார்த்ததும் "என்ன வாசு? ஏன் அங்கேயே நிக்குற?" என்றார்.

"பர்சை எடுத்துட்டு போகலாம்னு வந்தேன் மா" என்றவள் எடுத்துக் கொண்டு திரும்ப, காதலுடன் அவளை பார்த்து நின்றான் கௌதம்.

"பார்த்தது போதும். கிளம்பி போ! இல்லைனா கார் போய்டும்" சகுந்தலா அவனை சொல்ல, "அம்மான்னா அம்மா தான்! தேங்க் யூ சோ மச் அம்மா" என்றவன் அவருக்கு ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு பறந்தான்.

இந்த கௌதம் கூட வாசுவிற்கு புதிது தான். ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கு ஏற்றார் போல கச்சிதமாக பொருந்தி செல்பவனை பார்க்க அவளுக்கும் கொஞ்சம் பெருமையாய் தான் இருந்தது.

"ராம் காரை ஓட்டிக் கொண்டு வர, அருகில் கௌதமும், பின்னால் நிவி அருகே வாசுவும் இருக்க, நந்தினி அருகில் இன்றி வேறு இடமும் இல்லை சக்திக்கு.

ஆனாலும் யார் கண்களையும் கவராமல் அருகே இருந்தாலும் துளி கூட ஒட்டாத அளவுக்கு தள்ளி இருந்ததது அவர்கள் இருவருக்கும் மட்டும் தான் தெரியும்.

"இப்ப எதுக்கு டி கோவிலுக்கு போறோம்?" ஏதேதோ உணர்வுகளில் இருந்த வாசு தான் தன் மனதை மாற்ற வேண்டி நிவியிடம் கொஞ்சம் சத்தமாகவே கேட்டாள்.

"ஹான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான்" நிவி சொல்ல,

"அய்யயோ! நிவி தாலி வாங்க மறந்துட்டனே!" நிவியின் பதிலுக்கு உடனடியாய் அடுத்த கேள்வியை கௌதம் வைக்கவும், அங்கு நந்தினி சக்தி இருப்பதை கண் காட்டி முறைத்தாள் வாசு.

"ஆமா! அவங்க இல்லைனா மட்டும் ரொமான்ஸ்ல பிச்சு தள்ளிடுவா" நினைத்தது கௌதமே தான்.

"நிவி உன் அண்ணாக்கு வாய் கொழுப்பு அதிகமாகிடுச்சு! கண்ட்ரோல் பண்ண சொல்லு. அப்புறம் பல்லு போனா என்ன சொல்ல கூடாது" வாசு சொல்ல,

"எது! பல்லு போகுமா?" என நினைத்த கௌதமும் "எதுக்கும் கொஞ்சம் தள்ளி நின்னே சைட் அடிப்போம்" என நினைத்துக கொண்டான்.

ராம் கண்ணாடி வழியே நிவியை பார்த்துக கொண்டு வர, கௌதம் வாசுவுடன் சண்டை இழுத்துக் கொண்டு வர, எதிலும் ஓட்டாமல் இருந்தது நந்தினி மட்டுமே!

சக்திக்கு வாசு வந்த சில நிமிடங்களிலேயே கௌதமின் பார்வை அவன் காதலை தெரியப்படுத்த, சக்தியும் இவர்கள் உரையாடலை கேட்டு சிரித்துக் கொண்டு தான் வந்தான்.

அதுவும் வாசுவை பற்றி நிவி சொன்னதை சகுந்தலா தான் செல்லம்மாவிடம் சொல்லியிருக்க, வாசு வந்தபின் அவளை பார்த்த செல்லம்மாவும் அவளிடம் பாசமாக பேசியவர் அவளை பற்றி சக்தியிடமும் சொல்லி கௌதமினை பெருமையாய் புகழ்ந்தார்.

சக்தி மறந்தும் நந்தினி பக்கம் திரும்பவில்லை. நந்தினியோ சக்தியை மட்டுமே மனதில் தாளித்து எதிலும் கவனத்தை செலுத்தாமல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

தொடரும்..
 
  • Like
Reactions: Lakshmi murugan