அத்தியாயம் -3
சென்னை செல்லமாட்டேன் என அழுது புரண்டு உருண்டு இன்னும் பல சாகசங்களை அவள் நடத்தி கொண்டிருக்க வீட்டில் உள்ளவர்களோ அதை பற்றி கண்டு கொள்ளாமல் அவளுக்கு தேவையானதை எடுத்து வைத்து கொண்டிருந்தார்கள்.
“ஹே எம்ரால்டு நான் இல்லையென்றால் உனக்கு போர் அடிக்காதா ....அப்புறம் அம்மாவுக்கு தெரியாம குலோப்ஜாமூன் எல்லாம் யார் எடுத்து வருவா உனக்கு ......ப்ளீஸ் ப்ளீஸ் நான் இங்கே இருக்கேன்” என பேச்சுவாக்கில் அவர்கள் இருவரும் செய்த கோல்மால்களை பற்றிய சொல்ல
பொருளை எடுத்து வைத்துகொண்டிருந்த பார்வதி அதிர்ச்சியுடன் திரும்பி மாமியாரை பார்த்தவள்....... “ஓ அதான் சுகர் குறையாம அப்படியே இருக்கா ......வயசான காலத்திலயும் வாய் அடங்குதானு பாரு” என மனதிற்குள் கருவியவள் அவரை முறைக்க...... அவரோ அதற்கெல்லாம் அசந்து விடுவனா என்ன என்பதை போல் அவளை ஒரு நக்கல் பார்வை பார்த்தவர் திரும்பி தனது பேத்தியிடம் “நீ கவலைபடாதே.......அதற்கு வேறு ஆள் தயார் பண்ணிட்டேன் நீ முதல்ல கிளம்பு” என்றார்.பாட்டியிடம் தனது கெஞ்சல் பலிக்காததால் தாயிடம் திரும்பியவள்
“அம்மா நான் இனிமேல் வீட்டு வேலை எல்லாம் ஒழுங்கா செய்யறேன்....பிரஷ் பண்ணிட்டு காபி குடிக்கிறேன் ......... .உன்னை எதிர்த்து பேசமாட்டேன்.......முக்கியமா நீ பாட்டியை அடிகடி திட்டுவிர்கலே ........அதை பாட்டிகிட்டே சொல்லிடுவேன்னு உன்னை மிரட்ட மாட்டேன்.ப்ளீஸ்” என சொல்ல இப்போது அதிர்வது மரகதத்தின் முறையானது .அப்போ என்னை மனசுக்குள்ள திட்டிட்டு வெளியே சிரிச்சு பேசி கொண்டு இருந்தாயா என மனதில் நினைத்தவாறு கோபமாக மருமகளை திரும்பி பார்க்க பார்வதியும் அவர்களுக்கு சளைத்தவள் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில்” நான் என்ன புதுசாவ சொன்னேன்....உங்க கொள்ளு பாட்டிகிட்ட உங்க பாட்டி என்ன சொன்னார்களோ அதை தான் சொன்னேன்” என அசால்ட்டாக சொல்லியவாறு தனது வேலையை பார்க்க
“அமுக்குணி மாதிரி இருந்திட்டு எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கா பாரு” என மெதுவாக சொன்னவர் பெரிய ஆளுதான் இவள் என அந்த நேரத்திலும் தனது மருமகளின் திறமையை மனதில் மெச்சி கொண்டார்.
இருவரிடமும் கெஞ்சியவள் பின்னர் ஒருவரிடம் மற்றவரை போட்டு கொடுத்து அவர்களுக்குள் சண்டை வந்தால் ஒருத்தருக்கு உதவி செய்து அவர்கள் மூலம் சென்னை பயணத்தை தவிர்க்க நினைத்த ரோஜா எண்ணத்தில் மண் விழ இருவரும் அவளை ஊருக்கு கிளப்புவதிலயே உறுதியாக இருந்தனர்.
தனது தந்தையிடம் செல்ல நினத்தவள் அவர் தன் தாயின் பேச்சை மீறமாட்டார் என தெரிந்திருந்தால் அமைதியாக இருந்து விட்டாள்..இது பாட்டியின் முடிவு என்பதும் அவருக்கு தெரியும்.
அப்போது நான்கு ஐந்து பைகளை பார்வதி எடுத்து கொண்டு வர “என்னமா இது...இவ்ளோ இருக்கு என அலறிய ரோஜா . என்னை சென்னைதான அனுப்புரிங்க.....இல்ல வேற எங்காவதுமா......ஆசை ஆசையாக ஒரு பெண்ணை பெற்று இப்படி அம்போன்னு பாதில கலட்டி விடுகிறீர்களே இது நியாமா? தர்மமா? இதை கேட்க யாரும் இல்லையா?” என அவள் ஆரம்பிக்க அதற்குள் “ரோஜா ரெடியா” என்றபடி சேகர் உள்ளே வந்ததும் அவள் அமைதியானாள்.
எடுத்து வைத்திருந்த பொருள்களை எல்லாம் பார்த்தவர் “எதற்கு இவ்ளோ” என அவரும் கேட்க ...
“இல்ல ரோஜாவுக்கு பிடிச்ச தீனி முறுக்கு,சீடை ரவா உருண்டை எல்லாம் செஞ்சேன் ....அங்க அண்ணி வீட்ல இதெல்லாம் இருக்குமோ என்னவோ....அதான் எல்லாம் எடுத்து வைத்தேன்” என்றாள் பார்வதி .
சேகருக்கும் தனது மகளை பற்றி தெரியும்.அவள் சரியான தீனி பிரியை...ஏதாவது நொறுக்கு தீனி சாப்பிட்டு கொண்டே இருப்பாள் அதனால் அவளது உடல்வாகும் கொஞ்சம் பூசினால் போல் இருக்கும்.
“சரி கிளம்பலாமா” என சேகர் கேட்க அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெளிவர கண்ணீருடன் பார்வதி ரோஜாவின் அருகில் சென்றவள் “எல்லாம் உன் நல்லதுக்குதான் ரோஜா ...புரிஞ்சுகோடா” என சொல்ல மரகதம் ஏதும் பேசாமல் முகத்தை இறுக்கமாக வைத்து கொள்ள ரோஜாவோ எதுவும் பேசாமல் அமைதியாக தந்தையின் பின்னால் சென்றாள். அவள் சென்றதும் மரகதம் சோர்ந்து போய் அமர்ந்துவிட்டார். அவரும் அவளை விட்டு பிரிவோம் என நினைத்து கூட பார்க்கவில்லை......சூழ்நிலை அவரையே இந்த முடிவு எடுக்க வைத்து விட்டது.
ஸ்டேஷன் செல்லும் வரை அப்பாவும் மகளும் ஏதும் பேசவில்லை.உள்ளே சென்று காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்தவள் அவர் தோளின் மீது சாய அப்போது இரண்டு சொட்டு கண்ணீர் அவள் கைகளில் விழ சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் தந்தையின் கண்களில் கண்ணீரை பார்த்ததும் “அப்பா என்னால் ரொம்ப கஷ்டபட்டிங்க நீங்க.......எனக்கும் புரியுதுப்பா.......முடிந்த அளவு நான் மாற முயற்சி பண்ணுகிறேன்,.ஆனா உங்களை எல்லாம் விட்டுட்டு எப்படி இருப்பேன் என்று தான் தெரியவில்லை” என சொல்லும்போதே குரல் உள்ளே செல்ல
அதற்குள் சுதாரித்த சேகர்......”ரோஜா நீ எங்க வீட்டு தேவதைடா ....உன்னோட சந்தோசம் தான் எங்க சந்தோசம்.ஆனா நீ பழைய ரோஜாவா வரணும் ...அதுக்குதான் இந்த தற்காலிக பிரிவு.......கொஞ்ச நாள் தான் அப்புறம் நான் வந்து உன்னை கூட்டிட்டு வந்திடுவேன்” என்றார்.
எதோ சொல்ல வந்த ரோஜா பின்னர் “சரிப்பா” என்ற ஒரே வார்த்தையோடு முடித்துக்கொள்ள அதற்குள் ராம் அங்கு வந்து சேர்ந்தான்.
அவனை கோபாமாக ரோஜா முறைக்க
“இங்க பார் ரோஸ்....இதுக்கும் எனக்கு சம்பந்தம் இல்லை...இது முழுக்க முழுக்க உங்க பாட்டி எடுத்த முடிவு என்றவன் அதற்குள் ரயில் புறப்படும் அறிவிப்பு வர தந்தையிடம் விடை பெற்றுக்கொண்டு இருவரும் கிளம்பினார்.
இணையாத தண்டவாளங்களிள் பலரின் உறவுகளையும் கனவுகளையும் சுமந்து கொண்டு இசையோடு ஏகாந்தமாய் செல்லும் இந்த ரயில் பயணத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவுகளை பிரிந்து வாழ்க்கையை கற்று கொடுக்க அழைத்து செல்லும் ராமின் எண்ணம் ஈடேறுமா? இப்பயணம் இப்பாவைக்கு சுகமா? சுமையா ? காலம்தான் சொல்ல வேண்டும்.
சென்னையில் தனது வீட்டிற்கு அவளை அழைத்து சென்றவன் “ரோஜா அம்மா இல்லை......ஊருக்கு போய் இருக்காங்க .....இன்னும் இரண்டு நாளில் வந்து விடுவார்கள். ....நீ அந்த ரூம்ல போய் ரெஸ்ட் எடு நான் வந்திடறேன்” என சொல்லிவிட்டு மாடியில் இருக்கும் தனது அறைக்கு சென்றான்.
ரயிலில் ஏறியதில் இருந்து ராமிடம் ரோஜா ஏதும் பேசவில்லை.....அமைதியாகவே இருந்தாள்.ஆனால் அவளது மனமோ சூறாவளி போல் பல எண்ணங்களில் சுழன்று கொண்டிருந்தது..அவள் தந்தை படிப்பு முடிந்ததும் அங்கேயே தனக்கு வேலை பார்ப்பார்....... இல்லை திருமணத்திற்கு ஏற்பாடு பண்ணுவார் என நினைத்து ....அதை எப்படி தடுப்பது என வெகுநாளாக யோசித்து கொண்டிருந்தாளே தவிர இப்படி அவர்களை விட்டு பிரிந்து தனியாக அனுப்புவார் என அவள் கனவிலும் நினைக்கவில்லை.அதும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர்கள் இந்த முடிவு எடுத்திருப்பது அவளுக்கே ஆச்சிர்யம்தான்..எல்லாவற்றிற்கும் இந்த ராம் தான் காரணம் என கோபம் அவன் மேல் திரும்ப மற்ற சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு ராமை திட்டி கொண்டிருந்தவள் மனதில் ஒரு எண்ணம் பளிச்சிட இதுதான் நான் அவனுக்கு கொடுக்கும் தண்டனை....என்னை ஏண்டா இங்கு அழைத்து வந்தோம் என அவன் நொந்து நூடுள்ஸ் ஆகவேண்டும்....நீ முதலில் ஊருக்கு கிளம்பு என அவன் வாயாலே சொல்லவேண்டும் என முடிவு பண்ணியவள் அதற்கான யோசனையில் ஆழ்ந்தாள் .
அதற்குள் ராம் கிளம்பி கீழே வந்தவன் “ரோஜா சாரிடா......நம்ம இப்போ ஒருத்தரை பார்க்க போகணும்......உடனே கிளம்பனும்....சீக்கிரம் ரெடி ஆகி வா.....பின்பு வந்து ஓய்வு எடுத்து கொள்ளலாம் ” என சொன்னவன் அவள் முகத்தில் கண்ட தீவிர சிந்தனையை பார்த்தவன் அவள் அருகில் வந்தான் “ரோஜா மனசுல ஏதும் போட்டு குழப்பிக்காத......இந்த மாம்ஸ் எது செய்தாலும் உன் நல்லதுக்குதான் செய்வேன் சரியா” என்றான்.
அவனது அன்பான பேச்சு அவள் மனதை ஏதோ செய்ய போட்டிருந்த திட்டம் எல்லாம் மறந்து “ம்ம்ம்ம் என தலை ஆட்டியவள்...கொஞ்ச நேரம் பொறுத்திருங்க...கிளம்பி வந்திடறேன் என சொல்லியபடி உள்ளே சென்றாள்.. பத்து நிமிடத்திற்குள் கிளம்பி வெளியே வந்தவள் பிங்க் நிறத்தில் ஜீன்சும் ப்ளுநிறத்தில் குர்த்தாவும் அணிந்துகொண்டு வர ராமே ஒரு நிமிடம் அசந்து போனான்.
“வாவ் ...சூப்பர் ரோஜா ....”என அவன் வாய் பிளக்க
சட்டென்று வெட்கப்பட்டவள் அப்படியே முகம் இருள வேகமாக உள்ளே சென்றவள் ஒரு சுடிதார் அணிந்து கொண்டு வெளியே வர ராம் முகம் மாறியது.
“இப்போ எதுக்கு நீ ட்ரெஸ் மாத்திட்டு வந்த” என அவன் கோபமாக கேட்க
அவள் ஏதும் பேசாமல் தலை குனிந்து நிற்க
ரோஜா உன்னைத்தான் கேட்கிறேன் என அவன் அதட்ட ...நிமிர்ந்து பார்த்தவள் முகம் வேதனையில் சுருங்கி இருக்க....”போலாம் ராம் “ என மெதுவாக சொன்னாள்.
“நீ போய் அந்த ட்ரெஸ் போட்டு வா போலாம்” என அவன் அழுத்தமாக சொல்ல
“வேண்டாம் மாம்ஸ்” என அவள் தலை ஆட்ட
“ஏன் வேண்டாம்” என அவன் கேட்க
“அன்று அவனும் இதே மாதிரிதான்” என சொல்லும்போதே வார்த்தை தடுமாற கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வர
“ரோஜா அதை இன்னும் நீ மறக்கலையா என கேட்டவன் அது ஒரு கெட்ட கனவு புரிஞ்சுதா என்றவன் போ...போய் அந்த ட்ரெஸ் போட்டு வா “என தான் சொன்னதிலே பிடிவாதமாக இருக்க ரோஜாவும் பேசாமல் உள்ளே சென்று மாற்றி கொண்டு வந்தாள்..
பின்னர் இருவரும் கிளம்பி செல்ல இருவர் மனதிலும் குழப்பங்கள் இருக்க அங்கு வேறு எந்த பேச்சும் இல்லை.ராமும் எங்கே செல்கிறோம் என்பதை சொல்லவில்லை.ரோஜாவும் கேட்கவில்லை.
இடம் வந்ததும் வண்டியை நிறுத்தியவன் “இறங்கு ரோஜா என்றான்.அந்த ஊரே அவளுக்கு புதிது .அதனால் வேடிக்கை பார்த்துகொண்டே இறங்கியவள் இங்க எதுக்கு மாம்ஸ் கூட்டிட்டு வந்து இருக்கீங்க” என சாவகாசமாக கேட்க
“எல்லாம் உன் வேலை விஷயமாகத்தான்” என்றான் அவன் .
“என் வேலையா ...எனக்கு என்ன வேலை தெரியும்” என கேட்டவள் அப்போது தான் அங்கு இருக்கும் பெயர் பலகையை கவனித்தாள்.
இராகதேவன் MA.BL என இருக்க அதிர்ச்சியோடு அவள் அவனை திரும்பி பார்க்க
ராமும் “ஆம் ரோஜா ....இவர்கிட்டதான் உன்னை ஜூனியர் வக்கிலா சேர்த்துக்க சொல்லி கேட்டு இருக்கேன் .அதுக்குதான் இப்போ வந்திருக்கோம்..பிரபலாமான வக்கீல் என சொல்லிகொண்டிருக்கும்போதே அவனது அலைபேசி ஒலிக்க....ஓ அப்படியா என வேகமாக கேட்டவன் இன்னும் ஐந்து நிமிடத்தில் நான் அங்கு இருப்பேன் என சொன்னவன் ரோஜாவிடம் திரும்பி ரோஜா ஒரு அவசரமான வேலை ....வந்து விடுகிறேன்......இங்கே கொஞ்ச நேரம் காத்திரு” என இருக்கையை காட்டியவன் அவள் பேச ஆரம்பிக்கும் முன்னே அவன் சென்றுவிட்டான்..
அவளுக்கோ கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. அவள் இங்கு சென்னை வீட்டில் தன்அத்தை கூட தான் இருப்போம் என நினைத்து வந்தாள்....ராம் வேலைக்கு என்று சொன்னதயே அவளால் ஜீரணிக்க முடியவில்லை.அதற்குள் அவன் தனியாக விட்டு விட்டு செல்ல என்ன செய்வது என தெரியாமல் மீண்டும் அந்த பெயர் பலகை படித்தவள் இராகதேவன் MABL வக்கீல் என இருக்க பேரபாரு ராகதேவனாம் என சிரித்தவள் அப்படியே மெதுவாக உள்ளே நுழைந்தாள்.
அங்கு கொஞ்சம் குண்டாக நெற்றியில் நாமத்தோடு ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான்.இவள் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தவள் அவனை பார்த்ததும் என்ன பேசுவது என தெரியாமல் முழித்து கொண்டு நிற்க ...அவனோ இவளை வாயில் கொசு போவது கூட தெரியாமல் பார்த்து கொண்டிருந்தான்.
அவனது முகத்தை பார்த்ததும் ரோஜாவிர்க்கு சிரிப்பு வர......சிரிப்பு போலீஸ் போல இவன் சிரிப்பு வக்கிலாட்ட இருக்கானே.....இவன்கிட்ட நான் ஜூனியரா .... என எண்ணியவள் சிரிப்பை அடக்கி கொண்டு “குட்மார்னிங் சார் என சொல்ல உடனே அவன் எழுந்து குட்..குட்மார்னிங் என வழிந்து கொண்டே சொன்னவன் உட்காருங்க” என்றான்.
என்னடா இது பிரபலாமான வக்கில்னா கொஞ்சம் கம்பீரமா இருப்பான்னு பார்த்தா இவன் காத்து போன பலூன் மாதிரி இப்படி இருக்கான்......இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா இவன் விடற ஜொள்ளுல நீந்தியே சேலம் போய்விடலாம் போல் இருக்கிறதே என நினைத்தவள் அவளும் பதிலுக்கு ஹிஹிஹி என வழிந்துவிட்டு “mr.ராம் சொன்ன பொண்ணு நான் தான் சார்” என்றாள்.
அவன் அதை கண்டுகொள்ளாமல் ...”ஹிஹிஹிஹி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என சொல்ல அவளுக்கு சட்டென்று கோபம் வர “சார் என்னை ராம்சரண் IPS அனுப்பி வைத்தார்” என கோபமாக சொன்னாள்.
ராம் சரண் IPS என்ற பெயரை கேட்டதும் சட்டென்று எழுந்தவன் “சாரி...சாரி உட்காருங்க ....எதாவது கேஸ் விஷயமா ....சார் வெளியே போயிருக்கார் ...வர நேரமாகும்” என அவன் படபடவென பேச அவளோ உடனே அப்போ நீங்க இராகதேவன் இல்லயா” என வேகமாக கேட்டாள்.
“இல்ல மேடம் நான் அவருடைய ஜூனியர் பட்டாபி என்கிற பஞ்சரட்சகன்” என்று சொல்ல
ஓ!!!!! என அவள் யோசனையுடன் அமர்ந்திருக்க
“நீங்க ஒன்னும் கவலைபடாதிங்க ....என்ன கேசுன்னு சொல்லுங்க......நான் பார்த்துகிறேன்......உங்களுக்கு தெரியுமா நான் லா கல்லூரி கோல்ட் மெடலிஸ்ட் தெரியுமா? என்ன என்னை விட இவர் சீனியரா இருகிறதால இவர் சீனியர் வக்கிலாகிட்டார்.....அடுத்த வாய்ப்பு எனக்கு தான் .....இன்னொரு விஷயம் ...யாருக்கும் சொல்லிடாதிங்க என்னாலதான் இந்த வக்கீலுக்கு இவ்வளவு பேர்புகழ் எல்லாம்...... நான் கொடுக்கிற ஐடியாதான் இவருடைய வெற்றிக்கு காரணம்” என அவன் பெருமையாக பேசிகொண்டே போக
“ம்ம்ம்...அப்படியா” என அவள் கண்களை உருட்டிக்கொண்டு கேட்க ....அதன் சூட்சமம் புரியாத பட்டாபி “ஆமா...ஆமா” என்று தலை ஆட்டினான்.
இப்போது நன்றாக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்த ரோஜா இன்றைக்கு சிக்கின அடிமை இவன் தான் என முடிவு பண்ணியவள்..... “இவ்வளவு திறமைசாலியா நீங்க........உங்க முகத்தை பார்த்தாவே தெரியுது.......அப்படியே அறிவு சுடர் விட்டு எரியுது.... எண்ணெய் மாட்டும் ஜாஸ்தியா இருக்கு.....அதை துடைச்சுகுங்க” என கிண்டலாக சொல்ல
....அவனோ அதை புரிந்து கொள்ளாமல் அவளை பார்த்து கொண்டே “ஆமாம் ஆமாம் எல்லா பெண்களும் அப்படிதான் சொல்வாங்க....ரொம்ப வழியுதுன்னு......நான் என்ன பண்றது ...இயற்கையாவே நான் அழகா பிறந்திட்டேன்” என அவன் பிதற்ற.....
இந்த கொசு தொல்லை தாங்க முடியலயே என நினைத்தவள் ......”அப்புறம் இந்த இராகதேவன் என்னதான் பண்றான் என்றவள் சாரி பண்றார் “என பேச்சை மாற்ற
“என்ன மேடம் நீங்க சாரி எல்லாம் கேட்டுட்டு ....உங்களை மாதிரி அழகான பொண்ணுங்க யார எப்படி வேண்டுமென்றாலும் கூப்பிடலாம்.......யாரு இவரா.........வெளியே தான் பெத்த பேரு......பெரிய வக்கீல்...திறமையானவருனு....ஆனா கஞ்சபிசினாரி ....டீ குடிக்கத்தான் காசு கொடுப்பார்....வடை போண்டாவுக்கு எல்லாம் கொடுக்க மாட்டார்” என சோகமாக சொன்னான் பட்டாபி .
“அப்படியா என கேட்டவள் நமக்கு வடை போண்டா தான மெயின் டிஷ் ....டீ ,காபி எல்லாம் சைடு டிஷ் தான ...அத தரவில்லை என்றால் எப்படி" என அவள் புருவத்தை உயர்த்தி கேட்க
அவன் ஆமாம் என்றவன் ஆனா கேஸ் விஷயம்னு வந்திட்டா காசுபணம் விஷயத்துல ரொம்ப கண்டிப்பான ஆளு.....இங்க பீஸ் வச்சாதான் கேஸ் எடுப்பார்.ஆனா அவர் எடுத்தால் வெற்றி நிச்சயம்தான்” என்றான்.
“ஓ என சொன்னவள் ஆள் எப்படி” என புருவத்தை தூக்கியபடி கேட்க
என் அளவுக்கு அழகு கிடையாது என சொல்லிகொண்டிருக்கும்போதே அவனை வெளியே இருந்து ஒருவன் அழைக்க ....என்னப்பா ....இப்பவே போகனுமா என சலித்து கொண்டே கேட்டவன்....வரேன்...வரேன்.....”என சொல்லிவிட்டு திரும்பி
“மேடம் நீங்க ஒரு பத்து நிமிடம் காத்திருங்க...கொஞ்சம் வேலை இருக்கு....முடிச்சுட்டு வந்திடறேன்......பக்கத்துலதான் போறேன்...வந்திடுவேன்...போய்டாதிங்க” என சொல்ல
அவளும் சிரித்து கொண்டே “நான் இருக்கேன் பட்டாபி என்றவள் நான் அப்படி சொல்லலாம் இல்லயா என கேட்க உடனே அவன் நீங்க எப்படி வேணாலும் சொல்லலாம்...வாடா போடான்னு கூட சொல்லுங்க ......ஆனா போயடாதிங்க என வழிந்தவன் ஆபிஸ் பாய் கடைக்கு போயிருக்கான் ...வந்திடுவான் .....நீங்க இருங்க” என சொல்லிவிட்டு நகர்ந்தவன்
“அவள் அப்பாடி என்று இருக்கையில் சாய வேகமாக வந்தவன் மேடம் போயடாதிங்க என மறுபடியும் சொல்ல....சரிடா....போகலை போடா” என சலிப்பாக சொன்னாள்
“என்னது டாவா “என அவன் அதிர
“நீதாண்டா எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம்னு சொன்ன...அதாண்டா கூப்ட்டேன்....நீ வேண்டாம்னு சொன்னா நான் கூப்பிடலடா .....என ஏகப்பட்ட டா அவள் போட அவனோ இனி இருந்தால் இருக்கிற மரியாதையும் போய்விடும் என நினைத்தவன் சரி சரி நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு சென்றான்.
அவன் அலறி ஓடியதை பார்த்தவள் சிரித்துகொண்டே தனியாக எவ்ளோ நேரம் இருப்பது என நினைத்தவள் அறையை நோட்டமிட அங்கு விவேகனந்தர் படம் பெரிய அளவில இருக்க ....”ம்ம்ம்ம் ஆள் பழுத்த பலமா இருப்பானோ .....இந்த பட்டாபி ஆள பத்தி சொல்றதுக்குள்ள போய்ட்டான்” என சொல்லிகொண்டே இராகதேவன் அறைக்குள் நுழைந்தவள் அப்படியே மலைத்து போய் நின்றாள்....அங்கு மலையளவு புத்தகங்கள் அடுக்கி இருக்க அந்த இடமே ஒரு லைப்ரரிபோல் இருந்தது.”ஹப்பா இவ்ளோ புக் படிப்பானா .....இல்ல நம்ம மாதிரி படம் பார்க்க வாங்கி வச்சிருக்கானா ......இந்த புக்ஸ் எல்லாம் படிக்கணும்னா கண்டிப்பா அவனுக்கு நாற்ப்பது ஐம்பது வயது இருக்கும் என நினைத்தவள் அங்கு இருக்கும் மாடர்ன் ஆர்ட் பார்த்ததும் பாரேன் இந்த ஆளு இதை எல்லாம் ரசிக்கிறான் என சொல்லிகொண்டே அந்த நாற்கலியில் அமர்ந்து ஒரு சுற்று சுற்ற அவளை அறியாமலே ஒரு கம்பீரம் அவளிடம் வந்தது.
அப்போது வேகமாக கதவை திறந்து கொண்டு ஒரு புதியவன் உள்ளே வர சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள் இருவர் கண்களும் ஒருசேர சந்திக்க ,ஒரு நிமிடம் அனைத்து இயக்கங்களும் நின்று போக அப்படியே நின்றவள் ,எதிர்புறத்தில் அவனும் திகைத்து போய் நிற்க .......உடனே சுதாரித்தவன் “யார் நீங்க” என்றான்.
அவன் ஏதோ பேசுகிறான் என தெரிகிறது....ஆனால் அவளது நினைவு அவளிடம் இல்லை......அவனிடம் இருந்து கண்களை அவளால் நகர்த்தவும் முடியவில்லை......அவள் அப்படியே நிற்க
அவள் அருகில் வந்தவன் “ஹலோ நீங்க யாரு....ஆபிஸ்ல எல்லாம் எங்க போய்ட்டாங்க “ என கேட்க
அவனது மூச்சுகற்று பட்டவுடன் அவளுள் இருக்கும் தற்காப்பு உணர்வு சட்டென்று அவளை அங்கிருந்து நகர்த்த...சற்று தடுமாறியவள் பின்னர் தன்னை நிலைபடுத்தி கொண்டு மீண்டும் அவனையே நன்றாக பார்த்தாள்.
பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் அவன் நின்று கொண்டிருக்க ......திரண்ட தோள்களும்,சராசரியான உயரம்.....கார்மேகத்தின் நிறம்,கனிவா கடுமையா என தெரியாமல் கலவையான முகஅமைப்பு ........சூரியஒளி போன்ற கண்கள் என அவனது தோற்றத்தை அவளது மனம் அளவிட....... அதை கடிவாளம் போட்டு அடக்கியவள்........ இவன் யாரு புதுசா .....அதும் இந்த கோலத்துல......கல்யாணம் பண்ண உடனே டைவேர்ச்கு வந்துட்டானா என யோசித்தவள் ....சரி அந்த பட்டாபி வரும் வரை இவனை வைத்து நேரத்தை போக்குவோம் என முடிவுடன்
“ம்ம்ம்ம் அதை நான் கேட்கணும்.....யார் சார் நீங்க சொல்லாம உள்ள வந்திருக்கிங்க....கதவை தட்டிட்டு வரணும்னு தெரியாது ” என வேகமாக கேட்க
“ நான் யாரா “என அதிர்ந்தவன் பின்னர் நிதானமாக “வக்கீல்சாரை பார்க்கணும்” என்றான்.
“அவர் இல்லை வெளியே போயிருக்கார் ....வர நேரமாகும்”.... என ஒய்யாரமாக நாற்காலியில் சாய்ந்து கொண்டு அவள் பதில் சொன்னாள்.
“எங்கே போயிருக்கார்” என அவன் பொறுமையாக கேட்க
அவளும் பேச்சுக்கு ஆள் கிடைத்தால் போதும் என நினைத்து “அதுவா சார்....வக்கீல் சாருக்கு இது ஐந்தாவது பிரசவம் ...அதுக்குதான் போயிருக்கார் என ரகசியம் போல் சொன்னவள் ......இதுக்கு முன்னாடி நான்கு பிரசவுத்துல எட்டு குழந்தைங்க ....இப்போ எத்தனயோ என சொல்லிவிட்டு இது யார்கிட்டயும் சொல்லிடாதிங்க சார்” என்றாள்.
“அப்படியா” என அவன் ஆச்சிரியபடுவது போல் கேட்க
ஆமாம் சார் என வேகமாக தலைஆட்டியவள்
“நீங்க யாரு...அவருக்கு உறவா”........ என அப் புதியவன் மீண்டும் கேட்க
“அப்டின்னு சொல்லமுடியாது....ஆனா அப்படிதான் என சொல்லிவிட்டு....சார் உங்க கேசுக்கு வேற வக்கிலே கிடைக்கலயா....இவர் லா பாயிண்ட் எடுக்க சொன்னா குழந்தைக்கு பீடிங் பாட்டில் எடுத்து கொடுப்பார்......அதுனால வேற நல்ல வக்கிலா பாருங்க” என அவனுக்கு ஆலோசனை சொல்வது போல அவள் சொல்ல
“அப்போ நீங்களே வேற வக்கீல் இருந்தா சொல்லுங்களேன்” என அவன் கேட்டான்.
“ஓ சூப்பர் வக்கீல் இருக்கார்...வக்கீல் பட்டாபி என்கிற பஞ்சரட்சகன் .....பீஸ் என்கிட்டே கொடுத்திடுங்க...கேஸ் அவன் பார்த்துக்குவான் ” என சொல்லிகொண்டிருக்கும்போது பட்டாபி உள்ளே நுழைய
“டேய் பட்டாபி வா...வா...உனக்கு ஒரு சூப்பர் கேஸ் பிடிச்சு வச்சிருக்கேன்.....டிவேர்ஸ் கேஸ்...... சார்தான்” என அவள் கைகாட்ட
“சார்ர்ர்ரர்ர்ர்ரர் “ என அவன் பதற
“டிவேர்சா நான் அப்படி சொல்லவே இல்லயே” என அப் புதியவன் சொல்ல
“சார் இதெல்லாம் கேட்டுட்டா செய்வாங்க.......உங்க காஸ்ட்யூம் பார்த்தாலே தெரியுதே.......கல்யாணம் ஆன உடனே டிவேர்ச்கு வந்திருக்கிங்கனு...... பட்டாபி இனி நீ பார்த்துக்கோ” என சொல்ல
சார்ர்ர்ரர்ர்ர்ரர் என அப் புதியவன் காலில் விழுந்த பட்டாபி ....நேக்கு ஏதும் தெரியாது சார்” என்றான். அவன் காலில் விழுந்ததும் வேகமாக நாற்காலியில் இருந்து எழுந்தவள் அங்கிருந்து நகர
“ம்ம்ம்...எழுந்திரு பட்டாபி” என அழுத்தமாக சொன்னவன் மேசையை சுற்றி வந்து தனது நாற்காலியில் சென்று அமர அப்போது தான் அவளுக்கு புரிந்தது......அவள் சட்டென்று திரும்பி பட்டாபியை பார்க்க அவன் பயத்தில் திருதிருவென முழிக்க அவன் அருகில் சென்றவள் இவன் தான் இராகதேவனா என மெதுவாக கேட்க நினைத்து சத்தமாக சொல்லிவிட்டு பின்னர் நாக்கை கடித்தவள் “இவரா” என திருத்த
“ஆமாம் ...நான் தான் இராகதேவன் MABL” என கம்பீரமாக சொன்னான்.
முதலில் பேசியதற்கும் இப்போது பேசுவதற்கும் அவளுக்கு வித்தியசம் புரிய ,மேலும் அவனது குரல் அவள் மனதில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்த தலை குனிந்தபடி அமைதியாக நின்றாள் ரோஜா.
இன்பம் என்பது நம்முள் இருப்பது
துன்பம் என்பது தொடர்ந்து வருவது
தொடர்பை துண்டித்து விட்டு
மகிழ்ச்சியை மனதில் எப்போதும்
நிறுத்திகொண்டால்
எல்லா நாட்களும் சூழ்நிலைகளும்
நமக்கு சுகமே !!!!!!!!!!!!!!!!!!!!