• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 35 ஃபைனல் - 2

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை ...... என்னதான் தரணி, பட்டாபி என அவளுக்கு தைரியம் சொன்னாலும் அவள் மனம் அவனின் வார்த்தைக்காக ஏங்கியது....அவள் ஆரம்பத்தில் இந்த வழக்கில் சோர்ந்து நின்ற போது எல்லாம் அவன் வழக்கு சம்பந்தமாக பேசவில்லை என்றாலும் அவன் அருகில் வந்து நின்றாலே அவளுக்கு தைரியம் தானாக வந்துவிடும்......அவனும் எதுவும் பேசாமல் அவளது தோளில் கைபோட்டு கண்ணாடி முன் சென்று நிற்ப்பான்..என்னில் பாதி நீ.....எப்போதும் உனக்கு நான் இருக்கிறேன் என வார்த்தை சொல்லாமலே அந்த உணர்வை அவளுக்குள் ஏற்படுத்தி கொடுப்பான்.ஏனோ அவள் மனம் அதிகமாக இன்று அவனை தேடியது.

பழைய நினைவுகள் மனதில் வர அழுது கொண்டே படுத்து இருந்தாள் ரோஜா.....விடிகாலை பொழுது அவளுக்கு அலைபேசி வர எடுத்து காதில் வைத்தவள் எதிர்புறத்தில் வந்த தகவலை கேட்டு “எந்த மருத்துவமனை” என விசாரித்தவள் எழுந்து வேகமாக கிளம்பினாள்..

கீழே வந்தவள் காவேரியை பார்த்தது “அத்தை ராம் எங்கே என கேட்க அவன் ஜிம்க்கு போயிருக்கான் என்றதும் ...சரி அத்தை ஒரு அவசர வேலை...மருத்துவமனை வரைக்கும் போயிட்டு வந்திடறேன்” என சொல்லிவிட்டு வேகமாக சென்றாள்.

உள்ளே நுழைந்ததும் மனம் படபடவென அடித்து கொள்ள வேகமாக நடந்தவள் அக்கா என அழைப்பு கேட்க திரும்பியவள் அங்கு சிறு பெண் அழுது கொண்டு நின்று இருந்தாள்.

“என்னாச்சு சுமதி...இப்போ எப்படி இருக்காங்க” என கேட்டபடி உள்ளே சென்றவள் அங்கு கை கால்கள் எல்லாம் கட்டு போட்டு படுத்து இருந்தாள் வாணி.

“ அய்யோ என்ன வாணி இது......யார் உன்னை இப்படி பண்ணது”...என அவள் பதறி கேட்க

அதற்குள் அவளது தங்கை “அந்த ஆள்தான் அக்கா இப்படி பண்ணான்.நேத்து இரவு வீட்டிற்கு வந்து பயங்கிற சண்டை...டைவேர்ஸ் பண்ணா என் மானமே போய்டும்.......நான் இப்படி இனி பண்ணமாட்டேனு கால்ல விழுந்து அழுதான்...அக்கா அதற்கு ஒத்துக்க மாட்டேனு சொல்லிட்டாங்க.....ஜீவனாம்சம் தரமுடியாது......அதை வேண்டாம்னு சொல்லு அப்டின்னு கெஞ்சினான்....அதற்கும் அக்கா முடியாதுன்னு சொல்லிட்டாங்க.....உடனே கோபம் வந்து அருகில் இருந்த பூ ஜாடியை எடுத்து அடிச்சுட்டான்.... நாங்க யாருமே இதை எதிர்பார்க்கலை...... அக்கா கத்தின சத்தம் கேட்டு பக்கத்துல இருக்கிறவங்க வரதுக்குள்ள அவன் ஓடிட்டான்.இப்போ காலையில் இருந்து அம்மாவுக்கு போன் பண்ணி வழக்கு வாபஸ் வாங்க சொல்லு......இல்ல மத்த பொண்ணுங்களுக்கும் இதே நிலை தான் அப்டின்னு மிரட்டிட்டு இருக்கான்.....எங்களுக்கு ரொம்ப பயமா இருக்குக்கா” என சொல்லி அழுக

அதை கேட்ட ரோஜாவின் நரம்புகள் துடிக்க கோபத்தில் கொதித்து கொண்டு இருந்தாள்.“என்ன துணிச்சல் அவனுக்கு.......தப்பு செஞ்சதும் இல்லாம இப்படி அடிச்சு போட்டு மிரட்டவும் செய்யறனா என சொன்னவள் நீங்க கவலை படாதீங்க ....அவனா நானான்னு பார்க்கிறேன் ” என சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினாள்.

மனம் கோபத்தில் கொந்தளிக்க ...”ஆம்பிளை என்ற திமிர் அவனுக்கு ...முதலில் தீர்ப்பு வரட்டும் ...அதற்கு பின் அவன் மீது ராமிடம் சொல்லி ஏதாவது கேஸ் போட்டு உள்ளே தள்ள வேண்டும்” என புலம்பிகொண்டே ஸ்கூட்டியில் வந்து கொண்டு இருந்தவள் எதிரில் இவளை நோக்கி இரு சக்கர வாகனத்தில் இருவர் வேகமாக வர, அவளோ அவர்களுக்கு வழி விட்டு ஓரமாக வர ஆனால் அவர்கள் நகராமல் அவளையே நோக்கி வந்தனர்.

அவள் சுதாரித்து நகர்வதர்குள் இடிப்பது போல் அருகில் வந்ததவர்கள் அவளை நோக்கி ஏதோ வீச அவளோ “ஹே என்ன பண்ற” என கத்தி ஒதுங்கும் முன் இருவருக்கும் நடுவில் மூன்றாவதாக ஒரு வண்டி நுழைந்து அவளை தள்ள நூலிலையில் இவள் தப்பிக்க தடுமாறி விழுந்ததவள் அதிர்ச்சியில் அப்படியே மயக்கம் அடைந்தாள்.

அதன் பின் அவள் கண்விழித்து பார்க்க மருத்துவமனையில் இருந்தாள்.அவளை சுற்றி ரதி ராம் அனைவரும் நின்று இருக்க அவளோ என்னாச்சு ராம் எனக்கு என கேட்டவள் வேகமாக எழ முயற்சி பண்ண .”..பொறு...பொறு ...மருந்தோட வேகம் ஒரு அரைமணி நேரம் அப்டிதான் இருக்கும்...ஒன்னும் ஆகலை ...ரோட்ல ஒரு சின்ன ஆக்சிடென்ட்...நல்லவேளை யாருக்கும் ஏதும் பிரச்சினைஇல்லை” என சொன்னவன் உன்னை என்னிடம் சொல்லாமல் வெளியே போகாதேனு சொன்னேன்ல......இப்போ பாரு என எரிச்சலுடன் ராம் திட்ட

இல்லை ராம்...காலையில நீ ஜிம்க்கு போய்ட்ட...மேலும் நீதிமன்றத்திற்கு போகும்போது தானே சொன்ன.....இப்போ என்ன ஆகபோகுதுன்னு போனேன் ...ஆனால் ராம் அதை இப்போ நினச்சாலும் பயமா இருக்கு என்றாள்.

அதற்குதான் நான் படிச்சு படிச்சு சொன்னேன்....இப்போ பார் என அவன் மீண்டும் சொல்ல

“ இல்ல ராம்...... நான் வாணிய பார்த்திட்டு வண்டில வந்திட்டு இருந்தேன் .......எதிர்ல வண்டியில ஒருத்தன் இல்ல இரண்டு பேர் வேகமா என்னை நோக்கியே வந்தாங்க...நான் நகர்ந்து தான் போனேன் ...ஆனா என்னை பார்த்தே வந்தாங்க ......... அவங்க கிட்ட வந்து என்னமோ எடுத்த மாதிரி இருந்தது.......... அப்போ எதோ ஒருத்தன் என்னை தள்ளிவிட்டானா...இல்லை என் மேல விழுந்தானணு தெரியலை...கீழே சாஞ்சுட்டேன்.....அதிர்ச்சியில அப்படியே மயக்கம் வந்திடுச்சு....என்ன நடந்தது அங்கனு தெரியலை .. ....அவன் மட்டும் என்னை தள்ளி விடலைனா இந்நேரம் நான் எப்டின்னு எனக்கே தெரியலை” என அவள் சொல்ல

“அப்படி எல்லாம் சொல்லாதே” ரோஜா என வேகமாக அவள் வாயை பொத்திய காவேரி” இனி அதை பற்றி பேசாதே” என்றார்.

“சரிம்மா நீங்க பார்த்துக்குங்க .....இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டிற்கு போய்டலாம்......எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ......நான் கிளம்பறேன்” என ராம் சொல்ல

என்னது கிளம்பறியா என்றவள் “ராம் உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்......அதுக்கு முன்னாடி நான் இப்போ நீதி மன்றத்திற்கு போய் ஆகணும்” என்றாள் ரோஜா.

காவேரியோ “இந்த நிலைமையில் நீதி மன்றமா ...அதெல்லாம் வேண்டாம்...நீ முதல்ல வீட்ல வந்து ஓய்வு எடு” என அவர் அதட்டினார்.

“இல்லை அத்தை...இன்னைக்குதான் வாணி கேஸ் தீர்ப்பு.... நான் போகணும்” என பிடிவாதம் பிடித்து கைகளில் சிறு கட்டோடு கிளம்பினாள் ரோஜா.

நடந்த விஷயம் தெரியாமல் அவளது வரவை தரணியும் பட்டாபியும் எதிர்பார்த்து இருந்தனர்...அவள் வந்த உடன் அவள் நிலையை பார்த்ததும் என்ன ஆச்சு என்று பதறி விசாரிக்க நடந்தை சொன்னவள் “அந்த ஆள் மட்டும் நடுவில் வரலைனா நான் இப்போது இங்கு இல்லை என்றவள் இந்த கேஸ் முடிஞ்சா உடனே முதல்ல அந்த ஆளை பார்த்து நன்றி சொல்லணும்” என்று சொன்னாள்.

“உனக்கு அவனை அடையாளம் தெரியுமா” என தரணி கேட்க ...”இல்லை அவன் ஹெல்மட் போட்டு இருந்தான்.ராமிடம் சொன்னால் கண்டு பிடித்து சொல்லிடுவான்” என்றாள்.

பின்னர் வாணியை பற்றி சொன்னவள் அதற்கும் அவன் மேல் கேஸ் போட வேண்டும் என்றாள்.

அதற்குள் வாணியின் வழக்கு விசாரணைக்கு வர அனைவரும் உள்ளே சென்றனர்.

அங்கு நீதிபதி இன்று வாணியின் வழக்கு விபரங்கள் எல்லாம் முடிந்து தீர்ப்பு சொல்லபடுகிறது.குற்றம் சாட்டப்பட்ட வாணியின் கணவருக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை.வழக்கு தொடுத்தவர்க்கு மட்டுமே இதில் விருப்பம்.ஆனால் விவாகரத்து என்பது இருவரும் ஒரு மனதுடன் பிரிந்து வாழ ஒத்துழைக்க வேண்டும்......இல்லயெனில் ஒருவரின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிருபிக்கவேண்டும். பெரும்பாலும் விவாகரத்தை இந்த நீதி மன்றம் ஊக்குவிப்பது இல்லை....பேச்சுவார்த்தையின் மூலம் கணவன் மனைவி இருவரையும் சரி செய்யவே முயல்கிறது........அதையும் மீறி இருநபர்களில் ஒருவரின் உணர்வுகள் உரிமைகள் பாதிக்கப்டும்போது அப்போது பாதிக்கப்பட்ட நபருக்கு கண்டிப்பாக இந்த நீதி மன்றம் நீதி வழங்கும். அந்த வகையில் இந்த வழக்கு இரண்டாவதாக சொன்ன கருத்தின் அடிபடையில் வழக்கு தொடுத்த வாணி அவரது கணவரால் பல தொல்லைகளுக்கு ஆளாகி இருப்பது வக்கீலின் வாதத்தில் இருந்து தெரியவருகிறது.

கழுத்தில் தாலி ஏறிவிட்டால் அதை கட்டியவன் எது செய்தாலும் அமைதியாக இருக்கவேணும் என்ற பெண்களின் மனப்பாங்கை பலர் தவறாக புரிந்து கொண்டு தவறு செய்கின்றார்,அது போன்ற ஆண்களை வாணியை போன்று ஒரு சிலர்தான் துணிந்து அவர்களுக்கு தண்டனை பெற்று தருகின்றனர்.. எனவே பெண்களின் பாதுகாப்பை முன்னிட்டும் .அந்த பெண்ணின் மன உணர்வுகளை நீதிமன்றத்தில் மிக திறமையாக எடுத்து சொல்லிய வக்கீல் வாதத்தாலும் இந்த வழக்கில் வழக்கு தொடுத்த வாணிக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லி அவர் கேட்கும் ஜீவனாமசத்தையும் தருமாறு இந்த நீதி மன்றம் ஆணையிடுகிறது.தவறும் பட்சத்தில் அவருக்கு சிறை தண்டனை விதிக்க இந்த நீதி மன்றம் உத்தரவிடுகிறது என சொல்லி முடித்தார்.

ரோஜாவிற்க்கோ முதன் முதலில் தான் படித்த படிப்பிற்கு தான் பெற்று தந்த மரியாதை என்ற மனநிறைவுடன் நின்றவள் அவள் மனகண்ணில் என் பேத்தின்னு நிருபிச்சுட்ட ரோஜா என்று தாத்தாவின் வார்த்தை ஒலித்தது..வேகமாக அவள் அருகில் வந்த தரணி பட்டாபி என அனைவரும் அவளை வாழ்த்த அனைவர்க்கும் நன்றி சொல்லியபடி வேகமாக வெளியே வந்தவள் நேராக அன்னை இல்லத்திற்கு தன்னை அழைத்து செல்லும்படி பட்டாபியிடம் கூறினாள் ரோஜா.

அவள் அன்னை இல்லம் சென்றதும் அங்கு உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் மற்றும் பணிபுரியும் அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொல்ல உடன் வந்த ரோஜாவிற்க்கே ஆச்சரியமாக இருந்தது.இப்போது தானே தீர்ப்பு வந்தது...அதற்குள் எப்படி என யோசித்தவள்

“மேடம் இங்க வாங்க” என ஒருவர் அழைக்க

அங்கு சென்றவள் அங்கு ஒரு புதிய அறை திறப்பு விழாவிர்க்கான அலங்காரத்துடன் இருக்க ...”இதை இப்போ நீங்க தான் திறக்கனும்” என்றனர் அவர்கள்.என்னது இது என கேட்பதற்குள் கையில் கத்தரிகோலை கொடுத்துவிட ரிப்பனை கட் பண்ணி அந்த அறையை திறந்தவள் அதில் அவளின் தாத்தா படம் பெரிய அளவில் வைக்க பட்டு பெண்களுக்கான இலவச சட்டஉதவி அலுவலகம்...நிர்வாகி mrs ரோஜா BL என்று இருந்தது.

இதை எதிர்பார்க்காத ரோஜா யார் இதெல்லாம் செஞ்சது என்றதும் “நாம் சார் தான் மேடம்........ஒரு வாரத்திற்கு முன்பே ரெடி பண்ணிட்டோம்.உங்கள் முதல் வெற்றிக்கு சாரின் சின்ன பரிசு அப்டின்னு சொல்லிட்டு இருந்தார்” என்றார் ஒருவர்.

அவளோ என்ன சொல்வது என தெரியாமல் அப்படியே நிற்க அப்போதுதான் தான் இங்கு வந்த காரியம் நினைவிற்கு வர வேகமாக தேவாவின் அறையை நோக்கி சென்றவள் கதவின் அருகே சென்று பின்னர் திரும்பி “அச்சோ பூ வாங்காம வந்திட்டேன்” என்றவள் பட்டாபி என அழைக்கும் முன் ரோஜா இதழ்கள் அவள் கைகளில் இருந்தன.....

அவள் அதை வியப்போடு பார்க்க....... “சார் நேற்றே சொல்லி இருந்தார் மேடம் ,,,,ஜெயிச்ச உடனே மேடம் இங்க தான் வருவாங்க அப்போ இதை அவங்களிடம் கொடுங்க” என்று சொன்னார் என்றனர்.

அவளோ எதுவும் பேசாமல் அதை வாங்கியவள் நேராக தேவாவின் தாய் தந்தையரின் படத்தின் முன் வைத்து விழுந்து வணங்கினாள்.அவள் முன்பே நினைத்து இருந்தாள் ...அவள் மனம் தளரும்போது எல்லாம் இங்கு வந்து இந்த படத்தின் முன் சில மணித்துளிகள் அமர்ந்து விட்டு செல்வாள்.ஏனோ வெற்றி பெற்ற உடன் இங்கே வரணும் என்று தோன உடனே புறப்பட்டு வந்தாள்.ஆனால் தேவாவோ அவளது எண்ணத்தை முன்பே கணித்து அதற்க்கு ஏற்றாய் போல் ஏற்பாடு செய்து இருந்தான்.



ரோஜாவிற்க்கோ என்ன சொல்வது என்றே புரியவில்லை......தன்னை இந்த அளவு அவன் கவனித்து இருக்கிறானா.......என் மனதில் இருப்பதை எப்படி அப்படியே செயல்படுத்தி இருக்கிறான் என் ராகன் என பல நாட்களுக்கு பிறகு அந்த வார்த்தையை உச்சரித்தவள் அப்போது அலைபேசி மணி ஒலிக்க எடுத்தவள் பாட்டி அழைத்து இருந்தார்.

காதில் வைத்ததும் “வாழ்த்துக்கள் ரோஜா என்றவர் என் மனம் ரொம்ப சந்தோசமா இருக்கு...என் பேத்தியினால் ஒரு பெண்ணின் வாழக்கை சீரழிவில் இருந்து காப்பாற்ற பட்டிருக்கு..... நினைக்கும்போதே பெருமையா இருக்கு ரோசா என்றவர் ............நான் கூட விவாகரத்து கேஸ் அப்டின உடனே கொஞ்சம் கஷ்டமா இருந்தது.ஆனா தேவா தம்பிதான் விளக்கமா எடுத்து சொல்லுச்சு....;உன் தாத்தாகண்டிப்பா மேல இருந்து இத பார்த்து சந்தோசபட்டிருப்பார்” என்றார்.

அதற்குள் பார்வதி சேகர் என அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொல்ல அவளோ சந்தோசத்தில்” யாருப்பா உங்களுக்கு நான் ஜெயிச்சது சொன்னது ....... ராம் மாம்ஸ் சொன்னாறா “ என கேட்டாள்.

“இல்லம்மா அவன் சொல்லலை...மாப்பிள்ளை நேற்றே போன் பண்ணி சொல்லிட்டார்.நாளை தீர்ப்பு......எப்படியும் உங்க பொண்ணு ஜெய்ச்சுடுவா......நீங்க பதினோரு மணிக்கு போன் பண்ணுங்க அப்டின்னு சொன்னார்” என சொல்ல தன் மேல் அவன் வைத்திருந்த நம்பிக்கையை கண்டு வாயடைத்து நின்றாள் ரோஜா.

இங்கு பலரும் அவனை பற்றி சொல்ல ஆனால் இந்த நிகழ்வுக்கு காரணமானவன் அங்கு இல்லை.பார்வைகளை சுழல விட்டவள் “எங்க உங்க சாரை காணோம்” என கேட்டாள்

“தெரியலை மேடம்....நாங்களும் காலையில் இருந்து போன்ல பிடிக்க முயற்சி பண்றோம்.....அலைபேசி அனைக்கபட்டுள்ளது அப்டினே வருது” என்றனர்.

அதற்குள் அவளுக்கு அலைபேசி அழைப்பு வர பேசிகொண்டே நேரம் போனதே தெரியவில்லை.

அதன் பின்னர் அங்கிருந்து கிளம்பியவள் வீட்டிற்கு வர அங்கு ரதி ராம் காவேரி ஜெயந்தி என அனைவரும் காத்திருந்தனர்.உள்ளே நுழைந்ததும் அனைவரும் வாழ்த்து சொல்ல ஆனால் கண்களோ ஒருவனை தேடி தேடி சலித்தது.

ஏனோ வெற்றியின் சந்தோசம் அவளிடம் குறைந்து ஏமாற்றம் முகத்தில் தெரிந்தது.இதை உணராத மற்றவர்கள் பேசிகொண்டே இருக்க அவளோ “எனக்கு களைப்பாக இருக்கு நான் படுக்க போகிறேன்” என சொல்லிவிட்டு எழுந்தவள்

திரும்பி ராமிடம் “ராம் எனக்கு அந்த வண்டில வந்து என்னை கீழே தள்ளுன ஆள் யாருன்னு தெரியனும்.......கொஞ்சம் கேட்டு சொல்றியா” என கேட்க

ராமோ சற்று அதிர்ந்தவன் பின்னர் “சரி சரி ரோஜா...நீ ரெஸ்ட் எடு நான் கேட்டு சொல்றேன்” என்றான்.

பின்னர் அன்று முழுவதும் அவளுக்கு அனைவரும் வாழ்த்து சொல்ல அவள் எதிர்பார்த்த ஒருவனிடம் இருந்து மட்டும் வாழ்த்து வரவே இல்லை.

மனம் அதையே நினைத்து கொண்டு இருக்க பெரிய இவன் ....ஜெயிக்கிறதுக்கு முன்னாடி கூப்பிட்டு பேசினான்.....ஆனா இப்போ ஆளே காணோம்” என திட்டியவள் ஏனோ அவள் மனம் கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது. மாலை வரை பார்த்தவள் பின்னர் தரணி பட்டாபியிடம் போன் செய்து சாதரணமாக பேசுவது போல் பேசி “உங்க பாஸ் என்ன செய்கிறார் என கிண்டலாக கேட்க அவர் காலையில் இருந்து வரவே இல்லை.போன் செய்தாலும் எடுக்கவில்லை” என்று சொன்னார்கள்.

ரோஜாவிற்கு நன்கு தெரியும்...தேவா எப்போது அலைபேசியை அனைத்து வைத்திருக்க மாட்டன்.இரவு நேரமாக இருந்தாலும் தன் அருகில்தான் அலைபேசி வைத்திருப்பான்.மேலும் அவள் ஜெயித்து விடுவாள் என முன்பே எல்லாம் திட்டமிட்டு செய்து இருந்தவன் இப்போது எங்கு சென்றான் என குழம்பி போனாள்.

இரவு முழுவதும் அவன் நினைவிலே இருந்தவள் காலை எழுந்தது கிளம்பி கீழே வர அங்கு காவேரி திட்டி கொண்டு இருந்தார்.

“இது எனக்கு சரியாய் படலை ராம்...அவ்ளோதான் சொல்லிட்டேன்...நான் ஒருத்தியாகவே எத்தன வேலை பார்க்கிறது”......என சொல்லி கொண்டு இருக்க

“என்ன அத்தை...காலையிலே மாம்சிடம் சண்டை போட்டு இருக்கீங்க” என கேட்டாள்.

“நீயே கேள் ரோஜா .,..இரவு முழுவதும் இவன் வரவே இல்லை...கேட்டா கொஞ்சம் வேலை இருந்ததுன்னு சொல்றான்.கலயாணத்திற்கு இன்னும் நான்கு நாள் தான் இருக்கு .....இவன் இப்படி இருந்தா எப்படி” என கேட்டார்.

“ஏன் மாம்ஸ் இப்படி பண்றிங்க....இன்னைக்கு உங்களுக்கு தீபாவளிதான் என சிரித்து கொண்டே சொன்னவள் ...நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்திடறேன்” என சொல்லிவிட்டு கிளம்ப

“எங்க ரோஜா” என ராம் கேட்டதும் அவள் திரும்பி பார்த்தவள் “அது வந்து வந்து” என தடுமாற


ஏனெனில் அவள் கிளம்பியது தேவா வீட்டிற்கு...ஏனோ அவள் மனம் இருப்புகொள்ளாமல் தவிக்க நேரிலே சென்று திட்டி விட்டு வந்துவிடலாம்” என எண்ணி கிளம்பினாள்.
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
ராம் கேட்டதும் என்ன சொல்வது என தெரியாமல் அவள் திணற அதற்குள் காவேரி “ரோஜா அப்படியே அந்த டைலர் கடையில ப்ளவுஸ் தைக்க கொடுத்து இருந்தேன் வாங்கிட்டு வந்திடு” என உள்ளே இருந்து குரல் கொடுக்க.....

உடனே அவள்” ம்ம்ம் டைலர் கடைக்குதான் போறேன் மாம்ஸ்” என சொல்லிவிட்டு வேகமாக வெளியே வந்தாள்.

தேவாவின் வீட்டிற்கு வந்தவள் உள்ளே செல்லுமுன் அவள் மனம் இப்போது மட்டும் எதற்கு தேடி செல்கிறாய்....அவன் நாடி வந்த போது எல்லாம் வார்த்தையால் அவனை குத்தி குதறி எறிந்தாய்....இப்போது நீயாக சென்றால் அவன் செய்த தவறு சரி என்று ஆகிவிடாதா ......அதனால் நன்றாக யோசித்து உள்ளே போ ரோஜா என அவளை எச்சரிக்கை செய்யதது ....... ஏனோ அவனை பார்க்க வேண்டும் என எண்ணம் மட்டும் அவளுக்கு இருக்க மனதை அடக்கி விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

அப்போது வேலைக்கார பெண் மட்டும் இருக்க அவளை பார்த்ததும் “அம்மா வாங்க அம்மா...வாங்க என சந்தோசத்துடன் சொன்னவர் நீங்க இல்லாம பாவம் எல்லாரும் ரொம்ப கவலை பட்டுட்டு இருந்தாங்க......சார் சரியா சாப்பிட்றதே இல்ல.....எப்ப பார்த்தாலும் உங்களை பத்தியே பேசிட்டு இருப்பாங்க” என சொல்ல

அவளோ ஏதும் சொல்லாமல் வீட்டியே சுற்றி பார்த்து கொண்டு இருந்தாள்.

“என்னம்மா அப்படி பார்க்கிறீங்க....நீங்க போகும்போது வீடு எப்படி இருந்துச்சோ அப்டிதான் இந்த பதினைந்து நாலா வீடு இருக்கு ...எதையும் மாற்ற கூடாதுன்னு சார் சொல்லிட்டார்.மெத்தை விரிப்பு கூட மாற்றலை” என அவள் பாட்டிற்கு சொல்லி கொண்டு இருந்தாள்.

“வீட்ல யாரும் இல்லயா” என அவள் கேட்க

“அம்மா மார்கெட் போய் இருக்காங்க....ரதி மேடம் வெளியே போய் இருக்காங்க...சார் நேற்று காலையில போனவர் இன்னும் வரலை......எங்க போனாருன்னு தெரியலை...அம்மாகூட புலம்பிகிட்டே இருந்தாங்க” என சொன்னாள்.

வீட்டிலும் அவன் இல்லை என்றது அவள் மனம் பதற உடனே ரதிக்கு போன் அடித்தாள்.

போனை எடுத்தவள் “அவசரவேலை...பிறகு அழைக்கிறேன்” என சொல்லிவிட்டு போனை கட் செய்தாள்.

பின்னர் வீட்டிற்கு வந்தவள் அப்போது “இங்க பாரு ரதி நீ சொல்றது எனக்கும் புரியுது....அவன் தான் யாரிடமும் சொல்ல வேண்டாம்னு சொல்றான்...என்னை என்ன பண்ண சொல்ற.......இங்க அம்மாவும் என்னை காலையில் இருந்து கேள்வியா கேட்டுட்டு இருக்காங்க....நான் சமாளிச்சுட்டுதான் இருக்கேன்......ஆனா ரோஜா இதை கேட்டா தாங்க மாட்டா ரதி.....அவ தேவா மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா.......இந்த அதிர்ச்சியை அவளால தாங்கவே முடியாது.உனக்கு தெரியுமா நேத்து நானும் நீயும் மட்டும் நடிக்கலை...ரோஜாவும்தான் நம்மகிட்ட நடிச்சுட்டு இருந்தா...அவ கண்ணு வந்தில இருந்து அலைபாஞ்சுகிட்டு இருந்ததை நீ பார்த்தியா......அவ தேவாவ ரொம்ப தேடறா...இப்போகூட எங்கயோ போயிருக்கா.....எங்கேனு தெரியலை...ஆனா தேவாவை தேடி தான் போயிருக்கான்னு நான் நினைக்கிறேன்...........அதுனால புரிஞ்சுகோ ரதி......இன்னும் கல்யாணத்திற்கு மூணு நாள் இருக்கு......அதுக்குள்ள எல்லாம் சரி பண்ணிடலாம்” என சொல்லிகொண்டே திரும்பியவன் அங்கு ரோஜா அவனை பார்த்து கொண்டே நின்று கொண்டு இருந்தாள்.

“உன்னிடம் நான் பிறகு பேசுகிறேன் என சொல்லிவிட்டு போனை வைத்தவன் வா ரோஜா......என்ன ப்ளவுஸ் வாங்கிட்டு வந்திட்டியா” என கேட்க

அவளோ அதற்கு பதில் சொல்லாமல் “ராம் வா போகலாம் “என சொல்லிபடி அவள் திரும்பி வெளியே நடக்க

“எங்க ரோஜா “என அவன் கேட்டதும்

“திரும்பி அவனை முறைத்தவள் “தேவா எங்க இருக்காறோ அங்க” என அவள் சொல்ல

“தேவா எங்கனு எனக்கு எப்படி” என சொல்லி முடிக்கும் முன்னே

“செத்திடுவேன் ராம்.......இப்போ நான் தேவாவ பார்க்கலை அப்புறம் நீங்க யாரும் என்னை பார்க்க முடியாது” என அவள் ஒவொவொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து சொல்ல ராமோ ஏதும் சொல்லாமல் தேவாவிடம் அழைத்து சென்றான்.

மருத்துவமனையின் வாசலில் வண்டி நிற்க ரோஜாவின் மனமோ நின்று துடித்தது.

பதட்டமும் பயமும் முகத்தில் நிறைந்து இருக்க திரும்பி ராமை பார்க்க

அவனோ எதுவும் பேசாமல் வண்டியில் இருந்து இறங்கினான்..

வண்டியில் இருந்து இறங்காமல் அமர்ந்திருந்தவள் ராம் வந்து இறக்கிவிட அவள் கால்கள் தடுமாற “எதுக்கு ராம் இங்க வந்த” என மெதுவாக கேட்டாள்.

அவனோ” நீதான கேட்ட .....நீயே வந்து பார் “என சொல்ல

அதற்குள் வெளியே வந்த நாதன் ரோஜாவை பார்த்ததும் “ஹே ரோஜா இங்க எங்க” என்றவன் ராமை பார்த்து “என்ன ராம் நீங்க ...தேவா உங்ககிட்ட அவ்ளோதூரம் சொன்னான் இல்லயா.......ஆனா நீங்க இப்படி பண்ணிடிங்க” என்றான்.

அவர்கள் பேசியதை வைத்து அவளுக்கு எதுவும் புரியவில்லை.....”.இப்போ தேவாவிற்கு என்ன நடந்துன்னு சொல்றிங்களா இல்லயா என அவள் திடிரென்று கத்த...நீயே நேர்ல வந்து பாரு” என அழைத்து சென்றனர்.

அங்கு இரண்டு கைகளிலும் கட்டு , தலையில் கட்டுடன் தேவா படுத்து இருந்தான்.

அவனை அந்த நிலையில் பார்த்தவள் “அத்தான் என அவன் அருகில் செல்ல ...அச்சோ என்னாச்சு அத்தான் ....யார் என்ன பண்ணா இவரை” என அவள் பதறிபோய் கேட்டுகொண்டே அவன் உடல் எங்கும் கைகளால் தடவிகொண்டே இருந்தாள்.

“அத்தான் ரோஜா வந்திருக்கேன் அத்தான் பாருங்க...உங்க ரோஜா வந்திருக்கேன்...ஏன் பேச மாட்டேங்கிறிங்க அத்தான்” என அவள் புலம்ப

அப்போது அங்கு வந்த ரதி ரோஜாவை பார்த்ததும் அதிர்ந்து ராமை பார்க்க அவனோ நாம் போனில் பேசியதை ரோஜா கேட்டுவிட்டாள் என்றான்.

ரோஜாவின் அருகில் சென்றவள் அவள் தோளில் கைவைக்க திரும்பி பார்த்த ரோஜா “என்னாச்சு ரதி அத்தானுக்கு ....யாருமே என்கிட்டே சொல்லலை ... என்ன நடந்தது...ஏன் அத்தான் பேசமாட்டேங்கிறாங்க” கேள்விமேல் கேள்வி கேட்க

“ரோஜா அழுகாதே...இப்போதான் ஒரு சின்ன ஆப்ரேஷன் நடந்து முடிந்தது..... அண்ணா மயக்கத்துல இருக்காங்க அதான்” என்றாள்.

“என்னது ஆப்ரேஷனா என அதிர்ந்தவள் ...என்ன ஆப்ரேஷன்.....இவருக்கு என்ன ஆச்சு என கேட்டவள் ராமிடம் திரும்பி இப்போ நீ சொல்லபோறியா இல்லையா ராம்” என அவனை கோபமாக கேட்டாள்.

நாதன் “சொல்லிடு ராம்...பாவம் இனியும் ரோஜா தாங்கமாட்டாங்க” என சொல்ல

“அன்னைக்கு உனக்கு ஆக்சிடென்ட் நடந்தது இல்லையா அப்போ குறுக்கே ஹெல்மெட் போட்டுட்டு ஒரு ஆள் உன் மேல் வந்து விழுந்தான்ல ...அது யார் தெரியுமா ? அது நம்ம தேவாதான்.

வாணியோட கேஸ்ல கொஞ்சம் கவனமா இருக்க சொல்லி தேவாவிற்கு ஏதோ நியூஸ் வந்து இருக்கு.அதான் உனக்கு போன் பண்ணி அவன் எச்சரிக்கை பண்ணான்.ஆனா நீ அவனை திட்டிட்டு அதை பெருசா எடுத்துகலை.அதுனால அன்னைக்கு என்கிட்டே அதை பத்தி பேசத்தான் வந்து இருந்தான்.உன்கூடவே நான் இருக்கணும்னு சொல்லி இருந்தான்.அதான் நான் என்னை கேட்காம நீ வெளியே போகாதேன்னு சொல்லி இருந்தேன்.

ஆனா நீ கிளம்பி போய்ட்ட.....அவன் ஜாக்கிங் வரும்போது நீ தனியா வண்டில டென்ஷனா வரத பார்த்திருக்கான்.உடனே நாதன்கிட்ட வண்டிய வாங்கிட்டு உன் பின்னாடியே வந்திருக்கான்...அப்போது தான் அந்த இரண்டு பேர் உன்னை கட்டடையலா அடிக்க வந்து இருக்காங்க....அவங்க வாணி கணவன் அனுப்புன கூலி படை ஆளுங்க.....இந்த மாதிரி தாக்குதலை தேவாவும் எதிர்பார்க்கலை......நீதி மன்றத்துள தீர்ப்பிற்கு பிறகு ஏதாவது பிரச்சனை பண்ணுவான்னு நினைச்சான்...........அவனுக உன்கிட்ட வந்ததுக்கு அப்புறம்தான் அவனுக்கு புரிஞ்சுது...உன்னை தாக்க வராங்கனு ........அவன் சட்டென்னு சுதாரிச்சு உள்ளே நுழைய அவனுக கட்டயால உன்னை அடிக்க முயல உன்னை தள்ளிவிட்டு அவன் கைகளால் அதை தடுத்ததால கை எழும்பு முறிஞ்சுடுச்சு........மறுபடியும் அவனுக அடிக்க முயற்சி பண்ணிருக்காங்க...அதுக்குள்ள பக்கத்துல யாரோ சத்தம் போட அவனுக ஓடிட்டாங்க.......கீழே விழுந்ததுல ஹெல்மெட் இருந்தாலும் பெருசா அடி இல்லை ....... ஆனா உடம்புல எல்லாம் சிராய்ப்பு காயம் ...அவனால் எழுந்திரிக்க முடியலை........அந்த நிலையிலும் அவன் எனக்கு போன் பண்ணி வர சொல்லி உன்னை ஆஸ்பத்ரிக்கு முதல்ல கூட்டிட்டு போகசொன்னான்.

அப்புறம் தான் அவனை கூட்டிட்டு வந்தோம்......நீ கண் முழிச்சுட்ட ...உனக்கு ஒன்னும் இல்லை ...நல்ல இருக்க அப்டின்னு தெரிஞ்ச பின்புதான் அவன் ட்ரீட்மெண்ட்கு சம்மதிச்சான்.அவன்தான் இதை உன்கிட்ட சொல்லவேண்டாம்......அவளோட முதல் வழக்கு.....முதல் வெற்றி அதை சந்தோசமா அவ அனுபவிக்கனும்னு சொல்லி எங்களை சொல்லவிடாம பண்ணிட்டான்” என சொல்ல

இதெல்லாம் கேட்க கேட்க ரோஜாவிற்கு தலை சுற்றி போனது.....அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் எதுவும் பேசவில்லை.

மற்றவர்களும் அவளை தொந்தரவு செய்யவில்லை.அனைவரும் வெளியே சென்று விட்டனர்.

அறையில் அவளும் தேவாவும் மட்டுமே இருந்தனர்.அவன் கைகளை எடுத்து தனது நெஞ்சில் வைத்து கொண்டவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருக்க அவன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தாள் ரோஜா.....

ஆரம்பத்தில் இருந்து அவனது செய்கைகள் ஒவ்வொன்றாக நினைவிற்கு வர தன்னை வேலைக்கு அமர்த்தியது,அவளின் கிண்டல்களை அவன் திட்டுவது போல் ரசித்தது,அவள் மருத்துவமனையில் இருக்கும்போது அம்லு அம்லு என அழுதது என நினைக்கும்போதுதான் அவளுக்கே உரைத்தது.அவள் அரை மயக்கத்தில் இருந்தாலும் அவன் பேசுவது அவளுக்கு கேட்டு கொண்டுதான் இருந்தது.......திருமணத்திற்கு பிறகு அவள் அவனிடம் நீங்கள் எதற்கு என்னை அம்லுனு சொல்றிங்க அத்தான் என கேட்டபோது.......நீ எப்போ என் மனசுக்குள்ள வந்தியோ அப்பவே உனக்கு ஒரு செல்ல பேர் வச்சு உன்னை கொஞ்சுவேன் ரோஜா.....அந்த பேர்தான் அம்லு......என்னோட காதலின் மொத்த உணர்வும் இந்த வார்த்தை அம்லு தான் என்றவன் பெரும்பாலும் அவன் சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கும்போதும் ,ஏதாவது ஆதரவை வேண்டும்போது மட்டுமே இந்த வார்த்தையை பயன்படுத்துவான்.அப்போ அவன் என்னை பற்றி தெரியறதுக்கு முன்னாடியே என்னை காதலிச்சானா என நினைத்தவள் அய்யோ அத்தான் இந்த முட்டாள் புரியாம உங்களை ரொம்ப வேதனை படுத்திவிட்டேன் என அழுதவள் அதன் பின்னர் திருமணதிற்கு பிறகு அவன் தனக்காக நிறைய பழக்கங்களை மாற்றி கொண்டது எல்லாம் நியாபகம் வர அவளுக்கே புரியாத நிலையில் அமர்ந்திருந்தாள்.

தேவா மயக்கம் தெளிந்து கண் விழித்தவன் எதிரில் ஒரு உருவம் மங்கலாக தெரிய நன்றாக பார்த்தவன் அவன் கைகளை நெஞ்சில் வைத்து கொண்டு கண் மூடி அமர்ந்திருந்தாள்ரோஜா.

அவளை பார்த்ததும் மனதில் சந்தோசம் பொங்க “அம்லுஊஊஊ” என அவன் அழைக்க

அதை பற்றி நினைத்து கொண்டு இருந்தவள் அந்த வார்த்தையை கேட்டதும் கண் விழித்தவள் அவனை பார்த்ததும் “அத்தான்” என அவன் அருகில் சென்றாள். “நல்ல இருக்கியா அம்லு......என்னடா கையில் கட்டு...அச்சோ ரொம்ப வலிச்சுதா என பேசமுடியாத நிலையிலும்” அவன் அவளை பார்த்து கேட்க

“நான் நல்லா இருக்கேன் அத்தான்... ஆனால் என்னால்தான் உங்களுக்கு இப்படி என சொல்லி அழுதவள் சாரி அத்தான்” என்றாள்

அவனோ “எனக்கு ஒன்று இல்ல அம்லு” என எழ முயற்சி செய்தவன் முடியாமல் வலியில் “அய்யோ” என்று முனக

“வேண்டாம்...வேண்டாம் ....எழுந்தரிகாதிங்க என்றவள் ரொம்ப வலிக்குதா” என கேட்க

அவனோ அவளையே பார்க்க

அந்த பார்வையின் வேதனை தாங்காமல் அமர்ந்திருந்தவள் எழுந்து அவன் அருகில் சென்று அவன் நெற்றியில் அழுத்தமான ஒரு முத்ததை பதித்தவள்...பின்னர் கட்டு போட்டிருந்த இடத்தில் எல்லாம் அவள் இதழை பதித்தவள் மெல்ல நிமிர்ந்து “இப்போ என் அத்தானுக்கு வலி தெரியாதாம்” என சிறுகுழந்தை போல சொல்லி சிரிக்க

அந்த சிரிப்பில் தன்னை தொலைத்தவன் “அம்லு இங்க வா” என அவளை கிட்ட அழைத்தவன்.... அவள் அருகில் வர “என் மேல இன்னும் கோபமா” என கேட்கும்போதே அவன் குரலில் நடுக்கம் வர

“இல்லை அத்தான்.......அந்த பேச்சு எல்லாம் இப்போ எதுக்கு....முதல்ல நீங்க சரி ஆகணும்......ரொம்ப வலிக்குதா அத்தான்” என் அவனை போலவே அவளும் கேட்க

“நீ கொடுத்த மருந்துல வலி எங்க போச்சுனே தெரியலை அம்லு குட்டி என காதலாக சொன்னவன் மறுபடியும் அந்த மருந்ததை கொடுக்கிரியா” என குரலில் ஏக்கத்தோடு கேட்க

அவளோ சொல்லி முடிக்குமுன் அவன் இதழில் முத்தம் பதித்தவள் சில நிமிடங்களுக்கு பின் விடுவித்தவள் “போதும் அத்தான் ...ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது “என சொல்ல அவனோ சிரித்து கொண்டே அவள் கைகளை எடுத்து தன நெஞ்சில் வைத்து கொண்டு தடவி கொண்டே இருந்தவன் “இப்போ நான் எவ்ளோ சந்தோசமாக இருக்கேன் தெரியுமா” என சொன்னவன்

“என்னடா நாங்க உள்ள வரலாமா என கேட்டுகொண்டே மற்ற மூவரும் உள்ளே வந்தவர்கள் அவர்களின் நிலையை பார்த்து நாதன் டேய் போதுண்டா.......இது ஆஸ்பத்திரி .........உங்க ஓவர் ரொமான்ஸ கொஞ்சம் நிறுத்திக்குங்க என கிண்டலாக சொல்லி சிரித்தவர்கள்

அவனது முகத்தை பார்த்தே அவன் மனநிலை அறிந்து கொண்ட ராம் ...”ஓகே தேவா........இனி எங்க வேலை முடிஞ்சது நாங்க கிளம்பறோம்” என்றான்.

“என்ன ராம் அதுக்குள்ள கிளம்பறேன்னு சொல்ற என ரோஜா கேட்க



“ம்ம்ம்...இன்னும் கொஞ்ச நேரம் நாங்க இங்க இருந்தா உன் அத்தான் ஒரு டைலாக் சொல்லுவான் ...அதுக்குள்ள நாங்க கிளம்பறது நல்லது இல்லயா” என அவன் கிண்டலாக சொன்னான்.

தேவாவோ” நீ இன்னும் கிளம்பலையா” என வேகமாக கேட்க

நாதனோ “பாரு சொல்லிட்டான் நண்பேண்டா” என முகத்தை சோகமாக வைத்து கொண்டு சொன்னவன் எல்லா பிரிண்ட்சும் இப்டிதானா.......என்ன பாஸ் நீங்க எப்படி” என ராமை பார்த்து கேட்க

அவனோ ரதியை பார்க்க

“பாஸ் அதுக்கு தேவா எவ்ளவோ பரவாயில்லை” என ஒரு கும்பிடு போட்டு சொல்ல அனைவரும் மனம் விட்டு சிரித்தனர்.

அதன் பின்னர் ஜெயந்தி காவேரி அம்மாவிற்கு உண்மைய சொல்ல அவர்களும் தேவாவை வந்து பார்த்துவிட்டு சென்றனர்.
8

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக வந்த ரோஜாவின் பெற்றோர்களும் வந்த பின் விஷயம் கேள்விபட்டு வந்து பார்த்துவிட்டு தங்களிடம் சொல்லாததற்கு திட்டியும் சென்றனர்.ஆனால் ரோஜா தேவா பிரிந்து இருந்தது அவர்களுக்கு தெரியாது.அனைவரிடம் சின்ன ஆக்சிடென்ட் என்றே சொல்லி இருந்தனர்.

கைகளில் கட்டுடன் திருமணதிற்கு முதல் நாள் தேவா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தான்.

திருமணத்தை தள்ளி போடலாம் என சொல்ல தேவா மறுத்துவிட்டான்.”என் அம்லு என் கூட கூட இருக்கும்போது நான் எப்போதும் நல்லாத்தான் இருப்பேன்......சீக்கிரம் எனக்கு சரியாகிடும்” என சொல்ல ரோஜாவும் அதுதான் சரி என சொல்ல அனைவரும் ஒத்துகொண்டனர்.

திருமணத்திற்கு முதல் நாள் இரவு வரவேற்ப்பிற்கு அனைவரும் கிளம்பி கொண்டு இருக்க ரோஜாவோ அங்கும் இங்கும் ஓடி வேலை செய்து கொண்டு இருந்தாள்.பார்வதியும் உடன் இருந்ததால் அவளை மிரட்டி வேலை வாங்கி கொண்டு இருந்தாள்.

“பின்லேடி எனக்கு அம்மாவா நீ பிறந்ததால தப்பிச்சுட்ட ...இல்லை இந்நேரம் உன்னை” என பார்வதியிடம் அவள் வம்பு பண்ணி கொண்டு இருக்க

அங்கு வந்த ஜெயந்தி “என்ன ரோஜா இது......இன்னும் சின்ன குழந்தை மாதிரி உங்க அம்மாவிடம் சண்டை போட்டுட்டு இருக்க” என கேட்க

உடனே பார்வதி “நல்லா சொல்லுங்க அக்கா ......கல்யாண வீட்ல இப்படி போட்டது போட்டபடி இருந்தா நல்லவா இருக்கு...இன்னும் இவ மருதாணி வைக்கலை......அவளுக்கு ரொம்ப பிடிக்கும்னு நானே வீட்ல இருந்து அரைச்சு எடுத்திட்டு வந்தேன் ...எப்போ வைக்கிறது ஏழு மணிக்கு மண்டபத்தில இருக்கணும்”......என அவர் புலம்பி கொண்டு இருக்க

“அதெல்லாம் எனக்கு தெரியும்...... ஆமா அது என்ன கழுத்துல புது நெக்லஸ்....நான் பார்த்ததே இல்லை.......உண்மைய சொல்லு அப்பாதான வாங்கி கொடுத்தார் என்றவள் ....... பின்னர் எங்க அந்த எம்ரால்டு இன்னும் காணோம்” என பார்வதியை பார்த்துகொண்டே அவள் பாட்டியை தேட


“ஏண்டி நானே கல்யாணமாகி இருபத்தஞ்சு வருசத்துல இப்பதான் அந்த அம்மா இல்லாம ஒரு இடத்துக்கு வந்து இருக்கேன் உனக்கு அது பொறுக்கலையா... நாளைக்கு அது வந்திடும்.......இப்போ எதுக்கு அவங்க ...நீ ஏதும் செய்யவேண்டாம் ....இப்படியே படுத்துட்டு டிவி பாரு” என்றார்.
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
“ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்” என அவள் ஒற்றை விரலை நீட்டி சொல்ல

அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

இதை எல்லாம் மாடியில் இருந்து பார்த்து சிரித்து கொண்டிருந்த தேவா முதன் முதலில் ரோஜா தன்னிடம் வேலைக்கு வந்து சேர்ந்த போது இருந்த துள்ளல் இப்போது அவளிடம் இருந்ததை உணர்ந்தான்.

அப்படி என்றாள் இதுவரை அவள் சந்தோசமாக இருந்தது போல் நடிச்சுட்டு இருந்தாளா ??????.இப்போதுதான் உண்மையான ரோஜா மறுபடியும் வந்து இருக்கிறாள் என்று நினைத்தவன் தன் செயலால் அவள் எந்த அளவு பாதிக்க பட்டிருக்கிறாள் என உணர்ந்த போது அவன் மனம் மிகவும் வலித்தது.

அப்போது மேலே வந்த ரோஜா அவன் முகம் வாடி இருப்பதை கண்டதும் அருகில் வந்தவள் “என்ன அத்தான் ஏதாவது வேணுமா” என்று கேட்டாள்.

அவளையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தவன் “அம்லு என்னை உனக்கு பிடிச்சு இருக்கிறது தானே” என கேட்டான்.

அய்யோ இதை “எத்தனை முறைதான் கேட்பிங்க என சலித்து கொண்டவள் இப்போ எதுக்கு தேவதாஸ் மாதிரி சோகமா வசனம் பேசிட்டு இருக்கீங்க ...உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க” என கேட்டாள்.

“இல்லை அம்லு நீ என்கிட்டே எந்த காரணமும் கேட்கலை......அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அதான்” என்றான்.

அவனின் நிலை புரிய அவனை அழைத்து கொண்டு அவர்களது அறைக்குள் சென்றவள் ...”இப்போது உங்க பிரச்சனை என்ன ராகன்”.......என்றாள்.

“இல்ல ரோஜா இதற்கு முன்னாடி நீ சண்டை போட்டு இருந்த......அப்புறம் சமாதானம் ஆகிட்டோம்......அப்போ உன்கிட்ட கொஞ்சம் மாற்றம் தெரிஞ்சுது......நீமாறிட்டேன்னு நினைச்சேன்....ஆனா மறுபடியும் சண்டை வந்திடுச்சு.....இப்பவும் சண்டை போட்டு சேர்ந்து இருக்கோம்...இப்பவும் உன்கிட்ட மாற்றம்......அதும் நான் பழைய ரோஜாவை பார்கிறேன்...அந்த அளவு நீ உற்சாகமா இருக்க....இதுவும் எனக்கு நிலைச்சு இருக்குமா அதான்” என அவன் தனது பயத்தை சொல்ல

“அத்தான் இப்போ நீங்க என்ன நினைக்கிரீங்கனு எனக்கு தெரியலை......எனக்கு இதுவரை இருந்த குழப்பம் எல்லாம் இப்போ தீர்ந்திடுச்சு.......தாத்தாவோட இழப்பு நம்மால் ஈடு செய்ய முடியாதுதான்......ஆனா நான் வாணி கேஸ்ல ஜெயித்து வெளியே வந்தப்ப அவங்க அம்மா என் கால் விழுந்து என் குடும்பத்துக்கு ஒரு விமோசனம் உங்களால எங்களுக்கு கிடச்சுது....உங்களை பெத்தவங்க ரொம்ப நல்ல இருக்கணும்னு சொன்னாங்க பாருங்க அங்க நான் என் தாத்தாவை நினச்சேன்.அவர் இதை தானே என்கிட்டே எதிர்பார்த்தார்.அப்பவே எனக்கு மனசு நிறைவாகிடுச்சு...மேலும் jvயும் அன்னைக்கு அதான் சொன்னாக......இறந்தவங்கல நினச்சு வாழற வாழக்கையை வருத்திக்காதேனு........ பல பேர் எனக்கு வாழ்த்து சொல்ல என் மனசு உங்க ஒரு வார்த்தைகாக ஏங்கிட்டு இருந்தது அப்போதான் எனக்கே புரிஞ்சது......... என்னை அறியாமையே நீங்க எனக்குள்ள முழுசா வந்திட்டீங்க அத்தான்.........நீங்க இல்லையனா எனக்கு இந்த வெற்றி இல்லை ......ஏன் இந்த ரோஜாவே இல்லை......அவசரப்பட்டு முடிவு எடுத்து நானும் குழம்பி மத்தவங்களையும் குழப்பிகிட்டு இருந்ததது எனக்கு புரிஞ்சுது ..........அப்போ கொஞ்சம் தெளிவானேன்.

அப்புறம் நீங்க என்னை பரிதாபபட்டு தான் கல்யாணம் செஞ்சிகிட்டேங்கனு நினைச்சுட்டு இருந்தேன்” என அவள் சொல்லி முடிக்குமுன்னே

“சத்தியமா இல்லை அம்லு......உண்மையா சொல்லபோனா நீ முதன் முதலா ராமின் போனில் என்கிட்ட பேசினே இல்லயா அப்பவே உன்னோட குரல் என் மனசுல பதிந்துசுடுச்சு.அப்புறம் ராம் உன்னை ஜூனியரா சேர்த்துக்க சொல்லி கேட்க என் மனசுக்குள்ள இருந்து ஒரு சின்ன ஆசை உன்னை நேர்ல பார்க்கணும்னு அதுனாலதான் சரின்னு சொன்னேன்.உனக்கே தெரியும் நான் எப்பவும் ஜூனியர் வச்சுகிறது இல்லைனு... உன்னை ஒரு முறை பார்த்திட்டு முடியாதுன்னு சொல்லி அனுப்பிடலாம் நினச்சேன்...ஆனா நம்ம முதல் சந்திப்பு இப்போ நினைக்கும்போதும்” என அவன் சொல்லி நிறுத்த

ரோஜாவிற்கு அதை நினைக்கும்போதே சிரிப்பு வர அது “என்னமோ அது டைவேர்ஸ் கேஸ்தான அத்தான்” என சிரித்து கண்ணடித்தவள்

அவனோ “ஆமா ரோஜா என்றவன் உன்னோட குறும்பு எனக்கு பிடிச்சு போக உன்னை அனுப்ப மனம் இல்லாம் சேர்த்துகிட்டேன்.ஆனா வீட்டிற்கு வந்தா எனக்குள்ளே ஒரு போராட்டம்.......ஒரு பொண்ணுக்காக உன்னோட கொள்கைய விட்டு தருகிறாயா என என் மனசாட்சி என்னை கேட்க அதுனால சில சமயம் கோபப்பட்டு உன்னை திட்டுவேன்...ஆனா உன்னை பார்க்காம என்னால இருக்க முடியலை ....கொஞ்சம் கொஞ்சமா நீ என்னை முழுசா ஆக்கிரமிச்ச ரோஜா......அன்னை இல்லம் திறப்பு விழா சமயத்துல உன்கிட்ட எங்க என் மனச சொல்லிடுவனோன்னு பயந்திட்டே இருந்தேன்.

அவள் அவனை ஒரு மாதிரி பார்க்க

“உண்மைதான் அம்லு......அப்போ எல்லாம் என்னை அறியாம உன் நினைவுதான் என்னை சுத்தி சுத்தி வந்தது....ஆனாலும் சொல்லகூடாதுன்னு என் மனசு எனக்கு தடை போட்டுச்சு......என் மனசுல இருந்த ஈகோ தான் அதற்கு காரணம்...எத்தன பேர் என்னை பார்க்க காத்து இருக்காங்க......நான் உன்கிட்ட முதல்ல காதலை சொல்றதானு ஈகோ தான்” என சொல்லி அவள் முகம் பார்க்க

அவளோ ஓரகண்ணால் அவனை முறைக்க

“அது அப்போ அம்லு......எப்போ நடுரோட்ல உன்னை தொட்டு தூக்குனனோ அப்பவே நீ என்மனசில சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திட்ட என்றவன் அப்போ எல்லாம் என் உசிரு என்கிட்ட இல்லை தெரியுமா...எப்படி துடிச்சு போனேன்” என அவன் சொல்லும்போதே அவன் உடல் சிலிர்க்க

அதுவரை அவன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தவள் அவன் தோளில் சாய்ந்து நானும் கேட்டேன் இராகன்”...அம்லு...அம்லு...என்னை பாரு அம்லுனு நீங்க கதறிட்டு வந்தது இன்னும் எனக்கு காதுல கேட்டுகிட்டே இருக்கு.......நீங்கதான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்ச உடனே எனக்கு முதல்ல தோன்றியது இந்த உணர்வுதான்.அதனாலே நான் அமைதியா இருந்தேன்...இல்லை கண்டிப்பா நம்ம கல்யாணம் நடந்து இருக்காது’ என அவள் சொல்ல

“ரோஜா “என அதிர்ந்து தேவா அவள் முகம் பார்க்க

“ஆமா ராகன்......அதனாலதான் நீங்க என்கிட்டே அடிகடி நான் உன்னை விரும்பி திருமணம் செய்துகிட்டேன் சொல்லும்போது எல்லாம் நான் அமைதியாகிட்டேன்.ஆனா நீங்க அன்னைக்கு பிராயசித்தம்னு சொன்னீங்க பாருங்க அதான்” என அவள் சொல்லும்போதே கண்ணீர் துளி அவன் மேல் விழ

“அய்யோ அம்லு என்னை மன்னிச்சுடுடா.....நான் என்னை எப்படி உன்கிட்ட நிருபிக்கிரதுன்னு தெரியாம பதட்டத்துல வார்த்தையை விட்டுட்டேன்.....அதான்” என அவன் சொல்ல

அவள் உடனே “போதும் அத்தான் ....இனி இதை பத்தி பேசவேண்டாம்....... நம்ம இரண்டு பேரும் மனசுக்குள்ள ஒரே எண்ணத்தை வச்சுகிட்டு வெளியே வேறுமாதிரி நடிச்சுட்டு இருந்திருகோம்........திருமணத்திற்கு முன்னாடி நீங்க....திருமணத்திற்கு பின்னாடி நான்........இப்போ பேசியது போல மனசவிட்டு அப்போ பேசி இருந்தா இத்தனை பிரச்சனை வந்தே இருக்காது”........என சொல்ல

“அதுவும் சரிதான் அம்லு”......என அவன் தலை அசைக்க

“ எல்லாம் இப்போ சொல்லுங்க மிரட்டுவது போல் சொன்னவள் ........முதல்ல இப்போ நம்ம கிளம்பனும்......நான் ரதி ரெடி ஆகிட்டாளான்னு பார்த்திட்டு வந்திடறேன்” என சொல்லி அவள் நகர

ஒரு கையில் அவளை பிடித்து அவன் இழுக்க அவள் அவன் மேல் விழ சமாளிக்க முடியாமல் அப்படியே சாய்ந்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமான முத்தத்தை பதிக்க அவளோ என்ன அத்தான் இது” என சிணுங்கி கொண்டே அவனிடம் இருந்து விலக முயல

“அவனோ ஹே கொஞ்சம் பொறுடி...எவ்ளோ நாள் ஆச்சு இந்த கண்ணுல முத்தம் கொடுத்து என சரசமாக சொல்லிகொண்டே காது, மூக்கு என அவன் கீழே வர அய்யோ என்ன அத்தான் இது........விடுங்க நேரமாச்சு” என்றவள் அவன் கன்னத்தை மெதுவாக கடிக்க அவனோ ஏய் என அலற அந்த இடைவெளியில் அவனிடம் இருந்து தப்பி ஓடினாள் ரோஜா.

வரவேற்ப்பில் அனைவரும் நிற்க தேவா மட்டும் வெகுநேரம் நிற்க முடியாததால் அமர்ந்திருந்தான்.

எல்லா வேலைகளையும் அனைவரும் இழுத்து போட்டுகொண்டு செய்தனர்.விடியற்காலை ஐந்து மணிக்கு மூகூர்த்தம் என்பதால் அனைவரும் சீக்கிரம் படுக்க சென்றனர்.

எல்லாம் எடுத்து வைத்துவிட்டு ஜெயந்தி படுக்க நினைத்த போது அறைகதவு தட்டப்பட்டது.திறந்தவர் எதிரில் ரோஜா நின்று கொண்டு இருந்தாள்.

ரோஜா என்றவர் “என்னமா என்ன வேணும்” என பதறி போய் கேட்க

“உள்ளே வரலாமா ஆன்ட்டி” என்றாள்.

“என்னடா கேள்வி இது என சொல்லிகொண்டே அவளை உள்ளே இழுத்து சென்றவர் வந்து உட்கார்....இந் நேரத்துல உன்னை பார்த்ததும் கொஞ்சம் பயந்திட்டேன் அதான்” என அவர் உண்மை சொல்ல

“அது சரிதான் ஆன்ட்டி ......அன்னைக்கு அப்படி பேசிட்டு இன்னைக்கு இப்படி வந்து நிற்காராலேன்னு தான கேட்கிறிங்க” என அவள் சொல்ல

“இல்லை ரோஜா அப்படி எல்லாம் இல்லை....நீ விளையாட்டுத்தனமா இருப்பியா....அதுனால புத்திமதி சொல்லவந்தேன்...உன்னோட பதிலை பார்த்ததும் எனக்கே பெருமையா இருந்தது....இந்த காலத்து பெண்கள் பேச்சுகள், செயல்கள் விளையாட்டு தனமாக இருந்தாலும் பொறுப்பும்,தன்மான உணர்வும் அதிகமாகவே இருக்கு...எனக்கு பெருமையாக இருந்தது ...அதனால் தான் நான் மறுபடியும் உனக்கு எதுவும் சொல்லவில்லை...நீயாக புரிந்து சீக்கிரம் வந்திருவேணு நினச்சேன்” என்றார்.

“உண்மைதான் ஆன்ட்டி......சில பேருக்கு சொன்னால் புரியும்....நான் எப்போது பட்டு தெரிந்து கொள்ளும் ரகம் அதான்” என அவள் சற்று வருத்தமாக சொல்ல

அவரோ “அதெல்லாம் முடிந்து போன கதை....நீ இப்போ தேவாவை புரிந்து கொண்டாய் தானே.......இனி இது போல்” என அவர் தொடங்குமுன்

“எந்த காலத்திலும் வராது ஆன்ட்டி....உங்கள் பிள்ளை என்னை விட்டாலும் நான் விடமாட்டேன்.....நான் இப்போ எதுக்கு வந்தனா.....நீங்க ஆன்லைன்ல எழுதறிங்க இல்லயா .....அதை நிறுத்தாதிங்க...எழுதுங்க.......தீர்ப்பு வந்த அன்னைக்கு என் மனசு ரொம்ப குழப்பமா இருந்துச்சு......அப்போ உங்க வெப்சைட்க்குதான் போனேன்.....திருமணமான பெண் புகுந்த வீட்டில் அனைவரையும் புரிந்து கொள்வது எப்படின்னு எழுதி இருக்கீங்க இல்லயா அதை படிச்சதும் என்னோட பொறுப்பு என்ன அப்டின்னு எனக்கு புரிஞ்சுது.....என்னை மாதிரி எத்தனயோ பேர் வெளியே சொல்ல முடியாம தவிச்சுட்டு இருக்கும்போது உங்க ஆர்டிகல்ஸ் ரொம்பவும் உதவியா இருக்கு......அதுனால நீங்க எழுதுங்க ...அத சொல்லத்தான் வந்தேன்” என்றாள்.

“JVயோ ரோஜா குட்டி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா.....நீ இவ்ளோ பொறுப்பா பேசறது என சிரித்தவர் அதுக்கா இந்த நேரத்துல வந்த” என கேட்க

“இல்ல JV......ஒரே வேலை வேலைன்னு எல்லாரும் பிசியா இருக்காங்க...அத்தானும் போனும் கையுமா இருக்கார்...அதான் மொக்க போட ஆல் இல்லாம தவிச்சுட்டு இருந்தேன்......பார்த்தேன் லைட் எறிஞ்சுட்டு இருந்தது உள்ளே நுழைஞ்சுட்டேன்” என அவள் கிண்டலாக சொல்ல

“அதான பார்த்தேன்....என்னடா நாரதர் நாயனம் வாசிக்கிறாறேனு என்றவர் அடிபாவி இன்னைக்கு சிக்குன ஆள் நான் தானா” என அவர் அப்பாவியாக கேட்க

“அது இப்பதான் உங்களுக்கு புரியுதா என சொல்லி சிரித்தவள் ஆனா நான் சொன்ன வார்த்தைகள் உண்மை தான் JV என சொல்லிவிட்டு பலிப்பு கட்டிவிட்டு குட் நைட் “என சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.


மறுநாள் காலை அனைவரும் நேரமே கிளம்ப குளித்துவிட்டு வெளியே வந்த ரோஜா ஒரு புது புடவை அங்கு இருக்க பெட்டியை திறந்து பார்த்தவள் அவள் கடையில் பார்த்த அதே மயில் வண்ண பார்டர் போட்ட புடவை இருந்தது.
 
Top