• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று! -61 & 62

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
153
51
28
Tiruppur
அத்தியாயம்-61

சொல்லப் போனால் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன் நான். அதனால் ஆதித் என்ன சொல்றானே அதைச் செய்யனும் நான் முடிவெடுத்துட்டேன். இப்படி அவன் கூட ஆர்க்யூ செய்யறது எனக்குப் பிடிக்கலை. சிம்பிலி இந்த காண்டிராக்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் கோவை போயிட்டே இருக்கலாம்.
-மனோ.

உடையைக் கூட மாற்றவில்லை மனோ. பாவாடை தாவணியில் இடையை மறைத்துக் குத்தி இருந்த பின்னைக் கழற்றி விட்டாள். வயிறு முட்ட சாப்பிட்டிருந்தவள், ‘இந்த டிரஸ்ஸெல்லாம் போட்டுட்டு நிறைய கூட சாப்பிட முடியலை. இந்த சேரியை விட ஹாஃப் சாரியில் பின் குத்த வேண்டியது கமி. ஆனாலும் லைட்டா கூட ஃபாடி தெரியக் கூடாதுங்கறாங்க. அப்புறம் ஏதுக்கு கை கால் கழுத்து, இடுப்பு தெரியற டிரஸ்ஸைப் போடனும்? நமக்கு இவங்க டிசைனே புரியலை.’ எனப் புலம்பியபடி சோபாவில் படுத்திருந்தவளுக்கு ஆதித்தின் செய்தி மேலும் கடுப்பைக் கிளப்பியது.

சலித்தபடி அவன் கூறிய இடத்திற்குப் பார்க்கச் சென்றாள். அது வேறு எங்கும் அல்ல. இதற்கு முன்பு ரகசியப் பாதையிலிருந்து அவர்கள் வெளியே வந்த தோட்டம். அது இவள் தங்கி இருக்கும் தோட்டத்திலிருந்து மிகவும் பக்கம் என்பதால் அதைத் தேர்ந்தெடுத்திருந்தான் ஆதித். அது மட்டுமின்றி அவனைத் தவிர வேறு யாரும் அங்கு வரமாட்டார்கள்.
அறுங்கோண வடிவில் தூண்கள் நடப்பட்டு மேலே இணைக்கப்பட்டிருந்தன. அதன் கூரை முழுக்க பூக்கள் பூக்கும் கொடிகள் படர்ந்திருந்தது. அதின் கீழே சிமெண்டால் ஆன ஒரு சாய்ந்து அமரும் பென்ச் இருந்தது. இன்னும் ஆதித் வரவில்லை. அதனால் அதன் மீது சாய்ந்து அமர்ந்தாள். தோட்டத்திற்கு என்று பிரத்தேயகமாக அமைக்கப்பட்ட விளக்குகள் அந்தச் சூழலை ரம்யமாக்கிக் கொண்டிருந்தன.
அதை எல்லாம் பார்த்தாலும் ரசிக்கும் மன நிலையில் இல்லை. எப்போது என்று உறங்கலாம் என இருந்தது மனோவுக்கு. பென்ச்சில் சாய்ந்தவள் கண்களை மூடினாள்.

கண்களை மூடினாலும் எப்படி தான் நினைப்பதைச் செய்து முடிக்கலாம் என மனதில் ஓடியது. ஆனாலும் தூக்கம் அவள் இருந்த களைப்பில் லேசாக தூக்கம் கண்களைத் தழுவ ஆரம்பித்தது. நாள் முழுக்க ஆதித்தின் மாளிகையிலும், திரு விழாவிலும் அலைந்தவளுக்குத் தூக்கம் வந்து விட்டது.
விழிகளைத் திறந்து விழித்து தூக்கத்தைப் போக்க முற்பட்டாலும் பலனில்லை. அங்கு வீசிய காற்றும், குளிர்ச்சியும், அவள் உண்ட உணவு வகைகளும் அதற்கு உறுதுணையாக விளங்க பென்ஞ்சிலேயே சாய ஆரம்பித்துவிட்டாள்.
காற்றில் குளிர் ஏற ஆரம்பித்தது. போர்வையை இறுக்கிப் பிடித்தவளுக்கு போர்வை கிடைக்கவில்லை என்றதும் கண்களைத் திறந்தாள் மனோஷா.


விழித்தவள் சுற்றும் முற்றும் பார்த்து கீழே பார்க்க ஆதித்தின் ஒரு கையை இறுக்கமாகப் பிடித்திருந்தாள்.
ஆதித்தும் தன் கைப்பேசியில் எதையோ பார்த்தப்படி இருந்தான். உடனே அவனை விட்டு துள்ளி எழுந்தாள். முகத்தை அழுந்த தேய்த்தவள், “எழுப்பி இருக்கலாம்லா ஆதித்?” என்றாள்.

“ரொம்ப டயர்டா தூங்குன. அதான் எழுப்ப மனசு வரலை. அப்படியே விட்டுட்டேன்.”
முகத்தைச் சுருக்கிய மனோ, “சரி எதுக்கு வர சொன்ன?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

“மனோ” எதுவோ கூற வந்து தயங்கினாள்.

“ஆதித். என்னவானாலும் கால் செஞ்சு சொல்லிடு. எனக்கு டேரக்ட் மீட்டிங்க் நல்லதாகப் படலை. என்ன நீ டிஸ்கிரிட்டா வந்தாலும் நம்ம கவர் புளோ ஆக சான்சஸ் இருக்கு.”

“புரியுது மனோ. இனிமேல் வர மாட்டேன்.”

“அப்புறம் நாம தேவை இல்லாமல் ஆர்க்யூ செய்யற மாதிரி இருக்கு. அதெல்லாம் விட்டுட்டு நான் வந்த வேலையை மட்டும் பார்க்கப் போறேன். ஓகே?”
என்றாள்.

“ம்ம்ம்.”

“ஓகே பாய்.”

“வெயிட். இப்படி உட்காரு.” என அவள் தோள்களைப் பிடித்து அழுத்தி அமர வைத்தான்.

“என்ன ஆதித்?”
அவள் காலைப் பிடித்தான்.

“ஆதித் என்ன செய்யற?” என சட்டென்று அவள் கால்களை விலக்கினாள்.

“எவ்வளவு வீக்கம் இருக்குனு பார்க்கனும்.”

“ஆதித் அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.”

“நோ.. உன்னோட காலோட கண்டிசனைப் பார்க்கனும். பார்த்துட்டு நாளைக்கு பாரதி கூட டாக்டர்கிட்ட போய்ட்டு வா.”

“ஆதித் அதுக்கு நீ என்னை இங்கேயே வர வச்சுருக்கக் கூடாது.” அவள் குரலில் எரிச்சல் எட்டிப் பார்த்தது.

“மனோ. உனக்கு ஒரு பழக்கம் இருக்கு. பழக்கம் அப்படிங்கறதை விட குணம். உன்னால ஒரு இடத்தில் சும்மா இருக்க முடியாது. சின்ன வயசில் இருந்தே நீ அப்படித்தான். நீ ஹைப்பர் ஆக்டிவ் மாதிரி. ரொம்ப எனர்ஜியோடு எப்பவும் சுத்திட்டே இருப்ப.” என்றான்.

மனோ அவனை லேசாக ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“அது எப்படி உனக்குத்.. ஓ.. எனக்குத்தான் நினைவில்லை.. ஆமா.. நான் கொஞ்சம் ஹைப்பர்தான்.. எதாவது செஞ்சுட்டே இருக்கனும். இல்லைனா ரெஸ்ட்லெஸா ஆகிடுவேன்.”

“ம்ம்ம் இப்ப காலைக் காட்டு.”
இப்போது அவள் பாதத்தைக் காட்டினாள். அதை உற்றுப் பார்த்தவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“வீக்கம் இருக்கு மனோ. டாக்டர்கிட்ட நாளைக்குப் போகனும். வலி எப்படி இருக்கு?”
நடக்க நடக்க வலி எடுத்தாலும் பாரதியின் முன் அவள் காட்டிக் கொள்ளவில்லை. ஊராரின் முன்னும் அவள் காட்டிக் கொள்ளவில்லை. இல்லை என்றால் தேவையற்று பதில் கூற வேண்டும். வந்த இடத்தில் அதெல்லாம் எதற்கு என நினைத்துக் கொண்டாள்.

“மனோ யாராவது கேட்டால் பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டேனு சொல்லு. அப்ப கால் மடங்கிருச்சுனு சொல்லு. புரியுதா? இதை மறைக்க வேண்டியது இல்லை.”
தலையை மட்டும் ஆட்டினாள் மனோஷா.

“சரி வீட்டுக்குப் போ.”

“ம்ம்ம்..”

எழுந்து லேசாக காலை ஊன்றியபடி நடக்க ஆரம்பித்தாள். போகும் அவளை பின்னிருந்து பார்த்தான் ஆதித்.
‘அவளுடைய விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம்’ என அவன் முடிவு செய்ததைக் காற்றோடு பறக்க விட்டிருந்தான். அவளைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவள் எதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வாளோ என அவன் மனம் அடித்துக் கொண்டது. அவளை இங்கு கொண்டு வந்தது தவறோ எனக் கூட யோசித்தான். அப்படி இருக்கையிலும் விழுந்து அடிபட்டிருப்பதைக் கூட யாரிடமும் அவள் தெரிவிக்கவில்லை. அதில் கோயில் விழாவில் அவ்வளவு நேரம் நடந்து கொண்டிருந்தாள். அதிலும் அவளைப் பார்த்த சில ஆடவர்களின் பார்வை அவனுக்குப் பிடிக்கவில்லை. விழுங்கி விடுவது போல் பார்த்தனர். அவள் சென்ற பக்கம் எல்லாம் எதாவது ஒரு வகையில் ஆண்களின் பார்வை அவளைத் தழுவிச் சென்றது. அதுவும் ஆதித்தை எரிச்சலாக்கியது உண்மை. அவள் அதை அறிந்தாலும் கண்டு கொள்ளும் ரகம் இல்லை.

அவள் எப்போதும் அவள் உலகில்தான் இருக்கிறாள். ஆனால் ஆதித் தடுமாறிக் கொண்டிருக்கிறான். அவனுக்கே அவன் மனதின் போக்கு புரியவில்லை. புது அனுபவமாக இருக்கிறது. அவனுக்கு தடுமாற்றங்கள் இருக்கக் கூடாது. அவன் குடும்பத்தில் அதற்கு அனுமதி இல்லை. அனுமதி இருந்தாலும் அந்த எல்லையை அவனால் தாண்ட இயலாது. அவளைப் பார்ப்பதை இனி தவிர்க்க வேண்டும் என உறுதியாக முடிவெடுத்த ஆதித் அப்போதே கோயம்புத்தூர் சென்றான். ஆனால் அடுத்த நாள் மீண்டும் அவன் இங்கு பதறிக் கொண்டு வருவான் என்பதை அறியாமல்.
இந்த விளையாட்டில் அவன் வெறும் பொம்மை.





அத்தியாயம்-62

உதவி அப்படின்னா என்ன? ஒருத்தர் கேட்கும் போது நம்மால் முடிஞ்ச அளவு ஏதோ ஒரு வகையில் உதவுறது. அது எப்படி பட்டதாக வேணாலும் இருக்கலாம். ஆனால் எப்ப நம்மாலும் முடியாத நிலையிலும் மத்தவங்களுக்கு ஹெல்ப் செய்யறோமோ அது பேருதவி. இந்த உதவியைக் குறிக்க ஒரு பூ இருக்கு. அதுக்கு பேரு புளூ பெல்ஸ். மணி வடிவத்தில் நீல நிறத்தில் இருக்கும்.
-மனோ.

மனோஷாவைச் சுற்றி ஒரு கூட்டம் நின்றிருந்தது. விழிகளை பாதி திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் சொருக ஆரம்பித்தது. பாரதி அவள் கன்னத்தைத் தட்டிக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிலும் வட்டமாக பலரின் முகம் தெரிந்தது. மேலே குடை ராட்டினம் சுழன்று கொண்டிருந்தது. மனோஷாவின் கண்களும் சுழற்றியது. சுற்றி இருந்த அனைத்தும் தெளிவற்று மங்கித் தெரிந்தது.

“அக்கா.. அக்கா.. மனோ அக்கா.. கண்ணைத் தொறக்கா..” என்ற குரல் காதில் கடைசியாக விழ மயக்கமடைந்தாள் மனோஷா.

அடுத்த நாள் கண் விழித்தாள். தலையில் கட்டுப் போடப்பட்டிருக்க தலை விண்ணென்று வலித்தது. விழித்து கண்களை உருட்டியவளை முக மலர்ச்சியுடன் ஒரு வித நிம்மதியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அக்கா. இப்ப எப்படி இருக்கு?”
கவலையுடன் ஒலித்தது அவள் குரல். மனோவுக்கு அனைத்தும் நினைவுக்கு வந்தது.

“அந்தக் குழந்தை? எப்படி இருக்கு?” என தலை வலியுடன் பேசினாள்.

“அக்கா குழந்தைக்கு ஒன்னும் இல்லை. நாங்க உங்களை நினைச்சுதான் பயந்துட்டோம்.”

அந்தக் குழந்தைக்கு எதுவும் இல்லை என்றதும் மனோவின் முகத்தில் நிம்மதி பரவியது. எழுந்து அமர்ந்தாள்.

பத்து மணி நேரத்திற்கு முன்பு,
மனோஷாவும், பாரதியும் குடை ராட்டினத்தில் ஆடிக் கொண்டிருந்தனர். இரவு விளக்குகளின் வெளிச்சத்தில் கீழே ஒளிர்ந்து கொண்டிருந்த அனைத்தையும் பார்த்தாள். பாரதியுடன் ஒரு செல்பி எடுத்தவள் கீழே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். அப்போது ராட்டினம் கீழே இறங்க இறங்க அவள் கண்களில் ஒன்று தென்பட்டது. ஜனத்திரள் எங்கும் நிறைந்திருக்க மனோவின் கண்கள் மட்டும் ஒரு இடத்தை கூர்ந்து நோக்கியது. ராட்டினம் மேலே சென்றாலும் அவள் கண்கள் அந்த இடத்தை மட்டுமே வெறித்தது.

“அக்கா.. என்ன பார்க்கீறீங்க?”
கீழே வர வர மனோ ராட்டினத்தை நிறுத்தும்படி கத்தினாள். அதை இயக்குபவர்கள் முடியாது என சைகை காட்ட மனோ ராட்டினத்தில் இருந்து குதித்து விடுவேன் என அதன் உட்காரும் இடத்திலிருந்து நின்று வெளிப்புறத்தில் குதித்து விடுவேன் என செய்து காட்டவும் உடனே ராட்டினத்தை நிறுத்த ஆரம்பித்தனர். குடை ராட்டினம் கீழே வந்ததும் உடனே குதித்து இறங்கினாள். பாரதி அவள் செய்வது புரியாமல் அதிர்ச்சியுடன் இறங்கி ஓட ஆரம்பித்தாள்.

“அக்கா எங்க போறீங்க?. நில்லுங்க” வலது கையை நீட்டிக் கத்தியபடி பாரதி அவள் பின்னே ஓடினாலும் மனோ அவளைக் கண்டு கொள்ளாமல் வளைந்து வளைந்து ஓடினாள். குழப்பமடைந்த பாரதியும் அவளைத் தொடர்ந்தாள்.
ஒரு கடையின் பின் புறமாக நுழைந்தவள் அங்கு ஓட ஆரம்பித்தாள்.

“டே நில்லுடா.” என்று கத்திக் கொண்டே ஓடினாள். கால் மிகவும் வலித்தது. அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு ஓடினாள்.

“குழந்தையை விடறா.”
பேண்ட் ஷர்ட் அணிந்து மிகவும் நல்ல விதமாக தோற்றம் கொண்ட ஒருவன் மாஸ்க் அணிந்து கொண்டு அழுது கொண்டிருக்கும் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வேகமாக நடந்து கொண்டிருந்தான். மனோஷாவின் காலடி சத்தத்தில் திரும்பிப் பார்த்தான். அதே நேரத்தில் பூசைக்காக மைக் செட்டும் அணைக்கப்பட்டிருந்தது.
பாரதி ஓடுவதைப் பார்த்த அவளுக்கு தெரிந்த சில அவளின் பின் என்ன ஏதென்று பார்க்க வர ஆரம்பித்தனர்.

தான் மாட்டிக் கொண்டது தெரிந்ததும் இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தான் அவன். ஆனால் மனோஷா விட்ட பாடில்லை. அவனை விடாது துரத்த ஆரம்பித்தாள்.
பாரதி அவளுக்குப் பின்னர் சிலரும் தொடர ஆரம்பித்தனர்.

“இது சங்கீதா குழந்தைதானா?” என பின்னாடி இருந்த ஒருத்தர் கூறியபடி ஓடுபவனைத் துரத்த ஆரம்பித்தனர். இப்போது கடையின் சந்துக்குள் புகுந்து கூட்டத்துக்குள் ஓட ஆரம்பித்தாள் மனோஷா.
மனோஷாவும் அவளுக்கு முன்பிருக்கும் கடையில் புகுந்து வெளியே வந்தாள். அது ஒரு பாத்திரக் கடை. அதிலிருந்த பூரிக் கட்டையை எடுத்தவள் அவன் முட்டி மீது குறி பார்த்து வீசினாள். அது நேராக முட்டியில் படாமல் கணுக்காலில் பட குழந்தையுடன் தடுமாறி கீழே விழுந்தான்.

குழந்தை அவன் கையில் இருந்து நழுவி கீழே விழ அவர்களைச் சுற்றிக் கூட்டம் கூடியது. மனோ கோபமாக அவன் அருகில் வந்து கொண்டிருக்க அவன் உடனே எழுந்து நின்றான். கீழே விழுந்த குழந்தையை அருகில் இருந்த ஒருவர் தூக்கினார்.

“டேய் யார்டா நீ? உனக்கு எவ்வளவு தைரியம்? இரு போலீஸூக்கு கூப்பிடறேன்.” மனோ அவனை நெருங்கி கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.

உடனே அவன் தன் கீழே கிடந்த பூரிக் கட்டையை எடுத்து மனோவின் தலையில் பலமாகத் தாக்க மனோ தலையைப் பிடித்தப்படி சரிய ஆரம்பித்தாள். மனோ அடி வாங்குவதைப் பார்த்தபடி பாரதி அவளருகில் விரைந்து அவள் சாயும் முன்பு மடியில் அழுதபடி தாங்கிக் கொண்டாள். மனோவின் கைகள் அந்தக் குழந்தைத் திருடனை நோக்கி நீள அவன் அங்கிருந்த அனைவரையும் தள்ளி விட்டு ஓடிக் கொண்டிருந்தான்.

அங்கிருந்தவர்களுக்கு என்ன ஏதென்று புரிவதற்கு முன்பே அனைத்தும் நடந்து விட்டிருந்தது. குழந்தையை அவன் விட்டு விட்டு ஓடியதும் பாரதியுடன் வந்தவர்கள் குழந்தையை வாங்கிக் கொண்டனர். குழந்தையை வைத்திருந்தவர் கேட்டார்.

“யாரு குழந்தை இது?”

“எங்க ஊரு குழந்தை இது. அவன் குழந்தையை திருடிட்டு ஓடறதை இந்தப் பொண்ணு பார்த்திட்டு தொரத்திட்டு வந்திருக்கு.” என பதில் ஒருவர் அளித்தார். குழந்தையை வாங்கியவர்.

“அடப் பாவமே. இந்தப் பொண்ணு யாரு? உங்க ஊரு மாதிரி தெரியலை.”

“ஆமா. வடிவு அம்மா வீட்டில் புதுசா கணக்கு பார்க்க வந்திருக்க பொண்ணு.”

“ஓ. பாரேன். யாரோ ஒருத்தங்க குழந்தைக்காக இந்தப் பொண்ணு இப்படி அடிப்பட்டுக் கிடக்குது”

கூட்டத்தில் இருந்து யாரோ தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதை மனோவின் முகத்தில் தெளிக்கவும் அவள் கண்கள் திறக்கவில்லை.
அதற்குள் ஹரி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்க அவனுக்கு மனோ மயங்கிக் கிடப்பது பட அவன் நடப்பதை எல்லாம் கேட்கவில்லை.
உடனே திருவிழாவிற்கு வந்திருந்த ஆம்புலன்ஸிற்கு அழைக்க அது சில நிமிடங்களில் மனோவை ஆம்புலன்ஸில் ஏற்றினர்.

ஹரியும் பாரதியும் உடன் ஏறினர். அதில் இருந்த பாரா மெடிக்கல் நபர் மனோவை செக் செய்ய எந்த பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை.
மருத்துவமனையின் பெயரை ஹரி கூறவும் அங்கு ஆம்புலன்ஸ் விரைந்தது. அதற்குள் நடந்த விஷயம் திருவிழாவில் காட்டுத் தீயாகப் பரவியது. குழந்தையைத் திருடி தப்பித்துச் சென்றவனை அங்கு பணியில் இருந்த காவலர்கள் துரத்திப் பிடித்திருந்தனர்.

குழந்தையின் தாய் பதறி அடித்து வந்து குழந்தையை வாங்கிக் கொண்டிருந்தார். அனைவருக்கும் சேதமில்லாமல் போயிருக்க இன்னும் மயக்கமாக இருந்தது மனோஷா மட்டுமே. ஹரி எதற்கும் அனைத்து பரிசோதனைகளையும் செய்யக் கூறி இருந்தான்.

பரிசோதனைகளின் முடிவு இரவே வர எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதைப் பார்த்த போதுதான் இருவருக்கும் நிம்மதியாக இருந்தது. ஹரி அப்போதே அழைத்து ஆதித்திற்கு கூறி இருக்க அவனோ எதையும் யோசிக்காமல் தன் வீட்டிலிருந்து கிளம்பி இருந்தான். வீட்டில் இருக்கும் தன் தங்கைகளிடம் கூட எங்கே செல்கிறோம் என்று கூறவில்லை.

ஹாலில் அமர்ந்திருந்த அகல் நிலாவும், இளமதியும் தான் அழைத்தும் பதில் கூறாமல் செல்லும் அண்ணனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.