• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 04

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
எந்தன் ஜீவன் நீயடி..! - 04

மணிமாலா சொன்னதை கேட்ட பிறகு தந்தையும் கீர்த்திவாசனும், சற்று முன் பேசிக்கொண்டிருந்த விஷயம் என்னவென்று ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது.. அத்தோடு டாக்டரும் தந்தையும் அதில் அவளை சமபந்தப்படுத்தி பேச முனைந்ததற்கான விளக்கம் தான் அவளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.. அது எப்படி சாத்தியம்?

கையில் சூடான இஞ்சி டீயுடன் திரும்பி வந்த மாலா, அம்பரியை உலுக்கித்தான் நிகழ்வுக்கு கொணந்தாள்.

"டீ எடுத்துக்கோ, வெளியே கிளைமேட் சூப்பரா இருக்கிறது பார்.. என்றவள் இன்னும் அவள் ஏதோ யோசனையில் இருப்பதை கவனித்து,"அம்பரி என்னாச்சு மா? ஏன் உன் முகம் வெளுத்துப் போச்சு? என்று கரிசனத்துடன் கேட்டவாறு அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்..

ஒருவாறு தன் கண்டுபிடிப்பின் விளைவாக உண்டான திகைப்பில் இருந்து நடப்பிற்கு திரும்பிய அம்பரி.. என்ன சொல்வது என்று வேகமாக யோசித்துவிட்டு வாயில் வந்ததை சொல்லி வைத்தாள்.

"அத்தையைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டு இருந்தேன் ஆன்ட்டி. வந்து நீங்க சொன்னது போல அவங்க பையனுக்கு கல்யாணம் நடந்தால் அத்தை ரொம்ப நாள் இருப்பாங்களா ஆன்ட்டி?"என்றவளை, தன் தோளோடு அரவணைத்து," நூறு சதவீதம் அப்படி சொல்வதற்கில்லை அம்பரி. இன்னும் சில மாதங்கள் அவங்க வாழ்வாங்க என்று அங்கிள் நம்பிக்கையா சொன்னார். நானும் இது போல கேஸ் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஹார்ட் பேஷண்ட்ஸ் திருமணம் செய்துகொள்ளக் கூடாதுனு சொல்லப்பட்டவங்க இன்னைக்கு பிள்ளை பேரன் என்று வாழ்றதை பார்க்கிறேன்.. மனிதனுடைய நோய்களுக்கு பெரும்பாலும் அவனுடைய மனசுதான் முக்கிய காரணம். அதனால் உன் அத்தைக்கு மருந்து மாத்திரைகளை விட மகனை கல்யாண கோலத்தில் பார்த்தாலே எழுந்து உட்கார்ந்து விடுவாங்கனு நம்புகிறோம்.. என்று விளக்கமாக சொல்ல..

அம்பரியின் இதயம் வேகமாய் துடித்தது.. அவளுடைய அத்தை இன்னும் சில காலம் வாழ ஒர் வழி இருப்பதை அறிந்து சந்தோஷமாக உணரும்போதே.. ஆனால் அவளால் அதில் என்ன செய்துவிட முடியும்? ம்ஹூம் இங்கே இருந்து எதையும் யோசிக்க முடியாது என்று தோன்றவும்.. டீயை அருந்தியவள்.. உடனே எழுந்து கொள்ளவும், தானும் எழுந்துகொண்டு, கேள்வியாக பார்த்த மாலா,"என்ன அம்பரி? ஏன் எழுந்துட்டே ? அங்கே போய் தனியா போரடிச்சிட்டுதான் இருக்கப்போறே, பேசாமல் உட்கார் மதியம் லஞ்ச் சாப்பிட்டு அப்புறமா போகலாம்.. "என்றாள்.

"இல்லை ஆன்ட்டி, ஒரு Official work நினைவு வந்துவிட்டது. அவசியம் பார்த்தாகணும்.. அதை தள்ளிப் போட முடியாது. மழை வர்றாப்ல இருக்கு, இன்னும் கொஞ்ச நாள் இங்கே தான் இருப்பேன்... பிறகு ஒருநாள் வருகிறேன்.. Full day உங்ககூட இருக்கிறேன் சரியா? என்று இதமாகவே சொல்லிவிட்டு கிளம்ப,

மாலாவும் அதற்கு மேல் தடுக்கவில்லை.."குடை எடுத்துட்டு வர்றேன் இரு", என்றவளிடம் மறுத்துவிட்டு அம்பரி கிளம்பினாள்..

அவள் இருந்த மனநிலையில் யாரையும் பார்த்து சகஜமாக பேச முடியும் போல தோன்றவில்லை. ஆக அவள் அங்கிருந்து நேராக மாந்தோப்பை நோக்கி நடந்தாள்..அது ஊர் கோடியில் இருக்கிறது.

அம்பரிக்கு மிகவும் பிடித்தமான இடம் மாந்தோப்பு. சீசன் சமயத்தில் அவள் ஊருக்கு வந்திருந்தால் மாரியை அழைத்துக்கொண்டு வந்துவிடுவாள். மாங்காய் பறிப்பதற்கு மரத்தில் ஏறிவிடுவாள்.. இப்போது சீசன் கிடையாது.. முன்தினம் பெய்த மழையில் பாதை ஒரே சேறாக இருந்தது.. அதனால் வேகமாய் நடப்பது முடியவில்லை. கவனமாக நடந்து அவள் தோப்பை அடைந்த போது லேசாக தூறல் போட ஆரம்பித்தது.. அங்கே ஒரு பெரிய மாமரத்தின் கீழே ஒரு கல் பெஞ்சு ஒன்று போடப்பட்டிருப்பதை வியப்புடன் நோக்கிவிட்டு அங்கே சென்று அமர்ந்து சற்று ஆசுவாமானாள்... ஆனால் அவள் சிந்திக்க வந்த விஷயத்தை தொடர்ந்து சிந்திக்க முடியாது போயிற்று..

காரணம் வழியில் எதிர்ப்பட்ட சிலர் அவளை அடையாளம் கண்டு குசலம் விசாரித்தனர்.. அவர்களுக்கு பதில் சொல்ல நேர்ந்ததில் தொடர்ந்து சிந்திக்க முடியவில்லை. அத்தனை பேரும் கேட்டது எப்ப கல்யாண சாப்பாடு போடப் போகிறாய் என்கிற கேள்வியைத்தான்.. அவர்களைப் பொறுத்தவரை பெண்கள் வயதுக்கு வந்ததும் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும். அடுத்தது உடனே குழந்தையும் பெற்றுவிட வேண்டும்.. பெண்ணாக பிறந்தது அதற்காகத்தான் என்பது இவர்கள் எண்ணம்.. அவர்களை சொல்லி குற்றமில்லை. அவர்கள் வாழும் முறை அப்படி..என்று எண்ணியவளுக்கு அக்கா சுதாகரியின் நினைவில் கண்கள் கலங்கியது.

அப்பாவும் அப்படித்தானே அக்காவிற்கு சீக்கிரமே திருமணத்தை நடத்தி வைத்தார். என்னாயிற்று அக்கா சுதாகரி திருமணமான மூன்றாம் ஆண்டில் அநியாயமாக இறந்து போனாள்.. நினைக்கையில் அழுகையோடு ஆத்திரமும் எழுந்தது..

சுதாகரி பிளஸ்டூ முடித்ததும் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக சொன்னபோது அத்தையும் , அப்பாவும் சம்மதிக்கவில்லை,

"இந்த சின்ன வயதில் உனக்கு எதற்கம்மா வீட்டு பொறுப்பு எல்லாம். அதுதான் அத்தை சமைத்துக் கொடுத்து விடுகிறேன். வீடு சுத்தம் செய்ய, ராமாயி இல்லை மாரி இருக்காங்க.. அப்புறம் எதுக்குமா நீ கஷ்டப்படணும்..இந்த வயசுல உனக்கு அதெல்லாம் வேண்டாம் சுதாம்மா. படிப்பு பெண்ணுக்கு ரொம்ப அவசியம். மாமா போனப்புறம் உன் அப்பா மட்டும் இல்லைன்னா நான் சமாளிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது சுதாம்மா. அதனால் நீ மேலே படி.. உனக்கு வீட்டு வேலை எல்லாம் அத்தை நீ கல்லூரி லீவில் வருகிறப்போ சொல்லி தர்றேன் சுதாம்மா" என்று எடுத்துச் சொன்ன பிறகும்.

சுதாகரியோ எழுதப்படிக்க தெரியுமளவிற்கு படித்திருக்கிறேன்.
அது போதாதா என்று மேலே படிக்க ஒத்துக்கொள்ளவில்லை.. அதற்காக அத்தை அவளிடம் வீட்டுப் பொறுப்பை கொடுத்து விடவில்லை. மாறாக அந்த கிராமத்திற்குள் முடிகிற விஷயமாக தையல் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். வீட்டில் பூக்குவளையில் பூ அடுக்குவது, பூக்களை தொடுப்பது, ஓலையில் கூடை பிண்ணுவது, ஆடைகளில் பூவேலை, சமிக்கி வேலை மற்றும் வீட்டு அலங்காரம் செய்வது எல்லாமும் பழக்கினார். ஓர் ஆண்டு இப்படி கழிந்த நிலையில், ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து அவளை பெண் கேட்டு வந்தனர்.

சுதாகரியை கோவிலில் வைத்து பார்த்ததும் பையனுக்கு பிடித்துப் போய் விட்டதாக சொல்லி பெண் கேட்டு வந்திருந்தனர். நல்ல இடம் தான். ஆனால் அத்தைக்கு அத்தனை சீக்கிரத்தில் சுதாகரிக்கு திருமணம் செய்வதில் உடன்பாடு இல்லை.. ஏற்கெனவே அவரது பெண்களை சரியாக படிக்க வைக்காமல் நல்ல இடம் என்று அடுத்தடுத்து திருமணம் செய்து வைத்ததின் விளைவு அவர்கள் புகுந்த வீட்டில் ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டதை கண்கூடாக பார்த்தவர் என்பதால் தள்ளிப் போட முடிவு செய்து இன்னும் ஆறு மாதங்கள் போகட்டும் என்று சொல்லி அனுப்பிவிட்டார். அவரது நோக்கம் ஒரு பெண்ணுக்காக யாரும் அப்படி காத்திருக்க மாட்டார்கள் என்பது..

ஆனால் அவர்கள் சொன்னது போலவே ஆறு மாதங்களும் போய் மேலும் இரண்டு மாதங்களும் கழிந்த நிலையில் மறுபடியும் வந்தபோது தாம்பூலம் மாற்றும் ஏற்பாடுகளுடன் வந்திருந்தனர். மூர்த்திக்கும் நல்ல இடம், மாப்பிள்ளை படித்தவன், சொந்தமாக கொடைக்கானலில் எஸ்டேட், பழத் தோட்டம், என்று தொழில்கள், நல்ல வசதியும் இருக்கிறது, எல்லாவற்றையும்விட அவர்கள் இரண்டாம் தடவையாக அவளுக்காக வந்திருக்கிறார்கள் என்பதால் மகள் சந்தோஷமாக இருப்பாள் என்று தோன்றியது.

இருப்பினும் ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டார் வந்து போனபிறகு, அக்காவும் தம்பியுமாக சுதாகரிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே திருமணம் செய்வது என்று பேசி முடிவு செய்திருந்தார்கள். இப்போது அந்த முடிவை எப்படி மீறுவது என்று சின்ன தயக்கம் உண்டானது.. ஆகவே வாழப் போகிறவள் சுதாகரி தான். அவளுக்கும் விருப்பமில்லை என்றால் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று நினைத்தார்.. அதனால் வளர்த்த அக்காவிடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டார் மூர்த்தி .

சுதாகரிக்கு மாப்பிள்ளை பத்மநாபனை பார்த்ததுமே பிடித்துப் போயிற்று.. அதனால் அத்தை அவளிடம் அபிப்பிராயம் கேட்டதும் சம்மதம் தெரிவித்தாள்.

"அப்பாவுக்காக அல்லது வந்த முதல் சம்பந்தம் என்றோ நீ சம்மதிக்கவில்லை தானே சுதாம்மா என்று வள்ளி வேறு வேறு விதமாக கேட்டுப்பார்த்தார்.. அவள் தெளிவாக அப்படி இல்லை என்றதோடு பையனைப் பிடித்திருப்பதையும் தெரிவிக்க.. அதற்கு மேல் அவர் தடுக்கவில்லை. அடுத்து வந்த தை மாதத்தில் எந்த குறையுமின்றி நல்லபடியாகவே திருமணத்தை நடத்தி வைத்தார்.

அந்த ஆண்டு அம்பரி பிளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். ஆகவே மேற்கொண்டு சென்னை கல்லூரியில் படிக்க வேண்டும் என்று அத்தையிடம் சொல்லி தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டாள். சுதாகரி கணவன் வீடு சென்ற பிறகு சகோதரிகள் அவ்வப்போது போனில் பேசிக் கொண்டனர். தலை தீபாவளிக்கு மாப்பிள்ளையுடன் சுதாகரி தாய்வீடு வந்தாள். மறக்க முடியாத தீபாவளியாக அது அமைந்தது. அடுத்த ஆண்டும் மகிழ்வாகவே கழிந்தது.. மூன்றாம் ஆண்டு கல்யாண நாளுக்கு முன் பொங்கலுக்கு வந்த சுதாகரி, மெலிந்து ஆளே ஒடுங்கித் தெரிந்தாள். ஆனந்தவள்ளி ஏதோ விசேஷம் என்று நினைத்துக் கொண்டு, மெல்ல விசாரித்தார். அப்படி ஒன்றுமில்லை என்றும் அதிக வேலை, வீட்டுப்பொறுப்பு எல்லாம் அவள்தான் பார்க்க வேண்டியிருக்கிறது என்று காரணம் சொன்னாள். அத்தை தூணுக்குற்றார். பெரிய வசதி படைத்த வீட்டில் அவளை வேலை செய்ய வைக்கிறார்களா? இரண்டு முறை போனபோது அங்கே வேலைக்கு என்று பணியாளர்கள் இருப்பதை அவர் பார்த்திருந்தார். ஆகவே சுதாகரி எதையோ மறைக்கிறாள் என்று தோன்றியது.. ஆனால் அவளிடம் கேட்டாலும் பயன் இராது என்று அப்போதைக்கு கேட்காமல் இருந்துவிட்டார். அவள் புகுந்த வீடு செல்லும்போது தேவையான சத்து மாவு கொடுத்து ஒழுங்காக சாப்பிடச் சொல்லி அனுப்பி வைத்தார்..அந்த வருடம் பரீட்சை லீவில் வந்தாள் அம்பரி.

சுதாகரியின் புகுந்த வீடு இருந்தது மலையடிவாரத்தில் உள்ள ஒரு விவசாய கிராமம். பொதுவாக கிராமத்தில் மக்கள் வெளிப்படையாக பேசுவார்கள். நாசூக்கு நாகாசு எல்லாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் வாழ்ந்த முறையை கணக்கிட்டே மற்றவர்களையும் எடை போடுவார்கள். அதுதான் சுதாகரிக்கும் நேர்ந்தது. புகுந்த வீட்டு மனிதர்கள் யாரும் குழந்தை பேறு உண்டாகாததை பெரிதாக எடுத்து பேசாதபோதும், ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் மற்ற உறவுகளும் நட்புகளும், "இன்னும் ஒன்னும் இல்லையாக்கும், அந்த சாமியார் ராசிக்கரர், இங்கன ஒரு குறி சொல்றவர் இருக்காரு, போய் கேட்டுக்கிட்டு வாங்க" என்று குழந்தை பேறு உண்டாகாததை ஆளாளுக்கு விசாரிப்பதும், கண்ட ஆலோசனை சொல்வதையும் கேட்டு, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டாள்.. சுதாகரி எப்போதும் தன் கஷ்டத்தை மனம் விட்டு சொல்லமாட்டாள்..

அன்றைக்கு அந்த பொல்லாத நாளின் போது யாரோ ஏதோ அவளை பேசிவிட்டதற்காக எதையும் யோசியாமல், குழந்தை பெறத் தகுதியில்லாததல் உயிர் வாழ விருப்பமில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாள். உடனடியாக கவனித்து மருத்துவமனைக்கு செல்வதற்குள் எல்லாம் முடிந்து போயிற்று.

அன்று காலையில் தான் இரண்டாம் ஆண்டின் முதல் செமஸ்டர் தேர்வுகள் முடிந்து அம்பரி ஊருக்கு வந்திருந்தாள்.
அவளுக்கு அன்று அக்காவின் நினைவு அதிகமாக இருந்தது.

அத்தையுடன் மாலையில் பூ தொடுக்க பழகிக் கொண்டிருந்தபோது அம்பரி, அக்காவை பார்த்து வரலாமா என்று கேட்டாள். சுதாகரிக்கு பிடித்த பலகாரம் செய்து எடுத்துக்கொண்டு இரண்டு நாள் கழித்து போய் வரலாம் என்று அவரும் பதில் சொல்லிக்கொண்டு இருந்த போது..

"ஐயோ சுதா" என்ற தந்தையின் அலறல் கேட்டு இருவரும் கூடத்திற்கு விரைந்தனர். அங்கே நித்யமூர்த்தி "ஐயோ கண்ணம்மா இப்படி அல்பாயுசுல போய்டுவேன்னு தெரியாமல் போச்சே" என்று தலையில் அடித்துக்கொண்டு அழும் காட்சியில் அதிர்ந்து நின்றனர். தந்தையின் பேச்சு உணர்த்திய செய்தியை அம்பரியால் ஜீரணிக்க முடியவில்லை. இப்போது தானே பேசிக் கொண்டார்கள்.. அக்காவுக்கு திடுமென அப்படி என்ன நேர்ந்து இருக்கும்..? அவளுக்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது கண்ணில் நீர் வழிய பிரம்மை பிடித்தார் போல நின்றிருந்தாள் .

அவர்கள் எல்லோருமாக சுதாகரியின் புகுந்த வீட்டிற்கு சென்றபோது அவளது உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்தனர். தாயின் பாசம் அம்பரிக்கு கிடைக்கவில்லை. அன்னை வழி பாட்டிதான் வளர்த்தார். அவரது மறைவுக்குப்பின் அவளை பேணி காத்த அக்காவை அந்த கோலத்தில் பார்த்தபோது அம்பரி கதறி விட்டாள்..

மீண்டும் அந்த காட்சி கண்முன்னே காண்பது போன்ற பிரம்மையில் அது பொதுவெளி என்பதையும் மறந்து அம்பரி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
🖤
ei890JK18223.jpg
 

Saranya writes

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
24
12
3
Virudhunagar
இந்த எபி மிகவும் எமோஸ்னலாக இருந்தது,சுதாகரியின் நிலை வருத்தம் கொள்ள வைத்தது. இடையே பெண் திருமணம் மற்றும் குழந்தைப்பேறை பற்றிய தங்களின் சமூக கருத்து பாராட்டுதலுக்குரியது. உண்மையும் கூட, அதை சொல்லிய விதமும் அருமை. இனி அம்பரியின் முடிவு என்னவோ? ஆவலுடன் அடுத்த எபிக்காக.... வாழ்த்துகள் ஆயிஷா.👏👏
 
  • Love
Reactions: Aieshak

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
இந்த எபி மிகவும் எமோஸ்னலாக இருந்தது,சுதாகரியின் நிலை வருத்தம் கொள்ள வைத்தது. இடையே பெண் திருமணம் மற்றும் குழந்தைப்பேறை பற்றிய தங்களின் சமூக கருத்து பாராட்டுதலுக்குரியது. உண்மையும் கூட, அதை சொல்லிய விதமும் அருமை. இனி அம்பரியின் முடிவு என்னவோ? ஆவலுடன் அடுத்த எபிக்காக.... வாழ்த்துகள் ஆயிஷா.👏👏
மிக்க நன்றி சரண்யா 😊
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,761
570
113
45
Ariyalur
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
அமைதியானவர்கள் விபரிதமான முடிவுகளை யோசிக்காமல் உடனே செய்வார்கள் என்பது சுதாகரியின் மரணம் கூறுகிறது 😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧
 
  • Like
Reactions: Aieshak

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
அமைதியானவர்கள் விபரிதமான முடிவுகளை யோசிக்காமல் உடனே செய்வார்கள் என்பது சுதாகரியின் மரணம் கூறுகிறது 😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧
நன்றி மா ☺