• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 05

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
எந்தன் ஜீவன் நீயடி..! - 05

அம்பரி அறையைவிட்டு கிளம்பியதும், மாமனும் மருமகனும் , அதை குடிப்பதில் முனைந்தனர். அப்போது டாக்டரிடம் இருந்து நித்யமூர்த்தியின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது.

"என்ன டாக்டர் இப்பத்தானே வந்துட்டுப் போனீங்க, என்ன விஷயம்? என்றார் உள்ளூர எழுந்த பதற்றத்தை மறைத்து..

"மூர்த்தி, நான் வந்தப்போ நீங்க இல்லை. ஒரு முக்கியமான விஷயத்தை நர்ஸ் சொன்னாள், உங்ககிட்டே சொல்லணும்னு நினைச்சேன்.

நித்யமூர்த்தி எதிரே இருந்தவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,"அப்படியா? என்ன சொன்னாங்க? ஏதும் பயப்படும்படியாக சொன்னாங்களா ? என்றார் கவலையுடன்.

"இல்லை மூர்த்தி, நான் சொல்ல வந்தது வேற, ஆனந்தவள்ளி அம்மாவோட பெண்கள், பேத்திகள், மருமகன்கள், மகன் அப்புறம் நீங்க, எல்லோரும் போய் அழுகையோட வருத்தத்தோடு அவரவர் உணர்வுகளில் பேசினீர்கள் தானே ? அப்போதெல்லாம் அவங்ககிட்ட எந்தவித, ஒரு அசைவும் ஏற்படவில்லை. ஆனால் உங்க மகள் அம்பரி அழுகையோட,பேச ஆரம்பித்த உடனேயே உங்க அக்காவிடம் அசைவு தெரிந்ததாம், என்றவர் மேற்கொண்டு அங்கே நடந்ததை, பற்றி நர்ஸ் தெரிவித்ததையும் கூறிவிட்டு," நான் ஏற்கனவே சொன்னது தான் மூர்த்தி, அப்போது ஒரு யோசனையாக சொன்னது, இப்போது அந்தம்மா மனதும் அதைத்தான் விரும்புகிறது என்று எனக்கு தோன்றுகிறது.. நீங்க என்ன சொல்றீங்க?

"அக்காவின் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் டாக்டர். அதற்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன் டாக்டர். நான் சொன்னால் என் மகள் மறுக்க மாட்டாள். ஆனால் நான் ஏற்கனவே கீர்த்தியிடம் சொல்லிவிட்டேன். அவனுக்கு அம்பரியை கட்டிக்கிறதுல விருப்பமில்லை... என்கிறான். நான் என்ன செய்யட்டும்?

"நீங்க இனியும் தாமதிக்கிறது சரியில்லை என்று தான் சொல்வேன்.. ஆமா நான் பேசியபோதும் அவன் பிடிவாதமா மறுத்தான், அவன் மனசுல வேற யாரும் இருக்காளா? அப்படி இருந்தா, அவளையாவது கட்டி வைக்க ஏற்பாடு பண்ணுங்க.. வாரக் கணக்கு தான் மூர்த்தி.. அவன்கிட்டே சொன்னா ரொம்ப வருத்தப்படுவான்னு சொல்லலை.. உங்க பொண்ணு அப்பவே அழ ஆரம்பிச்சுட்டா.. இப்ப வேற வழி இல்லை போல.. உண்மைய சொல்லி, அவனை சம்மதிக்க வைங்க.. நான் மதியம் வந்து பார்க்கிறேன்.. "என்று தொடர்பை துண்டித்தார்..

"மாமா டாக்டர் என்ன சொல்லியிருப்பார் என்று எனக்கு தெரியும்.. ஆனால் அது நடக்காது.." என்றான் கீர்த்திவாசன் இறுகிய குரலில்..

"ஏன் தம்பி? என்றார் நிதானமாக..

"அம்பரியின் தகுதிக்கு நான் கிட்டே கூட பொக முடியாது மாமா. அவளுக்கு பொருத்தமானவனாக ஒரு நல்லவனை பார்த்து திருமணம் செய்யுங்கள்... " என்றான் உறுதியான குரலில்..

"பேசி முடிச்சிட்டியா? உனக்கு உன்னோட அம்மா வேண்டாமா?? என்று நித்ய மூர்த்தி கேட்க,

"என்ன .. ... கண்களில் ஒரு வித அதிர்ச்சியுடன் என்ன இப்படி கேட்கிறீங்க, மாமா? எனக்கு கண்டிப்பா எங்க அம்மா வேணும்.. அவங்களோட கடைசி காலம் நிம்மதியாக கழியணும்.. மாமா.." என்றான்,உணர்ச்சியுடன்.

"அப்புறம் என்ன தம்பி? நாம எல்லோரும் அதைத்தான் விரும்புறோம்.. அதனால நீ கண்டிப்பா இந்த கல்யாணத்தை செஞ்சு தான் ஆகணும்.. நமக்கு அவகாசம் அதிகமில்லை. என் மகள் பலியாகிறாள் என்று ஏன் நினைக்கிறாய்? அவளுக்கும் ஒரு நாள் கல்யாணம் செய்துதானே ஆகணும்? அந்த கல்யாணம் இதுவாக இருக்கட்டுமே தம்பி? சொல்லிவிட்டு கீர்தவாசனைப் பார்த்தார். அதில் ஒரு தீர்க்கமான பார்வை இருந்ததை கீர்த்திவாசன் கவனிக்க தவறவில்லை. அம்பரியை யாருக்கோ கட்டிக் கொடுக்கிறதை விட உனக்கு கொடுக்கிறதுல எனக்கு சந்தோஷம் , நிம்மதி எல்லாம்.. " .. இப்படி அவர் சொல்லிக்கொண்டே இருக்க,

கீர்த்திவாசன குறுக்கிட்டு,"மாமா .. ப்ளீஸ்" என்றான், கெஞ்சுதலாக..

அவனது குறுக்கீட்டை பொருட்படுத்தாமல் மேலும் பேசினார்,"அத்தோடு யாரோ ஒருத்தனுக்கு நல்ல இடம் என்று நம்பி பெரியவளை, அவசரமாக கட்டிக் கொடுத்தேனே, என்னாச்சு? என் பொண்ணுங்க தைரியசாலிகள் தான்.. அதிலும் பெரியவள் ரொம்ப பொறுமைசாலி, அவள் அப்படி ஒரு காரியத்தை செய்திருப்பாள் என்று இன்னமும் என்னால் நம்பவே முடியலை.. எனக்கும் அப்போதைக்கு மகளே போனபிறகு எதை ஆராய்ந்து என்ன ஆகப்போகிறது என்று தோனுச்சு" என்றவர்,தொடர்ந்து " அது முடிந்து போன விஷயம், இப்ப பேசி ஒன்றும் பிரயோஜனம் இல்லை.. இங்கே பார் கீர்த்தி, எனக்கு உங்க அம்மா உயிர்தான் முக்கியம். அதோடு விளையாட நான் தயாராக இல்லை" என்று நித்யமூர்த்தி,மேலும் பேசுமுன்,

"மாமா, நீங்க சொல்றது எல்லாம் சரிதான். நான் கண்டிப்பா அதை ஆமோதிக்கிறேன். எனக்கு உங்க மனசும் புரியுது. கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. என்னோட கடந்த காலம்,.....அவன் வாக்கியத்தை முடிக்காமல் எங்கோ பார்வையை மாற்றி, நான் எப்படி இருந்தேன் என்று, உங்களுக்கு தெரியும்தானே? ,அதை நினைச்சு பார்த்துட்டு அப்புறமாக உங்க பெண்ணை எனக்கு கட்டித் தருவது பற்றி யோசிங்க மாமா" என்றான்,ஏதோ ஓர் அழுத்தமான அர்த்தத்துடன்.

சிலகணங்கள் மௌனமாக அவனை ஏறிட்டுப் பார்த்தார்.

அதன் பின்," தம்பி, ஒரு அப்பாவா என் மகளோட வாழ்க்கை பற்றி இதெல்லாம் யோசிக்காமலா இருப்பேன்? நீ சொன்னது போல அது உன் கடந்த காலம். இப்போ நீ எப்படி இருக்கங்கிறது தான் எனக்கு முக்கியம்.உன்னால இன்னைக்கு எத்தனை பேர் இந்த கிராமத்துல பயனடைஞ்சு இருக்காங்க,இனிமேலும் அப்படித்தான். பட்டுத் திருந்தினவன், திரும்ப அதே தப்பை செய்ய மாட்டான்னு சொல்வாங்க. அந்த வார்த்தையை நா உங்க மேல வைச்சிருக்கேன்,தம்பி.. எனக்கு உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு .. நான் இவ்வளவு பிடிவாதமா இந்த கல்யாணத்தை நடத்தணும்னு சொல்றதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. .இப்ப பேசும்போது விஷயம் சொன்னார்.. அக்காவோட வாழ்நாள் மாதக்கணக்கில் இல்லையாம்.. வாரக்கணக்கு தானாம்.. நீ உடைஞ்சு போய்டுவேனு சொல்லலைனு சொன்னார்.. என்று நித்யமூர்த்தி முடித்து, ஒரு பெரும் மூச்சொன்றை சொறிந்தார்.

அந்த வார்த்தையில் அதிர்ச்சியானவன்,கண்களை அகல விரித்து,"என்ன சொல்றீங்க மாமா? நிஜமாகவா?. என்று ஒரு அழுத்தத்தில், "கடவுளே" என்று தன்னிரு கைகளால் தலையை தாங்கி,பூமித்தாயை எட்டி உதைத்தான்.

நித்ய மூர்த்தி அருகில் வந்தார். அவன் தோளைத் தட்டி,"இதோ பார் தம்பி, நான் காரியம் சாதிக்க இதை சொல்லவில்லை..
உண்மை நிலவரம் இதுதான்.." என்று அவர் வேதனை குரலில் சொன்னதோடு, கண்களும் கலங்கிவிட,தோளில் கிடந்த துண்டால் கண்களை துடைக்கவும், கீர்த்தி, கலங்கியவனாக

"அப்பாவிற்கு பிறகு இன்றைக்கு இந்த வீடு எந்த தடங்கல் இல்லாமல் இயங்குதுன்னா அது உங்களால்தான்," நீங்களே தளர்ந்துட்டா எங்களுக்கு யார் மாமா தைரியம் சொல்வது" என்றவன்,ஆழ மூச்செடுத்து விட்டு,"சரி மாமா, இனி நான் எதுவும் சொல்லவில்லை. உங்கள் விருப்பம் போல செய்யுங்கள். ஆனால் ஒரு விஷயம் மாமா.. அம்பரியிடம் நான் பேசுகிறேன். அவள் சம்மதம் சொன்னால் இந்த கல்யாணம் நடக்கும்.." என்றவன் அதற்கு மேல் அங்கே நில்லாது மாடியில் உள்ள அவனது அறைக்கு சென்றான்..

நித்யமூர்த்திக்கு மகள் மறுக்க மாட்டாள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அதுவும் அவளது அத்தைக்காக என்றால் அவள் எதையும் செய்வாள் தான். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அவள் யாரையும் விரும்பி வைத்திருந்தால்.. என்று யோசனை உண்டாயிற்று..!
🖤
கீர்த்திவாசன் மாடியில் உள்ள அவனது அறையின் வெளித் தாழ்வாரத்தில் (பால்கனியில்) குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அம்பரியின் வாழ்வு அவனால் கெட்டு விடக்கூடாது என்று இந்த மூன்று தினங்களாக எண்ணி வந்ததற்கு மாறாக,மாமனிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டு வந்தவனுக்கு சற்று நேரம் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.. படுக்க முடியாமல், உட்கார முடியாமல் ஒருவித தவிப்பு..

மாமாவின் நோக்கம் மகளுடைய கல்யாணம் அல்ல.. அம்மாவின் ஆரோக்கியம் திரும்ப வேண்டும் என்ற ஆவல்.. ஒன்றுவிட்ட உறவான அவருக்கு மகளின் வாழ்வை விட வாழ்வளித்த சகோதரியின் உயிர் பெரிதென்று காப்பாற்ற துடிக்கிறார் எனும்போது, அவனது தவறான பக்கத்தை மறந்து ஒரு நல்வாழ்வை அமைத்துக்கொள்ள சொல்லும் தாயின் வேண்டுகோளை நிறைவேற்றுவதும் அவனது கடமை தான், அதற்காக என்றாலும்கூட அம்பரியை எப்படி மணப்பது? அதற்கு அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? ம்ம்ஹும்ம்.. ...

ஆனால், டாக்டரும், மாமாவும் அதையே வலியுறுத்தவும், அவனது முந்தைய வாழ்வு மட்டும் நன்றாக இருந்திருந்தால் இன்றைக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காதே என்று அவனுக்கு மிகுந்த வருத்தமும், விரக்தியும் உண்டாயிற்று. கூடவே இன்றைக்கு மாமா நிலையை எடுத்து சொன்னதும் அவன் அம்பரியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டான் தான். ஆனால் இப்போது அவனுள் அதற்கும் ஒரு தீர்வும் ஏற்பட்டு இருந்தது.. அதை அம்பரியிடம் சொன்னால் ஏற்றுக்கொள்வாளா ? தெரியவில்லை..

"ச்சு,அவன் பழையபடியே கெட்டு ஒழிந்து போயிருக்கலாம். மகன் இப்படித்தான் என்ற முடிவோடு விட்டிருப்பார்கள்.. திருந்த வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து, திருந்தியும் விட்டான்.. அதற்கு ஒரு உந்துதலும் அப்போது இருந்தது என்னவோ உண்மை.. ஆனால் பிறகு நினைத்துப் பார்த்தபோது தான்.. அதற்கு சாத்தியமே இல்லை என்று உணர்ந்து, இருக்கும் வரை தாய்க்கு ஒரு நல்ல பிள்ளையாக.. வாழ்ந்து அவரது மனதையேனும் குளிர வைப்போம் என்று முடிவெடுத்தான்..ஆனால் அதுவே அவனுடைய தாயை வேறுவிதமாக முடிவெடுக்க வைக்கும் என்று அவன் கொஞ்சம்கூட நினைக்கவில்லை..

உடல்நிலை மோசமாகும் அளவிற்கு அப்படி என்ன நடந்திருக்கும்?

🖤🖤🖤
 

Attachments

  • IMG-20210826-WA0011.jpg
    IMG-20210826-WA0011.jpg
    98.1 KB · Views: 80