• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 06

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
எந்தன் ஜீவன் நீயடி..! - 06

மூன்று நாட்களுக்கு முன்பு...

அன்று.. ஆனந்தவள்ளி, நித்யமூர்த்தி, கீர்த்திவாசன் மூவரும் இரவு உணவிற்கு கூடியிருந்தனர், சாப்பிட்டு முடிக்கும்வரை மூவரும் அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். சாப்பிட்டு முடிந்ததும் பணியாளர்கள் வந்து பாத்திரங்களை அகற்றி சுத்தம் செய்து விட்டு சென்றதும் நித்யமூர்த்தி தான் ஆரம்பித்தார்.

"அம்பரியிடம் கல்யாணம் என்று பேச ஆரம்பித்தாலே எரிந்து விழுகிறாள் அக்கா. காலாகாலத்தில் அதது நடக்க வேண்டியது நடக்க வேண்டாமா? இது கிராமம் வேறு, எப்போதும் யாராவது ஒருவர் அதைப் பற்றித்தான் கேட்டு வைக்கிறார்கள், வேறு சிலர் வயசுப் பொண்ணை வெளியூரில் வேலை பார்க்க விட்டுவிட்டு, பொறுப்பில்லாமல் இருப்பதாக சொல்கிறார்கள். சிலர் அவள் அங்கேயே யாரையோ கட்டிக்கொண்டு வாழ்வதாக வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள், இதை எல்லாம் எடுத்து சொல்லி புரிய வைக்கலாம் என்றால் அவள் அதுபற்றி காதுகொடுத்தே கேட்க மாட்டேங்கிறாள்.. என்று வருத்தமும் கவலையுமாக சொன்னார்.

"ஊர் என்னவோ சொல்லிட்டுப் போகட்டும் மூர்த்தி, நம் பிள்ளையை பற்றி நமக்கு தெரியும்..அதிலும் அம்பரியை பற்றி எனக்கு நல்லா தெரியும். அம்முவிடம் சொல்ற விதத்தில் சொன்னால் கேட்பாள், மூர்த்தி. நீ கவலைப்படாதே"என்றார் ஆனந்தவள்ளி.

"என் பேச்சுக்கு மதிப்பே கொடுக்க மாட்டேங்கிறாளே அக்கா. அவகிட்டே எப்படி பேசறது சொல்லுங்க? இன்னமும் அவருக்கு ஆதங்கம் தீரவில்லை.

இதில் கருத்து சொன்னால் அது அவனுக்கே ஆபத்தாக முடியும் என்று தெரியும்..ஆகவே கீர்த்திவாசன் பேசாமல் எழுந்து செல்ல தீர்மானித்தான்.. அதை கவனித்த ஆனந்தவள்ளி,

"வாசு நீ உட்கார், உன்கிட்ட கொஞ்சம் பேசணும்,என்றவர் தம்பியிடம்,"நான் அவகிட்டே பேசிக்கிறேன் மூர்த்தி. நீ மனதை போட்டு குழப்பிக்காமல் போய் பேசாமல் தூங்கு, என்று சொல்ல, அதில் சமாதானமடைந்து அவர் எழுந்து சென்றார்.

அதன் பிறகு தாயும் மகனும் சற்று நேரம் பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தனர், அப்போது, எதிர்பாராதவிதமாக ஆனந்தவள்ளி திடுமென மகனின் திருமணப் பேச்சை எடுத்தார்.

"வாசு, உனக்கு பெண் பார்த்து விட்டேன். நீ சம்மதம் சொன்னால் அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை முடித்துவிடலாம்,"என்றார்.

"என்ன அம்மா, மாமாவிடம் அம்பரியை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறேன் என்றுவிட்டு இப்போது ஏன் என்னுடைய தலையை உருட்டுகிறீர்கள்"என்று விளையாட்டாக கேட்டான் மகன்.

"இரண்டும் ஒன்றுதான் மகனே, அங்கே பெண் அப்பா பேச்சை கேட்க மாட்டேங்கிறாள், இங்கே பையன் அம்மா பேச்சை கேட்க மாட்டேங்கிறான்.. என்றார் ஒருமாதிரி குரலில்.

"ப்ளீஸ் அம்மா, வேறு ஏதாவது பேசுங்கள், எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை என்று இந்த ஒரு வருடமாக சொல்லிக்கொண்டே இருக்கிறேன், நீங்க கேட்கிறதாகவே இல்லை"என்றான் கோபத்தை அடக்கிய குரலில்..

"ஏன் வாசு? இத்தனை ஆஸ்திக்கும் நீதான் வாரிசு. உனக்கு பிறகு அது தழைக்கணும்னு நான் ஆசைப்படுறதில் என்ன தப்பு கண்ணா? என்றார் அன்னை.

சிலகணங்கள் மௌனம் காத்தவன், "தப்பில்லை அம்மா. நியாயம் தான். ஆனால்..

"ஆனால் கீனால் எதுவும் வேண்டாம், எனக்கும் தம்பிக்கும் இப்போது உங்கள் இருவரின் திருமணம் தான் ஒரே ஆசை.

"அது தெரியும் அம்மா.. என் விஷயத்தை விட்டுவிடுங்கள். ஆனால் அம்பரிக்கு நல்ல வரனாக பாருங்கள். ஜாம் ஜாமென்று திருமணத்தை நடத்திவிடலாம்"

"அதற்காக ஏன் வரனை வெளியே பார்ப்பது ? பேசாமல் நீயே அம்பரியை கட்டிக்கொள் வாசு"என்றதும், ஒருகணம் அதிர்ந்து போனான்.

"வேண்டாம் அம்மா.. என்றான் எச்சரிக்கும் குரலில்..

"என்னடா வேண்டாம் ? என் அம்முவுக்கு படிப்பு, அழகு, அறிவு எதுல குறை? நான் யாரை சொல்றேனோ அவனை கட்டிக்க தயாரா இருக்கிறாள். அப்படி ஒருத்தி இந்த காலத்தில் கிடைப்பாளா?

"அவளுக்கு எந்த குறையும் இல்லை அம்மா. எல்லாம் என்னிடம் தான் இருக்கிறது. இந்த நாலு வருடங்களை மட்டும் வைத்து நீங்க ஒரு பெண்ணின் வாழ்க்கையை என்னோடு முடிச்சு போடப் பார்க்கிறீர்கள் அம்மா. அதற்கு முன்பான என் நடத்தையை எண்ணிப் பாருங்கள்.

"மனுஷன் என்றால் தப்பு செய்வது இயல்புதான் வாசு, அதை திருத்திக்கொண்டு வாழப் பழகிக்கணும். அதைவிடுத்து செய்த தப்பை எண்ணி வருந்திக் கொண்டே இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை மகனே..

"நான் எந்த பெண்ணோடும் வாழ தகுதியானவன் இல்லை. அதிலும்
அம்பரி புத்தம் புது பூ , அவளுக்கு நான் வேண்டாம் அம்மா. வேறு ஒரு நல்லவனை பார்ப்போம்.. என்று அழுத்தமான குரலில் சொன்னவன் தொடர்ந்து, "உங்களுக்கு என்னைப் பற்றி எவ்வளவு தெரியுமோ எனக்கு தெரியாது.. பெற்ற தாயிடம் ஒரு பிள்ளை இதை சொல்லக்கூடாது. இருந்தாலும், இன்றைக்கு இந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதனால் கேட்டுக்கொள்ளுங்கள் அம்மா, உங்கள் மகன் ரொம்ப மோசமானவன் அம்மா.. குடி, சூதாட்டம், பெண்கள், கோபம் வந்தால் அடிதடி என்று ரௌடியைப் போல நடந்து கொள்வது, என்று கெட்டு சீரழிந்து அதன் பிறகு இன்றைக்கு நான் ஒரு மனுஷனாக நடமாடுகிறதே, முன்னர் நீங்க செய்த ஏதோ புண்ணியம். போதும் இப்படியே நிம்மதியாக வாழ்ந்து முடித்து விடுகிறேன் அம்மா" என்று அவன் முடித்தபோது, சில கணங்கள் ஆனந்தவள்ளி ஒன்றும் பேசவில்லை. பின் மௌனமாக எழுந்து அவரது அறைக்கு சென்றுவிட்டார்.

அம்மாவுக்கு அதிர்ச்சி என்பது புரிந்தது. கூடவே யோசித்து பார்த்து அவரது முடிவு தவறு என்று உணர்ந்து இனி அந்த பேச்சை எடுக்க மாட்டார் என்று எண்ணினான் அப்போது. ஆனால் மறுநாள், காலையில் அவர் இயல்பாக இல்லை... அவர் முகத்தில் கவலை வேதனை வலி தவிப்பு நிராசை எல்லாமும் கலவையாக தோன்றியது. வார்த்தைகளில் எதையும் காட்டிக்கொள்ளாது, ஒப்புக்காக வாய்தான் பேசிற்றே தவிர,அவரது மனம் நடப்பில் இல்லை. அவனுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அவன் இப்போது இறங்கிப் போனால் பாவம் ஒரு பெண்ணின் வாழ்க்கை அல்லவா கெட்டுப் போகும், ஆகவே தாய் பிள்ளைக்கு கசப்பு மருந்து கொடுப்பது போல, முதலில் கொஞ்சம் வேதனைப்பட்டாலும், பிறகு சரியாவது போல.. இரண்டு நாட்கள் போனால் அம்மா இயல்புக்கு வந்துவிடுவார்கள் என்று நிச்சயமாக எண்ணினான். ஆனால் திடுமென, "வாசு.."
என்றழைத்தபடி நாற்காலியில் இருந்து சரிந்து விழ இருந்தவரை, அருகில் இருந்த அவன் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.

மூர்ச்சையாகிவிட்ட தாயை கைகளில் ஏந்தியவாறு, பணியாளை ஏவி மருத்துவரை அழைத்துவர செய்தான்.
நல்லவேளையாக அந்த நேரத்தில் டாக்டர் வீட்டில் இருந்தார். அதன்பிறகு எல்லாம் அவர் பொறுப்பேற்று செய்தார். ஆனாலும் அன்னையின் நினைவு திரும்பவே இல்லை.. அவன், சகோதரிகள், மாப்பிள்ளைகள், அவர்கள் மக்கள் என்று அவரைப் போய் பார்த்தனர்.. பெண்களும் பேரப்பிள்ளைகளும் வந்ததும் எழுந்துவிடுவார் என்று எண்ணியதும் பொய்த்துவிட, அவன் தவித்து போனான். கடைசியாக அம்பரியின் வருகை, அவளது பாசம், அழுகை தான் அவரது நினைவை மீட்டது.. அவள் மட்டும் வராமல் போயிருந்தால் அம்மா ஒன்று கோமாவில் போயிருப்பார்கள், அல்லது நினைக்கவே மனம் நடுங்கியது. வெளியே ஒன்றிரண்டாக தூற ஆரம்பித்த மழையை வெறித்தவாறு நிற்கையில்.. அவனது கைப்பேசி அழகாக இசைபாடியது.. எடுத்துப் பார்த்துவிட்டு, பேசியவன் முகம் மாற, உடனே வீட்டிலிருந்து ஜீப்பில் கிளம்பினான்.
 

Attachments

  • IMG-20210827-WA0032.jpg
    IMG-20210827-WA0032.jpg
    95.7 KB · Views: 69

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️கீர்த்திவாசன் பற்றிய கவலை தான் ஆனந்தவள்ளி அம்மா வை செயலிழக்க செய்தது போல 😢😢😢😢😢😢😢
Thanks ma🎉💞