• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி...! - 09

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
எந்தன் ஜீவன் நீயடி...! - 09

கீர்த்திவாசன் பேசவேண்டும் என்று வேகமாக வந்துவிட்டான் . ஆனால் அன்றுவரை அவளுடன் அவன் சகஜமாக பேசி பழகியதே இல்லை.. அதிலும் இது அவளது எதிர்காலம் பற்றிய பேச்சு. அதில் அவள்தான் முடிவு செய்ய வேண்டும். அவனது முடிவை அவள் ஏற்கக்கூடும் என்பதில் ஒருசதவீதம் நம்பிக்கை இருந்தது. அதுகூட அவனது அம்மாவிற்காக என்பதிலும் ஐயமில்லை..

"அத்தையை பற்றித்தானே பேச வந்தீங்க? என்று அம்பரி எடுத்துக் கொடுத்தாள்..

"ஆமா, நூறு சதவீதம் இந்த பேச்சு என் அம்மாவுக்காக என்பதை நீ மனதில் கொண்டு உன் முடிவை,பதிலை சொல்லு.. வண்டியில வச்சு சொன்னதுதான். அம்மாவுக்கு என்னை திருமண கோலத்தில் பார்க்க ஆசை. அது நியாயமானதுதான்.. ஆனால் அவங்க மணப்பெண்ணாக உன்னை தேர்வு செய்ததில் எனக்கு உடன்பாடு இல்லை.. தயவுசெய்து என்னை நீ தவறாக எண்ணவேண்டாம்.. எனக்குத்தான் உன்னை திருமணம் செய்து கொள்ளும் தகுதி இல்லை.. அந்த அர்த்தத்தில் சொல்கிறேன். இப்போது டாக்டர் அங்கிள் மறுபடியும் போன் செய்து பேசினார்.. என்றவன் அதன் விபரம் தெரிவித்து பேச்சை நிறுத்தினான்.

அத்தையின் விருப்பம் நிறைவேறினால் சீக்கிரமே எழுந்து விடுவார் என்ற சிறு நம்பிக்கை அம்பரிக்கு தோன்றியிருந்தது . ஆனால் அப்படி இல்லை என்ற அவனது வாய்மொழி கேட்டவளுக்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது.. மெல்ல செருமி, சீர்செய்தபடி,"டாக்டர் மனிதர் தானே கடவுள் இல்லையே.. அத்தைக்கு வேற பெரிசா நோய் இல்லை. மனசுதான் காரணம். அதை தேற்றுவதற்கு என்ன செய்யணுமோ அதை செய்வோம்.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. நிச்சயமாக அத்தை பழையபடி பிழைத்து எழுந்துடுவாங்கனு.. மனதுக்குள் இல்லாத திடத்தை அவள் வார்த்தைகளில் கொணர்ந்து பேசப் பேச.. கீர்த்திவாசனுக்குமே அப்படி நடந்துவிட்டால் போதும் என்றிருந்தது..

"உன் நம்பிக்கை பலிக்கட்டும் அம்பரி. அதற்கு செய்யவேண்டியது கொஞ்சம் பெரிய விஷயம்.. நீ என்னை திருமணம் செய்து கொள் என்று கேட்க உரிமை இல்லை.. ஆகவே இதை ஒரு யாசகமாக கேட்கிறேன்.. என் அன்னையின் உயிருக்காக இந்த உதவியை நீ செய்வாயா?

அம்பரி யோசிக்கவில்லை. "அத்தைக்காக நான் நிச்சயமாக செய்வேன். ஆனால்.. என்று தயக்கமாக நிறுத்தினாள்..

"தயக்கம் வேண்டாம். நீ என்ன சொல்லணுமோ சொல்லு."

"கல்யாணத்திற்கு பிறகு.. வந்து.. நான்..அம்பரிக்கு அதை சொல்ல கொஞ்சம் சங்கடமாக இருந்தது.

"எனக்கு புரியுது அம்பரி. கல்யாணத்திற்கு பிறகான வாழ்வு பற்றி நீ எந்த சங்கடமும் படவேண்டாம்.
இது சகல சடங்குகளோட நடக்கிற திருமணம் தான், என்றாலும் அது நம் இருவரையும் பொறுத்தவரை உண்மையானது இல்லை. ஊருக்கும் உறவுகளுக்கும் தான் நாம் கணவன், மனைவி! என் நிழல்கூட உன்மீது விழாது! அதற்கு நான் உத்தரவாதம்.. என் வார்த்தையில் உனக்கு நம்பிக்கை ஏற்படாதுதான். அதற்கு நான் ஓர் ஏற்பாடு செய்திருக்கிறேன். இது உனக்காக என்று இல்லை.. நான் எந்த பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தாலும் அது ஒப்பந்தம் செய்ததாகத்தான் இருந்திருக்கும். அதற்காக நான் செய்தது. என் வக்கீல் நண்பனிடம்,திருமணத்திற்கு பின் பரஸ்பரம் இருவரும் எப்படி நடக்க வேண்டும் என்று எழுதி பத்திரம் ஒன்று தயார் பண்ண சொல்லியிருக்கிறேன். இருவருமே கையெழுதிப்போட்டுக் கொள்ளலாம், என்றபோது கீர்த்திவாசனின் குரலில் சுத்தமாக எந்த உணர்வும் இருக்கவில்லை..

அம்பரிக்கு, அது ஒரு நாடக திருமணம் என்பதில் மாற்று கருத்து இல்லைதான். ஆனால் பத்திரம் வரை தயார் செய்வது எல்லாம் அதிகப்படியாக தோன்றியது..
ஆகவே,"இல்லை .. பத்திரம் எல்லாம் வேண்டாம். உங்கள் வார்த்தையே போதும்.. என்றாள் அம்பரி.

வெளியே மழை நின்று தூற ஆரம்பித்திருக்க..

"அவகாசம் குறைவாக இருக்கிறது அம்பரி. நீ வேண்டாம் என்கிறாய்.. அது உன் பெருந்தன்மை.. ஆனால் நான் சொன்னபடி செய்யத்தான் போகிறேன்.
அம்மா எத்தனை காலம் இருக்கிறார்களோ அதுவரை நம் நாடகம் தொடரும். அதன் பிறகு இருவரும் சட்டரீதியாக பிரிந்து விடலாம். பிரிவு பற்றி இப்போதே ஏன் பேச வேண்டும் என்று நீ நினைக்கலாம், எதுவானாலும் தெளிவாக பேசிவிட்டால் உனக்கு நிம்மதியாக இருக்கும். இந்த ஒப்பந்த விஷயம் நம் மூவர் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளணும்.. என்றவன் பேச்சு முடிந்த அடையாளமாக எழுந்து கொள்ள..

கூடவே அம்பரியும் எழுந்தாள்..

"நீ தாமதிக்காமல் அங்கே வந்துவிடு அம்பரி", அவளது பதிலைக்கூட எதிர்பாராது வெளியேறிவிட்டான் கீர்த்திவாசன்.

கீர்த்திவாசன் சொன்னதில் எந்த பிரச்சனைக்கும் வழியில்லை. ஆனால் அவளது வேலை? அது பற்றி அவனிடம் பேசவில்லையே.. இப்போதைக்கு விட்டுவிடுவதாக இருந்தாலும், பிறகு இதே அளவு ஊதியம் கிடைக்க வாய்ப்பு இல்லை... அவளது தகுதிக்கு நல்ல வேலை கிடைக்கும் தான்.. அது எந்த அளவிற்கு பாதுகாப்பான இடமாக அமையும் என்று சொல்வதற்கு இல்லை.. ஹூம்.. இருக்கட்டும்.. அத்தையை தேற்றுவோம்.. அதுதான் இப்போது அவளது முதலும் முக்கியமுமான கடமை.. என்று எண்ணியவாறே தலையை வாரி தளர பின்னலிட்டுக் கொண்டு பெரிய வீட்டிற்குள் சென்றாள்..

அங்கே கூடத்தில், கீர்த்திவாசன் யாரிடமோ கைப்பேசியில் வெகு தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான். "இங்கே வர வேண்டாம் என்கிறேனில்லையா? ஒரு தடவை சொன்னால் உனக்கு புரியாதா?
என்று ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டிருந்தான். அந்த குரல் அதட்டவில்லை, கடிந்துகொள்ளவும் இல்லை.. ஆனால் எதிராளிக்குள் குளிர்பரவச் செய்யும்.. குரல்.

அம்பரிக்கும் கேட்கும்போது ஒருகணம் திக்கென்றுதான் இருந்தது.. அவனை கடந்து ஆனந்தவள்ளியின் அறைக்கு செல்ல முயன்றவளை.. நிற்குமாறு சைகை செய்துவிட்டு,"எனக்கு இங்கே எந்த சீனும் தேவை இல்லை பிரின்ஸி. இங்கே வந்தால் என் அம்மாவின் உடல்நலம் பாதிக்கும்.. எனக்கு அதில் சம்மதமில்லை. என் வழி வேறு. உன் வழி வேறு.. இனி நாம் சந்திக்காமல் இருப்பதே இருவருக்கும் நல்லது... ஒன் ஃபார் ஆல் குட் பை" என்று பேச்சை முடித்துக் கொண்டவன்.. "அம்மா தூங்குகிறார்கள் அம்பரி. நாம் முதலில்
சாப்பிட்டு விடலாம். நீ போய் உட்கார், நான் போய் மாமாவை அழைத்து வருகிறேன்.. என்று அலுவல் அறைக்கு சென்றான்.

"இவனோடு ஒன்றாக உணவருந்துவதா? என்று மனதுக்குள் எண்ணம் ஓடும்போதே, இனி அப்படித்தானே நடந்தாக வேண்டும்.. அதற்கான முன்னோட்டமாக இது இருக்கட்டும் என்று நினைத்தவாறு.. சாப்பாட்டு அறைக்கு சென்றாள் அம்பரி.
🖤🖤🖤

கீர்த்திவாசனின் இரண்டு சகோதரிகளின் குடும்பங்களை பற்றி பார்ப்போமா? மூத்தவள் ஈஸ்வரி, அவள் கணவன் ஜெயந்தன், அவர்களது மகள் 18வயது ராகவி, இளையவள் சங்கரி, அவளது கணவன் சுகந்தன். அவர்களின் புதல்வி 18 வயது ரஜனி,15வயது மகன் ஹேமந்த்

அனைவரும் மதுரையில் இருக்கும் மால் ஒன்றில் சுற்றி அலைந்து விட்டு, கீர்த்திவாசன் குடும்பத்திற்கு சொந்தமான விருந்தினர் பங்களாவிற்கு வந்து சேர்ந்தனர். களைப்பு தீர குளித்துவிட்டு, கொண்டு சென்றிருந்த விதவிதமான உணவு வகைகளை ஒரு கை பார்க்க ஆரம்பித்திருந்தனர். சகலைகள் இருவரும் சற்று விலகி அமர்ந்து உண்டபின் தொழில் பற்றிய பேச்சுக்களில் ஆழ்ந்து இருக்க, சகோதரிகள் இடையேயும் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.. ஆண்கள் இருவரும் தாங்கள் பேசிக் கொண்டிருந்தாலும், மனைவிகளின் பேச்சிலும் கவனத்தை வைத்திருந்தனர்.

"அக்கா, மூர்த்தி மாமா உனக்குத்தான் முதலில் அழைத்தாராம், அவுட் ஆஃப் கவரேஜ்னு வரவும் எனக்கு போட்டு விவரம் சொன்னார்..அம்மாவுக்கு விழிப்பு வந்துவிட்டதாம். நாம உடனே வீட்டுக்கு கிளம்பிடறது நல்லது, நீ என்ன சொல்றே? _சங்கரி

"எனக்கும் அப்படித்தான் தோனுது, என்ற ஈஸ்வரியின் பேச்சில் குறுக்கிட்டான் நந்தா.

"நான் வீட்டுக்கு வரவில்லை. அங்கே ஒரே போர், விளையாடக்கூட யாரும் இல்லை. வெளியே போகவும் முடியாது, நான் இங்கேயே தான் இருக்கப்போறேன்" என்று அறிவித்தான்.

"ஆம் அம்மா,நானும் தம்பிகூடவே இருந்துக்கிறேன். அந்த பட்டிக்காட்டில் என்னால் இருக்க முடியாது "என்று அறிவித்தாள் சங்கரியின் மகள்

"எங்களுக்கும் அங்கே இருக்க பிடிக்காது தான்டா.. ஆனால் பாட்டிக்கு உடம்புக்கு முடியாதபோது நாம் இப்படி கிளம்பி வந்ததே உன் கீர்த்தி மாமாவின் புண்ணியத்தில் தான். இல்லாவிட்டால் அங்கே வீட்டுக்குள் மூச்சு முட்டியிருக்கும்.. ஆனால் இப்போது அம்மா பிழைச்சு எழும்போது அங்கே நாம இருக்கிறது முக்கியம். அம்மா கேட்பாங்க, என்பது ஒரு விஷயம். அதைக்கூட தம்பி சமாளிச்சுடுவான் என்றாலும், டாக்டர் நேற்று என்கிட்ட தனியா கூப்பிட்டு, நீதான் வீட்டுக்கு மூத்த பொண்ணு, இது உன்னோட பொறுப்பு மா, கீர்த்திக்கு கல்யாணமானா, உங்க அம்மா எழுந்து உட்கார்ந்து விடுவாங்க, அதனால அதுக்கு முயற்சி செய்மா.. காலம் தாழ்த்தாமல் முடிவு செய்யுங்கனு சொல்லிட்டுப் போனார். நானும் சரின்னு தலையாட்டி வச்சேன்.. என்று ஈஸ்வரி சொல்ல..

"ஐயோ அக்கா, கீர்த்திக்கு கல்யாணம் பண்ணிட்டா, அப்புறம் நம்ம கதி? என்றாள் சங்கரி பதற்றமாக..

"ம்ம்.. நானும் அதைத்தான் நினைச்சேன். அதனால அந்த விஷயத்தை யார்கிட்டேயும் மூச்சுவிடலை.. கல்யாணம் நடக்கணும், ஆனால் பொண்ணு நமக்கு வேண்டியவளா இருக்கணும்.. அப்பத்தான் நமக்கு அடங்கி நடப்பா, அதனால அதிக வசதியில்லாமல் என் நாத்தனார் வழியில் ஒரு பொண்ணு இருக்கா, பணமில்லாமல் அவளோட கல்யாணம் தடைப்பட்டுட்டே வருதுன்னு போனதடவை போயிருந்தப்போ கேள்விப்பட்டேன். வயதுகூட கீர்த்தியை விட இரண்டு மூனு வயதுதான் குறைவாக இருக்கும்.. அதனால அவங்க வீட்டில் மறுக்க வழியில்லை என்று ஈஸ்வரி சொல்ல,

"அப்படி பார்த்தா, இவருடைய சித்தி வழியில்கூட ஒரு பொண்ணு இருக்கா, அதிக படிப்பு கிடையாது, பணம் நம்ம அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவுக்கு வசதியான குடும்பம் .. படிப்பை காரணம் காட்டி கல்யாணம் தட்டிப்போவுது அதனால உன் தம்பிக்கு இந்த பொண்ணை கட்டி வைக்கலாம்னு அத்தை சொன்னாங்க, நீ சொல்ற பொண்ணை விட, இவள் கீர்த்திக்கு பொருத்தமா இருப்பா"

"ஆஹா நல்லா இருக்கே கதை," உனக்கு சாதமான ஆளை தம்பிக்கு கட்டி வைக்கப் பார்க்கிறியா? முடியாது, நான் சொன்ன பொண்ணைத்தான் கீர்த்தி கட்டிக்கணும், என்று இருவரும் மல்லுக்கு நிற்க, அவர்களது கணவன்மார்கள்.. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

ஜெயந்தனும், சுகந்தனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். ஆயினும் அவர்களது இரு பெற்றோர்களும் கூட்டுக்குடும்பமாக வாழ்கிறவர்கள். அதனால்தான் மீனாட்சிசுந்தரம் தன் பெண்களை அங்கே மணமுடிக்க சம்மதித்தது. இப்போது அதற்கு எங்கே பங்கம் வந்துவிடுமோ என்று சகோதரர்கள் இருவருக்கும் கலக்கம் உண்டாக, அவசரமாக இருவரும் சமாதானம் செய்ய விரைந்தனர்.

"இருங்க, இருங்க.. எதுக்கு இந்த சண்டை? கட்டிக்கப் போறவன் கீரத்திதானே? என்றார் ஜெயந்தன்.

"ஆமா"

"அப்படின்னா அவன்கிட்டே தான் இதை கேட்கணும்.. யாரை கட்டிக்க சம்மதம்னு.. என்றார் சுகந்தன்.

"அதெல்லாம் முடியாது. நாங்க யாரை சொல்றோமோ அவளைத்தான் அவன் கட்டிக்கணும் என்று கோரஸ் பாட..

"இது எந்த ஊர் நியாயம்? வாழப்போறவன் அவன். அவன் சம்மதம் தான் முக்கியம். அத்தோட உங்க தம்பியைப் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். அவன் நினைக்கிறதைத்தான் செய்வான். அவன் முன்னப்போல இல்லை .. மாறிவிட்டான் தான். ஆனால் அந்த பிடிவாதம் மட்டும் அவனுக்கு இன்னும் இருக்கு.. அவன் படிச்ச படிப்புக்கு ஏன் இங்கே கிராமத்துல குப்பை கொட்டிட்டு இருக்கணும்.. பேசாமல் எல்லாத்தையும் குத்தகைக்கு விட்டுவிட்டு, மூர்த்தி சித்தப்பாக்கிட்டே பொறுப்பை, கொடுத்துவிட்டு வெளிநாட்டுல வாழலாமேனு நான்கூட எத்தனை தடவை கேட்டு பார்த்துட்டேன்.. அம்மாதான் முக்கியம், அந்த வாழக்கை இனிமே கிடையாதுன்னு முடிச்சுட்டான்.. அதான் சொல்றேன்.. நீங்க பொண்ணு போட்டோவை காட்டி கேளுங்க.. அவன் முடிவு பண்ணட்டும்..என்றார் சுகந்தன்..

அதற்குள்ளாக ஜெயந்தன் குறுக்கிட்டு, "ஒரு விஷயத்தை நல்லா முடிவு செய்ங்க, அதாவது இரண்டு பொண்ணுல ஒரு பெண்ணை அவன் கட்டிக்க சம்மதிச்சே ஆகணும்.. அது உங்க பொறுப்பு" என்றார்.

சற்று யோசித்துவிட்டு, "அப்படியே செய்திடலாம், என்ன சங்கரி" என்றாள் ஈஸ்வரி.

"எனக்கும் ஓகேதான் அக்கா.. நாம உடனே கிளம்பணும், இல்லைன்னா, வேற எவளையாவது அவனுக்கு கட்டி வைக்க மாமா ஏற்பாடு பண்ணிடப் போறாரு" என்றாள் சங்கரி பதற்றமாக..

"அட ஆமாங்க.. உடனே டிரைவருக்கு ஃபோனைப் போடுங்க.. என்று கணவருக்கு உத்தரவிட்ட, ஈஸ்வரி, " அடுத்து,"பொண்ணுகளா , சீக்கிரமாக இதை எல்லாம் அடுக்க ஹெல்ப் பண்ணுங்க, "மாரி, நீ போய் பாத்திரங்களை எல்லாம மளமளனு கழுவி எடுத்துட்டு வா" என்று மற்றவர்களையும் விரட்டினாள்.

இரு சகோதரர்களும் ஒருவரை ஒருவர் அர்த்தப் புன்னகை ஒன்றை பரிமாறிக் கொண்டனர்..

இந்த யோசனைகள் எல்லாம் அங்கே எடுபடப் போவதில்லை என்பது அவர்களின் யூகம்.. காரணம் அம்பரி வந்ததும் தான் தங்கள் மாமியாருக்கு சுயநினைவு திரும்பியதாக மைத்துனன் அழைத்து சொல்லியிருந்தான்.. ஆயினும், மனைவிமார்கள் போடும் திட்டத்தை தவறு என்று சொன்னால் வீட்டுக்குள் பூகம்பம் உண்டாகிவிடும். ஆகவே.. இருவரும் இப்படி ஒரு யுக்தியை கையாண்டனர்.. வேறு வழி ? வீட்டுப் பெரியவர்களுக்கு யார் பதில் சொல்வது?

அரைமணி நேரத்திற்குள்ளாக அந்த இடத்தை விட்டு அவர்கள் கிளம்பியிருந்தனர்.

ஆளுக்கு ஒரு தீர்மானம் போட்டாலும், கடவுள் என்ன தீர்மானிக்க இருக்கிறான் என்று யார் அறிவார்..?

🖤
 

Attachments

  • FB_IMG_1633850422605.jpg
    FB_IMG_1633850422605.jpg
    42.2 KB · Views: 25
Top