• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 10

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
எந்தன் ஜீவன் நீயடி..! - 10

ஆனந்தவள்ளி அன்று பிற்பகலில் மகனையும் மருமகளையும் அழைத்து மிகுந்த சிரமத்துடனே தான் பேசினார். அப்போது தன் விருப்பத்தை தெரிவித்து நிறைவேற்றுமாறு சொல்ல.. இருவரும் புன்னகை மாறாத முகத்துடன் சம்மதம் தெரிவித்தனர். தம்பியை அழைத்து தன் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட பிறகு, திருமண ஏற்பாட்டை தள்ளிப் போடாமல், அடுத்த முகூர்த்தத்தில் வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்! தன் விருப்பம் நிறைவேறப் போகிறது என்று நிம்மதியில் சற்று நேரத்திலேயே ஆழ்ந்த உறக்கத்தில் சயனித்துவிட்டார்.

அதன் பிறகு கீர்த்திவாசன் தன் வக்கீல் நண்பனை காணவும், நித்யமூரத்தி, கமலக்கண்ணனை சந்தித்து திருமணத்தை சற்று விரைவாகவும் அதே சமயம் எளிமையாகவும் நடத்துவது பற்றி ஆலோசனை பெறவும் கிளம்பியிருந்தனர்.

ஆனந்தவள்ளியின் அறையின் முன்பு போடப்பட்டிருந்த சோபாவில் புத்தகம் ஒன்றை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த அம்பரிக்கு அதில் ஒரு வரியை கூட வாசிக்க தோன்றவில்லை. அவளது எண்ணங்கள் யாவும் பிற்பகலில் நடந்த திருமணப் பேச்சிலும், பழைய நடப்புகளிலுமாக தான் உழன்று கொண்டிருந்தது.

கீர்த்திவாசன் பேசியது, நடந்து கொண்டது எல்லாமும் ஒரு மாறிவிட்ட மனிதனின் செயலாக தெரியத்தான் செய்கிறது.. அதே போல திருமண பேச்சிலும் அவனது கூற்று சரிதான். அத்தைக்காக என்று எத்தனை சமாதானம் செய்து கொண்டாலும், ஏனோ அவனோடு திருமணம் என்பதை மட்டும் இன்னமும் மனது ஏற்க மறுத்தது..

கீர்த்திவாசனை பற்றி அம்பரிக்கு அதிகமாக தெரியாது. விவரம் அறிந்த பிறகு, அவனது அக்காக்களின் வாய்மொழியாக கேள்விப்பட்டதும், கண்ணால் பார்த்த ஓரிரு சம்பவங்களும் மட்டும்தான். அவனுடனான பழைய நிகழ்வுகள் என்று நினைத்துப் பார்த்தால், மிக சில தருணங்கள் தவிர எதுவுமே அவளுக்கு நினைவிற்கு வரவில்லை..

நித்யமூர்த்தி, மகள்களுடன் வந்தபோது கீர்த்திவாசன் வெளிநாடு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். ஆறு மாதங்களுக்கு முன்பே கிளம்ப வேண்டியவன். ஆனால் திடுமென அவனது தந்தை மாரடைப்பில் காலமாகிவிட்டார். அப்போது வீடு, தோட்டம் துரவுகளின் நிர்வாகம், அவனது படிப்பு, என்று நிறைய விஷயங்களை முடிவு செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் ஆனந்தவள்ளி. கணவர் மீனாட்சிசுந்தரத்தின் மறைவு அம்மாளை நிலைகுலைய வைத்துவிட்டது. இரண்டும் கெட்டான் வயது மகனை வழிநடத்த வேண்டும், அவனோ வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றான். அது கணவரே அனுமதித்த விஷயம் தான். அவர் இருந்து மகன் கிளம்பியிருந்தால், அது பெரிதாக பாதித்திருக்கிறது. ஆனால்,அவன் முன்பு கடமைகள் காத்திருந்தன. பரம்பரையாக கட்டிக்காத்து பெருக்கி வந்த அத்தனை வளத்தையும் பாதுகாக்க வேண்டும், அதை அவரால் தனியாளாக நிர்வகிக்க இயலாது. அவன் உடன் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

கீர்த்திக்கு இந்த கிராமத்து வாழ்வில் நாட்டமில்லை. அத்தோடு நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். வெளிநாட்டில் ஏற்பாடுகளை பெரிய மருமகன் ஜெயந்தன் செய்துவிட்டிருந்தார். அந்த நிலையில் அவனை தடுப்பதும் அவருக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

அம்மாள் மனம் கலங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தான் நித்யமூரத்தி இரண்டு பெண் பிள்ளைகளுடன் வந்து திடுமென நிற்க,அதுவும் அவருக்கு பெரும் அதிர்ச்சிதான்.. கல்யாணமே வேண்டாம் என்றவன் இரண்டு பிள்ளைகளோடு வந்து நிற்கிறானே என்று.. அதை எல்லாம் பின்னுக்கு தள்ளியது இருந்த சூழல், தக்க சமயத்தில் தம்பி வந்ததே பெரும் ஆறுதலாகவும் பக்கபலமாக தோன்றியது.

ஆனந்தவள்ளி விளக்கம் ஏதும் தம்பியிடம் கேட்கவில்லை. அவனாக சொல்லட்டும் என்று விட்டுவிட்டார். ஆனால் நித்யமூர்த்தியும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அக்காவிற்கு துணையாக நின்று சகலமும் கையில் எடுத்துக் கொண்டார்.

வந்த புதிதில் அம்பரிக்கு ,அவனது உயரமும் ,எந்நேரமும் கடுகடுவென இருக்கும் முகமும் பார்க்க அச்சமாக இருக்கும். அதனால் அவனை ஏனோ அவளுக்கு பிடிக்காமல் போனது. அவன் சாப்பிட வரும் சமயங்களில், அங்கே அம்பரி இருந்தால்,ஒன்று அத்தையின் பின்னே ஒளிந்து கொள்வாள். அல்லது அவன் கண்மறைவாக ஓடிவிடுவாள்.

ஒன்பதாம் வகுப்பு ஆண்டு தேர்வுகள், முடிந்து விடுமுறைகள் தொடங்கியிருந்தது.. அம்பரி,வந்த இரண்டு தினங்கள் போரடித்து கிடந்து விட்டு, மாந்தோப்பிற்கு போவதாக, சொல்ல சுதாகரி, ஏதோ சொல்ல முயன்றும் அதை கேளாமல் கிளம்பிவிட்டாள். அங்கே சென்று மரத்தில் ஏறி, காய்களை பறித்துக் கொண்டு இறங்கும் போது கால் சறுக்கிவிட, கீழே விழுந்துவிட்டாள். "அம்மா" என்ற அவளது அலறலில், ஓடிவந்து அவளை தூக்கியவன் கீர்த்திவாசன். திடுமென அவனை அங்கே பார்த்ததில் அவள் உடல் மேலும் பதறியது.. அழுகையும் கூடியது..

"ஷ்..ஷ்.. அழுகையை நிறுத்து.. என்று ஒரு அதட்டல் போட்டான். கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.. ஆனால் வலியினால் விசும்பிக் கொண்டிருந்தவளை, "பெண் பிள்ளையா, லட்சணமா இல்லாமல் குரங்கு மாதிரி மரத்தில ஏறினால் இப்படித்தான் ஆகும்" என்று கடுமையான குரலில் சொன்னவன், தூக்கிப் போய் டாக்டர் வீட்டில் விட்டுவிட்டு, அவளது தந்தைக்கு தகவல் சொன்னதோடு போய்விட்டான்.

அடிபட்டவளிடம் அவன் கொஞ்சம்கூட இணக்கம் காட்டாததோடு, அதன்பின் அம்பரியின் காயம் பற்றி அவன் விசாரிக்கக்கூட இல்லை. அது அந்த வயதில் அவளுக்கு வருத்தமாக இருந்தது. சரியான சிடுமூஞ்சி, என்று மனதுக்குள் மட்டுமின்றி அக்காவிடமும் அவள் முறையிட்டாள். சுதாகரி தான் ஏதேதோ சொல்லி அவளை தேற்றி சமாதானம் செய்தாள்.

தந்தையின் மறைவு பலத்த அதிர்ச்சிதான் என்றாலும் கீர்த்திவாசனுக்கு அந்த கிராமத்தில் இருக்க கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. மாறாக அன்னையை அழைத்துக் கொண்டு வெளிநாடு போய்விட நினைத்தான். அந்த வயதில் அவனுக்கு உலகம் தெரியாது. அக்காமார்கள் இருப்பதால் அவன் அவ்வாறு திட்டம் போட்டான். ஆனால் அம்மா அது சரிவராது, நீயும் போக வேண்டாம் என்று சொல்லவும் அவனுக்கு ஆத்திரம் உண்டாயிற்று. அத்தனை காலம் பள்ளியின் விடுதிகளில் வாசம் செய்தவன், சுதந்திரமாக இருந்தவனுக்கு இங்கே மூச்சு முட்டியது. பணம் இல்லாமல் வெளிநாடு செல்ல முடியாது என்று புரிந்ததால், அன்னையின் வார்த்தையை அவனால் ஏற்கவோ தட்டவோ முடியவில்லை.. தவித்துக் கொண்டிருந்த வேளையில் நித்யமூர்த்தி வந்து பொறுப்பு ஏற்றுக்கொள்ளவும், அவனுக்கு விடுதலை கிடைத்த உணர்வுதான்.

மாதங்கள் கடந்து விட்டதால், அந்த வருட படிப்பை தொடர இயலாது என்றாலும் அக்காக்களின் வீட்டிற்கு போகிறேன் என்று கீர்த்தி அடுத்த சில மாதங்களில் கிளம்பி விட்டான்.

சுதாகரியின் திருமணத்தின் போதுதான் அடுத்து அவனை மீண்டும் பார்த்தாள். அவ்வப்போது மகனை நினைத்து அத்தை அழுவதை, வருந்துவதை கண்டிருந்ததால், அவளுக்கு அவன் மீது மிகுந்த ஆத்திரம்... கூடவே அவனது நடத்தைகள் பற்றி அக்காமார்கள் அத்தையிடம் சொல்வதை அவள் ஏதேட்சையாக கேட்க நேர்ந்தது. அதனால் அவன் முன்பு போவதை அறவே தவிர்த்துக் கொண்டாள். அந்த முறை அவன் பத்து நாட்கள் தங்கியிருந்தான். அதை அறிந்து அவளும் வீட்டோடு அடைந்து கிடந்தாள். அக்காவும் திருமணமாகிப் போய்விட்டதால் அதுவேறு அவளுக்கு வருத்தமாக இருந்தது. அந்த கணம்தான் அம்பரி அந்த முடிவை எடுத்தாள். நன்றாக படித்து நல்ல உத்தியோகத்தில் அமர வேண்டும். அதன்பிறகு இந்த ஊருக்கு வரவே கூடாது.. அதுவும் அவனை பார்க்கவே கூடாது என்று தீர்மானித்தாள். அன்றைக்குப் பிறகு அவனை அவள் இப்போது தான் பார்க்கிறாள். ஆனால் விதி, இப்படி ஒரு கோணத்தில் கொணர்ந்து நிறுத்தும் என்று யார் கண்டார்கள்??

அம்பரி ஒரு சிறு பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்த போது, அத்தையின் இரு மகள்களின் குடும்பங்களும் சலசலத்தபடி, கூடத்தின் உள்ளே நுழைவதைப் பார்த்து மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள்.

அம்பரியை அவர்கள் சுதாகரியின் திருமணத்தில் பார்த்தது தான். அதன் பிறகு வந்த போது அவள் ஊரில் இருக்கவில்லை. அப்போது ஒடிசலாக, மாநிறத்தில் இருந்தவளின், இன்றைய அவளது தோற்றம் பெரியவர்களை ஒருகணம் வியக்க வைத்தது எனலாம். சின்னவர்களுக்கு, அதெல்லாம் கவனத்தில் இருக்கவில்லை. ஒரு ஹாய்யுடன் கடந்து அவரவர் அறைகளுக்கு சென்றுவிட,

அம்பரி உரியவாறு, முறையாக நலம் விசாரித்தாள். சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தப் பார்வையை அவசரமாக பரிமாறிக்கொண்டனர்.

ஜெயந்தன்,சுகந்தன் இருவருக்கும் எப்போதுமே, அம்பரியிடம், தாயற்ற பெண் என்ற பரிவு உண்டு. அவளை தங்களின் சகோதரியாக பாவித்து பேசுவார்கள். ஆயினும் அவை எல்லாம் மனைவிகளின் முன்பாக அவ்வளவாக காட்டுவது இல்லை.

"அம்மா எப்படி இருக்கிறாங்க? நினைவு திரும்பிடுச்சுனு மாமா போன்ல சொன்னார்.. அதான் உடனே கிளம்பி வந்தோம்" என்றாள் ஈஸ்வரி.

"ஆமா அண்ணி.. நல்லா இருக்கிறாங்க..ஆனால் இப்ப தூங்கிறாங்க அதனால யாரும் தொந்தரவு பண்ணா வேண்டாம்னு நர்ஸ் சொன்னாங்க," என்றாள்.

"சரி முழிச்சதும் வந்து பார்க்கிறேன் என்ற சங்கரி, கணவனிடம் திரும்பி, "நீங்க போய் பிரஷப் ஆகிட்டு டிபன் சாப்பிடுங்க அத்தான். நாங்க பின்னாடியே வர்றோம் "என்றாள் சங்கரி.

சகோதரர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்து விட்டனர்.

"என்ன அம்பரி, எங்களை எல்லாம் நினைவு இருக்கா உனக்கு? என்றாள் சங்கரி.

"ஏன் அண்ணி ? நன்றாக இருக்கிறது என்றாள் மெலிதாக புன்னகைத்து,

"நீ என்னவோ ஐடி கம்பெனில வேலை பார்க்கிறேனு கேள்விப்பட்டேனே? எப்படி இருக்கு பெங்களூர் வாசம்? என்றாள் ஈஸ்வரி.

"செமையா இருக்கு அண்ணி, அங்கே கிளைமேட் பற்றிதான் உங்களுக்கே தெரியுமே? என்றாள்.

"ம்ம்.. தெரியும்தான்.. ஆமா எத்தனை நாள் லீவு? அதிகமாக லீவு எடுக்க முடியாதாமே?

"ஆமா அண்ணி, ஆனால் லீவே எடுக்காததால் கூடுதலாக எடுக்கலாம்"

"ஓஹோ, சரி, நீயும் வாயேன் டிபன் சாப்பிடற நேரம்தானே? இங்கே உட்கார்ந்து என்ன செய்யப்போறே? என்று சின்னவள் அழைக்க, ஒருகணம் யோசித்த அம்பரி, "சரிதான் அண்ணி, நீங்க போங்க நான் இந்த புக்கை வச்சுட்டு, நர்ஸ்கிட்டே சொல்லிவிட்டு வந்துடுறேன்" என்றாள்.

இருவரும் தங்களது அறைகளை நோக்கிச் சென்றனர். சற்று நேரத்தில் உடைகளை மாற்றிவிட்டு, சாப்பாட்டு அறைக்கு சென்றவாறே, "என்னடி இவள் இப்படி தளதளனு, கண்ணை பறிக்கிறாப்ல வந்து நிற்கிறாள்? என்றாள் ஈஸ்வரி கவலைக் குரலில்!

"ஆமாக்கா நானும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.. அந்த டாக்டர் கொடுத்த யோசனையாக இருக்கும் அக்கா, அதான் மாமா இவளை வரவழைச்சிருப்பார்னு நினைக்கிறேன்" என்றவள் தமக்கையின் காதில் ரகசியமாக குறிப்பு கொடுத்தாள் ஈஸ்வரி. டைனிங் ஹாலுக்குள் சென்று அருகருகே அமர்ந்தனர். அதுவரையிலும் அம்பரி வந்திருக்கவில்லை. அங்கிருந்தவர்கள் ஆளுக்கு ஒரு ஹெட் செட்டை மாட்டி, கைப்பேசியில் கண்ணை வைத்தபடி, வாய்க்குள் கேரட் அல்வாவும், வெங்காய பக்கோடாவையும் திணித்து கொண்டிருந்தனர்.

இவர்களைப் பார்த்ததும் ராமாயி பலகாரத்தை கொணர்ந்து வைத்து விட்டுப் போனாள்.

மௌனமாக சாப்பிட்டாலும் இரு சகோதரிகளும் கண்ணால் பேசிக் கொண்டனர்.

அம்பரி, நூலக அறையில் இருந்து , வெளி வந்தபோது, கைப்பேசி ஒலித்தது. ஏதோ வங்கியில் இருந்து விசாரித்தார்கள். அவள் பதில் செல்லிவிட்டு, நர்ஸிடம் விவரம் தெரிவித்த பிறகு தான் சாப்பாட்டு கூடம் சென்றாள். அறையை சமிபிக்கும் போது, ஈஸ்வரியின் குரல் திடுமென உரத்து ஒலித்தது.. அவள் வழக்கம் அது என்று எண்ணியவாறே அடுத்த அடியை எடுத்து வைத்தவள், அவளது பேச்சில் கீர்த்திவாசனின் பெயர் அடிபடவும் தயங்கி நின்றாள்.

"என்னடி, நாம பேசப் போற விஷயம் நல்லபடியா முடியுமா? இத்தனை நாளா கீர்த்தி வீட்டிலேயே இருந்தான். மாமாவும் கூட வெளி வேலைக்கு எங்கேயும் கிளம்பாம கிடந்தார். முக்கியமான விஷயம் பேசணும்னு நினைக்கிறப்போ, இரண்டு பேரையும் காணோம். எனக்கு என்னமோ கலக்கமா இருக்குதுடி சங்கரி.." என்றாள் ஈஸ்வரி.

"நீ எதுக்கு அக்கா பயப்படுறே? நாம பார்த்து வளர்ந்த தம்பி, நம்ம பேச்சை தட்டமாட்டான் அக்கா. அம்மாவுக்கு கொஞ்சம் குணமாகிடுச்சுல்ல.. அவன் இத்தனை நாளும் வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடந்ததே பெரிய விஷயம். அதுமட்டுமா, அவன் இஷ்டம்போல சாப்பிடாம, நல்ல பிள்ளையா வேஷம் போட்டு, அவனுக்கும் போர் அடிக்கும் தானே? அதான் வெளியே போய் அவனுக்கு பிடிச்சதை சாப்பிட்டு வருவானா இருக்கும். இந்த நாலு வருஷமா அப்படித்தானே அவன் இருக்கிறான். அம்மா, மாமாவுக்கு வேணும்னா இது தெரியாத இருக்கலாம். அப்படி கீர்த்தி நடந்துக்கிறான்" சங்கரி பேசியதை கேட்ட அம்பரிக்கு நெஞ்சு பதறிப்போயிற்று..

கடவுளே! இந்த அண்ணி என்ன சொல்கிறார்கள்? அத்தனையும் நடிப்பா? எதற்காக? அம்பரிக்கு மனது வேகமாக அடித்துக்கொண்டது..

அவள் எண்ணியதற்கு விடை போல,"நீ சொல்றதும் சரிதான் சங்கரி. அவன் ஒழுங்கா இல்லைன்னா சொத்து பூராவும் தர்மத்துக்கு போயிடுமே.. அவனுக்கு நாம ஆசைப்பட்ட மாதிரி கல்யாணத்தை மட்டும் பண்ணிட்டா, போதும்.. அவன் பழையபடி இருந்தாலும் யாரும் கண்டுக்க போறதில்லை. அப்படியே கண்டுக்கிட்டாலும் கவலையும் இல்லை.. வெளிநாட்டுல இருந்து அவன் வந்ததுக்கான காரணம் என்னவோ வேறையா இருக்கலாம்.. ஆனால் இங்கேயே தங்கினதுக்கு சொத்து தானே காரணம்? என்று சொல்லி வந்த, ஈஸ்வரி, குரலை தளைத்து கொண்டு,"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா சங்கரி, என்றாள்.

"என்னக்கா அது?"

"நம்ம மூர்த்தி மாமா தானே இங்கே எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்கிறவர். அம்மா எல்லா பொறுப்பையும் அவர்கிட்டே கொடுத்ததோட சரி. அதுக்கு பிறகு அவரா சொல்றதுதான் கணக்கு வழக்கு எல்லாம், நாமளும் வந்தோமா போனமானு இருக்கிறோம்.. எனக்கு என்னமோ இந்த மாமா பயங்கர பிளானோட தான் மகளை இப்ப அவசரமா வரச் சொல்லியிருப்பார்னு தோனுது.."என்றாள் குரலை தணித்துக் கொண்டு..

"அப்படி என்ன பிளான்? அவளை வச்சு என்ன செய்ய முடியும் அக்கா?என்றாள் சங்கரி..

"போடி நீ சரியான தத்தி, அவளை பார்த்தே தானே? நம்ம கீர்த்திக்கு அவளை கட்டி வைச்சு அத்தனை சொத்தையும் அபேஸ் பண்ணத்தான்"

"ஐயோ அக்கா, என்ன சொல்றே நீ? மாமா நல்லவர்னு பார்த்தால் இப்படி ஒரு எண்ணம் இருக்குமோ? என்னால நம்ப முடியலை அக்கா"

"நீயே சொல்லு, நாம வந்திருக்கோம்னா அம்மாவோட பிள்ளைகள், ரத்த சொந்தம்.. மாமா ஒன்று விட்ட சொந்தம் தான். இத்தனை வருஷமா இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்காதவள், இப்ப மட்டும் ஏன் வந்திருக்கிறாள்? அம்மா மேலே பாசம்னு நான் நம்ப மாட்டேன்"..

அவர்களின் பேச்சை கேட்டு விக்கித்து நின்றவளின் தோளில் அழுத்தமாக கை ஒன்று பதிந்தது..திடுக்கிட்டு
திரும்பியவளின் விழிகள் அதிர்ச்சியில் மேலும் விரிந்தது...

கீர்த்திவாசனை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பாளா அம்பரி? அக்காக்களின் பேச்சில் எத்தனை சதவீதம் உண்மை?
 

Attachments

  • ei90BWU72619.jpg
    ei90BWU72619.jpg
    70.2 KB · Views: 77

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,761
570
113
45
Ariyalur
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ஆத்தாடி ரெண்டு நாத்தனாரும் குட்டையா குழப்புறாங்க 😲😲😲😲😲😲😲😲