• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 16

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
16. எந்தன் ஜீவன் நீயடி..!

அம்பரி குளித்து முடித்து தயாராகி அறையை விட்டு வந்தபோது, கீர்த்திவாசன், அவளுக்காக காத்திருநதவன் போல, வரவேற்பு அறை போன்றிருக்கும் முன் புறமிருந்து அவளை நோக்கி வந்தான்.

"அம்பரி நீ இப்ப கீழே வர வேண்டாம். நாளை மறுநாள் காலையில் அக்காமார் குடும்பம் வெளிநாடு கிளம்பறாங்க, அதனால, இன்னிக்கு மதுரைக்கு ஷாப்பிங் செய்ய போறதா பிளான்.
அவங்க கிளம்பினதுக்கு அப்புறமாக வந்திருக்கிற உறவுக்காரங்களையும், வழி அனுப்பிட்டு நான் வர்றேன்" என்றான் மரத்த குரலில்.

அந்த குரல் ஏதோ செய்ய, "என்னாச்சு? என்றாள்

"ஒன்றும் ஆகவில்லைமா. நீ இப்ப கீழே வந்தால் எல்லோருமாக நம் எதிர்காலம் பற்றி பேசுவாங்க, உனக்கு புரிகிறதில்லையா? ஆம், ஒருத்தர் விடாம அதைத்தான் பேசி வைப்பாங்க. அதுல அவங்க தப்பு இல்லை. பொதுவா அதுதான் இயல்பு. ஆனால் உனக்கு அது தர்மசங்கடமாக இருக்கும். அதை தவிர்க்க தான் இந்த ஏற்பாடு. ராத்திரியே அக்காகிட்டே உனக்கு உடம்புக்கு முடியலைன்னு சொல்லிட்டேன்.. அதனால அவங்க சமாளிச்சுடுவாங்க..உனக்கு காபி அந்த பிளாஸ்கில் இருக்கு, அவங்க போனதும் நான் உனக்கு சொல்றேன்.. நீ அப்போது கீழே வந்தால் போதும்.. அதுக்கு முன்னாடி உனக்கு பசிச்சா, அங்கே டேபிளில் கேக், பழங்கள் எல்லாம் இருக்கு, தயங்காம சாப்பிடு.. இது உன்னோட வீடுங்கிறதை எப்பவும் மறக்காதே" என்றவாறு அவன் போய்விட்டான்.

காபியை எடுத்து குவளையில் ஊற்றிக் கொண்டு ஒரு சோபாவில்
அமர்ந்து பருகத் தெடங்கினாள்.
தான் எப்படி உணர்கிறோம் என்று அம்பரிக்கு சொல்லத் தெரியவில்லை. அது அவளுக்காக யோசித்து செய்த ஏற்பாடு எனும் போது மனது லேசாக நெகிழத்தான் செய்தது.. ஆனால் அவன் முன்னர் அத்தையை வருத்தியதும் நிஜம்தானே? அதனால் இப்போது அவன் என்னதான் மாறி இருந்தாலும், ஏனோ அவனை முழுதாக நம்ப முடியவில்லை. இன்னும் அந்த பிரின்ஸி, வேறு என்ன குண்டு போட காத்திருக்கிறாளோ? என்று எண்ணும்போதே விலுக்கென்று நிமிர்ந்தாள் அம்பரி.

அவளை எப்படி மறந்து போனேன்? அவளிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்களே? ஒருவேளை அவளிடம் பேசும்போது எந்த இடையூறும் இல்லாமல் இருக்கக்கூடாது என்றுதான் அறைக்குள் அவளையும் சிறை வைத்து இருக்கிறானோ? எனக்காக என்று ஒருகணம் மகிழ்ந்து போனேனே ? அப்படி நினைத்தது எவ்வளவு முட்டாள்தனம் என்று தன் மீதே ஆத்திரம் கொண்டாள் அம்பரி.

உடனடியாக எழுந்து கீழே செல்ல துடித்த கால்களை பெரும் பிரயத்தனம் செய்து அடக்கினாள் அம்பரி. ஒருவேளை நூற்றில் ஒரு சதவீதமாக அவன் சொன்னதே உண்மையாக இருந்துவிட்டால், அதன் பிறகு கீர்த்திவாசனின் முகத்தில் எப்படி விழிப்பது? யாருக்காக இந்த திருமணம் நடந்ததோ அவர் முன்பாக அவனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக் கொள்ள, இப்போது அவள் வெறும் தம்பி மகள் மட்டுமில்லையே. அவரது மருமகளும் ஆயிற்றே..

ஏதேதோ எண்ணங்களுடன் உழன்று கொண்டிருந்த அம்பரி, அதில் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்தவளாக, தன் கைப்பேசியை உயிர்ப்பித்தாள். அவளது முகநூல் பக்கத்திற்கு சென்றாள்.. அவள் அந்தப் பக்கம் போய் மாதக்கணக்கில் ஆகிறது.
பொழுது போக்க வேண்டும் என்றால் அவள் கேம்ஸ் தான் விளையாடுவாள்.. அதுவும் சவாலான கேம்ஸ்கள் தான். அது போர் அடித்தால் நகைச்சுவை படங்கள், இனிமையான பாடல்கள் என்று அவளது பொழுதுகள் கழியும்.. இன்றைக்கு மற்றதில் அவள் மனம் லயிக்காது என்று நினைத்து முகநூல் கணக்கில் போய் பார்த்தாள். பொழுது போவதே தெரியாமல் அதில் வந்த பதிவுகளை பார்த்திருந்த போதுதான், முன் தினம் பிரின்ஸி சொன்னது நினைவு வர, வேகமாக, நாத்தனார் பெண்களின் முகநூல் பக்கத்தை ஆராய்ந்தாள்.
அவளுக்கு நாத்தனார்களின் கணவர்கள் நட்பு வட்டத்தில் இருந்தனர். ஆகவே அவர்களின் பிள்ளைகளின் பதிவை எளிதாக கவனிக்க முடிந்தது.. ஆம் மாமனின் திருமணச் செய்தியை போட்டிருந்தாள் பெரியவள்.. ஒருவழியாக மாமவுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்பதாக குறிப்பிட்டு கேலி சித்திரமாக போடப்பட்டிருந்தது.. அது முகநூலில் வழக்கம் என்பதால் அதை பெரிதாக எடுக்கவில்லை அம்பரி.

அடுத்து பிரின்ஸியின் கணக்கை ஆராய்ந்தாள். குழந்தையுடன் அவளது புகைப்படம் இருந்ததால் அதுவும் எளிதாக கவனத்திற்கு வந்தது. கடந்த நாலு வருடங்களின் நிகழ்வுகளை பார்த்தபோது பிரின்ஸி, கேவி என்பவருடன் திருமண அறிவிப்பு செய்திருந்தாள். அதன் பிறகான பதிவுகள் அவளுக்கு காட்டவில்லை. அடுத்து குழந்தை பிறந்தது. அவளும் குழந்தையுமாக புகைப்படங்கள்.. அதன் பிறகு குழந்தை தான் அதிக பதிவுகளில் காணப்பட்டாள்..அப்படி என்றால் பிரின்ஸி சொல்ல வந்திருப்பது இதுதானா? இது.. இந்த குழந்தை.. கடவுளே? ஆனால் இரவு கீர்த்திவாசன் சொல்லும்போது அவன் பொய் சொல்வதாக தோன்றவில்லை.. இப்போதும் கூட ஏனோ அவள் மனது நம்ப மறுத்தது. அது ஏன் என்றும் அவளுக்கு புரியவும் இல்லை.. சட்டென்று ஏதோ தோன்ற..

கீர்த்திவாசனின் முகநூல் பக்கத்தை தேடினாள் அம்பரி.. ஆனால் அவனுடைய கணக்கு அங்கே இல்லை.. யாருடைய நட்பு வட்டத்திலும் அவன் இருப்பதாக தெரியவில்லை. அப்படி என்றால் ? அவனது கணக்கை செயலிழக்க செய்திருக்கிறான் என்று தோன்றியது.. இப்போது உண்மையை எப்படி கண்டு பிடிப்பது?

அத்தை இதை எப்படி ஏற்பார்? தந்தையின் மனநிலை ? கீர்த்தி என்ன சொல்லப் போகிறான்? உலகை நொடியில் சுற்றி வரும் ஆற்றல் படைத்த மனது.. ஏதேதோ எண்ணி கலங்கியது.. அந்த நேரம் அறைக்கதவு தட்டப்பட்டது, திடுக்கிட்டு நிகழ்வுக்கு திரும்பியவள், எழுந்து கதவை திறந்தாள்.. பணிப்பெண் தான் சாப்பிட வரும்படி சொல்லி சென்றாள்.

மணியை பார்த்தாள் இரண்டு மணிநேரத்திற்கு மேலேயே கடந்திருந்தது.. இருக்கும் மனநிலையில் சாப்பிடப் போகவும் பிடிக்கவில்லை. ஆனால் கீழே போகாமல் அவளது கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் தீர்வும் கிட்டாது.
ஒரு பெருமூச்சுடன் அவள் கீழே இறங்கி சென்றாள் அம்பரி.

சாப்பாட்டு அறையில் நித்யமூர்த்தி அமர்ந்திருந்தார். மகளை பார்த்ததும்,"அம்பரி, உட்கார்மா, இப்ப உடம்பு பரவாயில்லையா? இல்லைன்னா டாக்டர்கிட்ட போயிட்டு வந்துடலாமா? என்றார் கவலையுடன்.

வழக்கமாக, "உடம்புக்கு முடியலைன்னா, மூஞ்சை தூக்கி வச்சுட்டா ஆச்சா, போய் அத்தைக்கிட்டே சொல்றதுக்கு என்ன? என்று சத்தம் போடுகிறவர்,
இத்தனை கரிசனமாக பேசியது வியப்பாக இருந்தது, அதை காட்டிக்கொள்ளாது," இப்ப பரவாயில்லைப்பா"என்றவாறு அவருக்கு பிடித்த பூரியை எடுத்து தட்டில் வைக்கப் போனாள் அம்பரி.

"வேண்டாம்மா, இட்லி இருக்கும் கொடு போதும்.."என்றார்.

"உங்களுக்கு பூரின்னா ரொம்ப பிடிக்குமேப்பா, என்றாள்..

"ஆமாம்மா, எண்ணெய் பலகாரம் எல்லாம் இப்ப நான் சாப்பிடறது இல்லைமா.. .. அது வயசாகிட்டு போகுதுல்ல, அதான் கட்டுப்பாடா இருக்கேன்," என்றவாறு இட்லியை பிட்டு வாயில் வைத்தார்.

அம்பரிக்கு ஏனோ, தந்தை எதையோ மறைப்பது போல தோன்ற, மனம் கலங்கியது."அப்பா உடம்புக்கு ஏதும் முடியலையாப்பா? எதுன்னாலும் மறைக்காம என்கிட்ட சொல்லிடுங்கப்பா.. எனக்கு உங்களைவிட்டா வேற யார் இருக்கா?" என்று தவிப்புடன் கேட்டாள்.

"அடடா, எனக்கு ஒன்றும் இல்லை அம்மு. வயசாகிட்டா கொஞ்சம் பத்தியமா சாப்பிடணும்னு, டிவி நிகழ்ச்சியில் ஒரு டாக்டர் சொன்னார். அதை தான் நான் கடைப்பிடிக்கிறேன் .."என்று அவர் சொல்லவும்

சற்று ஆசுவாசம் உண்டாக, வெகு காலத்திற்கு பிறகு அம்மு என்ற அவரது அழைப்பில் அம்பரிக்கு கண்கள் கலங்கியது.. குழந்தையாய் இருந்தவரை அவர் அப்படித்தான் அழைத்தார்.. வடக்கில் அவர் ராணுவத்தில் இருந்த காலத்தில் விடுமுறைகளில் மட்டும் வந்து போவார். அந்த நாட்கள் தான் அவர்களின் வசந்த காலங்கள்.. அவர்களை வளர்த்த பாட்டியின் மறைவுக்குப் பிறகு, வேலையை விட்டுவிட்டு, தங்களை இங்கே அழைத்து வந்த இத்தனை ஆண்டுகளில் அவர் இறுக்கமாகவே காணப்பட்டார்.. அக்காவின் மறைவில் மனதளவில் தளர்ந்துவிட்டாலும் அந்த இறுக்கம்
மட்டும் விலகவில்லை.. இன்றைக்கு அந்த பழைய தந்தையாக அவர் மீண்டும் கிடைத்ததில் அவளுக்கு சந்தோஷமாகவே இருந்தது..

"என்னம்மா சாப்பிடாமல் தட்டையே பார்த்துட்டு இருக்கிறே? என்றவாறு சுப்பம்மாவின் குரலில் நிமிர்ந்தாள். அதற்குள் நித்யமூர்த்தி கைகழுவ சென்றிருந்தார்.

"அத்தைக்கு சாப்பாடு கொடுத்துட்டீங்களா? என்றாள்

"அது அப்பவே நர்ஸ் வந்து வாங்கிட்டு போயிருச்சு கண்ணு, தம்பி விருந்தாளிகூட சாப்பிட்டுருச்சுமா" என்று அவள் அறிய விரும்பியதையும் சொல்லிவிட்டு பாத்திரங்களை எடுத்து போக.., அந்த பிரின்ஸி சாப்பிட்டாளா? அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?
யோசனையோடு சாப்பிட்டுவிட்டு,
ஆனந்தவள்ளியின் அறைக்குள் சென்றாள். அங்கே தாயும் மகனும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, திரும்பிச் செல்ல முயன்றவளிடம்,"வா அம்பரி, உனக்கு தெரியாமல் எங்களுக்குள் ரகசியம் எதுவும் இல்ல இருவரும் ஒரே போல சொல்ல, சின்ன புன்னகையுடன் அம்பரி வீல் சேரில் வீற்றிருந்த அத்தையின் அருகே சென்றாள்.

சின்னதாக சரிகை பார்டர் வைத்த, ஒரு பர்பிள் நிறத்தில், ஆங்காங்கே சரிகை பூக்கள் சிதறிய புடவையும், சன்னமாக நகைகளும், தளர்வாக பினனலிட்ட கூந்தலில், மல்லிகை சரம் தோள்களில் வழிய வந்திருந்த மருமகளை பார்த்த அம்மாள்,

"என் ராஜாத்தி, என் கண்ணே பட்டுரும்போல, எவ்வளவு அழகாய் இருக்கிறே தெரியுமா?" என்று ஆனந்தவள்ளி சொல்ல

"நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க மா" என்று கண்களில் சிரிப்புடன் கீர்த்திவாசன் சொல்ல,

அத்தையின் பாராட்டில் அம்பரியின் முகம் லேசாக சிவக்க, தொடர்ந்த கணவனின் பாராட்டில் உள்ளூர திகைத்து நிமிர்ந்தாள். அதற்கு அவசியமில்லை என்பது போல, ஆனந்தவள்ளி மகனின் தலையை ஆசையாய் கோதிவிட்டு சிரித்தார். ஆக ,அது அன்னைக்காக செல்லப்பட்டது என்று புரிய, முகம் மாறாமல் காத்தாள்.

கீர்த்திவாசன் எழுந்து தாயின் வலதுபுறம் அவளுக்காக ஒரு இருக்கையை போட்டுவிட்டு, அவன் மறுபடியும் இடது புறம் அமர்ந்து கொண்டான்.

மேற்கொண்டு அவளை சங்கடப்படுத்தாமல் ,"இன்னிக்கு வெள்ளிக்கிழமை. இரண்டு பேரும் நம்ப குலதெய்வம் கோவிலுக்கு போய் கும்புட்டு வந்துடுங்க, நான் தம்பிக்கிட்டே எல்லாம் ஏற்பாடு செய்ய சொல்லிட்டேன்" என்றார் அம்மாள்.

"இப்ப அதுக்கு என்ன அவசரம் அத்தை, கோயில் எங்கே போயிடப் போகுது? இல்ல நாங்கதான் எங்கே போகப்போறோம்? மெல்ல போய்கிறோம்" என்றாள்.

"இல்லை அம்மு, சாமி காரியம் தள்ளிப் போடக்கூடாதுடா. எவ்வளவு நேரம் ஆகிடப் போகுது? ஒரு மணி நேரத்தில போயிட்டு வந்துடலாம்.. , தம்பி ஏற்பாடு பண்ணினதை மாத்த வேண்டாம்.. அப்படியே வெளியே எங்காணும் போறதானாலும் போய் வாங்க" என்றவரின் குரலில் பிடிவாதம் இருந்தது..

"நீங்க சொல்றது சரிதான் அம்மா, நாங்க போய் வர்றோம், என்று அந்த பேச்சை முடித்த கீர்த்திவாசன், அப்புறம் அம்மா, வெளிநாட்டுல என்கூட வேலை பார்த்த பொண்ணு, இந்தியாவிற்கு முதல் முறையா வந்திருக்கிறாள். இரவு நம் வீட்டிற்கு வந்தாள். அந்த சமயத்தில வெளியே எங்கேயும் அவளை அனுப்புறது பாதுகாப்பு இல்லன்னு, நம் வீட்டில் தங்க வைத்தேன். கொஞ்சம் நாள் தங்கியிருந்துட்டு போயிருவா" என்று சொல்ல, யோசனையாக மகனை பார்த்தவர், " கொஞ்சம் நாள் இங்கே தங்க வைக்கிறதுல எனக்கு பிரச்சினை இல்லை வாசு, ஆனால் நீங்க புதுசா கல்யாணம் ஆனவங்க, நாலு இடத்துக்கு விருந்து, விசேஷம்னு போகவர இருப்பீங்க, அப்படியிருக்க, இந்த பெண் தனியா மொட்டு மொட்டுனு இந்த கிராமத்துல எப்படி இருப்பா?" என்ற அவரது குரலில் லேசாக கண்டனம் இருந்தது..

"அம்மா, நீங்க கொஞ்சம் உடம்பு தேறி எழறவரைக்கும், நாங்க எங்கேயும் போறதா இல்லை.."

"ஆமா அத்தை, உங்களுக்கு உடம்பு பூரணமாக குணமாகிடுச்சுனு டாக்டர் அங்கிள் சொல்ற வரை, எங்களுக்கு நிம்மதியாக வெளியே போக முடியாது.." என்று அம்பரியும் சொல்ல.. அம்மாளின் முகம் மாறிவிட்டது..

"அப்படின்னா? என்ன அர்த்தம் வாசு? ஆனந்தவள்ளியின் குரல் தீவிரமாக ஒலித்தது.

"நீங்க நினைக்கிற மாதிரி எந்த அர்த்தமும் இல்லை. இப்ப என்ன கோவிலுக்கு போயிட்டு வரணும் அவ்வளவுதானே? என்று அவன் பணிந்து போக,

"வாசு கோவில் போறது இல்லை இப்ப பிரச்சினை.. அந்த பெண் விருந்தாளியாக வந்திருக்கிறாள் சரிதான். நீங்க இரண்டு பேரும் நாளைக்கு காலையில வெளியூர் போறதாக சொல்லி, இன்றைக்கு ஒரு நாள் தங்கியிருந்துட்டு கிளம்ப சொல்லு. இன்னொரு சமயம் வந்து பத்து நாட்கள் இருந்துட்டு போகட்டும்.." ஆனந்தவள்ளியின் குரல் அழுத்தமாக ஒலிக்க..

கீர்த்திவாசன்தான் செய்வதறியாது திணறிப்போனான். அம்பரி அத்தையை ஊன்றி கவனித்தாள். அவள் வந்த அன்றிலிருந்து அத்தையிடம் பெரிய மாற்றம்தான். ஆனால் அது மாற்றம் தானா? அல்லது ஒருவேளை அத்தை? அவரை எந்த முகாந்திரமும் இல்லாமல் சந்தேகப்படவும் அவளுக்கு பிடிக்கவில்லை. ஏனோ அது அன்று முதலே ஏனோ மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது

மருமகளின் அமைதியை கவனித்து, "ஏண்டாம்மா, அந்தப் பொண்ணு வந்தது உனக்கும் பிடிக்கலைதானே? என்று தன் வாதத்திற்கு வலு சேர்க்க, கேட்க,

கணவனும் மனைவியும் ஒரு அவசர பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

"ஐயோ அத்தை, அப்படி எல்லாம் இல்லை.. வெளிநாட்டுல இருந்து இவ்வளவு தூரம் நம் வீட்டிற்கு வந்திருக்கிறாள் அந்த பொண்ணு, உடனே கிளம்புன்னு எப்படி சொல்ல முடியும்? அது சரியில்லை என்பதோடு,அவளை இங்கே விட்டுட்டு நாங்க ஊர் சுற்றிப் பார்க்க போனா நல்லாவா இருக்கும்? ஒரு நாலு நாட்கள் இருக்கட்டும் அத்தை..அப்புறம் நாங்க வெளியே போய் வர்றோம் சரிதானே? தலை சரித்து அம்பரி சலுகை குரலில் கேட்டாள். அவளுக்கு தெரியும் அத்தையிடம் எப்படி பேசினால், அவரை வழிக்கு கொண்டு வரலாம் என்று..

"சரிடாம்மா, ஆனால் சொன்னபடி செய்யணும், இல்லைன்னா அத்தை பொல்லாதவளா மாறிடுவேன்" என்று ஒற்றை விரல் காட்டி, போலியாக மிரட்டினார்..

"ஐயோ பயமா இருக்குதே அத்தை," என்று நடுங்குவது போல பாசாங்கு செய்யும் போதே சிரித்துவிட," ஏய், போக்கிரி" என்று அவளது காலை பிடித்தபடி அவரும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டார்.. அதுவரை சிறு புன்னகையுடன் இருவரையும் பார்த்திருந்த கீர்த்திவாசன்தான் உள்ளூர ரொம்பவே தவித்துப் போனான்.

அம்பரியை அவன் இத்தனை இயல்பாய் சிரித்துப் பேசி பார்த்ததில்லை. இப்போது பார்க்க பார்க்க அவன் உறுதி எங்கே ஆட்டம் கண்டுவிடுமோ என்று கலக்கம் உண்டாயிற்று.. சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டான்..


" அத்தை, நீங்க பேசிட்டு இருங்க, இன்னிக்கு என்ன சமையல்னு, சுப்பாமாக்கிட்டே சொல்லிட்டு, வர்றேன்" அவள் எழுந்து செல்ல,

"அதானே பார்த்தேன்" என்றான் கிண்டலாக..

"என்ன?" என்பது போல அவனை இருவரும் நோக்கினர்.

"உனக்கு பார்க்கத்தானே தெரியும்.. சமைக்க தெரியாதே, அவசரமாக நீ சொன்னதை பார்த்து நீயே சமைக்க போறதா நினைச்சுட்டேன்" என்றான் கிண்டலாக..

"அத்தை பாருங்க உங்க பிள்ளையை? நான் நல்லா சமைப்பேன்.. என்ன இப்ப பயிற்சி கொஞ்சம் விட்டு போச்சு அவ்வளவு தான்.. அதனால என்னை கிண்டல் பண்ற வேலை எல்லாம் வச்சுக்க வேண்டாம் சொல்லுங்க" என்றுவிட்டு அவள் செல்ல, இருவரும் வாய் விட்டு சிரித்தனர்,
எதிரொலியாக அவளது முகத்திலும் சிரிப்பு பரவிய போதும், போலியாக முறைத்துவிட்டு வெளியேறினாள்..

அங்கே ஆத்திரமாய் முறைத்தபடி பிரின்ஸி நின்றிருந்தாள்..

_ஜீவ ராகம் தொடரும்..!
 

Attachments

  • eiS313464356.jpg
    eiS313464356.jpg
    44.8 KB · Views: 34

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️அம்பரியின் சந்தேகங்களுக்கு விடை கிடைக்குமா 🤔🤔🤔🤔🤔🤔🤔பரவாயில்லை அம்பரி அத்தை முன்னாடி நல்லாவே சமாளிக்குறா 😄😄😄😄😄
 
Top