• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 24

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
24. எந்தன் ஜீவன் நீயடி..!

கீர்த்திவாசன் கடந்த நான்கு வருடங்களாக அந்த சின்ன ஊரில் தங்கியிருப்பதற்கு காரணம் அம்பரி தான் என்றதும் அவளுக்கு முதலில் உண்டானது திகைப்பு தான். அதில் இருந்து தன்னை உடனேயே மீட்டுக் கொண்டவளுக்கு, அப்படி என்றால் ஈஸ்வரி சொன்னது போல சொத்து காரணம் இல்லை என்று மனம் லேசாகிவிட, அடுத்து, அவள் எப்படி காரணமாக முடியும்
என்று நினைக்கும் போதே அம்பரிக்கு உள்ளூர, வியப்புத்தான் மேலோங்கியிருந்தது. ஆகவே, வியப்பும் விபரம் அறியும் குறுகுறுப்புமாக,"வாசன், நீங்க சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. நான் உங்களை அக்காவின் திருமணத்தில் பார்த்தது, அதன் பிறகு இப்போதுதானே சந்திக்கிறேன். நானும் இங்கே அடிக்கடி வருவதில்லையே? என்று கேட்டாள்.

கீர்த்தியின் கண்களில் ஒருகணம் மின்னல் வெட்டி மறைந்தது. இதழில் கீற்றாய் புன்னகை.."நாலு வருஷத்துக்கு முன்னால, உன்னை நான் பார்த்ததில் இருந்து, நீ எனக்கு மிக மிக முக்கியமானவள் அம்பரி. உன்னை பார்த்த அந்த தருணம் மிகவும் வேதனையானது. ஆயினும் உன்னை நான் அப்போதுதான் ஆழ்ந்து கவனிக்க நேர்ந்தது. உன் அழுகை என்னை மிகவும் பாதித்தது. ஆரம்பத்தில் அது உன் மீதான பரிதாபம் என்று நினைத்தேன். உடன் பிறப்பை இழந்து நிற்கும் ஒருத்தியிடம் உண்டாகும், பச்சாதாபம் என்று தான் நினைத்தேன். ஆனால் அந்த நிகழ்வுக்கு பிறகு உன்னை ஒரு நாளும் மறக்கவே முடியவில்லை. சொல்லப்போனால் அந்த எண்ணங்கள் வளர்வதற்கு இன்னொரு வகையில் அம்மாவும் ஒரு காரணம். அவர்களுக்கு தன் பெண்கள் வயிற்றுப்பேத்திகள், பேரன் பற்றி பேச அதிக விஷயங்கள் இல்லை. ஆனால் உன்னையும் சுதாவையும் பற்றி பேசுவதற்கு நிறைய இருந்தது. சுதாவின் மறைவில் வேதனை என்றால், உன்னை பற்றிய பேச்சில் அவர்கள் முகமே பூவாய் மலர்ந்துவிடும். அதுவும் உன்னிடம் காணொளியில் பேசும் போது சொல்லவே வேண்டாம்.. அப்போது எல்லாம் சில சமயத்தில் நான் அருகில் இருந்தபடி அதை கேட்டிருக்கிறேன். அந்த பேச்சுக்கள் மனதில் பதிந்தாலும், நான் அதை வெளிக் காட்டிக்கொள்வது இல்லை. என்னையும் உன்னிடம் பேசும்படி எத்தனையோ முறை கேட்டிருங்காங்க. நான் அதற்கு செவி சாய்த்தது இல்லை. ஆனால், என் மனதை உணர்ந்த பிறகு, அம்மா உன்னைப் பற்றி என்ன பேசினாலும் எந்த சலனமும் இன்றி இருக்க கற்றுக் கொண்டேன்" என்று நிறுத்தி அவள் விஷயத்தை உள்வாங்க, சில கணங்கள் அவகாசம் அளித்தான்.

அம்பரி, திகைப்புடன் அவனை நோக்கினாள். நான்கு வருடங்களுக்கு முன்பு என்றால் அக்கா சுதாகரியின் மறைவின் போது.. ! என்று யோசித்தவள்,"என்ன.. என்ன சொல்றீங்க? எனக்கு புரியலேயே. வாசன் ! "அக்கா இறந்த போது நீங்க இங்கேயா இருந்தீங்க? என்றாள் திணறாலாக.

"ஆமாம், என்பதாக தலையசைத்து விட்டு, "விடுமுறையில் நான் இங்கே வரும்போது எல்லாம் எனக்கு முச்சு முட்டுவது போல, எப்போதடா கிளம்புவோம் என்று இருக்கும். அப்படிப்பட்ட நான் இப்போது, நம் ஊரை சொர்க்கமாக நினைக்கிறேன், என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான்",
என்றுவிட்டு,தொடர்ந்தான்,
அன்றைக்கு இரண்டுகெட்டான் பருவத்தில், உனக்கு அடிபட்ட பிறகு, நான் உன்னை அதிகமாக பார்க்கவில்லை. அதை நான் அப்போது பெரிதாக பொருட்படுத்தவும் இல்லை. காரணம் எனக்கு அப்போது மாமாவையும், அவர் பிள்ளைகளான உங்களையும் அவ்வளவாக பிடித்ததில்லை.

அன்றுவரை எனக்கு தான் அம்மா முன்னுரிமை கொடுத்துட்டு இருந்தாங்க. நீங்க வந்த பிறகு, அவங்க கவனம் எல்லாம் உங்கிட்ட தான் அதிகமாக இருந்தது. நீங்க விருந்தாளியாக வரவில்லை. இனி இங்கேயே தங்கப் போறதாக தெரிஞ்சதும், எனக்கு இங்கே இருக்க அறவே பிடிக்கவில்லை. ஏற்கனவே வெளிநாட்டுக்கு போகிற ஆசையும் இருந்துச்சே..! அப்பாவும் இல்லாமல் நானும் இல்லாமல் அம்மா மனசால எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்க? அம்மா அப்போது இருந்த நிலையை நான் கொஞ்சம்கூட யோசிக்காமல், அப்படி போனது ரொம்ப தப்பு என்று நான் திரும்பி வந்து யோசிச்சப்போ தான் புரிஞ்சது. காலம் கடந்த யோசனை தான். ஆனாலும் ரொம்ப தாமதமாகிடலைனு கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல்.

அம்பரிக்கு, அவன் பேசப்பேச ஆச்சரியமாக இருந்தது. இந்த கீர்த்தி அவளுக்கு புதியவன். அவன் வருந்துவது மனதுக்கு சற்று கஷ்டமாக இருக்க, பேச்சை மாற்ற எண்ணியவளாக, "அக்கா இறந்தப்போ, அதுக்கு பிறகும், நான் உங்களை பார்க்கவே இல்லையே.. ?" என்றாள்.

அவளது முயற்சி புரிய, கசப்பான ஒரு புன்னகையுடன், "நீ எதையும் பார்க்கும் நிலையில் அப்போது இருக்கவில்லையே அம்பரி" என்று வருத்தமான குரலில், சொன்னவன், தொடர்ந்து, அவன் இந்தியா வந்தபிறகு நடந்த விபரம் சொன்னான்.

சுதாகரி, இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு, நான் நடுநிசியில் நம் ஊருக்கு வந்தேன். அப்போது இருந்த மனநிலைக்கு யாரையும், பார்க்கவோ பேசவோ எனக்கு பிடிக்கவில்லை.. ஆகவே, நான் வந்த விவரம் யாருக்கும் தெரியக்கூடாது"என்று அம்மாவிடம் சொன்னதோடு அறைக்குள்ளேயே கிடந்தேன். எனக்கு அப்போது தனிமை தேவைப்பட்டது. எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டியிருந்தது. அப்படி யோசித்த போதுதான். பிரின்ஸிக்கு என் மீது காதல் எல்லாம் இல்லை என்பதும், எனக்கும், அவள் மீது காதல் போன்ற எந்த உணர்வும் இல்லை என்பதும் புரிந்தது. அந்த நாட்டில் வாழ மட்டுமே அவளை தேர்வு செய்திருக்கிறேன். ஒருவாறு மனம் தெளிந்தேன். ஆனாலும், சாப்பாட்டை கூட அறைக்கு வரவழைத்தே சாப்பிட்டுக் கொண்டேன்.

அம்மாவுக்கு, என்னுடைய அந்த செயல் குழப்பத்தை உண்டு பண்ணியது. ஏதேதோ எண்ணி கலங்கிட்டாங்க போல, அன்னிக்கு இராத்திரி சாப்பாடு கொடுக்க வந்தாங்க. சாப்பிடும் வரை, பேசவில்லை. அப்புறமா தயங்கிட்டே,"வாசு, நீ திரும்ப வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் ராஜா. ஆனாக்க, ஏன் யாருக்கும் சொல்லக் கூடாதுங்கிறே? மாமா, வெளியூர் போயிருக்கிறான். அதனால இத்தனை நாள் சமாளிச்சுட்டேன். நாளைக்கு
தம்பி திரும்பிடுவான்.
அம்பரியும் நாளைக்கு லீவுக்காக வருகிறாள்,
அவர்களிடம் எப்படி சொல்லாமல் இருக்கிறது தம்பி? எனக்கு பயமாக இருக்கு ராஜா.. நீ உண்மையை சொல்லு கண்ணா? தப்பு தண்டா ஏதும்.. ".

அம்மாவோட பேச்சு முதலில் புரியாமல் குழப்பியது, பிறகு அவர் சொன்ன வார்த்தை பிரயோகத்தில் அர்த்தம் விளங்க, வழக்கம்போல கோபமாய் கத்தப் போனேன், அப்புறமாக, கட்டுப்படுத்திக் கொண்டு நிதானமாக,"
அதெல்லாம் ஒரு தப்பும் செய்யவில்லை.. அம்மா. எனக்கு கொஞ்சம் தனிமை வேண்டும். அவ்வளவுதான், மாமாவிடம் வேண்டுமானால் சொல்லிக்கோங்க, அம்பரிக்கிட்டே சொன்னா அவள் சகஜமாக இருக்க மாட்டாள் அம்மா... அப்புறம் உங்க விருப்பம்"என்றதும் அமைதியாகி சென்று விட்டார்,

மறுநாள், அதாவது,சுதா இறக்கிற அன்றைக்கு, மாரி எனக்கு மாலை காபி பலகாரம் கொடுக்க வந்தாள். அம்மா ஏன் வரலைன்னு கேட்டேன். அவங்க உன்கூட ஏதோ செய்துட்டு இருக்கிறதா சொல்லிட்டு போனாள். நான் மாடி ஹாலில் வந்து உட்கார்ந்து,போன்ல கேம் விளையாடிட்டு இருந்தேன். திடுமென, கூடத்தில் இருந்து "ஐயோ சுதான்னு, மாமாவோட கதறல் கேட்டது, நான் பதறிப்போய் எட்டிப் பார்த்தேன், அதுக்குள்ளே, அம்மாவும், நீயும் அங்கே ஓடி வந்தீங்க, மாமா அழுதுகிட்டே சொன்ன விஷயத்தை கேட்டு, நீ அப்படியே, மயங்கி சரியவும், மாமாவும், அம்மாவும் உன்னை தாங்கிப் பிடிச்சுட்டுக்கிட்டாங்க, சுதாவின் மறைவுச் செய்தியில் நானும் சில கணங்கள், அப்படியே அதிர்ந்து நின்னுட்டேன், ஆனால், அப்படி நிற்கும் நேரமல்ல அது என்று உணர்ந்து,சுதாரிச்சுட்டு, கீழே இறங்கி வந்தேன். தண்ணீர் தெளிச்சும் நீ விழிக்கலை. அதனால உன்னை தூக்கிட்டு வாசலுக்கு போனேன். அதற்குள்ளாக டிரைவர் காரை கொண்டு வந்த நிறுத்தினான், பின் பக்கம் உன்னை படுக்க வச்சுட்டு, டிரைவரை இறங்க சொல்லிட்டு, நான் ஏறி அமர்ந்தேன். அம்மாவும், மாமாவும் வந்து ஏறினாங்க, வழியில், ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக உன்னை சேர்த்தோம். பலமான அதிர்ச்சி தாக்கியதால் தான் மயக்கம், அதோட ரொம்ப வீக்கா இருக்காங்கனு சொல்லி ட்ரிப் ஏத்தினாங்க. கொஞ்சம் நேரத்தில நீ கண் முழிச்சதும், "அத்தை எனக்கு அக்கா வேணும்னு, அப்படி ஒரு கதறல்.." என்னால அதை மறக்கவே முடியாது.." என்று அந்த நாளின் நினைவில் ஆழ்ந்தான். சிலகணங்களுக்கு பின் கண்களை இறுக மூடித் திறந்து, ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தான்..

"காரியம் எல்லாம் முடிஞ்சு, வீட்டுக்கு வந்தபிறகும், நீ சுற்றுப்புறத்தை உணரவே இல்லை, திடீர்னு அழறது, இல்லைன்னா,அப்படியே பிரம்மை பிடிச்சு,சோர்ந்து கிடக்கறதுமா இருந்தே.. அந்த நிலையில் உன்னை தனியா விடக்கூடாதுனு, மாமாவும் ,அம்மா மாத்தி, மாத்தி உன் கூடவே இருந்தாங்க. நான் அங்கேயே உன் பார்வை படாத இடத்தில் இருந்தேன். ஏனோ உன்னை அந்த நிலையில் பார்த்துவிட்டு நகரவே முடியவில்லை. இது என்ன மாதிரி உணர்வு என்று அப்போது புரியவில்லை.

மனமாற்றத்திற்காகவும், என் வாழ்க்கை பற்றி முக்கிய முடிவெடுக்கவும் தான் ஒரு மாதம் விடுப்பில் நம்ப ஊருக்கு வந்திருந்தேன். வெளிநாடு செல்ல இன்னும் நாட்கள் இருந்தது. ஆனால் என் எண்ணங்கள் எனக்கு எதிராக இருந்ததால்,சுதாவின் 16ம் நாள் காரியம் முடியவும் நான்வெளிநாட்டிற்கு கிளம்பிச் சென்றேன். ஆனால், எனக்குள் ஏனோ ஒருவித தவிப்பு. அங்கே என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஒரே மாதத்தில் நான் திரும்பி இங்கே வந்துவிட்டேன். இந்த ஊரில் தான் இனி என் வாழ்க்கை, கடைசிவரை என் அம்மாவிற்கு மகனாக வாழ்வது என்ற முடிவுடன், என்னை
முற்றிலுமாக மாற்றிக் கொண்டேன்.

மாமாவும் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்து விட்டு,
"இத்தனை காலம் இருந்த திடம் எனக்கு இப்போ இல்லை, எல்லாமும் நீயே பார்த்துக் கொள். ஏதும் யோசனை என்றால் என்னை கேள்" என்று ஒதுங்கிக்கொண்டார், சிறு பெருமூச்சுடன் சொன்னவன்,
இரு கைகளால் தலை முடியை அழுந்த கோதிவிட்டபடி தரையை பார்த்து அமர்ந்திருந்த அவனது தோற்றம் அம்பரியின் மனதை அசைத்தது.

ஆக, அத்தை ஒன்றும் அவரது ஊதாரி பையனுக்கு அவளை கட்டி வைக்க நினைக்கவில்லை. மனதாலும், செயலாலும் திருந்திவிட்ட மகனுக்கு வாழ்க்கை துணையாக அவரது செல்ல மருமகளையே கட்டி வைக்க முடிவு செய்திருக்கிறார் என்ற நினைவில் அவளுள் இருந்த சிறு ஆதங்கமும் நீங்கியது.
எல்லாவற்றிற்கும் மேலாக, கீர்த்திவாசனின் மனதில் அவளால் உண்டான பாதிப்பு? அது அப்போதை நிலை தானா? இன்னமும் அவனுக்கு அதே அளவு பாதிப்பு, இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள ஆவல் உண்டாயிற்று.

"வாசன், எனக்கு உங்க மேலே, முன்பு கோபம் இருந்தது உண்மைதான். அதுவும் கூட அத்தை வருந்துவது தாங்காமல் உண்டானது. இப்போது அத்தை மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அத்தையின் மகன் என்பதாலேயே அத்தனை கோபத்திலும் என்னால் உங்களை மனதுக்குள் கூட திட்ட முடிந்தது இல்லை..!
ஆனால் ஒரு திருமணத்திற்கு அடிப்படை தேவை பரஸ்பரம் அன்பும், நம்பிக்கையும்தான். எனக்கு அந்த அன்பும் நம்பிக்கையும் உங்கள் மீது இருக்கிறதா என்று கேட்டால் பதில் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக வெறுப்பு இல்லை என்பதற்கு நான் இந்த அறைக்குள் இருப்பதே சாட்சி. உங்களுக்கு என் மீது அக்கறை, பாசம் இருக்கிறது என்பதை நான் இந்த சில தினங்களில் உணர்ந்து கொண்டேன். ஆனால் .. என்று தயங்கி நிறுத்தினாள்.

கீர்த்திவாசனுக்கு அவள் பேசப்பேச உள்ளத்தில் ஒருவித பரவசம் ஊற்றாக பிரவாகம் எடுத்தது. அவள் காதல் சொல்லவில்லை தான், ஆனால் அவனை அவள் புரிந்து கொண்டதே மிகுந்த ஆறுதலை தந்தது..

"ஆனால்? எதுவானாலும் சரி தயங்காமல் கேட்டுவிடு அம்பரி.."என்று ஊக்கினான்.

"அது, வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்ததுக்கு சொன்ன காரணம்? அம்பரி, முகம் லேசாக சிவக்க நிறுத்தினாள்.

கீர்த்தியின் முகமும் கண்களும் ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்துடன் பளிச்சிட்டன. "அந்த காரணம் உண்மைதான் அம்பரி. நீ என் மனதில், இல்லாவிட்டால் நான் இந்த திருமணத்தை நடத்த ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன்" என்றான் அழுத்தமான குரலில்..!

அம்பரி திகைப்பும் வியப்புமாக அவனை நோக்கினாள்.

இவன் என்ன சொல்கிறான்?


தொடரும்...!
 

Attachments

  • ei8HSLK67258.jpg
    ei8HSLK67258.jpg
    78.9 KB · Views: 31

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️ஆஹா கீர்த்திவாசன் உண்மையிலேயே அம்பரிய விரும்புறான், சூப்பர், அம்பரி எப்போ முழுமனசோட கீர்த்தி ஏத்துக்குவா 🤔🤔🤔🤔🤔🤔
 
Top