• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 28

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
119
113
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
28.

நான்கு வருடங்களுக்கு முன்பு..

சுதாகரியின் மரணத்தை பற்றிய மகனின், உதாசீனப்பேச்சை கேட்டது முதல் அவருக்கு சற்று பயமாக இருந்தது. எங்கே கணவர் முன்பாக அவன் ஏதும் உளறி வைத்தால், நியாய தர்மம் என்று பெற்ற பிள்ளை என்றும் பாராமல் போலீசில் புகார் கொடுத்தாலும் கொடுத்து விடுவார் என்று அஞ்சினார். அதனால், மருமகள் சுதாகரியின் மறைவிற்கு பிறகு, மகனுக்கு ஒரு மனமாற்றம் தேவை என்று சூடாமணி, கணவனிடம் சொல்லி, வெளியூர் எங்காவது சில மாதங்களுக்கு அனுப்பி வைக்க யோசனை சொன்னார்.

மனைவியின் யோசனை அவருக்கும் சரி என்றுபட்டது. விரும்பி மணந்த பெண்ணை பறிகொடுத்து நிற்கும் மகனுக்கு மன மாற்றம் உண்டாகட்டும் என்று மலேசியாவில் இருக்கும் நண்பர் கங்காதரனிடம் அமுதவானனை தொழில் விஷயமாக அனுப்பி வைத்தார் செந்தாமரை. அவனை அங்கேயே மூன்று மாதங்களாவது தங்க வைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அவரும் சரி என்று ஒப்புக் கொண்டார்.

அவன் அங்கே சென்ற சில தினங்களில் ..
"உன் மகனுக்கு அவன் பெண்டாட்டி நினைப்பே இல்லையப்பா, சந்தோஷமா, மூனு வேளையும் வகைதொகையா சாப்பிட்டு, ஊரை சுத்தப் போயிடுறான். சீக்கிரமாக மறுகல்யாணம் செஞ்சுக்கப் போறானாம், கடையில் வேலை செய்ற பசங்க சொன்னாங்க" என்று அந்த கங்காதரன் கூறவும், பரவாயில்லை மகன் சீக்கிரமாக மனம் தேறிவிட்டான். அதனால் அவனுக்கு இன்னும் சில மாதங்களில் நல்ல பெண்ணாக பார்துது திருமணம் செய்து வைக்கலாம் என்று செந்தாமரைக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

ஆனால், அடுத்த முறை, கங்காதரன் பேசும் போது,"இங்கே பாரு செந்து, உன் பையன் போக்கு சரியில்லை. குடியும் கும்மாளமுமாக இருக்கிறான். வந்து ஒரு மாசமாகியும், அவன் தொழில் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை.. நான் பேச நினைத்து அணுகினால் எல்லாம் அப்பாக்கிட்டே பேசுங்க, நான் இங்கே என்ஜாய் பண்ணத்தான் வந்திருக்கிறேன், அங்கே இருந்திருந்தாலு துக்கம் விசாரிக்க வர்றவங்களுக்கு போலியா அழுது புலம்பிட்டே நிம்மதியை தொலைச்சிருப்பேன். தெரிஞ்சோ தெரியாமலோ என் அப்பாரு என்னை இங்கே அனுப்பி எனக்கு நல்ல காரியம் செஞ்சுருக்கார்" என்கிறான் என அவர் சொன்னது தான் தலையில் இடி விழுந்தது போல இருந்தது. மூன்று மாத டூர் விசாவில் தான் அமுதவானன் போயிருந்தான். ஆகவே அவன் இன்னும் இரண்டு மாதங்கள் அங்கே இருக்கட்டும், அதன் பிறகு இங்கே அனுப்பி வைக்கச் சொன்னார் செந்தாமரை.

3 மாதங்களுக்கு பிறகு அமுதவானன் ஊர் திரும்பினான். வந்து ஒரு வாரமும் அவன் ஏதோ தீவிர யோசனையில் இருந்தான்.. சாப்பாடு கூட கடமைக்கு சாப்பிட்டது போல் இருந்தது.. வெளிநாடு சென்ற பிறகு, அங்கே மகன் நடந்து கொண்ட விதம் பற்றி செந்தாமரை மனைவியிடம் தெரிவிக்கவில்லை.

சூடாமணிக்கு தான் உள்ளூர கவலையாக இருந்தது. மகன் எங்கே கணவரின் முன்பு மருமகளின் மறைவு பற்றி அலட்சியமாக ஏதும் உளறி வைப்பானோ என்று. ஆனால் அவன் அப்படி ஏதும் செய்யவில்லை. மாறாக பெரிய இடியாக இறக்கினான்.

💙🤎💙

அந்த பொல்லாத சம்பவம் நடந்த அன்று..

காலை பதினொரு மணிக்கு எழுந்து வந்த அமுதவானன், பலகாரம் சாப்பிட்டு முடித்தவன், "ஆத்தா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும் " என்றான்.

"சொல்லுடா" என்றவாறு அன்றைய சமையலுக்கான காய்கறிகளை பிரிட்ஜில் இருந்து எடுத்து மேசை மீது வைத்தார் சூடாமணி.

சமையல் கட்டிற்கு வெளியே, கோதுமை, அரிசி என்று காய வைக்க தோதாக திறந்த வெளியாக பெரிதாக இடம் இருக்கும். குளிப்பதற்கு வெந்நீர் காய வைப்பதற்கு அடுப்பும், அதற்கு தேவையான விறகுகளும் சுவரோரமாக இருக்கும். சுற்றிலும் உயர்ந்த மதிலும் உண்டு. ஒரு மூலையில் கழிப்பறையும் குளியலறையும் கூட வெளியாட்களுக்காக இருக்கிறது. அங்கிருந்து பின் கட்டுக்கு செல்ல கதவும் உண்டு. பாத்திரம் விளக்க, துணி துவைக்க என்று அங்கே வசதி செய்யப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் வேலைக்காரிகள், அங்கே துணியை துவைத்தபடி ஒருத்தியும், பாத்திரங்களை கழுவியபடி ஒருத்தியுமாக இருவர் வேலை செய்து கொண்டிருந்தனர். அடுப்பங்கறையிலும் ஒருத்தி மதிய சமையலுக்கு மசாலா அரைத்துக் கொண்டிருந்தாள். அதற்கு அடுத்திருந்த சாப்பாட்டு கூடத்தில் தான் அவனும் தாயும் இருந்தனர்.

ஆகவே,"இங்கன பேச வேண்டாம் ஆத்தா, போக, வரனு ஆளுக இருப்பாக. முன்னால கூடத்துக்கு வா" என்று எழுந்தான்.

மகன் ஏதோ முக்கியமாக பேச அழைக்கிறான் என்று அவனோடு கூடத்திற்கு வந்தார் சூடாமணி.

"நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கேன் ஆத்தா.." என்றான் தரையை பார்த்தவாறு.

சூடாமணிக்கு இருவித உணர்வு உண்டாயிற்று, ஒரு தாயாக மகன் புதிய வாழ்க்கைக்கு தயாராகி விட்டதில் ஒரு புறம் நிம்மதி.. அதே நேரம் ஒரு பெண்ணாக, மூன்றே மாதத்தில் கட்டியவளை மறந்துவிட்டு இன்னொருத்தியை கல்யாணம் செய்து கொள்ள முடியுமா? எப்படி இவனுக்கு மனது வந்தது? என்று மறு புறம் திகைப்பு, இல்லை அதிர்ச்சியாக இருந்தது..
ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல், "சந்தோசம் அமுதா, ஆனால் எப்படியும் இன்னும் ஒரு வருஷத்துக்கு எந்த சுப காரியமும் செய்ய முடியாது. அதுக்குள்ள ஒரு நல்ல பொண்ணா பார்த்துடலாம். சுதாப் பொண்ணு வருஷதிதி முடிஞ்சதும் அடுத்த முகூர்த்தத்துல கல்யாணத்தை நடத்திடலாம்,என்றவர் " எனக்கு அடுப்பிலே சோலி கிடக்குடா" என்றவாறு பேச்சு முடிந்து
விட்டதாக எழுந்து சமையல் கட்டு பக்கம் நடந்தார்.

"அட என்ன ஆத்தா நீ? நான் என்ன சொல்ல வர்றேன்னு முழுசா கேட்காம கொள்ளாம, நீயா பேசிட்டு போறியே.. ஒரு நிமிசம் நில்லு, என்றவனை யோசனையுடன் பார்த்தவாறு நின்றார்.

"ஆத்தா புதுசா பொண்ணு எல்லாம் பார்க்க வேணாம். ஏற்கனவே பார்த்த பொண்ணு இருக்கு, அதை போய் பேசி முடிச்சுட்டு வந்தா போதும்" என்றான் அமுதவானன் மலர்ந்த முகத்துடன்.

"என்னடா சொல்றே ஏற்கெனவே பார்த்த பொண்ணா? யாருடா அது? என்றார் குழப்பமாக

"அது.. அதுதான் மா, சுதாவோட தங்கச்சி ஒருத்தி செதுக்கின சிலையாட்டம் இருப்பாளே, அவதான் அம்பரி. அவ இப்ப படிச்சிட்டு இருக்கிறாள். அவளைத்தான் பேசி முடிக்க சொல்றேன். படிப்பு முடியவும் கல்யாணத்தை வச்சுக்கலாம்"
என்றவனை அதிர்ந்து போய் பார்த்தவர்,

"ஏலேய், கூறுகெட்டவனே.. நீ மூத்தவளை பார்த்துட்டு,கட்டுனா அவளைத்தான் கட்டுவேனு ஒரே பிடிவாதமா ஆறு மாசம் காத்திருந்து கல்யாணம் கட்டிக்கிட்டியேடா? அவளை ஒழுங்கா வச்சு குடும்பம் நடத்தினியா? இல்லையே அவளை அநியாயமா சாவ குடுத்துட்டு, இப்ப வந்து அடுத்தவளை கட்டி வைங்கிறியே உனக்கே இது நியாயமா படுதாடா?? அதுவும் அவள் செத்து மூனு மாசத்துல? என்ன பிறவிடா நீ?

"ஆமா, அப்போ அவளை பார்த்ததும் பிடிச்சுப் போச்சு.. அதான் காத்திருந்து கட்டிக்கலாம்னு நினைச்சேன்.. ஆனால் அந்த சின்னக்குட்டியை லேட்டாத் தானே பார்த்தேன்.. அவள் அழகைப் பார்த்த பொறவு எனக்கு இவளை பிடிக்காம போயிடுச்சு... ஆனா எடுத்த உடனே இவகிட்ட தங்கச்சிக்காரி பத்தி பேச முடியாதே.. அதோட இவளையும் ஆசைப்பட்டுத்தானே கட்டிக்கிட்டேன்.. அதனால கொஞ்சம் நாள் நல்லபடியா அவகூட குடும்பம் நடத்தினேன். தலைப் பொங்கலுக்கு போனேன் பாரு.. அய்யோ என்னால அவளை விட்டு கண்ணை நகட்ட முடியலை.. அதை அப்பவே என் பெண்டாட்டி கண்டுபிடிச்சுட்டா.. அதான் தெரிஞ்சு போச்சேனு நான் அவளை எனக்கு கட்டி வைக்க சொன்னேன். அதுக்காக இவளை விட்டுட மாட்டேன்னு எவ்வளவோ சொன்னேன். அவ கேட்கலை. ஒரேயடியா பிடிவாதம் பிடிச்சா..

"எத்தனையோ சித்ரவதை செய்தும் அவள் மசியலை.. கடைசில சின்னவளை கட்டி வைக்கலைன்னா, அத்தை மகனுக்கும் அவளுக்கும் தொடுப்பு இருக்குன்னு, ஊருக்குள்ள சொல்லி மானத்தை வாங்கிடுவேன்னு மிரட்டினேன்... மானத்துக்கு பயந்தா செத்தாள்.. அவள் இருக்கிறவரை நான் அவ தங்கச்சியை விட மாட்டேனு, தெரிஞ்சுக்கிட்டு, அவளை நெருங்கிறதுக்கு இருக்குற ஒரே வழி அவள்தான்னு நினைச்சு உசிரை மாய்ச்சுட்டா.. அவ போயிட்டதும் எனக்கு வசதி தான்னு பாவம் அவளுக்கு தெரியலை.. பைத்தியக்காரி..."

"அடப் பாதகா, என்ன காரியம் செஞ்சு வச்சிருக்கே? இதுக்காடா உன்னை நான் தவமா தவமிருந்து பெத்தேன்...அவள் எவ்வளவு தங்கமான பொண்ணு அது. அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டா. வீட்டு வேலை எல்லாத்தையும் அவளே இழுத்துப் போட்டு செய்வாள். என்னை ஒரு வேலை செய்ய விடமாட்டாளேடா.. அத்தை நீங்க எனக்கு அம்மா மாதிரின்னு சொல்லுவாடா.. ஏதோ புருசன் பெஞ்சாதி சண்டைனு நான் கண்டுக்காம இருந்துட்டேனே? இந்த பாவத்தை செய்ய நானும் ஒரு காரணமா இருந்துட்டேனே, ஏன்டா டேய், நீ எல்லாம் மனுசனாடா?மகாலட்சுமியாட்டம் இருந்தவளை கொடுமை படுத்தி கொன்னுட்டு அதை கூசாம என்கிட்டேயே சொல்றியேடா .. உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும் சூடாமணி கோபமாக கத்தினார்.

"இங்க பாருமா, எதுக்கு இப்ப கத்துறே? நடந்தது நடந்து போச்சு, இனிமே அதை மாத்த முடியாது. நீ என்ன செய்வியோ தெரியாது, என் கொழுந்தியா, எனக்கு பெண்டாட்டியா வரணும்.. அவ படிக்கிறாளேனு விட்ர முடியாது..இப்ப அக்கா போன துக்கத்துல இருப்பா.. எவனாவது ஆறுதல் சொல்றேன்னு அவளை அபேஸ் பண்ணினாலும் பண்ணிடுவான். அதனால, இப்பவே அங்கன போய் பாக்கு வெத்தலை மட்டும் மாத்திட்டு,
கல்யாணத்தை படிப்பு முடிச்சப்புறம் வச்சுக்கலாம்னு சொல்லி, சம்பந்தம் பேசி முடிச்சிட்டு, வந்துடு.." என்றான் அழுத்தமாக.

"அட சண்டாளப் பாவீ, ஒரு பொண்ணோட வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்டு கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாம, அடுத்தவளையும் கட்டணும்னு சொல்லிறியேடா நீ விளங்குவியாடா? ஏன்டா டேய் உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும்? பெத்தவக்கிட்டேயே இப்படி பேசுறியே உனக்கு வெட்கமா இல்லை? மூத்தவ கொஞ்சம் அப்பிரானி அதனால உன்னயப் பத்தி அவ அப்பன்கிட்ட சொல்லாம மறைச்சிட்டா..! அவள் செத்ததும் நீ கட்டிவிட்ட கதையை நம்பி அவுங்களும் மேற்கொண்டு எதுவும் தோண்டாம போயிட்டாங்க.. அதனால தான் நீ சுதந்திரமா சுத்திட்டு இருக்கிறே..
இல்லைன்னா இந்நேரம் நீ ஜெயில்ல தான் இருந்திருப்பே.. அந்த புண்ணியவதி உன்னை காட்டிய கொடுக்காம போயிட்டா, அதனால நீ தப்பிச்சே..என்றவர்,
இதோ பாருடா, நல்லா கேட்டுக்கோ, நான் உசிரோட இருக்கிறவரை நீ நினைக்கிறது நடக்காதுடா" சூடாமணி ஆவேசமாக சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்று விட, அமுதவானன் ஆத்திரத்திரத்துடன், தாயின் பின்னோடு சென்று,வழிமறித்து,

"கடைசியா கேட்கிறேன்மா. எனக்கு அவளை கட்டி வைக்க முடியுமா முடியாதா? " என்று கேட்க,

சூடாமணிக்கு, மகனின் கோப முகத்தைப் பார்த்து அதிர்ச்சியில் சில கணங்கள் பேச்சே வரவில்லை.. கண்களில் நீர் குளம் கட்டியது, ஆனாலும் உடனடியாக சுதாரித்து," இல்லைன்னா என்னடா செய்வே? என்றார் ஆத்திரமாக..

"நான் சொன்னபடி செய்யலைன்னா, நான் என்ன செய்வேனு எனக்கே தெரியாது" என்றவன் கண்கள் சிவக்க ..சுற்றும் முற்றும் தேடியவன், ஓடிச் சென்று சற்று தொலைவில் அடுப்பு எரிக்க அடுக்கி வைத்திருந்த விறகு கட்டையை எடுத்துக் கொண்டு வந்தான்.

சூடாமணியின் மனம் வேதனையில் துவழ, துக்கம் தொண்டையை அடைத்தது. விரக்தியோடு ஒருகணம் தன் மகனைப் பார்த்தார். ஆனால் உடனடியாக திடத்தை வரவழைத்து, "நீ சொல்றபடி நான் ஒரு நாளும் செய்ய மாட்டேன் டா.. அதனால எனக்கு என்ன ஆனாலும் சரிதான்" என்றார் நிமிர்வோடு..

அதே நேரம் கூடத்துக்குள் நுழைந்து கொண்டிருந்த செந்தாமரை அந்த காட்சியை பார்த்து பதறிப் போனவராக, டேய்... டேய்.. ஐயோ மணீ.. என்ற கத்தியபடி ஓடி வந்தார். ஆனால் அதற்குள் காரியம் கைமீறிப் போயிற்று..!

வேலையாட்கள் ஓடி வந்து பார்க்கையில் அங்கே ரத்த வெள்ளத்தில் சரிந்திருந்தார் சூடாமணி.. !
 

Attachments

  • CYMERA_20221129_124017.jpg
    CYMERA_20221129_124017.jpg
    62.3 KB · Views: 35