• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி...! - 31

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
119
113
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
செந்தாமரைக்கு தோப்பிற்கு சென்ற பின் அங்கிருந்த வேலைகள் அவரை இழுத்துக் கொள்ள, மகனின் பேச்சும், மனைவியின் பேச்சும் பின்னுக்கு போய்விட்டது ! ஆனால் அப்படி அவரால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது போயிற்று!

காரணம் வீட்டில்..

சூடாமணி கண்ணீர் மல்க பூஜை அறையில் அமர்ந்து கொண்டிருந்தார்! கடவுளே என் புள்ளைக்கு நல்ல புத்தியை கொடு! அந்த பொண்ணை நீதான் காப்பாத்தணும்! என்று வேண்டுதல் வைத்தவர், சற்று நேரம் அகல்விளக்கை வெறித்தபடி அப்படியே அமர்ந்திருந்தார்! அதன் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக, மகனிடம் சென்றார்!

அமுதவானன் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான்! தாயை கண்டதும் முகம் இறுகியது!

"அமுதா, முன்னம் நீ சொன்னப்ப, அந்தப் புள்ளைக்கு கல்யாணம் ஆகலை, இப்ப அப்படி இல்லை!அது இன்னொருத்தனோட பெண்சாதிடா! அவளை விட்டுருடா! நல்ல குடியில் பிறந்துட்டு ஈனமான காரியத்தை செய்யாதேடா! உனக்கு அவளைவிட நல்ல ரதி கணக்கா பொண்ணை கட்டி வைக்கிறோம்டா ! அம்மா பேச்சை கேளுடா ராசா!" கெஞ்சலும் கொஞ்சலுமாக சூடாமணி பேசினார்.

"நீ எப்படி சொன்னாலும், என்ன சொன்னாலும் உன் பேச்சை நான் கேட்கிறதா இல்லைம்மா! ஒரு வேளை இவளை கட்டிட்டு வந்து அவள் வாழமாட்டேன்னு போயிட்டா நீ சொன்ன ரதியை கொணர்ந்து நிறுத்து! இப்ப இது என் தன்மான பிரச்சினைமா! உன் மருமகள்கிட்டே நான் போட்ட சவாலில் ஜெயிக்கணும்! "எந்த நிலையிலும் என் தங்கச்சி உன்னை கட்டிக்க மாட்டாள்! அவள் ஒன்றும் என்னைப் போல எதையும் சகிச்சிட்டு போகிற ரகம் இல்லை! எதிர்த்து நிற்பாள்னு" என்கிட்டே அவள் சவால் விட்டாள்! அவளையே பணயம் வச்சு சின்னவளை கட்டிக்குவேன்னு நான் பதில் சவால் விட்டேன்! அவள் உசிரை விட்டுட்டாள்! ஆனால் அந்த சவால் இன்னும் அப்படியே தான் இருக்கு! சின்னக்குட்டியை தூக்கிட்டு வந்து தாலி கட்டி, ஒரு நாளாச்சும் வாழ்ந்து காட்டலைன்னா நான் வேட்டி கட்டறதுக்கே அர்த்தம் இல்லைம்மா! இன்னிக்கு ராத்திரி சின்னக்குட்டி நம்ம வீட்டுல இருப்பா! நீ ஆரத்தியை கரைச்சு காத்துட்டு இரும்மா!" என்றவன் மடமடவென்று வெளியேறிவிட்டான்

சூடாமணி, மகனை தடுக்கக்கூட இயலாதவராக அப்படியே விக்கித்துப் போய் அங்கிருந்த சோபாவில் சரிந்தார்.

ஆனால் அவர் அப்படி இருந்தது, ஒரு சில கணங்கள் தான்! இது அப்படி உட்காரும் நேரம் இல்லையே! என்ன செய்வது என்று பரபரப்பாக மனம் யோசித்தது! ஒரே மார்க்கம் தான் அவருக்கு தென்பட்டது! ஆம் ! அது கணவரிடம் சென்று அந்த சிறு பெண்ணிற்காக அபயம் கேட்பது!

கீழே இறங்கி வந்தவர், கணவரை கைப்பேசியில் வீட்டுக்கு வருமாறு அழைக்க, செந்தாமரைக்கு மனைவியின் குரலில் இருந்த பதற்றம் தொற்றிக் கொள்ள, பாதி வேலையில் வந்திருந்த ஒரு பணியாளரின் வண்டியில் வீடு வந்து சேர்ந்தார்!

சூடாமணி முன்னுரை முஸ்தீப்புகள் எதுவுமின்றி, நேராக விஷயத்திற்கு வந்தார்! கணவரிடம் அவர் அன்றுவரை மறைத்ததையும் சொல்லி, மகனின் இப்போதைய திட்டத்தையும் தெரிவித்தார்!

செந்தாமரையின் உள்ளத்தில் பல்வேறு உணர்ச்சி கொந்தளிப்பு உண்டாயிற்று! இப்படி ஒரு பிள்ளையையா தவமிருந்து பெற்றிருக்கிறார்? சற்று நேரம் செய்வதறியாது அமர்ந்துவிட்டார்!

"என்னங்க, மச்சான்! என்னாச்சு இப்படி உட்கார்ந்துட்டீங்க? அவனை தடுத்து நிறுத்த வழியைப் பாருங்க! அநியாயமாக ஒரு பெண்ணோட உசிரு ஏற்கனவே போயிடுச்சுங்க! அதுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ நாம காரணமாயிட்டோம்! அந்த பாவத்தை நாம எப்படி கழுவப் போறோமோ தெரியலை! இப்ப இன்னொரு பெண்ணையும் இந்த பாவிப்பயல் என்ன கதிக்கு ஆக்கிடுவானோ தெரியலை! நீங்க போலீசுக்கு போவீங்களோ,இல்லை கோர்ட்டுக்கு போவீங்களோ எனக்கு தெரியாது! எப்படியாச்சும் அந்த புள்ளையை காப்பாத்துங்க மச்சான்!
சீக்கிரம் கிளம்புங்க! " என்று துரிதப்படுத்தினார் சூடாமணி!

"எனக்கு எல்லாம் புரியுது மணி! ஆனால் இந்த பயல் இப்ப எங்க போறான்னு தெரியலையே! அங்கே இந்த விஷயத்தை எப்படி யாருக்கிட்டே சொல்றதுனு எனக்கு ஒன்னும் புரியலையே!

"பேசாமல் போலீஸ்ல சொல்லிடுங்க மச்சான்! நமக்கு வேற வழியில்லை!" என்றார் கண்களில் நீர்வழிய!

செந்தாமரை எழுந்து மனைவியின் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு," நீ கவலைப்படாதே மணி! நான் பார்த்துக்கிறேன்! அந்த புள்ளைக்கு ஒன்னும் ஆகாது! நீ தைரியமாக இரு! மதியம் நான் வரலேன்னு சாப்பிடாம இருக்காதே! எனக்கு நீ முக்கியம் புரிஞ்சுக்கோ கண்ணு!" என்றுவிட்டு வெளியேறினார்!

💙🤎💙

கொடைக்கானல்

கீர்த்திவாசன் சொன்ன நாளுக்கு முன்பே சென்று அவளுக்கு இன்ப அதிர்ச்சி தரவேண்டும் என்று நினைத்தான்! அதனால் முதல் நாளே அனைத்து வேலைகளையும் விரைந்து முடித்துக் கொண்டான்! இன்னும் அந்த ஒப்பந்தம் மட்டும் பாக்கியிருந்தது! அதை அவன் ஊருக்கு சென்றபிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளி வைத்துவிட்டான்! மனைவியை நேரில் காணப் போகும் ஆவல் அவனை அவ்வாறு செய்ய வைத்தது! அன்று மதியத்திற்கு மேல் அவன் ஊருக்கு கிளம்பிவிட்டான்!

இந்த நாளுக்காகத் தான் கீர்த்திவாசன் காத்திருந்தான்! ஆம், அம்பரி அவனை அழைக்கும் வரை அல்லது எதிர்பார்க்கும் நிலை வரும் வரை அவன் ஊர் திரும்பக்கூடாது என்று திடமாக இருந்தான். அதற்கு காரணம் அம்பரி அவனிடம் கடந்த இரண்டு மாதங்களில் இயல்பாக பழகியிருந்த விதம் தான். அவளுக்கு அவனிடம் வெறுப்பு இல்லை, அதே சமயம் அவளை அவள் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறாள் என்று அவனுக்கு தோன்றியது ! அதற்காகத் தான் இந்த தற்காலிக பிரிவை அவன் உண்டாக்கியதே! அவனது அன்றாட பணிகளை அங்கிருந்தே நடத்திக் கொள்ள ஆரம்பித்தான்! அதற்கு மழையும் அவனுக்கு துணை புரிந்தது! அப்படியே அவசியமாக போக நேர்ந்தாலும் ஒரே நாளில் திரும்பிவிடும் எண்ணத்தில் இருந்தான். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படவில்லை!

இப்போதோ அவள் வாய்மொழியாக தன் எதிர்பார்ப்பை சொல்லிவிட்டாள். அதற்கு மேல் அங்கே இருப்பானா என்ன? ஆனாலும் அவள் கேட்டு விட்டதால் வந்ததுபோல இருக்கக்கூடாது என்றுதான் இரண்டு நாட்களில் வருகிறேன் என்றிருந்தான்!
திடுமென அம்பரி முன்பாக போய் நின்றால் அவளது முகம் எப்படி மாறுகிறது என்று பார்க்க வேண்டும் போல் அவனுக்கு ஓர் ஆவல் உண்டாயிற்று!

கிளம்பும் சமயத்தில், அன்னையை அழைத்தபோது அவர்கள் இருவரும் மதுரைக்கு போய் திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். ஆகா, மாமியார் மருமகள் கூட்டணி போட்டுட்டு மதுரை வரை போயாகுதா?நல்ல முன்னேற்றம் தான் என்று எண்ணிக்கொண்டான்! அந்த பயணத்திற்கான காரணத்தை அவனும் கேட்கவில்லை,அன்னையும் சொல்லவில்லை. மாறாக "சீக்கிரமாக வந்து சேருடா" என்ற அழுத்தமான அழைப்புதான் இருந்தது. அவனுக்கும் மனைவியை சீக்கிரமாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் தீவிரமானது!

எப்படியும் அவன் போய் சேரும் போது இருவரும் ஓய்வெடுக்க சென்றிருப்பார்கள்! அவனுக்கும் அது தான் வேண்டும்! ஆனால் சிலசமயம் அன்னைக்கு புத்தகம் வாசித்து காட்டுவாள், அப்படி ஒருவேளை அவள் தாயுடன் இருந்தால், என்ன செய்வது என்று நினைத்து, வீட்டிற்கு போய் சேர இன்னும் சில மைல்களே இருந்த நிலையில் வண்டியை நிறுத்திவிட்டு, அம்பரியை கைப்பேசியில் அழைத்தான்!

தோப்பிற்கு சென்று கொண்டிருந்த அம்பரி ஆவலாக எடுத்து "ஹலோ வாசன் என்ன இந்த நேரத்தில் அழைத்திருக்கீங்க? என்ன விஷயம் ?" என்றாள்.

"சும்மா தான் அம்பரி, நீ எங்கே இருக்கிறே? அம்மா பக்கத்தில இருக்காங்களா?" என்றான்!

"இல்லை நான் மாந்தோப்புக்கு போய்க்கிட்டு இருக்கிறேன்! ஏன் வாசன் ? ஏதும் தகவல் தேவைப்படுகிறதா? மெயில் பண்ணனுமா? என்றாள் அக்கறையாக!

"அதெல்லாம் வேண்டாம் அம்பரி, இப்பத்தான், சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்தேன்! நாளைக்கு வீட்டுக்கு வருகிறேன்ல, அதுக்காக எல்லாம் எடுத்து வச்சிடலாம்னு நினைச்சேன்! அப்படியே உன்கிட்டே பேசலாம்னு கூப்பிட்டேன், எதுக்கும் இன்னொரு தரம் கேட்கலாமே என்று நினேத்தேன் ! சொல்லு உனக்கு என்ன வேண்டும்?"

"ஏற்கனவே நீங்க கொடுத்த கிப்ட்க்கு ரொம்ப தாங்க்ஸ்! நேற்று தான் அதை பிரிச்சேன்! ரொம்ப பிடிச்சிருக்கு, அதுவே போதும்! அதனால நீங்க மூட்டை கட்டற வேலையை பாருங்க! இப்படியா கொஞ்சமும் பொறுப்பே இல்லாமல் வாரக்கணக்காக வெளியூரில் போய் உட்காருவீங்க?" என்றாள் பொய்க்கோபத்துடன்! அவளது குரல் வழக்கத்திற்கு மாறாக குழைந்திருந்தது!

கீர்த்திவாசனுக்கு மட்டும் றெக்கை இருந்தால் அப்போதே பறந்து மனைவியிடம் வந்திருப்பான்! உண்மையில் அவன் மனம் அப்படித்தான் பரவசத்தில் பரபரத்தது!
"என் அபிக்குட்டி! இதற்காகத்தானே காத்திருந்தேன்! என்று மனதோடு பேசியவன், "உத்தரவு அம்மணி! இதோ மூட்டையை கட்டிவிடுகிறேன்! நீ வேண்டாம் என்றால் நான் விடுவேனா? நீ மாந்தோப்பில் இருந்து திரும்பும் போது, உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும்!" என்றான் கீர்த்திவாசன்!

"இன்ப அதிர்ச்சியா? அது என்ன வாசன்? நான் உடனே வீட்டுக்கு போகவா? என்று பரபரத்தாள் அம்பரி!

"ஏய் ஏய்.. அதெல்லாம் வேண்டாம், நீ போய் உன் மாந்தோப்புல கொஞ்சம் நேரம் ரிலாக்ஸாக இருந்துட்டு வா! " எனக்கு ஒரு கால் வருது அம்பரி! அப்புறமாக கூப்பிடுகிறேன்! என்று இணைப்பை துண்டித்துவிட்டான்!

அந்நிய எண்ணில் இருந்து வந்த அழைப்பு அது! யாராக இருக்கும் என்று யோசனையுடன் பார்த்திருந்த போது மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வர, அதை ஏற்றுப் பேசியவனுடயை முகம் சட்டென்று மாறியது! காரை திருப்பி பிரதான சாலையில் வேகமாக செலுத்த ஆரம்பித்தான் கீர்த்திவாசன்!

கீர்த்திவாசனை அழைத்தது யார்?அம்பரியை யார் காப்பாற்றுவார்கள்?
அமுதவானன் சவாலில் ஜெயிப்பானா?
💙🤎💙
 

Attachments

  • CYMERA_20221129_131737.jpg
    CYMERA_20221129_131737.jpg
    13.2 KB · Views: 33