• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 32

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
119
113
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
(நிறைவுப்பகுதி)

அம்பரி மாந்தோப்பிற்குள் நுழைந்து,வழக்கமாக அமரும் கல் பெஞ்சில் அமர்ந்த போது...
"அப்பாடி .. வந்துட்டியா? என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் அம்பரி.
அங்கே ஒரு இளைஞன் கிராமத்து முகமும் நகரத்து அலங்காரமுமாக, தெலுங்கு பட கதாநாயனைப் போல நின்றிருந்தவனை அவளுக்கு சட்டென அடையாளம் தெரியவில்லை.

"என்னை தெரியலையா ?சின்னக்குட்டி? என்றவாறு அவள் முன்னால் வந்து நின்றான் அமுதவானன்!

"சின்னக்குட்டி" அதிர்ந்து போனவளாக அம்பரி பெஞ்சிலிருந்து அவசரமாக இறங்கினாள். அந்த அழைப்பு சுதாவின் கணவன் அமுதவானனுடயது. அவளுக்கு அவன் அப்படி கூப்பிடுவது சுத்தமாக பிடிக்காது. அப்போதே அவனை எச்சரித்து இருந்தாள். ஆனாலும் அவன் அதை விடவில்லை. கடைசியாக அப்படி கூப்பிட்டால் அவனோடு பேச்சு வைக்க மாட்டேன் என்ற பிறகே கூப்பிடுவதை நிறுத்தினான்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவனை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இப்போது எதற்காக வந்திருக்கிறான்? வீட்டிற்கு வராமல் ஏன் இங்கே வந்திருக்கிறான்? என்ற கேள்வி எழ, அவள் மனதுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. அவன் வரவு நல்லதுக்கு இல்லை என்பது போல அவளுக்கு ஏனோ தோன்றியது. உள்ளே எழுந்த பதற்றத்தை காட்டிக் கொள்ளாமல், இயல்பாக பேச முயன்றாள்.

"இப்படி கூப்பிட வேண்டாம்னு நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்" என்றாள் எச்சரிக்கும் குரலில்!

" அது.. அது என் மனசுல எப்பவும் அப்படியே நினைச்சு பழகிட்டேனா.. அதான் சட்னு வாயில வந்திருச்சு.. கோவிச்சுக்காதே இனிமே கவனமா இருக்கேன்" என்று குழைந்தான் அமுதவானன்.

"இப்ப என்ன விஷயமாக வந்தீங்க? என்றபோது அவளுக்குள் திடம் வந்திருந்தது.

"உன்னை பார்க்கத்தான் கண்ணு வந்தேன். உன் அக்காவுக்கு பிறகு அந்த ஊருல இருக்க முடியாம, நான் வெளிநாட்டுக்கு போயிருந்தேன். என்னதான் வருத்தம் இருந்தாலும் வெளிநாட்டுல எத்தனை காலம் இருக்க முடியும்? நம்ம ஊரு போல வராதுல்ல..? அதான் கிளம்பி வந்துட்டேன். நீ இங்கே தான் இருக்கேனு கேள்விப்பட்டேன்.. இந்த தோப்புனா உனக்கு ரொம்ப இஷ்டம்னு சுதா அடிக்கடி சொல்லுவா.. எப்படியும் நீ இங்கே வருவேனு நினைச்சேன்! வந்துட்டே! ஒருவேளை நீ
வரலைன்னா, வீட்டுக்கு வரலாம்னு நினைச்சேன். நல்ல வேளையாக நீயே வந்துட்டே.. "

சுதாகரியின் நினைவில் மனம் கலங்கத்தான் செய்தது. ஆனால் இவன் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு என்னை ஏன் தேடி வந்திருக்கிறான் என்று குழம்பினாள் அம்பரி.

"அதான் பார்த்துட்டிங்களே கிளம்புங்க..! அக்காவே இல்லாம போனப்பிறகு, உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு ஆகிப்போச்சு. அதனால இனிமே என்னை பார்க்க வராதீங்க.." இறுகிய குரலில் அம்பரி சொல்ல..


அமுதவானனின் மனம் கடுத்தது. ஆனால் உடனே முகத்தில் காட்டாமல்,"இப்படி சொல்லிட்டா உறவு முறை இல்லாத போயிடுமா? எங்க வீட்டுல என்னை மறு கல்யாணம் பண்ணிக்க சொல்றாக.. இத்தனை வருசமா போனவளை நினைச்சுட்டு இருந்துட்டே, இனியாச்சும் ஒரு கல்யாணத்தை பண்ணி, குலம் விளங்க வாரிசு பெத்து கொடு, பேரன் பேத்திய பாத்துட்டா நிம்மதியாக கண்ணை மூடுவோம்ன்னு சொல்றாக.. அவுக பேச்சுலயும் நியாயம் இருக்கு.. என் ஆத்தா பொண்ணு பார்த்துட்டு இருக்காக.. எனக்கு தான் எவளையும் பிடிக்கலை.. "

" இந்த கதை எல்லாம் நான் கேட்டேனா? என்று ஒரு பார்வை பார்த்தாள் அம்பரி.

"சுதாவுக்கு நீயின்னா ரொம்ப உசுரு அம்பரி. எப்பவும் உன்னப் பத்திதான் பேசுவா. உன்னை நல்லா படிக்க வச்சு பெரிய இடத்துல கட்டிக் கொடுக்கணும்னு சொல்லுவா. அவள் சாகும் போது கூட உன் நினைப்புதான்.. ஆசுபத்திரியில அவளை கைவிட்டுறாதீகனு என் கையைப் பிடிச்சுட்டுதான் உசிரை விட்டா... அன்னிக்கு இருந்த மனநிலையில, இதை எல்லாம் பேச முடியலை.. இன்னிக்குத்தான் எனக்கு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. உன்னையும் மாமாவையும், நானே பார்ததுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். முதல்ல உங்கிட்ட பேசி சம்மதம் கேட்டுட்டு அப்புறமா மாமாவைப் பார்த்து பேசணும்னு நினைச்சேன்.."

இவன் என்ன லூசா என்று நினைத்தாள் அம்பரி. அவளுக்கு திருமணம் ஆனது கூட தெரியாமலா ஒருத்தன் இவ்வளவு தூரம் வந்திருப்பான்? அத்தோடு அக்காவின் சாவுக்கு ஒரு வகையில் இவனும்தானே காரணம் என்று ஆத்திரம் உண்டாயிற்று!.

அதே நேரம் கீர்த்திவாசன் பிரதான சாலையில் ஜீப்பை நிறுத்திவிட்டு, தோப்பிற்குள் மறுபுறத்தில் இருந்து உள்ளே ஓடி வந்தான்!மாந்தோப்பில் மரங்கள் அடர்ந்து இருந்ததாலும், மழையின் அறிகுறியாக வானம் மந்தாரமாக இருந்ததாலும் தோப்புக்குள் இருள் சூழ்ந்திருந்தது! கூடவே காற்று வேறு பலமாக வீசியது! அந்த இருட்டுக்கு ஒருவாறு கண்கள் பழக்கப்பட்டதும், நடையை சற்று துரிதப்படுத்தியவன், வேக நடையுடன், அதே சமயம் ஜாக்கிரதையாக அம்பரியை நோக்கி நடந்தான்! அம்பரி பேசுவது காற்றின் வேகத்தில் அரைகுறையாக கேட்டது!

"உங்க சங்காத்தமே வேண்டாம்னு தானே அக்கா போன பிறகு நாங்க யாரும் உங்க குடும்பத்தோட சொந்தம் கொண்டாட வரலை. அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சு. என்னையும் எங்க அப்பாவையும் என் புருஷன் பாத்துக்குவார். நீங்க கிளம்புங்க" என்று ஒரு எட்டு எடுத்து வைக்க முயன்றவளை அவன் குரல் தடுத்தது,

"நில்லு புள்ள, உன் புருஷன் பார்த்துக்குவானா? உன் கல்யாணமே அத்தைக்காரிக்காக நடந்தது தானே? என்னவோ முறைப்படி பெண் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டவ மாதிரி பேசுறே..சூழ்நிலை கைதியாக நீ அந்த கல்யாணத்தை பண்ணிட்டது எனக்கு நல்லா தெரியும்.. ஊருக்கு வேணும்னா இந்த கதையை சொல்லு.. இப்பக்கூட உன் புருஷன், புதுப்பெண்டாட்டியை தனியா விட்டுப்போட்டு கொடைக்கானலில் எவ கூட கூத்தடிக்கிறானோ? நீ இஷ்டமில்லாம கட்டிக்கிட்டு ஊருக்கு பயந்து வாழணும்னு அவசியமில்லை கண்ணு! என்கிட்டே எதுக்கு ஒளிவுமறைவு கண்ணு? உன் அத்தான் நான் இருக்கிறேன். உன்னை காலம் பூராவும்.. அவன் பேசிக் கொண்டே போக.. அருவருப்புடன் அம்பரி குறுக்கிட்டாள்.

"ஏய்... சே நிறுத்து, என் புருஷனைப் பத்தி தப்பா பேசினே? உன் குடலை உருவி மாலையா போட்டுருவேன்! ஜாக்கிரதை! நீயா வந்தே நீயா ஏதோ கதை சொன்ன போனாப்போகுதுன்னு கேட்டு தொலைச்சா.. வாய்க்கு வந்ததை பேசிட்டே போறியே? கல்யாணம் அவசரமாக தான் நடந்துச்சு. அது ஊருக்கே தெரியும். ஆனால் என்னோட முழு சம்மதத்தோட தான் நடந்துச்சு... ப்ச்..உன்கிட்டே நான் எதுக்கு விளக்கம் சொல்லணும்? என்னோட வாழ்க்கையைப் பத்தி நீ கவலைப்பட வேணாம்.. முதல்ல இங்கேயிருந்து நீ கிளம்பு.. இனிமே இந்தப் பக்கம் நீ வராம இருக்கிறது உனக்கு நல்லது" என்ற அம்பரி விறுவிறு என்று நடக்க ஆரம்பிக்க..

மனைவி பேச ஆரம்பித்தபோதே அவளிருந்த மரத்திற்கு பின்னால் வந்திருந்தான் கீர்த்திவாசன்! அவளது பேச்சு அவனை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது! தொடர்ந்த அமுதவானனின் பேச்சில் அவனுக்கு ஆத்திரம் உண்டாயிற்று! இனியும் தாமதிக்க கூடாது என்று அவன் நினைத்த போதுதான் அம்பரி அவனை ஓங்கி அறைந்தாள்! அத்தோடு நில்லாது, அவள் ஆத்திரமாக பேசியதை கேட்டான்!! தொடர்ந்து நடப்பதை கவனித்தபடியே இருவரையும் பார்ப்பதற்கு தோதாக மறைவாக நின்று கொண்டான்!

அமுதவானனின் முகம் பயங்கரமாக மாறியது. ஓடி வந்து அவள் வழியை மறித்ததோடு நில்லாமல், கையைப் பிடித்துக்கொண்டு, "எடுத்ததும் உன்கிட்ட முரட்டுத்தனமாக நடக்க வேணாம்னு அமைதியா பேசினா.. நீ தெனாவெட்டா பேசறே. உன் புருசன்னு சொன்னியே அவன் லட்சணம் என்னானு உனக்கு தெரியுமாடி? வெளிநாட்டுல அவன் ஆடாத ஆட்டம் ஆடிட்டு வந்தவன். உன் அக்கா மட்டும் என்ன பெரிய ஒழுக்கசீலியாக்கும்? அவன்கூட கூடிகுலவி கொட்டமடிச்சவ தானே? எச்சில் இலையை எனக்கு தள்ளிவிட்டுட்டீங்க.. அடுத்து உன்னையும் கல்யாணம்கிற பேருல கொள்ளையடிக்க பார்க்கிறானா? விட மாட்டேன்டி" என்றவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் அம்பரி.

அம்பரியின் கண்களில் ஆத்திரம் பொங்க, "ஏய் இப்பத்தானே சொன்னேன்! என் அக்காவைப் பத்தி, என் புருஷனைப் பத்தி தப்பா பேசினே உன்னை இங்கேயே கொன்று புதைச்சிடுவேன்! என்கிட்டேயே இப்படி சொல்றவன், என் அக்காவை எப்படி எல்லாம் சித்திரவதை செய்தியோ? அதான்டா அவள் மானத்துக்கு பயந்து தற்கொலை பண்ணிக்கிட்டா! அவளே பண்ணிக்கிட்டாளா? அல்லது நீ தான் சாவடிச்சியா? எங்க அக்கா போன துக்கத்துல நாங்க எதைப் பத்தியும் நினைக்காம விட்டுட்டோம்! இப்பத்தானேடா உன் யோக்கியதை எல்லாம் தெரியுது! ஆனால் இனிமே உன்னை கம்பி எண்ண வைக்காம விடமாட்டேன்டா" அம்பரி சூளுரைத்தாள்!
கீர்த்திவாசனுக்கு, மனைவியே அவனை சமாளித்துவிடுவாள் என்று தோன்றியது! ஏதும் விபரீதம் என்றால் மட்டும் குறுக்கிடலாம் என்று பொறுமையாக காத்திருந்தான்! அவன் இத்தனை காலமாக, அம்பரி மென்மையானவள் அவளுக்கு கோபம் வந்தால் கூட காட்டத்தெரியாதவள் என்று எண்ணியிருந்தான்! ஆனால் இப்போது அவளது ஆவேசத்தை பார்த்து ஆச்சரியமாக இருந்தது!


அடி வாங்கிய அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற அமுதவானன், அடுத்து அவள் பேசவும், நிகழ்வுக்கு திரும்பினான், "ஏய்.... என்னையாடி அடிச்சே? உன்னை விட மாட்டேன்டி, என்றவன் ஆங்காரமாய் அவளை நெருங்கினான்!

"இங்கே பார்,உன் ஆம்பளை திமிரை என்கிட்டே காட்டினேன்னு வை, ஒன்னு உன் கை கால் உடையும், இல்லைன்னா உயிர் போயிடும், இது சும்மா மிரட்டலுக்கு சொல்லவில்லை! நிஜமாக தற்காப்பு கலையை முறையாய் படிச்சிருக்கிறேன்! அதனால பேசாமல் வந்த வழியில் போயிடு!"என்றவள் விலகி நடக்க முயன்றாள்!

"ஏய் நில்லுடி! நீ சொன்னதைக் கேட்டு பயந்து ஓடிருவேன்னு நினைச்சியா?" என்றவன் அவளது கையை சட்டென்று பற்றியிழுத்து தன்னோடு சேர்த்து அணைக்க முயல, அம்பரி திமிறியபடி , " டேய் விடுடா ! என்று அவனது காலில் ஓங்கி மிதிக்க, அவன் வலியில் ஆ..! என்ற அலறலுடன் தன் பிடியை தளர்த்த, அதற்குள் கீர்த்திவாசன் அருகே வந்து மனைவியை தன்புறம் இழுத்து அரவணைத்துக் கொண்டான்!
திடுமென அங்கே கணவனைப் பார்த்த திகைப்பில் சிலகணங்கள் தன்வசமிழந்து நின்றாள் அம்பரி!

அவனது அரவணைப்பில் , எதிர்பாராதவிதமாக அமுதவானன் நடந்து கொண்ட முறையில் நடுங்கிய அவளது உடம்பு மெல்ல சீராயிற்று!

நிலைகுலைந்து கீழே விழுந்த அமுதவானன், சுதாரித்து எழுந்தபோது, இருவரும் நின்ற கோலத்தை பார்த்தவனுக்கு வெறி பிடித்தது போல முகம் பயங்கரமாக மாறியது!"இவன் உசிரோட இருந்தாதானேடி உனக்கு அவன் புருஷனா இருப்பான்? அவனை இல்லாமல் பண்ணிட்டா? அப்புறம் உன்னை என்கிட்ட இருந்து எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாது!" என்றவன், பின்புறம் செருகியிருந்த துப்பாக்கியை உருவினான்!

அம்பரி சட்டென்று தன் கையில் வைத்திருந்த குடையை அவனை நோக்கி வீசினாள்! அமுதவானனின் கையில் இருந்த துப்பாக்கி நழுவியது!
கீர்த்திவாசன் அந்த இடைவெளியில் அமுதவானனின் சட்டையை கொத்தாக பற்றி தூக்கினான்!

கீழே விழுந்த துப்பாக்கியை அம்பரி கைப்பற்றி தூர எறிந்தாள்! அப்போது அவளது கையில் இருந்த அந்த விசேஷ கடிகாரம் கண்ணில் பட்டது! உடனடியாக அதை உயிர்ப்பித்து! முதலில் காவல்துறைக்கு தகவல் சொன்னாள்! அடுத்து வீட்டில் இருந்த கணக்குப்பிள்ளையிடம் ஆட்களை திரட்டிக் கொண்டு மாந்தோப்பிற்கு வரச் சொன்னாள்!

"என்னோட ஒரு அடியைக்கூட நீ தாங்க மாட்டே! ஒழுங்கா கைகால்களோட இங்கிருந்து நீ ஓடிப்போயிரு! இல்லைன்னா நீ இன்னும் ஆறு மாசத்துக்கு புத்தூர் கட்டோட, சாப்பிடவும் மத்த தேவைகளுக்கும் இன்னொருத்தரை எதிர் பார்க்க வேண்டிய நிலையில்தான் இருந்தாகணும்! எப்படி வசதி? என்று தன் கைமுஷ்டியை ஓங்கினான் கீர்த்திவாசன்!

அப்போது அம்பரி கீர்த்தியின் கழுத்தில் இருந்த மப்ளரை உருவினாள்! அமுதவானனுக்கு பின்புறம் சென்று அவனது இரு கைகளையும் பிடித்து அந்த மப்ளரை வைத்து கட்டினாள்! அதனால் தன் பிடியை விலக்கிக் கொண்ட கீர்த்திவாசனுக்கு அவளது சமயோசித செயல் வியப்பளித்தது!

அமுதவானனுக்கு வசமாக மாட்டிக் கொண்டது புரிந்தது! அங்கிருந்து தப்பிக்கும் மார்க்கம் தேடினான்!

கணவன் மனைவி நீண்ட நாட்களுக்குப் பிறகான சந்திப்பில் ஒருவரை ஒருவர் பார்த்து பரவசத்துடன் நிற்க!

அப்போது எதிர்பாராதவிதமாக அமுதவானன், கட்டியிருந்த கைகளை ஒரே ஜம்ப்பில் முன்னுக்கு கொணர்ந்து கட்டை அவிழ்த்த கையோடு, இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்து அம்பரியை நோக்கி வீச, கடைசி நொடியில் அதை கவனித்துவிட்ட கீர்த்திவாசன், "அபிமா" என்ற கூவலுடன் சட்டென்று பாய்ந்து மனைவியை இழுத்து அணைத்துக் கொள்ள, கத்தி அவனது இடது கையில் பதிந்தது!

" ம்மாஆ..!" என்ற கீர்த்தி சத்தமிட, ,

அம்பரி, "அத்தான்" என்று வீறிட்டு மயங்கிச் சரிய, அதற்குள்ளாக, மாந்தோப்பிற்குள், ஒரு புறம் போலீஸ் ஜீப்பும், மறுபுறம் கிராமத்து ஆட்களும் திரண்டு வந்துவிட்டனர்! அவர்களுடன் செந்தாமரையும் அங்கே தன் வாகனத்தில் வந்து சேர்ந்தார்! கீர்த்தியையும் அம்பரியையும் பார்த்தவர், உடனடியாக அவரது வண்டியில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார்!

போலீசார் விரைந்து செயல்பட்டு, ஊர் மக்கள் உதவியுடன் அமுதவானனை பிடித்து கைது செய்தனர்!
🤎🤎🤎
கணவனும் மனைவியும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகு வீடு வந்தனர்! அம்பரி வீடு வரும்வரை ஏதும் பேசவில்லை! ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர் நிற்காமல் வழிந்தபடி இருந்தது! செந்தாமரை வாசல்வரை வந்து இருவரையும் வீட்டினரிடம் ஒப்படைத்துவிட்டு காவல் நிலையத்திற்கு கிளம்பிச் சென்றார்!

கீர்த்திக்கு வலிக்காக ஊசி போட்டிருந்ததால் அவனும் கொஞ்சம் மயக்க நிலையில் தான் இருந்தான்! ஆனால் மனைவியை பற்றிய கையை விடவில்லை!

கீழேயே ஒரு அறையை தயார் செய்ய சொல்லியிருந்தாள் அம்பரி! அதன்படி அந்த அறையில் கணவனை படுக்க வைத்து விட்டு அருகில் அமர்ந்தபோது, பெரியவர்கள் இருவரும் அங்கே கவலையுடன் வந்தனர்!

ஆனந்தவள்ளிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது! அன்று காலையில் தான் மருமகள் மகனுக்காக பரிசு வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடு திரும்பியிருக்க, மகனுக்கு இப்படி ஆகிவிட்டதே! என்று மிகவும் வருத்தமாக இருந்தது! அவரால் பேச முடியவில்லை மகனின் தலையை கோதியபடி அமர்ந்திருந்தார்!

"என்னதான் நடந்துச்சு அம்மு? மாப்பிள்ளைக்கு எப்படி அடிபட்டது? ஆமா, அவர் நாளைக்குதான் வர்றதா சொன்னே? இன்னிக்கு எப்படி எப்போது வந்தார்? நித்யமூர்த்தி குழப்பமாக கேட்க,நடந்ததை அம்பரி அழுதபடியே சொல்லி முடித்தாள்!

"அட பாவீ அவன் நல்லா இருப்பானா ? என் பூப்போன்ற மகளை கொன்னதும் இல்லாமல் இன்னொருத்தி வாழ்க்கையையும் சூரையாட நினைச்சானா? அவனை சும்மா விடக்கூடாது! என்றார் ஆவேசமாக

"இல்லை அப்பா! அவனை போலீஸ் பிடிச்சிருப்பாங்க! சட்டம் நிச்சயமாக அவனுக்கு தண்டனை கொடுக்கும் அப்பா!
"சரிம்மா, அந்த பேச்சு போதும் ! நீ போய் உடுப்பை மாத்திட்டு வாம்மா! நாங்க இருக்கிறோம்ல பார்த்துக்கிறோம்! என்றார் தந்தை.

"என்னால் தான் அப்பா அவருக்கு இப்படி ஆகிவிட்டது! என்று நின்றிருந்த கண்ணீர் மீண்டும் பெருகியது!

"பாப்பா, மாப்பிள்ளைக்கு காயம் ஆழமில்லைனு டாக்கடர் சொன்னார்னு நீதானே சொன்னே? சீக்கிரமா ஆறிடும் ! எதுக்கும் நம்ம கண்னணன் டாக்டர், வரட்டும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம் ! நீ போ முதலில் உடுப்பை மாற்றிவிட்டு காபி பலகாரம் சாப்பிடு!

வந்தது முதல் மாமியார் பேசாதது சங்கடத்தை கொடுக்க,"அத்தை! என்று தயக்கமாக அழைத்தாள் அம்பரி

"என்னடாம்மா? என்றவர் மருமகளின் எண்ணம் புரிந்தவராக, "இதெல்லம் நடக்கணும்னு இருக்கு அம்மு! தெய்வாதீனமா இரண்டு பேருக்கும் ஒன்றும் ஆகவில்லையே! அதுவே போதும்! போடாம்மா, ஆளே அசந்து தெரியறே! உன் புருசன் எழுந்து பார்க்கிறப்போ இப்படி இருந்தா நல்லாயிருக்குமா?" என்றதும் எழ முற்பட்டபோது தான் கணவனின் கையில் அவளது கையிருப்பதை கவனித்த அம்பரியின் முகம் லேசாக சிவந்தது! மெல்ல கையை பிரித்து எடுத்துக் கொண்டவள் அங்கிருந்து ஓடிவிட்டாள்!

பெரியவர்கள் இருவருக்கும் முன் எப்போதையும் விட, மனது நிறைந்து நிம்மதி உண்டாயிற்று!

அடுத்து வந்த ஒரு வாரமும் கீர்த்திவாசனும் சரி , அம்பரியும் சரி, தேவைக்கு மேல் பேசிக் கொள்ளவில்லை! அதற்கு காரணம் அவர்களுக்கான தனிமை கிடைக்காதது தான் காரணம் ! கிராமத்து ஆட்கள், மட்டுமின்றி அவனை அறிந்தவர்கள், சொந்த பந்தங்கள் என்று கீர்த்திவாசனை நலம் விசாரிக்க வருவதும் போவதுமாக இருக்க, மீதி நேரம் அவனது தூக்கத்திலுமாக கழிந்தது! இடையில் காவல்துறை விசாரணை வேறு!

இடையில் அமுதவானனின் பெற்றோர் கீர்த்தியை நலம் விசாரித்துவிட்டு, கண்ணீர் மல்க மன்னிப்பையும் வேண்டிவிட்டுப் போனார்கள்!

தகவல் அறிந்த இரு சகோதரிகளும் கணவன்மாருடன் வந்து இருந்து பார்த்தனர். தம்பிக்கு பெரிதாக காயம் இல்லை என்ற நிம்மதியுடன், அவர்களை விரைவில் எதிர்பார்ப்பதாக தெரிவித்து கிளம்பிச் சென்றனர்!

மேலும் நான்கு தினங்கள் அமைதியக கழிந்தது!

அமுதவானனுக்கு ஆறு மாத சிறை தண்டனை கிடைத்தது! அதுவும் கீர்த்திவாசன் அது குடும்பத் தகராறு என்று சொன்னதால் தான்! அதற்கு காரணம் செந்தாமரையின் நேர்மை! அவர் மட்டும் மகன் என்று பாராமல் அன்றைக்கு தகவல் சொல்லாதிருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்று அவனால் கற்பனை கூட செய்ய முடியவில்லை!

அத்தோடு அமுதவானனுக்கும் அவர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று எழுதி வாங்கினார்கள்! இனி ஒருமுறை அவன் அவர்கள் குடும்பத்தினருடன் தகராறு செய்தால், வழக்கை வேறு விதமாக போடுவதற்கு தயங்கமாட்டேன் என்று அவனை எச்சரித்திருந்தான் கீர்த்தி!
💙🤎💙
அன்று மருத்துவமனைக்கு கணவனும் மனைவியும் சென்றிருந்தனர்! காயம் பூரணமாக ஆகிவிட்டது என்று மருத்துவர் சொன்ன பிறகே அம்பரியின் மனம் சற்று சாந்தமடைந்தது!

அன்றைய இரவு அவர்களுக்கான அறையில் இருவரும் உரிமையுள்ள கணவன் மனைவியாக சந்தித்துக் கொணடபோது இருவருக்குமே சட்டென்று பேச்சு வரவில்லை! ஒருவாறு முதலில் சுதாரித்த அம்பரி, கண்கள் கலங்க அவனது ஆறிய காயத்தைப் பார்த்தவள், "உங்களுக்கு ஏதும் ஆகியிருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும் என்று நீங்கள் கொஞ்சமும் யோசிக்கவில்லையே அத்தான்!" என்று விசும்பினாள்!

அவளது அத்தான் என்ற விளிப்பில், கண்கள் மின்னியது, கண்ணீரை துடைத்துவிட்டு, "வாசன் எப்போதிருந்து அத்தானாக மாறினான்!" என்றான் கேலியான குரலில்!

அவள் வருந்துவது பிடிக்காமல் தான் அவன், வேண்டும் என்றே பேச்சை மாற்றுகிறான் என்று அம்பரிக்கு புரிந்தது! அதையே அவளும் பின்பற்றி, "அந்த பொறுக்கி அவனை என் அத்தான் என்று சொன்னான்! அப்போதுதான் எனக்கு நீங்கள் தான் அத்தான் என்பது புத்திக்கு உரைத்தது! அத்தை அப்படித்தானே என்னிடம் உங்களை குறிப்பிடுவார்கள்? அது நினைவுக்கு வந்தது! கல்யாணம் செய்ததிலும், அத்தை மகன் என்ற முறையிலும் நீங்கள் எனக்கு அத்தான் தானே?! ஆனால்...

அவளது பேச்சை ரசனையோடு கேட்டிருந்தவன்," என்ன ஆனால்?? என்று அவளை ஊக்கினான்!

"ம்ம்.. ஆனால் இந்த அத்தானுக்குத்தான் பெண்டாட்டி நினைப்பே இல்லை! நீங்கள் மட்டும் என்னோடு இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா ? என்றபோது அவளது குரல் தழுதழுத்துவிட..

கீர்த்திவாசன் பதறிப்போனவனாக, "ஷ் ஷ், அபிமா! அதுதான் ஒன்றும் ஆகவில்லையேடா, இனிமேல் இந்த கண்களில் கண்ணீர் வரவே கூடாது கண்ணம்மா! அதை பார்க்கும் சக்தி எனக்கில்லை! என்னோட ஜீவனே நீ தானடி! உன்னைப் பிரிந்து நான் மட்டும் அங்கே சந்தோசமாகவா இருந்தேன்? நீ இல்லாம நானும் இல்லை அபிமா" என்றவாறு மனைவியை தன்னோடு சேர்த்து அரவணைத்துக் கொண்டான்!

அவனிடம் இருந்து சட்டென விலகி, "ம்க்கும், இதெல்லாம் சும்மா சொல்றீங்க! சுத்த பொய், என்னை சமாதானம் செய்ய சொல்றீங்க! அப்படி ஆசை இருக்கிறவர் மலையில் போய் வாரக்கணக்காக உட்கார்ந்து இருப்பீங்களா?" என்றவளின் குரல் கமறியது!

"நான் என்ன செய்யட்டும் அபிமா? என் பெண்டாட்டிக்கு புத்தி வேலை செய்வதாகவே காணோம்! அதான் எனக்கும் வேற வழி தெரியவில்லை! என்றவன், "அப்படி ஐயா கிளம்பிப் போனதால் தான் அம்மணி, நீ அழைத்ததும் ஓடி வந்திருக்கிறேன்! என்றவாறு அவளை தன்புறம் திருப்பி அவள் விழிகளுக்குள் பார்த்தான்!

அம்பரியின் விழிகள் முதலில் கேள்வியாய், பிறகு விவரம் புரிந்து வியப்பாய் விரிந்தது! அவன் கண்ணை சிமிட்ட, சட்டென்று முகம் சிவக்க,"நீங்க பலே ஆள் தான்! போங்க அத்தான் " என்று சிணுங்கியவாறு அவன் மார்பில் தஞ்சமானாள் அம்பரி!

அவன் காதல் நிறைவேறியதில் மனம் நிறைந்த சிரிப்புடன், மனைவியை இறுக அணைத்து முத்தமிட்டான் கீர்த்திவாசன்!

கீர்த்திவாசனும் அம்பரியும் தங்கள் தாம்பத்திய வாழ்வில் அடியெடுத்து வைத்துவிட்டனர்!

அடுத்த பாகம் எபிலாக்!

*சுபம்*
 

Attachments

  • IMG-20191231-WA0006.jpg
    IMG-20191231-WA0006.jpg
    7.4 KB · Views: 43
Last edited: