1.எந்தன் தேன் ஜவ்வே..
எவ்வளவு பெரிய மேடை எனக்கே எனக்கான மேடை என்று ஆழ்ந்து பார்த்து கொண்டு இருக்க மிஸ்.தேன்மொழி என்ற அழைப்பில் அகம் மொத்தமாய் சந்தோஷத்தில் ஹேய் ஜெயிச்சிட்டேடி தேனு என்று கத்த…
அடச்சீ எழுந்திரி கழுதை, இருக்கிற வேலையை பார்க்க துப்பு இல்ல பொழுதனைக்கும் கனா தான் என்று முதுகில் படீரென அடி விழ அடித்து பிடித்து எழுந்து இருந்தாள் தேன்மொழி.
என்ன முழிக்கிற சேவல் கூவி எவ்வளவு நேரமாச்சு உனக்கு மட்டும் விடியாதா? உன் கூட பிறந்ததுங்க எல்லாம் நல்ல திசைக்கு போய்டுச்சு ஆனா நீ இருக்கியே என்று ஆரம்பித்து விட்டார் பார்வதி..
கண்கள் கலங்கித்தான் போனது தேனுவிற்கு பின்னே இன்றும் கனவு தான் என்று உணர்த்திய நிகழ்வு அல்லவா இந்த விழிப்பு…
அப்படி என்னத்த டி சொல்லிட்டேன் விடிஞ்சதும் கண்ணுல தண்ணி வைக்கிற..எழுந்த போய் வேலையை பாரு இன்னைக்கு நிறைய வேலை கிடக்கு நீ எல்லாத்தையும் முடிச்சி கிளம்பி உன் அப்பத்தா வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு வா அதுவரை உனக்கு இங்கன ஒரு வேலையும் இல்ல என்று படபடவென பொரிந்து விட்டு நகர்ந்து விட
தன் கனவுகளை மனதில் சுமந்து கொண்டு காலை வேலைகளை முடிக்கும் போது சரியாக மணி பத்தை கடந்து இருந்தது.
அம்மா இன்னமும் வேலை முடியலையா?
முடிஞ்சது கயலு நீ ரெடி ஆகிட்ட தானே
நான் ரெடி தான் நீ போய் தயார் ஆகு அப்புறம் வரவங்க உன்னையே வேலைக்காரி ன்னு நினைச்சிடப்போறாங்க
அடப் போடி இனி என்ன எப்படி நினைச்சா என்ன உனக்கு எல்லாம் கை கூடினா போதும் என்று இருவரும் பேசிக்கொண்டே போக
என்னம்மா விசேஷம் கிளம்பிட்டு இருக்கீங்க என்று தேன் மொழியை பார்த்த கயல்விழி,நீ இன்னும் கிளம்பல
எங்க கிளம்பனும் கயலு..
வேற எங்க அப்பத்தா வீட்டுக்கு தான்.
ஆமா அம்மா சொன்னாங்க
அப்புறம் என்ன இங்கேயே நின்னுட்டு கிளம்பு என்று சிறியவள் கத்த,
அறைக்குள் பார்வதிக்கு மனது கணமாகத்தான் இருந்தது அவளை வைத்து கொண்டு ஒவ்வொன்றும் செய்வது, ஆனா நான் என்ன பண்ண கடவுளே அவங்க அப்பா அவர் முடிவுல பிடியா இருக்காங்களே என்று நினைத்த பார்வதி, தேனு
சொல்லுமா …
அது ஒன்னு இல்ல இன்னைக்கு என்று தடுமாற..
எனக்கு எந்த வருத்தமும் கோவமும் இல்லம்மா என்ன கயலுக்கு மாப்ள அமைஞ்சு இருக்கு அதானே சந்தோஷம் நான் இப்ப கிளம்பிட்டேன் என்றவள் வழக்கம் போல தன் தூரிகையை எடுத்து கொண்டு வீட்டு வாசலை தாண்ட
வேலாயுதம் அவளை பார்த்து கொண்டே வீட்டிற்குள் சென்றவர்,எப்ப தான் இந்த மூத்தது திருந்தும் பார்வதி இப்பையும் பாரு அந்த பிரசை தூக்கிட்டு கிளம்பிட்டா…
……
என்ன பார்வதி நான் பேசிட்டே இருக்கேன் நீ பதிலே சொல்லாம இருக்க?
என்ன சொல்லனும் உங்களுக்கு?
என்ன ஏன் இப்படி பேசுற என்று வேலாயுதம் பார்வதியை பார்க்க
வேற என்ன சொல்லனும் சொல்லுங்க அவளும் நாம பெத்த பிள்ளை தானே அதெப்படிங்க உங்களுக்கு மனசு வந்துச்சு இப்படி ஒரு காரியம் பண்ண
ஏன் பார்வதி இப்படி பேசுற?
வேற எப்படி பேசனும் எனக்கு பேச்சே வரலை அவ முகத்தை பார்த்து இது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா உங்களுக்கு? செத்தா கூட இது அழியாது
நிறுத்து பார்வதி நான் என்னமோ அவளுக்கு எதையுமே பண்ணாத மாதிரி இல்ல பேசுற
அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்த பார்வதி விரக்தியாக புன்னகைத்து விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட,
கயல்,அப்பா விடுங்க இது என்ன புதுசா அம்மா முகத்த தூக்கி வச்சுக்கிறது அவளுக்கு ஒன்னுன்னா மட்டும் அவங்களுக்கு பாசம் பொங்கிடும் என்ற இளக்காரமாக சொல்ல
வெளக்கமாறு பிஞ்சுடும் தெரிஞ்சுக்க அவளை பத்தி பேசுனா என்று அடுப்படியில் இருந்து சத்தம் வர முகத்தை சுழித்து கொண்டு அறைக்குள் சென்றாள் கயல்விழி..
அடியேய் தேனு தேனு நில்லுடி…
மெதுவா தான் வாயேன் மாரி எதுக்கு இந்த ஓட்டம்
பின்ன உன்னையே பிடிக்க முடியாம இல்ல ஒரு வாரமாக அலையுறேன்.
அப்படி என்ன சங்கதி என்னைய தேடுற அளவுக்கு?
பின்ன இல்லையா உன்னோட படிச்சவங்க எல்லாம் அடுத்த மாசம் நம்ம ஸ்கூல்ல ஒன்னு சேர்ந்து மீட் பண்ணுறாங்களாம் உன்னையே தான் தேட முடியாம எல்லார் கிட்டேயும் விசாரிச்சாங்க
நீங்க இந்த ஊர் வந்தது தான் யாருக்கும் தெரியாதே உங்க அப்பா அப்படி இல்ல அங்க உள்ளவங்க கிட்ட பேச்சு வச்சுக்கிட்டு வந்து இருக்காங்க.
சரி அதை பத்தி என்ன இப்ப? எதுக்கு இப்ப இந்த விஷயம் எல்லாம்? நான் யாரையும் போய் பார்க்க போறது இல்ல,
ஏன் டி இப்படி இருக்க தேனு ஒரு முறை போய் தான் பாரேன் உனக்கும் ஒரு மாறுதல் கிடைக்கும்..
என்ன மாறுதல் கிடைக்கும் மாரி…
அடியேய் கூட கூட இங்க பேசு ஆனா வூட்டுல மட்டும் வாயை திறக்காத
மாரி..
ஆமாண்டி இன்னைக்கு உன் தொங்கச்சிக்கு மாப்ள பார்க்க வராங்கன்னு இல்ல நினைச்சிட்டு இருக்க
புருவசுழிப்புடன் தேனு மாரியை பார்க்க
என்னைய என்னத்த ஏற இறங்க பார்க்க அவளுக்கு இன்னைக்கு நிச்சயம் இன்னும் இருபது நாள்ல கல்யாணம் ஏதாவது தெரியுமா உனக்கு ஊர்ல இருக்க நாய் பேய் ஏன் மூத்திர சந்துல இருக்கிற கழுதைக்கு கூட தெரியும் ஆனா
எனக்கும் தெரியும் மாரி
போதும் டி உன் வூட்ட விட்டு கொடுக்க சொல்லியோ இல்ல எதிர்த்து பேசிச் சொல்லியோ சொல்லல இதுக்கு மேல உனக்கான வாழ்க்கையை தேடப் பாரு ஊர் உலகத்துல எந்த பிள்ளையும் உன்ன மாதிரி இல்லையா ?
இல்ல தெரியாமல்தான் கேட்கிறேன் இதெல்லாம் ஒரு குறையா டி இப்படி ஒரு மனுஷனை நான் பார்த்ததே இல்ல
மாரி..
போடி என்கிட்டே கத்தாத அப்புறம் கையில கொடுத்த பேப்பர் ல உன் பிரண்ட் அதான் டி அந்த மினுக்கி மேனகா நம்பர் இருக்கு அவளுக்கு பேசு அவ தான் கிடந்து தவிக்கிறா உன்ன பார்க்க என்றவள் நகர்ந்து விட..
புன்னகையுடன் கடந்த கால நினைவுகளுடன் அப்பத்தா வீட்டை நோக்கி நடந்தாள் தேன்மொழி..
…….
என்னம்மா உனக்கு பிரச்சினை இன்னைக்கு எனக்கு ஒரு நல்லது நடக்கிறது உனக்கு பிடிக்கல அதான் இப்படி ஆரம்பிச்சு வச்சு இருக்க?
நான் எப்ப கயலு அப்படி சொன்னேன் நீ தயார் ஆகு நான் இருக்கிற வேலையை முடிக்கிறேன்.
என்னம்மா வேலை அதான் சாப்பாட்டுக்கு எல்லாம் நானும் அண்ணனும் காசு குடுத்து ரெடி பண்ணிட்டோம். வரவங்களை வாங்கன்னு கூப்பிட்டா போதும் நீ தான் வெளியே பந்தல் கூட போட விடல என்று ஆரம்பிக்க
வேலாயுதம்,”கயலு நீ உள்ள போ
ஆமா ப்பா என் வாயை மட்டும் அடைங்க
ஏன் மாமா கல்யாண பொண்ணை வருத்தப்பட வைக்குறீங்க என்று உள்ளே நுழைந்தாள் இந்த வீட்டு மருமகள் மதி..
வாம்மா வாடா கார்த்தி…
என்னம்மா காலையே ஆரம்பிச்சுட்டீங்களா?
நீயுமா கார்த்தி..
ஏன் மா நாங்க என்ன அவளுக்கு நல்லது நடக்க கூடாதுன்னா நினைக்கிறோம் யாரும் ஒத்துவரல அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?
மதி கையில் இருந்த குழந்தையை அன்புடன் கையில் வாங்கிய பார்வதி தங்கம் மம்மூ சாப்பிடுறீங்களா…
கார்த்தி,”என்ன மா என்னைய அசிங்கப்படுத்துறீங்களா?
நான் எப்ப கார்த்தி அசிங்கப்படுத்தினேன் உன்னைய
இதோ இப்ப தான் நான் பேசுனதுக்கு பதிலே இல்லாம இருந்தா?
பார்வதி,”கடைசியா நீ தேனு கிட்ட எப்ப பேசின கார்த்தி
ஏன் இந்த கேள்வி என்பது போல் பார்க்க
சொல்லு கார்த்தி..
அது வந்து..
உன் கல்யாணத்திற்கு முன்னாடி உனக்கு கல்யாணம் ஆகி இதோ இந்த வருஷத்தோட நாலு முடியுது உன் பிள்ளைக்கு மூணு வயசு ஆகுது அவ பொறுப்பா இல்ல தான்,
ஆனா உன் பொண்ணு முதல் பொறந்த நாளைக்கு நானும் உங்க அப்பாவும் ஒரு செயின் போட்டோமே அதுல இருக்க அரை பவுன் டாலர் அவ வாங்கி கொடுத்தது அது உனக்கு தெரியுமா?
அம்மா என்று அதிர்வாய் கார்த்தி பார்க்க…
சொல்லு கார்த்தி இப்ப பதில் சொல்லேன்
பார்வதி …
சொல்லுங்க..
மாப்ள வீட்டுல வந்துடுவாங்க இப்ப இதுவா முக்கியம்?
ஆமாங்க முக்கியம் இல்ல தான் ஏன்னா அவங்க அவங்க வாழ்க்கையும் வளமும் ன்னு முக்கியமில்லையா அவ யாரோ தானே எனக்கு எல்லா வேலையும் முடிஞ்சது என்னால் ஆகவேண்டிய விஷயம் எதாவது இருக்கா?
பார்வதி இது கொஞ்சம் கூட நல்லா இல்ல..
அப்படியா ஏன் இந்த புடவை நல்லா இல்லையா…
வேலாயுதம் உச்ச கட்ட கோவத்தில் எழ..
அப்பா இருங்க, அம்மா நான் பேசி என்ன பண்ண போறேன் அவளும் தான் என்று ஆரம்பிக்கையில் பார்வதி முறைத்ததை பார்த்து,
சொல்லுப்பா உங்க அப்பாக்கு பிறகு அவளுக்கு அப்பா ஸ்தானம் நீ தான் ஆனா அவ கயிறு கட்டி இழுத்தா கூட நீ அந்த இடத்துக்கு வர தயாரா இல்ல ..
நான் ஒன்னு கேட்கவா கார்த்தி
என்ன மா
நாளைக்கு உன் பொண்ணு இப்படி இருந்தா நமக்கென்னன்னு தான் உங்க அப்பா மாதிரியும் உனக்கு ஒரு பையன் இருந்தா அவனும் நடப்பீங்களா கார்த்தி..
அத்த…
சொல்லும் மா…
என் பொண்ணை…
தப்பு தான் மா உன் பொண்ணை நான் உதாரணம் காட்டி இருக்க கூடாது ஏன்னா நீங்க யாரோ தானே.. என்றவர் குழந்தையை கீழே இறக்கி விட்டு உள்ளே சென்று விட கார்த்தி தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்…
……….
அப்பத்தா அப்பத்தா என்று உள்ளே நுழைந்தவளை பார்த்தவர் வா தேனு தொரத்தி விட்டுட்டாங்களா?
அதெல்லாம் இல்ல அப்பத்தா என்று சிரிக்க
இப்படி ஒரு புள்ளைக்கு எப்ப விடிவு காலம் வரும் ன்னே தெரியல என்று அவளையே பார்த்து இருக்க…
என்ன அப்பத்தா பகல் கனவா…
ஆமாண்டி எங்க காலத்துல பகல் கனவ நல்லதுன்னு சொல்லுவாங்க அதைத்தான் நினைச்சுட்டு இருக்கேன் என்று சொல்லி முடிக்கையில்
தேனு தேனு என்று உற்சாக குரலில் உள்ளே நுழைந்தவளை அப்பத்தா தேன்மொழி இருவரும் பார்க்க…
வேகமாக வந்து கட்டி கொண்டு நின்றாள் தேனின் இனிமை …
தேன்வருவாள்
Last edited: