• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

எனை மீட்டிடும் இசை 17

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
789
597
93
Chennai
அத்தியாயம் 17

"நல்ல விஷயத்தை வாசல்லயா சொல்றது? அதான் உள்ள வந்துட்டோம் ஆதி" என்று மீனாட்சி ஆரம்பித்து வைக்க, என்ன சொல்ல போகிறார் என நின்றான் ஆதி.

"ரெண்டு பேரோட ஜாதகப் பொருத்தமும் ரொம்ப அம்சமா பொருந்தி போகுதாம் டா" மீனாட்சி கூற, தேவியும் சிரித்தபடி இருந்தார்.

ஆதி தான் அதில் நெற்றி சுருக்கியவன் "ஜாதகமா? நாள் குறிக்கனு தானே சொன்னிங்க?" என்றவன் குரலில் கண்டிப்பு.

இவனிடம் கேட்ட பொழுதே ஒருமுறை என்றாலும் அழுத்தமாய் கூறி இருந்தான் ஜாதகம் பார்க்க வேண்டாம் என.

நல்லதாய் கூறி இருக்க போய் சரி.. இல்லையென்றால்? அதை நினைத்து தான் மறுத்திருந்தான்.

இப்பொழுது சொல்லாமல் அன்னை பார்த்து வந்திருக்க முதலில் கோபம் தான் நின்றது ஆதிக்கு.

மாரி வந்து குடிப்பதற்கு கொடுத்துவிட்டு செல்ல, பேசாமல் நின்றான் ஆதி.

"கோபப்படாத கண்ணா.. ஜாதகம் பார்த்துட்டா என்னனு தோணுச்சு.. தேவியும் சரினு சொல்லவும் தான் எடுத்துட்டு போனோம்.. சொன்னா நம்பமாட்ட.. உங்க ரெண்டு பேரோட பொருத்தம் அவ்ளோ அம்சமா இருக்குதாம் டா" என்று சொல்ல, அதில் அன்னை அளவுக்கு எல்லாம் மகிழ்ச்சி இல்லை ஆதிக்கு.

இது தான் என்று முடிவெடுத்த பின் ஏன் அதை சென்று பார்க்க வேண்டும்? நினைத்து சென்றதுக்கு எதிராய் இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தான் யோசிக்க தோன்றியது. அதனாலேயே அமைதியாய் நின்றான் அடுத்த செய்திக்காக.

அதிலேயே மகனின் மனமும் புரிந்து போனது மீனாட்சிக்கு.

"விடேன் ஆதி.. ஏதோ தோணுச்சு பாத்துட்டோம்.. இப்ப நல்லா தான இருக்கு?" என்றவர்,

"ஆனா உங்க ரெண்டு பேர் ராசிப்படியுமே இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் பண்ணியே ஆகணுமாம்.. அதுக்கு பிறகுன்னா ரெண்டு வருஷத்துக்கு நல்லது இல்லைனு சொல்லிட்டார்" என்று சொல்ல,

"மூணு மாசத்துலயா?" என்றான் அதிர்ந்து ஆதி.

"ஆமாப்பா.. ரொம்ப நல்ல நேரமாம்.." என்று தேவி ஆரம்பிக்க,

"ப்ச்! ம்மா.. பூவைக்கனு தானே சொல்லிட்டு போனீங்க? நான் சொன்னது மறந்து போச்சா?" என்றான் முறைப்பாய்.

தேவியும் அருகில் இருக்க சங்கடமாய் இருந்தது மீனாட்சிக்கு. எதுவும் பேசாதே என்பதாய் கண்களால் அவர் கெஞ்ச, அயர்ந்தான் அவன்.

"ஆதிக்கு சரிப்படலைனா வேணா இன்னொரு முறை வேற எங்கேயாவது.." என்று தேவி கூறவுமே,

"இல்ல இல்ல.. நான் அப்படி சொல்ல வர்ல" என எழுந்து கொண்டான் ஆதி.

"அம்மாகிட்ட ஒரு வருஷத்துல கல்யாணம் வைக்குற மாதிரி தான் பார்க்க சொன்னேன்... ஆனா மூணு மாசம்னா.." என்று அவன் முடிக்காமல் இருக்க,

"ஓஹ்!" என்றார் தேவி. இதை மீனாட்சி கூறி இருக்கவில்லை. எப்படிய் சம்மதிக்க வைத்துவிடலாம் என்று தான் நினைத்து மகிழ்ச்சியாய் வந்திருந்தார்.

"சரி மீனா.. நீங்க பேசி முடிவு பண்ணிட்டு சொல்லுங்க.." என்று கூறி சென்றுவிட்டார் தேவி.

அவர் செல்லவுமே குதிக்க ஆரம்பித்துவிட்டான் ஆதி. இந்த முறை மீனாட்சியும் விடுவதாய் இல்லை.

"என்ன டா விட்டா ரொம்ப பண்ற.. அறிவிருக்க எவனாவது பூ வச்சு ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிப்பானா? எந்த பொண்ணு வீட்ல தான் ஒத்துப்பாங்க சொல்லு.. ஏன் மூணு மாசத்துல பண்ணிட்டா என்ன குறைஞ்சுட போற நீ?" என்று வரிசையாய் அடுக்க,

'என்னவென்று புரிய வைக்க?' என்று தான் அயர்ந்து நின்றான்.

"எதுவும் மாறாது ஆதி.. சாரு தான் மருமகள்ன்னு முடிவான பின்னாடி அந்த கல்யாணம் எப்ப நடந்தா என்ன?" என்று மீனாட்சி கேட்க,

"அதையே தான் மா நானும் கேட்குறேன்.. எப்ப நடந்தா என்ன? என் மேல நம்பிக்கை இல்லையா?" என்றான் அவனும்.

"புரியாம பேசாத டா.. ஈசியா சொல்லிடுவ.. நீ ஆம்பள.. பொம்பள புள்ளைய பூ வச்சு எத்தனை நாள் வீட்ல வச்சு பார்த்துக்க முடியும்?" கோபமாய் மீனாட்சி கேட்க,

"ம்மா.. இந்த ஊருக்காக பேசுறது உறவுக்காக பேசுறதை விடுங்கனு எவ்வளவு சொல்றது உங்களுக்கு?" என்றான் அவனுமே.

"ஊர் உலகத்துக்காக பேசல.. சாருக்காக பேசுறேன்.. இந்த ஊர்ல இந்த உலகத்துல தான் நாமளும் வாழறோம் ஆதி.. பேசுறவங்க வாயை எல்லாம் பார்த்து பார்த்து அடைக்க முடியாது.. உடனே கல்யாணம் பண்றதா இருந்தா அடுத்து இதை பேசலாம்.." என்ற மீனாட்சி,

'இல்லையென்றால் வேண்டாம்' என்ற வார்த்தையை வார்த்தையாய் கூட சொல்ல விரும்பவில்லை.

"ம்மா!" போகிற அன்னையை அழைக்க,

"இதுக்கு மேல உன்கிட்ட வாதாட எனக்கு தெம்பில்ல.." என்று கூற, மொத்தமாய் குழம்பி நின்றான் ஆதி.

"உனக்காக வேணா சொல்றேன்.. பேசாம சாரு கூட பேசி நீயே ஒரு முடிவுக்கு வா.. ஏற்கனவே நீ வேண்டாம்னு சொல்லியும் அந்த புள்ள விடாம நின்னதால தான் இந்த அளவுக்கு பேச்சு வார்த்தை வந்திருக்கு.. அதனால அவகிட்ட பேசி முடிவு பண்றது தான் சரியா இருக்கும்" என்று பேச்சிற்காக மட்டுமே மீனாட்சி கூற, மூளையில் எங்கோ பல்ப் எறிந்தது ஆதிக்கு.

தியாகு பேசி சென்றதுன் எப்படி என்னவென்று பேச என நினைத்திருந்தவனுக்கு நல்லதொரு வாய்ப்பாய் தான் தோன்றியது இது.

"சரி மா" என்றவனை என்ன என்பது போல பார்த்தார் மீனாட்சி.

"நான் பேசிட்டு சொல்றேன்" என்று சொல்லவும், நிஜமாவா என்பதை போல பார்க்க அதற்கு பதில் சொல்லாமல் கிளம்பியே விட்டான் ஆதி.

அன்னையுடன் நடந்த வாக்குவாதம் எல்லாம் பின்னால் சென்றிருக்க, அவன் கேட்ட நேரமும் கிடைக்குமா என்று தெரியாமல் இருக்க, ஆதிக்கு இப்பொழுது முன் நின்றது சாருவை பார்க்கு ஒரு வாய்ப்பு.. அவளிடம் பேச ஒரு சில நிமிடங்கள்.. அது மட்டுமே நினைவில் மேல் நிற்க யோசிக்காமல் கிளம்பிவிட்டான்.

பாதி வழிக்கு மேல் சென்றதும் ஒரு பூக்கடையை பார்த்தவனுக்கு நினைவு எங்கோ சென்றது. தலையை உலுக்கிக் கொண்டான்.

'நீ மட்டும் போய் நிக்குறதுக்கே பேசியே கலாய்ச்சு தள்ளுவா.. பூ எல்லாம் வாங்கிட்டு போன.. நீ காலி!' தனக்கு தானே நினைத்துக் கொண்டவனுக்கு சிரிப்பு தான் அள்ளிக் கொண்டு வந்தது அந்த நிமிடம்.

பத்து இருபது நாட்களில் தான் இப்படி மாறி இருப்போம் என்ன நினைத்தும் பார்திருக்க மாட்டான் அவன். ஆதிக்கு அதில் ஆச்சர்யமே!.

அவ்வளவு உற்சாகமாய் இருந்தான் ஆதி.. என்னவெல்லாம் பேச போகிறாளோ என்ற எண்ணத்தில் அவன் போய் நின்றான். இன்னும் வகுப்பு முடிய ஒரு மணி நேரம் இருக்க, உள்ளே செல்ல தோன்றாமல், எப்படி கூப்பிடுவது என்றும் தெரியாமல் வெளியே யோசித்தபடி நிற்க, சாருவே வந்துவிட்டாள்.

ஜன்னல் அருகே வந்தவளுக்கு அங்கே நின்ற வண்டியைப் பார்த்ததும் ஒரு நொடி ஒன்றும் புரியாமல் போக, கண்களை கசக்கி, தலையை உலுக்கிவிட்டு நன்றாய் கண்களை விரித்துப் பார்க்க அது அவனுடையது தான்.

அவளைப் பார்க்க வந்திருப்பான் என நினைத்தும் பார்க்கவில்லை. எதாவது வேலையாய் வந்திருப்பானாய் இருக்கும் என்று தான் நினைத்தாள். ஆனாலும் இவ்வளவு தூரம் வந்தவனை பார்க்காமல் விட மனமில்லாமல் போக, வெளியே ஓடி வந்தாள்.

என்னவென்று அவளை அழைக்க என்றோ எப்படி பேச என்றோ தெரியாமல் இவ்வளவு தூரம் வந்தபின் அவள் முகம் பார்த்து பேச வந்த ஒருவிதமான நினைப்பில் அவன் நிற்க, அவனையே பார்த்தபடி அவன்முன் வந்து நின்றவளைப் பார்த்ததும் பக்கென்று தான் இருந்தது அவனுக்கு.

இதுவும் ஒருவித சுகமான அவஸ்தை நிலை தான் ஆதிக்கு. இப்பொழுதும் தன்னை தேட வைக்காமல் தன்முன் வந்து நிற்பவளைப் பார்த்து.

"என்ன இவ்வளவு தூரம்?" நிதானமாய் அவள் கேட்க, சாருவின் இந்த கேள்வியில் தானாய் ஒரு புன்னகை ஆதிக்கு. அதில் இன்னும் விழி விரித்து பார்த்தாள் சாரு.

யாருக்காகவும் எதற்காகவும் எழுந்த புன்னகையை மறைக்க முயலாமல் முழுதாய் அவள்முன் அவன் முதன்முதலாய் புன்னகைத்து நிற்க, விழிவிரித்து பார்த்து பின் சுதாரித்து தன் கையினை அழுத்தி கிள்ளிப் பார்க்க, வலித்தது.

நிஜம் தான்.. ஆதி தான் அவள் முன் நின்றது.. அதுவும் புன்னகை பூசி நின்றது.

"வாத்தி! இங்க எல்லாம் சட்டுன்னு ஃபுளோ வராது.. இப்படிலாம் சிரிச்சா நான் இங்கேயே மயங்கி விழுந்துருவேன்" சாரு மெதுவாய் மிக மெதுவாய் காற்றிற்க்கு கூட கேட்காத குரலில் பாவமாய் பேச, முதல்முதலாய் அவளை சீண்டிப் பார்க்க தோன்றியது ஆதிக்குமே.

"அப்ப என் கடைனா மட்டும் தான் உனக்கு வாய் நீளுது இல்ல?" என்று கேட்டவன் இதழ்களில் புன்னகை உறைந்து தான் நின்றது. மாறாய் சாரு தலைசுற்றி போய் நின்றிருந்தாள் அங்கே.

"சாருக்கா.." என்று சில மாணவர்கள் அவளை அழைக்கும் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தவள்,

"நான் வந்து பேசிக்குறேன்" என்று அவனை முறைத்து சொல்லிவிட்டு திரும்பியவள்,

"ஆமா இங்க யாரைப் பார்க்க வந்திங்க?" என்று திரும்பி கேட்க,

"கிளாஸ் முடிய நேரம் ஆகுமா?" என்றான் அவள் கேட்டதற்கு பதில் கூறாமல்.

அவன் பேசுவதற்கா, நிதானமாய் பேசுவதற்கா, அவன் முகம் தன்னில் தோன்றிய புன்னகைக்கா என தெரியாமல் அவள் பேச்சின்றி நிற்க,

"உன்கிட்ட பேசலாம்னு தான் வந்தேன்" என்றதில் இன்னுமே நம்பமுடியாமல் அதை முகத்திலும் காட்டி நின்றாள் சாரு.

இப்படி பேச வேண்டும் என்றெல்லாம் நினைக்கவே இல்லை ஆதி. அனைத்தும் தானாய் அங்கு நடந்து கொண்டிருந்தது.

பேசிக் கொண்டே இருப்பவள் அங்கே பேச்சை மறந்து நிற்க, யோசித்து யோசித்து பேசியவனோ அவளை சீண்ட எழுந்த எண்ணத்தில் தன்னையும் அறியாமல் பேசி நின்றான்.

"நிஜமாவே உன்கிட்ட பேச தான் வந்தேன்" மீண்டும் அவன் சொல்ல,

"இன்னைக்குன்னு என் நாக்குக்கு என்னாச்சுன்னு தெரியல வாத்தி.. புளோ வரலைனா பரவால்ல.. வார்த்தையே வர மாட்டுது.. காத்து தான் வருது" என்று அவள் சொல்லிய பாவனையில் இன்னும் அதிகமாய் சிரித்து அன்றைய நாளின் அதிகபட்ச அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அவளுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தான்.

"ரெண்டே நிமிஷம்.. இல்ல இல்ல ஒரே ஒரு நிமிஷம்... இப்ப இப்ப வந்திடுறேன்" சொல்லியபடியே ஓடினாள் உள்ளே.

அந்த நேரத்தில் தான் தான் செய்து வைத்ததையும் செய்து கொண்டிருந்ததையுமே உணரந்திருந்தான் ஆதி.

இப்பொழுது அதிர்ச்சி எல்லாம் இல்லை அவனுக்கு. மனம் இதமாய் இருக்க, நினைவுகள் மேலும் அதற்கு சுகம் சேர்த்துக் கொண்டிருந்தது.

சாருவுடன் ஆன இந்த முதல் தனிமையையும் முதல் நிமிடங்களையும் என மனதில் நினைவுகளாய் கோர்த்துக் கொண்டிருந்தான் ஆதி.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
188
63
Coimbatore
பேசி பேசி வாயடித்தவள்
பேச்சற்றி நின்றால்....
பேசவே செய்யாதவன்
பேசி சீண்டி கொண்டு இருக்க....
பேஷ் பேஷ்.... நன்னா இருக்கு.... 🤩🤩🤩
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
789
597
93
Chennai
பேசி பேசி வாயடித்தவள்
பேச்சற்றி நின்றால்....
பேசவே செய்யாதவன்
பேசி சீண்டி கொண்டு இருக்க....
பேஷ் பேஷ்.... நன்னா இருக்கு.... 🤩🤩🤩
தேங்க் யூ