• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 8

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
அத்தியாயம் 8

ஆதியின் வீட்டில் எப்போதையும் விடவே ஒரு அமைதி அன்று இரவு. ஆதி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் மீனாட்சி மகளிடம் மட்டுமே பதில் கூற கடுப்பாகி போனான் சில நிமிடங்களில்.

"ம்மா! சாப்பாடாச்சும் எடுத்து வையுங்கம்மா" என்றதற்கும் அவர் அசையாமல் இருக்க, சுமதி எழுந்து கொண்டாள்.

"சுமதி இரு!" என்றவன்,

"என்னம்மா உங்க பிரச்சனை?" என்று கேட்க,

"சுமதி! நான் பேசலல்ல! என்கிட்டயும் யாரும் பேச வேண்டாம்" என்றார் கறாராய்.

"ப்ச் ம்மா! நீங்க என்ன சின்ன குழந்தையா? முதல்ல என்னனு சொல்லுங்க" ஆதி கேட்க,

"என்ன சொல்லுங்கவாம்.. இவன் சொல்ற மாதிரி எல்லாம் நடக்கணும்னா நேரா இவனுக்கு அறுபதாம் கல்யாணம் தான் பண்ணனும்.. சொல்லு டி" என்று மகளிடம் கூற, சுமதி இருவர் பேச்சையும் கேட்டு நின்றாளே தவிர பேசவில்லை.

"பரவாயில்ல.. அப்பவே பண்ணிக்குறேன்.." ஒன்றுமே இல்லை என்பதை போல அவன் கூற,

"வேணாம் டா என் வாயை கிளறாத!" என்றார் மகனிடம் நேராய்.

"இப்ப எதுக்கு இப்படி வம்பு பண்ணிட்டு இருக்கீங்க? அவங்களே புரிஞ்சிட்டு போய்ட்டாங்க தானே?" சாதாரணமாய் அவன் சொல்ல,

"அததான் சொல்றேன்.. அவங்க போய்ட்டாங்க.. போய் என்ன பண்ணுவாங்க? அந்த புள்ள காத கடிச்சு வேற கல்யாணம் பண்ணி வைப்பாங்க.." என்று கூறவும்,

"அதுக்கு என்னம்மா பண்ண முடியும்?" என்றான் இன்னும் சாதாரணமாய்,

"அது பிரச்சனை இல்ல.. அடுத்து தான் பிரச்சனையே! வியக்கியானமா இவ்வளவு பேசுறியே! உனக்குன்னு ஒரு கல்யாணம் நடந்து அவ வந்து இந்த வீட்டுல நாட்டாம பண்ணி நாத்தனாரையும் மாமியாரையும் தலையைப் புடிச்சி ஆட்டினா என்ன டா பண்ணுவ?" என்றதும் இவன் புரியாமல் விழிக்க,

"அது தான் நடக்க போகுது.. சாரு எப்படிபட்ட பொண்ணு.. இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போய்டும்" என்று கூறவும்,

'எது அவளா?' என்பதை போல அவன் பார்க்க,

"அந்த இடத்துல வர்ற இன்னொரு பொண்ணு எங்களை அப்படி தான் நினைக்க போறா" என்று கூற,

"ஏன் இந்த பொண்ணு அப்படி நினைக்க மாட்டானு சொல்றிங்க?" என்றான் உடனேயே.

அதற்கு பதில் சொல்ல முடியாவிட்டாலும், "பேசாத டா.. போச்சு.. உன்னால நல்ல சம்மந்தம் போச்சு.." என்று புலம்பலை தொடர,

"பசிக்குதும்மா" என்றான் அன்னையிடம். அவனை முறைத்தபடியே அவர் சாப்பாட்டினை எடுத்து வர,

"பத்திரிக்கை அடிக்க பேர் எழுத சொன்னேனே?" என்று சுமதியிடம் கேட்க, அவளும் பதில் கூற ஆரம்பிக்க, மீனாட்சி அவனின் இப்படியான கண்டு கொள்ளா தன்மையில் ஆயாசமாய் அமர்ந்தார்.

பேசி முடித்து ஆதி உறங்குவதற்கு தன் அறைக்கு வர, அவ்வளவு நேரம் இல்லாத அழுத்தம் இப்போது அவனுள்.

படுத்ததும் உறங்கிவிடுபவனுக்கு உறக்கம் வருவேனா என்று ஆட்டம் காட்டியது.

இவ்வளவு நாளும் சாரு வாய் ஓயாமல் பேசிக் கொண்டு தன்னை சுற்றி வந்து கிண்டல் செய்த போதெல்லாம் எந்தவொரு எண்ணமும் அவள்பால் வந்திருக்கவே இல்லை ஆதிக்கு.

இப்பொழுதும் கூட தான். ஆனால் இப்படி திருமணம் வரை பேச அன்னை தந்தையை அனுப்பி வைப்பாள் என்றும் நினைத்துக் கூட பார்த்தது இல்லை. அது என்னவோ ஒரு உறுத்தலாய் இருந்தது ஆதிக்கு.

எதற்காக இவ்வளவும் தனக்கு என்று அவள் செய்ய வேண்டும் என்று நினைத்தவனுக்கு அதற்கு பெயர் தான் அவள் காதல் என்கின்றாள் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இப்பொழுது எப்படியும் அவள் வீட்டினர் அவளிடம் கூறி இருப்பர் தானே? என்ன செய்வாள்? இன்னும் அப்படியே தான் நடந்து கொள்வாளா என நினைத்தவன்,

அவள் தந்தை எடுத்து சொல்லி இருப்பார் என்றும் தனக்கு தானே நினைத்துக் கொண்டான்.

திருமணம் என்ற ஒன்றை பற்றி இன்னும் நினைத்து பார்க்கவில்லை என்பது உண்மை தான். ஸ்ரீரங்கமும் தேவியும் இவனை சமாதானம் பேச பேச அவர்களிடம் மறுப்பு கூறவே அவ்வளவு கஷ்டமாய் இருந்தது.

யார் என்ன கூறினாலும் தான் நினைத்தது தான் சரி என்றும் அதற்கு பின் தான் அடுத்ததாய் யோசிக்கவே வேண்டும் என்றும் தெளிவாய் இருப்பதாய் நினைத்துக் கொண்டான் ஆதி.

சாரு வந்து தன்முன் நிற்கும் நேரங்களை தவிர அவளைப் பற்றி என்று தனியாய் நினைத்ததே இல்லை.

இப்பொழுது என்னவோ அவள் தந்தை தான் சொல்லியதை கூறியதும் அவள் என்ன சொல்லியிருப்பாள் என்றும் அடுத்து என்ன என்றும் தோன்ற, அந்த இரவுடன் அடுத்த நாள் விடிந்து கடை திறந்த பின்னும் அவள் வீட்டின் பக்கமே இருந்தது ஆதியின் கண்கள்.

பார்க்காத டா என்று சில நேரமும் பார்க்க மாட்டேன் என்று சில நேரமுமாய் ஓரக் கண்ணில் என்றும் அவன் கடையில் அமர்ந்து சாகசம் செய்ய, அங்கே சாருவோ சாவதானமாய் எழுந்து கிளம்பிக் கொண்டு இருந்தாள்.

நேற்றைய வாக்குவாதம் அவளை களைப்படைய வைத்திருக்க, எழுந்ததே வெகுநேரம் கழித்து தான்.

இன்னும் அவள் மேல் கோபமாய் தான் இருந்தார் தேவி. ஆதியின் காரணங்கள் ஸ்ரீரங்கத்திற்கு புரிந்தாலும் இது சாதாரணம் தானே என்று அவர் நினைத்திருக்க, தேவியால் அப்படி நினைக்க முடியவில்லை.

தாங்களே போய் கேட்டும் முடியாது என்றுவிட்டானே.. அப்படியா குறைந்து போய்விட்டோம் என்ற எண்ணம்.

அதை கூறினால் மகளுடன் கணவனுமே தனக்கு எதிரா ய் கொடி பிடிக்க, இன்னும் இன்னும் கோபம் மகள் மேல்.

இரவு அதனைக் கொண்டு வாக்குவாதங்கள் எழுந்திருக்க எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் இது தான் என் முடிவு என்று சாதாரணமாய் சொல்லி இருந்தாள் சாரு.

அதற்கு ஸ்ரீரங்கமும் எதிர்கேள்வி கேட்காமல் இருக்க, தேவி பேசி பேசி ஓய்ந்து போனார்.

"இது அவளோட வாழ்க்கை தேவி.. நீ கொஞ்சம் அமைதியா இரு.. அப்பா இல்லாத பையன்.. பொறுப்பா இருக்க நினைக்குறது தப்பா?" என்று ஸ்ரீரங்கம் கேட்க,

"உங்களுக்கு அது மட்டும் தெரியுதா? ஆதி தான் இவ வேண்டவே வேண்டாம்னு சொல்றானே?" என்று சொன்னதையே சொல்ல,

"அவனுக்கும் கொஞ்சம் யோசிக்க நேரம் குடுக்கலாம் தேவி தப்பில்ல.. அவன் நிலைமை அப்படி.. நினச்சு பாரு.. இப்ப தான் லோன் வாங்கி கடையை கட்டி இருக்கான்.. இப்ப தங்கச்சிக்கு கல்யாணமும் முடிவாகி இருக்கு.. இப்ப எப்படி அவன் கல்யாணத்தை பண்ணி நிம்மதியா இருக்க முடியும்?" என்று கேட்க, சாருக்குமே தந்தையின் வார்த்தைகள் தான் ஒரு ஆறுதலாய் இருந்தது அந்த நிமிடம்.

தந்தை ஆதிக்கு ஆதரவாய் பேசியதுடன் சில விஷயங்களையும் தெளிவுபடுத்தி இருக்க, அதில் கொஞ்சம் திடமாய் நின்றாள் சாரு.

அதற்க்கு முன்பே அன்னையிடம் ஆதிக்காக காத்திருப்பேன் என்று கூறியிருந்தாலும் ஒரு ஆதங்கம் அவன்மேல் இருந்தது என்னவோ உண்மை தான்.

தானே தன் தாய் தந்தைக்கு அவமதிப்பை தேடி தந்து விட்டோமோ என்று நினைத்து இருக்க, நிச்சயம் ஸ்ரீரங்கம் வார்த்தைகள் தான் அவளை தெளிவுபடுத்தியது.

அத்துடன் ஸ்ரீரங்கம் தன்னுடன் ஆதியையுமே புரிந்து வைத்திருக்க, அத்தனை நிம்மதி அவளுள்.

"தேங்க்ஸ் பா" என்றுவிட்டு தான் உறங்கவே சென்றாள் இரவு.

"குட் மார்னிங் ண்ணா!" என்று வந்து சேர்ந்தான் மாரி.

"ஒரு நேரத்துக்கு வர மாட்டியா டா? இஷ்டத்துக்கு வந்து போற நீ" சம்மந்தமே இல்லாமல் இப்படி ஆதி கோபம் காட்ட,

"என்னையவா?" என்றான் மாரி.

"ஆமா இங்க பத்து பதினஞ்சு பேர் இருக்காங்க.. கேட்குறான் பாரு" என்று அதற்கும் காய,

"காலையிலே டென்சன் போல.." என்று எண்ணிக் கொண்ட மாரி எதுவும் பேசாமல் அமர்ந்தான்.

மாரி நேரம் கொண்டு எல்லாம் வந்தது இல்லை இதுநாள் வரை. விடுமுறை என்றால் முழு நேரம்.. கல்லூரி என்றால் பகுதி நேரம் என இருக்க, இன்று விடுமுறை என்று காலையிலே வந்திருக்க, அதற்கு போய் திட்டுபவன்
முகத்தை கொண்டே அமைதியாகி இருந்தான் மாரி.

சாருவும் விடுமுறை என்று வீட்டில் இருந்தவள் ஒரு மணி நேரத்திலேயே வெளியே கிளம்பி விட்டாள். அதற்கும் தந்தை துணை.

வெளியில் வரும்பொழுதே தனக்கு தானே பலமுறை சொல்லி இருந்தாள் சாரு "அவன் பக்கம் திரும்பாதே திரும்பாதே" என்று.

கோபம் என்று இல்லை என்றாலும் ஒரு வித கலக்கம் அவனால் அவனது மறுப்பால் வந்திருக்க, எதையும் முகத்தில் காட்டி விடுபவள் இதையுமே தன் பாராமுகத்தால் காட்ட நினைத்திருந்தால்.

நினைக்க மட்டும் தான் முடிந்தது.. வாசலில் இறங்கவுமே அனுமதி இன்றி அவள் கண்கள் ஆதியை நோக்கி சென்றிருக்க, நொடி நேரம் என்றாலும் இரு கண்களும் சந்தித்துக் கொண்டது அப்பொழுது.

முதன்முதலாய் அவளை காண, நேற்றைய தினத்திற்கு பின்னான நிகழ்வை தெரிந்து கொள்ள என ஆதி பார்த்து காத்துக் கொண்டிருக்க, சரியாய் கவனித்துக் கொண்டது இரு கண்களும்.

ஆதி தான் முதலில் திரும்பிக் கொண்டது. தானே அறியாமல் அவன் அந்த பக்கம் திரும்பி இருக்க சாருவும் அந்த நேரம் நோக்கி இருக்க நொடிக்குள் விலகிக் கொண்டது ஆதியின் பார்வை.

"செய்யுறதையும் செஞ்சிட்டு பார்வை வேற! அந்த கண்ணை நோண்டுறேனா இல்லையா பாரு" முணுமுணுத்தபடி சாரு வண்டியை ஸ்டார்ட் செய்ய அந்த சத்தத்தில் தான் அவளை கவனித்தான் மாரி.

எடுத்தவள் கண்டு கொள்ளாமல் ரோட்டில் வண்டியை நகர்த்த, "க்கோவ்!" என்று மாரி அழைத்தான்.

'எரியுற விளக்கு பக்கத்துல இன்னொரு விளக்கு வைக்குறான்' ஆதி நினைத்தவன் திரும்பமால் இருக்க,

"சொல்லு டா" என்றாள் சத்தமாய் அருகில் வராமல்.

"ன்னக்கா.. உடம்பு எதுனா சரில்லையா? ஆள் இல்லைனாலே அலப்பறை பறக்கும்.. இன்னைக்கு இருந்தும் கண்டுக்காம போற?" மாரி கேட்க,

"யாரு பொழப்பையும் கெடுக்க கூடாதுல்ல! நமக்கெதுக்கு டா அடுத்தவங்க பாவம்? யாரோட முன்னேற்றதுக்கும் நாம தடையா இருக்க கூடாது" என்று சாரு கூற, பே என விழித்தான் மாரி.

ஆதிக்கு கூட ஒரு நொடி கைகள் செய்த வேலையை நிறுத்தம் செய்திருந்தது.

அவள் கண்டு கொள்ளாமல் அப்படியே சென்றிருந்தால் கூட பெரிதாய் எடுத்திருக்க மாட்டானோ என்னவோ, அவள் வார்த்தைகள் மனதை சுருக்கென தைக்க, ஏற்கனவே ஒருவித அவஸ்தையில் இருந்தவன் தன்னையும் அறியாமல் நிமிர்ந்து பார்த்திருந்தான்.

சாருவும் இப்படி பேச வேண்டும் என்றெல்லாம் நினைத்திருக்கவில்லை. மனதின் வேதனை தன்னையும் அறியாமல் அந்த நேரம் வெளிப்பட்டிருந்தது.

அதில் குழப்பதுடன் மாரியுடன் அங்கே நின்ற தியாகுவுமே இருவரையும் பார்த்து நின்றான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
ஆதங்கத்தில் வார்த்தைகள் விழ
ஆதியின் விழிகள் வெறுமையில் விழிக்க
ஆசைக்கும் ஆதங்த்துக்கும் நடுவில்
அல்லாடூம் இரு மனங்கள்.....
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
841
634
93
Chennai
ஆதங்கத்தில் வார்த்தைகள் விழ
ஆதியின் விழிகள் வெறுமையில் விழிக்க
ஆசைக்கும் ஆதங்த்துக்கும் நடுவில்
அல்லாடூம் இரு மனங்கள்.....
அழகு