• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 19

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
ருத்ரனை ஏதாவது செய்வதற்காக சாதனாவை தன் உதவிக்கு அழைத்தாள் சாகித்யா. அவளும் மகிழ்ச்சியாக தன் அண்ணனை படுத்துவதற்கு சம்மதம் தெரிவித்தாள்.


ஏற்கனவே மாலை நேர சிற்றுண்டியாக வாழைக்காய் பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி தயார் செய்வதற்கு அனைத்தையும் ரெடி செய்து வைத்திருந்தனர். இரண்டையும் பார்த்தவர்கள் மனதில் ஒரு யோசனை சிரித்துக்கொண்டே இருவரும் கையில் ஒரு பொருளை எடுத்தனர். சாகித்யா கையில் வாழைக்காய் பதில் பாகற்காய் இருக்க சாதனா கையில் பஜ்ஜி மிளகாய் பதிலாக பச்சைமிளகாய் இருந்தது.


இருவரும் மற்றவர் முகத்தை பார்த்து சிரித்துக்கொண்டே ருத்ரனுக்கு மட்டும் ஸ்பெஷலாக பாகற்காய் பஜ்ஜி மற்றும் பச்சை மிளகாய் பஜ்ஜி தயார் செய்தனர். குடிப்பதற்கு அனைவருக்கும் தேநீர் தயார் செய்தனர். ருத்ரன் தேனீரில் மட்டும் சாகித்யா தனியா தூள் போட அதைப் பார்த்த சாதனா தன் பங்கிற்கு மிளகுத்தூளை போட்டாள். இருவரும் அதை நன்றாக கலக்கி வெளியே கொண்டு வந்தனர். அனைத்தையும் எடுத்து வைத்தவர்கள் முகத்தில் இதை குடித்தால் ருத்ரன் எவ்வாறு இருப்பான் என்று எண்ணி சிரிப்பு வர, கிச்சனை விட்டு வெளியே வரும்போது எப்பொழுதும் வருவது போல நார்மலாக வந்தனர்.


முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு இருவரும் அனைவருக்கும் பரிமாறினார்கள். ருத்ரன் அவர்கள் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் முதலில் வேறு யாராவது சாப்பிடட்டும் என்று எண்ணி அமைதி காத்தான். மற்றவர்கள் சாதாரணமாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தனர். உண்மையில் அவர்கள் சமைத்தது மிக அருமையாக இருக்க, விக்னேஷ் இருவரையும் பார்த்து "உண்மையா ரொம்ப நல்லா சமைச்சு இருக்கீங்க" என்று பாராட்டினான்.


அனைவரும் அவன் கூறுவது உண்மை என்பது போல் ஒரு புன்னகையை அவர்களை நோக்கி செலுத்தினர். அவர்களும் பதிலுக்கு ஒரு புன்னகையை சிந்திவிட்டு, தங்களுக்கென கொண்டுவந்ததை எடுத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்தனர்.


அனைவரும் நன்றாக இருப்பதாக கூறிய காரணத்தினால் சாகித்யா கொண்டுவந்த பாகற்காய் பஜ்ஜியை வாழைக்காய் பஜ்ஜி என்று நம்பி வாயில் வைத்து கடித்தான். அதில் அவன் முகம் அஷ்ட கோணலாக மாறியது. அதைப்பார்த்து சாகித்யா வாய்க்குள் சிரிக்க அதைப்பார்த்த ருத்ரன் அவளை தன்னுடைய மனதில் வறுத்து எடுத்துக்கொண்டு, தன் தங்கை தனக்கு எதிராக எதுவும் செய்திருக்க மாட்டா என்று நம்பி பச்சை மிளகாய் பஜ்ஜி ஒரு கடி கடித்தான்.


இரண்டையும் அவனால் மெல்லவும் முடியவில்லை துப்பவும் முடியவில்லை காரம் மற்றும் கசப்பு அவன் வாயில் நன்றாக தெரிந்து இருந்தது. அப்போது தான் இருவர் முகத்தையும் பார்த்தவன், அவர்கள் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்துவிட்டு மனதில் "இரண்டு குரங்கு குட்டிகளும் கூட்டு சேர்ந்து விட்டது. இனி கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும்" என்று எண்ணிக்கொண்டு அதை முழுங்குவதற்காக தேநீரை கையில் எடுத்தான்.


ஆனால் அந்தோ பரிதாபம் அது அதற்கு மேல் இருக்க இருவரையும் முறைத்து பார்க்க ஆரம்பித்தவன், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் கொண்டுவந்த தேனீரை சாதனா வாயில் ஊற்றிவிட்டு தன் மனைவியை இழுத்துக்கொண்டு சென்றான்.


அனைவரும் அதனைக் கேள்வியாக பார்க்க அதனால் தன் வாயில் தன் அண்ணன் கொடுத்த தேநீரை குடிக்க முடியாமல் கிச்சன் ஓடி சென்று துப்பினாள். பின்பு அவசரமாக பிரிட்ஜை திறந்து அதில் இருந்த ஒரு மிட்டாயை எடுத்து வாயில் போட்டு சாப்பிட்ட பிறகு வாயில் உள்ள காரம் குறைய அமைதியாக வந்து அமர்ந்தாள்.


சாகித்யாவின் கைபிடித்து அழைத்து சென்ற ருத்ரன் கீழே உள்ள தங்கள் ரூமுக்கு சென்றான். உள்ளே வந்து கதவை மூடி தாள் போட்டவன். அதே வேகத்தில் தன் மனைவியை பிடித்த கைகளுக்குள் கொண்டுவந்து அவளுடைய இதழ் மேல் தன்னுடைய இதழை பொருத்தினான்.


சாகித்யா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ஒரு நிமிடம் அதிர்ந்தவள், பின்பு சுதாரித்து விலக நினைக்கும் போது அவள் வாயில் கசப்பு மற்றும் கார சுவை தெரிய ஆரம்பித்தது. அப்போதுதான் அவளுக்கு ஒரு விஷயம் புரிய ஆரம்பித்தது. தன் கணவன் இதுவரை சாப்பிடாமல் தன் வாயில் வைத்து இருந்த அனைத்தையும் அவளுடைய வாயில் புகுத்தி விட்டான். அதே போல் அவள் விழுங்கும் வரை அவன் விடப்போவதில்லை என்பதை வேறு வழியில்லாமல் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்தாள்.


மொத்தத்தையும் அவளிடம் மாற்றிவிட்டு நிதானமாக தன்னுடைய மனைவியின் இதழை ருசித்தவன். பின்பு அவளை விட்டுவிட்டு "இனி இதுமாதிரி ஏதாவது சாப்பிடும் பொருளில் ஏடாகூடம் செய்தாய் என்றால், இப்படித்தான் நீ அனுபவிப்பாய் ஆனாலும் இதுவும் மிகவும் டேஸ்டாக தான் இருந்தது" என்று தன்னுடைய இதழை தடவிக்கொண்டே வெளியே சென்றுவிட்டான்.


ருத்ரன் வெளியே சென்றவுடன் அவசரமாக தன் கையிலிருந்த அதிகமாக சர்க்கரை சேர்த்த தன்னுடைய தேநீரை குடித்தவள், ஆசுவாசமாக அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள். பின்பு "இனி எக்காரணம் கொண்டும் சாப்பிடும் பொருளில் இந்த மாதிரி பண்ண கூடாது. நாம ஒண்ணு நினைத்து செஞ்சா அது நமக்கே திரும்ப வருது இருந்தாலும் உன்னை நான் விடமாட்டேன் இன்னும் எண்ணலாம் பண்றேன் பாரு" என்று வாய்விட்டே புலம்பிக் கொண்டு வெளியே வந்தாள். ஆனாலும் தன் கணவன் செய்த செயலால் அவளுடைய முகம் வெட்கத்தில் சிவந்து தான் இருந்தது. வெளியே வரும்போது தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டே நார்மலாக வருவது போல் வந்தாள்.


அனைவரும் அவர்களுக்குள் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்பதை யோசித்தாலும் அதை கேட்டு அவர்களை சங்கடப்பட வைக்க விரும்பாமல் அமைதியாக தங்கள் சாப்பிடும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு அனைவரும் தங்களுடைய வேலைகளை கவனிக்க சென்று விட இவர்கள் மூவர் மட்டுமே அந்த வீட்டில் என்றாகிப் போனது.


அன்றைய இரவு சமையலை சிம்பிளாக செய்து சாப்பிட்டு முடித்துவிட்டு தங்களுடைய அறைக்கு சென்று தூங்க ஆரம்பித்தனர். வழக்கம்போல் அதற்குமேல் அங்கே எந்தவித பேச்சுவார்த்தையும் இருக்கவில்லை. ருத்ரன் கைகளுக்குள் இருந்த சாகித்யா அவனுடைய முகத்தை பார்த்து மனதில் பேச ஆரம்பித்தாள் "உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதனாலதான் உன்ன தப்பா நினைச்சு அடிச்ச போது கூட நான் பயந்தேன், ஏன்னா நமக்கு பிடிச்ச ஒருத்தருக்கு நம்மளை பிடிக்காமல் போய்விடுமோ அப்படிங்கற பயம் தான் காரணம். ஆனால் நீ எனக்கு மாமாவா வரப்போற அப்படிங்கற விஷயமே தெரியும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இருந்தாலும் என்னோட அக்கா வாழ்க்கை நல்லா இருக்கும் அப்படின்னு மனசை தேத்திக்கிட்டு அமைதியாய் இருந்தேன். எதிர்பாராதவிதமா எனக்கு நீ கணவனாக கிடைச்ச ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையில் தான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீ முன்னமே சொல்லி இருந்தா உண்மையாவே நான் ரொம்ப சந்தோஷமா இந்த கல்யாணத்தில் கலந்து கொண்டு இருந்து இருப்பேன்.



எத்தனையோ நாள் என்னோட மனசுல நீ என்ன பிடிக்காம தான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தியோ அப்படிங்கற யோசனை அடிச்சுகிட்டே இருந்துச்சு. ஆனா இப்போ அது எல்லாம் இல்ல அப்படின்னு நினைக்கும்போது ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருக்கு, இன்னொரு பக்கம் நான் ஆசையா செய்யவேண்டியதை எல்லாத்தையும் பயத்தோடும் ஒரு கடமைக்காக செய்தத நினைக்கும்போது கஷ்டமாகவும் இருக்கு. கண்டிப்பா என் மனசுல இருக்க இந்த விஷயம் மாறும் அப்போ ரொம்ப சந்தோஷமான வாழ்க்கையை நம்ம வாழலாம்" என்று எண்ணிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.


இவ்வளவு நேரம் மனதில் பேசியதாக எண்ணிக் கொண்டு மெதுவாக புலம்பிக் கொண்டிருந்த சாகித்யா தூங்க ஆரம்பித்து விட்டாள், என்பதை உணர்ந்த ருத்ரன் மெதுவாக கண் விழித்து பார்த்து "என்ன மன்னிச்சிடு தியா உன்னோட ஆசை எல்லாத்தையும் கண்டிப்பா நான் நிறைவேற்றுவேன். ஆனால் மறுபடி கல்யாணம் பண்ணுவது நடக்காத காரியம் அதுக்கு பதிலா வேற மாதிரி உன்னோட ஆசை எல்லாத்தையும் நான் நிறைவேற்றி வைக்கிறேன். நீ படிச்சி முடி அதுக்கப்புறம் நாம சந்தோஷமா வாழலாம்" என்று மென்மையாக அவள் அதை பூ முகத்தை பார்த்து கூறிவிட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு தூங்க ஆரம்பித்தான்.


மறுநாள் முதல் ருத்ரன் அலுவலகம் கிளம்ப காலையில் அவன் போடுவதற்கு எடுத்து வைத்திருக்கும் சட்டையில் ஏதாவது ஊற்றி நாசம் செய்வது சாகித்யா செய்யும் அன்றாட வேலையாகும். ஆனால் ருத்ரன் அதை கண்டுகொள்ளாமல் அவள் துவைப்பதற்கு எடுத்து வைத்திருக்கும் துணிகளோடு அதையும் போட்டுவிட்டு வேறு சட்டை மாட்டி விட்டு சென்று விடுவான். அவள் அதை துவைக்காமல் எடுத்து தனியாக வைத்து விட்டால் மாலை வீட்டிற்கு வந்த பிறகு அவளுடைய ரெண்டு செட் சுடிதாரை துவைக்கும் அளவிற்கு நாசம் செய்து விடுவான். அதனாலேயே வேறு வழியில்லாமல் அதை துவைத்து போட்டு விடுவாள்.


விடுமுறை நாட்கள் இன்னும் அதிகம் இருந்ததால் வேறு நேரம் போகாமல் புதிதாக ஏதாவது செய்து பார்ப்போம் என்று சாகித்யா மற்றும் சாதனா சமைக்க ஆரம்பித்து இருந்தனர். அவர்களுக்கு மிகவும் கைகொடுத்தது யூடியூப் அதை வைத்து புதிது புதிதாக ஏதாவது செய்து ருத்ரனை சோதனை எலியாக மாற்றி தங்களுடைய சமையலில் மெருகேறி கொண்டிருந்தனர்.


ஒரு வாரம் முழுவதும் புதிதாக கற்றுக் கொண்டதை அந்த வாரம் ஞாயிறு வீட்டிற்கு வரும் தங்கள் சகோதரன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் செய்து கொடுத்து அவர்களுடைய பாராட்டை பெற்றுக் கொள்வார்கள். இதை அனைத்தையும் பார்த்து மகிழ்ந்து போனார்கள் அனைவரும், ஏனென்றால் இதன் மூலம் சாதனா சாகித்யா இருவருக்கும் ஒரு நெருக்கம் வளர ஆரம்பித்திருந்தது. அதேபோல்தான் கணவன்-மனைவி இடையே சிறுசிறு தீண்டல்கள் ஒருவருக்கு ஒருவர் ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது செய்வது போல் பாசம் காட்டுவது, என்று உண்மையான காதலின் அடித்தளம் சாகித்யா மனதில் உருவாக ஆரம்பித்திருந்தது.


சரியாக திங்கள்கிழமை கல்லூரி திறக்கப் போகிறது என்ற நிலைமையில் ஞாயிற்றுக்கிழமை அனைவரும் வீட்டிற்கு வந்து இருந்தனர். அனைவரும் ஒன்றாக அரட்டையடித்து மதியநேர சமையலை சாப்பிட்டு கொண்டிருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்து நின்றாள் பிரீத்தி.


வாசலுக்கு வந்த ப்ரீத்தி உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து உள்ளுக்குள் எரிய ஆரம்பித்தாள். எப்படியாவது இங்கே இவர்களுடன் தங்கியிருந்து ருத்ரன் மற்றும் சாகித்யா இருவரையும் பிரிக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.


வீட்டின் அழைப்புமணியை சத்தத்தில் அனைவரும் வாசலை நோக்கி திரும்பினார்கள். அங்கே பிரீத்தி நின்று கொண்டிருப்பதை பார்த்த சாதனா மற்றும் சாகித்யா இருவரும் ஒரு முறை தங்களுடைய முகத்தை சுருக்கி விட்டு பின்பு சகஜமாக மாற்றினார்கள். ருத்ரன் அவளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்பது தமிழர் பண்பு என்பதால் அவளை பார்த்த சாதனா "வா இங்கே என்ன விஷயமா வந்திருக்க நீங்க வர்றதா அத்தை கூட சொல்லவே இல்லையே?" என்று கேட்டாள்.


எதற்கு வந்தாய் என்று கேட்கிறாயா என்ற ரீதியில் மனதில் எண்ணிக்கொண்டே ப்ரீத்தி வெளியில் சிரித்த முகத்துடன் "இங்க பக்கத்துல ஒரு வேலையா வந்தேன் நீங்க இங்க இருக்கிறதா அத்தை ஏற்கனவே சொல்லி இருந்தாங்க. அதனால உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க தான் யார்கிட்டயும் சொல்லாமல் வந்தேன்" என்று கூறினாள்.


அவள் முகத்தை பார்த்ததில் அவள் அவ்வளவு நல்லவ அல்ல என்கின்ற விஷயம் அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாக தெரிந்தது. ஆனாலும் அமைதியாக அனைவரும் தங்களுடைய சாப்பிடும் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தனர். அங்கிருந்த யாரும் அவளை சாப்பிடுகிறாயா என்று சம்பிரதாயத்திற்கு கூட கேட்கவில்லை சாதனா பாதி சாப்பாட்டில் இருந்து எழுந்து சென்று அவளை அழைத்தாள். இதற்கு மேல் விட்டால் அவள் பேசிக் கொண்டே இருப்பாள், என்பதை உணர்ந்த சாகித்யா சாதனாவை பார்த்து "சாது அவங்கள அங்க இருக்கிற சோபாவுல உக்கார வச்சுட்டு வந்து சாப்பிடு மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்" என்று கூறினாள்.


சாதனாவின் சாகித்யா கூறியதுபோல் அவளை அங்கு உள்ள சோபாவில் அமர சொல்லிவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தாள். அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு ருத்ரன் அனைவரையும் பார்த்து "நான் ரூமுக்கு போறேன் நீங்க எல்லாரும் சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு" என்று கூறியவன், சாகித்யா சாதனா இருவரையும் பார்த்து ஒரு புன்னகையை சிந்திவிட்டு ரூமுக்கு சென்று விட்டான்.


அந்த புன்னகை இவளை நீங்கள் இருவருமே சமாளித்துக் கொள்ளுங்கள் என்ற ரீதியில் இருந்தது. அவர்களும் அதை பார்த்துவிட்டு மாத்தி மாத்தி முகத்தை பார்த்துக் கொண்டே சாப்பிட்டுவிட்டு எழுந்தனர்.


ருத்ரன் கூறியதை வைத்தே மற்றவர்கள் அனைவரும் ஓய்வெடுக்க மேலே சென்று விட, சாதனா சாகித்யா இருவரும் ஒரு ஜூஸ் போட்டு கொண்டு ப்ரீத்தி அருகில் சென்றனர். அந்த ஜூஸை வாங்கிய ப்ரீத்தி சாதனாவை பார்த்து "என்ன சாதனா என்ன உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி தர சொல்லி எங்க அம்மா வந்து கேட்கும் போது, எங்களோட வசதி எல்லாம் வச்சு பேசினீங்க இப்ப என்னடான்னா ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலி மாதிரி உள்ள வீட்டில் வந்து இருக்கீங்க! அதுமட்டுமில்லாம உங்க அம்மா அப்பாவை விட்டு உங்க அண்ணன் தனியா வேற வந்து இருக்காங்க என்ன விஷயம்?" என்று நக்கலாக கேட்டாள்.


சாதனா பதில் கூறுவதற்கு முன் சாகித்யா "அதாவது எங்க அத்தையும் மாமாவும் புதுசா கல்யாணம் ஆகி இருக்க எங்களுக்கு ஒரு பிரைவசி கொடுக்கலாம் அப்படின்னு ஒரு மூணு வருஷம் மட்டும் இங்க தனியா வைத்து இருக்காங்க. ஆனா எங்களுக்கு துணையா அவங்க பொண்ணையும் எங்க கூட தான் விட்டிருக்காங்க. எங்க வீட்டில எப்போவுமே ஸ்டேட்டஸ் பார்க்கிற மாதிரி எனக்கு தெரியல ஆனா மனசு நல்ல மனசு இருந்தா கண்டிப்பா உங்க வீட்டுல சொல்லும்போது கல்யாணம் பண்ணி வச்சு இருப்பாங்க போல, ஒருவேளை உங்க வீட்ல யாராவது தப்பு பண்ணி இருக்கீங்களா?" என்று கேட்டாள்.


அவள் இவ்வாறு கேட்பாள் என்று எதிர்பார்க்காத ப்ரீத்தி சாகித்யாவை முறைக்க ஆரம்பித்தாள். அதைப் பார்த்த சாதனா ப்ரீத்தி முன்பு தன் கைகளை ஆட்டி "ஹலோ அவ என்னோட அண்ணி இந்த முறைக்கிற வேலை எல்லாம் இங்க வேணாம். நீ எப்படிப்பட்டவ எதுக்காக எங்க அண்ணனை கல்யாணம் பண்ண நினைச்ச அப்படிங்கற எல்லா விசயமும் உங்களுக்கு தெரியும். நீ ஒண்ணுமே இல்லாத குடும்பத்தில் இருந்து இருந்தாலும் நீ நல்ல குணம் உள்ள பெண்ணாக இருந்தா எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருப்பாங்க. ஆனா நீ ஒரு கேடுகெட்டவ பணத்துக்காக என்ன வேணா செய்வே எங்க அண்ணன கல்யாணம் பண்ண முடியல அப்படின்னு தெரிஞ்ச உடனே, வேற ஒருத்தன பிடிக்க தானே செஞ்ச. இப்போ அவனோட பிசினஸ் நஷ்டம் ஆயிற்று அதனால மறுபடியும் எங்க அண்ணன் கிட்ட வந்தீங்க. இப்போ என்ன எங்க அண்ணன் அண்ணி இரண்டு பேரையும் பிரிக்க வந்து இருக்க போல! அது கனவுல கூட நடக்காது ஒழுங்கா ஜூஸ குளிச்சிட்டு வெளியே கிளம்பி போய்கிட்டே இரு இல்ல கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவேன்" என்று காட்டமாக கூறினாள்.


இருவரும் கைகட்டி நிமிர்ந்து நிற்பதை பார்த்த பிரீத்தி இவர்களை தற்போது எதுவும் செய்ய இயலாது வேறு யார் மூலமாவது கவனித்துக் கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு கையிலிருந்த ஜூசை அப்படியே வைத்துவிட்டு கோபமாக வெளியே சென்று விட்டாள். இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் அறையில் இருந்த ருத்ரன் கேட்டுக் கொண்டுதான் இருந்தான். அதேபோல் மேலே சென்றவர்களும் நடந்ததை பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். அவள் வெளியே சென்றவுடன் இருவரும் அங்கிருந்த ஜூஸை பார்த்துவிட்டு வெளியே இவர்கள் வாங்கி போட்டிருந்த நாய்க்குட்டிக்கு சென்று ஊற்றினார்கள்.


பின்பு சாகித்தியா அதைப்பார்த்து "நீ கவலை படாதே இந்த ஜூஸை அவள் தொட்டு கூட பார்க்கவில்லை அதனால நீ குடி உனக்கு அப்புறமா நான் பிரியாணி கொண்டு வரேன்" என்று கூறினாள். சாதனா அதன் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அனைவரும் இவர்கள் இருவரையும் நினைத்து சிரித்துக் கொண்டு சென்றனர்.


வெளியே வந்த ப்ரீத்தி தன்னுடைய அலைபேசியை எடுத்து யாரோ ஒருவருக்கு தகவல் தெரிவித்து விட்டு அவர்களை பார்க்க கிளம்பி சென்றாள்.


மறு நாள் கல்லூரி ஆரம்பமாக ஒரு வாரம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்றது. காலையிலிருந்து இருவரையும் கொண்டு கல்லூரியில் விட்டு விட்டு அலுவலகம் சென்றான் அதேபோல் மாலை இருவரையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து விடுவான். சுவாதி மதி அபிஷா மற்றும் பிந்து நால்வரும் எப்பொழுதும் போல் சகஜமாக இருக்க சந்தியா மற்றும் அர்ச்சனா தங்களுடைய வாலை சுருட்டிக் கொண்டு அமைதியாக இருந்தனர்.


தர்ஷன் தூரத்திலிருந்து அவளுடைய மகிழ்ச்சியை பார்த்துவிட்டு அமைதியாக சென்று விடுவான். உண்மையாகவே சாகித்தியா முகம் மகிழ்ச்சியாக இருந்தது எப்பொழுதும் அவளுடைய முகத்தில் ஒரு புன்னகை இருந்துகொண்டே இருந்தது.


ஒரு வாரம் கழித்து ருத்ரன் இடம் அடுத்த சண்டைக்கு தயார் ஆனாள் சாகித்யா.
இவர்கள் வாழ்க்கை இதேபோல் மகிழ்ச்சியாக செல்லுமா அல்லது ஏதேனும் பிரச்சனை வருமா என்பதனையும் அப்படி என்ன சண்டை என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பு தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.