• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்மேல் விழுந்த மழையே!-1

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
98
40
18
Tiruppur
அத்தியாயம்-1


காற்றில் மெல்ல குளிர் பரவத் தொடங்கி இருந்தது. நீல வானத்தில் வெண் மேகங்கள் சட்டென்று வண்ணம் கொட்டியதைப் போல் சாம்பல் நிறமாகவும், கருமை நிறத்திலும் மாற ஆரம்பித்திருந்தது. வெயிலின் தாக்கம் குறைந்து ஒரு விதமான அழுத்தம் காற்றில் நிறைந்து காணப்பட்டது. கோவையின் வடக்குப் பகுதியில் உள்ள மலை அடிவாரத்திற்கு அருகில் சாந்தமுடன் வீற்றிருந்தது ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் மருத்துவமனை. கண்களை உறுத்தாத இள வான் நீலம் பூசப் பட்ட கட்டிடத்திலிருந்து படிக்கட்டில் ஒரு பக்கத் தோளில் பேக்கை மாட்டியவாறு இறங்கினாள் அந்தப் பெண்.

1000116699.jpg



ஆரஞ்சு நிற ஓப்பன் டாப்பில் கழுத்தின் ஓரத்திலும், கையின் இரண்டு பக்க பார்டர் மற்றும் கீழ்ப்பகுதியிலும் கருப்பும், தங்க நிறமும் கலந்து டிசைன் காணப்பட்டது. அதற்கு மேட்சாக கருப்பு நிற லெகின்ஸ். அவளுடைய மாநிறத்திற்கு அந்த உடை அழகாக இருந்தது. பாதங்களில் கருப்பு நிறத்தில் ஹில்ஸ் வைக்கப்பட்ட ஒரு ஷூக்கள் அணிந்து டக் டக் என்று லேசாக ஒலி எழுப்பியபடி படிகளில் இறங்கினாள்.
தன்னுடன் வந்தவர்களுக்கு பாய் சொல்லி அனுப்பிய பின் மீண்டும் நடக்க ஆரம்பித்தவள் மீண்டும் ஒரு முறை திரும்பி தான் வெளியே வந்த கட்டிடத்தைத் திரும்பிப் பார்த்தாள்.


‘ஜி பிளாக்.’ என்ற ஆங்கில எழுத்துகள் கருப்பு நிறம் பூசிய மெட்டலில் பெரிதாக செய்யப்பட்டு கட்டிடத்தின் முகத்தில் இருந்தது. பிறகு வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். மழை வரும் என்று தோன்றியது. நெற்றியைத் தேய்த்தப்படி நேராக நடக்க ஆரம்பித்தாள். மருத்துவமனைக்குச் சற்று தொலைவில் கருப்பாகத் தெரிந்த மேற்கு தொடர்ச்சி மலை அதன் தலையில் மேகங்களால் ஆன வெண்சாம்பல் கீரீடத்தைச் சுமந்து கொண்டிருந்தது.
வழக்கமாக இந்த மருத்துவமனையில் இப்படி நடப்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இன்று அவசர கதியில் இருந்தாள். மழை நன்றாக பேய்வதற்குள் அவள் வீட்டை அடைய வேண்டும். மழையில் நனைந்து சென்றால் அவளுக்கு உடலுக்கு ஒவ்வாது.
அதனால் நடையை எட்டிப் போட்டாள். நினைத்த இடத்தில் எல்லாம் இங்கு வாகனத்தைப் பார்க்கிங்க் செய்ய முடியாது. சிறிது தூரம் நடக்க வேண்டும். மருத்துவமனை என்பதால் ஆம்புலன்சுகள் மட்டுமே உள்ளே வந்து செல்ல முடியும்.




மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும் கேட்டின் அருகே அமைந்துள்ளது. மருத்துவமனையின் அமைதியைக் கெடுக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.


ஆனால் அவள் இன்று அவள் இந்த ஏற்பாட்டை நொந்து கொள்ள வேண்டி இருந்தது. ஐந்தடி உயரம் ஒல்லியான தேகம் அவளுக்கு. ஆனால் இப்போது இன்னும் இளைத்திருந்தாள். சிறிது தூரம் நடப்பதற்கே கால் வலித்தது. கோல்ப் கார்ட் வண்டிகளும் இல்லை.
ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக நடந்தவள் பார்க்கிங்கை அடைந்து விட்டாள். வாட்ச் மேன் அவளைப் பார்த்ததும் ஒரு சல்யூட் வைத்தாள். அவருக்கு பாய் சொல்லியப்படி அண்டர்கிரவுண்ட் பார்க்கிங்க் இடத்தில் நுழைந்தாள். சட்டென்று இருந்த பிரகாசமான விளக்குகள் கண்ணைக் கூசுவது போல் இருந்தது. அந்த நேரம் அங்கு யாரும் இல்லை. தன் ஸ்கூட்டி இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.
மயில் கழுத்து நிறத்தில் அந்த டிவிஸ் ஜூபிடர் ஸ்கூட்டி பளபளத்துக் கொண்டிருந்தது. அது அதிக எடையுள்ள ஸ்கூட்டி வகைகளில் ஒன்று.


தன் வெண்ணிறக் கோட்டைக் கழற்றியவள் ஸ்கூட்டியின் சீட்டின் மீது வைத்து பேக்கில் மடித்து வைத்தாள். பிறகு அதிலிருந்து கருப்பும் ஆரஞ்சும் கலந்த துப்பட்டாவை எடுத்து தோள்களில் போட்டுக் கொண்டாள். சாவியை நுழைத்தவள் அதற்கு உயிரூட்டினாள். பின் பக்கத்தைத் திறந்து ஹெல்மெட்டை எடுத்து விட்டு அதில் தன் பேக்கை வைக்க முடியுமா என்று பார்த்தாள். ஆனால் அது இடம் கொள்ளவில்லை. அதனால் சலிப்புடன் அதை லாக் செய்து விட்டு மீண்டும் ஸ்கூட்டியின் முன் பக்கத்தில் பேக்கை வைத்து விட்டு சாவியை இஞ்சினை இயக்கும் பகுதியில் வைத்து திருப்பினாள். இதற்கே அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது. அதை ஒதுக்கித் தள்ளியவள் ஏறி அமர்ந்து ஸ்கூட்டியின் ஸ்டாண்டை விடுவித்தாள். அதற்குள் தலை சுற்றியது போல் இருந்தது. ஸ்கூட்டியிலிருந்து கை தடுமாறியது. கண்கள் இருட்ட ஆரம்பித்தது.
கண் விழித்தாள் அவள். மேலே ஏதோ கருப்பு நிறத்தில் தெரிந்தது. ஒரு லைட் தெரிந்தது.


பக்கவாட்டில் கண்களை ஓட விட்டவளுக்கு அது கார் என்று புரிந்தது. தான் எப்படி காரில் என்ற சிந்தனை எழுந்தது. சட்டென்று எழுந்து அமர்ந்தாள். பார்க்கிங்கில் தான் இருக்கிறோம் என்று புரிந்தது. காரின் முன் பக்கத்தைப் பார்த்தவளுக்கு அது யாருடைய கார் என்று புரிந்து விட்டது.



உடனே கதவைத் திறந்து வெளியே வந்தாள். மீண்டும் தலை கிறு கிறுத்தது. தான் விழுந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவனுக்குச் சொந்தமான எதிலும் இருப்பது அவளுக்குப் பிடித்தமில்லை. அவனைச் சார்ந்த எதிலும் அவள் விரல் தீண்டுவதில் கூட அவளுக்கு விருப்பமில்லை. அவனிருந்தால் அந்த இடத்தில் அவள் இருக்கமாட்டாள். தள்ளாடியபடியே அவள் வாகனத்தைத் தேடியவளுக்கு அது கண்களில் பட ஒரு நிம்மதி பிறந்தது. அந்த நிலையிலும் அவன் மேல் இருந்த கோபத்தில் தன் உடலை அவளுடைய வாகனத்தை நோக்கி நகர்த்தினாள் என்று சொல்லலாம்.


தன் ஸ்கூட்டியை அடைந்தவுடன் கால்கள் மீண்டும் தளர்ந்தது. தலையும் சுற்றுவது போல் இருந்தது. தன் ஸ்கூட்டியின் மீதே தலையைப் பிடித்துக் கொண்டே சாய்ந்து நின்றாள். அவளுடைய பேக்கும் சாவியும் அதில் தான் இருந்தது. ஏறி உட்கார்ந்து மீண்டும் அதை ஸ்டார்ட் செய்ய முயன்றாள். ஆனால் உடல் மீண்டும் தளர்ந்து சாய்ந்தது. பலமான எதிலோ மோதியது.
அவள் முகத்தில் குளிர்ச்சியாக ஏதோ நீர் தெளிக்கப்பட்டது. கண்களைத் திறந்தாள். எதிரே அவன் முகம் தெரிந்தது. ஏதோ கனவு போல் முகத்தைச் சுளித்தாள். எதிரில் இருப்பவனின் முகத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை.


“ஏய் கண்ணைத் தொறடி கௌ. முழிச்சுப் பாரு.” அவன் குரல் வேறு கேட்டது. மீண்டும் நன்றாக கண்களைத் திறந்து பார்த்தாள். இப்போது தெளிவு வந்திருந்தது.
அவளுடைய முதுகில் பின் பக்கம், இடது பக்கம், வலது பக்க இடையில் வெப்பத்தை உணர்ந்தவள். நன்றாக விழித்துப் பார்த்தாள். அவன் கைகளிலும், மார்பிலும் சிறைப் பட்டிருந்தாள்.


‘அவன் தான்..’

அவளை அழுத்திப் பிடித்திருந்தான் அவன். அவனின் தொடுதல் அவளின் உடல் வெப்பத்தை விட மனதில் உள்ள வெம்மையை அதிகப்படுத்தியது. அந்த நிலையிலும் அவனின் தொடுதலை விலக்க முயன்று கொண்டிருந்தாள்.உடனே அவனை விட்டு விலக முயன்றாள். ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.


“சும்மா இருடி கௌ. ரொம்ப துள்ளாமல் இரு. அப்பதான் என்னாலையும் சரியா செய்ய முடியும்.”
ஆனால் அவள் அவன் பேச்சைக் கேட்கும் ஆளில்லையே.


“வாயைத் தொறடி.” அவள் வாயைத் திறக்கவில்லை. ஆனால் வழுக்கட்டாயமாக கீழ்த் தாடையைப் பிடித்து ஏதோ ஒரு இனிப்பான திரவம் ஊற்றப்பட்டது. தொண்டைக் குழியில் அவளையும் மீறி அது இறங்கியது.அது அவளுக்குப் மிகவும் இதமாய் இருந்தது.
சில நிமிடங்களில் சக்தி பெற்றாள். நன்றாக தெளிவு வந்திருந்தது. உடனே எழுந்து கண்களை விரித்துப் பார்த்தாள். அவளை அப்படியே பிடித்து அமர வைத்தான் அவன்.


அவள் வாயில் குளுக்கோஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றப்பட்டிருந்தது. அதன் சக்திதான் அது. உடலில் இரத்தம் அழுத்தம் மிகவும் குறைந்து, காய்ச்சலால் சரியாக உண்ணாமல் மயங்கி இருந்தவளுக்கு குளுக்கோசைப் புகட்டி எழ வைத்திருந்தான்.
பார்க்கிங்க்கில் உள்ள ஒரு பெஞ்சில் இருந்தனர் இருவரும்.


“ஏய் எப்ப டி கடைசியா சாப்பிட்ட?” உரிமையுடன் அவன் கேட்டான். இவள் அதற்கு பதில் கூறவில்லை. தான் இவ்வளவு கேட்டும் அழுத்தமாக பதில் கூறாதவளை கேள்வியுடன் பார்த்தான் அவன். சிறிது எரிச்சலும் கலந்திருந்தது.
அவளுடைய உடலில் வெம்மை அதிகரித்திருப்பது போன்று அவனுக்குத் தெரிந்தது. அவளை அப்படியே பெஞ்சில் விட்டு விட்டு தன்னுடைய காரில் உள்ள மெடிக்கல் கிட்டில் உள்ள டிஜிட்டல் தெர்மா மீட்டரைத் தேடி எடுத்தான். எடுத்தவன் அவளின் அனுமதி இல்லாமலேயே அவளுடைய காதில் வைத்தான். அவளுடைய தடுப்புகள் எதுவும் அவனிடம் எடுபடவில்லை.
தெர்மா மீட்டர் பீப் என்ற ஓலியுடன் 39.2 டிகிரி என்று காட்டியது. காய்ச்சல் இருப்பது தெரிந்து விட்டது.


“காய்ச்சல் இருக்கு. காரில் ஏறு. இரண்டு பேரும் ஹாஸ்பிட்டல் போயிட்டு. அப்புறம் வீட்டில் டிராப் பன்றேன்.”
அவனுடைய இந்த நடத்தை அவளுக்கு எரிச்சலை மூட்டிக் கொண்டிருந்தது. பலவீனமும், அவளுடைய இயலாமையும் அதற்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தது. அவனுடைய உதவியைப் பெறுவது அவளுக்கு இந்த நிலையிலும் பிடிக்கவில்லை.



“வேணாம்.. நான்.. பார்த்துகிறேன்..” குரல் தீனமாக ஒலித்தது.


“உன்னை நீ பார்த்துக்கற லட்சணம் நல்லாவே தெரியுது.” என முனுமுனுத்தான் அவன்.


“உடம்புக்கு முடியலைனா சொல்றதுக்கு என்ன?”

“சொல்றதுக்கு.. யாருமில்லை..” அவள் குரல் அழுத்தமாக ஒலித்தது.


“உனக்கு பிடிவாதம் ஜாஸ்தி ஆகிடிச்சுடி பேபி. அப்படி என்ன என் மேல் உனக்கு கோபம்? ஏன் இப்படி நடந்துக்கற?” எனக் கூறியவன் அவளை சும்மா விடவில்லை.
ஆனால் அவன் கூறினால் அதை நிச்சயம் நிகழ்த்துவான். அவளுடைய மறுப்புகள் எல்லாம் காதில் போட்டுக் கொள்ள அவள் ஸ்கூட்டி சாவியை எடுத்துவிட்டு அதை லாக் செய்து அவளுடைய பேக்கில் போட்டு விட்டான்.


பின்பு அதைத் தூக்கி தன் காரின் முன் புறம் வைத்தான். அவள் மறுப்புகள் அனைத்தும் காற்றில் கரைய அவளைத் தூக்கிக் காரின் பின் புறம் அமர வைத்தான். பின்பு சட்டென காரில் ஏறி காரை லாக் செய்து விட்டான்.


அவள் மறுக்க மறுக்க மருத்துவமனைக்குச் சென்று காட்டி விட்டு மீண்டும் அதே காரில் அவளை அழைத்து வந்தான். அவள் பிடிவாதக்காரி. அவன் அழுத்தக்காரன். இருவரில் இன்று அவன்தான் ஜெயித்திருந்தான்.



தொப்பம்பட்டி அருகே கார் நெருங்கிக் கொண்டிருந்தது. வெளியில் தூரல் போடும் போலிருந்ததில் மலை முகடுகள் முகில்களின் போர்வை அணிந்து அழகாக காட்சி அளித்தது. அதை அத்தனையும் கவனித்தப்படி காரை ஓட்டினாலும் அவன் மனதிலும் ஒரு வகையில் கோபம் கனன்று கொண்டிருந்தது. அந்த பி.எம்.டபிள்யூ இசட் 4 கன்வர்ஷியபில் அவள் வீட்டின் முன் நின்றது.



“பிருத்விகா கெட் டவுன்.”
அவன் வாயிலிருந்து இப்போதுதான் அவளுடைய பெயர் வெளிப்பட்டிருக்கிறது. அவள் பிருத்விகா ஸ்ரீ. எம்.டி சைக்கியாட்ரி இரண்டாம் வருடம் ஸ்பிரிங்க் மெண்டல் ஹெல்த் செண்டரில் படித்துக் கொண்டிருக்கிறாள்.