• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் மாண்புறு மங்கையே-Inba muthuraj

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
ஓர் அர்த்த சாம நேரத்தில் தெருவில் ஏதோ சலசலப்பு. யதேச்சையாக விழிப்பு தட்டியது.
சனம் சத்தமாக பேசியது காதில் விழவே வேண்டா வெறுப்பாக எழுந்து வெளியே வந்தேன். சுமார் நாற்பது மதிக்கத்தக்க ஒருவனை ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள்.
அரை உறக்கத்தில், அருகிலிருந்த தம்பி ஒருவனிடம் விசாரித்தேன். ஒரு வீட்டைச் சுட்டி, "அந்த வூட்டுக்குள்ள ஏறி சாடிட்டாம்ணே இவன்" என்றான்.
அங்கே ஒரு பெண் கண்களை கசக்கியவாறு நிற்கிறாள். கட்டப்பட்டிருந்தவன் கதறுகிறான். அவன் ஆடைகள் அவிழ்கப்பட்டிருக்கிறது. வெறும் உள்ளாடையோடு தேம்புகிறான். நிறைய அடிகள் வாங்கியிருக்கிறான். பரிதாப உணர்வுதான் வந்தது. "அட அவுத்து வுடுங்கப்பா" என எவனாவது சொன்னால் சொல்பவனுக்கும் அடி விழும் போல. அவ்வளவு மூர்க்கமாக இருந்தது. வதை தொடர்கிறது. அவனுக்கு விடிவுக்கு வழியே இல்லையே என எண்ணுகையில் திடீரென வந்தாள் ஒருத்தி. அவனை அந்த கோலத்தில் பார்த்ததும் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவனை மின் கம்பத்தோடு அணைத்துக்கொண்டு கதறினாள். திடீரென ஆவேசம் வந்தவளாய் அத்தனை பேர் கூட்டத்தில் அவள் வாதாடினாள் பாருங்கள். எந்த சினிமாவிலும் அப்படியொரு நீதிமன்ற காட்சியை பார்த்ததில்லை. எமனிடம் வாதிட்டு கணவனை மீட்டவளை பார்த்ததில்லை. ஆனால் பார்த்தேன் இவளை. மொத்த கூட்டமும் வாயற்று நின்றது. முடிச்சுகளை அவிழ்த்து ஆங்காரமாய் அழைத்துச் சென்றாள் தன் கணவனை. சொல்ல வருவது.... அந்த மின் கம்பத்தில் இருந்தது மனைவியாக இருந்து மீட்டுச் சென்றது கணவன் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியுமா? ஆனால் ஒரு பெண் இதை செய்கிறாள். பல வீடுகளில் அவள்தான் மீட்பாளர். அவள்தான் யாவும். இவன் எவ்வளவு சம்பாதிக்கட்டும். எவ்வளவு வெளிவட்டார அணுகுமுறைகள் அறிந்தவனாகவும் இருக்கட்டும். வீட்டுக்குள் பாத்திரம் கழுவும் அவளின் அன்பிற்கோ, அறிவுக்கோ இவன் அரைஞான் கயிரளவு கூட இல்லை என்பது நான் பெற்ற அனுபவ அறிவு.

வீட்டில் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட ஒருத்தி மணமாகிச் சென்றாள். அங்கேயும் அவள் மகாராணியாகவேதான் வாழ்ந்தாள். திடீரென ஒருநாள் கணவன் நோய்வாய்பட்டார். வெளியுலகம் அறிந்திராத அவள் அந்த கணவனை மீட்க எடுத்துக்கொண்ட சிரத்தைகள் ஒவ்வொன்றும் கண்ணில் நீர் சுரக்க வைப்பவை.
மருத்துவமனையில் கணவன். திடீரென மருந்து தேவைப்பட்டது. இரவு ஒன்பதரை ஆகிவிட்டது நேரம். அவள் மட்டும்தான் இருக்கிறாள். அவள்தான் சென்றாக வேண்டும். அந்த அகன்ற நகரத்தில் எங்கெங்கோ ஓடினாள். சில மருந்தகங்கள் அடைத்துக்கிடந்தது. சில மருந்தகங்களில் அம்மருந்து இல்லை. எங்கோ இருக்கும் ஒரு மருந்தகத்தில் சாமத்தில் வாங்கினாள். இருட்டும், வெளிச்சமுமாக நகரும் வழியெங்கும் நாய்கள் துரத்துகிறது. அடர்ந்த காடு போன்ற அச்சம். அதில் சிறிதான ஒளிக்கீற்று போல தைரியம். ஓடினாள். தன் கணவனை அடைந்தாள், அழுதாள், அடைகாத்தாள். சொல்ல வருவது எவ்வளவு அஞ்சி வளர்ந்தாலும் ஒரு பெண்ணுக்கு இலக்கு என வந்தால் அச்சத்தை அவள் வெல்வாள். அவள் பிரியத்திற்கு நிகராக உவமைகொள்ள எதுவுமே இல்லை என்பதே என் அனுபவம்.

சுமார் காலை ஏழு மணியிருக்கும். உறக்கத்தில் மனைவி எழுப்பினாள். வழக்கமாக வரும் தேனீருக்குப் பதில் வெறும் கோப்பை மட்டும் கையில் தந்தாள். கண்ணை கசக்கிவிட்டு, "என்னட்டி இது?" என கேட்டேன். "இருங்க வாரேன்" என்று வேறொரு கோப்பையிலிருந்து தேனீரைக் கொண்டு வந்து என் கையிலிருக்கும் கோப்பையில் ஊற்றினாள். என்னத்த பண்ணுறா இவ என கோப்பையை கூர்ந்தேன். சிறிது சிறிதாக கோப்பை நிறம் மாறியது. என் முகம் அதில். நானும் என் மனைவி மக்களுமாக இருந்த படம் அந்த கோப்பையில் மிளிர்கிறது. ஏன் எதற்கென எனக்கு புரியவே இல்லை. சுமார் மூன்று பவுன் இருக்க வேண்டும் ஒரு கைச்சங்கிலியை என் கையில் கட்டிவிட்டாள். திடீரென கன்னத்தில் முத்தமிட்டு, "Happy birthday" என்றாள். உண்மையில் நான் மறந்துவிட்டேன். ஏதோ புல்லரிப்பாய் இருந்தது. திடீரென யோசனை வந்தவனாய் "ஆமா இது எவ்வளவு?" என்றேன். லட்சத்திற்கு அதிகமான ஒரு தொகையைச் சொன்னாள். சட்டென கோபம் வந்தது. ஏனென்றால் நேற்று இரவு வரை 50,000 ரூபாய்க்கு திக்குமுக்காடியிருக்கிறேன். சீறினேன், "இப்ப இதெல்லாம் அவசியமா?" என வெடித்தேன். "உனக்கு ஏது இவ்வளவு காசு என கோபத்தை உமிழ்ந்தேன். அவள் கண்கள் நிறைந்துவிட்டது. மகிழ்வான மலர்ந்த முகம் முற்றாக மாறிவிட்டது. கண்ணீரை துடைத்தபடியே சொன்னாள், "உங்ககிட்ட செலவுக்கு வாங்குற பணம், வீட்டுக்குப் பொருள் வாங்குற மீதி பணம், எல்லாத்தையும் பல வருசமா சேர்த்து வாங்கிய கைச்செயின் இது" என விசும்பினாள். குற்ற உணர்ச்சியால் நெளிந்தேன். என் கண்ணிலும் ஈரம். அணைத்துக்கொண்டேன்.
உண்மையில் பெண் பெண்தான். சேமிப்பிலும், நாளை நடப்பதை முன்பே யோசிப்பதிலும். தன் உற்றவனுக்கு தேவையானை யோசிப்பதற்கும். பெண்தான்.
எப்போதேனும் சோர்ந்திருந்தால் அவளின் தேற்றுதல் போல ஓர் ஆறுதல் கருவறை உள்ளே சென்று கடவுளே காட்சி தந்தாலும் அதற்கு ஒப்பாக முடியாது. வீடு கட்டிய சமயத்தில் பணமின்றி அல்லாடிய போது, சிறு நோயிலும் துவளும் போது, உறவுச் சிக்கலில் ஒடியும் போதெல்லாம் அவள் எனக்களித்த ஊக்கம் சொல்லில் அடங்காதவை. எப்போதும் என்னை மகிழ்சிபடுத்தவதைப் பற்றியே யோசிக்கும் அவளை நான் மகிழ்வாக்க அவள் கொண்டு வரும் தோசையில் கூடுதலாக ஒன்றை உண்டாலே போதுமானது.
வேலுநாச்சியார், அன்னிபெசன்ட் அம்மையார், ஔவையார் என கடந்த காலத்திற்கு சென்று பெண்ணின் மாண்பை நிரூபணம் செய்யவே தேவையில்லை. நிகழ்காலத்தில் கண்முன்னே பெண்கள் ஒளிர்கிறார்கள். செயற்கைகோள்களில் சாதனை புரியும் பெண்கள் உலகறியப்படுகிறார்கள். ஆனால் இன்றும் விறகு வெட்டி, காய்கறி வியாபாரம் செய்து, அலுவலகத்தில் ஓடாகத் தேய்ந்து, குடிகார கணவனை சமாளித்து, பிள்ளைகளை கண்ணுக்குள் வைத்து பராமரித்து, உறவு முறிவிலும் முறிந்துவிடாமல் சமூகத்தை எதிர்கொண்டு தன் குழந்தைகளை வளர்ப்பது என அவள் போல் அவள் மட்டும்தான்.
கண்முன்னே பார்த்து வியந்த பெண்கள் எண்ணற்றவர்கள். ஓர் ஆண் பெண்களை பற்றி என்ன சொன்னாலும், அவனிடம் அப்பிக்கொண்ட ஆணாதிக்கம் எப்படியேனும் வெளிப்படும். ஆம்! நீங்கள் நினைப்பது சரிதான். இதை எழுதிக்கொண்டிருப்பதுவும் ஓர் ஆணாதிக்கவாதியே! பெண்களுக்காக நாம் செய்ய வேண்டியது ஒன்று மட்டும்தான், அது அவர்களை அவர்களாக வாழவிடுவது. அதாவது நாம் மூடிக்கொண்டு இருப்பது.

நன்றி.