• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஐ. ஆர். கரோலின் - மனதின் மருந்து

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மனதின் மருந்து

அர்ஜுன் தன் தந்தை இறந்த முப்பதாவது நாள் காரியத்தை முடித்துவிட்டு உறவுகள் எல்லாம் சென்றதும் வெளியில் சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருந்தான்.

வேலையின் நிமித்தம் ஐந்து வருடங்களுக்கு முன் குடும்பத்தோடு டெல்லியில் குடியேறினான். தன் தாய் தந்தையைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்று இருந்தான்.

ஆனால், இருவரும் அவனுடன் செல்ல மறுத்துவிட்டனர். நானும் இங்கில்லை தங்கையும் திருச்சியில் இருக்கிறாள். இருவரும் அடிக்கடி வந்து பார்க்க முடியாது. அதனால், எங்களுடன் வந்துவிடுங்கள் என்று அர்ஜூன் பலமுறை கேட்டும் இருவரும் மறுத்துவிட்டனர்.

ஒவ்வொரு வருடமும் விடுமுறையில் வரும் போது தன்னுடன் வருமாறு கேட்டால் முடியாதென்று பிடிவாதமாக மறுத்துவிடுவார்கள். ஆனால், அப்போது இருவரும் இருந்ததால் ரொம்பவும் வற்புறுத்த வேண்டாமென்று விட்டுவிட்டான்.

இனிமேல், அம்மாவை தனியாக விடக் கூடாதென்று அவனுடன் அழைத்துச் சென்றுவிட உறுதியாக இருந்தான். தன்னுடன் வரவில்லை என்றால் தங்கையிடம் விட்டுச் செல்ல வேண்டும். அதற்காக, அவளுக்கு மாதம் பணம் அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான்.

அர்ஜுன் தான் எடுத்த முடிவை தன் அன்னை அன்னம்மாளிடம் சொல்ல, “அர்ஜுனா, நான் இங்கயே இருக்கேன் டெல்லிக்கு வரலை.” என்று தயக்கமாகப் பழைய பாட்டைத் திரும்பவும் பாடினார்.

“முடியாதும்மா இதுவரைக்கும் அப்பா கூட இருந்தாங்க. ஆனால், இனிமேல் நீங்க தனியா இருக்கனும். உங்களைத் தனியா விட்டுட்டு எங்களால் போக முடியாது.” என்றான் அர்ஜூன்.

“அப்பா இல்லைன்னா என்னய்யா? சொந்தமெல்லாம் பக்கத்தில்தானே இருக்காங்க.” என்றார் அன்னம்மாள்.

“அத்த, எல்லோரும் பக்கத்தில் இருந்தாலும் நாங்கப் பார்த்துக்கிற மாதிரி பார்ப்பாங்களா? ஏதாவது, அவசரம்னா உடனே ஓடி வர முடியாது. எங்க கூட வாங்க. இல்லையா, செல்வி கூடத் திருச்சிக்குப் போங்க.” மருமகள் சாந்தியும் கறாராகச் சொல்ல.

“அம்மா, அண்ணனும் அண்ணியும் சொல்றதுதான் சரி. எங்க ரெண்டு பேரில் யார் வீட்டுக்கு வந்தாலும் எங்களுக்குச் சம்மதம். ஆனால், தனியா இருக்கச் சம்மதிக்க மாட்டோம்.” என்று மகள் செல்வியும் உறுதியாகச் சொன்னாள்.

அன்னம்மாள் வேறு வழியின்றி மகளைக் கட்டிக் கொடுத்த வீட்டிற்குச் செல்ல மனம் ஒப்பவில்லை. அர்ஜுனுடன் டெல்லி செல்லவும் மனம் முரண்டு பிடித்தது. ஆனால், ஏதாவது ஒரு வீட்டுக்குச் சென்றுதான் ஆக வேண்டுமென்றக் கட்டாயத்தினால் மகனுடன் வரச் சம்மதித்தார்.

தாய் தன்னுடன் வருகிறார் என்ற மகிழ்ச்சியில் வீட்டை உறவினர் ஒருவரின் பொறுப்பில் விட்டுவிட்டு அன்னம்மாளை அழைத்துக் கொண்டு டெல்லிப் புறப்பட்டான் அர்ஜுன். ஆனால், அன்னம்மாளுக்குக் கிளம்பியதிலிருந்து மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டோம் என்ற எண்ணத்தில் யாருடனும் பேசாமாலே வந்தார்.

அர்ஜுனும் சாந்தியும் பலமுறை பேச்சுக் கொடுத்தும் கேட்பதற்கு மட்டுமே பதில் சொன்னார். பேரப் பிள்ளைகளிடம் மட்டும் மனம் சுணங்காமல் பேசினார். அவர்கள் கேட்பதற்குச் சலிக்காமல் பதில் சொன்னார்.

மகனிடமும் மருமகளிடமும் பாரா முகமாகவே இருந்தார். “என்னங்க, அத்தை நம்மகிட்ட மட்டும்தான் கோபத்தில் இருக்காங்க. ஆனால், பிள்ளைகளிடம் எப்போதும் போலதான் இருக்காங்க. அவங்க கோபம் எதுவரை டெல்லி வரைக்குமா?” செல்விப் புன்சிரிப்போடு கேட்டாள்.

“சொந்த ஊரைவிட்டு வரது கஷ்டமாதான் இருக்கும். டெல்லியைப் பார்த்தப் பிறகு எல்லாம் மறந்திரும். அவங்களாச் சரியாகுற வரை பொறுமையா இருப்போம்.” என்றான் அர்ஜுன்.

மூன்று நாள் பயணக் களைப்பில் டெல்லி வந்து சேர்ந்தனர். “அத்த, இந்த ரூமில் படுத்துக்கோங்க. மூணு நாள் டிரெயினில் வந்தது களைப்பா இருக்கும். அதனால், நீங்க நல்லா தூங்குங்க.” சாந்தி அன்னம்மாளுக்குத் தேவையானதை செய்து கொடுத்துவிட்டு வர அவர் அறைக்குள்ளயே தன்னை முடக்கிக் கொண்டார்.

மறுநாளிலிருந்து அவர்களின் அன்றாட வாழ்க்கைத் துவங்கியது. பிள்ளைகளும் அர்ஜுனும் பள்ளிக்கும் அலுவலகத்திற்கும் செல்ல, சாந்தியும் அன்னம்மாளும் வீட்டில் தனித்து விடப்பட்டனர்.

சாந்தி பத்து வார்த்தைப் பேசினால் அன்னம்மாள் நாலு வார்த்தைப் பேசுவார். “அத்த, நீங்க புது இடம்னு இப்படி இருக்கீங்க. நானும் வந்த புதுதில் இப்படித்தான் இருந்தேன். போகப் போகப் பழகி போச்சு.” என்றாள்.

அகத்தில் போட்டாலும் அளந்து போடு என்பது போல அன்னம்மாள் தன் முகத்தில் புன்னகையை அளவோடு நிறுத்திக் கொண்டார். அன்னம்மாளின் அளவான சிரிப்பைக் கண்டு சாந்தி அளவில்லாமல் சிரித்தாள்.

அன்னம்மாள் மருமகளிடம் பேச நினைக்க மனதின் ஓட்டமோ வேறு எங்கோ இருக்கச் சாந்தியின் பேச்சில் தன்னால் கலந்துக்க முடியவில்லை என்று மனம் வருந்தினாலும் அதற்கு நிவர்த்திக் காண முடியாமல் தவித்தார்.

ஏற்கனவே இருந்த மனச் சுமையில் மருமகள் ஆசையாகப் பேசும் போது தன்னால் பேச முடியவில்லையென்ற குற்ற உணர்வு குழப்பமான மனம் அவரை அறைக்குள்ளயே முடங்கிக் கொள்ளச் செய்தது.

அன்னம்மாள் அறைக்குள் முடங்கி மாதம் ஒன்றானது. அர்ஜுனும் சாந்தியும் எவ்வளவோ பேசியும் அறையை விட்டு வெளியில் வர மறுத்துவிட்டார். கட்டாயப்படுத்த வேண்டாமென்று இருவரும் விட்டுவிட்டனர்.

“என்னங்க, நாளைக்கு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் வரச் சொல்லலாம்னு இருக்கேன். ஏன்னா, நம்ம ஆள்களைப் பார்த்து அத்தை வெளிய வந்து பேசுறாங்களா பார்ப்போம்.” சாந்தி யோசனையாகச் சொல்ல, அர்ஜுனும் ஆமோதிப்பதாகத் தலையை ஆட்டினான்.

“அத்த, ரூம்லையே இருக்கீங்க கொஞ்ச நேரம் வெளிய வந்து நடமாடுங்க. நாளைக்கு உங்களைப் பார்க்க என் ஃப்ரெண்ட்ஸ் வராங்க.” அன்னம்மாள் வழக்கம் போல் மெல்லிய புன்னகையோடு நிறுத்திக் கொண்டார்.

சாந்தியின் தோழிகள் வந்ததும் கட்டாயப்படுத்தி வெளியில் அழைத்து வந்து எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். “அத்த, இவங்க எல்லோருமே நம்ம தமிழ்நாடுதான். அதனால், தயங்காமப் பேசுங்க. மாசத்தில் ஒரு நாள் ஒவ்வொருத்தர் வீட்டில் மீட் பண்ணுவோம்.” என்றாள்.

ஒவ்வொருத்தரும் அன்னம்மாளிடம் பேசத் துவங்கினர். ஆனால், அவரோ முகத்தில் எந்தச் சலனமுமின்றி வெறுமையான பார்வையை உதிர்த்தவர் தப்பித் தவறி கூட ஒரு வார்த்தைப் பேசிடவில்லை.

சிரிக்காமல் நிற்கும் கோமாளியைக் கூடப் பேச வைத்துவிடலாம். ஆனால், அன்னம்மாளை பேச வைக்க முயற்சித்த சாந்தியின் தோழிகளும் பொறுமை இழந்து பேசுவதை நிறுத்தினர்.

சாந்திக்குதான் தர்ம சங்கடமான நிலையாகிப் போனது. அன்னம்மாளை அறைக்குள் அனுப்பியவள் தோழிகள் முகம் பார்க்க முடியாமல் அவருக்காக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டாள்.

“எதுக்கு மன்னிப்புக் கேட்க? அவங்களுக்கு இங்க எல்லாமே புதுசு. ஊரில் ஃப்ரீயா வெளிய போய் வந்தவங்க உள்ளயே இருக்கிறது கஷ்டமா இருக்கும். பழகுறவரை கஷ்டம்தான் சரியாகிடும் நீ கவலைப்படாதே.” என்று புறப்பட்டுச் சென்றனர்.

அர்ஜுன் வந்ததும் சாந்தி அழாத குறையாகப் புலம்பினாள். “என்னங்க, அத்த இப்படி இருக்கிறது பயமா இருக்கு. வாரத்தில் ஒரு நாள் வெளியில் கூட்டிட்டு போகலாம்.” என்றாள்.

வாரத்தில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். எங்குச் சென்றாலும் ஏதாவது ஓர் இடம் பார்த்து, பிடித்து வைத்த பிள்ளையார் போல் அந்த இடத்தை விட்டு நகரமாட்டார்.

அன்னம்மாளை நினைத்து இவர்களின் துயரம்தான் அதிகமாகியது. அவரின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. வேளா வேளைக்கு உணவு உண்டாலும் மனக் கவலை அன்னம்மாளை இரண்டு மாதத்தில் பாதியாகக் குறைத்திருந்தது.

“ஏன்மா இப்படி இருக்கீங்க? உங்களை நினைச்சா ரொம்பக் கஷ்டமா இருக்கு. நீங்க வாயைத் திறந்து ஏதாவது சொல்லுங்க. எதுவும் பேசாம அமைதியா இருந்தா நாங்க என்னம்மா நினைப்பது.” அர்ஜுன் கண்களில் நீர் எட்டிப் பார்க்கக் கேட்டான்.

“எனக்கென்னப்பா நான் நல்லாதானே இருக்கேன். நீ எதுக்குக் கவலைப்படுற? நீ போய் உன் வேலையைப் பாரு போ.” என்றார் விரக்தியாக.

“உங்களை இங்க கூட்டிட்டு வந்தது சந்தோஷமா வச்சிக்க. ஆனால், நீங்க இந்த ரூமை விட்டு வெளிய வரமாட்டேங்கறீங்க. பிள்ளைங்ககிட்ட கூடப் பேசுறதை நிறுத்திட்டீங்க. நீங்க நல்லா இருந்தால்தான் நாங்க சந்தோஷமா இருக்க முடியும்.” அர்ஜுன் கவலையாகத் தன் தாயின் முகம் பார்த்திருந்தான்.

“எனக்குச் சந்தோஷம் இந்த ரூமில்தான் இருக்கு. என்னை இப்படியே விட்டுவிடேன்.” என்றவரிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்று வெளியில் வந்தான்.

“என்னங்க, டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகலாமா? அத்த உடம்புக்கு எதுவும் பிரச்சினையான்னு தெரிஞ்சிக்கலாம்.” என்றாள் சாந்தி. அர்ஜுனும் சரி என்று மறுநாளே மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.

“உடலளவில் அவங்க நல்லா இருக்காங்க. மனசில் எதையோ நினைச்சு அவங்களை அவங்களே கஷ்டப்படுத்திட்டு இருக்காங்க. அதனால், அவங்ககிட்ட பொறுமையா பேசி என்னன்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. இல்லைன்னா, அவங்க உடல்நிலையும் மோசமாகும்.” என்று எச்சரிக்கும் விதமாக மருத்துவரும் சொன்னார்.

அர்ஜுன், சாந்தியின் முகம் தெளிவில்லாமல் சிந்தனை மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தது. பத்து வார்த்தை பேசினால் ஒரு வார்த்தையால் பதில் சொல்கிறவரிடம் இன்னும் எப்படிப் பேசித் தெரிந்து கொள்வது என்று மிகவும் குழப்பத்தில் வீடு வந்து சேர்ந்தனர்.

காரை விட்டு இறங்கியதும் அன்னம்மாள், “நீங்க ரெண்டு பேரும் தேவையில்லாம கவலைப்படுறீங்க. எனக்கு ஒண்ணுமில்லை நல்லாதான் இருக்கேன். வயசாயிட்டு அதான் உடம்பு குறையுது. நீங்க வீணாக் கற்பனைப் பண்ணிட்டு கஷ்டப்படுறீங்க.” என்று சொன்னவர் மீண்டும் அறையில் முடங்கிக் கொண்டார்.

அர்ஜுனால் அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “சாந்தி, கொஞ்ச நாள் செல்விகிட்ட திருச்சிக்கு அனுப்பிப் பார்க்கலாமா? ஏன்னா அம்மா அங்க போக ஆசைப்பட்டு நாம எதுவும் நினைப்போம்னு இங்க வந்திருப்பாங்கனு நினைக்கிறேன்.” என்றான்.

“நீங்க சொல்றது சரிதான். ஆனால், நம்மகிட்ட சொல்ல வேண்டாம் செல்விகிட்ட சொல்லியிருக்கலாம். அவ நம்மளிடம் பேசியிருப்பா. செல்விகிட்ட பேசிப் பார்ப்போம். ஏன்னா அவ நிலவரம் என்னனு தெரியாம திடீர்னு நாம அத்தையை அனுப்பினா அவளுக்குக் கஷ்டமா இருக்கும்.” என்றாள் சாந்தி.

“அதுவும் சரிதான் நானே பேசுறேன்.” என்று தன் தங்கை செல்விக்குப் போன் பண்ணினான் அர்ஜுன்.

செல்வியிடம் தன் அம்மாவைப் பற்றி அனைத்தையும் சொன்னான். “உன் கூட இருக்க ஆசைப்படுறாங்களான்னு தெரியலை. அதான், கொஞ்ச நாள் உன்கிட்ட அனுப்பி வைக்கலாமான்னு யோசிக்கிறேன். உன்னால் கவனிக்க முடியுமா? நான் பணம் அனுப்பறேன்மா.” என்று அர்ஜுன் தயக்கமாகச் சொன்னான்.

“அண்ணா, அம்மாவைப் பார்த்துக்க எனக்கென்ன கஷ்டம் அதுக்குப் பணம் அனுப்பறேன்னு சொல்றீங்க. பணம் வாங்கிட்டா அம்மாவைப் பார்த்துகனும். நீங்க கூட்டிட்டு வாங்க. இங்க ஃப்ரீயா இருந்தவங்க. அங்க அடைச்சு வச்ச மாதிரி இருக்கும். அதான் அப்படியிருப்பாங்க.” என்றாள் செல்வி.

“அதான் செல்வி, அம்மா சொல்லத் தயங்குறாங்களோன்னு நினைக்கிறேன். நீ மாப்ளகிட்ட பேசிட்டு சொல்லு. நான் டிக்கெட் போடனும்.” என்றான் அர்ஜுன்.

“மச்சான், நானும் கேட்டுட்டுதான் இருக்கேன். நீங்க தாராளமா டிக்கெட் போடுங்க. அத்தையைக் கூட்டிட்டு வாங்க. நாங்க பார்த்துக்கிறோம் வயசான காலத்தில் எதுக்கு? அங்க வச்சு கஷ்டப்படுத்தறீங்க.” என்றான் வாசுதேவன்.

“சரி மாப்ள, டிக்கெட் போட்டுட்டு என்னைக்குக் கிளம்பறேன்னு சொல்றேன்.” என்று சாந்தியிடம் பேசியதைச் சொன்னான். “சாந்தி, அம்மா இப்ப இருக்கிற உடல்நிலைக்கு டிரெயினில் கூட்டிட்டுப் போறது சரியா இருக்காது. அதனால், ஃப்ளைட்டில் கூட்டிட்டுப் போறேன்.” என்றான்.

“செல்வி சின்னப் பிள்ளைங்களை வச்சிட்டு எப்படிக் கவனிப்பா? அத்தை அதைப் பார்த்துட்டு இன்னும் மோசமாயிடக் கூடாது.” கவலையாகச் சொன்னாள் சாந்தி. அர்ஜுன் அவளைச் சமாதானம் செய்தான்.

அன்னம்மாளிடம் திருச்சி செல்வதைப் பற்றி அர்ஜுன் சொல்ல அவருக்குப் பிள்ளைகளைக் கஷ்டப்படுத்துகிறோம் என்ற எண்ணம் தோன்ற, ‘மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்குச் செல்வதா? மருமகன் என்ன நினைப்பார்?

பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டு மாமியாரும் கூட வந்துவிட்டாரே என்று நினைக்க மாட்டாரா?’ ஏற்கனவே இருந்த மன அழுத்தத்தில் அடுத்தக் கவலையும் அவர் மனதில் குடியேறிக் கொண்டது!

அர்ஜுன் அடுத்து வந்த இரண்டாவது நாளில் அன்னம்மாளை அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டான். திருச்சி இறங்கியதும் அன்னம்மாளின் முகம் தயக்கத்திலும் தவிப்பிலும் செய்வதறியாமல் உணர்ச்சியின் மிகுதியில் இருந்தார்.

செல்வி இருவரையும் வரவேற்றவள் தன் தாயைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். “அண்ணா, அம்மாக்கு உடம்பு முடியலைன்னு சொன்ன. ஆனால், இவ்வளவு மோசமா இருக்காங்கன்னு சொல்லலை.” வேதனை கண்களில் நீரைக் கொட்டியது.

“செல்வி, நான் நல்லாதான் இருக்கேன். வயசாகிப் போச்சு அதான் இப்படி இருக்கேன். அர்ஜுனா, என்னை நம்ம வீட்டில் விட்டுடேன்.” என்றார் அன்னம்மாள் தயக்கமாக.

“அம்மா, போய்ப் பாதி உடம்புக் கூட இல்லாம வந்திருக்கீங்க. அங்க போய்த் தனியா எப்படி இருப்பீங்க. நீங்க என் வீட்லையே இருங்க. எங்கேயும் போக வேண்டாம்.” செல்வி கறாராகச் சொல்ல அன்னம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

‘ஐயோ கடவுளே எனக்கு என்ன ஆச்சு? எதுக்கு என்னை இப்படி வச்சிருக்க? இப்பவே என் உயிரை எடுக்கக் கூடாதா?’ என்று தனக்கு என்னவென்று அவருக்கே தெரியாமல் மனதில் குமுறினார்.

அர்ஜுனும் இரண்டு நாட்கள் இருந்து தன் தாயின் நடவடிக்கைகள் எப்படி இருக்கு என்று பார்த்துவிட்டுச் சென்றான். அர்ஜுனின் வீட்டைப் போல் இங்குச் செல்வி தனியாக விடவில்லை.

கடைக்குச் சென்றாலும் கூடவே அழைத்துச் செல்வாள். வீட்டில் இருக்கும் போது ஏதாவது வேலை வாங்கி அன்னம்மாளைத் தன் கூடவே வைத்துக் கொள்வாள். இல்லையெனில் குழந்தைகளைக் கவனிக்க வைத்துவிடுவாள்.

தனியாக விட்டால் எதையாவது யோசித்துத் தன்னை வருத்திக் கொள்வார் என்று அவருக்கு யோசிக்க நேரம் கொடுக்காமல் அவர் கவனம் முழுவதும் தன்னிடமே இருக்குமாறு பார்த்துக் கொண்டாள்.

“செல்வி, அத்தைய கவனிக்கிறேன்னு ரொம்ப வேலை வாங்கிட்டு இருக்க. ஏற்கனவே அத்த உடம்பு முடியாம இருக்காங்க. நீ ஏன் இவ்வளவு வேலை வாங்குற?” வாசு கடிந்து கொண்டான்.

“என்னங்க சத்தம் போட்டு பேசாதீங்க. அம்மா காதில் விழப் போகுது. நான் வேலை வாங்குற மாதிரி தெரியும். ஆனால், எல்லா வேலையும் நான்தான் செய்றேன். அம்மா என் கூட இருப்பதால் உங்களுக்கு அப்படித் தெரியுது.” சமாதானமாகச் சொன்னாள் செல்வி.

“எதுக்கு இப்படியொரு வேலைப் பண்ணிட்டு இருக்க.” என்றான் வாசு.

“அம்மாவை தனியா விட்டா எதையாவது யோசிச்சிட்டே இருப்பாங்க. அதான், அவங்க யோசனை வேற எங்கேயும் போகாம என் கூடவே வச்சிருக்கேன்.” என்றாள் செல்வி பெருமிதமாக.

“ஓ! என்ன அறிவுமா உனக்கு. ஆனால், ராத்திரித் தூங்காம யோசிக்க மாட்டாங்களா? அப்ப நீ கூட இருக்கியா?” தன் அறிவார்ந்த கேள்வியைக் கேட்க செல்வி அவன் தலையில் குட்டு வைத்தாள்.

வாசு தலையைத் தடவி கொண்டே, “ஷ் ஆ… இப்ப எதுக்குக் கொட்டின?” என்றான்.

“பகலில் என் கூடவே இருப்பதே அம்மாக்கு அசதியாகிடும். ராத்திரி அவங்களே நினைச்சாக் கூட முழிக்க முடியாது. நல்லா தூங்குறாங்க அதை நான் தினமும் கவனிக்கிறேன்.” என்றாள்.

செல்வி நினைத்தது தவறு என்பதை அடுத்த ஒரு மாதத்தில் தெரிந்து கொண்டாள். அன்னம்மாள் தேவையில்லாமல் யோசிப்பதால்தான் இப்படி இருக்கிறார் என்று நினைத்தவள் அதனால் இல்லை என்பது அவர் உடல்நிலை மோசமாவதில் செல்விக்குத் தெரிந்தது.

இரவு நன்றாக உறங்குகிறார் என்று நினைத்திருந்தாள். ஆனால், அவள் காலடிச் சத்தம் கேட்டதும் தூங்குவது போலிருப்பார். அவள் சென்றதும் வழக்கம் போல் அவர் தூக்கத்தைத் தொலைத்திருப்பார்.

தன்னால் மகன் கஷ்டப்பட்டது போதும். மகளுக்கும் சிரமத்தைக் கொடுக்க வேண்டாமென்று நினைத்தவர் மகளின் முன் நடிகையாக நடமாடத் தொடங்கினார். அவர் உடல்நிலை மிகவும் மோசமாகி நடப்பதற்கே சிரமம் கொண்டார்.

செல்வி பொறுக்க முடியாமல் அர்ஜுனை அழைக்க, “அண்ணா, அம்மா படுத்த படுக்கையாகுற நிலைக்கு வந்துட்டாங்க. எனக்குப் பயமா இருக்கு. நீ சீக்கிரம் கிளம்பி வா.” என்று ஒப்பாரி வைத்தாள்.

“அழாத செல்வி, நான் வரேன் டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போனியா? என்ன சொன்னாங்க?” அர்ஜுன் அவள் பதற்றத்தை குறைக்கக் கனிவாகப் பேசினான்.

“ஆமா, அம்மாக்கு எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்துட்டோம் ஒண்ணுமே இல்லைன்னுச் சொல்லிட்டாங்க. அதுக்கு மேல டாக்டர்கிட்டயும் கேட்க முடியலை.” அழுகையை நிறுத்தாமல் சொன்னாள்.

அர்ஜுன் செல்வியைச் சமாதானம் செய்தவன் சாந்தியிடம் விஷயத்தைச் சொல்ல அவளும் செல்வியைச் சமாதானம் செய்ய இருவரும் தீவிர யோசனைக்குப் பிறகு அன்னம்மாளைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லலாம் என்று முடிவுச் செய்தனர்.

அவர்கள் செய்த முடிவை உடனே செல்விக்குத் தெரிவிக்க, “செல்வி, அம்மாவை நாம ஊருக்கு கூட்டிட்டுப் போகலாம். அம்மாவோட ஆசை ஊர்ல இருக்கனும்னுதான். நீ அங்க கூட்டிட்டு வந்திரு. நாங்க நேர ஊருக்கு வரோம்.” என்றான்.

செல்வி வருவதற்கு முன் அர்ஜுன் குடும்பத்தோடு விமானத்தில் வந்து அன்னம்மாளின் வரவுக்காகக் காத்திருந்தான். செல்வி அன்னம்மாளிடம் எங்குச் செல்கிறோம் என்று சொல்லாமலே அழைத்து வந்திருந்தாள்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு ஊருக்குள் கார் செல்வதைக் கண்டதும் அன்னம்மாளின் கண்கள் விரிய விழிகளை அங்குமிங்கும் உருட்டி வான் மின்னல்கள் மின்னியது போல் முகம் பிராகாசிக்கப் பச்சைக் கம்பளங்கள் சூழ்ந்த வயல் வெளிகளைப் பார்த்த வண்ணம் வந்தார்.

வீட்டின் முன் கார் நின்றதும் அர்ஜுன் கதவைத் திறக்க மெதுவாகத் தன் கால்களைக் கீழே வைத்து இறங்கி அர்ஜுனைப் பிடித்துக் கொண்டார். அன்னம்மாள் வருவதைக் கேள்விப்பட்ட சொந்தங்கள், அருகில் உள்ளவர்களும் வந்துவிட்டனர்.

அன்னம்மாள் எலும்பும் தோலுமாக வந்ததைக் கண்டவர்கள் பரிதாபத்தில் குளம் போல் விழிகள் நிறையத் தொண்டை அடைக்க வேதனையோடு பார்த்து நின்றனர். கீழே இறங்கிய அன்னம்மாள் அர்ஜுன் கை பிடித்து வீட்டிற்குள் சென்று முழுவதும் வலம் வந்தவர் தன் கணவரின் புகைப்படத்தைப் பார்த்தவர் வீட்டின் பக்கவாட்டில் இருந்த பூவரசம் மர நிழலில் அமர்ந்தார்.

அன்னம்மாள் அமர்ந்ததும் அவருடைய சகத் தோழிகளும் அவருடன் அமர்ந்து பேசத் துவங்கினர். கடந்த நான்கு மாதங்களில் அம்மாவின் முகத்தில் காணாத புத்துணர்ச்சியைக் கண்டார்கள்.

அச்சாணியற்ற தேர் போல உயிர் நாடியற்று வந்தவர் மரத்தில் சாய்ந்தமர்ந்து தன் கால்களை நீட்டி எல்லோருடனும் புன்முறுவல் முகத்தில் பூக்கப் பேசத் தொடங்கினார். அன்னம்மாளின் உயிர் தன் சொந்த மண் ஆத்தூர், வீடு, மரம் இதில்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர்.

“அண்ணா, அம்மாவோட உயிர் அந்தப் பூவரச மரம்தான் வேற எங்கேயும் இல்லை. நடக்க முடியாம இருந்த அம்மா இப்பக் கதையடிச்சிட்டு இருக்கிறதைப் பார்த்தீங்களா?” என்று செல்வி புன்சிரிப்பை உதிர்க்க அவளுடன் சேர்ந்து எல்லோரும் புன்னகைப் புரிந்தனர்.

“ஆமாங்க, செல்வி சொல்றது சரிதான் அத்தைக்குச் சொந்த ஊரைவிட்டு வரப் பிடிக்காம நம்மகிட்டயும் சொல்ல முடியாம இருந்திருக்காங்க. அத்த இங்கயே இருக்கட்டும் விட்டுங்க.” என்று கெஞ்சலாகச் சாந்தி கேட்க.

அர்ஜுன் யோசிக்க, வெளியில் அழைத்துச் சென்ற போது அன்னம்மாள் எங்கும் வராமல் இடம் பார்த்து அமர்ந்தது மரத்தின் கீழ் என்பது அர்ஜுனுக்கு அப்பொழுதான் புரிந்தது.

“அன்னம்மாளை இங்க விட்டுட்டு போ. நாங்கப் பார்த்துகிறோம் உன் கூடக் கூட்டிட்டு போறேன்னு உயிர் இல்லாமக் கூட்டிட்டு வந்திருக்க.” என்று சொந்தங்கள் கண்டிப்புடன் சொல்ல அர்ஜுன் சுயநினைவுக்கு வந்தவன் வேறு எதுவும் யோசிக்கவில்லை.

அன்னம்மாளைப் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ளவும் கூடவே தங்குவதற்கும் நான்கு நாட்களில் ஒருத்தரை அழைத்து வந்துவிட்டான். அன்னம்மாள் நன்றாக ஆனப் பிறகுதான் அர்ஜுன் இழுத்து பிடித்த மூச்சை விட்டான்.

அர்ஜுன் தாய் தன்னுடன் இருக்க ஆசைப்பட்டாலும் பிறந்த மண்ணின் சுகத்தை அனுபவிக்க முடியாமலும் அதை வெளியில் சொல்ல முடியாமலும் தவித்த அன்னம்மாளின் மனதின் மருந்து எதுவென்று புரிந்ததும்.

அர்ஜுன், சாந்தி இருவரும் பிறந்த ஊருக்கே வர முடிவெடுத்து அன்னம்மாளுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு செய்து விட்டுக் கூடிய சீக்கிரம் வேலையை மாற்றிக் கொண்டு வர முடிவெடுத்து விட்டனர்.

“அண்ணா, நீங்க வேலையை மாத்திட்டு வந்திருவீங்க. நான் என்ன செய்றது? இவங்க திருச்சியை விட்டு வரமாட்டாங்களே.” செல்வி வாசுதேவனைப் பார்த்து சொல்ல.

“உன்னைக் கட்டிக் கொடுத்ததுதான் சொந்த ஊர். அதனால், நீ அங்கயே இரு.” என்றான் அர்ஜுன் புன்னகையுடன். அவன் பதிலைக் கேட்டு வாசுதேவன் வாய்விட்டுச் சிரித்தான்.

“போதும் சிரித்தது பல்லெல்லாம் கொட்டிடப் போகுது. அண்ணா தங்கச்சிக்காகப் பேசாம மாப்ளைக்குப் பேசறீங்க.” செல்வி பொய்க் கோபத்தைக் காட்டினாள்.

“சரி! சரி! உன் கோபம் போதும். நீயும் மாப்ளையும் மாசத்தில் ஒரு தடவை வந்து பார்த்துகோங்க.” என்று சொன்னவன் குடும்பத்தோடு டெல்லிப் புறப்பட்டுவிட்டான்.

எத்தனை ஊருக்குச் சென்றாலும் சொந்த மண்ணில் கிடைக்கும் நிம்மதி வேறு எங்கும் கிடைப்பதில்லை. அன்னாம்மாளுக்குச் சொந்த மண்தான் மனதின் மருந்து.

***

நன்றி.