• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஒரு பெண்ணின் குரல்-Usharani R K

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
தலைப்பு: பெண்மையைப் போற்றுவோம்!ச்



“அன்பால் அன்னையானவள்!

நேசத்தால் தந்தையானவள்!

குறும்பு செய்வதில் தங்கையானவள்!

துவண்டப் போதெல்லாம் தோள் கொடுக்கும் தோழியவள்!

கவலைகளைத் தன்னுள் மறைத்து, புன்னகைச் செய்யும் பூமகளவள்!

குடும்பத்தைப் பேணிக் காக்கும் குணமுடைய நங்கையவர்கள்!

கல்வியறிவைத் தக்கவைத்து தரணிப் போற்றும் தங்கமகள்கள்!

பெண்மையின்றி உலகம் ஏது?

பெண்களில்லா வாழ்வும் ஏது?”


இவ்வாறாக பெண்களின் துணையின்றி வாழ்வே இல்லை எனக் கூறலாம்.

ஒரு குடும்பத்தின் ஆணி வேராக இருப்பவள் பெண்!

தனக்கான நலத்தை மறந்து, பிறருக்கான தேவைக்கும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் மட்டுமே வாழ்பவள்!

தன்னுடைய தேவைகளை மறந்து, தன் குடும்பத்திற்காக அல்லும் பகலும் உழைத்து வாழ்பவள் பெண்!

முன்பெல்லாம் பொதுவாகவே ஒரு குடும்பத்தில் பெண் குழந்தைப் பிறந்துவிட்டால், அவள் அக்குடும்பத்திற்குப் பெரும் சுமையாகவே கருதப்பட்டாள்!

அதுவும் அவளின் கல்வி, திருமணத்தைப் பற்றியே பெரும்பாலான பெற்றோர்களின் கவலையாக இருந்தது.

“அடுப்பங்கரையே அவளின் வாழ்வாகிப் போன காலமும் உண்டு”

அவளுக்கான தடைகளும், கட்டுப்பாடுகளும் கடுமையாகப் பின்பற்றப்பட்டது.

அதுவும் கல்வி என்பது அவளுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது.

“அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்கு” என்றுக்கூட சில மூடர்கள் பாடினார்கள்.

கல்விக்கான தடைகள் பலவும் இருந்தது.

இன்றளவும் ஒரு சில இடங்களில் பெண்களுக்கான கல்வி வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இருப்பினும் தடைகளைத் தாண்டியும், அரசு உதவிகளுடனும் பெண்கள் கல்விக் கற்றுத் தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

பெண்களின் கல்வியே அவர்களின் வாழ்வை முன்னேற்றும் ஆயுதமாகும்.

ஒரு குடும்பத்தில் பெண் குழந்தையின் படிப்பு, அக்குடும்பத்தை மட்டுமின்றி, சமூகத்தையும் முன்னேற்றமடையச் செய்யும்.

“பெண்களின் கையில் இருக்கும் கரண்டியைப் பிடிங்கி விட்டு அவர்களின் கைகளில் புத்தகத்தைக் கொடுக்க வேண்டும்” என்ற தந்தை பெரியாரின் கருத்து, பெண்களுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரியப்படுத்துகிறது.

இதில் பெண்களைப் பெற்ற பெற்றோரின் அதிக கவலையே, அதிக கல்விக் கற்றால் அதற்கேற்ற வரனைப் பார்த்து, அதற்கேற்ற வரதட்சணையைக் கொடுக்க வேண்டும் என்ற கவலை இருந்தது. இன்றளவும் இருந்துக் கொண்டுத்தான் இருக்கிறது!

பெண்களின் வாழ்க்கை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.

திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்குப் பின்பு என்று இரு பிரிவுகளாகப் பார்க்கப்படுகிறது.

அன்னை, தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து, உற்றார் உறவினர்களோடு இருந்து, தன் இலக்கை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பாள்.

பெற்றோரின் கடமையாகத் திருமணத்தையும் நடத்தி வைக்கின்றனர்.

அவளும் மனதார ஏற்றுக் கொள்கிறாள்.

பிறந்த இடம், அன்னை, தந்தை, உடன் பிறந்தோர், நண்பர்கள், உற்றார், உறவினர்கள், என்று எல்லாரிடமும் இருந்து வேரோடு பிடிங்கி, வேறோரு இடத்தில் நட்டு வைக்கின்றனர்.

அதையும் ஏற்றுக் கொள்கிறாள்.

புதியதாய் குடும்பத்தில் ஓர் அங்கமாய் மாறி விடுகிறாள்.

புது வாழ்வின் வடிவமாய், புகுந்த வீட்டின் மருமகளாக மட்டுமல்லாமல் மகளாகவும் நடந்துக் கொள்கிறாள்.

தாயாகவும் தன் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து முடிக்கிறாள்.

இவருக்கு இதுப் பிடிக்கும், குழந்தைகளுக்கு அது பிடிக்கும் என்று ஓடி, ஓடி தன்னை மறந்துச் சுழன்றுக் கொண்டிருக்கிறாள்.

தாய் வீட்டில் அவளுக்கான தேவைகள் எதுவென்று சொல்லாமலே எல்லாமே கிடைத்து விடுகின்றது!

ஆனால் புகுந்த வீட்டில் அவ்வாறான தேவைகள் கேட்டுச் செய்ய அவ்வளவாக யாரும் இருப்பதில்லை.

அவளுக்கான மன உளைச்சல்களையும், வலிகளையும் அறிந்துக் கொள்வதற்கும், அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதற்கும் யாருமே இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை!

இவைகளையெல்லாம் கடந்து, அலுவலக வேலைகளையும் சேர்த்து செய்வதுடன், தன் ஊதியத்தையும் கூடவே, புகுந்த வீட்டிற்குக் கொடுத்து விடுகிறாள்.

இப்படியாக பெண்களின் வாழ்வு நகர்ந்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய சமூகம் பெரிதும் மாறி விட்டது.

பெண்ணவளும் ஓர் உயிராகவும், அவளுக்குள்ளேயும் கனவுகளும், இலட்சியங்களும் இருக்கும் என்பதை பலர் இச்சமுதாயத்தில் உணர்ந்திருக்கின்றனர்.

அதை உணர்ந்ததற்கு இணையாக பெண்கள் பல துறைகளில் சாதனைகளைப் புரிந்து வருகின்றனர்!

தங்களாலும் ஆணுக்கு இணையான முன்னேற்றங்களை அடைய முடியும் என்று நீருபித்துள்ளனர்.

இருந்தாலும் இன்றளவும் பல இடங்களில் பெண்களுக்கான உரிமைகளும், வாய்ப்புகளும் மறுக்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடக்கிறது.

என்றாலும் கூட, அவைகளையெல்லாம் கடந்து, தங்களுக்கான, உரிமைளைப் போராடிப் பெற்று விடுகின்றனர். அதில் வெற்றிகளையும் அடைந்து விடுகின்றனர்.

பெண்களால் முடியாது என்று எதுவும் கிடையாது என்பதற்கு சான்றாக பல துறைகளில் தங்களின் சாதனைகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்”


என்ற முண்டாசுக் கவியின் வரிகளுக்குச் சான்றாக, ஆணுக்கு நிகராகவும், அவர்களைவிட ஒரு படி முன்னேறியும் சாதனைகளைச் செய்து வருகின்றனர் பெண்கள்.

பெண்களின் முன்னேற்றமே, சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதற்கேற்ப, அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்கள் சமுதாயத்திலும் தங்களுக்கான பங்களிப்பைத் தந்து வருகின்றனர்.

அன்றைய சுதந்திரக் காலப் போராட்டம் முதல் இன்றைய ஆண்ட்ராய்டு காலம் வரை பெண்களின் பொறுப்பும், பங்களிப்பும் இருந்துக் கொண்டுத்தான் இருக்கிறது.

தவறுகளைக் கண்டால் தட்டிக் கேட்டு, அதற்குத் தீர்வுக் கிடைக்கும் வரை விடாமல் போராடி வெற்றிக் காண்கின்றனர் பெண்கள்.

மேலும் கல்வி, வணிகம், தொழில்நுட்பம், சினிமா, விஞ்ஞானம்,விளையாட்டு, அரசியல், எழுத்தாளர்கள், என்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்றுக் கூடக் கூறலாம்.

எத்தனையோ இன்னல்களைக் கடந்து, சாதிக்கும் பறவையாய் சிறகடித்துப் பறக்க முயன்றாலும், ஏனோ சில இடங்களில் சந்தர்ப்பச் சூழ்நிலைகளாலும் குடும்பங்களாலும், சமூகத்தாலும் ஒதுக்கப்படுகிறாள்.

சமீபத்தில் கூட வெளிவந்த திரைப்படப் பாடலில் கூட

“உன்னாலே முடியாது என்று ஊரே சொல்லும் நம்பாதே,

பொய் பரிதாபம் காட்டும் எந்த வர்க்கத்தோடும் இனையாதே”


பெண்களால் முடியாது என்று எதுவும் கிடையாது என்றும், எப்படிப்பட்ட துன்பங்கள் வந்தாலும் அதைத் தாண்டியும் சாதனைகள் செய்திட முடியும் என்றும் அன்றாடமும் நிருபித்து வருகின்றனர் சாதனை மங்கைகள்!

வாழ்வில் வெற்றியடைய உடலின் வலிமையை விட, மனதின் வலிமையே முக்கியம். அந்த வலிமை பெண்களுக்கு எப்போதுமே உண்டு.

இப்படி குடும்பம், சமூகம் எல்ன எல்லாவற்றையும் கடந்து, அனைத்துத் துன்பங்களையும் களைந்து, தனக்கான வெற்றிப் பாதைகளைத் தாமே தேர்ந்தெடுத்துச் செல்கின்றனர்!

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்மமா” என்று வரிகள் உண்மையே!

சோதனைகளைக் கடந்த சாதனை மங்கைகளின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!

இன்பத், துன்பங்களைக் இன்முகத்தோடு கடந்திடும் பெண்மையைப் போற்றிடுவோம்!

********************************************************************************************************************
 
Top