• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Usharani

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 10, 2021
Messages
7
“அம்மா, என்னப் பண்ற? பசிக்குது. சீக்கிரம் வா. ஸ்கூலுக்கு டைமாச்சு” கத்தினான் ராஜேஷ்.

“இருடா வரேன். எப்பப் பாரு போகற நேரத்துலத்துலதான் என் தலைய உருட்டுவ! இந்தா சாப்பிட்டுக் கிளம்பு” என்றுக் கடுப்பாய் பேசினாள் தாய் லட்சுமி.

“சரி லட்சுமி. நான் ஆபீஸ்கு கிளம்புறேன்” என்று விடைப் பெற்றுச் சென்றார் கணவர் கணபதி.

ராஜேஷும் பள்ளிக்குச் சென்றுவிட வீடே அமைதியானது.

“அம்மா என்ன பண்றீங்க? பசிக்குதும்மா. சாப்பாடு போடுறீங்களா?” வீட்டு வேலைக்காரி பங்கஜம் கேட்டாள்.

எல்லாரும் ஒரு வழியாக சாப்பிட்டு விட்டு அமைதி காக்க, பார்வதி வந்தாள். கணபதியின் முதல் மனைவியின் மகள். கண்பார்வை இழந்தவள். மிகுந்த இரக்க குணம் கொண்டவள். தாயில்லாப் பிள்ளை என்றாலும், லட்சுமியை தன் தாயாகவே நினைப்பவள். லட்சுமியோ பார்வதியை ஒரு விரோதிப் போலவே பார்ப்பவள்.

“அம்மா,நான் பள்ளிப் படிப்பை முடிச்சிட்டேன். ஸ்கூல்லையே நான் தான் பர்ஸ்ட் மார்க். அடுத்து, காலேஜ்க்கு போகணும். அதுக்கு பீஸ் கொஞ்சம் கட்டணும். அப்பாகிட்ட சொல்லி வாங்கித் தரீங்களா?” என்று பயத்துடன் கேட்டாள் பார்வதி.

“ஆமாடி, அப்படியே உங்கப்பன் லட்சம், லட்சமாய் சம்பாதிச்சுக் கொட்டித் தர்றாங்க. நீ படிச்சி, கிழிக்கறதுதான் குறைச்சல். கண் இல்லாத உனக்குல்லாம் படிப்பு ஒரு கேடு! உன்னைய எவன் தலையிலாவது கட்டி வச்சி வீட்டுவிட்டுத் துரத்தினாதான் நிம்மதி. மரியாதைய உள்ளே போயிடு” என்று வார்த்தைகளைக் கத்திகளாய் வீசினாள் லட்சுமி.

என்னத்தான் வசதிப் படைத்த குடும்பத்தில் பார்வதி பிறந்து இருந்தாலும், மூத்த தாரத்தின் மகள் என்பதாலும், பார்வையில்லாப் பெண் என்பதாலும் எல்லோரும் பார்வதியை ஒரு சுமையாகவே நினைத்தனர். அது அவளுக்கு மிகுந்த வேதனையைத் தந்தது.

இப்படியே போனால் தன் கனவு பலிக்காது என்பதை பார்வதி நன்கு உணர்ந்துக் கொண்டாள். தன் பள்ளிக் கால நண்பன் கிருஷ்ணன் மூலம் உதவியை நாடினாள்.

கிருஷ்ணன் பார்வதியின் நல்ல நண்பன். நடுத்தரக் குடும்ப வர்க்கத்தைச் சார்ந்தவன். எல்லோருடனும் அன்புடன் பழகுபவன். பார்வதிக்கு உறுதுணையாக நிற்கும் ஒரே மனிதன்.

ஒரு நாள் இரவு கிருஷ்ணனிடம் இருந்து பார்வதிக்கு போன் வந்தது.

“பார்வதி என்ன பண்ற? நீ எங்கிட்டக் கேட்ட மாதிரியே உனக்குப் புடிச்ச காலேஜ்ல, உனக்குப் புடிச்சப் பாடப்பிரிவுல இடம் கிடைச்சிருக்கு. அதனால சீக்கிரமா துணிகளை பேக் பண்ணி வை. உன்னைய நல்ல இடத்துல தங்க வச்சி உன்னையப் படிக்க வெக்கப் போறேன்” என்றான் கிருஷ்ணன்.

அலைப்பேசியில் நல்ல தகவல் கிடைக்க, கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, இரவோடு, இரவாக வீட்டைவிட்டு வெளியேறினாள் பார்வதி, நண்பன் கிருஷ்ணனின் உதவியோடு.

பொழுது விடிந்ததும், பார்வதி எழுதி வைத்த கடிதம் லட்சுமியின் கண்களில் பட, படித்துவிட்டுக் குப்பையில் வீசினாள். “சனியன்! வீட்டைவிட்டு ஒழிந்தது. இப்பத்தான் எனக்கு நிம்மதி” என்றுக் கூறிச் சென்றாள்.

அவள் பேசியதைக் கண்டதும் கணபதி நொந்துப் போனார்.

“இத்தனை நாளும் லட்சுமி அவளுக்கு ஒரு தாயாக இருந்திருப்பால் என்றெண்ணி இருந்தேன். ஆனால் பார்வதியை ஒரு மனிதமாகக் கூட மதிக்கவில்லையே! பாவம் தாயில்லாப் பிள்ளையின் மனம் எப்படி இத்தனை வலிகளைத் தாங்கி இருக்கும்” என்றுக் கலங்கி நின்றார் கணபதி.

நாட்கள் நகர்ந்தது. பார்வதியின் கனவு நனவானது. தற்போது அவள் ஒரு பெரிய கல்லூரியின் முதல்வர். இந்த சிறுவயதில் கல்லூரிக்கே முதல்வராகும் தகுதியும் திறமையும் கொண்டிருந்தாள் பார்வதி. நண்பன் கிருஷ்ணனின் உதவியோடு, அவள் மனதிற்குக்கேற்றவரை மணம் முடித்து சிறப்பானதொரு வாழ்க்கையை வாழத் தொடங்கினாள்.

ஆண்டுகள் கடந்தது. ஒருநாள் தன்னுடைய கல்லூரிக்கு உதவிக்கேட்டு, மாணவன் ஒருவன் தன் அம்மாவோடு வந்திருப்பதை அறிந்தாள். இருவரையும் உள்ளே அழைத்தாள்.

உள்ளே நுழைந்த அந்த அம்மாவிற்கு அதிர்ச்சி.

காரணம் பார்வதியின் சித்தித் தான் தன் மகனுக்காக உதவிக்கேட்டு வந்திருந்தாள்.

“பாரவதி நல்லாயிருக்கியா? நான்தான் உன் சித்தி லட்சுமி. உன் தம்பிக்கு படிக்க இடம் கேட்டுத்தான் இந்த காலேஜ்க்கு வந்தேன். உனக்கு நான் செஞ்ச பாவத்துக்கு நிறைய அனுபவிச்சிட்டேன்” என்றுக் கண்கலங்கினாள் லட்சுமி.

“நீ வீட்டைவிட்டுப் போன ரெண்டு வருஷத்துல உங்கப்பா ஒரு விபத்துல இறந்திட்டாரு. கடன் தொல்லை தாங்க முடியாம நாங்க ஊரு விட்டு ஊரு வந்து பிழைச்சிட்டு இருக்கோம்” என்றாள்.

“உன் தம்பி ராஜேஷ் நல்லாப் படிச்சான். கையில மார்க் இருக்கு. ஆனா படிக்க வைக்க வசதி இல்ல. அங்கங்க உதவிக் கேட்டு அலைஞ்சிட்டு இருந்தோம். தெரிஞ்சவங்க மூலமாதான் இந்த காலேஜ் பத்தித் தெரிஞ்சி உதவிக் கேட்டு வந்தேன்” என்று அழுதாள் லட்சுமி.

எல்லாத்தையும் பொறுமையாகக் கேட்ட பார்வதி, தம்பி ராஜேஷின் மதிப்பெண் சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு, அவனுக்குப் படிக்க உதவினாள்.

பிறகு சிறிது நேரம் தன் சின்னம்மாவிடம் தனிமையில் பேச விரும்பினாள்.

“சித்தி, பார்வை குறைபாடுங்கறது இயற்கையா வருவது. நான் உங்கப் பொண்ணாப் பிறக்காததாலே என்னைய நீங்க வெறுத்தீங்க. ஆனால் இயற்கை உங்களை என் கிட்டையே கையேந்த வச்சிருச்சு”

“என்னோட படிப்புக்கு நீங்க தடைப் பண்ணீங்க. ஆனா இன்னிக்கு உங்கப் பையன் படிப்புக்கு என்கிட்டையே உதவிக் கேட்டு நிக்கிறீங்க. உங்க மனச நோகடிக்க இப்படி பேசல. பார்வை இல்லாவிட்டாலும் என்னைய போன்றவங்களுக்கும் மனசு இருக்கு. எங்களுக்கும் கனவுகள் இருக்கு. அத இந்த சமுதாயம் ஒரு நாளும் நினைச்சிப் பாத்தது இல்ல. ஒரு மனுசனாக்கூட மதிக்கறது இல்ல”

“உங்களை மாதிரியானவங்கிட்ட நாங்க எதிர்ப்பார்க்கிறது அன்பும் நம்பிக்கையான பேச்சும் மட்டும்தான். அதக்கூடப் பண்றதுக்கு யாரும் தயாராக இல்ல. எங்களை ஒரு சுமையாக மட்டுமே இந்த உலகம் பாக்குது”

“இவை எல்லாம் தாண்டி, சாதனைகள் இன்னமும் பண்ணிட்டுத்தான் இருக்காங்க. எங்களுக்கும் திறமைகள் இருக்குனு நிரூபிச்சிட்டு இருக்காங்க” என்று தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினாள் பார்வதி.

தான் செய்த தவறை எண்ணி லட்சுமி மிகவும் வேதனையடைந்தாள்.

“கவலைப்படாதீங்க சித்தி. உங்கப் பையன் படிப்புக்கு நான் கியாரண்டி. அவன் படிப்பு செலவுகள் அத்தனையும் நான் பாத்துகிறேன். நீங்க கவலைப்படாம போங்க” என்றாள் பார்வதி.

தன் மகனின் வாழ்வில் “ஒளிச்சுடரை ஏற்றி” வைத்த பார்வதிக்கு நன்றியைக் கூறி நகர்ந்தாள் லட்சுமி.
 
Top