• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஓவியம் 4

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
அன்றிரவு டைனிங் டேபிளில் அனைவருமாக சாப்பிட அமர்ந்திருந்தனர். அங்கு நிலவிய அமைதியை கலைத்தது என்னவோ சூர்யா தான்.

"லேட் ஆச்சேப்பா நவீன். சோ இங்கயே தங்கிக்கலாம்ல..." என்கவும் மறுக்கவென வாயைத் திறக்க வந்தவன் ப்ரனீத்தாவின் முறைப்பில் கப்பென வாயை மூடிக்கொண்டு சரியென தலையை ஆட்டி வைத்தான். இவனைப் பார்த்திருந்த அனைவரும் சிரித்து வைக்க,
தன் நண்பன் வாய் விட்டு சிரிப்பதைக் கண்ட நவீன் உள்ளுக்குள் மகிழ்த்து போனான். "இவன்ட சிரிப்புக்காக எவ்வளவு கஷ்டத்தை வேணா தாங்கிக் கொள்ளலாம்..." என அவன் மனதில் நினைக்காமலில்லை.

ப்ரனீத்தா மற்றும் சூர்யாவின் நிலையும் அது தான். தன் மகன் ஒரு வருடத்தின் பின் இவ்வாறு இயல்பாக சிரிக்கிறான். அந்தச் சிரிப்பிற்கும் ஆயுள் குறைவென்பதை அறியாதவர்கள் அவனை ஆசையாக பார்த்திருந்தனர். பல நாட்களுக்குப் பின் குடும்பமே ஒன்றாக அமர்ந்து மனநிறைவுடன் சாப்பிட்டு முடித்தனர்.

நவீனும் தனதறைக்கு சென்று உறங்கி விட்டிருந்தான்.

இங்கே உறக்கம் வராமல் தவித்தது என்னவோ ஆத்விக் தான். பழைய நினைவுகளில் உள்ளம் கனத்துப் போக படுக்கையில் சாய்ந்தவனுக்கு தூக்கம் வரமாட்டேன் என சண்டித்தனம் செய்தது.

அன்றிரவு காதல் கொண்ட இரு உள்ளங்களும் தூங்காமல் விழித்திருந்தே தங்களது இரவைக் கடத்தினர்.


..


இரவு தாமதமாகி உறங்கியதாலோ என்னவோ இன்று சற்றுத் நேரம் கடந்த பின்னரே ஆத்விக் விழித்திருந்தான். வழமையாக ஜாக்கிங் செல்பவன் இன்றும் தயாராகி வந்தவனுக்கு, திடீரென ஓர் எண்ணம் தோன்ற நவீனின் அறையை நோக்கி நடையைக் கட்டினான்.

அங்கே அவன் கண்ட காட்சியில் வாயை மூடிக்கொண்டு சிரித்தவன் குளியலறைக்குள் நுழைந்து வெளியே வரும் போது அவன் கையில் வீற்றிருந்ததோ தண்ணீர் வாளியொன்று.

அப்படியே நவீனின் மேலே ஊற்றி விட "அம்மா மழை..மழை..வீ..வீட்டுக்குள்ள மழை..." என பதறியடித்து எழுந்து கொள்ள ஆத்விக் வாயையும் வயிற்றையும் பொத்திக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்ததிலே, நவீன் இவ்வுலகிற்கு மீண்டிருந்தான்.

அதில் கடுப்பாகி "நாயே..இது உன் வேலை தானா..? இரு வரேன்..." என்றவாறு அவனைத் துரத்த ஓட ஆத்விக்கோ இருந்த இடம் தெரியாமல் பிடித்தான் ஓட்டம்.

அப்படியே இருவரும் கீழே வந்திருக்க ஆத்விக் அவனிடம் பிடிபடாமல் சோஃபாவை சுற்றி ஓடிக் கொண்டே "கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டு இருக்க. ஆஃபிஸ் போகனும்னு ஒரு ரெஸ்பான்ஸ்ஸிபிலிட்டி இல்ல?" என்கவும்

"ஆம்மான்டா நான் கும்பகர்ணன் தான். அது தான் இப்படி தூங்குறேன். அதுல உனக்கென்ன வந்துச்சு மட்டி மடையா..? அது சரி ஆறு மணிக்கு உங்கப்பனா ஆஃபிஸ் தெறந்து வச்சிருப்பான்..." என என்ன பேசுகிறோம் என்பதறியாது தூக்கம் கலைந்த வெறியில் அவன்பாட்டில் அவனது பல்லவியை நவீன் பாட

ஆத்விக்கும் சிரித்துக் கொண்டே "ஆமா எங்கப்பா தான் தெறப்பாரு. கொஞ்சம் அப்படியே யூடேன் போட்டு பின்னாடி பாரு செல்லம்..." என்கவும்

"யாருக்கிட்ட..ஆங் யார பயம் காட்டுற..?" என வசனம் பேசிக்கொண்டே திரும்பியவன் ஓர் கணம் தடுமாறிப் போனான் பயத்தில்.

அங்கே ப்ரனீத்தா இவர்களின் கூத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க சூர்யா விக்ரமை பார்வையால் பொசுக்கிக் கொண்டிருந்தார்.

நவீன் தலையை சொரிந்து கொண்டே "ஐய்யே சூரிப்பா நான் உங்கள சொ..சொல்லைல்ல..இதோ இந்தப் பக்கிய தான் சொன்னேன்... எனக்கு ஆர்ஜென்டா ஓர் கால் பண்ணனும். இதோ வந்துர்ரேன்...அவ்வ்" என சமாளிக்கத் துப்பில்லாமல் ஏதோ ஒன்றை உலறி விட்டு ஓட்டமும் நடையுமாக மேலே சென்று விட்டான்.

அவன் சென்று மறைந்தவுடன் இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த சிரிப்பு பீறிட்டு வெளியே வர "ஹா..ஹா பய ரொம்ந பயந்துட்டான்..." என்றார் சூர்யா.

பின்னர் ப்ரனீத்தா ஆத்விக்கின் புறம் திரும்பி "கண்ணா காபி குடிச்சிட்டு போப்பா..." என்றழைத்தவரிடம் "நோ மாம். நான் வந்து குடிக்கிறேன்...." என்றவாறு சென்று விட்டான்.

ப்ரனீத்தாவும் ஓர் முடிவுடன் நவீனின் வரவிற்காக காத்திருந்தார்.

..


ஆனால் இங்கே வழக்கத்திற்கு மாறாக சந்தியாவின் அர்ச்சனைகள் காதை வந்தடைக்கும் முன்பே தயாராகி கீழே வந்தவளை கண்ட மொத்த குடும்பமும் ஜெர்க்காகி விட்டது.

அவர்களின் நிலையைக் கண்டவள் வாய்க்குள் சிரித்து விட்டு சாப்பிட வந்தமர்ந்தாள். அவளின் முகத்தில் வழமையாக இருக்கும் குறும்பு இன்று காணாமல் போயிருக்க பதறியவர்களில் தாமோதரன் "என்னம்மா உடம்புக்கு ஏதும் சரியில்லையாடா.. டாக்டர் கிட்ட போய்ட்டு வருவோமா..?" என தந்தை ஒரு பக்கமும்,

"ஏன் கண்ணெல்லாம் வீங்கி இருக்கு. நைட் சரியா தூங்கலையா?" என்று தவிப்பில் சஞ்சய் மறு பக்கம் வினவ

சந்தியாவோ "இப்பவாச்சும் பொறுப்பு வந்திருக்கேனு சந்தோஷப்படுங்க.." என்று வாய் சொன்னாலும், கையோ சூடு இருக்கிறதா என அவளது நெற்றியையும் கழுத்தையும் தொட்டுப் பார்த்தது.

எல்லோரையும் பார்த்து பெருமூச்சு விட்டவள் "எனக்கு ஒன்னுமில்லை. நான் நல்லாதான் இருக்கிறேன்.." என்றாள் சத்யா.

அவளை திசைதிருப்ப நாடிய சஞ்சய் "சத்யா இன்னைக்கு உன் புதிய க்ரஷ்ஷ மீட் பண்ணினேன்..." என்றான் குறும்பாய்.

அவனை புரியாதவளாய் பார்த்த சத்யா "யார்..?" என்றாள்.

"அது தான் அந்த ஏ.எஸ் கம்பனியோட எம்.டி.." என்றான். அதில் அவளது கண்களில் ஓர் கண நேரமாயினும் மின் வெட்டி மறைந்திருக்க அதனை யாரும் கவனித்திருக்கவில்லை.

"ச்சே இது என்ன மாதிரி உணர்வு. அவர் யாருன்னே தெரியாது. அப்படி இருக்க இது என்ன தேவையில்லாத சிந்தனை..?" என தன்னைத் தானே கடிந்து கொண்டவள் அண்ணனிடம் "ஓஓ அவரா..." என்றாள் சுரத்தேயில்லாமல்.

"ஆமா. இன்னைக்கு ஜாக்கிங் போய்ட்டு வரும் போது தான் அவரப் பார்த்தேன்..." என்றான்.


...


ஆத்விக்கும் சஞ்சய்யும் எப்போதும் ஒரே ட்ரக்கில் தான் ஜாக்கிங் செல்வது. ஆனால் இதுவரை இருவரும் சந்தித்ததில்லை. இன்று ஏனோ விதி வசத்தால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டிய நிலையாகிற்று.

ஆத்விக்கை முதலில் கண்ட சஞ்சய் ஓடிக் கொண்டே அவனருகில் வந்து "ஹாய்..." என புன்னகைக்க அவன் புரியாமல் இவனைப் பார்த்து வைத்தான்.

அதில் சந்தேகமாய் "நீங்க ஆத்விக் தானே..?" என்றான். அவனும் ஆம் என தலையாட்ட முத்துப் பற்கள் தெரிய சிரித்தவனின் அழகை எங்கோ பார்த்திருப்பது போல் இருந்தது ஆத்விக்கிற்கு.

"ஐ எம் எஸ்.டி கம்பனியோட எம்டி சஞ்சய்...." என்கவும் அவனும் கைகுலுக்கியவாறு "ஹாய்..நைஸ் டு மீட் யூ..." என்றான் புன்னகையுடன்.

சஞ்சயும் "உங்கள பத்தி நெறய கேள்வி பட்டிருக்கிறேன். சோ ப்ரௌட் ஒஃப் யூ மேன்..." என புகழ்ந்து கூற அதற்கும் சின்னச் சிரிப்பொன்றையே பதிலளித்தவனிடம் மேலும் எதுவும் கேட்க முடியாத நிலை சஞ்சயினது.

சிறிது நேரத்தில் "ஓகே சஞ்சய். நான் போக வேண்டிய ரூட் வந்துட்டு..." என கண்ணசைவில் தன்னிடத்தை சுட்டிக் காட்டியவனுக்கு தலையசைத்து செல்ல வழி விட்டான் சஞ்சய்.


...


இங்கே சத்யாவிடம் "ஆனா குட்டிமா அவரு சரியான அமைதியான டைப்..." என்ற சஞ்சயிடம்

தமோதரன் "நானும் அந்தப் பையனப் பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன். என் ஃப்ரெண்ட் சூர்யாட பையன் தான் அவர்..." என்கவும் முந்திக் கொண்ட சந்தியா "நம்ம சூர்யா அண்ணன்ட பையனா..? நானும் ஒரு ரெண்டு மூனு தடவ பார்த்திருக்கேன். பார்க்க நல்ல பையனாத் தான் தெரிஞ்சாரு. நம்ம சத்யாக்கு அவர மாதிரி பையன் அமைஞ்சா நல்லா இருக்கும்..." என்று பெருமூச்சு விட்டவரிடம் தாமோதரனோ "நானும் சூர்யாகிட்ட கேட்டிருந்தேன். அவனுக்கும் நம்ம சத்யாவ ரொம்ப புடிக்கும். ஆனால் பையன் தான் இப்ப கல்யாணம் வேணாம்னு ஒத்தப் பிடியா நிக்கிறாராம்." என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

இவ்வளவு நேரமும் எதிலும் காது கொடுக்காமல் இருந்த சத்யாவிற்கும் அவரது கடைசிப் பேச்சுப் பிடிக்காமல் போய் விட அதிர்ந்தவளாக கோபத்துடன் "யார கேட்டு கல்யாணம் செய்து வைக்க முடிவு பண்ணுனிங்க. எனக்கு இப்போ மெரி பண்ணிக்க இஷ்டமில்ல..." எவ்வளவு முயன்றும் இறுதியில் கண்கள் கலங்கி விட்டன.

தன் தங்கையின் கலங்கிய முகத்தைப் பார்த்து சஞ்சயின் நெற்றி யோசனையில் சுருங்கியது.

சந்தியாவோ நல்ல சம்பந்தம், அதுவும் தெரிந்த சொந்தங்கள் வேறு, கை நழுவி போய்விடுமோ என்று பயந்து ஆத்திரத்துடன் வார்த்தைகளை விட்டிருந்தார்.

"அப்போ கல்யாணம் பண்ணிக்காம இருக்கப் போறியா..? அப்படில்லாம் இங்க இருக்க முடியாது. பொம்புளப் புள்ளைனா காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு புகுந்த வீட்டுக்கு போய்த் தான் ஆகனும்...அத மனசுல வச்சுக்க..." என்றிருந்தார்.

அவரை அடக்கும் முகமாக தாமோதரனோ "ஏய் நீ கொஞ்சம் சும்மா இரு. குட்டிமா கிட்ட நான் பேசுறேன்." என்றவர் திரும்ப அங்கே தாயின் பேச்சில் விழி நீர் வடிய அமர்ந்திருந்த சத்யா "அ..அம்மா நா..நான் உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லிருங்க எங்கயாச்சும் போய்றேன். இப்படி பேசி காயப்படுத்தாதம்மா..." என்று விட்டு படிகளில் ஏறி சென்று விட்டாள்.

அவளது பேச்சில் அதிர்ந்தது என்னவோ மொத்தக் குடும்பமும் தான்.

சஞ்சய் ஆத்திரம் தாளாமல் இவர்களின் புறம் திரும்பி "அவ தான் பிடிக்கலனு சொல்லுறால்ல. பின்ன ஏன் கம்பல் பண்ணுறீங்க. இனி அவ கிட்ட யாராச்சும் இந்தப் பேச்ச எடுத்தீங்க நான் மனுசனா இருக்க மாட்டேன்.." என்றவாறு கைகளை கழுவி விட்டு தங்கையின் பின்னே எழுந்து சென்றான்.

சந்தியா கணவனிடம் "என்னங்க இவ இப்படி பேசிட்டு போறாள்...?" என பரிதாபமாக விழிக்க, அவரோ "பசங்கள அவங்க வழில விடும்மா. தானா வருவாங்க. இனி இதை பத்தி பேசாம இருக்கிறது நல்லதுனு தோனுது..." என்றார்.

...


சத்யாவிற்கோ மீண்டும் மீண்டும் தாய் கூறியதே நினைவில் வந்து இம்சித்துக் கொண்டிருந்தது.

"அம்மா என்னால முடியலமா. அவன மனசுல நெனச்சிக்கிட்டு இன்னொருத்தனுக்கு கழுத்த நீட்ட சத்தியமா முடியாதுமா. வலிக்குதுமா நான் என்ன செய்யட்டும்..?.. அவன் என்னை விட்டுப் போனாலும் நா..நான் இன்னும் அவனை லவ் பண்ணுறேனேமா. அவன் ஏதோ தவறா என்னைய புரிஞ்சு வச்சிருக்கான். அவனுக்கு எல்லாம் புரியும் போது நிச்சயம் என்னைத் தேடி வருவான். என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்க...வ..வருவல்ல..??" என்று கடைசியில் தன் மனதை கொள்ளை கொண்டவனிடமே கேள்வியையும் கேட்டு வைத்தாள் காரிகை.

இப்படியே கட்டிலில் சாய்ந்து கண் மூடி அவள் அமர்ந்திருக்க, அவளது அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் சஞ்சய்.

வந்தவன் அவளருகில் அமர்ந்து அவளது தலையைத் தடவி விட, விழிகளைத் திறந்து அவனைப் பார்த்து விட்டு அப்படியே அவனது தோள் சாய்ந்தாள்.

அவனும் வாகாக தன்னைக் கொடுத்து விட்டு தங்கையை கனிவாக பார்த்துக் கொண்டே "குட்டிமா உனக்கு என்ன பிரச்சினை...? மனசுக்குள்ள எதையோ வச்சிக்கிட்டு தவிக்கிறேனு புரிது. இந்த அண்ணன் கிட்ட சொல்ல மாட்டியா..?" என்றதும் அவளுக்குமே தொண்டையடைத்தது.

மறுப்பாக தலையை ஆட்டியவள் " எனக்கிந்த கல்யாணம் எல்லாம் வேணாண்ணா..." என விம்ம அவனுக்கும் மனசு உறுத்தியது.

"ஓகேம்மா. அம்மா கிட்ட நான் பேசிட்டேன். இனி இதை பத்தி உன் கிட்ட யாரும் பேச மாட்டாங்க. பட் என்ன நடந்தாலும் உன் மனசுல என்ன குழப்பம் இருந்தாலும் என் கிட்ட சொல்லு.. நான் எப்பவுமே என் தங்கச்சி சைட் தான்.." என அவளது நெற்றி முட்ட அப்போதும் அவள் அசையாமல் அவனது தோளில் சாய்த்திருந்தாள்.

அவளுள் ஏதோ இருப்பது சஞ்சய்க்கு நன்றாக புரிந்தது. இருந்தும் அவளாக சொல்லாமல், தான் வாய் விட்டு கேட்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தவன் அவளது நெற்றியில் முத்தமிட்டவாறே "சரிடா நான் ஆபிஸ் போய்ட்டு வரேன். நீ ரெஸ்ட் எடு" என எழுந்து கொள்ள அவளும் "இல்லை நானும் உன் கூட வரேண்ணா..." என்றவளும் உடன் எழுந்து கொள்ள, சஞ்சய் என்ன நினைத்தானோ சரியென்று தலையை ஆட்டி வைத்தான்.


தொடரும்...


தீரா.
 
Last edited: