• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடல் - 10

MK6

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
12
16
3
Tamil nadu

1000018040.jpg
கடல் தாண்டும் பறவை!

கடல் - 10

" அழுத்தங்கள் இல்லை என்றால் வைரங்கள் இல்லை!"


ஆழ்கடலை மேலிருந்து கீழாக பார்ப்பது அவளின் எத்தனை நீண்ட நெடுநாள் பயம் கலந்த கனவு! தன் பயத்தை வெற்றி கண்டுவிட்டோம்! அந்த நீலக்கடலை ஜெயித்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் அவளது முகம் பூவாய் மலர்ந்து சிரித்தது.

பிடிமானம் இல்லாமல், ஒருவனின் ஒற்றைக் கரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து கடல் தாண்டும் பறவை போல் தன்னுடைய இரு கரங்களையும் விரித்து, கடல் மட்டத்திலிருந்து 60 அடிகள் உயர்ந்து, பறந்து மகிழ்ந்தாள்.

ஐந்து வயது குழந்தையின் மனோ நிலையில் மனம் ஆனந்த ஆர்ப்பரிப்பில் பொங்க, அந்த நொடியில் எவ்வித சிந்தனையும் இன்றி தன் கையணைப்பில், தன்னில் நம்பிக்கை கொண்டு, அந்தரத்தில் ஆகாயமாய் மிதக்கும் தன் மிர்ச்சியை அவ்வளவு பிடித்தது அவளின் தீராவிற்கு.

குடும்ப அமைப்பு வேண்டாம். பெண்கள் வேண்டவே வேண்டாம் என்ற வைராக்கியத்தோடு இருந்தவனின் உறுதியை தூள் தூளாக்கினாள் பார்த்த நொடி முதல். இத்தனை வருடங்கள், இத்தனை மாதங்கள், இத்தனை நாட்கள், இத்தனை மணிகள், இத்தனை நொடிகள் இவள் இல்லாமல் நான் எப்படிக் கடந்தேன் என்ற எண்ணத்தை அவனுக்கு விதைத்தாள்.

தன் அன்னையின் சாயலை பிரதிபலித்தாள். காதலுக்காய் ஏங்கிய தன் அன்னையின் கண்களில் தெரிந்த தவிப்பை அவள் கண்களில் கண்டதும், அந்தத் தவிப்பும் தனக்கே தனக்கு என்று தெரிந்ததும் தேவ்வின் காதல் உள்ளத்தில் காதல் மலர்ந்து கர்வம் கொண்டது.

தன் கையில் மிதப்பவளை உள்ளத்தில் பொத்தி வைத்துக் கொண்டு உயிருள்ளவரை காக்க வேண்டும் என்ற உத்வேகம் அவனுக்கு ஊற்றெடுத்தது.

" இந்த நொடி என் வாழ்க்கையில் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. என் அச்சத்தை எல்லாம் மிச்சம் இல்லாமல் துடைத்த உனக்கு என்ன பரிசு கொடுப்பேன் தீரா? " என்றாள் ஆத்மார்த்தமான அமைதியுடன்.

" அந்தப் பரிசே நீ தான் மிர்ச்சி. பரிசினை பத்திரப்படுத்தி வைத்துக் கொள். நான் கேட்கும் நேரம், தயக்கமில்லாமல் தந்துவிடு!" என்றான் புன்னகையுடன்.

சரியாக அந்த நேரம் அந்தப் பக்கம் வந்த சக்தி, அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு அதிர்ந்தான்.

"ஹேய்! ரெண்டு பேரும் கீழ விழுந்துடப் போறீங்க. ஏய் மயிலு உனக்கு தான் கடலை பார்த்தா பயம் தானே! பிடிமானம் இல்லாமல் இப்படி தொங்கிக் கொண்டிருக்கிறாய். அன்று போல் இன்றும் மயக்கம் வந்து விடப் போகிறது. உதவிக்கு யாரையாவது நான் கூட்டிக் கொண்டு வருகிறேன் " என்று பதட்டமாக ஹெல்ப்லைனை தேடி ஓடினான்.

" மயக்கம் வந்தது தானே தீரா" என்றாள் தேவ்வினை பார்த்தபடி.

"ம்.." என்றான் தேவ் அவளை கேள்வியாக.

"தீரா மயக்கம் என் தீரா மீது..." என்று கூறி தன் கைகளினால் அவன் தலை முடியைக் கோதி, தன் உதட்டினால் அவன் கன்னத்தில் சத்தம் இல்லாமல் முத்தமிட்டாள்.


தாய்மை கலந்த அந்த முத்தத்தில் தன்னிலை மறந்தவனின் இமைகளோரம் துளிர்த்தது.

செல்லமாய் தன் நெற்றியோடு அவன் நெற்றியை முட்டி மோதினாள்.

தன் கையணைப்பில் இருந்தவளை பத்திரமாய் கப்பலுக்குள் கொண்டு வந்தான்.

" தீரா நான் மீண்டும் ஒருமுறை கடலை மேலிருந்து கீழே பார்க்க வா? " என்று தன் பயத்தை மீண்டும் பரிசோதிக்க தேவ்விடம் கேட்டாள்.

கப்பலின் பக்கவாட்டுக் கம்பி பக்கம் அவளைத் திருப்பி, அவளின் பின்புறம் அணைவாய் அவளை அணைத்துக் கொண்டு நின்று, "இப்பொழுது பார் மிர்ச்சி!" என்றான் காதோரம் மெதுவாக.

அவனின் மெதுவான உஷ்ணக் காற்றில், காது மடல்கள் சிலிர்த்திட, கண்களை ஒரு முறை மூடித் திறந்தவள், மெதுவாக மேலிருந்து கீழே கடலை மீண்டும் பார்த்தாள்.

அவளின் எண்ணங்களில் வேறு எண்ணங்கள் ஊடுருவாமல் இருக்க, மயூரியின் இடையோடு தன் கைகளை இறுக்கமாய் பிணைத்துக் கொண்டு, அவள் தோள் வளைவில் தன் நாடியை குற்றிக்கொண்டு,

"இந்த நொடி, இந்தப் பரந்து விரிந்த கடல் சாம்ராஜ்யத்தின் ராணி நீ! உன் ஆளுகையின் கீழே மொத்த நீர் பரப்பும் உன் காலடியில் கிடக்கிறது. உன் ஆணைக்கு அடிபணிய என்றென்றும் உன்னுடன் நான் இருக்கிறேன் என்பதை நினைவு கொள் மிர்ச்சி" என்றான்.

இதுவரை தான் அறிந்திருந்த கடல் உலகம் அழிந்து போக, புதிய கடல் உலகத்தின் ராணியாக அவன் அவளை அறிமுகப்படுத்தியதும், அதில் உண்டான கம்பீரத்தில் தன் முதுகினைச் சாய்த்து அவன் மேல் சரிந்தாள்.

கண்களை மூடிக்கொண்டே, "இத்தனை வருடங்கள் கண்களை மூடினாலே, கடல் விரிந்து வந்து என்னை பயமுறுத்தியது. யாருமற்ற தனிமையில் என்னை விழுங்கப் பார்த்தது.

துக்கங்கள் தாளாமல், தூக்கங்கள் தொலைத்து நின்றேன் தீரா. என் ஏக்கங்களை நீ ஏந்திக் கொண்டதால், என் விழிகள் இன்று உறக்கத்திற்கு கெஞ்சுகின்றன. அமைதியாக, நிம்மதியாக, எனக்கே எனக்காய் இருக்கும் உன் மடி மீது நான் தூங்கிக் கொள்ளவா?" என்றாள் அவன் விழிகளைப் பார்த்து.

அவளைத் தன் மார்போடு சாய்த்து, இதமாய் முதுகினில் தட்டிக் கொடுத்தான். அவள் தனக்கு கொடுத்த தாய்மையை அவளுக்கும் பரிசளித்தான்.

கப்பலின் இதமான தாலாட்டில், தேவ்வின் அரவணைப்பில் அவன் காதல் அவன் மார்பில் துயில் கொண்டது.

கப்பல் படை பணியாளர்களுடன் விறுவிறுவென சக்தி அவ்விடத்திற்கு வந்தான்.

இருவர் இருந்த நிலையைப் பார்த்து, நிலைமையினைப் புரிந்து கொண்ட சக்தி, "பாஸ்... நீங்களாவது என்னிடம் உண்மையை சொல்லி இருக்கலாமே! இப்பொழுது இவர்கள் யார் தொங்கிக் கொண்டிருந்தார்கள் என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?
நான் தான் தொங்க வேண்டும் போல கோபால்....! இதற்கு என்னை அபதாரம் கட்டச் சொன்னால் நீங்கள் தான் கட்ட வேண்டும் பாஸ்" என்ற சக்திக்கு சிரிப்பையே பதிலாய் தந்தான் தேவ்.

கப்பல் பணியாளர்களுக்கு ஏதேதோ விளக்கம் தந்து குழப்படித்து, அவர்களோடு அங்கிருந்து நகர்ந்தான் சக்தி.

மாலைப்பொழுதும் கரைந்து போனது. சூரியனும் கடலுக்குள் மறைந்து கொண்டான். அமர்ந்திருந்த இடத்திலிருந்து சூரிய அஸ்தமனத்தை பார்த்த தேவ்விற்கு, இனி தன்னுடைய தனிமை வாழ்வும் அஸ்தமனமாய் போனதைப் போல் உணர்ந்தான்.

மடியில் கிடந்தவளின் நெற்றியில் புரண்ட முடிக் கற்றைகளை ஒதுக்கி, மென்மையாய் முத்தமிட்டான். இரவு நேர குளிர் காற்றும், இதமான முத்தமும் மயூரியை துயிலிலிருந்து எழுப்பியது.

கண்களைத் திறந்தவளின் பார்வை, ஆகாயத்தில் ஒளிர்ந்த முழு நிலவைக் கண்டதும், ஆச்சரியப்பட்டு அருகில் இருந்த தேவ்வினைப் பார்த்தாள்.

முகத்தில் சிறு சுணக்கமும் இல்லாமல் தன்னை மடியில் ஏந்தியவனிடம், " நான் உனக்கு சுமையாய் இருக்கிறேனா தீரா? " என்றாள் அர்த்தத்துடன்.

பதில் அளிக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"சொல்லு தீரா "

" ம்... எப்படி சொல்ல முடியும்? தலை தானே சாய்த்தாய்? முழுவதுமாய் என்னில் சாய்ந்து விடு. நானும் சொல்லிவிடுகிறேன் " என்றவன் அவளை கண்களால் எடை போட்டான்.

தன்னைத் துளையிடும் அவனின் பார்வையில் வெட்கம் படர, " ஹேய்... உன் வாழ்க்கையில் நான் உனக்குச் சுமையா? என்று கேட்டேன்" என்றவள், தன் உள்ளங்கை கொண்டு அவன் கண்களை மறைத்தாள்.

" நம் வாழ்க்கையில் இனி சுமை எல்லாம் சுகமே. இரவெல்லாம் உன்னை சுமக்கப் போகிறவனும் நானே. பகலெல்லாம் உன்னை காக்கப் போகிறவனும் நானே.

என் பார்வைத் திறனை மறைத்துக் கொண்டாய் மிர்ச்சி. உன்னை பார்வையால் மட்டுமல்ல வேறு விதமாகவும் உணரலாம்" என்றவனின் விரல்கள் தட்டுத் தடுமாறாமல் அவளின் நெற்றியில் இருந்து நாசி வழியே பயணப்பட ஆரம்பித்தது. வரும் வழியில் இரு புருவங்களுக்கு மத்தியில் விரலினால் சுழியினை சுழற்றிவிட்டு அவளை சொக்கச் செய்தான்.

அவன் விரல், அவளின் கூர் நாசியின் உச்சியில் நங்கூரமிட்டு, அழுத்தத்துடன் உதட்டின் மேல் பள்ளத்தில் குதித்தது. மேலுதட்டின் வரிகளை ஆராயும் போது, அவன் விரல் அவளின் பற்களால் சிறைபிடிக்கப்பட்டது.

" நீ ரொம்ப மோசம் மிர்ச்சி! விழிகளையும் மூடி விட்டாய். விரலையும் சிறை பிடித்து விட்டாய்" என்றான் குற்றம் சாட்டும் குரலில்.

" நான் அப்படித்தான்" என்றான் மயூரி அதிகாரமாக.

"ஓ... ஹோ... நானும் அப்படித்தான் மிர்ச்சி" என்றவன் சட்டென்று தன் உதட்டினால் அவள் உதட்டினை உணர ஆரம்பித்தான்.

இருவரின் இதழ் வரிகளும் அவர்களின் காதலுக்கு முகவரி ஆனது.

இருவரின் மோன நிலையும் ஒரு முடிவுக்கு வந்த பின், பால் ஒளியைச் சிந்தும் முழு நிலவின் ஒளியில் கருமை நிறக் கடலில், வெண்ணிற அலைகள் இரைச்சலுடன் மோதியதை அவனுடன் அவள் ரசித்துப் பார்த்தாள்.

வானிலிருந்த நட்சத்திரங்கள் வழியாக அவளது பெற்றோர்களும் அவளின் அமைதியை ரசித்துப் பார்த்தனர்.

மறுநாள் மாலத்தீவிற்கு போகும் வழியில் இருந்த ஒரு சிறு தீவில் அவர்களது கப்பல் நின்றது. அரை நாள் அந்தத் தீவினை சுற்றிப் பார்த்து விட்டு பின் கப்பலுக்கு வரலாம் என்று பயணிகளுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

பல பயணிகள் கப்பலிலேயே தங்கி விட்டனர். சிலர் மட்டுமே தீவினை சுற்றிப் பார்ப்பதற்காக கீழே இறங்கினர்.

தேவ்வும், மயூரியும் கப்பலில் இருந்து கீழே இறங்கும்போது, மயூரிக்கு அந்தப் படிக்கட்டுகளில் ஏறிய நினைவு வந்தது.

" இந்த இடத்தில் தான் என் சுய நினைவு தவறியது தேவ் " என்றாள்.

" இந்த இடத்தில் தான் என் சுயமே தவறியது மிர்ச்சி" என்றான் அவனும்.

" ஒரே நாளில் என் வாழ்வில் இத்தனை மாற்றங்களா? இத்தனை மாற்றங்களும் உன்னால் மட்டுமே தீரா!" என்றாள் உணர்வுப் பூர்வமாக.

" மோதலில் ஆரம்பித்தது காதலில் முடிந்தது! வெரி வெரி சிம்பிள் லாஜிக் மிர்ச்சி" என்றான்.

" நீ ஏன் என்னை, என் பெயரைச் சொல்லி ஒருமுறை கூட கூப்பிடவில்லை? " என்றாள்.

"ஆஹான்... கூப்பிட்டால் போச்சு. உன் பெயர் என்ன மிர்ச்சி?" என்றான்

அவனுடைய மிர்ச்சிக்கோ அதிர்ச்சியோ அதிர்ச்சி!

"வாட்? என் பெயரே தெரியாதா? யூ... யூ... என்னைப் பற்றி வேறு உனக்கு என்னதான் தெரியும்?" என்றாள் கோபக் குரலில்.

" நான் சொல்லி விடுவேன் ஆனால் நீ கோபப்படுவாய்" என்றான் பயந்தது போல் நடித்து.

" சொல்லு தீரா!" என்றாள்.

"நீ... நீ... ஊறுகாய் போடுவதற்கு ஏற்ற பீசு" என்றான் சிரிக்காமல்.

"போடா..." என்று கோபம் கொண்டவள் அவனை விடுத்து முன்னே வேகமாய் நடந்தாள்.

"ஏய் மிர்ச்சி! உன் பெயர் மட்டும் தான் தெரியாது. மத்தபடி ஐ லவ் யூ" என்று நின்ற இடத்திலேயே சத்தமாய் கத்தினான்.

அவனைத் திரும்பிப் பார்த்து, "போங்க அங்கிள் விளையாடாதீங்க!" என்றாள்.

"அடிங்க..." என்றவன் அவளை அடிக்க வருவது போல் துரத்த, அவன் துரத்த வரும் முன் ஓட ஆரம்பித்தாள் மயூரி.

வெண் மணல் பரப்புகள், தெளிந்த கண்ணாடி போல் நீர் நிறைந்த அந்தக் கடல் கரையில், ஒரே நிமிடத்தில் அவளை மடக்கிப்பிடித்த தேவ், " உன் பேர் என்ன மிர்ச்சி? " என்றான்.

'சொல்ல முடியாது' என்பது போல் தன் தலையை இடவலமாய் அசைத்து தன் மறுப்பினை தெரிவித்தாள்.

" ப்ளீஸ்... " என்றபடி அவளின் கையைப் பிடித்தவனின் கையைத் தட்டி விட்டாள்.

சிரித்துக் கொண்டே முத்தமிட குனிந்தவனின் உதட்டிலும் வலிக்காமல் அடித்தாள்.

கோபம் கொண்ட தேவ் பின்னே திரும்பி நிற்க, அவன் முன்னே வந்த மயூரி, அவன் அணிந்திருந்த சட்டையின் பட்டன்களை ஒவ்வொன்றாகக் கழட்டினாள்.

எப்பொழுதும் அதிர்ச்சி தரும் தேவ்விற்கே அதிர்ச்சி தந்தாள் அவனின் மிர்ச்சி. அவளின் அடுத்த கட்ட நகர்வை புரிந்து கொள்ள முடியாமல் சற்றே தடுமாறி நின்றான் தேவ்.

அவன் கண்களில் இருந்து அவனின் அதிர்வைப் புரிந்து கொண்டவள், தன் சிரிப்பினை உதட்டிற்குள் மறைத்துக் கொண்டு, சட்டை அணியாமல் இருந்த அவன் வெற்று மார்பை பார்த்தபடி சுற்றி வந்தாள்.

பெண்ணவளின் பார்வையில், அந்த ஆண் மகனுக்கு வெட்கம் மீசைக்குள் அரும்பியது.

அவனின் முதுகு புறம் வந்தவள், தன் வலது கை சுட்டு விரலினால், தன் பெயரை எழுதினாள்.

உடலெங்கும் மின்சாரப் பூக்கள் பூக்க, தேகச் செல்கள் எல்லாம் சிலிர்த்து எழுந்தது அவனுக்கு.

தன் பெயரை எழுதி முடித்ததும் அவன் முதுகிலேயே வெட்கம் தாளாமல் சரிந்து கொண்டாள்.

தன் கைகளை பின்னோக்கி செலுத்தி அவளை தன் மார்பில் மோதச்செய்து, " உன் பெயரை சரியாகச் சொன்னால் என் பரிசை நான் எடுத்துக் கொள்ளலாமா? " என்றான் அவள் காதில் கிசுகிசுப்பாக.

காதல் பொழிந்த மழையில் நாணக்குடையில் ஒளிந்து கொண்டவளின் தேகம் முழுவதும் காதல் மழையில் நனைந்தே இருந்தது.

அவளின் நாடியைப் பற்றி தன்னை பார்க்கச் செய்து, " இந்த அதிதீரதேவனை மணந்து கொள்ள சம்மதமா மயூரவாகினி? " என்றான் காதல் சிந்தும் பார்வையுடன்.

தன்னுடைய பெயரை முதன்முறையாக அவனிடமிருந்து கேட்டதும், கண்கள் பளிச்சிட முகம் மலர்ந்தாள் அவள்.

" என்னுடைய பரிசை நான் எடுத்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது போல" என்றவன் அவளின் உடையிலிருந்த கொக்கிகளை விடுவிக்க முயன்ற போது, அதிர்வுடன் பின்வாங்கினாள்.

" என்னுடைய பரிசே நீதான் என்று சொன்னாய். என்னுடைய பரிசை திறந்து பார்க்க எனக்கு அனுமதி இல்லையா? நீ மட்டும் என் ஆடையைக் கழட்டி...." என்றவன் தன் வார்த்தைகளை முடிப்பதற்குள், அவன் எதிர்பாராத தருணத்தில் அவனை கடல் மணலில் தள்ளிவிட்டு கடற்கரையில் கப்பலை நோக்கி ஓட ஆரம்பித்தாள் மயூரி.


ஆறு வருடங்கள் கழித்து...


" தீரா நீ ஏன் இப்பொழுதெல்லாம் புது ஊறுகாய் வகைகளை அறிமுகப்படுத்துவதில்லை? " சமையலறையில் இருந்து, தன் ஐந்து மாதக் கருவினைத் தாங்கியபடி மாங்காய் ஊறுகாய் பாட்டிலில் இருந்த மாங்காய் துண்டுகளைச் சுவைத்துக் கொண்டே கேட்டாள் மயூரி.

தனக்கு எந்தவித பதிலும் வராமல் போகவே, மெல்ல திரும்பியவளின் முன் நின்ற தேவ், " புது புது வரவுகளை அறிமுகம் செய்து கொண்டு தானே இருக்கிறேன் என்றவன், அவளின் சூல் கொண்ட வயிற்றினைத் தடவிக் காட்டி, அவள் கையில் இருந்த ஊறுகாய் பாட்டிலை வம்படியாக பிடுங்கி வைத்தான்.

" ஊறுகாய் பாட்டிலை எங்கு தான் மறைத்து வைக்கிறாயோ? டாக்டர் உன்னை ஊறுகாய் சாப்பிட கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. அதையும் மீறி நீ சாப்பிட்டால் குழந்தைக்கு நல்லதல்ல மிர்ச்சி" கோபப்படாமல் கோபமாய் கூறினான் தேவ்.

" டாக்டர் உன்ன கூட தான் ஊறுகாய் சாப்பிட கூடாதுன்னு சொன்னாரு" என்றாள் ஒரு மார்க்கமாக.

" சும்மா சொல்லாதே மிர்ச்சி. எந்த டாக்டரும் எனக்கு அப்படி அறிவுரை கூறவில்லை "

"நீ என்னை தினமும் ஊறுகாய் போட்டு சுவைப்பதைச் சொன்னேன்..." என்றாள் ஒற்றை புருவத்தை உயர்த்தி.

"அது... அது..." என்று தேவ் சமாளிப்பதற்கு வார்த்தைகளைத் தேடும் போது,

"அப்பா, இந்த அம்மா ஊறுகாய் பாட்டிலை என் ஸ்கூல் பேக்கிற்குள் ஒளித்து வச்சிருக்காங்க. என் பேக் எல்லாம் எண்ணெய் வடிந்து பாழாய் போய்விட்டது. நீங்க அவங்களுக்கு கண்டிப்பா பனிஷ்மென்ட் கொடுக்கணும்" என்று தன் அன்னையைப் பற்றி புகார் அளித்துவிட்டு ஓடினாள் அவர்களின் மகள் தேவவாகினி.

" பனிஷ்மென்ட் தானே கொடுத்து விட்டால் போச்சு" என்றவனின் உதடுகள் மயூரி சுவைத்த மிர்ச்சி ஊறுகாயின் காரத்தில் சிவந்தது.

அதிதீரதேவனின் குடும்பம் அவர்களின் இனிய மாலைப் பொழுதை மும்பை கடற்கரையில் கழிப்பதற்காகக் கிளம்பியது.

கடல் அவர்களின் காதல் வாழ்க்கையில் ஓர் அங்கமாய் மாறியது.

" அழுத்தங்கள் இல்லை என்றால் வைரங்கள் இல்லை!" - அவள் வாழ்வின் அழுத்தங்கள் எல்லாம் அவனைப் பார்த்த தருணத்தில் வைரங்களாய் மாறி ஜொலிக்க ஆரம்பித்தது.

முற்றும்...
 
Last edited: