கடல் தாண்டும் பறவை!
கடல் - 2
"வாழ்க்கை பயம் காட்டும்! துணிந்து பார்! வழிகாட்டும்!"
மயூரியின் கார் ஹார்பரை நெருங்கும் நேரம் கடலில் உள்ள உப்பு நீர் மயூரவாகினியின் உள்ளங்கையில் சுரக்க ஆரம்பித்தது. உமிழ்நீர் சுரப்பிகள் வேலை செய்வதையே நிறுத்தும் அளவிற்கு அதனை அதிவேகமாக தன் தொண்டைக் குழிக்குள் இறக்கினாள். உடன் வருவேன் என்று சொன்ன தன் பாட்டி வேதநாயகியை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்த தன் அசட்டு தைரியத்தைக் கடிந்து கொண்டாள் அந்த நொடியில்.
'ஒன்று.. இரண்டு... மூன்று..' என்று மனதிற்குள்ளேயே எண்ணியவள், காருக்குள் அமர்ந்தபடி, தன் வலது தொடையில் வலது கரத்தால் தட்டித் தட்டி அதிர்வை உண்டாக்கினாள்.தோன்றிய பயத்தை அதிர்வுகள் தட்டி விரட்ட, தன் பயண பொதிகளுடன் ஹார்பரில் கால் பதித்தாள் மயூரவாகினி.
தூரத்தில் இருந்து அவளைத் தழுவத் தொடங்கிய உப்புக் காற்றில் அவளின் ரத்த நாளங்கள் உறையத் தொடங்கின. கடல் அலைகள் சப்தத்துடன் அவளை விழுங்குவதைப் போல் மாயை தோன்ற, அவளின் மூச்சு உள்ளிழுக்கத் தொடங்கியது.
சரியாக அதே நேரம், "மயூரி...!" என்ற அழைப்புடன் ஓர் ஆடவன் அவள் எதிரில் வந்து நின்றான். தன் நினைவடுக்குகளில் அவன் யார் என்று தேட, விடை இல்லாமல் குழப்பத்துடன் அவனை நோக்கினாள் மயூரி.
" ஓ... ஐ ஆம் சாரி. ஐ அம் சக்தி. சக்திவேல். சன் ஆஃப் டாக்டர் சாந்தா" என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அவளின் வதனத்தில் இருந்து அழகான, அளவான, புன்னகை மட்டுமே பதிலாய் வந்தது.
" நீங்கள் என்னை நம்பவில்லை ரைட். இதோ இப்பொழுதே எனது அம்மாவிடம் பேசுங்கள்" இந்த சக்தி தன் அலைபேசியில் தன் அன்னைக்கு அழைப்பெடுத்தான்.
"ம்மா... நீ ஒரு சூப்பர் மம்மி. பையன் மனசுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சு, புரிஞ்சு ஒரு பியூட்டிஃபுல் பொண்ண என் வாழ்க்கைக்குள்ள நுழைய வச்சிருக்க. போட்டோவை விட நேரில் ஆளு... ம்.... செம" என்று மெதுவான அடிக் குரலில் தன் அன்னையிடம் அவன் பேச,
" ஹலோ! மயூரி என் பேஷன்ட். ஜஸ்ட் ஒரு பாதுகாப்புக்காகத் தான் உன் கூட அவளை அனுப்பினேன். கண்டபடி பேசாதே சக்தி!" என்று அந்தப் பக்கம் அதட்டினார் சாந்தா.
" உங்க பேஷன்ட் தான் உங்களுக்கு மருமகளா வரணும்னு விதி இருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது சாந்து. இப்ப உங்க மகனுக்காக அந்த மயிலு கிட்ட பேசுங்க சாந்தா பேசுங்க" என்றான் குறும்புக் குரலில்.
" அடேய் மயில் இல்லடா! மயூரி!"
" மயூரி என்றாலும் மயில் தான் ஆத்தா"
"சரி... உன் விளையாட்டுத்தனத்தை எல்லாம் விட்டுவிட்டு, போனை மயூரியிடம் கொடு" என்று அதட்டினார் சாந்தா.
" மயூரி! வாழ்க்கை பயம் காட்டும்! துணிந்து பார்! வழிகாட்டும்!" என்றார் அவளிடம்.
அவரின் வார்த்தைகள் மயூரிக்குள் இறங்க, தன் கண் முன்னே தெரிந்த நீலக்கடலினை எதிர்கொள்ள, துணிந்து தன் பாதங்களை முன்னே வைத்தாள்.மயூரியின் பயணப் பொதிகளை சக்திவேல் ஆட்களை வைத்து ஏற்ற ஏற்பாடு செய்தான்.
" என்னை எதிர்கொள்வாயா? " என்று அந்த நீலக்கடல் அவளிடம் சவால் விட, கீழ் உதட்டை அழுத்தப் பற்றிய படி தன் கைப்பையில் இருந்த கருப்பு நிற ரோபான் குளிர் கண்ணாடியைத் தன் முகத்தில் அணிந்து கொண்டு,
தன் வலது கையை நீட்டி, சுட்டு விரலினால் கடலினை நோக்கி,
' என்னை கொல்லத் துடிக்கும் உன்னை வெல்லத் துடிப்பேன்! உறுதியாக!' என்ற பதிலை மனதோடு படித்து விட்டு அடுத்த அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்தாள்.
மும்பையில் இருந்து மாலத்தீவுக்கு கோஸ்டா குரூஸ் மூலம் இயக்கப்படும் நியோகிளாசிகா உல்லாசக் கப்பலுக்கு துறைமுகத்திலிருந்து, கேங்வேயில் அனைவரும் ஏறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கரையிலிருந்து கப்பலின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஏணி போன்ற படிக்கட்டுகளில் அனைவரும் ஏறிச் சென்றனர். மயூரியின் பயம் பற்றித் தெரியாத சக்திவேல், அவள் பின்னே வருகிறாள் என்று நினைத்துக் கொண்டு, வேகமாக முன்னேறிச் சென்றான்.
பக்கவாட்டுக்களில் நீர் பரப்பை பார்க்காமல், ஏறுவதற்காக பெரும் முயற்சி செய்து, நான்கு படிகள் ஏறியவளுக்கு, மீதமிருந்த நாற்பது படிக்கட்டுகளும் நானூறு படிக்கட்டுகளாகத் தெரிந்தது.
குளிர்கண்ணாடியைச் சரி செய்வதுபோல் கண்களை மூடிக்கொண்டு, இரும்பு படிக்கட்டின் கைப்பிடியை உறுதியாய் பற்றிக் கொண்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாள். இறுதிப் படியில் கால் வைப்பதற்காக காலை உயர்த்தியவள், படிக்கட்டுகள் சமதளமாய் தெரிந்ததும் தான் மேலே வந்து விட்டதை உணர்ந்து, மெல்ல கண்களைத் திறந்து கண் கண்ணாடி வழியே பார்த்தாள்.
"ஹக்..." உயரத்திலிருந்து ஆழமாகக் தெரிந்த அந்தக் கடல் அவள் உயிரைக் காவு கேட்டது. நின்ற நிலையிலே, மூச்சு விடவும் மறந்தவளின் ரத்தம் உறைய ஆரம்பித்தது. கண்கள் லேசாக மேலே சென்று நிலை குத்த ஆரம்பித்தன.
" ஹலோ! எக்ஸ்கியூஸ் மீ!" என்று அவளின் பின்னிருந்து கேட்ட கம்பீரக் குரல் அவளின் செவியினை அடையவில்லை.
பின்னே இருந்தவனுக்கு அவள் ஏதோ கப்பல் படிக்கட்டின் கம்பியைப் பற்றி கொண்டு, தண்ணீர் பரப்பை ரசிப்பதைப் போல் இருந்தது.
"ஹேய்... இடியட்!" என்றவன் அவளை லேசாகத் தள்ள, மயூரியோ முற்றிலுமாக பின்னே சரிந்து, அவன் கை வளைவில் பூங்கொத்தாய் விழுந்தாள்.
குளிர்கண்ணாடி அணிந்தவளின் முக உணர்வுகளை படிக்க முடியாமல் போனவன், "நைஸ் ட்ராமா!" என்றான் தன் கையில் மலர்க்கொடியை விட மென்மையாய் படர்ந்தவளைப் பார்த்து.
தன் பேச்சுக்கு எந்த எதிர்வினையும் இல்லாமல் இருந்தவளை, தன் வாழ்நாள் முழுவதும் தன் கைக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் போன்ற ஓர் வெறி பிறந்தது அவனுக்கு. தன் எண்ணப் போக்கினை எண்ணி வியந்தான் அவன்.
நெற்றியில் துகள் துகளாய் வியர்வைப் பொடிகள் சிதறி இருக்க, மூச்சுக்குத் தவித்தவளின் இதழ்கள் குவிந்தும், விரிந்தும் போராட, அவள் செவ்விதழ்களின் வரிப் பள்ளங்களில் உமிழ்நீர் நிறைந்து மினுமினுங்க, இமைகள் சுருக்கி அவளையே உற்று நோக்கினான்,
இதுநாள் வரை கற்றை மீசையின் காவலுக்குள் இருந்த அவனின் உதடுகளும் தன் காவலை மீறத் துடிக்க, அதன் துடிப்படக்க அவள் இதழோடு தன் இதழைச் சேர்த்தான். தாகம் கொண்ட வறண்ட பூமியாய், அமுத மழையை அள்ளிக்கொண்டான்.
குளிர்ந்த அவளின் ரத்த நாளங்களைச் சூடாக்கி விட்டு, அவள் இடையோடு தன் கை சேர்த்து, அவளை ஓர் சுற்று சுற்றி, இறுதிப்படியில் இருவரும் ஒரு சேர கால் பதிக்க வைத்தான்.
நடந்ததை மெல்ல மெல்ல அவளின் மூளை, அவளுக்குப் பதிவு செய்ய, பயம் மீறிய கோபத்துடன், இமைகளைத் திறந்தவளுக்கு அவனின் பின்பக்கத் தோற்றம் மட்டுமே தெரிந்தது. அதிர்ச்சியில் இருந்தவளுக்கு பேரதிர்ச்சி கொடுத்தவன், திரும்பி பாராமல் வலது கையை மட்டும் உயர்த்தி, "நைஸ் வெல்கம் டிரிங்க்!" என்று கூறிவிட்டு தன் ஆள்காட்டி விரலினால், பள்ளங்களில் நீர் நிறைத்துக் கொண்ட தன் உதட்டினை துடைத்துக் கொண்டே கப்பலுக்குள் சென்றான்.
அவன் மேனியின் கதகதப்பை தன் மேனி உணர்ந்ததைக் கண்டு, கோபம் ஆவேசம் போல் பொங்க, அவளின் பயம் அந்த நொடி அவனுடன் கரைந்தே போனது. தன் உதடுகள் உணர்ந்த சிலிர்ப்பில் , அவனைச் சூரசம்ஹாரம் செய்யும் நோக்குடன் விரைந்து செல்ல நினைத்தவள், வேகமாக நடக்க வலுவில்லாமல் துவண்டாள்.
" ஹேய் மயிலு! நமக்கான கேபினுக்குள் செல்ல வேண்டும். உனக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது? " சற்றே எரிச்சலுடன் வந்தான் சக்தி.
"சக்தி! நீங்க கொஞ்சம் பின்னாடி திரும்பி நிற்க முடியுமா?" என்றாள் மயூரி.
"ம்.." என்று அசால்ட்டாகத் தோளைக் குலுக்கியவனை," ஒரு கையை மட் டும் மேலே தூக்குங்கள்" என்றாள் அவசர அவசரமாக.
பிச்சைக்காரன் திருவோட்டைத் தூக்கியதைப் போல் அவன் வலது கையைத் தூக்கியிருக்க, "பச்..." என்ற ஒலியுடன் சலித்துக் கொண்டு அவனைத் தாண்டிச் சென்றாள் மயூரி.
' அது சரி! நம்ம சாந்தாவிடம் வரும் கேசெல்லாம் இப்படித்தான் இருக்கும் போல' என்று புலம்பிக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்தான் சக்தி.
தன் பானிக் அட்டாக்கை நிமிடத்தில் நிறுத்தியவன் யார்? இதழ் வழி உயிரைப் பருகி, உயிர்வலி நிறுத்தியவன் யார்? அத்துமீறி தன் பெண்மையை உரசியவன் யார்? அடுக்கடுக்காய் அவள் மனதில் எழுந்த கேள்விகள், தான் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறோம் என்ற அவளின் நிலையையே மறக்கச் செய்தது.
தனது அறைக்கு அருகில் ஒதுக்கப்பட்டிருந்த அவளின் அறைக் கதவினைத் திறந்து விட்டு, "ஓய் மயிலு! இதுதான் உன்னுடைய ரூம். ஏதேனும் வேண்டுமென்றால் சக்தி என்று மட்டும் கூப்பிடாத. எனக்கு நல்ல தூக்கம் வருது. பகல்ல நல்லா தூங்குனா தான் நைட் சில வேலைகள் செய்ய முடியும். பாய்..." என்று கூறிவிட்டு தன்னறைக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டான் சக்தி.
தனது அறைக்குள் நுழைந்ததும் மயூரி வேகமாக அதனுடன் இணைக்கப்பட்டிருந்த குளியலறைக்குள் சென்று, நீரினை அள்ளி தன் முகத்தினைக் கழுவினாள். தன் விரல்களால் உதட்டினைப் பரபரவெனத் தேய்த்து அதன் குறுகுறுப்பை நீக்க முயன்றாள்.
'யாரவன்? நிச்சயம் இந்த கப்பலில் பயணம் செய்பவன் தான். அவனை எப்படி சந்திப்பது? அவனை எப்படி தண்டிப்பது?' என்று சிந்தித்தவள் அவனைச் சந்திக்கும் நொடிக்காய் காத்திருந்தாள்.
கப்பல் புறப்படுவதற்கான ஒலியின் சமிக்கை கேட்டதும், அவளின் உடல் புல்லரிக்கத் தொடங்கியது. தன் தாய் தந்தை இருவரும் கடலில் விழுந்த போதும் இதே ஒலி தான் ஒலித்தது. தன்னுடைய இரு கைகளாலும் காதுகளை அடைத்துக் கொண்டு, கண்களைச் சுருக்கி அப்படியே அந்த குளியலறையில் அமர்ந்து விட்டாள்.
கப்பல் நகர ஆரம்பித்ததும், சிறிது லேசான தள்ளாட்டத்துடன், இடவலமாக அமர்ந்திருந்த தரை அசைய ஆரம்பித்தது. அதனுடன் கப்பலில் இருந்து கரையைப் பார்க்கலாம் என்ற அறிவிப்பு வந்தது.
இன்னும் எத்தனை நாளைக்கு தான் பூட்டிய அறைக்குள் ஒளிந்து பதுங்கி இருப்பது? முடிவெடுத்தவள், தன் முதுகினை சுவற்றில் தேய்த்துக் கொண்டே தன் உள்ளங்கையினால் சுவற்றினைப் பற்றி, தரையில் இருந்து மெல்ல எழுந்தாள்.
முகத்தினை நன்றாக அழுந்தத் துடைத்துக் கொண்டு, கப்பலில் இருந்து கரையைக் காண அனைவரும் கூடியிருக்கும் இடத்திற்குச் சென்றாள். கூச்சலும் கும்மாளமும் ஆர்ப்பாட்டமுமாக இருக்கும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பாமல், சற்றே ஒதுங்கி, வெறித்த கண்களால் கரையினைப் பார்த்தாள்.
கரையினை பார்த்தவள் சற்றே திரும்பி கடல் பக்கம் பார்க்க, சூரிய வெளிச்சத்தில் கடல் தகதகவென மின்னியது. அந்த ஆழ்கடல் கண்டதும், ஆழ் மனதில் இருந்த அச்சம் துளிர்க்க, பின்னே நகர்ந்து சுவர் போன்ற அமைப்பில் இரு கைகளையும் நீட்டி உள்ளங்கையை அழுத்திக் கொண்டாள். பாதங்களைத் தரையினில் அழுத்திக் கொண்டாள். தன்னை பயமுறுத்தும் அந்தக் கடலைப் பார்த்து, " உன்னால் முடியாது" என்றாள்.
தனது சுவாசம் சீராக இருப்பதால் தனக்கு பானிக் அட்டாக் வரவில்லை என்பதை உணர்ந்து கொண்டவள், மெல்ல இமைகளை மூடி, " உன்னால் முடியவே முடியாது!" என்றாள் சத்தமாக.
சட்டென்று அவள் இதழ்களில் தீப்பற்றிக் கொண்டது, ஒரு மோகன மோகமுத்தத்தால். அதிர்ந்தவள் கண் திறந்தாள், தன் பரந்து விரிந்த முதுகினைக் காட்டிக்கொண்டு ஒருவன் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தவள்,
" டேய் பொறுக்கி நில்லுடா!" என்று ஆத்திரமாகக் கத்தினாள், கப்பலின் தடுமாற்ற அசைவினாலும், முழு கடல் கண்ட பதற்றத்தினாலும், தன் கை கால்களை அவளால் இயல்பாக அசைக்க முடியவில்லை.
" என்னால முடியாதுன்னு நீ சொல்லக்கூடாது பேபி!" என்று திரும்பிப் பாராமல் வலது கையை அசைத்துக் கொண்டே சென்று விட்டான்.
தனது இயலாமையை ஒருவன் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க முடியாத தன் நிலையை அறவே வெறுத்தாள் மயூரி. கை கால்கள் மரத்துப் போவதைப் போல் இருந்தாலும் உள்ளம் மட்டும் உலைகளமாய் கொதித்தது மயூரிக்கு.
தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தான் தேவ் பாய் என்று அனைவராலும் அழைக்கப்படும் அதிதீரதேவன்.
இதுவரை கண்ணாடியை முகச் சவரத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த தேவ், முதன்முறையாக அதில் தன் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பெருவிரலினால் தன் உதட்டினை தட்டிக் கொண்டே ஒற்றைக் கண்ணடித்தான் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்து.
' அந்தப் பெண்ணை உனக்குப் பிடித்திருக்கிறதா? ' பிம்பம் அவனிடம் கேள்வி கேட்டது.
'பச்... இல்லை' என்றான் அசட்டையாக.
'அப்போ வாரி வழங்கிய முத்தத்திற்கெல்லாம் முகவரி என்ன?' என்றது பிம்பம்.
' ஊறுகாய்களைப் பார்த்ததும், வாயில் உமிழ்நீர் சுரக்கும். ஒரு கூச்ச உணர்வு தோன்றும். சுவை மொட்டுக்கள் அரும்பும். சுவைத்திட ஓர் வெறி பிறக்கும்.
எனது தயாரிப்புகளைப் பற்றி எத்தனையோ பேர் கூறினாலும் இந்த உணர்வுகளை இதுவரை நான் அனுபவித்ததில்லை. ஆனால் இன்று அவளைப் பார்த்ததும்... அத்தனை உணர்வுகளும் எனக்கு ஆர்ப்பரித்தது. அவள் ஒரு "மிர்ச்சி கா ஆச்சார்" ( மிளகாய் ஊறுகாய் ).
தரத்தை பரிசோதிக்க வேண்டும் என்றால் சுவைத்து தானே பார்க்க வேண்டும். ஒரே ஊறுகாய் சுவைக்க சுவைக்க சுவை குறைந்துவிடும். இந்த ஆச்சார் கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கு. ஊறுகாய என்னைக்கும் மெயின் டிஷ்ஷா சாப்பிட முடியாது. பார்க்கலாம் இந்த ஆச்சா சைடு டிஷ்ஷா வருமான்னு' என்று பிம்பத்திடம் மீண்டும் கண்ணடித்தான் அதிதீரதேவன்.
பல்லி போல் கப்பல் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருந்தவளைக் கடந்து சென்று கொண்டிருந்த சிலர் வித்தியாசமாகப் பார்க்கவும், வேடிக்கை பொருளாக மேலும் நிற்க விரும்பாமல், வேக மூச்சுகளை இழுத்து தன்னை சமன் செய்து கொண்டு, விரல்களை மெதுவாக பக்கவாட்டுத் தடுப்புச் சுவரிலிருந்து பிரித்தாள். கால் விரல்களால் தரையினைத் தட்டி தட்டி, தான் திடமாக நிற்கிறோம் என்ற எண்ணத்தை தனக்குள் விதைத்துக் கொண்டு, தரையில் பதிந்திருந்த தன் கால்களைப் பிரித்தெடுத்தாள். அக்கினி பிரளயமாய் மனம் உஷ்ணம் அடைய அதனை தணிக்கும் வழி தெரியாது மனம் போன போக்கில் கப்பலுக்குள் நடக்க ஆரம்பித்தாள், கண்கள் செல்லும் திசையில் எல்லாம் அவன் தென்படுகிறானா? என்று ஆராய்ந்து கொண்டே சென்றது.
அந்த உல்லாச கப்பலுக்குள் இருந்த திரையரங்கிற்குள் சென்றாள். யாருமற்ற அந்த திரையரங்கில் இருந்த காலி இருக்கையில்,சற்றே தளர்வாக அமர்ந்து தன் கழுத்தை பின்னோக்கி, அமர்ந்திருந்த இருக்கையில் சாய்த்து, மிதமாக அதே சமயம் ரம்யமாக இருந்த விளக்கொளியில் கண் மூடினாள்.
தேவ் சுவைத்து விழுங்கும் பார்வையுடன், சற்றே குனிந்து, தன் முன்னே இமைகள் மூடி நிர்மலமாய் இருந்த மயூரியின் வதனத்தை அசராமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
"எண்ணெய்யில் மிதக்கும் மிர்ச்சி போல் இருக்கும் உன் உதடுகள் என்னை சுவைத்து விட்டு போ! என்று அழைத்துக் கொண்டே இருக்கிறது பேபி... என் கண் முன்னே மீண்டும் மீண்டும் வருவது உன் தவறு தான்" என்றவன் தன்னை மேலும் வளைத்து, தன் நாசியினால் அவள் நாடியைச் செல்லமாய் நிரடி, அடுத்த நொடி அழுத்தமாய் இதழ் பதித்தான்.
அதிர்ந்து விழித்தவள் நிமிர்ந்து எழும்போது, அந்தத் திரையரங்கின் விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டது. தன் எதிரே இருப்பவன் தான் குற்றவாளி என்று புரிந்தவள், ஆவேசத்தில் இரு கரங்களையும் நீட்டி அவன் தப்பித்துச் செல்லாதவாறு தன்னோடு அணைத்துக்கொண்டாள்.
திரையினில் திரைப்படம் ஒளிபரப்பத் தொடங்கியதும், அந்த வெளிச்சத்தில் எதிரே இருந்தவனின் முகத்தைப் பார்த்தாள்.
கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பதட்டத்தில் இருக்கும் முகத்தினை எதிர்பார்த்து இருந்தவளுக்கு, கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த தேவ் முகத்தைப் பார்த்ததும் குழப்பமே மிஞ்சியது.
மயூரி வாய் திறந்து அவனைத் திட்டுவதற்குள், " முன்ன பின்ன நீ ஆம்பளையே பார்த்ததில்லையா? இப்படி வெட்கமில்லாமல் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறாய்? " என்று கூறிய அதிதீரதேவன், ஆத்திரத்துடன் அவளைத் தன்னில் இருந்து பிரித்து நிறுத்துவது போல் நிறுத்திவிட்டு, இதழில் படர்ந்த சிரிப்புடன் திரையரங்கை விட்டு வெளியேறினான்.
இம்மையும் மறுமையும் புரியாமல் அதிர்ந்து நின்றாள் மயூரவாகினி.
கடல் பொங்கும்...
Last edited: