கடல் - 5
" சொல்வதை தெளிந்து சொல்! செய்வதை துணிந்து செய்!!"
இதுவரை தேவ்வை பார்த்து அதிர்ச்சி, பயம் கோபம் போன்ற உணர்வுகளைப் பிரதிபலித்த மயூரியின் விழிகள், அந்த நொடி அலட்சியத்தை அப்பட்டமாக அள்ளி வீசியது.
தனது கோப்பையில் இருந்த தேநீரை மிடறுமிடராக ரசித்து விழுங்கினாள்.
வெதுவெதுப்பான தேநீரின் சூட்டில், அவளின் இளம் ரோஜா நிற உதடுகள், விரிந்து மினுமினுத்தது. சர்க்கரையின் தித்திப்பை நாவின் நுனி கொண்டு நிரடி ருசித்துப் பருகினாள்.
அவளின் சின்ன சின்ன அசைவுகளையும் எதிர் இருக்கையில் இருந்து அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்.
அவனின் அத்து மீறிய திமிர் பார்வைக்கு அலட்சிய நிமிர் பார்வையைப் பரிசளித்தாள் பாவையவள்.
அவளின் மாற்றம் அவனுக்கு உற்சாகத்தைத் தர, கையில் இருந்த சூடான தேநீரை ஒரே மூச்சில் குடித்துவிட்டு, அவளருகில் வந்து அமர்ந்தான். "ரொம்ப பிடிச்சிருக்கோ? " என்றான் ஒற்றை புருவத்தை மேலே ஏற்றி.
"வாட்?" என்றாள்.
" என்னை மொத்தமாய் பிடித்திருக்கிறதா? இல்லை என் முத்தத்தை பிடித்திருக்கிறதா? " என்றான் குறும்பாக.
" ஆமாம் ஆமாம் பிடிச்சிருக்கு" என்றாள் தலையை இருபுறமும் சரித்து நக்கல் குரலில்.
"வாவ்! பிடிச்சிருக்கா?" என்றான்.
" கண்டிப்பா உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு" என்றாள் பைத்தியத்தில் அழுத்தம் கொடுத்து.
" கண்டிப்பாக உன் மீது உண்டான பைத்தியத்திற்கு நீ தான் முத்த வைத்தியம் பார்க்க வேண்டும் என் மிர்ச்சி ஊறுகாவே" என்றான்.
இருவர் இணைந்து அமரும் சோபா போன்ற இருக்கையில் ஒரு முனையிலிருந்த தேவ், அவள் புறம் நகர்ந்து, அவளின் தோளை சட்டென்று அமர்ந்தபடியே இடித்து விட்டு தன்னிடத்தில் அமர்ந்து கொண்டான்.
தொடர்ந்து தனக்குத் தொந்தரவு தரும் அவனின் சீண்டலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்குடன், மயூரியும் அமர்ந்த வாக்கிலேயே அவன் புறம் சென்று அவன் தோளினைப் பலமாக இடித்து விட்டு தன்னிடத்தில் வந்து அமர்ந்தாள்.
அடுத்த முறை தேவ் பலமாக அவள் தோளை இடித்து விட, தேவ்வின் தோளை இடிப்பதற்காக மயூரி நகர்ந்த சமயம், இருக்கையில் பின்னே சரிந்து கொண்டான் தேவ். அடுத்த நொடி, மயூரியின் தலை அவன் மடியில் சரிந்தது.
தன்மேல் சரிந்தவளின் விரிந்த கூந்தலைப் பற்றி கொண்டு, சரசத்துடன் அவளின் உதடுகளை உரச ஆரம்பித்தான் தேவ்.
அவனை உதறிக் கொண்டு அவனிலிருந்து பிரிந்து நின்றவள், "இது நல்லா இல்ல தேவ் " என்றாள் கோபத்துடன்.
"ஓ... நல்லா இல்லையா மிர்ச்சி ? சரி நல்லதா குடுத்துட்டா போச்சு" என்றவன் அவளை மீண்டும் தன் அணைப்பிற்குள் கொண்டு வர முயல, மயூரி தன் முதுகை பின்னே வளைத்து அவனைத் தடுக்க முயன்றாள்.
" இந்த விளையாட்டு கூட நன்றாக இருக்கிறதே! நான் வளைக்கும் முன் நீ வளைந்து விட்டாயே. பெண்கள் ஆண்களிடம் தோற்பது இயற்கையின் நியதி மிர்ச்சி" என்றான் புன்னகையுடன்.
அவன் எதிர்பாராத சமயம் உடலை மீண்டும் அவன் புறம் வளைத்து, அவனின் சிகையை தன் இரு கரங்களாலும் பற்றி கொண்டு, அவன் முகத்தினை நோக்கிக் குனிந்தாள் மயூரி.
மயூரியும் தன்னை முத்தமிடப் போகிறாள் என்று எண்ணிய தேவ், கண்களை மூடி தலையினைச் சற்று உயர்த்தி, உதட்டினை வாகாய் அவளுக்குக் கொடுத்தான்.
ஆவேசமாக அவனின் நெற்றியினை தன் நெற்றியினால் டொம்மென்று முட்டி விட்டு நிமிர்ந்தாள் வேக மூச்சுக்களுடன்.
எதிர்பாராத தாக்குதலில், "அவுச்..." என்ற சத்தத்துடன் அவளிலிருந்து பிரிந்தான் தேவ்.
" ஒரு பெண்ணின் அனுமதியில்லாமல், அவளிடம் அத்து மீறும் எவனும் ஆண்மகனே கிடையாது! நீ உரசினால் பற்றிக் கொள்ள நான் தீப்பெட்டி கிடையாது. எரிக்கும் சூரியன். பெண்மையின் உணர்வுகளோடு விளையாடாதே! உடல் வலிமையால் பெண்மையைச் சாய்க்கும் ஆண்மையிடம் எந்தப் பெண்மையும் சாயாது. இனி என்னை சீண்டாதே! உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை" என்று அவனைப் போல் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி விட்டு மிதப்பாக நகர்ந்தாள் மயூரி.
சோபாவில் சாய்ந்து கொண்டு தன் இரு கைகளையும் சோபாவின் இரு முனைகளை நோக்கி நீட்டி, கால் மேல் கால் போட்டுக்கொண்டு, அதனை ஸ்டைலாக அசைத்துக் கொண்டே, "ஹலோ மிர்ச்சி! ஒரு நிமிஷம்" என்றான்.
திரும்பி நடந்து கொண்டிருந்தவள், அவன் குரலில், அவனை திரும்பிப் பாராமல் அப்படியே நின்றாள்.
" எனக்கு உன்னை மட்டுமல்ல எந்த பெண்ணையும் பிடிக்காது. ஆனால் உன் உதட்டை, என் உதட்டிற்குள் ஊற வச்சு ஊறுகாய் போட மட்டும் பிடித்திருக்கிறது. இப்பொழுது கூட ஊறுகாய் போட நான் ரெடி நீ ரெடியா?" என்றவன் கீழுதட்டை பற்களால் கடித்து சிரித்தான்.
அவன் ஏதோ காதல் கிறுக்கு பிடித்து சுற்றுகிறான் என்று நினைத்த மயூரிக்கு, அவனின் விளக்கம் நெருப்பில் சுட்டது போல் இருந்தது. சட்டென்று அவன் புறம் திரும்பி,
" என்ன பெண்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா உனக்கு? ஒரு பெண்ணின் அன்பில் திளைத்திருந்தால் அவளின் ஆளுமை உனக்கு புரிந்திருக்கும். ஒரு பெண் ஒரு ஆணை தீண்ட அனுமதிக்கிறாள் என்றால் அவன், அவளின் முழு நம்பிக்கை பெற்றவன். அந்த நம்பிக்கையை நீ ஒரு பெண்ணிடம் இருந்து அவ்வளவு எளிதில் பெற்று விட முடியாது.
என் அனுமதியில்லாமல் என்னை தீண்டி விட்டு இதில் உனக்குப் பெருமை வேறு. உன் ஆண்மை என் பெண்மையை வென்று விட்டதாய் நீ நினைக்கிறாய். என் நம்பிக்கையை வெல்லாமல் நீ என்னை, என் பெண்மையை வெல்ல முடியாது தேவ்! இதை நான் சவாலாகவே உனக்குச் சொல்வேன் " என்றவள் தனது வலது கை பெருவிரலை தலைகீழாய் திருப்பி, கீழுதட்டை பிதுக்கி, தோள்களை ஏற்றி இறக்கி அவனைப் பாராமல் விறுவிறுவென நடந்து சென்றாள்.
சவால் என்றவள் சொன்ன ஒற்றை வார்த்தையில், அங்கே தேவ்வின் கர்வம் அழுத்தமாய் நின்றது. ஒரு பெண்ணின் மனதை வெல்வதை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டான்.
தன்னுடைய செல்வத்தையும், செல்வாக்கையும், ஆளுமையையும் காட்டினால், மயூரி தன் காலடியில் வந்து விழுவாள் என்று தவறாகக் கணித்தான். தன் தாயின் அன்பில் வளராமல், தன் கணவனுக்காக வாழ்ந்த ஒரு பெண்ணின் ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் பார்த்து வளர்ந்த தேவ்விற்கு, மயூரவாகினியின் ஆளுமை ஏளனமாய் தெரிந்தது.
முத்தத்திற்காக வாழ்க்கை மொத்தத்தையும் இழக்க அவன் தயாராய் இல்லை. ஆனாலும் மயூரி தன்னிடம் போட்ட சவாலுக்காக அவளின் மனதை வெல்லும் வேட்கை அவன் உள்ளே பிறந்தது.
தன் ஆண்மையின் ஆளுமையைக் காட்டாமல், அன்பைக் காட்டினால் போதும் பெண்மையை வெல்லலாம் என்ற வாழ்க்கை பாடத்தை விதி அவனுக்கு சொல்லித் தர காத்திருந்தது.
தன்னைச் சீண்டியவனுக்குத் தக்க பதிலடி கொடுத்த திருப்தியில் அன்றைய நாள் வெற்றிகரமாக முடிந்தது மயூரிக்கு.
காலநிலை சீதோசன மாற்றத்தால், காற்று வலுவாக வீச, கப்பலில் சிறு தடுமாற்றமும் தள்ளாட்டமும் ஏற்பட்டது. உறங்கிக் கொண்டிருந்த அவளின் பயம் மீண்டும் விழித்தது.
நெற்றியில் பொட்டு பொட்டாய் வியர்வைத் துளிகள் அரும்ப, படுத்திருந்த தலையணைக்குள் முகத்தினைப் பொருத்தி, தன் மனதை திசை திருப்பும் மார்க்கத்தைத் தேடினாள்.
"விளையாட்டு கூட ஒரு சிறந்த மருந்து! ஏதோ ஓர் விளையாட்டில் லயித்தல் பயத்தை குறைக்கும்" என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த வரிகள் நினைவுக்கு வர, பொழுதுபோக்கு விளையாட்டிற்குள் தன் மனதை திசை திருப்பலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
அந்தப் பெரிய கப்பலில் அமைந்திருந்த கேசினோவிற்குள் நுழைந்த மயூரவாகினி கவுண்டர் அருகே சென்று தனக்குரிய காயின்களைப் பெற்றுக் கொண்டாள்.
இலக்கில்லாமல் ஒவ்வொரு கேமிற்குள் சென்று, இறுதியில் ஒன்றும் பிடிக்காமல் வெளியே செல்ல நினைத்தவளை, "ஹோ...." என்ற இறைச்சல் சத்தம் தடுத்து நிறுத்தியது.
சற்று தூரத்தில் ரோலிங் எனப்படும் கேமைச் சுற்றி அதிக கூட்டம் இருப்பதையும், அங்கிருந்துதான் சத்தம் வந்ததையும் கண்டுகொண்டாள். அவளின் பாதங்கள் மெல்லத் திசை திரும்பி அந்த ரோலிங் கேமை நோக்கிச் சென்றது.
" தேவ் பையா எப்பவும் மாஸ் தான்", "தேவ் பையாவை ஜெயிக்க முடியுமா?" என்ன பல குரல்கள் கேட்க, "தேவ்!" என்று எட்டிப் பார்த்தவள், " இங்கேயும் இவனா?" என்று முகம் சுளித்து விட்டு, அனிச்சை செயல் போல் உதட்டினைத் துடைத்துக் கொண்டு திரும்பினாள்.
" என்ன மேடம்? பெரிய சவால் எல்லாம் விட்டீர்கள், இப்போ என்ன? சவால் திவால் ஆகிப் போனதா? என்னைப் பார்த்து அவ்வளவு பயமா? இல்லை என் முத்தத்தில் கரைந்து போய் விடுவாய் என்று பயமா?" என்று தன் பெருவிரலினால் கீழ் உதட்டை தடவிக் கொண்டே அழுத்தமாகக் கேட்டான் தேவ்.
"பயம்" என்ற வார்த்தை அவளை அழுத்திப் பார்த்தது. தான் அங்கிருந்து நகர்ந்து சென்றால் தேவ்வின் பார்வையில் மிகவும் கீழிறங்கிச் சென்று விடுவோம் என்று நினைத்தவள் ரோலிங் விளையாட்டை விளையாடிப் பார்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தாள். அவளின் காயின்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே வந்தது.
36 எண்கள் கொண்ட அந்தக் கட்டத்தில் எந்தக் கட்டத்தில் அவள் காயின்களை அடுக்கினாலும் வெற்றி தேவனுக்கே கிட்டியது. இறுதிக்காயினையும் தோற்றுவிட்டவள், 'இந்த தேவ் மட்டும் எப்படி ஜெயித்துக் கொண்டிருக்கிறான்?' என்று அவனையும் அந்த ரோலிங் கேமையும் மாறி மாறிப் பார்த்தாள் மயூரவாகினி.
வெற்றி பெற்ற காயின்களை எடுப்பது போல் அவள் அருகில் வந்து சற்றே சாய்ந்து அவள் காதில் படும்படி, "காயின் போனால் போகட்டும். மொத்த காயினையும் தருகிறேன் என்னோட பெட்டுக்கு வர்றியா? " என்றான்.
"பெட் கட்டுவது எல்லாம் எனக்கு பிடிக்காது" என்றாள் சுள்ளென்று.
" நான் என் படுக்கையின் மெத்தையைச் சொன்னேன். உதட்டினை மட்டுமல்ல மொத்தத்தையும் ஊறுகாய் போட்டு விடலாம் " என்றவனின் ஒற்றைப் புருவம் ஏறி இறங்கியது.
ஆத்திரத்தில் பெண்ணவளின் இரு புருவங்களும் இடுங்கி, கனல் வீசும் அவள் கண்கள், அவனை நெருப்பில்லாமல் எரித்தது.
"ஹேய்... மிர்ச்சி, வாழ்க்கையை அந்த நொடியில் அனுபவித்து வாழ வேண்டும். எனக்கு உன்னை பிடித்திருக்கிறது. உனக்கு என்னை பிடிக்க வேண்டும் என்றால் உனக்கு என்ன வேண்டும். என்னால் எதை வேண்டுமானாலும் கொடுக்க முடியும். எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்" என்றவனின் பார்வை கேசினோவில் ஜெயித்த டாலர்களைச் சுட்டிக் காட்டியது.
அவனது வார்த்தைகளில், மயூரியின் மனது உலைக்களமாய் கொதித்தாலும், அவனுடன் பேசி தனது நேரத்தை வீணாக்க விரும்பாமல் அந்தக் கேசினோவில் இருந்த மற்ற விளையாட்டுக்களை விளையாட ஆரம்பித்தாள்.
மயூரியின் ஒதுக்கமும், உதாசீனமும் தேவ்வை அவள்புறமே நெருங்கச் செய்தது. அவள் தன்னை விரும்பியே ஆக வேண்டும் என்று ஆணவம் அவனுள்ளே பிறந்தது.
இதுவரை வெற்றியை மட்டுமே ருசித்துப் பார்த்தவன், தோல்வியைத் தழுவ விரும்பவில்லை. மயூரியின் மனது தன் காலடியில் சரணடைய என்ன செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசித்தான்.
கேசினோவில் உள்ள விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருந்தாலும் மயூரியின் மனம் முழுவதும் தேவ் மட்டுமே நிறைந்திருந்தான்.
இந்தக் கடல் பயணம் ஆரம்பித்த நொடி முதல் இந்த நொடி வரை தன்னை சீண்டிக் கொண்டே இருக்கும் தேவ்வை எந்த கோணத்தில் பார்த்தாலும் நல்லவனாகத் தெரியவில்லை. அவன் புறம் திரும்பக் கூடாது என்று நினைக்க, திரும்பும் திசையெல்லாம் நீக்கமற அவனே நிறைந்திருக்கிறான். இந்தக் கடல் பயணத்தில், தான் எதிர்பார்த்து வந்த சவால் என்ன? இங்கே தான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் சவால் என்ன? என்று யோசித்துக் கொண்டிருந்தவள், விளையாட்டு முடிந்து இருந்தாலும் வெற்றுத் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடல் பொங்கும்...
Last edited: