• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடல் - 6

MK6

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
12
16
3
Tamil nadu
1000018040.jpg


கடல் தாண்டும் பறவை!

கடல் - 6

" நீ நினைத்ததை அடைய, நீ நினைத்துப் பார்த்ததைவிட அதிகம் நினைக்க வேண்டும்!!"


மயூரி அமர்ந்திருந்த இருக்கையின் பின்னே ஓர் இருக்கையை எடுத்துப் போட்டு, அதனைத் தன் புறமாய் திருப்பி, அந்த இருக்கையின் இருபுறமும் கால்களைப் படர விட்டு, இருக்கையின் சாய்வு விளிம்பில் நாடியைக் குற்றிக் கொண்டு மயூரியின் பின்பக்க தோள் வழியாக தேவ்வும் அந்த வெற்றுத் திரையைப் பார்த்தான்.

"ஏய்! மிர்ச்சி! என்னிடம் சவால் விட்டுவிட்டு இப்படி ஓடி ஒதுங்கிக் கொண்டால் எப்படி? " திடீரென்று அவள் பின்னிருந்து உரத்த குரலில் கூறினான்.

எதிர்பாராத சத்தத்தில் திடுக்கிட்டு அவள் முதுகோடு சேர்த்து தோள்கள் இரண்டும் குலுங்கின.

" பாருடா என் மிர்ச்சி கூட பயப்படுகிறது. என் குரலை உன் மூளையில் நன்றாக பதிய வைத்துக் கொள். இனி அடிக்கடி கேட்க வேண்டி இருக்கும். முக்கியமாக இரவில்" என்றதும் மயூரியின் தலை லேசாக பக்கவாட்டில் திரும்பியது.

"அட எப்பொழுதுமே உனக்கு அதே நினைப்பு தான் மிர்ச்சி. வெரி வெரி பேட் கேர்ள். இரவில்... கனவில் கூட இனி உன்னை விடுவதாக இல்லை. என் வெற்றியின் மேல் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது" என்றான் தேவ்.

தேவ் தன் பின்னால் அமர்ந்திருந்தாலும், அவனைக் கண்டு கொள்ளாமல், அமைதியாய் இருந்தாள்.

பொறுத்துப் பார்த்த தேவ், மயூரி தனக்கு பதிலளிக்காததைக் கண்டு, தன் இருக்கையை திருப்பிப் போட்டு அமர்ந்து விட்டு, அவள் அமர்ந்திருந்த இருக்கையின் கால் பகுதியைத் தன் கால்களால் தட்டினான். அவளின் இருக்கை பின்னே சரிந்து, தேவ்வின் மடியில் மயூரியைக் கிடத்தியது.

மயூரியின் கால்கள் அந்தரத்தில் மிதக்க, விழிகளோ தேவ்வின் விழிகளைச் சந்தித்தது. " உன்னால் என்னை அசைக்க முடியாது என்ற சவால்" அந்தப் பெண் பாவையவளின் விழிகளில் நிறைந்திருந்தது.

"ஓ! அவ்வளவு தைரியமா? உனக்கு பயமே கிடையாதா மிர்ச்சி" என்றான்.

'பயம்' என்ற சொல்லைக் கேட்டதும், மயூரியின் இமைகள் தடாகத்தில் மலரும் இரு தாமரைகள் போல் விரிந்தது.

தேவ்வின் மனது அவளின் மாற்றங்களை மனதோடு குறித்துக் கொண்டது.

" அப்போ சரி மிர்ச்சி. உன் நம்பிக்கைகளை எப்படி அடைவது என்று சொல்லிவிடு. உன் நம்பிக்கையை வென்றால் தானே உன்னை வெல்ல முடியும் என்றாய்" என்றான்.

இருக்கையில் சரிந்து அமர்ந்திருந்தவாரே சிரிக்க ஆரம்பித்தாள் மயூரி.

"நம்பிக்கை என்பது உருவாக்கப்பட வேண்டிய ஒன்று கிடையாது. அது நம்முடைய வார்த்தைகளில் இருந்தும், செயல்களில் இருந்தும், உள்ளிருந்து கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. இழப்பது எளிது. பெறுவது கடினம். இதுவரை என்னிடம் நீ செய்த அத்துமீறலுக்கு ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை தேவ்" அசராமல் அவனைப் பார்த்து கேட்டாள் மயூரி.

"அடடா... அத்துமீறல் தான் மிர்ச்சி. முதன் முதலில், என் மீது அத்துமீறி விழுந்தது நீ. முத்தமிட வா! முத்தமிடவா! என்று உதடுகளைக் குவித்து அழைத்தது நீ! முத்தத்தின் சுவையை அறிமுகம் செய்துவிட்டு உன் பின்னே பித்து பிடிக்க அலைய விட்டது நீ! செய்வதெல்லாம் நீ செய்துவிட்டு, பழியை மட்டும் என் மீது போடுகிறாயே. நான் தவறு என்றால், என் தவறில் தொடக்கம் நீ! நான் அந்தம் என்றால், என் ஆதி நீ! நடந்ததில், நடப்பதில் நம் இருவருக்கும் சரி பங்கு இருக்கிறது. நடக்கப் போவதில் வேண்டுமானால் முழு பங்கை நானே எடுத்துக் கொள்கிறேன்" என்றவனின் விளக்கத்தில் மயூரி அசந்து விட்டாள்.

" என்ன மிர்ச்சி, என் விளக்கத்தை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா? நான் உன்னை தொட்டு தொட்டு உன் உணர்வுகளோடு.விளையாடுகிறேன் என்கிறாயே! நீ தொடாமலேயே என் உணர்வோடு விளையாடுகிறாயே, அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்? " என்றான்.

" உன் உணர்வுகளோடு நான்! வேடிக்கை தான் " என்றாள்.

" நான் வேண்டுமானால் நிரூபித்து காட்டவா" என்றான்.

மயூரி பதில் கூறாமல் அமைதியாக இருந்ததும் அவளின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டு, "இப்பொழுது நான் உன்னை தொடப்போவதில்லை. ஆனால் உன் உணர்வுகளோடு விளையாடப் போகிறேன்" என்றான்.


மயூரியின் மூளை, 'அவன் பேச்சுக்களை நம்பாதே!' என்று எச்சரிக்கை மணி அடித்தது. 'என்னை தொடாமல் அவன் அப்படி என்ன செய்து விடுவான்' என்ற தைரியத்தில், ' முயற்சி செய்துதான் பாருடா! தோற்று விடுவாய்!' என்பது போல் அலட்சியப் பார்வையை அவன் புறம் வீசினாள்.

பெண்ணவளின் சம்மதம் இல்லாமலேயே பந்தாடுபவன், அவளின் கடைக்கண் விழிகள் பச்சைக்கொடி அசைத்ததும், மர்ம புன்னகை மலர்ந்தது அவனின் உதடுகளில்.

தன் மடியினில் இருக்கையோடு சாய்ந்திருந்த மயூரியின் தலையினை நோக்கி குனிந்தான்.

"ஏய்! நீ என்னை தீண்ட மாட்டேன் என்று சொன்ன தேவ் " என்றாள் அழுத்தமாக.

" இப்பொழுதும் உனக்கு நான் அதே தான் சொல்கிறேன் மயூரி. இப்பொழுது என் கைகள் உன்னை தீண்டாது" என்றவனின் கண்கள் மயூரியை விழுங்குவதைப் போல் அகல விரிந்து பார்த்தது.

சட்டென்று சூரியன் மறைய, இடி மின்னலுடன் மழை பொழியும் வானிலை மாற்றம் போல் அவன் கண்கள் நிறம் மாறியதும், இளம் வெதுவெதுப்புடன் இருந்த மயூரியின் கன்னங்களில் செம்மை படர ஆரம்பித்தது அவள் அறியாமல்.

பரந்த பூமியின் புல்வெளி மேல் பூத்திருக்கும் பனித்துளி மேல், படரும் சூரியனின் கதிர்கள் போல் அவளின் நெற்றியில் அரும்பி இருந்த வியர்வைத் துளிகளைப் பார்த்ததும் தேவ்வின் உதடுகளில் கர்வப் புன்னகை ஒட்டிக்கொண்டது.

கலைந்திருந்த அவளின் பிறை நெற்றிக் கூந்தல் கற்றையை, உதடு குவித்து, தன் உள் மூச்சினை வெளியே அனுப்பி, ஓரமாய் ஒதுக்கினான்.

புயல் கரையைக் கடக்கும் முன் தான் கடந்த பகுதிகளில் எல்லாம் சேதாரம் செய்வது போல், அவனின் மூச்சுக்காற்று, அவளின் இமை வருடி, காதின் செவி மடலையும் கூசச் செய்தது.

மாயக்கண்ணனின் வித்தைகளில் கட்டுண்டவள் திகைப்பூண்டை மிதித்தவள் போல் அதிர்ந்தாள்.

தேவ் இன்னும் சற்று கீழே குனிந்து அவள் கழுத்தின் அடியில், அட்டிகை போல் ஒட்டிக் கொண்டிருந்த வியர்வைத் துளிகள் ஆவியாவது போல் மேலும் உஷ்ணம் கலந்த தன் மூச்சுக்காற்றை அனுப்பினான்.

காற்றின் வேகத்தில் தள்ளாடும் நாணல் போல் மயூரியின் உடல் தளர்ந்தது.

தேவ்வின் உதடுகள் அவளின் உதடுகளை நோக்கி குனிய, சட்டென்று இமைகளை மூடிக்கொண்டாள் மயூரி.


சற்று நேரம் அமைதி நிலவ, மயூரி மெல்லத் தன் கண்களைத் திறந்தாள். உள் கன்னத்து தசைகளை நாவின் நுனியால் நிரடிக் கொண்டு தேவ் அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தான்.

அந்த வசியக்காரனின் வசிய பேச்சில் தான் மயங்கி நின்றதை உணர்ந்த மயூரி, தன் மேல் எழுந்த கோபத்துடன், இருக்கையில் இருந்து எழுவதற்கு முற்பட்டாள். அவளின் இருக்கை தேவ்வினால் சாய்த்து வைக்கப்பட்டிருந்ததால், அவளின் கால்கள் மட்டும் அந்தரத்தில் துடித்தது.

" எதற்கு இந்த ஓட்டம் மிர்ச்சி? என் உணர்வுகளோடு நீ விளையாட, நான் உன் உணர்வுகளோடு விளையாடுகிறேன்.
உன்னை எனக்குப் பிடிக்கும் என்பதை ஒத்துக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நீ தயங்குவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. இயற்கையின் நியதியிலிருந்து தப்ப முடியாது மிர்ச்சி" என்றவன் அவளின் இருக்கையை நேராக தரையினில் நிலை நிறுத்தினான்.

இருக்கையில் இருந்து சட்டென்று எழுந்தவள், சற்றே நிலை தடுமாற நிற்பதற்கு ஏதுவாக அந்த இருக்கையை பிடிமானாய் பிடித்துக் கொண்டு நின்றாள்.

'கணநேரத்தில் அவனின் சீண்டல்களுக்கு உடலால் பதில் அளித்து விட்டோமே, அவ்வளவு மனதிடம் இல்லாத பெண்ணான நான்?' என்ற கழிவிரக்கம் தோன்ற அவளின் கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்தது.
' செய்யும் தவறை எல்லாம் செய்து விட்டு, திடமாக தன் முன்னே நிற்கும் அவன் முன் தான் அழக்கூடாது' என்று வைராக்கியத்துடன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு, அவனை தைரியமாக எதிர் நோக்கினாள்.

"குட்! இப்படித்தான் தோற்றுப் போனதை கூட தைரியமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று வஞ்சப்புகழ்ச்சி அணி பாடினான்.

மேலும் தேவ்வின் பேச்சுக்களைக் கேட்க நேர்ந்தால், தன் மனதிடம் குறைந்து விடும் என்று நினைத்தவள் அவனை சுற்றிக்கொண்டு செல்ல ஆரம்பித்தாள்.

" ஹலோ மிர்ச்சி மேடம்! இப்பொழுது நடந்த போட்டியில் நான் ஜெயித்து விட்டேன். நீ தோற்று விட்டாய்!" என்றான் சட்டமாக.


நெற்றியினை சுருக்கி புருவங்களை நெறித்து, முகத்திலிருந்து கண்களை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள்.

" அம்மாடி! செம லுக்கு. கண்ணால் பார்க்கக்கூடிய உன் அங்கங்களை எல்லாம் என் கட்டுப்பாட்டிற்குள் என்னால் கொண்டு வர முடியும் என்று நிரூபித்து விட்டேன். பார்க்க முடியாத... " என்று தேவ் ஆரம்பித்ததும், உக்கிரமான பார்வையுடன் அவனை அடிப்பதற்கு கையை ஓங்கினாள் மயூரி.


ஓங்கிய அவளின் கையை தன் கைபிடிக்குள் அழுத்திக் கொண்டு, " எல்லாவற்றையும் இப்படி தவறாகவே புரிந்து கொண்டால் எப்படி மிர்ச்சி? பார்க்க முடியாத உன் மனசை எப்படி என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது என்று கேட்க நினைத்தேன். ஆனால் நீ! ரொம்ப கெட்ட பொண்ணு மிர்ச்சி " என்றான் அவளைப் பார்த்து விவகாரமாக சிரித்தபடி.

உடலோடு மனதும் ஓய்ந்து போனதால், அவன் கைபிடிக்குள் இருந்து தன் கையினை உருவிக் கொண்டவள், அவன் பேச்சுக்கு எந்த எதிர்வினையும் காட்டாமல், முன்னோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

வேகமான எட்டுக்களுடன், அவளின் முன்னே வந்து கை நீட்டி அவளை தடுத்து நிறுத்தினான்.

" இன்று வெற்றி எனக்கு. தோல்வி உனக்கு. என் வெற்றியை பறைசாற்றும் வகையில் இன்று இரவு உணவை என்னுடன் தான் நீ எடுத்துக் கொள்ள வேண்டும் மிர்ச்சி. மறுத்தால்... நீ மறுக்க மாட்ட. நீ இதனை மறுத்தால் நீ அடைந்த தோல்வியை மீண்டும் உனக்கு காட்டுவேன்" என்றவன் கையினை விலக்கி அவளுக்கு வழி விட்டான்.

கேசினோவில் இருந்து தன்னறைக்கு எப்படி வந்தோம் என்று தெரியாமலேயே அனிச்சை செயல் போல் தன்னறைக்குள் நுழைந்தாள் மயூரி.

வெறுப்பு, வெறுப்பு அவளிடம் அவளுக்கே தோன்றிய வெறுப்பில், மனம் கசிந்து வழிந்தது மயூரிக்கு.

'பொக்கிஷமாக போற்றப்பட வேண்டிய பெண்மையை காலில் வைத்து நசுக்கும் அவனிடமா மயங்கி நின்றோம்? இத்தனை வருடங்களாக இறுகிப் போயிருந்த தன் ரத்தமும் சதையும் அவனின் மூச்சின் வெப்பத்தில் இளகி நின்றதே!


தான் அத்தனை பலவீனமானவளா? காதலைத் தருபவனுக்கு பரிசளிக்க வேண்டிய உணர்வுகளை, காமத்தை அள்ளித் தெளிப்பவனுக்கு கடை விரித்து விட்டாமே!" என்று உள்ளம் மருகி நின்றாள்.

'இது தவறு. தன் பெண்மைக்கு தான் செய்த இமாலயத் தவறு. இந்தத் தவறுக்கு எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொள்ள வேண்டும்' என்று ஆவேசமாக நினைத்தவள், கதவைத் திறந்து கொண்டு, கடல் பக்கத்தை பார்க்கும் பகுதியை நோக்கி நடந்தாள்.

கடலைக் கண்டதும் சோர்வுடன் தயங்கித் தயங்கி நடக்கும் அவள் கால்கள் இன்று அதிவேகமாய் கடலை நோக்கி நகர்ந்தது.

பகலில் சூரியனின் வெளிச்சத்தில், கண் கூசும் பிரதிபலிப்புகளை, கடல் அலைகள் அள்ளி வீச, சுற்றிலும் இருக்கும் அந்த நீர் பரப்பை முதன்முறையாக அச்சமில்லாமல் பார்த்தாள்.

இதனால் வரை மனதில் அரித்துக் கொண்டிருக்கும் வெறுமையை எல்லாம் அவனின் சீண்டல்கள் நிறைந்திருக்க, கப்பலில் கைப்பிடி கம்பியை பிடித்துக் கொண்டு இலக்கில்லாமல் பார்த்தபடி நின்றாள்.

ஒரு கட்டத்தில் மனதின் அழுத்தம் தாளாமல், தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொள்ளும் நோக்கத்துடன், துணிந்து கப்பலின் மேலிருந்து கீழே பார்த்து விடுவோம் என்று எண்ணியவள் கப்பலின் தடுப்பு கம்பியில் கால் பதித்து ஏற நினைத்தாள்.

மற்றொரு காலை நடுக்கத்துடன் அவள் தூக்கிய போது, "மயிலு..." என்று சக்தி அழைத்ததும், உணர்வுகள் அடங்கி சுற்றுப்புறம் பார்த்தவள் பார்வையில் அலைகடல் பொங்கி எழுந்ததும், கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

மயூரி கீழே விழுவதற்குள் சக்தி தாங்கிக் கொண்டான்.

மயூரியை தன் தோள்களில் சாய்த்துக் கொண்டு அவளின் அறைக் கதவை திறக்க முயன்றான் சக்தி.

அவளையும் பிடித்துக் கொண்டு கதவைத் திறக்க முடியாமல் தடுமாறிய சக்தி உதவிக்கு, அங்கு வந்த தேவ்வை அழைத்தான்.

"என்ன ஆச்சு?" என்றான் தேவ்.

" இந்தா என் மேல சுகமாக சாய்ந்து கிடக்கும் இந்த மயிலம்மாவிற்கு கடலை பார்த்தால் பயம் என்று என் அம்மா சொல்லி அனுப்பினார்கள்.

அவ்வளவு பயத்தை வைத்துக்கொண்டு, இன்று ஏதோ ஒரு தைரியத்தில் கடலைப் பார்த்து மயங்கி கிடக்குது இந்த மயிலம்மா. தூங்கி எழுந்தாலே சரியாகி விடுவாள் என்று என் அம்மா சொல்லி தான் அனுப்பினார்கள்.


கடலைப் பார்த்து எல்லாம் யாராவது பயப்படுவார்களா? நான் நம்பவில்லை. இதோ இன்றைக்கு இப்படி விழுந்து கிடக்கும் போது தான் நம்பத் தோன்றுகிறது" என்று தன் நீண்ட விளக்கத்தை அளித்த சக்தி, தேவ்வின் உதவியோடு மயூரியை அவளது கட்டிலில் படுக்க வைத்தான்.

" ரொம்ப தேங்க்ஸ் பாஸ்" என்றான் சக்தி.

" நான் தான் உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் சொல்ல வேண்டும் " மயூரியின் ரகசியத்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் சொன்னான் தேவ்.

' உதவியும் செய்துவிட்டு அதற்கு எனக்கே நன்றி சொல்லும் இவர் எவ்வளவு நல்லவர்' என்று மனதிற்குள் சிலாகித்தான் சக்தி.

அந்த நல்லவனோ அடுத்து மயூரியை என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட ஆரம்பித்தான்.


கடல் பொங்கும்...
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் குறை சொல்லிக்கிட்டு இருந்தா எப்போ ரெண்டுபேரும் தவறானவங்க கிடையாதுன்னு புரிய போகுதோ 🤔🤔🤔🤔🤔🤔🤔