கடல் - 7
" எழுவதற்கே வீழ்ச்சி! வெல்வதற்கே தோல்வி!"
தன் படுக்கையில் இருந்து எழுந்த மயூரிக்கு தலை பாரமாக கனத்தது. நடந்த நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நினைவிற்கு வர, வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வி மட்டுமே தனக்கு பரிசாய் கிடைத்திருப்பதை எண்ணி விரக்தியில் சிரித்தாள்.
' டாக்டர் சாந்தா எத்தனை இனிய பெண். என்னுடைய பிரச்சனைகளுக்கு மத்தியில், எனக்கு உதவ நினைத்த, அவருடைய மகன் சக்தியையும் இழுத்து நிறுத்தி விடுகிறேன். கண்டிப்பாக இந்த முறை சக்தியிடம் நான் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும். எனக்கு துணையாய் உடன் வந்தவருக்கு நான் தொல்லையாய் இருக்கக் கூடாது!' என்ற எண்ணிய மயூரி, சக்தியிடம் மன்னிப்பு கேட்பதற்காக அவன் அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தாள்.
" வா மயிலு! இன்னும் மயக்கம் இருக்கிறதா? " என்று பரிவுடன் கேட்டான்.
'இல்லை' என்பது போல் மறுப்பாக தலையசைத்தாள்.
"பிறகு?" என்றான்.
"சாரி சக்தி! ஒவ்வொரு முறையும் உனக்கு நான் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்" என்றாள் லேசான குற்ற உணர்வுடன்.
" அப்படியெல்லாம் இல்லை மயிலு. பல பிரயாணங்களில் நான் தனித்து தான் இருந்திருக்கிறேன். உன்னுடன் பயணிப்பது எனக்குப் புது அனுபவம் தான்.
கடலில் பயணித்தால் சில நேரங்களில் ஒவ்வாமை ஏற்படும். உனக்கு கடலே அலர்ஜி என்று அம்மா சொன்ன போது நான் மிகவும் எளிதாக எடுத்துக் கொண்டேன். நேற்று நீ கம்பிகளில் நின்ற வாக்கில் சாய்ந்த போது, எனக்கு ஒரு நிமிடம் திக்கென்று ஆகிவிட்டது.
என் அம்மா என்னிடம் அடிக்கடி ஒன்று சொல்வார்கள். அது இந்த இடத்தில் உனக்கு பொருந்தும். சூழ்நிலைகளை எதிர்த்து நிற்பதால் மட்டும் ஜெயித்து விட முடியாது மயிலு. சூழ்நிலைகளோடு இணக்கமாய் இருந்து கூட நாம் அதனை ஜெயித்து விடலாம்" என்றான் சக்தி இலகுவாக.
'எதிர்த்து நிற்காமல்... இணக்கமாய்... ஜெயித்து விடலாம்...' சக்தி கூறிய வார்த்தைகள் மயூரியின் மனதில் அழுத்தமாய் பதிந்தது.
தோல்வியின் இருட்டில் துவண்டு கிடந்தவளுக்கு, வெற்றியின் வெளிச்சம் சிறு கீற்றாய் தெரிந்தது.
அந்த தேவ்வை வீழ்த்துவதற்கு ஒரு மார்க்கம் கிடைத்ததில் இணக்கமான புன்னகை மயூரியின் உதடுகளில் மலர்ந்தது.
" குட்! இப்பொழுது உன் முகம் எப்படி இருக்கிறது தெரியமா?" என்றான் சக்தி.
"எப்படி?" என்றாள்.
" காதலிப்பதற்கான பத்து பொருத்தமும் வந்துவிட்டது" என்றான்.
'காதல்' என்ற வார்த்தை காதில் விழுந்ததும் ஏனோ அழைப்பில்லாமல் அவளில் எண்ணச் சிறகுகள் தேவ்வினை நோக்கி பறக்க ஆரம்பித்தது. விழித்திருந்த விழிகளின் முன்னே அவனின் முகம் தோன்றி அவளை ஏளனமாய் பார்த்தது.
"ஹான்..." என்று அதிர்ந்தவள், 'காதல் என்ற சொல்லில், பார்வையாலேயே துகிலுரியும் அந்த துச்சாதனனை என் மனம் பொருத்திப் பார்க்கிறதே! அறிவிழந்த என் மூளையும் அதன் பதிவில் இருந்து அவன் முகத்தை எனக்கு காட்டுகிறதே! எனக்கு நானே எதிரியா?' நம்ப முடியாத அதிர்வில் நின்றாள்.
அவள் முகத்தில் முன் சொடுக்கிட்டு,
" ஓய் மயிலு! நான் விளையாட்டாகத் தான் சொன்னேன். நீ இதுதான் சாக் என்று, ஐ லவ் யூ என்று எதுவும் சொல்லி விடாதே. முதலில் உன்னை சைட் அடித்தது உண்மைதான். ஆனால் அதற்கு என் அம்மா, என்னை நன்றாக திட்டி விட்டு கூடவே ஒரு ஜோடி அறிவுரைகளை வழங்கி விட்டார்கள். உன்னை பாதுகாக்க வேண்டும் என்ற சத்திய பிரமாணத்தையும் என்னை எடுக்க வைத்து விட்டார்கள்.
ஆனால் உன்னுடன் நெருங்கிப் பழக பழக ஒரு சகோதரத்துவத்தை என்னால் உணர முடிந்தது மயிலு" என்றான்.
"இ... ல்... லை... சக்தி! உன் வார்த்தைகளில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை, விகற்பமும் இல்லை என்று எனக்கு நன்றாக தெரியும்.
உன்னுடைய விளையாட்டுத்தனமும், குறும்புத்தனமும் எனக்குப் பிடித்தே இருக்கிறது. ஆரம்பம் முதல் உன்னிடம் என்னால் இயல்பாய் பழக முடிந்தது. டாக்டர் சாந்தா ஒரு அன்னையின் ஸ்தானத்திலிருந்து எனக்கு அறிவுரை கூறுவார்கள். அவர்களின் முக அமைப்பில் இருக்கும் நீ, ஒரு சகோதரனாய் பார்த்த நொடி முதல் பதிந்து விட்டாய்" என்றாள் அவனுக்கு விளக்கம் அளித்தபடி.
"ஓகே மயிலு! இந்தக் கப்பலில் ஷாப்பிங் மால் நன்றாக இருக்கும். இப்பொழுது நான் அங்கு தான் சென்று கொண்டிருக்கிறேன். நீயும் என்னுடன் வா" என்றான்.
முதலில் மறுக்க நினைத்தவள், தன்னைத் துரத்தும் நினைவுகளில் இருந்து தப்பித்து ஓடுவதற்கு சக்தியுடன் ஷாப்பிங் மால் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
"ஓ போகலாம் சக்தி!" என்று தன் சம்மதத்தை தெரிவித்து அவனுடன் சென்றாள்.
பதினொன்று தளங்கள் இருந்த அந்த சொகுசு கப்பலில், ஒவ்வொரு தளத்திற்கும் செல்வதற்கு பிரத்தியோக லிப்ட்டுகள் இருந்தது.
மூன்று தளங்கள் கப்பலின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. லைப்ரரி, ஷாப்பிங் மால், தியேட்டர், கலையரங்குகள், ஸ்பா, ஜிம், போட்டோ ஷூட்டிங் ஸ்பாட், கேசினோ, விளையாட்டு அரங்குகள் என பல இடங்கள் பல தளங்களில் பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டு இருந்தது. தன்னுடன் வந்த மயூரிக்கு கப்பலில் உள்ள அனைத்து அம்சங்களையும் விளக்கிக் கொண்டே வந்தான் சக்தி.
லிப்டில் ஏறி ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தனர்.
கணிக்கவே முடியாத அளவிற்கு பிரம்மாண்டமாய் உயர்ந்து நின்ற பலவித கண்ணாடிகளால் ஆன சுவர் பகுதிகளும், ஒளிக்கற்றைகளை வாரி இறைக்கும் குழல் விளக்குகளும், விதவிதமான கடைகளும் மயூரியின் கண்களுக்கு விருந்தளித்தது.
" மயிலு! நான் உனக்கு ஒரு நினைவுப் பரிசை தேர்ந்தெடுப்பேன். நீயும் எனக்கு ஒரு நினைவுப் பரிசை தேர்ந்தெடுக்க வேண்டும். யாருடைய தேர்வு நன்றாக இருக்கிறது என்று சவால் வைத்துக் கொள்வோமா? " என்றான் சக்தி.
சவால் என்ற வார்த்தையில் அவள் முகத்தின் முன் வவ்வால் போல் தொங்கியது தேவ்வின் முகம்.
கண்களை மூடி, தன் முன்னே கைகளை வைத்து காற்றினை துடைத்தாள்.
"வாட்? இப்படி உன்னை அன்பாய் பார்த்துக் கொள்ளும் எனக்கு ஒரு நினைவுப் பரிசு வாங்கித் தர முடியாதா?" முகத்தை கோபம் போல் சுருக்கிக் கொண்டு கேட்டேன் சக்தி.
" அப்படி இல்லை சக்தி. நான் இயல்பாய் இருக்க முயன்றாலும், என்னை மாற்றிக் கொள்ள முயன்றாலும், திடமாய் இருந்தாலும் என்னை ஏதேதோ நினைவுகள் துரத்துகிறது. பயம் என் வாழ்க்கையின் அடையாளமாய் மாறிவிடும் போல" என்றாள் சற்றே சோகம் கலந்த குரலில்.
"நீ ஒரு கப் காபியைக் கையில் வைத்திருப்பது போல் கற்பனை செய்து கொள் மயிலு!" என்றான் சக்தி.
"ஏன்?"
" சொன்னதை செய் மயிலு!"
"ம்... சரி"
"அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர் உன் மீது மோதி, உன் கைகளைத் தட்டி விடுகிறார். காபி வெளியே சிதறி விடுகிறது. நீ ஏன் காபியைச் சிந்தினாய் ?"
“அவர் தட்டிவிட்டதால் காபி சிந்திவிட்டது”
" உன் பதில் மிகவும் தவறு "
"எப்படி?"
"உன் கப்பில் காபி இருந்தது. அதனால் காபி சிதறிவிட்டது. ஒருவேளை அந்தக் கப்பில் ஜூஸ் இருந்திருக்குமானால் ஜூஸ்தான் சிதறியிருக்கும். கப்பின் உள்ளே என்ன இருக்கிறதோ அதுதானே சிதறும்.
இதே தான் நம் வாழ்க்கையிலும். வெளியிலிருந்து ஏதேனும் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம் உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே வெளியே சிந்திச் சிதறும்.
இதைச் சொல்வது எளிது, கடைப்பிடிப்பது கடினம்தான். ஆனாலும் நம்மால் முடிந்தவரை முயற்சித்துப் பார்க்கலாம்.
வாழ்க்கையின் கடின நிகழ்வுகள் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறவேண்டியது என்னென்ன?
கோபம், பயம் இவைகளா? நிச்சயம் இல்லை.
வாழ்க்கை நமக்கான கோப்பையை நம்மிடம் தந்திருக்கிறது. அதில் நம்பிக்கை, தைரியம், மனோதிடம் வைராக்கியம் இவற்றை நிரப்பி வைத்திருந்தால், எந்த கடின சூழல் நம்மை அசைத்துப் பார்க்கும்போதும் நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறுவது துணிவாக இருக்கும்!
மயிலு துணிச்சலை நமக்குள் நிரப்பி வைப்போம்!* காபியைப் போன்று..." என்று சக்தி தந்த விளக்கத்தில் மனதின் மாயை அகல, சக்தி மீது மதிப்பு தோன்றியது மயூரிக்கு.
" அப்படியே டாக்டர் சாந்தா தான் " என்று அவனைப் பார்த்து சிரித்தாள்.
" எத்தனையோ சூழ்நிலைகளில் என் அம்மாவின் அறிவுரைகளைக் கேட்டிருக்கிறேன். சிலவற்றை செவியோடு விட்டுவிட்டு இருக்கிறேன். சிலவற்றை மனதோடு சேமித்து வைத்திருக்கிறேன். அப்படி சேமித்து வைத்ததை உனக்காக இன்று செலவு செய்து விட்டேன்" என்று அவளைப் போலவே சிரித்தான் சக்தி.
இருவரும் ஒரு மணி நேரம் அந்த ஷாப்பிங் மாலில், பரிசினைத் தேடி அலைந்தனர்.
சொகுசு கப்பலில் நான் தனித்தனியாக எதற்கும் பணம் செலுத்த தேவைப்படாது. அவர்கள் கொடுத்திருக்கும் கார்டை ஸ்வைப் செய்தால் போதும். கப்பலை விட்டு வெளியே செல்லும்போது, அதற்கான பணத்தை செலுத்த வேண்டும்.
இறுதியாக இருவரும் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொண்டு, அருகில் இருந்த இந்தியன் ரெஸ்டாரண்டிற்குள் நுழைந்தனர்.
அந்த சொகுசு கப்பலில், உணவுப் பிரியர்களுக்கு ஏற்றார் போல் மூன்று வகையான ரெஸ்டாரண்டுகள் இருந்தது.
மயூரி, தான் வாங்கி இருந்த அழகிய கைகடிகாரத்தை சக்தியின் கைகளில் மாட்டி பரிசளித்தாள்.
" என் காலத்தை மாற்றியவனுக்கு எனது சிறிய பரிசு!" என்றாள்.
மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டான் சக்தி.
மயூரிக்காக தான் வாங்கி இருந்த பரிசு பொருளை தங்கள் எதிரில் இருந்த மேஜை மீது வைத்தான்.
அது ஒரு காபி கப். வெண்மையாக, எந்தவித அலங்காரமும் இல்லாமல் கண்ணாடியில் உருவாக்கப்பட்டிருந்தது.
அதைப் பார்த்தவளுக்கு சற்றே ஏமாற்றம் படர, " இதில் ஒன்றுமே இல்லை உன் மூளையைப் போல்" என்று கிண்டல் செய்தாள்.
" பொறுமை மயிலு!" என்றவன் சர்வரை அழைத்து சுடு தண்ணீர் கொண்டு வரச் செய்தான்.
சூடான நீரை அந்த கண்ணாடி கோப்பையில் ஊற்றியதும், கோப்பையில் வரைந்திருந்த எழுத்துக்கள் பளிச்சிட ஆரம்பித்தது.
" Never let them know your next move" (உன்னுடைய அடுத்த நகர்வை யாரையும் அறிய விடாதே!) என்ற வார்த்தைகளைக் கண்டதும் மயூரியின் விழிகள் மெச்சுதலாய் சக்தியை பார்த்தது.
" இந்த காபி கப் போல, நம்மை யாராவது உஷ்ணப் படுத்தினால், இதில் உள்ள வார்த்தைகளை நீ நினைவு கூர்ந்து கொள். நிச்சயம் உனக்கு வெற்றி தான்.
எழுவதற்கே வீழ்ச்சி! வெல்வதற்கே தோல்வி!
நான் சொன்ன காபி கப், இப்பொழுது கொடுத்த காபி கப், இரண்டையும் மறந்து விடாதே!" என்றான்.
" வெளிப்புறத் தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது என்பதை நான் நன்றாக புரிந்து கொண்டேன் சக்தி"
"என்ன?"
" முதலில் உன் சேட்டைகளை பார்த்ததும் உன்னை கோமாளி என்று நினைத்தேன்"
" எதே! கோமளியா? "
" இப்பொழுது என் எண்ணத்தை நான் மாற்றிக் கொண்டேன் நிச்சயம் நீ ஒரு அறிவாளி தான் "
" அது எனக்கே நன்றாக தெரியும் மயிலு!" என்றவன் சட்டையின் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
" போதும் அறிவு வாளி" என்றாள் அவளும் சிரித்துக் கொண்டே.
இருவரும் சிரித்துக் கொண்டே உணவு எடுத்துக் கொள்வதை, ஒரு ஜோடிக் கண்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல், கோபத்தில் சிவந்தது.
உணவு உண்டு முடித்ததும், " ஏய் மயிலு! ஒரு விஷயத்தை நான் மறந்தே போய் விட்டேன். யாருடைய பரிசு சிறந்தது என்று சவால் விட்டோமே!
நம்முடைய இருவரின் பரிசுகளிலும் யாருடைய பரிசு சிறந்தது? என்று தீர்ப்பளிக்க நிச்சயம் நமக்கு ஒரு நடுவர் வேண்டும்" என்றவன் சுற்று முற்றும் பார்க்க, இரண்டு மேஜை தள்ளி தேவ் அமர்ந்திருப்பதைக் கண்டான்.
" இதோ நல்லவர் இங்கேதான் இருக்கிறார் " என்றான் உற்சாகமாக.
" யார் அந்த நல்லவன்? " என்று தலையை உயர்த்தி எட்டிப் பார்த்த மயூரிக்கு தேவ்வின் முகத்தைக் கண்டதும், கோபம் உச்சியில் ஏறி நின்றது.
சக்தியிடம் அவன் வேண்டாம் என்று சொல்ல நினைத்தவள், அவன் இவ்வளவு நேரம் தனக்கு கூறிய அறிவுரைகளின் படி, எதிர்த்து நின்று ஜெயிப்பதை விட இணக்கமாய் இருந்து ஜெயித்து விடலாம் என்று முடிவுக்கு வந்தாள்.
அமைதியாய் அங்கு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
"சார்! ஒரு நிமிஷம்!" என்று சக்தி சத்தமாக தேவ்வை அழைத்தான்.
அவர்களை அப்பொழுதுதான் பார்ப்பது போல் தேவ் பார்த்தான்.
தங்களுக்குள் நடந்த சவாலை தேவ்விடம் எடுத்துக் கூறி தீர்ப்பளிக்க வருமாறு அருகில் சென்று தேவ்வை அழைத்து வந்தான்.
தேவ் மயூரிக்கும், சக்திக்கும் இடையில் அமர்ந்தான்.
மயூரியோ தலை நிமிர்ந்து தேவ்வினை தயங்காமல் பார்த்தாள். அவளின் கை விரல்களோ, சக்தி வாங்கிக் கொடுத்த கப்பிலிருந்த உத்வேகமான வார்த்தைகளைத் தடவிக் கொண்டிருந்தது.
" மயூரி! நீ மயங்கி நின்ற போது உன்னை அறையில் படுக்க வைப்பதற்கு சார் தான் உதவி செய்தார்" என்றான் சக்தி தேவ்வினை மயூரிக்கு அறிமுகம் செய்து வைத்த படி.
" அவர் தொட்டுத் தூக்குவதை எல்லாம் அசால்டாகச் செய்வார் " என்றாள் இளக்காரமான குரலில்.
" உனக்கு அவரைத் தெரியுமா? " என்றான் சக்தி.
"சார் சாப்பிடும் உணவெல்லாம் அவருடைய மூளைக்குச் செல்லாமல் உடம்புக்கு தான் செல்லும் போல. அதுதான் உடம்பை இப்படி வளர்த்து வைத்திருக்கிறாரே! அதை வைத்து தான் சொன்னேன்" என்றாள் கிண்டலுடன்.
"ஹி... ஹி... மயிலு விளையாட்டு பிள்ளை சார் " என்றான் சக்தி சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு.
" பரவாயில்லை பேசட்டும். என் உடம்பை பற்றி தெரிந்து வைத்திருப்பதும் நல்லது தானே" என்றான் அதே கிண்டலுடன்.
மயூரி தேவ்வினை முறைக்க, அதிதீரதேவனோ கண்ணடித்தான் அவளைப் பார்த்து.
கடல் பொங்கும்...
Last edited: