• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடல் - 9

MK6

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
12
16
3
Tamil nadu
1000018040.jpg
கடல் தாண்டும் பறவை!

கடல் - 9

"ஒவ்வொரு இரவும் விடியலுக்குப் பின் காணாமல் போகும்!"

சிறுவயதில் இருந்து அவள் மனதில் அடைத்துக் கொண்டிருந்த அழுத்தங்கள் எல்லாம் அவளின் அழுகையில் கரைந்து கொண்டிருந்தது.

கைகளைக் கட்டிக் கொண்டு, அமைதியாய், அழுத்தமாய், ஆழமாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்.

நெற்றியில் இருந்து வழிந்த குருதி புருவங்களின் வழியே கீழிறங்கி அவளின் இமை தழுவி நின்றது. தன்னை துளைத்தெடுக்கும் பார்வையைப் பார்த்துக் கொண்டிருக்கும் தேவ்வை பார்த்து,

"என்ன பார்க்கிற தேவ்! உன் காலடியில் நான்! ரொம்ப சந்தோஷமா இருக்கா? இருக்கும். கண்டிப்பா இருக்கும். வானத்தில், கூட்டத்தில் இல்லாமல், தனியாகப் பறக்கும் பறவையைக் குறிவைத்து வீழ்த்துவதில் அவ்வளவு ஆனந்தமா உனக்கு?

அதன் துடிதுடிப்பை ரசிப்பதில், உயிர் வலியில் கதறுவதைக் காண்பதில், உயிரோடு உதிரம் வடிவதில் சிறு குற்ற உணர்ச்சி கூட உனக்கு கிடையாதா?

மனிதம் தொலைந்து, அரக்கனாய் அவதனித்து இருக்கும் உன் மீது ஏதோ ஓர் நொடியில், எனக்கு அன்பு ஜனித்ததை நினைத்தால் என்னை நினைத்து எனக்கே வேடிக்கையாக இருக்கிறது.

வாழ்க்கை எவ்வளவு வேடிக்கையானது. அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் என்னிடம் அன்பு வற்றிப் போன உன்னை அறிமுகம் செய்து வைத்தது. கடல் என்றாலே கண் காணாத தேசம் தேடி ஓடிப்போகும் என் கால்கள், நடுக்கடலில் உன் முன் மடங்கி அமர்ந்திருக்கிறதே. எவ்வளவு விசித்திரம். எவ்வளவு ஆச்சரியம்.

என் சிறு வயதில், இதோ இந்தக் கடலில் தான், நான் என்னை பெற்றவளையும், பெற்றவரையும் ஒரே நாள், ஒரே இரவில் பறிகொடுத்தேன்.

என் அன்னையின் நினைவாக அவர் இறுதியில் எனக்கு விட்டுச் சென்றது உன் கையில் உள்ள அந்த செயின் மட்டுமே. இயற்கை சீற்றத்தின் காரணமாக, என் அன்னையின் உடலைக் கூட மீட்க முடியவில்லை.

என்னை பெற்றவரின் உடலையும் நான் பார்க்கவில்லை. துண்டு துண்டாக, ரத்தமும் சதையுமாய் இந்தக் கடலோடு கலந்து விட்டது என்றார்கள்.

ஐந்து வயது குழந்தைக்கு என்ன தெரியும் தேவ்? என் பெற்றவர்களைக் காவு வாங்கிய கடலைப் பார்க்க பயம். அன்று அடித்து வீசிய காற்றும் பயம். காற்றோடு சேர்ந்து வந்த புயல் மழை பயம். பேய் மழையைப் பொழிந்த அந்த வானைப் பார்க்கவும் பயம். ஓடி ஒளிந்து இருட்டுக்குள் தனிமையில் கழித்த என் பொழுதுகள் அதிகம்.

சிறு வயதில் பெற்றவர்களைத் தேடும் ஓர் குழந்தையின் ஏக்கம் உனக்குத் தெரியுமா தேவ்? " என்றாள் கேவலுடன்.

தன் தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு, தன் தந்தையைத் தேடித் தான் தவித்த போது, தான் உணர்ந்த வலியை மயூரியின் வார்த்தைகள் பிரதிபலித்ததைக் கண்டு திடுக்கிட்டான் தேவ்.

மயூரியின் ஏக்கங்களை மிகச் சரியாக உணர முடிந்தது அதிதீரதேவனுக்கு.

"இந்தக் கப்பலில் ஏறிய முதல் நாளே இந்த கடலைப் பார்த்து, நான் மூச்சடைத்து நின்ற போது, உன் மூச்சினால் எனக்கு உயிர் ஊட்டினாய் !

ஒவ்வொரு முறையும் இந்த கடல் என்னை விழுங்கப் பார்த்தபோது, அரணாய் வந்து காத்தாய் !

பிடிக்காமல் ஒரு பிடித்தம்! அது நீதான்!
என் தேடல்களின் விடை நீ !
பரிசுத்தமான என் அன்பின் அடையாளம் நீ!

நம்பிக்கையில்லாத உன்னிடம் எந்த புள்ளியில், என் நம்பிக்கை பூத்தது என்பதை நானே அறியேன்.

ஆனால்... ஆனால்... நீ ஏன் பொய்த்துப் போனாய் தீரா?" கண்களில் வலிகளுடன் நிராசை கலந்த விரக்தியில் கூறினாள் மயூரி.

"தீரா!" என்ற மயூரியின் ஒற்றை அழைப்பில் மூச்சடைத்துப் போனான் அதிதீரதேவன்.

அவனுடைய தாய் அவனை பிரத்யோகமாக அழைக்கும், "தீரா!" என்ற ஒற்றை வார்த்தையை மயூரி கூறியதும் உடலெங்கும் சிலிர்த்தது தேவ்விற்கு.

" நீ ஏன் பொய்த்துப் போனாய்? " என்றவளின் ஒற்றைக் கேள்வி, தன்னுடைய தாய் பல ஆயிரம் முறையாக தன் தந்தையை மானசீகமாய் கேட்டதை நினைவுகூர்ந்தவனின் உள்ளம் அதிர்ந்தது.

" என் நேசம் காம்பற்ற மலர் போல், தரையில் விழுந்து, உன் காலுக்கடியில் நசுங்கிப் பாழாகிப் போனதே! உன் காமத்திற்காக உன்னுடன் என்னால் பழக முடியாது. அர்த்தமே இல்லாத உன் மீது தோன்றிய அன்பின் பெயர் காதல் என்றால், அந்த காதலுக்கு ஏற்றவனும் நீ கிடையாது.

கடலின் பயத்தை நிறுத்தி, அதைவிட மோசமான காதல் பயத்தை காட்டி விட்டாய்!
போ... போ... என் கண் முன்னே நிற்காதே போ!" என்ற மயூரி தரையில் குழந்தை போல் தன்னை சுருக்கி படுத்துக்கொண்டாள்.

வாழ்க்கையில் முதல் முறையாக அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், ஸ்தம்பித்து நின்றான் தேவ். வாழ்க்கையில் தன் எதிரே வந்தவர்களை எல்லாம் வீழ்த்திக் கொண்டு வெற்றி பெற்று வந்த தேவ்விற்கு, வார்த்தை என்னும் வாள் கொண்டு தன்னை மொத்தமாய் சாய்த்து நின்ற மயூரி முன் தோற்று நின்றான்.


"ஒவ்வொரு இரவும் விடியலுக்குப் பின் காணாமல் போகும்!" - அவனின் கடந்த கால கசடுகள் எல்லாம், மயூரியின் தூய அன்பின் முன் காணாமல் போனது.

அன்பிற்காக ஏங்கி நின்ற அவளின் விழிகள் தன் தாயின் விழிகளைப் பிரதிபலித்ததைக் கண்டு உயிர் உறைந்தான்.

அவனின் அழுத்தமான காலடிகள், மயூரியை நோக்கி நகர்ந்தது. மயூரியின் அருகே சென்றவன், ஒற்றை காலில் குத்திட்டு தரையினில் அமர்ந்தான்.

தன் கையில் இருந்த அவள் அன்னையின் செயினை அவள் கழுத்தினில் மாட்டினான்.

"மிர்ச்சி!..." என்றான் குரல் கமர.

"நான்... நான்... இனி... உன்னை... " அவளை சமாதானப்படுத்தும் வார்த்தைகள் இல்லாமல் தவித்தான் தேவ்.

" மிர்ச்சி என்னை ஒருமுறை பார்!" என்றான்.

அவனுடைய வார்த்தைகளுக்கு எந்த வித எதிர்வினையும் இல்லை மயூரியிடம்.

" நான் எதையும் தெரியாமல் செய்யவில்லை. தெரிந்தே தான் செய்தேன். உன்னை என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த நான், பார்த்த நொடி முதல் உன் கட்டுப்பாட்டிற்குள் வந்ததை நான் உணரவில்லை.

என் வலிகளைப் போல் வலிகளை தாங்கி நிற்கும் உன்னை கண்டதும் என் அகந்தை சரிந்து, கர்வம் சிதறியது.

உண்மை அன்பிற்கு ஏங்கிய என் அன்னையின் ஏக்கங்களை, இன்று உன் கண்களில் கண்டேன். உன் தூய அன்பின் முன், நான் தோற்றுப் போய் விட்டேன்" என்றான் உருக்கமான குரலில்.

எண்ணெய் இல்லாத தீபத்தை எவ்வளவு தூண்டினாலும் எரியாது. அவள் மனதில் அவனைப் பற்றிய நல்லெண்ணங்கள் வற்றிப் போனதால் அமைதியாய் இருந்தாள்.

"மிர்ச்சி உன் அன்னையின் செயினை உன்னிடமே கொடுத்து விட்டேன். உன் பாசத்தை பகடை காயாய் மாற்ற மாட்டேன். ப்ளீஸ் எழுந்திரு மிர்ச்சி" என்றவனின் வினைக்கு எதிர் வினை இல்லை அவளிடம்.


வம்படியாக அவளை தரையில் இருந்து தூக்க முயன்றான். அருகிலிருந்த பக்கவாட்டு கம்பியை பிடித்துக் கொண்டு, எழ மறுத்தாள்.

சமாதானம் கூறியும், இனிய சொற்களைக் கொண்டு பேசியும் முயற்சிதான் பலனில்லை.

செயினை கொடுத்து வழிக்குக் கொண்டு வர முயன்றான் அந்த முயற்சிக்கும் பலன் இல்லை.

வன்மையாக அவளை தூக்க முயன்றான் அதற்கும் அவள் ஒத்துழைக்கவில்லை.

சாம, தான, பேத, தண்டத்தில் ஒதுக்கி வைத்து அல்லது புறக்கணித்து, மிரட்டுவது போன்றவற்றாலான முயற்சியை இறுதியில் கையில் எடுத்தான்.

"ஓகே மிர்ச்சி! உனக்கு நான் செய்த தீவினைகளுக்கு எல்லாம் முடிவாக இந்தக் கப்பலில் இருந்து நான் குதித்து விடுகிறேன் " என்றவன் கூறியதும் அவளின் உடல் அதிர்ந்தது.


தரையில் இருந்து தலையினை உயர்த்திப் பார்த்தவளின் விழிகளில் கப்பலின் பக்கவாட்டு கம்பிகளில் ஏறிக்கொண்டிருந்த தேவ் தென்பட்டான்.

"வேண்டாம் தீரா! " என்று கத்திக் கொண்டே பதறி எழுந்தவள், அவனை நெருங்கும் முன் அவன் கப்பலில் பக்கவாட்டுக் கம்பிகளின் உச்சியில் ஏறி மறுபக்கம் இறங்கி நின்றான்.

பக்கவாட்டு கம்பியின் மறுபக்கம் நின்று கொண்ட மயூரி, "ப்ளீஸ் தீரா!" என்று உயிர் துடிக்க கத்தினாள்.

" இல்லை மிர்ச்சி! உன்னை உதாசீனம் செய்த எனக்கு இந்த தண்டனை தேவை தான்" என்றான்.

" என் வாழ்வில் என்னுடன் பயணிப்பவர்களை இந்தக் கடல் காவு வாங்குவதை நிறுத்திக் கொள்ளாதா? இந்தக் கடலின் அகோர பசிக்கு நானே இரையாகிறேன்" என்றவள் பயத்தினை எல்லாம் மறந்து விட்டு, கப்பலின் பக்கவாட்டுக் கம்பிகளில் கால் பதித்து ஏற ஆரம்பித்தாள்.

அவளின் முன்னேற்றத்தைக் கண்டு மனதிற்குள் மகிழ்ந்தாலும் முகத்தினை சோகமாய் வைத்துக் கொண்டான் தேவ்.
பக்கவாட்டு கம்பிகளின் உச்சியில் ஏறிய மயூரி, கீழே குனிந்து கடலைப் பாராமல், பக்கவாட்டுக் கம்பிகளின் மறுபக்கம் இறங்கினாள்.


வியர்வையில் உடல் குளிக்க, தேவ் கீழே விழும் முன் தான் விழுந்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தில் மறுபக்கம் தேவ் அருகில் வந்து நின்றவள், " என் வாழ்வின் இறுதிப் பக்கத்தில் என்னோடு பயணித்ததற்கு நன்றி தீரா!" என்றவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, பக்கவாட்டு கம்பியில் இருந்து தன் கைகளைப் பிரித்தாள்.

கீழே விழப் போகிறோம் என்று எதிர்பார்த்தவள், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, மெல்ல கண்களைத் திறந்து பார்த்தாள்.

தேவ் தன்னுடைய வலது கையினால் அவளை இடையினை அழுத்தமாய் பிடித்து இருக்க, அவள் விழுவதெப்படி?

உள்ளங்கை, உள்ளங்கால்கள் கூச, வியர்வையில் பிசுபிசுக்க, வார்த்தைகள் பேச முடியாமல், உயரத்திலிருந்து கீழே கடலை பார்க்க அச்சப்பட்டவள், எச்சிலை விழுங்கி தேவ்வினைப் பார்த்தாள். பின் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

" மிர்ச்சி! என் மீது நம்பிக்கை இருந்தால் கண்களைத் திறந்து என்னை பார்" என்றான் அழுத்தமாக


மயூரியின் விழிகளில் அசைவு தெரிந்ததே தவிர இமைகள் திறக்கவில்லை.

கம்பியை பிடித்துக் கொண்டே மயூரியின் அருகில் வந்தவன், அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

வார்த்தைகள் தராத பாதுகாப்பை, அவனின் உடல் கதகதப்பு தந்தவுடன், மெல்ல விழிகளைத் திறந்து அவன் விழிகளைப் பார்த்தாள்.

அவள் மூச்சுக்கு தவிப்பதைப் பார்த்தவன், "நாம் இப்பொழுது உலகில் எங்கும் கிடைக்காத சுத்தமான காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் மிர்ச்சி. இந்த தூய இதமான காற்றை நிதானமாக அனுபவித்து சுவாசி" என்றான்.


அவன் வார்த்தைகளுக்கு இணங்க, தன் முன் பரவி இருந்த அந்த இதமான காற்றை உணர முயன்றாள். சில்லென்ற அந்தக் காற்றை தன் காற்றுப் பைக்குள் நிரப்பினாள். தன்னுள்ளிருந்த சூடான காற்றை நிதானமாக வெளியேற்றினாள். அவளின் சுவாசம் சீரானது.

" மிர்ச்சி இப்பொழுது என்னை பார்" என்றான்.


அந்த நொடி தயங்காமல் அவனைப் பார்த்தாள் மயூரி.

"ஒரு சிறுவனின்

செருப்பை
கடல் அலை
அடித்துச் சென்றது...!
அவன் கடற் கரை
மணலில்
"இக்கடல்
ஒரு திருடன்"
என எழுதிவைத்தான்...!

ஒரு மீனவனுக்கு
அபரிமிதமான
மீன்களை
கடல் அள்ளிக்
கொடுத்தது...!
அவன்
கடற் கரையில்
"வாரிவழங்கும்
கடல் " என பதிந்து
வைத்தான்...!

கடலில்
முத்துக்குளிக்கும்
ஒருவனுக்கு
முத்துக்கள்
கிடைத்தன...!
அவன்
கடற் கரையில்
"வளம் மிக்க கடல் "
என்று எழுதி
வைத்தான்...!

இளைஞன்
ஒருவன்
கடலில் மூழ்கி
மரணித்தான்...!
அவனது தாய்
" இது ஒரு
கொலைகாரக் கடல் "
என எழுதிவைத்தாள்...!

பின்னர்
ஒரு பேரலை வந்து
அவர்கள்
கரையில் பதிந்து
வைத்த
யாவற்றையும்
அழித்துவிட,
கடல்
அன்றாடப் பணியை

தொடர்ந்தது...!

மனிதர்களின் சில புரிதல்களை மனதுக்குள் கொண்டு செல்ல வேண்டியதில்லை. அவரவர் தங்களின் அனுபவத்தை மாத்திரமே தெரிவிப்பார்கள். வாழ்க்கையை கடக்க வேண்டுமெனில், பக்குவபடுத்திக் கொண்டு போய்க் கொண்டே இருக்கவேண்டியது தான்.


நான் உன்னை பிடித்திருக்கும் இந்த பிடியில் உனக்கு நம்பிக்கை இருக்குமானால் கீழே குனிந்து இந்த கடலைப் பார் " என்று ஆணையிட்டான்.

மயூரியின் தலை பயத்துடன் வேண்டாம் என்று அசைந்தது.

" அப்போ நான் கீழே விழுந்தால் எட்டிப் பார்ப்பாயா? " என்றான்.


மயூரியின் கண்களில் கலவரம் பூத்தது.

மயூரியை தன்னருகே மேலும் இறுக்கிக் கொண்டு, அவளின் இதழில் இதழ் சேர்த்தான். மென்மையான தீண்டல், வன்மையில் முடிந்தது.

நாணத்துடன் தன்னைப் பார்த்த மயூரிக்கு, தன் இமைகளை அசைத்து, கீழே பார்க்கும்படி தைரியமூட்டினான் தேவ்.

தேவ்வின் தோள்களை நன்றாக பற்றிக்கொண்டு மெல்லக் கீழே பார்த்தாள்.


ஆகாயத்தின் நீல நிறத்தை பிரதிபலித்த அந்தக் கடல் அவள் காலடியில் தெரிந்தது.

தேவ்வின் கரமும், இதழும் கொடுத்த தைரியத்தில் தன் பயத்தினை வென்றவளுக்கு உலகை வென்ற உவகை பிறந்தது.

"ஹேய் ஹூரே..." என்று கத்தினாள் ஆர்ப்பாட்டமாய்.


கடல் பொங்கும்...
 
Last edited: