• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கடைசி வரை(ரி)யில் - 10

Jan 3, 2023
76
66
18
Theni
அத்தியாயம் 10

"சுஜாதா சுஜாதா என்னைப் பாரு" என்று அவன் அழைக்க அவளோ அவன் கைகளிலே தொய்ந்து விழுந்தாள். இரத்தம் அவன் கைகளில் தட்டுப்பட இவளை என்று தன் தலையில் தட்டியவன் அவளைத் தூக்கிக் கொண்டு அவளறைக்குள் நுழைந்தான்.


படுக்கையில் அவளைக் கிடத்திவிட்டு கையில் மீண்டும் கட்டுப் போட்டுவிட்டான். ஏனோ அந்த கரத்தினைப் பார்க்கையில் என்னவோ போலிருந்தது அவனுக்கு.

பையித்தியம் முத்திப் போய் முழுக்கிறுக்காவே மாறியிருக்காளே... இவளை எப்படி மாத்துறது என்று யோசித்தவனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை. அது அவளை மாற்ற வேண்டுமென்றால் தான் முதலில் மாறவேண்டும் என்பது பற்றி. அது நடக்குமா...!!! வாசுதேவன் மாறுவானா...!!! எல்லாம் அந்த வாசுதேவனுக்கே(கடவுளுக்கே) வெளிச்சம்...!!!


இந்த யோசனையில் அவளின் கரம் அவனை இறுக்கிப் பிடித்திருந்ததினை அவன் நினைக்க மறந்து போனான்...

சற்று நேரத்தில் அமைதியாய் கிடந்தவளின் அருகேயிருந்து அவன் எழ அவனது கரமோ அவளது விரல்களின் பிடியில் சிக்கியிருந்தது. அதை எடுக்க அவன் முயல... முடியவில்லை.

ஏனோ அவளிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்தெடுக்க அவனால் அப்போது முடியவில்லை. அதனால் அங்கயே அமர்ந்துவிட்டான்.


மயக்கத்தின் பிடியில் கூட அவள் முகம் அவன் மீது கொண்ட மயக்கத்தின் சாயலையே கொண்டிருந்தது. இதழ்கள் ஒருவித புன்னகையை தக்கவைத்திருக்க கண்களின் ஓரம் மட்டும் விழிநீர் கசிந்துக் கொண்டிருந்தது... லேசாக இதழ்கள் அசைய அவன் செவிகள் சட்டென்று கூர் பெற்றது.


"VNA VNA" என்று அவள் முணங்கிய ஒலி உருமாற்றம் அடைந்து அவன் காதினில் வந்துவிழ அவனோ அவளைத் திட்டக் கூட மனம் வராதவனாய் அமர்ந்திருந்தான்.

அவன் அமைதி அவள் என்னதான் புலம்பினாலும் இரத்தினாலே குளித்தாலும் நான் இப்படித்தான் அவளை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என பிடிவாதமாய் சொன்னது. இதை பாராமல் அவள் மயங்கியிருந்தது கூட அவளுக்கு நல்லது தான். இல்லையன்றால் அவளுக்குத்தான் இது இன்னும் ரணவலியைத் தந்திருக்கும்.


முதன்முறையாக அவளது முகத்தினை நன்றாக அவன் பார்த்தான். பார்த்தாலும் அவளது முகம் அவன் அகத்தினுள் நுழைய மறுத்தது.

சட்டென்று அவனுக்குள் ஓர் மாறுதல். அவனெழுத்துக்கள் அருவியாய் அவளுக்காகக் கொட்டத் தொடங்கியது...


எழுத்தை நேசிக்கச் சொன்னால்
என்னையும் சேர்த்து நேசிக்குமளவிற்கு
சித்தங் கலங்கி தடுமாறி நிற்கிறாள் இவள்...!!!

யாரிவள்...
தொட்டுவிட முடியாத
தொலைதூரத்தில் இருப்பவனை தொட்டிழுக்க நினைக்குமிவள் உண்மையிலே யார்???...

நிழலைக் காதலித்து
அவளோடு நித்தமும்
நடைபோடுமிவனை நிறுத்திவைத்து எனையும் காதலியென கட்டளையிடுகிறாளே... இவளுக்கு தைரியம் சற்று அதிகம் தான்...!!!

என்னெழுத்தை இதயத்திலிருத்தி
என்னையும் சுமந்தே திரியுமிவளின் கணத்தினை சற்றே இறக்கிதான் வைத்தாலென்ன...!!!

இரும்பென நான்
இறுக்கமாய் நிற்க
இரத்தத்தின் வெம்மை கொண்டே இளக்கப் பார்க்கிறாளே...
இதன் பெயர்தான் என்ன!!!

இவளிருக்குமிந் நிலைக்கு காரணம் யானென அறிந்தும்
ஏதும் செய்ய இயலா நிலையில் நிற்குமிவனின் நிலையையினை
ஏற்றுக் கொள்ளாது அடம்பிடிக்குமிவள்
பிடிவாதங் கண்டு
உள்ளுக்குள் சற்று பீதி கிளம்பியதென்னவோ உண்மை...

எது எப்படியோ
மென்மையாய்
சொன்னாலுஞ் சரி
வன்மையில்
இறங்கினாலுஞ் சரி...
என்னை மாற்ற
என்னவளைத் தவிர
எவராலும் இயலாது...


ஷ்ஷ் வாசு அவகூட கொஞ்ச நேரம் பேசுனதுக்கே உனக்கும் அவ பையித்தியம் ஒட்டிக்கிச்சு போல அவளை மாதிரியே நீயும் உளறிட்டு இருக்க... இதை உடனே முடிவு செய்ய முடியாது... அவள் உன்னை மாற்றும் முயற்சியில் வெற்றி பெறுகிறாளா..? இல்லை தோல்வியைத் தழுவி செல்கிறாளா என்பதினை பொறுத்திருந்து பார்க்கலாம்.. போ போய் உன் வேலையினைப் பார்... என்று அவன் புத்தி இடித்துரைக்க அப்போதுதான் அவனுக்குமது புரிந்தது...


உடனே அவளின் தொடுகையில் தன்னைப் புதைத்திருந்த கரத்தினை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு எழுந்து வெளியே சென்றான்.

-------------------------------------------

அந்த போலீஸ்காரியின் கரத்திலிருந்த பொருளைப் பார்த்ததும் நந்தினிக்கு தொண்டைக்குழி தாண்டி பேச்சு வரமறுத்தது.

"மே....ம்" என்று அவள் திணற "இதை அங்கேயே மறந்து விட்டுட்டு வந்துட்டயே நந்தினி.
வாங்கிக்கோ நந்தினி... " என்று நீட்டியபடி அவள் நிற்க அவளது வலிய கரங்களில் நந்தினியின் ஐடி கார்டு தொங்கிக் கொண்டிருந்தது.


அரண்டு நின்றிருந்தவளை அவளது விழிகளிரண்டும் குற்றஞ் சாட்ட கடுமை ஏறிய குரலில் "இதை வாங்கிக்கோ" என்றாள்.


எந்தவித அசைவுமில்லாது அவள் நின்றிருக்க "வாங்கிக்கோன்னு சொல்லுறேன்" என்று அவள் மீண்டும் சத்தமிட நந்தினி மெதுவாய் அவளருகே நெருங்கினாள்.


அந்த ஐடி கார்டினை நந்தினி தொட்டிழுக்க மறுமுனையினை அவளும் பற்றியிழுத்துக் கொண்டு "அதுக்குள்ள தப்பிச்சுட முடியாதே நந்தினி. இதை மட்டும் கொடுக்க நான் வரலையே... இன்னொன்னும் இருக்கு... அதையும் வாங்கிக்கோ..." என்று சொல்ல அவள் கண்முன் கையில் போடும் விலங்கே வந்து நின்றது.


இதயம் ஏகத்துக்கும் குதிக்க "இ....ல்லை...அது நான் இல்ல இல்லை" என்று அவள் கரத்தினை பட்டென்று விலக்கிக் கொண்டு மடிந்து அழத் தொடங்க அவள் அழுவதையே திருப்தியுடன் பார்த்தாள்.


"இல்லை மேம்.. எனக்கெதுவும் தெரியாது. நான் இதைப் பண்ணலை" என்று அவள் அழுதுகொண்டே சொல்ல "மொதல்ல எந்திரி நந்தினி" என்றவளின் குரலில் அவள் பட்டென்று எழுந்தாள்.

"கை நீட்டு" அவள் அதிகாரமாய் ஆணையிட அவள் கை தன்னாலே நீண்டது. அந்த கையில் விலங்கிட்டு அப்படியே இழுத்துச் சென்றுவிடுவாளென அவள் நிற்க அவள் கரத்தில் ஐடிகார்டோடு வேறொரு பொருளும் வைக்கப்பட்டது...


அதனை உணர்ந்தவளின் விரல்கள் இறுக மூடிக் கொண்டு சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தது. அந்த கண்களில் தென்பட்டது என்னவென்று உடனே அந்த காவல்காரியால் கண்டுபிடிக்க முடியாதா என்ன?

அவள் நிம்மதியுடன் பார்த்து "நந்தினி.. இனி நீ நிம்மதியா இருக்கலாம். இதுக்காகத்தான அங்க வந்த?" என்று அந்த பென்டிரைவை காட்டி அவள் பேச "ஆமா" என்றாள் அவள் தலை குனிந்தபடி.

"நீ எதுக்குத் தலை குனிஞ்சு நிக்குற..." என்றாள் அவள் வேகமாக.

"எப்படி நிமிர்ந்து நிற்க முடியும் மேம். என்னை கூனி குறுக நிக்க வைக்குறமாதிரி எல்லாமே நடந்து போயிடுச்சு. அப்படி இருக்கும் போது என்னால..." அவளால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.


"ஏய் நந்தினி வெயிட் மொத உக்காரு..." என்று அவளை அமர வைத்தவன் தானும் அவளருகே அமர்ந்தான்.


"நந்தினி நான் சொல்லுறதை கொஞ்சம் பொறுமையா கேளு. பொண்ணுங்கிறவ வெறும் ரத்தமும் சதையும் சேர்ந்த உடலல்ல. அவ அதுக்குமேல... அதுக்காக அவ கடவுள்னு நான் சொல்லலை. ஏன்னா அதை சொல்லுறதுக்கு... சொல்லிட்டே இருக்குறதுக்கு இங்க நிறைய பேர் இருக்காங்களே.. ஆனால் அவளை சகமனுசியா பார்க்காமல் வெறும் தேகமா அடையாளப்படுத்திப் பார்க்குறவங்கதான் இங்க அதிகம். அதேமாதிரி அவளை தெய்வம்னு சொல்லிட்டே அவளை அசிங்கப்டுத்துறது சகஜமா நடக்குற விசயம் தான். அவ கடவுளும் இல்லை... அடிமையும் இல்ல... பெண் என்பவள் பெண் தான். இங்க குடும்பப் பெண்கள் இப்படித்தான் இருக்கணும்னு நிறைய ரூல்ஸ் போட்டுத்தான் வளர்க்குறாங்க... அச்சம், மடம், நாணம், அண்ட் இன்னொன்னு ஏதோ ஒன்னு ஆங் பயிர்ப்பு... இந்த மாதிரி சொல்லுறவங்க நாம அதைக் கேக்க ஆரம்பிக்கிறோம்னு தெரிஞ்சா அவங்களுக்கு ஏத்த மாதிரி சொல்லிட்டே போவாங்க நந்தினி. இந்த சமூகம் கற்பு என்ற வரையறையை நமக்காக மட்டும்தான் உண்டாக்கி வச்சுருக்கு. அதுல நாம தப்பே பண்ணலைன்னா கூட மாட்டிக்கிடுறோம்... இவங்க பார்வையில நிர்வாணம் என்ற வார்த்தைக்கான அர்த்தமே வேறயா இருக்கு... ஒரு பொண்ணை ஆடையில்லாம பார்த்துட்டா அவளோட கற்பே போயிடுச்சுன்னு ஒரு எண்ணம். ஏன் பொண்ணுங்களுக்கே அப்படி தான் அந்த சமயத்துல எண்ணம் வரும். அது இந்த சமுதாயம் அவளுக்குக் கத்துக் குடுக்குறது. இப்படித்தான் இருக்கணும்னு அவளுக்கு மட்டுமே இங்கு ஏக கட்டுப்பாடுகள். அதை உடைச்சுட்டு வெளிய வர்றது அவ்வளவு சுலபமில்லை நந்தினி. அது இங்க கொஞ்ச பேரால தான் முடியுது... அதுக்காக அவங்க எவ்வளவு போராடிருக்காங்கன்னு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்... போராடணும் நந்தினி... ஒரு பொண்ணை நிர்வாணமா வீடியோ எடுக்க... அதுவும் அவளுக்கேத் தெரியாம எடுக்குறதுக்கு அவனுக்கே வெட்கமில்லாத போது நாம எதுக்காக அந்த வீடியோவுக்காக வெட்கப்பட்டு கூனி குறுகி அவன் முன்னாடி நிக்கணும்... நம்ம உடம்புல இருக்குற பார்ட்ஸ் எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்குறது தானே. அதுக்காக அவன் மிரட்டுறதுக்கு பயந்து அவன் முன்னாடி நின்னா அந்த நாயி அடுத்து என்ன சொல்லும் தெரியும் தானே?" என்று அவள் நிறுத்த

"தெரியும் மேம்.. அதை என்னால சொல்லக் கூட முடியலை... அம்மா அப்பாகிட்ட சொன்னா அவங்க ஏதாவது பண்ணிக்குவாங்கன்னு எனக்குப் பயம். என்ன பண்ணென்னு தெரியாமலே அங்க போய் நின்னேன்.." என்றாள் நந்தினி கலங்கிய குரலில்.


"எல்லாத்துக்கும் தயாரா போய் நின்னயா நந்தினி... இதுக்குப் பதிலா கமிஷனர் ஆபிஸ்ல ஒரு கம்பிளைண்ட் பைல் பண்ணியிருக்கலாம்.. அவனை என்ன பண்ணனுமோ அதை நான் பண்ணியிருப்பேன்..."

"எப்படி மேம் இதுல நான் பயங்கர அப்செட் ஆகிட்டேன். எப்பவும் நடுங்கிட்டே இருந்தேன் மேம். மொபைலை எடுக்கவே பயமா இருக்கும்...அந்தளவுக்கு பயங்கர டார்ச்சர் மேம்... சிலசமயம் சூசைட் கூட.."

"ஷ்ஷ் நிறுத்து நந்தினி. இதுக்கு போய் செத்துப் போறதா இருந்தா நாமலாம் எதுக்குப் பொறந்து வரணும். எந்த சூழ்நிலையிலும் நாமளா இந்த வாழ்க்கை வேண்டாம்னு முடிவெடுத்து வாழ்க்கையை முடிச்சுக்க கூடாது. தப்பு பண்ணாத நீ செத்துப் போறதுக்கு அந்த தப்புப் பண்ணவனை சாகடிச்சுடலாம்.. நீ பண்ணது சரிதான் நந்தினி. என்ன எல்லாமே பெர்பெக்டா பண்ணவ ஐடிகார்டை ப்ளஸ் அந்த பென்டிரைவை விட்டுட்டு வராம எடுத்துட்டு போயிருக்கணும். விட்டுட்டு போயிட்டயே" என்று சொல்ல "மேம்" என்றாள் அவள் அதிர்ச்சியுடன்.


"நிசமாவே சொல்லுறேன் நந்தினி. இந்தமாதிரியான ஈனப்பிறவிகள் தான் சாகணும்... நாம இல்லை. புரிஞ்சதா..."என்று சொல்ல "ஆனா அது நான்..." என்று அவள் சொல்லுவதற்குள்

"எதைப்பத்தியும் நீ நினைக்க வேண்டாம். இனி இந்த கேஸ்ல நீ இல்லை... அதைமட்டும் ஞாபகத்துல வச்சுக்கோ. நிம்மதியா இரு. அதேமாதிரி இன்னொரு தடவை இப்படி உனக்கு நடந்தாலோ இல்லை உனக்குத் தெரிஞ்சவங்களுக்கு நடந்தாலோ தைரியமா எதிர் கொள். அதனால என்ன பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்கிறேன். என்ன பிரச்சனையின்னாலும்.. புரிஞ்சுதா" என்று அவள் சொல்ல நந்தினி தெளிவான முகத்தோடு "உங்களை மாதிரியே தைரியாம இருக்கணும்னு தான் நான் ஆசைப்படுறேன் மேம். தாங்க்ஸ் எனக்கு என்னையே அறிமுகப்படுத்தி வச்சதுக்கு" என்றாள்.

இனி இவள் எதையும் சமாளிப்பாள் என்றவள் "கையை குடு நந்தினி" என்றாள்.


"என்ன மேம்" என புரியாது கேட்டாலும் கையை நீட்டியிருக்க "ஆல் த பெஸ்ட்" என்று அவள் கையைப் பற்றி குலுக்கிவிட்டு கன்னத்தில் தட்டிவிட்டு புன்னகை முகத்துடன் கிளம்பினாள் சு...தா.


என்னதான் நந்தினியிடம் சிரித்துவிட்டு வந்தாலும் வெளியே வந்ததும் அவளின் முகம் சட்டென்று மாறியது.


இந்த மாற்றம் எதனால்??? இனி என்னாகுமோ?????