• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
Joined
Jan 3, 2023
Messages
76
அத்தியாயம் 15


கமிஷ்னர் அலுவலகம் விட்டு சு...தா வெளியேறி தனது வண்டியை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி வேகமாய் சென்று கொண்டிருந்தாள்.

அவள் மூளை அவளைப் போட்டு குடைந்து கொண்டே இருந்தது. அந்த சந்தேகத்தினை நிவர்த்தி செய்யும் வரை அது ஓயாது... அப்படியிருந்தும் சாலையில் வண்டியினை நிறுத்தியபடி நின்றிருந்த மூவரின் பதட்டம் நிறைந்த முகம் அவள் கவனத்தில் பதிய உடனே வண்டியினை நிறுத்தினாள்.

வேகமாய் இறங்கியவள் அதில் ஒருவனை அடையாளங் கண்டு "டேய் ரகு நீ என்ன இங்க" என்றாள்.

"அக்கா... அது மேம்" என்று அவன் உளற ஆரம்பிக்க "அக்கான்னே சொல்லு ரகு. சரி என்ன விசயம். எதுக்கு இங்க இந்த நேரத்துல நின்னுட்டு இருக்க. அக்கா எப்படி இருக்கா" என்று அவள் கேட்க "அக்கா... அக்காவை காணோம்" என்றான் அவன் சோகமாய்.

"என்னடா சொல்லுற" பதட்டத்துடன் வந்து விழுந்தது வார்த்தைகள்.

"ஆமாக்கா.. நேத்து சாயந்தரத்துல இருந்து அவளைக் காணோம்"

ரகு" என்று மீண்டும் அவள் அழைக்க "எல்லா இடத்துலயும் தேடிப்பார்த்துட்டோம். ஆனா அவ இல்லை" என்றவனின் பேச்சும் அவன் முகம் போல கலங்கியிருந்தது.


"ரவுடி பேபியா டா காணாம போயிட்டா..." என்று இவளும் இடிந்தே கேட்க "இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாமாவுக்கு மட்டும் மெஸேஜ் பண்ணியிருப்பா போல க்கா. நான் ஹாஸ்பிட்டல் தாண்டியிருக்க வளைவுல இருக்கேன்னு அதான் நாங்க அவளைத் தேடி வந்தோம்" என்றான் அவன்.

"டேய் அப்போ பாப்பா டா... அவளை யார் பார்த்துக்கிறா" என்று அவள் கேட்க "பாப்பா இல்லை க்கா.. எப்பவோ... இறந்து...‌." என்பதற்குள் அவள் அவனைத் தடுத்து விட்டாள்.


"அறிவில்லை உனக்கு. படிச்சுருக்க தானே... இவ்வளவு நடந்துருக்கு ஏன் டா சொல்லவே இல்லை. நேத்து சாயங்காலம் காணாம போயிருக்கான்னு இப்போ வந்து பொறுமையா பேசிட்டு இருக்க. நேத்தே என்கிட்ட சொல்லியிருக்க வேண்டியதுதானே" என்று சொன்னவளின் குரலில் கோபம் ஏறியிருந்தது.


"அக்கா அவ ரொம்ப மனசொடிஞ்சு போயிருந்தா.. எப்போ என்ன பண்ணுறான்னு எங்க யாராலயும் சொல்ல முடியலை. எனக்கும் பையித்தியமே பிடிக்காத குறைதான்"

"சரி நானும் போய் தேடிப் பார்க்குறேன்" என்று அவள் சொல்லவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு அந்த சாலையில் விரையத் தொடங்கினாள்.

வண்டி முன் செல்ல அவள் நினைவுகளோ அவள் தோழியுடன் கழித்த நாட்களைத் தேடி பின்னால் சென்றது. கண்களில் கம்பீரமும் தேகத்தில் நிமிர்வும் கொண்டு எதற்கும் பயப்படாது இருக்கும் அவளா இப்படி செய்கிறாள் என்று யோசித்தபடியே கண்களால் அவள் எங்கேனும் தென்படுகிறாளா என்று பார்த்த வண்ணம் அவள் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தாள்.


சாலையின் இருமருங்கிலும் இருந்த மரங்கள் அவளை கடந்து செல்ல அதனூடாக அமர்ந்து வெறித்த பார்வை பார்த்தவளை கண்டதும் வண்டியினை நிறுத்தினாள்.

"ரவுடி" என்றவளின் அழைப்பில் அவள் திரும்பினாலும் அவள் கண்கள் உயிர்ப்பிழந்து இருந்ததை காவல்காரியால் புரிந்துகொள்ள முடிந்தது.

"போலீஸ்" என்று அவளழைத்த அந்த அழைப்பிலும் ஜீவனில்லை.

"ரவுடி என்ன இது... ஏன் இங்க வந்து உக்காந்துருக்க?" என்று அவள் கேட்க "எனக்குன்னு என்ன இருக்கு போலீஸ் அதான் நான் வந்துட்டேன்" என்றாள் அவள்.


"இது நான் பார்த்த ரவுடி பேபி இல்லையே... சரி இப்போ அதைப் பத்தி பேச வேண்டாம். நாம கிளம்பலாம் வா" என்றதும் "நான் வரலை போலீஸ் நீ கிளம்பு" என்றாள் இவள்.

"ரவுடி என்னைப் பத்தி தெரியும் தானே. நீ இப்போ வர்ற" என்று சொன்னதும் அவள் எழுந்தாள்.

போனை எடுத்தவள் ரகுவிற்கு கால் செய்து "அக்காவை நான் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன் நீ வீட்டுக்கு போயிடு" என்று சொல்லிவிட்டு "வா ரவுடி" என்றாள் வேகமாய்.


வீடு வந்து சேர்ந்தபின்னும் கூட அசைவில்லாது அமைதியாய் இருந்தவளை பார்த்தவள் தானும் அமைதியாக இருந்தாள்.


வெகுநேரம் ஆனபின்னும் கூட அவள் தெளியாததை கண்டு "ரவுடி இப்போ வந்து படுத்து தூங்கு" என்று சொல்ல அவளோ "நீ தூங்கு போலீஸ்" என்றாள்.

"ஏன் நான் தூங்கவும் மாயமாகிடலாம்னு நினைக்குறயா"

"இப்போ நான் எதையுமே நினைக்கல போலீஸ்" என்றாள் சோகமாய்.

"சரி நினைக்கலை தானே. இப்போ இங்க நீயும் நானும் மட்டும் தான். உனக்குன்னு எந்தவிதமான கவலையும் இல்லை. அதை மட்டும் நினைச்சுட்டு வந்து படு. ஏதா இருந்தாலும் நாம அப்பறமா பேசிக்கலாம்" என்றதும் அவள் வந்து படுத்தாள்.


கண்ணை மூடியதும் அவள் விழிகளின் ஓரமிருந்து கண்ணீர் வழிந்தது. "ஷ்ஷ் வேண்டாம் தூங்கு ரவுடி"என்று அவள் சொல்ல "போலீஸ் ப்ளீஸ் நான் உன் மடியில படுத்துக்கவா" என்று கேட்க "இதென்ன கேள்வி வந்து படுத்துக்கோ" என்றாள் அவள்..


மடியில் இருந்தவளின் கரத்தினை பிடித்தவள் "என்கிட்ட ஏதாவது சொல்லனுமா ரவுடி" என்று கேட்க "போலீஸ் உன்கிட்ட நிறைய பேசணும். ஆனா என்ன பேசன்னு தான் எனக்குப் புரியலை. உன்கிட்ட சொன்னா என் மனசு அமைதியாகுமா என்னென்னு எனக்குத் தெரியலை. ஆனா சொல்லணும்னு தோணுது" என்றாள் அவள் பாவமாய்.


"சொல்லு ரவுடி..."

"ஆனா அந்த கஷ்டத்தை நினைச்சு நீ கவலைப்படுவ போலீஸ்... வேண்டாம்" என்று மறுக்க "என்னோட வேலையில நான் தினந்தினம் கஷ்டத்தை பார்க்குறேன் ரவுடி. எனக்கு இது பழகிப் போயிடுச்சு. கூடவே மனசு மரத்துப் போயிடுச்சு. நீ எல்லாத்தையும் உன்னோட மனசுக்குள்ள போட்டுப் பூட்ட வேண்டாம். என்கிட்ட சொல்லு. உன் மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்" என்றாள் அவள்.


அவள் இவ்வாறு சொல்லி முடித்ததும் அவள் நொடியில் அழத் தொடங்கிவிட்டாள். அவ்வளவு கண்ணீரை எப்படித்தான் உள்ளே அடக்கி வைத்திருந்தாளோ என்று எண்ணும் அளவிற்கு அருவி போல் வந்துக் கொண்டிருந்தது. துடைக்கத் துடைக்க ஒழுகிக் கொண்டிருந்த அந்த கண்ணீரில் சு...தாவின் தொடையெல்லாம் நனைந்துவிட்டது...


அழுதழுதே ஓய்ந்து போனவள் "போலீஸ் அந்தவொரு நாள் என் வாழ்க்கையில வந்துருக்கவே கூடாது. என்ன பாவம் பண்ணேன்னு எனக்கேப் புரியலை..." என்றவளின் வாயைப் பொத்தியவள் "லிசன் யாரும் பாவம் பண்ணவே இல்லை. சும்மா சும்மா பழியை உன் மேல தூக்கிப் போட்டுக்காத... அதுதான் இருக்குறதுலயே பெரிய பாவம்" என்றாள்.


"போலீஸ் நீதான் நான் பாவம் பண்ணலைன்னு சொல்லுற.. ஆனால் வீட்டுல எல்லாரும் என்னை என்னென்ன சொல்லுறாங்க தெரியுமா...?"


"சொல்லுறவங்களை மூஞ்சுலயே மிதி... அது யாரா இருந்தாலும்..." என்று அவள் கோபமாய் சொன்னதும் அவள் அமைதியாகிவிட்டாள்.


"மத்தவங்க சொன்னப்போ கூட நான் அமைதியா இருந்துட்டேன். ஆனா அம்மாவே என்னை புரிஞ்சுக்கலை" என்று அவள் சொல்லவும் "அவங்க புரிஞ்சுக்குற மாதிரி நீ சொல்லிருக்க மாட்ட ரவுடி" என்றாள் இவள்...


"என் மூளையே ஆப் ஆகி என்ன பண்ணுறேன்னு தெரியாம எல்லாமே பண்ணிட்டு இருந்தேன் போலீஸ்... டெலிவரி சமயம்... என்ன தான் நான் தைரியமானவளா இருந்தாலும் ரொம்ப பயந்துட்டேன் போலீஸ். கன்சீவா இருக்குறதுக்கு முன்னாடியிருந்தே வீட்டுல பயங்கர டார்ச்சர். இன்னும் குழந்தையில்லை... சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போங்க அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க... அதை தாங்க முடியாம சில நேரம் எதிர்த்து அவங்க அம்மாகிட்ட பேசுவேன். அதுக்கும் பயங்கரமா பிரச்சனை வரும்... அதுக்கப்பறம் அமைதியாக தாங்கிட்டு போக ஆரம்பிச்சேன். அதுவும் ரொம்ப வலிச்சது. கடைசியில ஹாஸ்பிட்டல் போய் அடுத்து கொஞ்ச நாள் கழிச்சு கன்சீவா ஆனேன். ஆனா ஏன்டா ஆனோம்னு சொல்லுறளவுக்கு மறுபடியும் டார்ச்சர். இது பையனா இருக்கணும்னு சொல்லி சொல்லி ஒவ்வொன்னா பண்ண ஆரம்பிச்சாங்க... எனக்காக எதுவும் பேசாதன்னு அந்த மனுசன் சொல்ல நானும் அமைதியா விட்டுட்டேன். பெயின் வந்து ஹாஸ்பிட்டல் போறேன் அவங்க வீட்டுல இருந்து யாருமே வரலை... இவரும் ரொம்ப லேட்டா வர்றாரு.. ஒவ்வொரு தடவையும் செக் பண்ணுறப்பவே நான் ரொம்ப சோர்வாகிட்டேன். அவர் இருந்தாக்கூட நான் கொஞ்சம் தைரியமா பீல் பண்ணியிருப்பேன். அவரும் இல்லை. கடைசியில அவர் வரும்போது ஆபரேசன் தியேட்டருக்குள்ள போயிட்டேன்... மயக்கம் தெளிஞ்சு நான் வரும் போது அங்கே என்ன பிரச்சனை போச்சுன்னு தெரியலை... ஆனா பாப்பாவை கண்ணுல பார்த்ததும் எனக்குப் புரிஞ்சுடுச்சு என்ன நடந்துருக்கும்னு... அவர் முகம் தெளிவில்லாம இருந்தாலும் குழந்தையை சந்தோசமாத்தான் தூக்கி வச்சுட்டு இருந்தார். ஆனா அவங்க அம்மா அப்படியே தொடாமாலே கிளம்பி போயிடுச்சு... அவர் பாப்பாவைப் பாத்துக்கோ ம்மா.. நான் வீடு வரைக்கும் போய் உனக்குத் தேவையானதை எடுத்துட்டு வர்றேன்னு போனார். அம்மா கூடவே இருந்தாங்க... ஆனாலும் கூட எனக்கு என்னவோ போல இருந்துச்சு... கீழ ப்ளீடிங் அதிகமாகுற மாதிரி ஒரு ஃபீல். அம்மாகிட்ட சொன்னா அவங்க அப்படித்தான் இருக்கும்னு சொல்லி அமைதியா உக்காந்துட்டாங்க... அடுத்து பெட் புல்லா பட்டு கீழ படும் போதுதான் பக்கத்துல இருக்குறவங்க பாத்துட்டு இப்படி இரத்தம் போய்ட்டு இருக்கு இதைக் கூடப் பார்க்காம என்ன அம்மா நீங்கன்னு திட்டுன பிறகுதான் அம்மா போய் டாக்டரை கூட்டிட்டு வந்தாங்க. அவங்க வந்து செக் பண்ணிட்டு கடைசியில ரொம்ப கிரிட்டிகல் ஸ்டேஜ்னு சொல்லி கண்டிப்பா யூட்ரஸ் எடுத்தே ஆகணும்னு சொல்லிட்டாங்க. அந்த நிலைமையில எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை. எப்படி ரியாக்ட் பண்ணன்னு தெரியலை போலீஸ். நானே என்னை விட்டு பிரியுற மாதிரி ஓர் உணர்வு தொண்டையை வந்து அடைச்சுடுச்சு. நான் வேண்டாம்னு ரொம்ப சண்டை போட்டேன். எடுக்கலைன்னா நீ செத்துடுவன்னு சொன்னாங்க. பரவாயில்லைன்னு தான் சொன்னேன். அப்பறம் அவர் வந்து சமாதானப்படுத்தி ஒத்துக்க வச்சு..... மிகப்பெரியதாய் அவளிடம் இருந்து கேவல் ஒன்று வெளிவந்தது. அதை அவள் அடக்கிக் கொண்டு பேச முயல...


"அழுகை வந்தா அழுதுடு ரவுடி. உனக்குள்ளே போட்டு அடக்காத... அட்லாஸ்ட் இப்பவாவது எல்லாத்தையும் வெளிய கொட்டு..." என்றாள் அவள்.


சற்று நேரம் அழுது முடித்து பேசியவள் "ஏற்கனவே வீட்டுல இருக்குற நிலைமையில என்ன நடக்கும்னு உனக்கேத் தெரியும் தானே.. அதுதான் நடந்தது. ஆனாலும் இந்த பாப்பா போதும்னு நினைச்சு நான் இருந்தேன். திடீர் திடீர்னு நான் ரொம்ப டவுனா ஆவேன். எதுக்குன்னு தெரியாம கோபப்படுவேன். எங்க போறோம்னு தெரியாமலே கிளம்பி வெளிய போய்டுவேன். கடைசியில பாப்பாவும் என்னை விட்டுட்டுப் போயிட்டா. அதான் அவரை வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டு நான் செத்துப் போயிடலாம்னு நினைச்சேன்" என்று அவள் கண்ணீர் விட்டபடி சொல்கையில் இவளுக்கொன்று தெளிவாகத் தெரிந்தது கர்ப்பப்பை எடுத்ததால் வரும் ஹார்மோன் மாற்றத்தினை அவள் எற்றுக்கொள்ள முடியாது தடுமாறுகிறாளென்று....

தடுமாறும் மனங்கொண்டவளினை தாங்கிப் பிடிப்பவள் தன் மனத் தடுமாற்றத்தினை மறந்து வாழ்வது எப்போது???
 
Top