• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கணேஷ் குமார். K - மழையில் ஒரு காதல்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
மழையில் ஒரு காதல்


அம்மா..., ம்மா..., என்ன விளையாட்டு இது உள்ள வாங்க... வயசுதான் 50 க்கு மேல ஆகுது.. இன்னும் சின்னப் பிள்ளையாட்டம் மழை வந்தாலே குடுகுடுன்னு ஓடிப்போய் நனையறது விளையாடுறதுனு, இப்ப உள்ள வரப் போறீங்களா இல்லையா....!" தன் வீட்டு வாயிலில் நின்று தன் தாயைக் கண்டிக்கும் தோரணையில் கத்திக் கொண்டிருந்தான் ஜீவா.

" டேய், ஏண்டா கத்துற இன்னும் கொஞ்ச நேரத்துல மழை விட்டுடும்டா அதுவரைக்கும் கொஞ்ச நேரம் இருந்துட்டுத் தான் வரனே" என்று தன் மகனைப் பார்த்துக் கெஞ்சும் பார்வையில் கேட்டாள், பார்வதி.

"ஏன்மா இப்படிக் குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறீங்க, மழை வந்தாப் போதும், நீங்க ஒரு பாங்க் மேனேஜங்றதே மறந்துட்டு, குழந்தை மாதிரி நனையறது விளையாடுறது.. எப்பப் பாரு இதே வேளையாப் போய்டுச்சி உங்களுக்கு."

" பிரசவத்துக்கு அவங்க அப்பா வீட்டுக்குப் போய் இருக்கிற உன் மருமகளுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா உடனே கிளம்பி வந்துடுவா, அம்மாவ ஏன் மழையில நனைய விட்டீங்கனு என்கிட்ட சண்டைக்கு வந்து நிப்பா... வாங்க மா உள்ள போலாம்" என்று தாயின் கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்து வந்தான்.

" டேய், கைய விடுடா நானே வரேன், அதுக்கு ஏன் என் பொண்ண இழுக்கிற, அவ நல்லபடியாகப் பிரசவம் முடிச்சி வரட்டும்" என்ற பார்வதியும் பேசிக்கொண்டு ஜீவாவின் பின்னாலே சென்றவள், டைனிங் டேபிளில் உள்ள இருக்கையில் அமர்ந்தது புகைப்படத்தில் மாலையோடு இருக்கும் தன் கணவனின் சிரித்த முகத்தையே வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

உள்ளே இருந்து டவல் கொண்டு வந்த ஜீவா, தாயின் தலையைத் துவட்டி கொண்டிருக்க...

பார்வதி, "டேய் இத்தனநாளா நீ தான் கேட்டுட்டே இருப்பல நானும் உன் அப்பாவும் காதலிச்ச கதைய…, ஏதோ இன்னைக்கிச் சொல்லணும்னு தோணுதுடா."

"என்னமா ஆச்சு உனக்கு, ஏன் ஒரு மாதிரி பேசுற? விடு, இதெல்லாம் இப்பப் பேச வேணாம் ஆல்ரெடி நைட் லேட் ஆயிடுச்சு, கண்டதையும் யோசிக்காம நீ போய்த் தூங்கு மா.." என்று கூறித் தன் தாயின் தலையை நன்றாகத் துவட்டி விட்டு, நகர அவனின் கையைப் பிடித்துத் தனது அருகில் உள்ள இருக்கையில் அமர வைத்தாள், பார்வதி.

"கொஞ்சம் இருடா, எனக்கு என்னமோ இன்னிக்கி மனசே சரியில்ல உன் கிட்ட பேசணும்னு தோணுது, இத்தன நாளா நீ கேட்டுட்டு இருந்த கதை தானேடா... இரு டா... "என்று தன் மகனின் கரத்தை பற்றியவாறே தன்னுடைய காதல் காவியத்தைக் கூற ஆரம்பித்தாள்.

அன்றொரு நாள் மாலைப்பொழுது வானம் இருட்டிக் கொண்டே போகச் சாரலும் தூவத் தொடகிய நேரம் மழையாக உருமாறுவதற்குள் தன்னுடைய அறைக்குச் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் வேகமாக நடக்கத் தொடங்கினாள் பார்வதி, ஆனால் பேருந்தை விட்டு இறங்கி இரண்டு தெருத் தள்ளியதுமே மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.

கையில் குடையும் இல்லை ஒதுங்குவதர்க்குக் ஒரு கடையும் இல்லை தோளில் இருந்த துப்பட்டாவை மட்டும் தலையில் முக்காடு போட்டபடி, தண்ணீர்ப் பெருக்கேடுத்து நிரம்பி ஓடும் சாலையில் வேகமாக நடக்கத் தொடங்கினாள். இவளது காலடி ஓசைக்கு ஏற்ற வாறே மற்றொரு ஓசையும் கூடவே கேட்க திரும்பிப் பார்த்தாள், பத்து அடி இடைவெளி விட்டு ஒரு வாலிபன் இவளைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.

இருக்கும் பிரச்சனையில் இது வேறு என்று நினைத்தவள் இன்னும் வேகமாக நடக்க இல்லை இல்லை ஓடத் தொடங்கினாள், செல்லும் வழியெல்லாம் இடை இடையிடையே திரும்பிப் பார்க்க, அந்த வாலிபனும் இவள் செல்லும் சந்து புந்து எல்லாம் பின்னாலேயே வந்து கொண்டு இருந்தான்.

இவளும் நடையை ஓட்டமாக எடுத்து இவளுடைய அடுக்குமாடிக் குடியிருப்பு வந்ததும், கேட்டின் வாசலிலிருந்து எட்டிப்பார்க்க அந்த வாலிபன் கண்ணுக்கெட்டிய தூரம் வரைத் தெரியவில்லை. பின்னர் ஒரு நிம்மதி அடைந்த பெருமூச்சுடன் தன்னுடைய அறைக்குச் சென்றாள்.

மழையில் மொத்தமாக நனைந்துவிட்டதால் ஈர உடையை மாற்றிக் கொண்டு தலையைத் துவட்டியபடி பால்கனி வந்தவள்.., அங்கு இருந்து பார்க்க அவளது பிளாட்டின் கிழ்பக்கம் அந்த வாலிபன் நின்றுகொண்டு அந்தப் பிளாட்டைச் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் இவளுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் கோபம் கோபமாக வந்தது, எப்படியோ தன்னைத் துரத்திக்கொண்டு பிளாட் வரை வந்துவிட்டான் என்றும் இதை இப்படியே விட்டால் வீண் பிரச்சனைதான் என்று நினைத்தவள் குடுகுடுவென்று படியில் இறங்கி கீழே வந்தவள்

"ஹலோ யார் நீங்க, எதுக்கு இங்க நிக்கிறீங்க...?"

"இல்லை மேடம், மழை அதான்...."

"மழை வந்தா என்ன, ஓரமா நிக்க வேண்டியது தானே எதுக்கு இங்கே வந்து நிக்கிறீங்க...?"

"இல்ல மேடம் மழை வந்ததால ஓரமா..."

"அதுதான் நானும் கேட்கிறேன், அவ்வளவு தொலைவு நானும் பார்த்துட்டே வரேன் அந்தப் பேருந்து ல இருந்து இறங்கி இங்க வர வரைக்கும் என் பின்னாடியே வந்துட்டு இப்ப இங்க வந்து நிக்குற, என்ன நெனச்சிகிட்டு இருக்கீங்க உங்க மனசுல, இந்த மாதிரி பண்ற வேலையெல்லாம் என் கிட்ட வெச்சுக்காதிங்க அப்பறம் போலீஸ் கிட்டப் புடிச்சுக் கொடுத்திடுவேன்."

"நான் மத்த பொண்ணுங்க மாதிரி அமைதி கிடையாது வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று .முடிவு எடுக்கிற ஆளு, இந்த மாதிரி வேலை எல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க, இடத்தைக் காலி பண்ணுங்க" என்று அவள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டே இருக்க, அவளும் எவ்வளவு தான் பேசுகிறாள் என்று பொறுமையாகவே அவளைப் பார்த்துக் (ரசித்துக்) கொண்டே இருந்தான் இவனும்.

இவனின் அமைதியைப் பார்த்து அவளும் கொஞ்சம் அமைதியாகிவிட "என்ன மேடம் பேசி முடிச்சிட்டீங்களா, அவ்வளவுதானா இல்ல இன்னும் இருக்கா..?"

"ஹலோ, என்ன நக்கலா...?"

"என்னங்க மேடம் நீங்க, என்னப் பேச விட்டா தானே என்னனு சொல்ல முடியும்."

"என்ன பேசப் போறீங்க, அதான் உங்க கண்ணைப் பார்த்தாலே எல்லாம் தெரியுது... திருட்டு முழி...."

"வாச்மேன், வாச்மேன் அண்ணா, இங்க வாங்க இங்க பாருங்க இந்த ஆள் யாருன்னு தெரியல உள்ள வந்து நிற்கிறான் விட்டுட்டு இருக்கிறீங்க. உடனே இந்த ஆளப் புடிச்சி வெளியே தள்ளுங்க."

"தங்கச்சி, ஏன்மா இப்படிக் கோவப்படுற கொஞ்சம் பொறுமையா இருமா.."

"என்னன்னா நீங்களும் இப்படிப் பேசிக்கிட்டு இருக்கீங்க.."

"தங்கச்சி இந்தத் தம்பி பக்கத்து பிளாட்டில தான் மா இருக்கு, அந்தப் பிளாட்டுக்கு போற வழில கால்வாய் தண்ணியா இருக்கு அந்த வழியா போக முடியாதுன்னு தான் என்கிட்ட சொல்லிட்டு நாம பிளாட்டுக்கு வந்து காம்பவுண்ட் வழியாக உள்ளே போலாம் னு நின்னுகிட்டு இருந்திச்சி, அதுக்குள்ள அந்தத் தம்பியைத் தப்பா நினைச்சிட்டியே பாப்பா."

வாச்மேன் இப்படிச் சொன்னதும். தன் மேல தான் தவறு இருப்பதை உணர்ந்தாள் பார்வதி உடனே தலையைத் தொங்கப் போட்டவாறே "ஐ அம் சாரி, நான் தான் உங்கள தப்பா நெனச்சிட்டேன். ஐ அம் சோ சாரி.."

"நீங்க சாரி கேக்குறது இருக்கட்டும் எதுக்கும் ஒரு அளவில்லையா இப்படியாத் திட்டுவீங்க. இதெல்லாம் எந்தக் காலேஜ் ல கத்துக்கிட்டீங்க... ஆனாலும் நான் ரொம்பப் பாவம்தாங்க" என்று அவன் ஐயோ பாவமாகத் தன் முகத்தை வைத்துக்கொண்டு பேச அவனின் முகத்தைப் பார்க்க இவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

சிரிப்பை அடக்கிக் கொள்ள, வாயை மூடியபடி தன்னுடைய அறைக்குச் சென்று விட்டாள்.

மறுநாளும் இவள் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பேருந்து ஏதும் வரவில்லை, மழை அதிகமாகப் பெய்வதால் பேருந்துகள் அனைத்தும் செல்லத் தடை செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

வீட்டிற்குத் திரும்ப வேண்டிய அவசியம் உள்ளதால் வாடகைக்கு ஆட்டோ பிடித்துப் போகலாம் என்ற எண்ணத்தில் போய்வரும் ஆட்டோவையெல்லாம் கைகாட்டினாள் ஆனால் எல்லாவற்றிலும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருக்க யாரும் சவாரி ஏற்றிக்கொள்ள நிறுத்தவில்லை.

நெடுநேரத்திற்குப் பின்னாலே இவள் கைகாட்ட ஒரு ஆட்டோவும் நின்றது.

"அண்ணா நகர்ல இருக்கிற எட்டாவது தெருவுக்குப் போகணும், ஆட்டோ வருமா, அண்ணா ?

"போலாமா, ஆனா ஏற்கனவே ஒரு சவாரி இருக்குக் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியுமா..??"

"அப்படியா, சரி பரவால்ல...." என்று கூறிவிட்டு ஆட்டோவின் நுழைவாயில் மூடி வைத்திருந்த திரைச்சீலையைத் திறந்து உள்ளே நுழைந்தவள் அதிர்ந்தாள்.

அங்கு ஏற்கனவே, நேற்றைய தினம் சண்டைக்கு இழுத்த அந்த வாலிபன் அமர்ந்திருந்தான். இவளைவிட, இவளைப் பார்த்ததும் அவன் அதிகமாக அதிர்ந்தான், " ஐயையோ நீங்களா என்னங்க இன்னைக்கு ஆட்டோவில் உங்களைக் கடத்த போறேன்னு கத்தப் போறீங்களா..", இவன் பயந்த மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு பேச அவள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே உள்ளே ஏறி அமர்ந்தாள்.

" என்னங்க நேத்து தான் ஏதோ தெரியாம பேசிட்டேன் அதுக்கு ஏன் இன்னும் அதை ஞாபகம் வச்சுக்கிட்டு என்னக் கிண்டல் பண்றீங்க" என்று அவளும் முகத்தைப் பாவமாக வைத்துக்கொள்ள..

"அதெல்லாம் இல்லைங்க ஒரு சேப்டிக்குத் தான் அப்படிச் சொன்னேன். எனி வே ஐ அம் ரகு, இங்க இந்தியன் பேங்க் ல அசிஸ்டன்ட் மேனேஜரா ஒர்க் பண்றேன்."

"ஓ.. நைஸ்.... என் பெயர் பார்வதி, ஐடி கம்பெனில வொர்க் பண்றேன்'' இருவரும் முதல் அறிமுகத்திலேயே தங்கள் இருவருடைய காதலைக் கண்களாலேயே பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் ஏதும் பேசிக் கொள்ளாமலே அவர்களது ஆட்டோ பயணம் தொடங்கியது.

இறங்க வேண்டிய இடம் வந்ததும் இருவரும் சவாரிக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு தங்களுடைய வீட்டிற்குச் சென்றார்கள். அன்றுதான் இவர்கள் இருவரும் கவனித்தார்கள் ஒருவருடைய மாடியிலிருந்து பார்த்தால் மற்றவருடைய மாடி நன்றாகவே தெரிந்தது.

அன்று முதல் இவர்கள் இருவரும் மாடிக்கு மாடி பார்த்துக்கொண்டு சைகையாலே பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்களைப் பாவம் ஊமை என்று எண்ணுமளவுக்குப் பேசத் தொடங்கினார்கள்.

நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறத் தொடங்கியது அப்போதுதான் இருவருக்கும் அவர்களுடைய பூர்வீகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள, இருவருமே அனாதை ஆசிரமத்தில் அனாதைகளாக வளர்ந்து படிப்பில் நல்ல தேர்ச்சி பெற்று, இன்று நல்ல வேலையிலும் இருப்பதைத் தெரிந்து கொண்டார்கள்.

ஜாதியும், ஜாதகமும், மதமும் ,உறவும், வழக்கு முறையும் எதுவுமே இவர்களுடைய திருமணத்திற்குத் தடையாக இருக்கவில்லை.

இவர்களது திருமணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அமைதியாக நடந்து முடிந்தது. நண்பர்களுடன் விருந்து என்ற பெயரில் வீண் செலவு ஏதும் செய்யாமல், அந்தச் சுற்று வட்டாரத்திலேயே ஒரு அனாதை ஆசிரமத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களது திருமண நாளன்று மூன்று வேளை உணவுகளும் அந்த அனாதைச் சிறுவர்களுடன் பகிர்த்து கொண்டு அன்றைய நாள் முழுவதும் அவர்களுடன் ஆனந்தமாகக் கொண்டாடினார்கள்.

இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் முன் திருமணமான மறுநாளே தேனிலவிற்குச் செல்லத் திட்டமிட்டார்கள், இருவரும் ஒவ்வொரு இடமாக மாறிமாறி யோசித்துக் கொண்டே இருக்கக் கடைசியாக இருவரும் ஒரே நேரத்தில் ஒரு இடத்தைக் கூறினார்கள்.

அது" செரபுஞ்சி ..!" (சிரபுஞ்சி) எந்த மழை முதல் முதலாக நம்மைச் சந்தித்த வைத்ததோ, எந்த மழை நம் காதலுக்கு அஸ்திவாரம் போட்டதோ, அந்த மழை நிரம்பி இருக்கும் ஊருக்கே தேனிலவை கொண்டாடச் சென்றார்கள்.

ஜீல்லென மழையின் சாரலில் மண்வாசனையிலும், இயற்கையின் அழகிலும் அமைதியாகத் தேனிலவை இன்பமாகக் கொண்டாடி விட்டுச் சென்னை திரும்புகையில் அவர்களுக்கான மகிழ்ச்சியும் அதிர்ச்சி கலந்த செய்தி ஒன்றும் காத்திருந்தது.

ஊருக்குத் திரும்பியதும் ராகுக்குப் பதவி உயர்வுடன் வேறு ஊருக்கு மாற்றல் ஆகி வங்கியில் இருந்து கடிதம் வந்திருந்தது.

பார்வதிக்குச் சென்னையில் வேலை ஆனால் ரகுக்கோ மதுரைக்கு மாற்றலாகி இருந்தது இந்த விஷயத்தில் என்ன பண்ணுவது என்று ரகு யோசித்துக் கொண்டிருக்க, சிறிதும் யோசிக்காமல் பார்வதி முடிவெடுத்தாள்.

மறுநாளே தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு இல்லற வாழ்க்கையில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க ஆரம்பித்தாள்.

இருவரும் மதுரைக்குச் சென்று, இவர்களது இல்லற வாழ்க்கையைச் சந்தோஷமாக ஆரம்பிக்க இரண்டு மாசத்திலேயே இவர்களது காதலுக்குச் சாட்சியாகப் பார்வதி கருவுற்று இருந்தாள்.

அவர்களது சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது. ரகு பல மணி நேரம் பார்வதி உடனே தன்னுடைய நேரத்தைச் செலவிட்டான். தன்னுடைய மனைவிக்குப் பிடித்தது எல்லாம் வாங்கிக் கொடுத்தான், வீட்டில் அவளை ஒரு வேலையும் செய்ய விடாமல் அவனே பார்த்துக் கொண்டான்.

எட்டாம் மாசம் தொடங்கும்போது பார்வதிக்கு பிரசவ வலி வந்து விட்டது அன்று பார்த்து மழை பலமாகப் பெய்து கொண்டு இருந்ததால் ரகுக்கு வங்கியும் விடுமுறையில் இருந்தது ஆனால், அன்றைய பொழுது உடல் நலம் இல்லாமல் இருந்தான். அன்று பார்த்து வெளியே எந்தப் போக்குவரத்தும் இல்லாமல் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததால் தன்னுடைய சொந்தக் காரை எடுத்துக்கொண்டு ரகு, பார்வதியை அழைத்துக்கொண்டு மருத்துவமனையை நோக்கிச் சென்றான்.

ஆனால் ஒரு பள்ளத்தில் கார் சிக்கிக்கொள்ள அதற்குமேல் நகர முடியாமல் போகவே, வலியுடன் தவிர்த்த தன் மனைவியைத் தன்னுடைய கைகளாலே தூக்கிக்கொண்டு அந்த மழையிலும் வெள்ளத்திலும் நடக்க முடியாமல் நடந்து மருத்துவமனையைச் சென்று அடைந்தான்.

பார்வதியை ஸ்கெட்சரில் படுக்கவைத்து மருத்துவர்கள் அவளை அவசர சிகிச்சை அறைக்குக் கொண்டு செல்ல, அறையின் கதவு மூடும்வரை அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன். அவள் சிகிச்சை அறைக்குள் நுழைந்ததுமே சடாரென்று கீழே விழுந்தான்.

சுற்றியிருந்த செவிலியர்கள் இவனுக்கு உடனே மருத்துவ உதவியும் செய்தார்கள். ஆனால் ஏற்கனவே உடல் நலக் குறைவாக இருந்ததாலும் மழையில் பலமாக நனைந்துவிட்டதாலும் சிகிச்சைப் பலனின்றி இறந்து விட்டான்.

தன்னுடைய மகனை பிரசவித்து விட்டு வெளியே வந்தவளுக்குத் தன்னுடைய கணவனின் இறப்பு செய்தியே காத்து இருந்தது. மறுபடியும் தான் அனாதையாகி விட்டதாக உணர்ந்து அழத்தொடங்கியதும், தான் இருப்பதாகத் தைரியம் சொல்வது போல் இருந்தது அவளின் குழந்தையின் அழுகுரல்.

அந்தக் குழந்தைக்காகவே இனிமேல் வாழ்வது என்ற குறிக்கோளுடன் வாழ்க்கையைத் தொடங்க ஆரம்பித்தாள். வேலையில் இருக்கும்போதே ரகு இறந்துவிட்டதால், வங்கி நிர்வாகமும் பார்வதிக்கு வேலை தர முன்வந்தார்கள்.

பார்வதியும் தன் கணவன் இறந்து தனக்குக் கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டு திறம்படச் செய்யத் தொடங்கினாள், வாழ்க்கை முழுவதுமே வேலைக்காகவும் தன்னுடைய பிள்ளைக்காக மட்டுமே அர்ப்பணித்து விட்டு. எந்த வித சுகபோகங்களையும் அனுபவிக்காமல் இருந்தவளுக்கு அந்த மழை மீது மற்றுமொரு தீராக்காதல் இருந்தது.

விடாமுயற்சியால் நன்றாக உழைத்து வங்கி சம்பந்தப்பட்ட தேர்வும் எழுதி இன்று மேலாளராக அதே வங்கியில் உள்ளாள், ஆனாலும் அந்த மழை மீது கொண்ட காதல் மட்டும் அவளை விட்டபாடில்லை இன்றும் மழை வந்தாலும் சாரலில் நனைந்து கொண்டு மகிழ்வது அவளுக்கு ஒரு தீராத ஆசை தான்.

ஆனால் அவளுக்கு மட்டுமே தெரியும் மழையில் நனைவதால் தான் வடிக்கும் கண்ணீர் யாருக்கும் தெரியாது என்றும், தன்னையும் தன்னவனையும் சேர்த்து வைத்த இதே மழைதான் என்னவனை என்னிடம் இருந்து பிரித்தும் கொண்டது என்றும்.

இவை எல்லாமே தன் மகனிடம் கூறிக் கொண்டிருக்க, தன் தாயின் கதையைக் கேட்டுக் கொண்டு இருந்தவனின் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது.

தன்னுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டு தாய்க்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்கும் போது ஜீவாவின் கைபேசி அடிக்கத்தொடங்கியது.

"கொஞ்சம் இருங்க மா, மாமா தான் போன் பண்றாரு என்னன்னு கேட்டுட்டு வரேன்..."

" சொல்லுங்க மாமா..."

"மாப்பிள சந்தோஷமான விஷயம், உங்களுக்குப் பையன் பிறந்து இருக்கிறான்"

" அப்படிங்களா ரொம்பச் சந்தோஷம் மாமா.. "

"அம்மா கிட்ட சொல்லிட்டு உடனே அவங்களையும் கூட்டிட்டு வாங்க"

"இதோ இப்பவே அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்லிட்டு நாளைக்கு நாங்க ரெண்டு பேரும் கிளம்பி வரோம் மாமா" என்று கூறிவிட்டு கைபேசியுடன் தன் தாயின் அருகில் ஓடி வந்தவன்.

" அம்மா எனக்குப் பையன் பிறந்திருக்கிறான் மா, உங்களுக்குப் பேரன் பொறந்துட்டான். அம்மா, அப்பாவே இப்ப நம்ம வீட்டுக்கு திரும்பி வந்த மாதிரி எனக்கு இருக்கும் மா. அப்பாவ நாம இழக்கல, அவர் இங்கே தான் இருக்கிறார். இப்போ உன்னுடைய பேரன் உருவத்திலேயே இங்க வந்திருக்கார். அம்மா இனிமேல் நீயும் அவன் கூடச் சேர்ந்து மழையில தாராளமா விளையாடலாம். நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்" என்று கூறியவாறு தாயின் தோளின் மீது கைவைக்க.

அவளோ... சடாரென்று உயிரற்ற உடலாய் மேசையின் மீது விழுந்தாள்.

அனாதையாக நகர்ந்த பொழுதுகள் ஏராளம்...

ஆண்டவனின் வரப்பிரசாதமாக ஆடவனின் அன்பு கிடைத்தது, மழை நாளொன்றில்....

இடையூறுகள் இருந்தும் நீயே என் இணையாகினாய்....

ஈரைந்து மாதங்கள் உன் உயிர் சுமக்கும் வரமொன்று நீ தந்தாய்...

உயிரோடு கலந்த நம் சேய் மண்ணில் உதிக்க உன்னுயிர் கவ்வி சென்றான் எமன்.

ஊட்டி வளர்த்தேன் நீ இன்றியும் உன் நினைவுகளை....

எட்டுக்கோடு எட்டு பதினெட்டு வயதாகிட...

ஏட்டில் பதித்த நம் காதல் இன்றுரைத்தேன் அவனிடம்...

ஐவரின் ஆசையில் அவன் காதல் திருமணம்...

ஒரு உயிர் இரு உயிராகிய தருணம் அவன் உதிரம் கலந்த உயிரை அவள் சுமக்க...

ஓர் இரவில் அவன் சேய் கையில் வர தன்னை சேயன சுமந்தவளை இழந்தான் ஆடவன்.....

------- சுபம் -------

நன்றி.
 
  • Like
Reactions: Thiyashi