• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 07

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
ஆரவ் செய்ய போகும் விபரீதத்தை உணர்ந்தும், அவனிடமிருந்து தப்பிக்க முடியாமல் விழிகள் மூடி அவள் நின்றிருக்க, அவனோ அவளை நோகடிக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் மட்டுமே அவளை நெருங்கி வந்தவனுக்கு, அவளை முத்தமிடும் எண்ணம் சிறிதும் இல்லை, அவளை பயமுறுத்த வேண்டும், மனதால் அவளை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்...

அவளது பயந்த முகத்தை பார்த்தபடி இதழில் குரூர புன்னகையில் அவளை நெருங்கி வந்தவனின் விழிகள், அவளது இதழ்களில் படிந்தது, அவள் வசதியில் ஏழையாக இருக்கலாம், ஆனால் அழகில் பணக்காரி அல்லவா!! அவளை நெருங்கி நின்றவனின் மனம் அவள் அழகில் சற்று தடுமாறி தான் போனது, அவளது செவ்விதழ்கள் அவனை ஈர்த்திழுக்க, தன்னை மறந்து அவள் இதழ்களை நெருங்க போனவன், அவளது கண்ணீர் துளி தன் மணிகட்டில் படவும் தான் தன்னிலை மீண்டான்,...

தன் மனம் சிலநொடிகள் அலைப்பாய்ந்ததை எண்ணி அவனுக்கோ அதிர்ச்சி, அவனுக்கு பெண்கள் சவகாசம் இருக்கவில்லை, எந்த பெண்ணின்மீதும் இதுவரை ஆசையோ காதலோ ஈர்ப்போ முளைத்தில்லை, நித்திலாவை விட அழகான பெண்கள் எத்தனையோ பேரை அவன் கடந்து வந்திருக்கிறான், படிக்கும் காலத்தில் லவ் ப்ரொபோசலும் வந்திருக்கிறது, சிலப் பெண்கள் அவனது ஆளுமையையும் மேனரிசத்தையும் கண்டு அவனை மயக்கும் நோக்கில், நட்பு என்கிற பெயரில் கட்டியணைத்தும் இருக்கிறார்கள், அப்போதெல்லாம் ஏற்படாதது இப்போது இவளது நெருக்கத்தில் ஈர்ப்பது அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அதுவும் இவளை அவன் தன் பரம எதிரியை போலல்லவா பார்க்கிறான், எதிரியின் மீது இப்படிப்பட்ட எண்ணம் வந்தது அவனுக்கு அதிர்ச்சியை தாண்டிய கோபம்,...

கன்னத்தில் கண்ணீர் கோடோடு மெதுவாய் உடல் குலுங்க, விழிகள் மூடி நின்றிருந்தவளை கண்டு இப்போது ஆத்திரம் உண்டாக,... "வெளியே போடி" என்றான் உச்சஸ்தானியில் நின்று கத்தியபடி...

அவன் சத்தத்தில் விலுக்கென்று விழிகளை திறந்தவளுக்கு, அவன் தன்னை விட்டு தள்ளி நின்றது மனதில் நிம்மதியை கொடுக்க,.. அவனது சிவந்த விழிகளை கண்டு பயந்தவளாய் அடுத்த கணம் வெளியே ஓடி இருந்தாள், ஆரவ்விற்க்கோ அவ்வளவு ஆத்திரம் தன் மீதே... தனது தொடையில் குத்திக் கொண்டவனுக்கு, தன் மீதே அருவெறுப்பு... 'போயும் போயும் அவ கிட்ட மயங்குறியேடா, ச்சீ' என்று தன்னை தானே கழுவி ஊற்றிக் கொண்டான்,...

அவன் அறையிலிருந்து வெளியே ஓடி வந்த நித்திலாவிற்கு தான் எதற்காக இங்கு வந்தோம் என்று அழுகையாய் வந்தது, ஆண்களுடன் நட்பாக கூட பழகிடாதவளுக்கு ஆரவ்வின் அந்த நெருக்கம் பதட்டத்தையும் நடுக்கத்தையும் கொடுத்தது,.. தான் இங்கிருந்து முதலில் கிளம்ப வேண்டும் எனும் முடிவில் ஹாலிற்க்கு வந்து சேர்ந்தவள், வீட்டின் வாசலை நோக்கி நடந்த நேரம் தான் சித்ராவதியும் வந்து கொண்டிருந்தார், அவரை கவனித்தவள், அவசர அவசரமாக முகத்தை துடைத்து தன்னை இயல்பாக்கி கொண்டு நின்றிருக்க, சித்ராவதியோ,... "லாஸ்ட் மினிட்ல ஒரு வொர்க் வந்துடுச்சு நித்திலா, ரொம்ப நேரம் வெயிட் பண்ணுரியா" என்று கரிசனமாக வினவ,... "அதெல்லாம் இல்ல மேடம்" என்று சொன்னவள், கஷ்டப்பட்டு சிரித்தும் வைத்தாள்,...

"சரி வா,.. நான் பிளவுஸ் எடுத்து கொடுக்கிறேன்" என்றவாறு அவளை அவர் அழைத்து சென்றிட, அவளும் ஃபிட் ஆன் செய்து பார்த்து விட்டு, முடிந்த மட்டும் சீக்கிரமே அங்கிருந்து கிளம்பி இருந்தாள், தன் வீட்டிற்கு வந்தவளுக்கு நிலையாக இருக்க முடியவில்லை, ஆரவ்விடமிருந்து அவள் இப்படியொரு செயலை எதிர்பார்க்கவே இல்லை, தன் மீது அவனுக்கு எதற்காக இவ்வளவு வெறுப்பு என்று அழுகையாக வந்தது,..

'இனிமே அந்த வீட்டின் பக்கம் போகக்கூடாது' என்று முடிவெடுத்தவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள் வாழ்நாள் முழுவதும் அந்த வீட்டில் தான் இருக்க போகிறோம் என்பதை, அவள் தலையெழுத்தில் அந்த வீட்டில் தான் அவள் வாழ வேண்டும் என்று எழுதி இருக்கு என்ற நிதர்சனம் புரியும் போது, அவள் என்ன நிலைக்கு ஆளாகுவாளோ?????

நித்திலாவின் திருமண நாளும் நெருங்கி கொண்டிருந்தது, வேலைகள் தடபுடலாக நடந்தாலும், நித்திலாவிற்கு தான் நாள் நெருங்க நெருங்க மனதில் ஒருவித பதட்டம், இரவில் தூக்கமும் தொலைந்து போனது, சிரமப்பட்டு தூங்கினால் கூற கெட்ட கனவு வந்து அவளை எழுப்பிவிட்டு விடும், தலையை தாங்கியபடி தனியாக அமர்ந்திருப்பவளுக்கு சமீப நாட்களாக தனக்கு ஏற்படும் இந்த பதட்டம் ஏன் என்று தான் புரியவில்லை,... "தூங்குறியா இல்லையா நித்திலா, ஏன் கண்ணெல்லாம் இப்படி உள்ளே போய் இருக்கு" என்று சித்ராவதி கூட கடிந்து கொண்டார், அந்தளவிற்கு பார்ப்பவர்களின் விழிகளுக்கும் தெரிந்து விடுகின்றது அவள் தூங்காமல் இருக்கும் நிலை,...

"என்னனு தெரியல மேடம், நைட் தூக்கமே வர மாட்டேங்கிது" என்று சித்ராவதியிடமும் புலம்பலாக கூறினாள்,..

அவரும்,... "கல்யாண டென்ஷனால இருக்கலாம், நீ மைண்டை ஃப்ரீயா வச்சுக்க ட்ரை பண்ணு, உன் மாமனார் மாமியார் எப்படிப்பட்ட குணம்னு உனக்கே தெரியும், அதோட கிஷோர் கிட்டயும் நீ பேசுற தானே, அப்புறம் என்ன டென்ஷனோ தெரியல உனக்கு" என்று அவரும் புலம்பி கொண்டார்....

கிஷோரும் நித்திலாவும் திருமணத்திற்கு முன்பாகவே போனில் பேச ஆரம்பித்திருப்பார்கள் என்ற யூகத்தில் அவர் கூற, நித்திலாவோ திருத்திருவென்று விழித்தவள்,... 'இதுவரை அவர் எனக்கு ஃபோனே பண்ணலையே, அப்புறம் எப்படி நாங்க பேசிக்கிறது, இதை பத்தி மேடம் கிட்ட சொல்லலாமா' என்று அவள் யோசித்த நேரம், சித்ராவிற்க்கு போன் வந்து, அவர் அங்கிருந்து நகர்ந்து விட, அவளும் அதனை பெரிதாக கருதாமல் தன் வேலையை கவனிக்க சென்று விட்டாள்,...

அப்படி இப்படியென்று திருமண நாளும் வந்து சேர்ந்தது, மிக பிரமாண்டமான கல்யாண மண்டபத்தில் தான் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, சித்ராவதி மிகவும் பரபரப்புடன் காணப்பட்டார், வரும் விருந்தாளிகளை மிகவும் பணிவோடு வரவேற்றுக் கொண்டிருந்தார், கிஷோரின் தாய் தந்தையும் அதே வேலையை தான் செய்து கொண்டிருந்தனர், அவர்களின் முகத்திலும் பூரிப்பு, தங்கள் மூத்த மகனின் திருமணம் அல்லவா!! பல வருடங்களுக்கு பிறகு அவர்கள் குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம், கிஷோரின் தம்பியும் ஓடியோடி வேலை செய்து கொண்டிருந்தான், மொத்தத்தில் இந்த திருமணத்தால் அவர்களின் மனதில் ஏக போக சந்தோசம்,...

மணமகளின் அறையில் பியூட்டிசியன்களின் கை வண்ணத்தில் மெழுகு பொம்மை போல் தயாராகி இருந்தாள் நித்திலா, அரக்கு நிற பட்டுப்புடவை அவள் நிறத்திற்கு மிகவும் எடுப்பாய் பொருந்தி இருந்தது, தங்க நகைகள் உடலை அலங்கரிக்க, பார்க்க தேவலோகத்து மங்கையாய் தான் காட்சியளித்தாள், தனது முகத்தினை கண்ணாடியில் பார்த்தவளுக்கு தன் அழகை கண்டு கர்வம் கொள்ள இயலவில்லை, அவளுக்கு மேக்கப் அதிகமாக இருப்பது போல் தோன்றியது, "கொஞ்சம் மேக்கப் கம்மி பண்ணுங்களேன்" என்று மேக்கப் செய்யும் பெண்களிடம் கூறினாள்,

அவர்களோ,.. "உங்களுக்கு கம்மியா தான் போட்டிருக்கோம் மேடம், இதுக்கு மேல கம்மி பண்ணா நல்லா இருக்காது" என்று கூறி இருக்க, அதற்கு மேல் அவர்களிடம் எதிர்த்து பேச அவளுக்கு சங்கடம்,...

சித்ராவதி நித்திலாவை காண வந்தார், அவள் அழகை கண்டு பூரித்து போய்விட்டார்,... "பர்ஃபெக்டா இருக்கு, ரொம்ப அழகா பண்ணியிருக்கீங்க" என்று அலங்கரிக்கும் பெண்களை பாராட்டினார்,... நித்திலா தான்,.. "ஓவர் மேக்கப்பா இல்லையா மேடம்" என்று சந்தேகமாக கேட்டாள்..

"நிச்சயமா இல்ல, உனக்கு கம்மியா தான் மேக்கப் போட சொன்னேன், ஏன்னா நீ தான் நேச்சுரல் பியூட்டியாச்சே" என்று அவர் புன்னகைக்க,... "ஆனா மேடம், எனக்கு அதிகமா இருக்க மாதிரி தோணுது" என்றாள் கண்ணாடியை மறுமுறை திரும்பி பார்த்து விட்டு,...

அவள் கரத்தை பற்றிக் கொண்டவரோ,... "நீ மேக்கப் போட்டு பழக்க பட்டதில்லைல, அதனால உனக்கு அப்படி தோணுது நித்திலா, அதிகமா இருந்தா நான் சொல்லாம இருப்பேனா, இப்போ நீ பார்க்கிறதுக்கு எப்படி இருக்க தெரியுமா, வானத்துலருந்து இறங்கி வந்த தேவலோக மங்கை மாதிரி இருக்க," என்று அவள் கன்னத்தை வருடி கூற,... இதழ்களை விரித்து புன்னகைத்தவளோ,... "தேங்க் யூ மேடம்" என்றாள்,...

"அதெல்லாம் இருக்கட்டும், நீ இரு, நான் வெளியே இருக்கேன், உன்னை பார்த்துட்டு போக தான் வந்தேன்" என்றவரோ அடுத்த கணம் வெளியேறி இருக்க, நித்திலாவும் கண்ணாடியின் முன்பிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள், பியூட்டிசிய பெண்கள் அவளது பூவலங்காரத்தை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து விட்டனர்,...

சித்ராவதியின் அழைப்பிற்கு மரியாதை கொடுத்து, அவர் அழைத்த அனைவரும் திருமணத்திற்கு வந்திருந்தனர், அனைவரும் மிகவும் பணம் படைத்தவர்கள் தான் சித்ராவதியை போலவே, சித்ரா அழைத்து வராத ஒருவன் என்றால் அது ஆரவ் விஜயன் மட்டுமே,... "ஏன்டா கல்யாணத்துக்கு வர மாட்டேங்கிற, உனக்கு என்ன தான் பிரட்சனை" என்று சித்ராவும் கடிந்து கொள்ள,... "ப்ளீஸ் மாம், தேவை இல்லாத வாக்குவாதங்கள் வேண்டாம், எனக்கு வொர்க் இருக்கு, சோ என்னை கம்பல் பண்ணாதீங்க" என்று கூறி சென்றவனை சலிப்பாக பார்த்து தலையசைத்துக் கொண்டவர்,.. 'எதுவோ செய்' என்று விட்டுவிட்டார், அவரது எண்ணமெல்லாம் இத்திருமணத்தை பற்றி தான் இருந்தது, திருமணம் நல்லபடியாக முடிந்தால் தான் அவர் நிம்மதியாக அடுத்த கட்ட வேலையை பார்க்க முடியும், எனவே அவர் மகன் வராததை எண்ணியெல்லாம் கவலை கொள்ளவில்லை,...

முகூர்த்த நேரம் நெருங்க,... புரோகிதர் மாப்பிள்ளையை அழைத்து வரச் சொன்னார்,... "அண்ணனை போய் அழைச்சிட்டு வா" என்று கிஷோரின் தந்தை தன் இளைய மகனிடம் கூற,.. அவனும் உல்லாசமாக மணமகனின் அறையை நோக்கி ஓடினான், கல்லூரி முதலாமாண்டு படித்தாலும் இன்னமும் சிறு பிள்ளை தனம் மாறாமல் தன் தமையனை அழைக்க ஓடினான் அந்த இளைஞன்,...

அனைவரும் மணமகனை எதிர்பாரத்து காத்திருக்க, வந்ததென்னவோ மணமகனின் தம்பி மட்டுமே, போனவன் அடுத்த சில நிமிடங்களில் தனியாளாக வந்து நின்றான்,... "என்னப்பா அண்ணன் எங்கே" அவன் தாய் வினவ,.. "அ.. அம்மா,.. அண்ணா ரூம்ல இல்ல" அவன் சொன்னதை கேட்டு, புருவத்தை நெருக்கியவரோ,... "என்னடா சொல்ற" என்றார் புரியாமல்,...

"ரூம்ல அண்ணன் இல்ல, ரூமே காலியா இருக்கு" இளையவன் கூற,... "என்ன சொல்றான் இவன்" என்று கேட்ட அவன் தந்தையோ மணமகனின் அறையை நோக்கி நடந்தார், அவரை தொடர்ந்து அவரது மனைவியும் மகனும் செல்ல, ஒருவர் பின் ஒருவராக மணமகனின் அறையை நோக்கி செல்பவர்களை புருவ முடிச்சுடன் பார்த்த சித்ராவதியின் கால்களும் அடுத்த கணம் மணமகனின் அறையை நோக்கி தான் சென்றது,...
 
  • Wow
Reactions: shasri

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
466
253
63
Tamilnadu
kishore ooditana ada paavi. aarav nee panna ninacha kaydu kayta vishyathuku nithi tha kova padanum why you 😡
 
  • Like
Reactions: Zeeraf