• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண் மூடினேன் மெய் தீண்டினாய் 16

Nirosha Karthick

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 24, 2024
27
0
1
Coimbatore

அத்தியாயம் 16​


இரவு சடங்குக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று புலம்பி கொண்டிருந்த மனைவிக்கு உதவி செய்வதற்காக, விக்ரமை தனியாக அழைத்துக் கொண்டு வந்த விஷ்வா,"உனக்கு எந்த பூ பிடிக்கும் விக்ரம்?"என்று கேட்க,எதற்காக கேட்கிறான் என்று புரியாதவனா..?


"அட போங்க மாமா..ஷாலினிய பொண்டாட்டியா பார்க்கிறது பத்தி யோசிச்சாலே கஷ்டமா இருக்கு. இதுல நீங்க… என்ன பூ பிடிக்கும்னு கேட்டு கடுப்பேத்திக்கிட்டு இருக்கீங்க"என்று எரிச்சல் படவும்,


"என்னடா..பொண்ண கடத்திட்டு வந்து.. கல்யாணமும் பண்ணிட்டு இப்படி பேசிட்டு இருக்க? "என்று கேலி செய்ய,


"யார்… நான் கடத்திட்டு வந்தேனா..அவளா விரும்பி வந்தா.. கூட்டிட்டு வந்தேன். அவ்வளவுதான்" என்றான் கோபம் சற்றும் குறையாமல்..!!


"எது எப்படியோ..நீ சம்மதிச்சு தானே கூட்டிட்டு வந்த..! கல்யாணமும் பண்ணிக்கிட்ட..!! அப்புறம் செய்ய வேண்டிய சடங்கை செய்யாமல் தள்ளி போட முடியுமா? "என்றவன்,


"முதல்ல நீ..என்ன பூ பிடிக்கும்னு சொல்லு..!!அதுக்கு தகுந்த மாதிரி பூ வாங்கி, ரூம அலங்காரம் பண்ணனும்" என்றான் பிடிவாதமாய்..!!


"வேண்டாம் மாமா. என்னோட நிலைமையை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க"


"உனக்கு வேணா.. இது பிடிக்காத கல்யாணமா இருக்கலாம் விக்ரம். உன்னோட மனைவிக்கு அப்படி இல்லையே..? உன்ன விரும்பி கல்யாணம் பண்ணி இருக்கா. அவளுக்குள்ளும் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும்ல.


"அதுலயும் பல வருஷம் காதல் வேற..! உன்னை மனசுல வச்சுக்கிட்டு.. பார்க்க வந்த மாப்பிள்ளையை எல்லாம் வேண்டாம்னு சொல்லியிருக்கா..!! அப்படிப்பட்ட பொண்ணுக்கு நீ நியாயம் செய்ய வேண்டாமா?"


"படுக்கையில நியாயம் செஞ்சா போதுமா மாமா?"


"என்னடா.. என்கிட்டேவே இவ்வளவு பச்சையா கேட்கிற? நான் உன்னோட அக்கா புருஷன்"


"முதல்ல நீங்க எனக்கு பிரண்டு மாமா. என்னை நீங்க புரிஞ்சுக்குவீங்கன்னு தான் சொல்றேன். பரஸ்பரம் சின்னதா ஒரு ஈர்ப்பு கூட இல்லாம, எப்படி குடும்பம் நடத்த முடியும்.


"ஷாலினியோட விருப்பம் தெரிஞ்சு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் அந்த விருப்பத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்டமா.. தாம்பத்திய வாழ்க்கைக்குள்ள என்னால நுழைய முடியாது. எனக்கும் கொஞ்சம் இதையெல்லாம் ஏத்துக்க டைம் வேணும்.


"சரி. ரொம்ப அழுகாத..! நான் எந்த ஏற்பாடும் செய்யல. ஆனா ஷாலினி உன் கூட.. உன்னோட ரூம்ல தான் இருக்கணும். ஆளுக்கு ஒரு ரூம்ல இருந்தா..உங்களுக்குள்ள நெருக்கம் ஏற்பட வாய்ப்பே இல்ல.


"அதுலயும் உன்னோட போக்கு சரியேயில்ல.. விட்டா அப்படியே காலம் முழுக்க தனியாவே இருக்கிற ஐடியாவில் இருக்கவன் போல நீ இருக்க..! அதனால ஷாலினிய உன்னோட ரூம்லயே தங்க வச்சுக்கோ.


"நாங்க உன்னோட ரூமை அடிக்கடி வந்து எட்டிப் பார்க்க முடியாதது தான். உன்னோட மனசாட்சிக்கு நீ என்ன பண்றேன்னு தெரியும். அந்த பொண்ணுக்கு நீ வாழ்க்கை கொடுக்கறதா நினைச்சு.. கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு, அவளோட வாழ்க்கைய அழிச்சிடாத..! அவ்வளவுதான் சொல்வேன் "என்று அவனுக்கு புரியும் படி எடுத்து சொல்லிவிட்டு சென்றுவிட,விக்ரம் யோசனையில் ஆழ்ந்தான்.


மாடித்தோட்டம் பக்கம் நின்று நிலவை ஆராய்ச்சி செய்து கொண்டு அவன் இருக்க,அவன் பேசியதை நங்கையிடம் சொன்ன விஷ்வா," அறையில் எந்த ஏற்பாடும் செய்ய வேண்டாம் "என்றும் சொல்ல,


நங்கை மனம் கேட்காமல், ஷாலினிக்கு அலங்காரம் மட்டும் செய்துவிட்டு," பார்த்து நடந்துக்கோ "என்று அவனின் அறையில் விட்டு விட்டு,


விஷ்வாவிடம் கண் காட்ட" நீ உள்ள போ விக்ரம்"என்ற விஷ்வாவிடம்,


"நான் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு வரேன் மாமா. நீங்க போங்க "எனவும் விஷ்வா முறைத்தான்.


"நீ சின்னப் பையன் இல்ல விக்ரம் "என்று முறைப்புடன் சொல்லிவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு கீழே சென்றுவிட, சிறிது நேரம் நிலவையே ஆராய்ச்சி செய்தவன்,ஷாலினி தனியாக இருப்பதை உணர்ந்து அறைக்குள் வர, அவள் மடியில் முகம் புதைத்து அமர்ந்திருக்க, அவள் அமர்ந்திருந்த விதமே அவனை கவலை கொள்ள செய்தது.


"தூங்க வேண்டியது தானே ஷாலினி"என்று சொன்னபடி அறைக்குள் வர, கட்டிலில் அமர்ந்தவள் அவசரமாக எழுந்து கொண்டு நிற்க,


"எதுக்கு இவ்வளவு பதட்டம். ரிலாக்ஸா இரு "என்றவன்,


"உனக்கு சேலையில தூங்கறதுக்கு கஷ்டமா இருந்தா, வேற உனக்கு கம்ஃபர்ட்டபிளான டிரஸ் போட்டுட்டு வந்து தூங்கு. நானும் தூங்கறேன் "என்றவன் படுத்துக்கொள்ள, ஷாலினி என்ன உணர்வில் பார்க்கிறோம் என்று தெரியாமலேயே சிறிது நேரம் அவனை நின்று பார்த்தவள்,


அவன் திரும்பி,' என்ன' என்று கேட்கும் முன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து உடைமாற்றி விட்டு வந்தவள் படுக்கையில் படுத்துக்கொண்டாள்.


அருகில் ஒரு பெண் படுத்திருக்க, அவனுக்கும் இயல்பாக தூக்கம் வரவில்லை


அவனுடைய அக்கா கணவன் சொன்னதற்காகத்தான், தன்னை இந்த அறைக்குள் விட்டிருக்கிறான் என்று புரிந்தாலும், அவனிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.


முதல் நாளிலேயே உன்னுடன் குடும்பம் நடத்த முடியுமா என்று மனசாட்சி கேட்ட கேள்விக்கு,


'முதல்ல மாதிரி.. என் கூட நல்லபடியா பேசினாலே போதும்.யாரோ போல.. தெரியாத பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி ஒதுங்கி ஒதுங்கி போறது தான், எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.


'இதை எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல. ஏதாவது நான் சொல்ல போய்.. இவர் தப்பா எடுத்துக்கிட்டா… முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி ஆகிடும் 'என்று தன் மனசாட்சியுடன் பேசிக்கொண்டவள்,அவன் தூங்குவான் என்று காத்திருக்க ,அவனும் புரண்டு புரண்டு படுக்கவும், அவனை எந்த தொந்தரவும் இல்லாமல் ரசிக்க காத்திருந்தவள், அது முடியாது என்று தெரிந்து போக, சோர்வுடன் சுவற்றைப் பார்த்து படுத்துக் கொண்டாள்.


அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை உள்ளுணர்வில் அவனும் அறிந்திருந்தான்.


அவள் சுவற்றுப் பக்கம் திரும்பி படுக்கவும் தான், அவனுக்குமே நிம்மதியாக இருந்தது.


பருவ வயதில் அவனுக்கும் பெண்களின் மேல் ஈர்ப்பு வந்திருக்கிறது தான்.ஆனால் தன்னோடு பழகிய ஷாலினியை.. அவள் அழகாக இருக்கிறாள் என்று கூட பார்த்தது கூட கிடையாது.


பார்வையில் அவ்வளவு கண்ணியம் இருக்கும். அந்த கண்ணியத்தை உடனே உடைப்பதற்கு அவனால் முடியவில்லை.


அதே சமயத்தில்.. இயல்பாக அவளை தோழியாக நினைத்து உரையாடவும் முடியவில்லை.


தன்னுடைய நிலைமை இப்படியா ஆக வேண்டும் என்று நொந்து கொண்டவன், தூங்கும் பொழுது 12 மணியை கடந்து இருக்க, ஒரு மணி போல கண் விழித்தவள், அவன் தூங்கி விட்டான் என்பதை அவனது சீரான மூச்சை வைத்து தெரிந்து கொண்டு, அவன் பக்கம் திரும்பி படுத்தவள், வெகு நேரம் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.


கோவிலில் மொட்டை போட்டதால்..முடி லேசாக வளர்ந்திருக்க விடலைப் பையன் போல இருந்தவனை பார்க்க பார்க்க அவளுக்கு சலிக்கவில்லை.


'எனக்காக எதையுமே செய்யாமல்.. எப்படி எனக்குள்ள வந்தீங்க மாமா. நீங்க இல்லாம என்னால வாழவே முடியாதுன்னு தோனற அளவுக்கு, உங்கள ரொம்ப பிடிக்கும் மாமா.


'நீங்க என்ன விட்டு விலகி இருப்பது கஷ்டமா தான் இருக்கு.ஆனா என்னோட அளவுக்கு இல்லை என்றாலும், கொஞ்சமாவது நீங்க என்னை விரும்பனும்.அதுதான் என்னோட காதலுக்கு கிடைக்கப் போற முதல் வெற்றி.


'என் பக்கம் வராம நீங்க ஒதுங்கி போறது.. முதல்ல கோவமா இருந்தாலும், நீங்க இப்படி இருக்கிறது தான் சரின்னு எனக்கும் தோணுது. கல்யாணமான ஒரே காரணத்துக்காக என்னை தொட்டீங்கன்னா.. நான் இல்லாம இன்னொரு பொண்ணு இருந்தாலும் அப்படித்தானே குடும்பம் நடத்தி இருப்பீங்கன்னு, உங்க மேல கோபம் வர வாய்ப்பு இருக்கு.நல்ல வேலை தப்பிச்சிட்டீங்க மாமா 'என்று அவனோடு மனதோடு உரையாடியவள், அன்றைய நாள் கொடுத்த அலைச்சலையும்.. மனவேதனையும் தாண்டி அவனை அருகில் பார்த்து ரசிக்க முடிந்த தருணத்தை.. மனதில் ரசித்தபடி மெல்ல கண்ணயர்ந்தாள்.