• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண் மூடினேன் மெய் தீண்டினாய் 26

Nirosha Karthick

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 24, 2024
27
0
1
Coimbatore
கபிலன் யாரிடமும் எதுவும் பேசவில்லை.மிகவும் அமைதியாகவே இருந்தார்.



ஷாலினியும் அப்பாவின் கோபத்தை உணர்ந்தபடி, அவரது மனதை சமாதானப்படுத்துவதற்காக,அவருக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்ததால், சாந்தி மகளிடம் பேச நினைத்தாலும் கணவரின் பார்வைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்க,பிரியா மட்டும்தான் ஷாலினிக்கு ஆறுதலாக இருந்தாள்.



இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த கபிலனை தூண்டி விடுவதற்காகவே, நலம் விசாரிப்பதற்காக வேங்கடபதி தனியாக வர, கபிலன் அமைதியாக கட்டிலில் படுத்திருக்கவும்,அங்கே இருந்த ஷாலினியிடம்," கொஞ்சம் வெளியில போம்மா.. நாங்க தொழில் விஷயமா பேசணும் "என்று சொல்ல,தொழில் விஷயம் எப்பொழுதும் தனியாகத்தான் பேசுவார்கள் என்பதால் சந்தேகப்படாமல் வெளியே சென்று விட்டாள்.



கதவை அடைத்த வேங்கடபதி,"நான் சொன்னது ஞாபகம் இருக்குல்ல "எனவும்,



"எதற்காக இவ்வளவு வன்மம் மச்சான்?" என்றார் மிகவும் வேதனையோடு…!!



"என்னை ஊர் முன்னாடி அசிங்கப்படுத்தி.. என்னோட சொத்தை என்கிட்டயே வித்துட்டு போனவன, இவ்வளவு காலமா நான் சும்மா விட்டதே பெருசு..!அவன் பண்ணது பத்தாதுன்னு.. நம்ம வீட்டு பொண்ண.. நைட்டோட நைட்டா தூக்கிட்டு வேற போயிருக்கான்.. அவனை எப்படி விட சொல்ற? "என்று கேட்க,



"ஷாலினி என்னோட பொண்ணு மச்சான்.தப்பே பண்ணியிருந்தாலும் என்னால தண்டிக்க முடியாது. நீ என் பொண்ணுக்கு வாழ்நாள் முழுக்க தண்டனை கொடுக்கணும்னு நினைக்கிறியே.. இது உனக்கே நியாயமா படுதா?"என்று வேதனையோடு கேட்க,



"கொஞ்ச நாள் மட்டும் உன்னோட வீட்டுல வைச்சுக்கலாம். அப்புறம் என் பையனை மாதிரி..நல்ல மாப்பிள்ளையா.. வசதியான இடமா பார்த்து.. உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம் "என்று சொல்ல,அந்த பேச்சே கபிலனக்கு ரசிக்கவில்லை.



தன் மகளின் மனதை அறிந்தவர் அவர்..!



வேங்கடபதிக்காக மட்டுமே விக்ரம் உடனான திருமணத்தை எதிர்த்தார்.



மற்றபடி அவருக்கு விக்ரம் மேல் கோபம் பெரிதாக இல்லையே..!



அதை வேங்கடபதி நன்கு உணர்ந்து கொண்டவராய்," உன்னோட பெரிய பொண்ணு.. என் வீட்டில் தான் வாழ வந்திருக்கா..! இன்னமும் குழந்தை உண்டாகல.. மலடின்னு பட்டம் கட்டி அனுப்பறதுக்கு எனக்கு ரொம்ப நாள் ஆகாது.



"என் பையனுக்கும் இரண்டாவது கல்யாணம் பண்ணி வைச்சிடுவேன். அவனும் என்னோட கைப்பிடியில் தான் இருக்கான். நான் என்ன சொன்னாலும் கேட்பான். அதேபோல உன்னோட தங்கச்சியும் அனுப்பி வச்சிடுவேன்..



"காலம் முழுக்க உன் தங்கச்சியையும், பெரிய பொண்ணையும் வீட்டோட வைச்சு பார்த்துக்கோ..!!உனக்கு உன்னோட ரெண்டாவது பொண்ணோட சந்தோஷம் தானே முக்கியம் "என்றார் நக்கலாக..!



"விக்ரமோட எந்தவிதமான பந்தமும் இருக்கக் கூடாதுன்னு சொல்றியா.. நான் என் சின்ன பொண்ண ஒரேயடியா தலை முழுகிடறேன்..! அதை விட்டுட்டு அவளுக்கு தண்டனை கொடுக்கிற மாதிரி.. வீட்டோட வைச்சுக்க சொல்றது எனக்கு சரியா படல மச்சான். உங்க முடிவ மாத்திக்கோங்க "என்று ஆதங்கமாய் சொன்னாலும் அதில் அவரின் உறுதி தெரிய,



"நான் சொன்னது சொன்னது தான். நீ மட்டும்.. நான் சொன்னதை செய்யல.. உன்னோட விவசாய நிலத்துல இனிமேல் எந்த பயிரும் விளையாது.. தரமட்டமாக்கிட்டு தான் மறு வேலை பார்ப்பேன்.



"வீட்டு பொண்ணோட வாழ்க்கையும் போய்..சொத்தும் போயிட்டா மான மரியாதையோடு..இந்த ஊர்ல நீ வாழ்ந்திட முடியுமா? நீ நல்லா யோசிச்சு பார்.. உன் பொண்ணோட வாழ்க்கையை.. நான் கெடுக்க நினைக்கல.. அவனைவிட இன்னொரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தான் நினைக்கிறேன். புரிஞ்சு நடந்துக்கோ "என்றவர் சென்று விட,ஏற்கனவே தனியாக அழைத்து இப்படித்தான் மிரட்டி இருந்தார்.



அதனால் தான், நான் உயிரோடு இருந்தால்தானே என் பெண்ணையும்..தங்கையையும் வைத்து மிரட்ட முடியும்..! இறந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது தானே என்ற எண்ணத்தில் தான் விஷத்தைக் குடித்திருந்தார்.



அவருக்கு சின்ன மகளின் வாழ்க்கையும் முக்கியமாகப்பட்டது.



இன்று அப்படி செய்ய முடியாத சூழ்நிலையில்.. தன்னுடைய மருமகனை அழைத்து விவரத்தை சொல்ல நினைத்தாலும், அவர் அப்பாவின் பேச்சை தானே கேட்பார் என்று ஏற்கனவே சொத்தை பிரித்த நாளில் நடந்த விஷயத்தை வைத்து புரிந்து கொண்டவர்..சிறிது நாட்களுக்கு ஷாலினியை விக்ரமிடமிருந்து பிரித்து வைத்துவிட்டு, பின்பு மறுபடியும் வேங்கடபதிக்கு தெரியாமல் விக்ரமோடு அனுப்பி வைத்து விடலாம் என்று மனதில் திட்டமிட்டபடி அமர்ந்திருக்க,



சாந்தி கவலையாக உள்ளே வந்தவர்," உங்க தங்கச்சி புருஷனை பார்த்து பயப்பட்டது போதுங்க. நாம பெரிய மாப்பிள்ளை கிட்ட விஷயத்தை சொல்லிடலாம். அவர் பாத்துக்குவார் "எனவும்,



"யாரையும் நம்ப முடியாத சூழ்நிலையில் இருக்கேன் சாந்தி. கொஞ்ச நாளைக்கு ஷாலினி நம்ம கூடவே இருக்கட்டும். "



"ஒரு பொண்ணு வாழ்க்கைக்காக..இன்னொரு பொண்ணு வாழ்க்கையை அழிக்க நினைக்க கூடாதுங்க "என்று தாயாய் அவர் கண்ணீரில் கரைய,



"கொஞ்ச நாளைக்கு தானே.. உன் சின்ன பொண்ணோட புருஷனும்,பொண்டாட்டி மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கான்னு நாமளும் தெரிஞ்சுக்குவோம்" "என்று எளிதாக சொல்லிவிட,வேங்கடபதி மிரட்டிய விஷயத்தை சொல்லியிருந்தால் கூட.. ஷாலினி அதை தன் கணவனிடம் விளக்கி எடுத்துரைத்து.. சிறிது நாட்களுக்கு பிரிந்து இருப்போம் என்று சுமூகமாக பிரச்சனையை முடித்திருப்பாள்.



மாறாக சூழ்நிலையை கையாளத் தெரியாமல்,கபிலன்..நாளை காலையில் விக்ரம் வந்து விடுவான் என்ற நிலையில் மகளை அழைத்தவர்," காலையில விக்ரம் வந்து கூப்பிட்டா தாராளமா போ..நீ போனதுக்கப்புறம் நீ நினைச்சாலும் திரும்ப என்னை பார்க்க முடியாது..ஒரேயடியா போய் சேர்ந்துடுவேன்"என்று மிராட்டவும்,



"அப்பா.. அப்படி எல்லாம் சொல்லாதீங்க..விக்ரம் ரொம்ப நல்லவர்-ப்பா. உங்களுக்கு அவரை சின்ன வயசுல ரொம்ப பிடிக்கும் தானே..கொஞ்சம் எனக்காக மட்டும் இல்ல..அவருக்காகவும் யோசிங்கப்பா. நான் தான் அவரை விரும்பறேன்னு சொன்னேன். நான் தான் அவரை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன்.



"எனக்காக மட்டும் தான், என்னை கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணினார்.நான் அவரை கல்யாணம் பண்ணி ஒரு மாசத்துக்கிட்ட ஆகப்போகுது..ஒரு நாள் கூட நான் கஷ்டப்படற மாதிரி மாமா பேசியதே இல்ல.. என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டார்-ப்பா.



"இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை தான.. நீங்க எனக்கு பார்த்திருப்பீங்க.. உங்க விருப்பம் இல்லாம போயிட்டேன்னு.. ஒரே காரணத்துக்காக என்னை நீங்க எப்படி மிரட்டக்கூடாதுப்பா. நான் அவரோட போகணும்-ப்பா. நீங்க எதுவும் பண்ணிக்க கூடாது "என்று அழுது கொண்டே சொல்ல,



"என்னோட முடிவு இதுதான். நீ நல்லா யோசிச்சு பதில் சொல்லு. நாளைக்கு காலையில நான் உயிரோட இருக்கிறதும்.. சாகிறதும் உன்னோட கைல தான் இருக்கு "என்றுவிட்டு அறைக்குள் சென்று விட்டவர்,மகள் சுயநலமாக மீண்டும் சென்று விடுவாள் என்றும் கூட நினைத்தார்.



ஷாலினி ஆதரவிற்காக அம்மாவையும்,அக்காவையும் பார்க்க சாந்தி," நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை கடைசி வரைக்கும் வாழ முடியாமலே போகும்னு தெரிஞ்சிருந்தா.. நீ போறதுக்கு நான் சமாதித்திருக்கவே மாட்டேன். என் பொண்ணு..என் பொண்ணாவே இருந்திருப்பா.. இப்படி வாழாவெட்டியா பார்க்கிற சூழ்நிலை வந்திருக்காது "என்று சொன்னவருக்கும், ஒரு பக்கம் அழுகை முட்டியது.



பிரியா இங்கே நடப்பதற்கும்.. தன் மாமனாருக்கும் சம்மந்தம் இருக்கிறது என்று புரிந்தாலும், விரிவாக தெரிந்து கொண்டால்தான் கணவனிடம் விஷயத்தை சொல்லி தீர்வு காண முடியும் என்று அவளும் அமைதியாக இருக்க, ஷாலினிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.



அந்த நொடியில் இருந்து.. மறுநாள் விக்ரமை பார்க்கும் வரை..அவள் தண்ணீர் கூட அருந்தாமல் எதையோ இழந்தவள் போல உணர்வற்று அமர்ந்திருக்க, யாரும் அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்யவில்லை.



விக்ரம்,அவள் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையோடு," ஷாலினி "என்று வாசலில் நின்று அழைக்க,எழுந்து சென்று அவனது முகத்தை பார்க்கும் தைரியம் அவளுக்கு இல்லவே இல்லை.



கபிலன் தான் வெளியே சென்று," அவ இனிமேல் உன்னோட வரமாட்டா.. என் பொண்ணா.. என்கூட தான் இருக்க போறா.. நீ கிளம்பி போயிடு "என்று சொன்னதை அவனால் நம்பவே முடியவில்லை.



"மாமா..நமக்குள்ள இருக்க பிரச்சனையை நாம பேசி தீர்த்துக்கலாம்..அதை விட்டுட்டு ஷாலினியை அனுப்ப மாட்டேன்னு எல்லாம் நீங்க சொல்லக்கூடாது. அவ என்னோட மனைவி.. சட்டப்படி நான் ரிஜிஸ்டர் பண்ணியிருக்கேன். நான் நினைச்சா.. என் பொண்டாட்டிய அனுப்ப மறுக்கறீங்கன்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கூட கொடுக்க முடியும். ஸ்டேஷனுக்கு உங்கள கூட்டிட்டு போற அளவுக்கு என்ன கொண்டு வந்துடாதீங்க"என்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாக சொல்லியவன்,



"ஷாலினி.. வெளியே வரப் போறியா..இல்லையா "என்று மீண்டும் சத்தமாக அழைக்க,



பிரியா,"உன்னோட ஆசைக்காக மட்டுமே கூட்டிட்டு போன மனுஷன்.. அவருக்கு மரியாதை கொடுக்கணும்னு தோணுச்சுன்னா.. வெளில போய் பேசிட்டு வா. முடிவு உன்னோடது தான் "எனவும், வேறு வழியில்லாமல் எழுந்து கொண்டவள்,



வெளியே வரவும் அவளது கையை பிடித்தவன், கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு செல்ல," விடுங்க மாமா.. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் "எனவும்,



"நீ என்ன பேச போறேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. அதற்கான வாய்ப்ப நான் கொடுக்கவே மாட்டேன் "



"நீங்க இப்போ.. என் கையை விடல ..சத்தம் போட்டு உங்களை அசிங்கப்படுத்திடுவேன்..கைய விடுங்க "என்று அவனது கையை உதற.. தன்னிடம் பேசியது ஷாலினி தானா என்று அவனால் நம்ப முடியவில்லை.



பட்டென்று கையை உதறியவன் ஆத்திரத்தோடு.." அசிங்கப்படுத்திடுவியா.. என்னன்னு சொல்லி அசிங்கப்படுத்திடுவ..! தாலி கட்டின புருஷன் .. கூட வான்னு.. கைய பிடிச்சு இழுக்கறேன்னு சொல்லி அசிங்கப்படுத்துவியா "



"நான் உங்களுக்கு வேண்டாம் மாமா.. என்னை விட்டுடுங்க..! நான் இப்படியே இருந்துட்டு போயிடுறேன் "



"நீ உன்னோட அப்பாவுக்காக பார்க்கிறேன்னு புரியுது ஷாலினி.கொஞ்ச நாள் கழிச்சு.. நம்மளை புரிஞ்சுக்குவங்க..!! நீ பைத்தியக்காரத்தனமா முடிவெடுத்து.. இங்கேயே இருக்கணும்னு நினைக்காத..! நான் சொல்றதை கேளு ஷாலினி "என்று எவ்வளவோ அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்தான்.



"ஏற்கனவே சுயநலமா.. என்னோட காதல் மட்டும்தான் முக்கியம்னு நினைச்சு.. உங்க கூட வந்ததனால்தான்.. அப்பா விஷத்தை குடிச்சார். ஒருவேளை தப்பா நடந்திருந்தால்.. என்னால என்னையே மன்னிச்சிருக்க முடியாது மாமா.



"மறுபடியும் அப்படி ஒரு தப்பு நடந்தா.. நான் உயிரோட இருக்கவே மாட்டேன். எனக்கு அப்பா ரொம்ப முக்கியம். நீங்க எனக்காக தான என்னை கூட்டிட்டு போனீங்க.. அந்த ஒரு மாசமும் நாம வாழ்ந்த வாழ்க்கையும் எனக்காக தானே..!



"அந்த வாழ்க்கையை..எனக்காகவே நீங்க மறந்துருங்க மாமா.. ப்ளீஸ்… நான் உங்களோட வரமாட்டேன்.. என்னை விட்டுடுங்க" என்றவள்.. அவனது கையை வலு கொண்டு உதறிவிட்டு சென்றுவிட..



கபிலன் தன்னை ஏளனமாக பார்ப்பது போல தோன்ற கோபத்தில்.." என் மேல தான் தப்பு…உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தேன் பார். என் மேல தான் தப்பு.. என்னதான் செருப்பால அடிச்சுக்கணும்.. எப்படியோ போன்னு விட்டுட்டு என்னோட வேலைய பார்த்துட்டு போயிருந்தா.. எனக்கு இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது "என்று கத்தி சொன்னவன், அடுத்து ஒரு நிமிடம் கூட அங்கே நிற்கவில்லை..கிளம்பி விட்டான்.



அவன் பேசியது நெருஞ்சி முள்ளாக குத்த… ஜன்னல் வழியாக அவன் போகும் திசையை…. கண்ணீரோடு பார்த்தபடி நின்றிருந்தாள்….!!