• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கர்வம் 21

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
ஸ்தம்பித்து நின்றவனுக்கு அப்போது தான் அனு தொலைதூரம் சென்று கொண்டிருப்பதே மண்டையில் உறைத்தது. பின்னந் தலையில் தட்டியவாறு ஓடிச் சென்றான்.

அவளருகில் மூச்சிறைக்க நின்று முழங்காலில் கைகளை ஊன்றிய வண்ணம் அவளை ஏறிட, அவன் வந்ததை உணர்ந்தாலும் தன் போக்கில் நடந்தாள் பெண்ணவள்.

"ஏய் இங்க ஒருத்தன் மூச்சு வாங்கிட்டு நிக்கிறேன் அதை கணக்குல எடுக்காம எங்கடி போற...?" என பல்லைக் கடித்தவனுக்கு பதில் சொல்ல நாடி திரும்பியவள் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு "அது தான் உங்களுக்கு என்னை சுத்தமா பிடிக்காதில்ல..சோ நான் எங்கே போனா உங்களுக்கென்ன..? இன் ஃபெக்ட் செத்துப் போனாலும் என்ன வந்தது...?" என மனவேதனையில் வார்த்தையை விட்டாள்.

அவளை அனல் தெறிக்க பார்த்தவன் வேக எட்டுக்களுடன் அவளருகில் வந்து அவள் சுதாரிக்கும் முன்னே தரதரவென இழுத்துக்கொண்டு போக,
"விடுங்க தீரா..." என அவன் பிடித்த இடம் வலிக்க கையை இழுத்தெடுக்க முனைய அது போலிஸ்காரனின் பிடி அல்லவா உடும்புப் பிடியாக இருந்தது..

அவள் கத்தக் கத்த இழுத்து வந்தவன் ஜீப்பின் முன் சீட்டில் அவளை தள்ளியவன் அவளை முறைத்துக் கொண்டே மறுபக்கம் ஏறி அமர, வண்டி அவன் கையில் சீறிப் பாய்ந்தது.

அப்போது பேசியவள் தான். அதன் பின் அவனின் பாறை போன்று இறுகியிருந்த முகத்தை பார்த்து பயத்தில் பேச்சு வரவில்லை. முகத்தை சுளித்துக் கொண்டே திரும்பி மறுபக்கம் பாதையை வெறித்துக் கொண்டே வந்தாள். அவனும் ஒரு வார்த்தை தானும் பேசவில்லை. அவள் சாவை பற்றி பேசியது அவனை வெகுவாக தாக்கி இருந்தது. இடையில் யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டும் வந்தான். அவளோ அந்தக் கதைக்கு செவி தாழ்த்தவில்லை.

சரியாக ஒரு ஹாஸ்ட்டல் முன் வண்டி நிற்க சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தீராவின் பக்கம் திரும்ப அவனோ இறங்கி வந்து அவள் பக்க கதவை திறந்துவிட்டான். அவனை புரியாமல் பார்த்துக் கொண்டே இறங்கினாள் அனு.

கொஞ்ச நேரத்தில் ஒரு கான்ஸ்டபிள் வந்து பை ஒன்றை கொடுக்க அவருக்கு நன்றி கூறி வாங்கியவன் அவளிடம் நீட்ட என்ன என பார்வையாலே வினவ "ஏன் மகாராணி வாயை திறந்து கேட்கமாட்டிங்களோ..!? இவ்வளவு நேரமும் ஏதோ அன்னை தெரேசா மாதிரி பக்கம் பக்கமாக வசனம் பேசினல்ல..." என முறைத்து வைத்தான் தீரா. அவனுக்கு சளைக்காமல் மறு பார்வையை வீசியவள் வெடுக்கென பையை பறத்தெடுத்து அதனை ஆராய்ந்தாள்.

வந்த சிரிப்பை பல்லிடுக்கில் மறைத்தவன் விறைப்பாய் நின்றிருந்தான்.

அங்கே அவளுக்கு வாங்கிக் கொடுத்த பையினுள் ஒரு வாரத்திற்கு தேவையான உடை உட்பட அனைத்தும் இருக்க அவளுக்கு புரியாமல் இல்லை.

"இதுல ஒரு வாரத்துக்கு தேவையான திங்ஸ் இருக்கு.. அதுக்குப் பிறகு நல்ல கடையாக பார்த்து வாங்கிக் கொள்ளுவோம்.. இப்போதைக்கு இதை அட்ஜஸ்ட் பண்ணிக்க... இது தான் நீ தங்கிக்கப் போற ஹாஸ்ட்டல்..நான் ஆல்ரெடி இங்க உனக்கு தங்க வசதிகளை ஏற்பாடு செய்திக்கேன். இங்க நீ பாதுகாப்பாக இருக்கலாம்.. " என்றவன் அவள் ஆமோதிப்பாய் தலையை ஆட்ட சற்று இடைவெளி விட்டவன் "என்ட் இங்க உன் அப்பன் வீடு மாதிரி வசதியெல்லாம் இருக்காது..சோ..." என இழுக்க அவனை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சுக்கு முறைத்துப் பார்த்து விட்டு விறுவிறுவென உள்ளே சென்று விட்டாள் காரிகை.

போகும் அவளையே பெருமூச்சுடன் பார்த்தவன் ஒரு தலையிடி குறைந்தது என சென்றுவிட்டான்.

அவன் அவள் கூறியதை நம்பினான். அவளது முக பாவனை அவள் வீட்டை விட்டு வந்து விட்டாள் என்றே கூறியது. ஒருவரால் காதலிக்கப்படுவது எவ்வளவு அழகாக இருக்கும். அதை உணரத்தான் செய்தான் தீராவும். ஆனாலும் அவன் இன்னும் அவளை காதலிப்பதாக திடமாக முடிவெடுக்கவில்லை. இருந்தும் ஒரு பெண் என்று வருகின்ற போது அவளது பாதுகாப்பை கருத்தில் கொண்டவன் தன் நிழலில் அடைக்கலம் கொடுத்திருந்தான்.

அவளுக்கு அவன் திரும்பத் திரும்ப தன் தந்தையை வைத்து குத்திக் காட்டுவது மனதை வலிக்கச் செய்தது. அதையும் தாண்டி அவனை அவள் காதலிப்பதை தெளிவாக கூறி இருந்தும் அதற்கு ரியெக்ட் பண்ணாமல் இருப்பவன் மீது அளவுக்கதிகம் சினம் எழுந்தது. அதனாலே கோபித்துக் கொண்டு சென்றாள்.

இங்கே தீராவோ இந்த விடயத்தை குறித்து தன் நண்பர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான். (அடேய் அவனுங்க உன் லவ்வுக்கு சங்கு ஊதிடுவானுங்கடா...பேசாம அவள நாடுகடத்திட்டு போனேன்னா தப்பிப்ப...நம்ம ஆதித்யா இருக்கிறதால அதுவும் சந்தேகம் தான்...)

...

ஆபிஸிலிருந்து வந்தவள் அதன் பின் வெளியில் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஏன் இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை...

கண்கள் கலங்கி மட்டும் தான் இருந்தது. ஆனால் மனமோ விட்டால் வெடித்து விடும் என்றிருந்தது.

அவளுக்கு அவளறியாமல் பின்னப்பட்ட வலை பற்றிய விடயம் தெரியாதல்லவா. இதுவரை தானாகவே அவன் இருக்கும் இடங்களுக்கு செல்வதாகவே தோன்றியது. என் விதியே என தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அதே ஆறு மாதங்களுக்கு முன் நடந்த இன்னொரு சம்பவம் இவ்வளவு நாளும் தன்னை வருத்தி மறந்திருந்தவளுக்கு இன்று மீண்டும் உச்சியில் வந்து சுமையாக அமர்ந்து கொண்டது. இப்போது அதனை நினைக்கும் போதும் உடல் பயத்தில் குலுங்கியது. எந்தப் பெண்ணாலும் தாங்கிக் கொள்ள முடியாத மரண வலி தன் வாழ்விலும் வந்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. ஆறுதலுக்காக நாலு வார்த்தைகள் பேசக் கூட ஆளிலில்லாமல் தவித்தாள் பெண்ணவள். கண்ணீரே அவளுக்கு உடன் பிறந்த உறவாகியது இங்கே.

"ஏன் அம்மா என்னைய விட்டுட்டுப் போனிங்க..நா..நான் என்ன தப்பு செய்தேன்...!?"என மனதினுள்ளே மறுகித் துடித்தவள் தாங்க இயலாமல் தலை முடியை கையையால் இறுகிப் பற்றிக் கொண்டு அழுதாள்... செத்துப் போய் விடுவோமா என்று கூட தோன்றியது... தலை உறைந்து போனது மன வேதனையால்... ஆனால் இவள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ஏதோ நன்மையை நாடித் தான் என அவள் புரிந்து கொள்ளும் நாளும் வெகு தொலைவில் இல்லை என்பதை யார் கூறி இவளை ஆறுதல் படுத்துவார்...

அப்படியே யோசனையுடனே அமர்ந்திருந்தவளுக்கு பசி எடுத்தது... அடுத்த நிமிடம் வாழ வேண்டுமே என விரக்தியாய் சிரித்தவள் எழுந்து உணவுக்காக சென்றாள்.

...


அடுத்த நாள் காலை ஆதவின் ஆபிஸ் அறையில் தீரா வந்ததில் இருந்து மூஞ்சியை எட்டு முழத்திற்கு தூக்கி வைத்துக் கொண்டிருக்க திரூபனும் அரவிந்தும் ஏதோ உலக அதிசயத்தை பார்ப்பது போல லுக் விட்டுக் கொண்டிருக்க, நீ எல்லாம் எக்கேடோ கெட்டுப் போ..எனக்கு என்னவளின் தரிசனம் தான் இப்போது முக்கியம் என லெப்பையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்ய தேவ்.

ஆம் காலையில் செல்லுவோமா வேண்டாமா என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தவளுக்கு தெரியாத எண்ணிலிருந்து கால் வர யோசனையுடனே அழைப்பை ஏற்றிருக்க அந்தப் பக்கம் ஆதித்ய தேவ்வின் கம்பீரமான குரலில் செல் நழுவி கீழே விழுந்து விட்டது. பின் தன்னிலை உணர்ந்து, எடுத்து காதில் வைத்தவளுக்கு புகை வராத குறையாக அவன் ஒப்பந்தத்தை நினைவு படுத்தி விட்டு அவளின் பதிலைக் கூட எதிர்பாராமல் வைத்து விட்டான். அவளை தன் ஆபிஸுக்கு வர வைத்தவனுக்கு அவளின் அழைபேசி நம்பரை எடுப்பது என்ன பெரிய வேலையா..!?

அவளோ திகைத்துப்போய் நின்றிருந்தாள். இங்கே அவள் எப்படியும் வருவாள் என உறுதியாக நம்பினான் வேங்கை.

அவனின் நம்பிக்கையை பொய்யாக்காமல் அவனவளின் அழகிய வதம் திரையில் வீழ்ந்தது... இன்று சிவப்பு நிற டோப்பும் வெள்ளை நிற பட்டேலா ஜீன்ஸ் உட்பட துப்பட்டா அணிந்திருந்தவளுக்கு அதுவே மிகை அலங்காரமாகவே இருந்தது... எப்போதும் போல தலைமுடியை வாரி தூக்கி ஃபோனி டெயில் இட்டிருந்தவளின் நடைக்கேற்ற கூந்தலும் நடனம் ஆடியது. அவளை பார்த்திருந்தவனின் கண்களில் இப்போது ரசனை குடியேறி இருந்ததுவோ.. துப்பட்டாவை பின்னங்கழுத்தால் முன்னால் போட்டிருந்தவள் பயத்தில் இரண்டு பக்க துப்பட்டாவின் நுனியையும் இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டே நடந்து வந்தாள். அவளின் பயம் அவன் கண்ணிலிருந்து தப்பவில்லை.. அவன் கண் இப்போது அவளில் கூர்மையாக படிந்திருந்தது.

அங்கே இப்படி கண்களிலே காதல் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க அந்த மூதேவிகளுக்கு இன்னும் சொரணை வந்திருக்க வில்லை.

அவள் வந்த பின்னே தன் நிலையில் இருந்து வெளியே வந்தவன் அப்போது தான் இந்த மூன்று செத்துப் போன மூஞ்சிகளையும் கவனித்தான்..

"டேய் திரூ..." என அழைக்க ம்ஹூம் மூதேவியில் ஒரு தேவி கூட அசைந்த பாடில்லை. மூவரையும் முறைத்தவன் ஒரு பேனாவை எடுத்து திரூபனின் மீதெறிய நங் என அவனின் தலையை பதம் பார்த்திருந்தது..(அதெப்டிடா மச்சி எப்ப பார்த்தாலும் சரியாக குறி பார்த்து மண்டைல அடிக்கிற..நீ போன ஜென்மத்தில போலிஸ் ட்ரெயினிங் எடுத்திருக்கனும்... ஆஹா இன்னொரு பேனையை எடுக்கிறானே...அடிச்சு போட்டுடாதடா...மீ பாவம்..)

பேனை பட்டு மண்டை புண்ணான பின்னே இந்தக் கேனைக்கு சொரணை வந்திருந்தது..."எதுக்குடா இப்போ அடிச்ச...மட்டி மடையா...ஸ் ஆஆஆ"என தலையை தேய்த்துக் கொள்ள பார்வையாலே அவனிடம் என்ன என ஆதித்யா கேட்க அதில் கொஞ்சம் நிதானமான திரூபன்,வாயை அஷ்டகோணலாக்கிக் கொண்டே அருகில் இருந்த இஞ்சி தின்ன குரங்கை கண்ணைக் காட்டினான். வேற யாருமில்லை தீராவைத் தான்.

அவனை பார்த்தவன் எதுவும் பேசாமல் தன் வேலையில் மூழ்கி விட்டான். அவனுக்கு தெரியாதா அவன் எதற்காக இந்த கேவலமான போசில் உட்கார்ந்து இருக்கிறான் என.. ஆதித்யாவின் ஆட்கள் அன்றிரவே சுடச் சுட நடந்த அனைத்தையும் அப்டேட் செய்திருந்தனர். அதில் சாரின் உச்சி முடி அத்து எடுக்கப்பட்டதும் அடங்கும்...

எரிச்சலடைந்த திரூபன் கோபத்துடன் சோகமாய் அமர்ந்திருந்த தீராவின் ஸ்விவல் ச்செயாரை தள்ளி விட உருண்டு போய் சுவரில் மோதி நின்றான் தீரா. அரவிந்தும் ஆதித்யாவும் உதடு மடித்து சிரிக்க அங்கே தீராவோ மீசை துடிக்க கோபத்துடன் எழுந்து வந்து அரவிந்த் இருந்த கதிரையை தள்ளி விட இதற்குத் தான் வருகிறான் என சரியாக கணித்த திரூபன் மேசையை கெட்டியாக பிடித்திருந்தான். மூவரும் சிரிக்க, வெறியுடன் வெளியேறப் போனவனை சட்டென பிடித்த திரூபன் அவனை கட்டிப்பிடிக்க "ச்சே சனியனே விடுடா..ச்சி..."என பிடியிலிருந்து நழுவி கதிரையில் அமர்ந்தான். சிரிப்புடனே அவனருகில் வந்து அமர்ந்தவன் "சரி இப்போ சொல்லு.. ஏன் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி உட்கார்ந்து இருக்க...?"என்கவும் மீண்டும் அவனை தள்ளி விடப் போனவன் ஆதித்யாவின் பார்வையில் கப்சிப் ஆகி இருந்தான்.

"அதுசரி மச்சான் லைஃப் எல்லாம் எப்படி போகுது...?"இப்போது அரவிந்த்.

அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் "ம்ம்...இடியப்பம் மாதிரி போகுது..." என்கவும் ங்ஙே என விழித்தனர் நண்பர்கள் இருவரும். ஆதித்யா அவனின் பதிலில் புன்னகைக்க அவனையும் சேர்த்து முறைத்தவனிடம் திரூபன் தான் "எருமை எங்களை குழப்பனும்னே பொறந்து தொலைஞ்சிக்கியா... தெளிவாக சொல்லுடா..."என சீரியஸாக கேட்க, விட்டால் அழுது விடுவோம் என்ற நிலையில் அவர்களை பார்த்தவன் "மச்சி லைஃப் எப்படி போகுதுனு தானே கேட்ட..?" எனவும் "ஆமா அதுக்கிப்போ என்ன..?" என அரவிந்த் கடுப்படிக்க " மச்சி..." என அழுதவன் "வெரி வெரி சிக்கல்டா லய்க் இடியாப்பம்..." என மேசையில் படுத்து அழ ஆரம்பித்து இருந்தான். முதலில் புரியாமல் இருந்தவர்கள் அடுத்த கணம் விழுந்து விழுந்து சிரித்தனர்.. ஆதித்யா கூட கஷ்டப்பட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

தொடரும்...

தீரா.