• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கவி பாடும் விழிகள்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
549
கவி பாடும் விழிகள்.!

அத்தியாயம் : 01 (வதனி)


இராஜா மஹால்..

சென்னையின் பணக்கார வர்க்கத்தினர் மட்டுமே இங்கு திருமணம் செய்ய முடியும் என்று சொல்லாமல் சொல்லும் அளவிற்கு பிரம்மாண்டமாய் நிமிர்ந்து நின்று ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம்.

பல ஏக்கர்களை வளைத்துப் போட்டுக் கட்டியிருப்பார்கள் என்று பார்க்கிங் ஏரியாவைப் பார்த்தாலேப் புரிந்து விடும். பார்க்கிங் ஏரியாவே இரண்டு வழிகள் உள்ளே வரவும், இரண்டு வழிகள் வெளியே செல்லவும் என நான்கு வழிகளைக் கொண்டிருந்தது.

மிகவும் பிரபலமான தொழிலதிபர்கள், திரைப்பட கலைஞர்கள், அரசியல்வாதிகள் என வந்து கொண்டே இருக்க, ஒவ்வொரு இடத்திற்கும் தேவையான வசதிகள் அதற்கென்று இருக்கும் ஈவன்ட் ஆட்களை வைத்து பார்த்துக் கொண்டிருந்தார் இராஜராஜன்.

அவரின் ஒரே பெண்ணான கமலிக்குத்தான் இந்த திருமண ஏற்பாடுகள். சற்று முன்னர் தான் மாப்பிள்ளை அழைப்பு முடிந்திருக்க, அதைத் தொடர்ந்து வரவேற்பு என்று முடிவாகியிருக்க, இப்போது கமலி, அவளது வருங்கால கணவனான துர்கேஷ் உடன் மேடையில் நின்றிருந்தாள்.

பெண்ணின் முகத்தில் மருந்திற்கும் சிரிப்பில்லை, சற்றும் தெளிவில்லை. அனைவரும் பார்க்கும் அவளை ஒரு பரிதாப பார்வையோடு கடந்து செல்வது போல் அவளுக்குத் தோன்ற ஆரம்பிக்க, எப்போதடா முடியும் என்று மனதுக்குள் புலம்ப ஆரம்பித்து விட்டாள் கமலி.

பற்றாக்குறைக்கு இந்த துர்கேஷ் வேறு, தோளிலும், இடையிலும் கையைப் போட்டு பேச, அருவருப்பாக உணர ஆரம்பித்தாள் பெண். சில நிமிடங்கள் கூட இவனை சகித்து இவனுடன் இருக்க முடியவில்லையே, இனி வாழ்வு முழுவதும் எப்படி என்ற கேள்வி பூதாகரமாக எழ, 'அய்யோ எப்படியடா இங்கிருந்து, இதிலிருந்து தப்பிப்பது' என மனதுக்குள்ளே புலம்ப ஆரம்பித்தாள்.

'அம்மா இருந்திருந்தால்' வழக்கம்போல் தோன்றும் ஏக்கம் இப்போது தோன்ற, என்ன முயன்றும் அவள் விழிகள் கலங்கத் தொடங்கியதை அவளால் தடுக்க முடியவில்லை.

இராதாகிருஷ்ணன்- சாவித்திரிக்கு ஒரே பெண் விசாலாட்சி. விசாலாட்சி பிறக்கவுமே சாவித்திரி இறந்துவிட, தன் மகளுக்காக தன் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றிக் கொண்டார் ஆர்.கே.

மகள் மட்டுமே உலகம் என்றாகிவிட, தன் கைக்குள்ளே வைத்து வளர்த்தார். மிகவும் வசதிபடைத்தவர்கள் என்பதால் தன் ஒரே மகளுக்கு வீட்டு மாப்பிள்ளையாக இராஜராஜனை பார்த்தார் ஆர்.கே.

திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழித்து கமலி பிறக்க, கமலி பிறந்ததுமே விசாலாட்சியும் இறந்துவிட்டார். தன் குடும்பத்திற்கான சாபக்கேடா இது என்று கூடத் தோன்றியது. மனைவி இறந்த போது கூட கலங்காதவர், மகள் இறக்கவும் ஓய்ந்து போனார்.

தன் மகளைத் தன்னிடம் இருந்து பிரிக்க வந்தவள் என்று கமலி மேல் அவருக்கு வெறுப்பு வந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவளுக்குத் தேவையானதை செய்தாலும், தன்னைப்போல் மருமகன் தனியாக இருக்ககூடாது என்று முடிவெடுத்து தன் சொந்தத்திலேயே சாந்தி என்ற பெண்ணைப் பார்த்து இராஜராஜனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

இரண்டாம் தாரம்! பெண்கள் மிக மிக வெறுக்கும் ஒரு வாக்கியம். அதுவே வாழ்க்கையாகிப் போனாள். சாந்திக்கும் அப்படித்தான். கடமைக்கு என்று வாழ வந்த சாந்தியும், கமலியிடம் அதிகமாக ஒட்டுதலைக் காட்டவில்லை. தனக்கென ஒரு குழந்தை இல்லை என்ற விரக்தியும் சேர, அவரும் கமலியிடம் நெருங்கிப் பழக நினைக்கவில்லை.

கேட்டதும், நினைத்ததும் உடனுக்குடனே கிடைத்தாலும், அன்பும், நிம்மதியும், மகிழ்ச்சியும் கமலியின் வாழ்வின் கானல் நீராகவே கடந்து போயிருந்தது.

ஒருவேளை தனக்கான வெளிச்சப்புள்ளி துர்கேஷ் தானோ, என்ற எண்ணத்தில் தான் அவள் அவனுடனான திருமணத்திற்கு சரியென்றது. ஆனால் பழகிய பத்து நிமிடத்திலேயே அவனும் தன் குடும்பத்தில் உள்ளவர்கள் போலத்தான் என தெரிந்துவிட, அந்த திருமணத்தைத் தடுக்க தனக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் முயல்கிறாள். ஆனால் அவளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்திருந்தது.

இதுதான் தனக்கான வாழ்க்கை என அதை ஏற்க முடியாமலும், தவிர்க்க முடியாமலும் தவித்துக் கொண்டிருப்பவளின் தவிப்பை போக்க யாரேனும் வருவார்களா.? என விடியலின் வெளிச்சப்புள்ளியை நோக்கிக் காத்திருக்க ஆரம்பித்தாள் கமலி.

இங்க “டேய் அத்தானுங்களா சீக்கிரம் வாங்கடா... நாம போறதுக்குள்ள சோறு முடிஞ்சிட போகுது..” எனத் தங்கள் கார் நிற்பதற்கு முன்னால் கதவைத் திறக்க ஆரம்பித்த மீராவின் கையை இழுத்துப் பிடித்தான் மாதவன் என்ற மேடி.

“சோத்துக்கு அலைஞ்சவளே.. வீட்டுலயே மொக்கிட்டுத்தான் வந்தா, அதுக்குள்ள என்னடி.. அலைஞ்சான்..” என 'விடு விடுடா' எனத் திமிறியவளின் கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்தபடி மீராவை நக்கலடித்தான் மேடி.

அதற்குள் “மங்கி.. உனக்கு எத்தனை டைம் சொல்லிருக்கேன், கார் ரன்னிங்க்ல இருக்கும் போது டோர்ல கை வைக்கக்கூடாதுனு. சொன்னா கேட்கறதே இல்ல. இப்போ இதுக்கு பனிஸ்மென்ட் இல்லன்னா எப்படி, எனக் காரை யு டர்ன் போட்டு மீண்டும் வெளிவாயிலுக்குத் திருப்ப ஆரம்பித்தான் ஆதவன்.

“ஹேய்.. நோ நோ ஆதி அத்தான் ப்ளீஸ் ப்ளீஸ்… (HOT)ஹாட் பிராமிஸ் இனி இப்படி செய்யவே மாட்டேன். ப்ளீஸ் அத்தான். பாவம் என் ஃப்ரண்ட், அவளுக்கு நான் ஒரே ஃப்ரண்ட். நானும் போகலன்னா கோச்சுப்பா.. ப்ளீஸ்யா..” என ஆதியின் செயலில் இறங்கி பாவமாக கெஞ்ச ஆரம்பித்தாள் மீரா.

“ஆதி இவ்வளவு நம்பாத, காட்(GOD) பிராமிஸ் சொல்றதுக்கு பதிலா ஹாட்(HOT) பிராமிஸ்னு சொல்றா, 2 செகண்ட்ல நம்மளை எப்படி ஏமாத்துறா பார்த்தியா.. நீ கிளம்பு. இவளுக்கு இன்னைக்கு இந்த சோறு இல்லன்னு எழுதிருக்கு” என மேடி உருண்டு புரண்டு சிரிக்க,

“டேய் பல் விளக்காத பக்கி, உன்னை சாவடிச்சிடுவேண்டா. பிளேடி தக்காளி..” என பின் சீட்டில் இருந்து முன் சீட்டில் இருந்தவனின் தலையைப் பிடித்து ஆட்ட,

“ஹேய் விடு விடுடீ ராட்சசி.. பைத்தியம் பிடிச்சவ மாதிரி மூஞ்சைப் பாரு.. ஆதி அவளைப் பிடிடா.”

“நோ நோ.. ஆதியை மறுபடியும் உள்ளே போகச் சொல்லு, இல்ல நீ சட்னிடா..”

“ஆதி டேய் ஆதி.. அந்த ராங்கியைப் பிடிச்சுத் தொலைடா.. என் முடியை மொத்தமும் பிடுங்கிட்டுத்தான் விடுவா போல.. பைத்தியக்கார சைக்கோ..”

“நீ என்ன வேனும்னாலும் சொல்லிக்கோ, ஆனா கார் உள்ள போகாம, உன் மண்டையை நான் விடமாட்டேன்..”

இவர்கள் இருவரும் குடுமிபிடி சண்டைப் போட்டுக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்து ஈ மொடிலேயே அந்த மண்டபத்தின் கிரவுண்டைச் சுத்தி வந்தான் ஆதி.

சில நிமிடங்களில் “ஊப்ஸ் ஊப்ஸ்” என தன் தலையைத் தேய்த்தபடி மாதவன் ஆதியை முறைக்க, தன் கையில் இருந்த முடிகளைப் பார்த்து 'இனி எங்கிட்ட வச்சிக்கிட்ட அவ்ளோதான்' என மேடையைப் பார்த்து காளி அவதாரத்தில் இருந்தாள் மீரா.

'ஹாஹா' என இருவரையும் பார்த்து உருண்டு புரண்டு சிரித்த ஆதி, காரை நிறுத்திவிட்டு இறங்க, இவர்களுக்கு முன்னமே மீரா ஓட, அவளைத் தனியே விடக்கூடாது என்பதால் வேகமாக மேடையும் செல்ல, நின்று நிதானமாக அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தான் ஆதவன்.

“பணத்தை எப்படி செலவு செய்றதுன்னு தெரியாம, எவ்வளவு ஆடம்பரம் பன்றாங்க. ஷப்பா எதுக்குடா இம்புட்டு துட்ட இதுல கொட்டுறீங்க, ஒரு நேரம் சாப்பாட்டுக்கு வழி இல்லாம எத்தனை பேர் கஷ்டப்படுறாங்க. இங்க எல்லாமே பணம். ஊப்ஸ்.. இதுக்குத்தான் அளவா சம்பாதிக்கனும்னு சொல்றது.” என வாய்க்குள் முனங்கியபடியே நகர,

“டேய் துர்கேஷ் என்னடா சொன்னான், பார்ட்டிக்கு வரானா இல்லையா..?”

“மச்சி, அவன் பார்ட்டி, அவன் வராம இருப்பானா.? மச்சான் பேச்சிலர்ல இருந்து ப்ரோமோட் ஆகுறான்ல அப்ப கண்டிப்பா வரனும்ல..”

“டேய் கர்ணி வந்துருக்காடா..”

“அவ வந்தா மட்டும் என்ன நடக்கும், துர்க்கி ஆல்ரெடி எல்லாம் பேசிட்டுதானே கர்ணி கூட ரிலேஷன்ஷிப் வச்சிக்கிட்டான். இப்போ வந்து அவ என்ன சீன் போட்டாலும் ஒன்னும் நடக்காது. அவளைப்பத்தி எல்லாருக்கும் தெரியும்..”

“ஹாஹா டேய் மச்சான்ஸ், நான் கர்ணி வந்துருக்கான்னு தான் சொன்னேன். பிரச்சினை செய்ய வந்துருக்கான்னு எப்போ சொன்னேன், அவ துர்க்கியை விட ஸ்மார்ட். இவன் கழட்டி விட்டமே அடுத்த பாய் பிரண்ட் பிடிச்சிட்டா. அந்த BF கூடத்தான் வந்திருந்தா..” என ஒரு இளைஞர்கள் கூட்டம் நின்று கமெண்ட் அடித்துக் கொண்டும், ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டும் நின்றிருந்தார்.

மாப்பிள்ளையான அந்த துர்கேஷ் அவனுடைய நண்பர்கள் என்பது அவர்களின் பேச்சிலேயே புரிந்தது. 'மேல்தட்டு வர்க்கம்' உதடு ஏளனமாய் வளைந்தது ஆதவனுக்கு.

பாவம் அந்த பெண் என்று அந்த பெண்ணிற்காக உள்ளிருந்த மனசாட்சி சற்றே வருத்தப்பட்டுக் கொண்டது.

இவர்களை எல்லாம் கடந்து உள்ளே சென்றவனின் பார்வை மீராவையும், மேடையையும் தேடி, அவர்களோ இவனுக்காக காத்திராமல் மேடைக்கு அருகில் நின்றிருந்தார்கள். அடுத்து மேலே செல்ல.

'ஷப்பா.. இதுங்களோட..' என மனதுக்குள்ளே நொந்து கொண்டவன், வேகவேகமாக அவர்களிடம் செல்ல, அப்போதுதான் மேடையில் நின்றிருந்த மணமக்கள் இருவரையும் பார்த்தான்.

பார்த்தான்.! பார்த்துக் கொண்டே இருந்தான்.! 'டேய்' எனப் பல்லைக் கடித்தான்.!

'எப்புட்றா' என்பதுதான் அவனது எண்ணம். காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. பணமும் பணமும் சேருமிடத்தில், மனதிற்கோ, அன்பிற்கோ, ஏன் உருவத்திற்கோ கூட இடமில்லை என்று காட்டியிருந்தார்கள்.

கொடி இடையாள் பெண்ணுக்கு, கொழுக் மொழுக் என ஒரு பானை வடிவ மாப்பிள்ளை.

இவனுக்காட அந்த பக்கிக இவ்ளோ பில்டப் கொடுத்தாங்க, நொந்து நூடுல்ஸே ஆகிவிட்டான் ஆதி. இப்போது அந்த பெண்ணை நினைத்து வெளிப்படையாகவே வருத்தப்பட்டான்.

ஆதவன் வரவும் “பார்க் பண்ணிட்டு வர இவ்ளோ நேரமா.. வா சீக்கிரம் கிஃப்ட் கொடுத்துட்டு சாப்பிட போலாம்.. என் ஐட்டம்ஸ் எல்லாம் தீர்ந்துடும்..” என மீரா வாய்க்குள் முனங்க, ஆண்கள் இருவரும் அவளை முறைத்தனர்.

“மங்கி.. நிஜமாவே இந்த பலூன் தான் மாப்பிள்ளையா..?” என்றான் ஆதவன். அதைக் கேட்டதும் மேடை பக்கென்று சிரித்துவிட, இப்போது அதிகமாக மற்ற இருவரையும் முறைத்தாள்.

“ம்ச் சீரியஸ்டீ மீரு.. பாரு உன் ப்ரண்ட் எப்படி இருக்கா.. அவன் எப்படி இருக்கான் பாரு, இதுல இவனோட ஃப்ரண்ட்ஸ் எல்லாம் இவனை பிளேபாய் ரேஞ்சிக்கு பில்டப் கொடுத்துட்டு இருக்காங்க. முடில..” என ஆதவன் சொல்ல,

“கடைசி நேரத்துல மாப்பிள்ளை ஓடிப் போயிட்டானோ.. அதனால வேற யாரையும் நிற்க வச்சிட்டாங்களா..?” என மேடையும் சொல்ல,

“அடச்சே சும்மா இருங்கடா.. அந்த ஜண்டா தான் மாப்பிள்ளை, நானே ஒன் வீக்கா இங்க வந்து இப்படி எதுவும் வாய்விடக் கூடாதுன்னு கன்ட்ரோல் பண்ணிட்டு வந்தா.. ஏண்டா..” என அழுது விடுபவள் போல பேசியவளை முன்னே கை காட்டினான் ஆதவன்.

அடுத்து அவர்கள் தான் மேடை ஏற வேண்டும் என்பதால் பேச்சை நிறுத்திவிட்டு, மேலே சென்று வாழ்த்திவிட்டு கிளம்ப எத்தனிக்க, கமலியின் இடது கரம் மீராவை இறுக்கமாகப் பிடித்திருந்தது.

மீராவும் 'என்ன' என்பது போல் பார்க்க, 'ரெஸ்ட் ரூம் போகனும்டி' என முணுமுணுத்தாள் கமலி.

அவளோ என்ன செய்வது போல் எல்லாரையும் பார்க்க, இவர்களைப் பார்த்த சாந்தி என்னவென்று கேட்பதற்கு அருகில் வந்தார்.

அவரிடம் மெல்ல விசயத்தைச் சொல்ல கூட்டமும் வந்து கொண்டே இருப்பதால் 'சரி சீக்கிரம் போய்ட்டு வாங்க' என்று விட, விட்டால் போதும் என்பது போல் மீராவை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள் கமலி.

போகும் போது அவள் பார்வை ஆதவனைத் தீண்டி சென்றதோ!

“மேடி நான் வெளியே இருக்கேன். இந்த டிராமாவைக் கண்டிப்பா என்னால பார்க்க முடியாது. மீரு வந்ததும் கூப்பிட்டு வந்து சேர். நான் போய் அவ ஐட்டம்ஸ் எல்லாம் இருக்கான்னு செக் பன்றேன்..” என ஆதவன் நடையைக் கட்ட,

'எத' என இருபக்கமும் சென்ற இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு மீராவுக்காக காத்திருந்தான் மேடி.

இங்கு அறைக்குள் வந்த கமலி மீராவைக் கட்டிக்கொண்டு அழ, “ம்ச் என்ன கமல் இது..” எனச் சலிப்பாகக் கேட்க,

“சாரி மீரு வெரி சாரி. நீ சொல்லும் போது கூட எனக்கு பெருசா கஷ்டம் தெரியல. ஆனா இப்போ இந்த செகண்ட் என்னால அங்க நிற்க முடியல. நான் என்ன சொல்ல, எப்படி சொல்ல.. ஐ ஃபீல் அனீசிடி. நான் எங்கப்பாக்கிட்ட சொல்லிப் பார்த்துட்டேன். யாருமே கேட்கல.. எனக்கு செத்துப் போயிடலாம் போல இருக்கு மீரு..” என ஓவென்று அழ,

“ஹேய் பைத்தியமா உனக்கு.. முட்டாள் மாதிரி பேசக்கூடாது. அந்த பலூனோட உன் வாழ்க்கை முடிஞ்சிடாது. நீ முதல்ல இப்படி யோசிக்கிறதை நிறுத்து மென்டல்..” எனக் கத்தியவள், “கமலி டைமாச்சு..” என்ற சாந்தியின் குரலில் நிதானத்துக்கு வந்தாள்.

பின் “கமல் இங்க பாரு. இப்போவே எல்லாம் முடிஞ்சி போயிடல. நமக்கு இன்னும் இந்த ஃபுல் நைட் டைம் இருக்கு. அதுவரைக்கும் நீ யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி நடந்துக்கோ. கொஞ்சம் டைம் கொடு, நான் யோசிச்சிட்டு வரேன். யூ க்னோ புவ்வா உள்ள போனாத்தான் எனக்கு ஐடியாவே வரும், ஹேய் நான் சொன்ன மெனு இருக்குத்தானே..” என்றதும் கமலியில் முகத்தில் லேசான புன்னகை தோன்றியது.

“எஸ்.. டிஸ் இஸ் மை கேர்ள். டோன்ட் வொரி டார்லிங்க். அதிகமாக இருக்க பயமேன். நான் என் வயித்துக்கும் மூளைக்கும் தீணியை போட்டுட்டு வரேன். அதுவரைக்கும் அந்த ஜண்டா கூட கடலைப் போடு. நான் என் மங்குனிங்க கூட சேர்ந்து ப்ளான் போட்டுட்டு வரேன்..” என கமலியின் மேக்கப்பை சரி செய்தபடியே பேச, இப்போது தோழியை இறுக்கமாக கொண்டாள் கமலி.

அந்த இறுக்கத்தில் இருந்த நிம்மதியும் ஆசுவாசமும் மீராவையும் நெகிழ்த்தியிருந்தது. அதுவே கமலியை இங்கே இருந்து வெளியில் கொண்டு வர வேண்டும், அதில் இருந்து காக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வைத்தது.

இவளின் முடிவைக் கேட்ட மேடி கத்த ஆரம்பிக்க, ஆதவனோ உடனே 'டன்' என்றான். அவனது உடனடி சம்மதத்தில் மற்ற இருவரும் சந்தேகமாகப் பார்க்க, “அட ஒரு பொண்ணு வாழ்க்கையைக் காப்பாத்தலாம்னு நினைச்சேன். வேண்டாம்னா போங்க..” என பிகு செய்ய,

“சரி சரி.. நீங்க ரெண்டு பேரும் சீக்கிரம் ப்ளான் போடுங்க, அவளை அபேஸ் பண்ணிட்டு ஓடிரலாம். நான் போய் சாப்பிட்டு வந்துடுறேன்..” என மீரா பஃபே பக்கம் போக, அவளது முடியைப் பிடித்து இழுத்த மேடை,

“எனக்கு என்னமோ நீங்க ரெண்டு பேரும் ஆல்ரெடி ப்ளான் போட்டுத்தான் வந்த மாதிரி இருக்கு..” எனச் சந்தேகமாக இழுக்க,

“நோ.. நோ மேடி.. ஹாட் பிராமிஸ்..” என மீரா கண்ணைச் சிமிட்டி சிரிக்க, மேடையைப் பார்த்த ஆதவனின் கண்களும் சிரித்தது.
 
Top