• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலில் விதிகள் ஏதடி 6

Malar Bala

Staff member
Jul 31, 2021
67
50
18
Thanjavur
அத்தியாயம் 6

தேவா எதுவும் கூறாமல் பின் நோக்கி நடக்கவும் ஆதிரையும் இரண்டடி முன் நோக்கி நடந்தவள் அவர்கள் வீட்டைத் தாண்டியதும் இருந்த தென்னந்தோப்பை முதன் முதலாகப் பார்த்தாள்.

கண்கள் எட்டும் தூரம்வரை தென்னை மரங்களே இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வரிசையாக நடப்பட்டிருந்தன. அத்தனை மரங்களை ஒன்றாக இதுவரை ஆதிரை உண்மையாகவே பார்த்தது இல்லை தான்.

தன்னையும் மீறிய ஆச்சரியத்தில் தேவாவிடம் “இத்தனை மரங்களா?” என்றாள்.

அதுவரை ஆதிரையையே பார்த்துக் கொண்டிருந்தவன் சிரித்துவிட்டு “மொத்தமாக இருநூற்றுப் பதினெட்டு மரங்கள் இருக்கின்றன. சரி வா, முத்தையா காத்திருப்பார்” என அவளை அழைத்துக் கொண்டு அந்தத் தோப்பினுள் சென்றவனிடம் ஆதிரை

“நான் ஒரு சந்தேகம் கேட்கலாமா?” என்றாள்.

கேள் என்பதைப் போல அவன் சமிக்ஞை செய்யவும் “பொதுவாக நான் கேள்விப் பட்டவரைத் தோப்பு என்பது தனியாக வீட்டிலிருந்து தூரமாகத் தானே இருக்கும்?” என்றாள்.

“அப்படியா? யார் கூறி கேள்விப்பட்டீர்கள்?” என்றவனிடம் “இல்லை, ஊரில் என் பாட்டி வீடு கூட ஒரு கிராமத்தில் தான் இருக்கின்றது. அங்கே மாந்தோப்பெல்லாம் இருக்கும். ஆனால் வீட்டிலிருந்து தூரமாகத் தான் இருக்கும்” என்றாள்.

தேவா “பொதுவாக மரங்கள் அதிகமாக இருக்கும்பொழுது வீட்டிற்கும் தூரமாக இருக்கும் தான். அது இடவசதிக்காகக் கூட இருக்கலாம். அதோடு இல்லாமல் வீடுகள் அடுத்தடுத்து இருக்கும்பொழுது ஒரு தோப்பை உருவாக்க முடியாதல்லவா” என்றான்.

அவன் கூறுவதைக் கேட்டுச் சிந்தித்தவள் அவனிடம் “பிறகு உன் வீட்டில் எப்படியொரு தோப்பை உருவாக்கினீர்கள்?” என்றவனிடம் தேவா “நம் வீட்டில்” என ‘நம்’ எனும் வார்த்தையில் அழுத்தம் கொடுத்துக் கூறவும் “சரி... சொல்” என்றாள் ஆதிரை.

அதற்குள் இருவரும் பேசிக் கொண்டே முத்தையா இருக்கும் இடத்திற்கு வரவும் தேவா “மீதி வேலை முடிந்ததும் கூறவா” என்று கேட்டான்.

அதற்கு “சரி” என்றவள் “ஆனால் என்ன வேலை” என்று கேட்டாள்.

“ஒரு சிறிய வேலைதான். முடித்ததும் வீட்டிற்குச் செல்லலாம். உனக்கு நேரம் போகவில்லை என்றால் வீட்டிற்குப் போவதற்கு முன் கூறிவிட்டுச் செல், சரியா?” என அவளிடம் கூறிக் கொண்டே தன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டவன், தன் சட்டையையும் கழட்டி அங்குள்ள தண்ணீர் தொட்டியின் கட்டை மீது வைத்தான்.

இவன் என்ன தான் செய்கிறான் என்று ஆதிரை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே முத்தையா எங்கோ சென்று சில கூடைகளுடன் அங்கு வந்தார். அவரிடமிருந்து கூடைகளை வாங்கிக் கொண்டே

“சரி ஆதிரை நீ அமர்ந்துகொள்” எனக் கூறவும் ஆதிரை “என்ன வேலை என்று கூறப்போகிறாயா இல்லையா?” என்றாள்.

முத்தையாவிடம் வேலையை ஆரம்பிக்கக் கூறிவிட்டு ஆதிரையிடம் “தேங்காய் பறித்துக் கீழே கிடக்கின்றது பார். அவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் போட வேண்டும்” என்றவனிடம் ஆதிரை

“இவ்வளவு தானா? இதற்கா வேலை, வேலை என்று அவ்வளவு பில்டப் கொடுத்தாய்?” என்றாள்.

“என்னம்மா? இருநூற்றுப் பதினெட்டு மரங்களின் தேங்காய்களையும் ஒரே இடத்தில் சேர்ப்பது சிறிய வேலையா?” என்றான்.

“ஆமாம். இதுவெல்லாம் ஒரு வேலையா? நானும் செய்கிறேன்” என்று ஆதிரை கூறவும் தேவா பதறிக்கொண்டு “அதெல்லாம் வேண்டாம் ஆதிரை. உன்னால் முடியாது” என்றான்.

அவ்வளவுதான் ஆதிரை வழக்கம்போல முருங்கை மரம் ஏறிவிட்டாள். பொதுவாகவே உன்னால் முடியாது என்று யாரும் கூறினால் வேண்டும் என்றே அதைச் செய்பவள். அதில் பாதி உண்மையாகவே அவளால் செய்ய முடியாமல் போவதும் உண்டு. ஆனால் இன்று கூறியது தேவா எனும்போது அதை எப்படிச் செய்யாமல் இருப்பாள்.

அவனிடம் சண்டையிட்டுச் செய்தே தீருவேன் என்று அவள் நிற்கவும் வேறு வழியின்றி தேவாவும் ஒரு நிபந்தனையுடன் ஒத்துக்கொண்டான்.

“சரி. ஆனால் உன்னால் எப்போது முடியவில்லையோ அப்போது அமைதியாக அமர்ந்துவிட வேண்டும் சரியா?” என்று கேட்டவனிடம் சரியெனத் தலையாட்டிவிட்டு வேலையில் இறங்கினாள்.

கூடைகளில் தேங்காய்களை எடுத்து மட்டும் வைத்தால் போதும் என்று அவளிடம் கூறியிருந்தனர். அவன் எடுத்து வைக்க வைக்க அவர்கள் அதை எடுத்துச் சென்றனர். முதல் ஐந்து பத்து நிமிடங்களுக்கு அவளைப் பொருத்தவரை நன்றாகத் தான் இருந்தது போகப் போகத்தான் தேவா கூறியதின் உண்மை அவளுக்குப் புரிந்தது.

ஒவ்வொரு மரமாகப் போய்க் குனிந்து தேங்காய்களைப் பொறுக்கவும் அவள் கை, கால்கள் எல்லாம் வழி தொடங்கிவிட்டது. பொதுவாகவே ஆதிரை வீட்டில் எந்த வேலையும் பார்த்தது இல்லை. சமையலில் மட்டுமே தன் தாய்க்கு உதவி செய்தது உண்டு அதுவும் அபூர்வமாக நடந்தால் தான் உண்டு.

கேட்பதற்குச் சுலபமாக இருக்கவும் தேவையில்லாமல் வாய் கொடுத்து மாட்டிக்கொண்டோமோ என்று இருந்தது அவளுக்கு. பேசாமல் தேவாவிடம் கூறிவிட்டு ஓரமாக அமர்ந்து விடலாமா என்று யோசித்தவள்

‘இல்லை, இல்லை, ஏற்கனவே என்னால் முடியாது என்று கூறினான். அவனிடம் சென்று எக்காரணம் கொண்டும் நிற்கக் கூடாது’, என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் இவள் கூறாவிட்டாலும் இவளது வேலையின் வேகம் குறைந்திருப்பதை மற்ற இருவரும் கவனிக்கத் தவறவில்லை.

முத்தையா “அம்மா. நீங்கள் பட்டனத்திலிருந்தவர். உங்களுக்கு இதுவெல்லாம் பழக்கம் இருக்காது. நீங்கள் அமருங்கள்” என்றார்.

அவளுக்கும் அமரத் தான் ஆசை. ஆனால் அமர்ந்து விட்டால் தேவா கூறியது அல்லவா உண்மையாகிவிடும். எனவே அமர மறுத்து விட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தாள்.

சிறிது நேரத்தில் தேவா முத்தையாவிடம் பணம் கொடுத்து எங்கோ அனுப்புவதை ஆதிரை கவனித்தாள். அவரை அனுப்பி விட்டு நேராக ஆதிரையிடம் வந்தவன் அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்கும் அருகிலிருந்த கட்டையில் அவளை அமரக் கூறிவிட்டு அவனும் அமர்ந்தான்.

“எங்கே அவரை அனுப்பினாய்” என்று அவள் கேட்கவும் “தேநீர் குடித்துவிட்டு நமக்கும் வாங்கிவர” என்றான்.

ஆதிரையிடம் அவன் பேசிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை வேறு எங்கோ இருக்கவும் ஆதிரை அதைப் பற்றிக் கேட்டாள். அதற்குத் தேவா

“இல்லை இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று பார்த்தேன்” என்றவன் “உன்னால் முடியவில்லை எனும்போது பேசாமல் அமர்ந்தால் என்ன?” என்றான்.

“யாரால் முடியவில்லை. நான் நன்றாக வேலை செய்கிறேன் என்று உனக்குப் பொறாமை” என்றவளைத் தேவா புருவம் உயர்த்தி பார்க்கவும் “சரிசரி. ஏதோ பழக்கம் இல்லாத வேலை என்பதால் சிறிது மூச்சுவாங்குகிறது அவ்வளவுதான்” என்றாள்.

ஆதிரைக்கே தான் சொல்வது அப்பட்டமான பொய் என்று தெரியும் தான். ஏனென்றால் அவளே வியர்த்து, அவள் கூறியது போல் சிறிதளவு இல்லாமல் நன்றாகவே மூச்சுவாங்கியும் கொண்டிருந்தாள்.

தேவா “சரி. உன்னால் முடியும் என்று நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம்” என்று கூறவும் ஆதிரை தான் செய்தே தீருவேன் என்றாள். தேவா அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை எனவும் சின்ன உதவிகளாவது செய்கிறேன் என்றாள். சரி ஆனால் முத்தையா வந்த பிறகே செய்யலாம் அதுவரை ஓய்வெடு என்று கூறிவிட்டு அவன் வேலையைத் தொடர்ந்தான்.

ஒன்றாகப் போடப்பட்டிருந்த தேங்காய்களை இரண்டு வாரியாகப் பிரித்துக் கொண்டிருந்தவனிடம் ஆதிரை “நீயும் ஓய்வெடுத்தால் என்ன” என்றாள்.

“முத்தையா வர அரைமணி நேரமாவது ஆகலாம்” என்று அவன் கூறவும்

“ஏன் அவ்வளவு கூட்டமாக இருக்குமா” என்றாள்.

தேவாவும் வேலைகளைப் பார்த்துக் கொண்டே “இல்லை. ஊருக்குள் சென்றால் தான் கடைகள் இருக்கும்” என்று கூறவும்

ஆதிரை “ஊருக்குள்ளா? அப்போது நாம் ஊருக்குள் இல்லையா?” என்றாள்.

அவளது பாணியிலையே தேவாவும் “இல்லையே” என்று கைகளை விரிக்கவும் ஆதிரை அவனைப் பார்த்து முறைக்கத் தொடங்கினாள்.

“சரி. சரி. கோபம் கொள்ளாதே” என்றவன் அவனே தொடர்ந்து “நமக்கு ஒரு வீடு ஊருக்குள் இருக்கின்றது ஆதிரை” என்றான்.

“பிறகு ஏன் நாம் அங்கு இல்லாமல் இங்கு இருக்கின்றோம்” என்றவளிடம்

“கேள்விகள் கேட்காமல் உன்னால் இருக்க முடியாதா?” என்றான்.

அவன் கேட்டு முடிப்பதற்குள் ஆதிரை “முடியாது” எனவும் தேவாவிற்கே சிரிப்பு வந்துவிட்டது.

சிரித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து “சிரித்துச் சமாளிக்காமல் பதில் சொல்” என்று அவள் அதிலேயே நிற்கவும் வேறுவழியின்றி தேவாவும்

“நமக்கு ஒரு வீடு ஊருக்குள் இருக்கிறது தான் ஆதிரை. அதில்தான் நான் பிறந்து கொஞ்ச வருடங்கள் வளர்ந்தேன். நம் தாத்தாக்கள் கட்டி ஒன்றாக வாழ்ந்த வீடு. ஆனால் சில காரணங்களால் நம்மால் இப்போது அங்குச் செல்ல முடியாது. சில பிரச்சனைகள் என்று வைத்துக்கொள்ளேன். அவைகள் தீரும் வரை நம்மால் அங்குச் செல்ல முடியாததால் இந்த வீட்டிற்கு வந்து விட்டோம். உண்மையைக் கூற வேண்டும் என்றால் இது நம் பண்ணை வீடு”, என்றவன் தொடர்ந்து “அடுத்த கேள்வியாக அப்படி என்ன பிரச்சனை என்று கேட்காதே. இப்போது என்னால் உன்னிடம் கூற இயலாது” என்று முடித்துவிட்டான்.

ஓ. என்றதுடன் ஆதிரையும் பெரிதாக எதுவும் கேட்கவில்லை. ஆனால் தற்போது தேவா முழுமையாகக் கூறாமல் விடுவதால் அவர்கள் வாழ்க்கையே மாறப்போகிறது என்று அன்று இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளைத் தெரிந்திருந்தால் தேவா அன்றே முழுமையாகக் கூறியிருப்பான்.

ஆனால் அதுதான் விதியென்று இருக்கையில் அதை யாரால் மாற்றிட முடியாது.

அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இருவரும் வீடு திரும்பப் பொழுதாகிவிட்டது. வீட்டைத் திறக்கும்பொழுது ஆதிரையிடம்

“ஆதிரை, எனக்காக நீ ஒரு உதவி செய்ய வேண்டும்” என்று தேவா கூறவும்

ஆதிரை “காலையிலிருந்து ஒரு உதவி, ஒரு உதவியெனப் பல உதவிகளாகி விட்டது” என்றாள்.

தேவா “அதுசரி, இதே... நான் உன்னிடம் வந்து இதைச் செய் அதைச் செய் என்றால் செய்துவிட்டுத் தான் அடுத்த வேலையைப் பார்ப்பாய் அல்லவா” என்று அவன் கேட்கவும் ஆதிரை அதுவும் கூறாமல் வீட்டினுள் சென்றாள்.

பதில் கூறாமல் உள்ளே சென்றவளைத் தேவா கூப்பிடவும் நின்றவள் “என்ன உதவி என்று சொல்” என்றாள்.

அவள் கேட்டதே பெரிது என நினைத்தவன் “நாளை அண்ணனும் அண்ணியும் ஊரிலிருந்து வருகிறார்கள்” என்று அவன் கூறும் பொழுதே இடைமறித்து

“அண்ணன், அண்ணியா?” என்றாள்.

“எனக்கு ஒரு அண்ணன் உண்டு”, என்றான்.

“ஓ” என்று ஆதிரை கூறவும் தேவாவே தொடர்ந்து “அண்ணியின் அம்மா வீட்டிற்குச் சென்றிருந்தார்கள். நான் உன்னைத் திருமணம் செய்ததும், அப்பா அவர்களை சில நாட்கள் அங்கேயே இருக்கச் சொல்லிக் கூறிவிட்டார். ஆனால் அங்கேயே இருக்க இயலாது அல்லவா. அதனால் நாளை வருகிறார்கள்” என்றான்.

அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிரை அவன் முடிக்கவும் “ஏன்?” என்று ஒற்றை வார்த்தையில் கேட்கவும் தேவாவிற்கு அவளது கேள்வி புரியவில்லை.

புரியாமல் முழித்தவன் “என்ன? என்ன ஆதிரை ஏன் என்றால் என்ன அர்த்தம்?” என்றான்.

“நீ என்னைத் திருமணம் செய்ததற்கு ஏன் அவர்கள் வரக் கூடாது என்று உன் அப்பா கூறினார்” என்றாள்.

“ஓ, அதுவா…? அது, நீ அன்று என்னை வெளியில் அதாவது வீட்டின் வாசலில் அமர வைத்தாய் அல்லவா அதைப் பார்த்துப் பயந்து விட்டார்” என்று சிரித்தான்.

ஆதிரை ஒன்றும் புரியாமல் புருவத்தைச் சுருக்கவும் தேவாவே

“கோபித்துக் கொள்ளாதே தவறான அர்த்தத்தில் கூறவில்லை. நீ மிகவும் கோபமாக இருந்தாய். அதை வீட்டில் உள்ள அனைவர் மீதும் காட்டி விடுவாயோ என்று எங்கள் அனைவருக்கும் பயம். அண்ணனை எதுவும் கூறினால் பரவாயில்லை. ஆனால் அண்ணியை ஏதாவது கூறிவிட்டால், அண்ணி எதுவும் நினைக்கமாட்டார்கள் தான், புரிந்துகொள்வார்கள், ஆனால் அவர்களை யாராவது ஏதேனும் கூறிவிட்டால், எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால் தான் உன் கோபம் குறைந்ததும் வரலாம் என்று கூறினார்” என்றான்.

“இப்போது என் கோபம் குறைந்து விட்டது என்று யார் கூறினார்கள்” என்றாள்.

அவள் குரலிலிருந்த வித்தியாசத்தைக் கண்டவன் “உன் கோபம் குறைந்து விட்டது என்று யாரும் கூறவில்லை. அது அவ்வளவு சீக்கிரம் குறையும் என்று நாங்கள் யாரும் நினைக்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் என் மீதுள்ள கோபத்தை நீ வேறு யார்மீதும் காட்ட மாட்டாய் என்று புரிந்து கொண்டோம்” என்றான்.

அவன் கூறியதற்கு எந்தவித பதிலும் கூறாமல் தன் அறைக்குள் செல்லப் போனவள் ஒரு நிமிடம் நின்று தேவாவை பார்த்து “உன் தந்தை எங்கே?” என்று கேட்டாள்.

அவளது கேள்விக்குத் தேவா “அவர் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார்” என்று தரையைப் பார்த்துக் கூறியவன் அதற்குமேல் அங்கு நிற்காமல் படியேறிச் சென்றுவிட்டான்.

பழக்கம் இல்லாமல் ஒரே நாளில் வேலை பார்த்ததின் களைப்பில் படுத்தவுடன் ஆதிரை உறங்கிவிட்டாள். காலையில் எழுந்தபொழுது வீடே பரபரப்பாக இருந்தது. சன்னல் கதவைத் திறந்து பார்த்தபொழுது அங்கு நின்றிருந்த கார், அவளது மாமியார் மீனாட்சி வீட்டிற்கு வந்துவிட்டதை அவளுக்கு உணர்த்தியது.

அறையை விட்டு வெளியில் சென்று பார்க்கலாமா என்று நினைத்தவள் அப்போது தான் மணியைப் பார்த்தாள். மணி ஏழரையை நெருங்கிக் கொண்டிருந்தது காலையில் எட்டு மணிக்கெல்லாம் காலை உணவைக் கொண்டு வந்து வைப்பது மீனாட்சியின் வழக்கம்.

எப்படியும் அரைமணி நேரத்தில் அவரே உள்ளே வந்துவிடுவார் என்று எண்ணியவள் அவசரமாக எழுந்து அவளது படுக்கையைச் சரிசெய்து விட்டுக் குளிக்கச் சென்றாள். குளித்து விட்டு வரும்பொழுது அவளது உணவை மீனாட்சியை அல்லாமல் வேறொரு நாற்பது வயதையொட்டிய பெண் வைப்பதைக் கவனித்தவள் அந்தப் பெண்மணியிடம் “நீங்கள் யார்?” என்று கேட்டாள்.

அந்த பெண் ஆதிரையை எதிர் பார்க்கவில்லை என்று அவள் பதறியதில் தெரிந்தது. அவளது பதற்றத்திற்கான காரணம் புரியாமல் ஆதிரை தனது புருவங்களை உயர்த்தியவாறு “என்ன ஆகிற்று? யார் நீங்கள்” என்று பொறுமையாகவே கேட்டாள், அவளது குரலில் வியப்பும் இருக்கத் தவறவில்லை.

அந்தப் பெண் பயந்த குரலோடு “நான் இங்குச் சமையல் வேலை பார்க்கிறவளம்மா பெரிய அம்மாதான் உங்களுக்கு உணவு வைக்கச் சொன்னார். நான் வந்தபொழுது நீங்கள் குளியல் அறையிலிருந்தீர்கள் அதனால் தான் உணவை வைத்து விட்டுச் செல்லலாம் என்று உள்ளே வந்தேன்” என்றாள்.

அந்தப் பெண் பேசவும் ஆதிரைக்கு அவளது பயத்தின் காரணம் ஓரளவு புரிந்தது. அனுமதியின்றி அறையினுள் வந்ததற்காகப் பயந்திருக்கிறாள் என்று நினைத்தவள் அவளிடம் புன்னகைத்து “பரவாயில்லை நான் எதுவும் நினைக்கவில்லை” என்றாள்.

ஆதிரை அவளிடம் சாதாரணமாகப் பேசிய பிறகே அந்தப் பெண் சிறிதளவு பயத்திலிருந்து வெளிவந்தாள்.

அவளும் பதிலுக்கு ஆதிரையிடம் புன்னகைத்துவிட்டு “மறக்காமல் உணவு உண்டுவிடுங்கள்” எனக் கூறி அறையை விட்டு வெளியேற முயன்றவளிடம் “அவர்கள் எங்கே?” என்று ஆதிரை வினவினாள். யாரைக் கேட்கிறீர்கள் என்று அந்தப் பெண் கேட்கவும் என்ன கூறுவது என்று யோசித்து ஆதிரை “அத்தையைக் கேட்டேன்” என்றாள்.

“பெரிய அம்மாவைக் கேட்டீர்களா? இன்று ராம் தம்பியும், சின்னம்மாவும் வருகிறார்கள் அல்லவா. அவர்களுக்கு மதிய உணவு தயார் ஆகிறது. அதை மருமகளுக்காகப் பெரிய அம்மாவே தன் கையால் சமைக்கிறார்கள் பெரிய மருமகள் என்றால் அவருக்கு உயிர்” என்று கூறியவள் விடைபெற்றுச் சென்றாள்.

அந்தப் பெண்மணி எந்த நோக்கத்தில் கூறினாளோ ஆனால் ஆதிரைக்கு இனம்புரியாத ஒரு உணர்வு தோன்றியது. ஏனோ திடீரென வேறு ஒருவரது வீட்டில் தான் இருப்பதாக உணர்ந்தாள்.

முதல் நாள் இரவு தேவா எங்கள் அண்ணியை யாரும் ஏதேனும் கூறினால் எங்களால் தாங்க முடியாது என்று கூறியதும் இன்று அந்தப் பெண்மணி பெரிய மருமகள் என்றால் மீனாட்சிக்கு உயிர் என்று கூறியதும் நினைவுக்கு வர வர இதுவரை முகம் பார்க்காத யார் என்றே அறியாத, இவ்வளவு ஏன் பெயர் கூடத் தெரியாத தேவா வீட்டின் மூத்த மருமகள் மீது ஆதிரைக்குக் கோபம் கோபமாக வந்தது.
தொடரும்...