காதல் 01
இருள் நிறைந்த நேரம், அத்தனை அமைதியாயிருந்த அந்த ஒதுக்குப்புற சாலையில் ஒரு பெண் வேகமாக ஓடிக்கொண்டிருக்க, பின்னால் நான்கைந்து பேர் தூரத்தி வந்து கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரம் என்பதாலும் ஆள் நடமாட்டம் குறைந்த பாதை என்பதாலும் அவளைக் காக்க அந்த நேரம் யாரும் இருக்கவில்லை.
ஒருவழியாய் துரத்தி வந்த ஆட்களின் கண்களில் மண்ணை தூவி, அவளது காதலன் சொன்ன இடத்துக்கு வந்துவிட்டாள் அந்த இளம் பெண்.
"எவ்வளவு நேரம் ரதி காத்திருக்கிறது? உன்ன எப்போ வரச் சொன்னேன், நீ எப்போ வர?" என்று அவன் பாட்டுக்கு வழமையான பல்லவியை பாட, இத்தனை தூரம் ஓடி வந்ததால் அவளால் பேசக் கூட முடியவில்லை. பெரிதாய் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டவள் "அண்ணாக்கு விஷயம் தெரிஞ்சி போச்சுங்க, நான் என்ன பண்ணுறது, கடைசி நேரத்துல எப்படி தெரிஞ்சிகிட்டாங்கனு தெரியல" என்றாள்.
"நல்லா ஒவ்வொன்னுக்கும் காரணம் சொல்ல மட்டும் கத்துகிட்ட ரதி" என்று அவளது பையை வாங்கி அவனது காரில் போட்டவன், அவளை ஏரும்படி கண் காட்டினான்.
அவள் ரதிதேவி பதினேழு வயது இளம்சிட்டு அவள், இப்போதுதான் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடித்திருக்கின்றாள்.
அவன் மோகனபிரதாப், வயது இருப்பத்தைந்து. அவளது தந்தையும் வழக்கறிஞ்சருமான பாலச்சந்திரனிடம் தான், மோகன் கடந்த இரண்டு வருடங்கள் ஜூனியராகப் பயிற்சி பெறுகிறான்.
இதில் கடந்த மாதம் தனியாக ஒரு வழக்கில் ஆஜராகி திறம்பட வாதடியவன், அவனது குருவின் வாயிலேயே பாரட்டையையும் சிறப்பு விருந்தையும் பெற்றிருந்தான்.
இப்படி வழக்கு சம்பந்தமாக அடிக்கடி மோகன் அவளது வீட்டுக்கு வருவதுண்டு, அதில் பற்றிக் கொண்ட காதல் தான் இது.
அவனின் வருகை ரதியின் அண்ணனும் காவல்துறையில் ஏசிபியுமான ரவிவர்மனுக்கு பெரிதாய் விருப்பமில்லை என்றாலும் தந்தையின் விவகாரதில் பெரிதாகத் தலையிடுவதில்லை. அதுவும் மோகனுக்கு வசதியாகிப் போனது.
பேருக்கு ஏற்றாற்ப் போல உண்மையில் அவள் ரதிதேவி தான். அத்தனை பிரகாசமான அழகு அவளுடையது. அவளைக் கண்டது முதல் மோகனுக்கு அவள்மீது ஆசையுடன் காதலும் பற்றிக்கொள்ள, ரதிக்கும் அந்த வயதில் வட்டாசட்டமாக வீட்டுக்கு வந்து போகும் மோகன் மேல் ஒரு ஈர்ப்பு வந்திருந்தது.
மோகனின் பார்வையும் அதில் தெரியும் தன் மீதான ஆர்வமும் அந்தச் சிறுபெண்ணை காதலில் விழ வைத்திருந்தது.
அவளை அவள் பள்ளிக்கே சென்று தனியே சந்தித்தவன் காதலையும் உரைத்திருக்க, ரதி வானத்தில் பறக்காத குறை தான். ஆறடி உயரம் படங்களில் வரும் நாயகன்களை போன்ற தோற்றம் என, அவளுக்கு எப்போதுமே அவன் உயர்வாகவே தெரிந்தான்.
அதிலும் அவளுக்காக உருகுவதை போல் பேசும் அவன் பேச்சில் கரைந்து அவளும் சம்மதம் சொல்லி இருக்க, இதோ இந்த ஒருவருடத்தில் அவனுடைய காதல் அவளை, அவனுக்காக வீட்டை விட்டு ஓடி வருமளவுக்கு கொண்டுவந்திருந்தது.
காரில் ஏறச்சொல்லியும் அமைதியாக நின்றவளை, அவன் புருவம் உயர்த்திப் பார்க்க, "நம்ம பண்றது தப்புங்க, இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணி வீட்டுல பேசிப் பாக்கலாமா?" என்றாள் கடைசி முயற்சியாக...
"பேசுனா மட்டும் அப்படியே உன் அண்ணன் விட்டுடுவானா? நம்ம ரெண்டு பேரையும் பிரிக்கனும்னே உன் அண்ணன் உன்ன வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பப் பாக்குறான். இப்போ என்னவிட்டு நீ போய்ட்டா எனக்கு எப்போவும் கிடைக்கவே மாட்டனு தெரிஞ்சும் விடச் சொல்லுறியா ரதி?" என்று கோபமாய் கேட்டான்.
அதில் அவள் அமைதியாக நிற்பதை உணர்ந்து மீண்டும், "இதோ பாரு ரதி எனக்கும் உன்ன இப்படிக் கட்டிக்கணும்னு ஆசையா என்ன? உன் அண்ணனுக்கு என்ன பிடிக்கல அதனாலதான் இப்படி பண்ணுறான். சோ நம்ம எவ்வளவு காத்திருந்தாலும் நம்ம சேர முடியாது. இப்போவும் எனக்கு என்ன குறை நீயே சொல்லேன். இப்படியொரு மாப்பிள்ளை கிடைக்கதான்னு அவனவன் ஏங்குறான். ஆனா உன் அண்ணன் என்னடான்னா முடியவே முடியாதுனு பிடிவாதமா நிக்கிறான். இதுல நான் இத தவிர வேற என்ன பண்ணிட முடியும் சொல்லு" என்றான்.
அவளுக்கும் அவன் பேசுவது அதிலிருக்கும் காதல் எல்லாம் புரிந்தது தான், ஆனால் அவள் வயது அதுதான் அவளது முதல் பயம்.
காதலே அந்த வயதில் தவறென்று அறிந்திருந்தாள் தான். ஆனால் அதுவோ காற்றைப் போல் மனதை சூழ்ந்து கொண்டதில், தவிர்க்க முடியாத நிலையில் அவள். ஆனால் இன்று படிப்பைக் கூட இன்னும் முடிக்கவில்லை அதற்குள் திருமணமா என்னும்போது சரியாகத் தோற்றவில்லை, வீட்டில் அனைவரும் படித்தவர்கள் என்றிருக்க படிப்பின் அருமை புரியாமல் போகுமா என்ன?
"புரியுதுங்க, ஆனா இந்த வயசுல கல்யாணம் பண்ணி, எப்படிங்க வாழப் போறேன். படிச்சு முடிக்கக் கூட இல்ல, இத்தனைக்கும் மேஜர் கூட ஆகல, அண்ணா உங்கள பிடிச்சு ஜெயில்ல போட்டா என்னங்க பண்றது?" என்று இழுத்தாள் ரதி.
இத்தனைக்கும் இவ்வளவு தூரம் அவளை வரவழைத்தது அவனது காதல் ஒரு புறம் என்றால், இன்னொரு புறம் அவன் தற்கொலை செய்வதாக மிரட்டியதும் தான்.
அவன் மனதோ 'வக்கீல், போலீஸ் குடும்பம்ல அந்தப் புத்தி இருக்கத்தானே செய்யும்' என்று எண்ணியவனுக்கு எரிச்சல் தான் மேலிட்டது.
"இங்க பாரு ரதி, உன்ன விட எனக்குச் சட்டம் தெரியும். உன் அண்ணனால நம்மள கண்டுபிடிக்கவே முடியாது.. நாம இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டு என் பிரண்டோட ஊருக்குப் போறோம். உனக்குப் பதினெட்டு வயசானதும் தான் இங்க வருவோம். நீ கவலைப் படாத உங்க அண்ணனால நம்மள பிரிக்க முடியாது" என்றான் ஆனால் அப்போதும் அவளிடம் ஏதோ யோசனை இருப்பதை உணர்ந்தவன்,
"ரதி இங்க பாரேன் நான் வேண்டாமா உனக்கு? என் காதல் இல்லாம நீ வாழுவியா தெரியல ரதி ஆனா, என் காதல் உண்மையானது நீ இல்லனா நானும் இல்ல. இவ்வளவு பழகியும் என்ன பத்தி தெரியலையா ரதி? உன்ன நான் படிக்க வைக்க மாட்டேனா? இப்போ கூட உனக்கு என் மேல நம்பிக்கை இல்லனா நீ போகலாம், ஆனா நான் அதுக்கப்பறம் நீ இல்லாத இந்த உலகத்துல உயிரோட இருக்கவே மாட்டேன்" என்று இறுதியில் உறுக்கமாகப் பேசியதில், காதல் கொண்ட அவளது மனம் இறங்கியிருந்தது.
"சரிங்க" என்றவள், அமைதியாக அவன் வாகனத்தில் ஏறி இருந்தாள். அவனும் வண்டியைக் கிளப்ப, ரதி தேவியின் காதல், கானலை நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தது.
_________________________
அடுத்த நாள் ரதியின் வீடே கதிகலங்கித் தான் போயிருந்தது. தந்தை பாலசந்திரனும் சரி தாய் கோகிலாவும் சரி அத்தனை உடைந்து போயிருந்தனர்.
கோகிலா மனநல மருத்துவர், அவரும், பாலசந்திரனும் எத்தனை வேலைப்பளு என்றாலும் குழந்தைகளைக் கவனிப்பத்தில் என்றும் தவறியதில்லை, அப்படித்தான் ரதியின் காதல் விடயமும் தெரியவர, அத்தனை பக்குவமாய் எடுத்துச் சொல்லி இருந்தனர்.
ரவி தான் வானுக்கும் பூமிக்கும் குதித்தான். ரதியை கண்டிக்கவும் செய்தான். அவனுக்கும் ரதிக்கும் இடையே பத்து வருடங்கள் வித்தியாசம். அவள் பிறக்கும்போது அவன் ஓரளவுக்கு புத்தி தெரிந்த குழந்தை.
வளர வளர அவனது எண்ணங்கள் பெரியவன் போல இருக்கும் ஆனால் அவளோ குழந்தை, ஒவ்வொன்றுக்கும் எதிர் எதிர் வாதம் இருப்பதால் அதுவே அவனைக் கண்டிப்பான அண்ணனாக அவளிடம் காட்டி இருந்தது.
மோகனை அவனுக்குப் பார்த்தது முதல் பிடிக்காத ஒரு எண்ணம். அவன் பார்வையில் பேச்சில் ஏதோ கள்ளம் ஒளிந்திருப்பது போல் தோன்றுவதால் அவனுடன் என்றும் பேச்சு வைத்துக்கொண்டதில்லை.
இதில் தங்கை காதல் தெரிய வந்திருக்க, அத்தனை கோபம் அவனிடம். அதனாலேயே அவளை வெளிநாட்டில் இருக்கும் அவர்கள் உறவினர் வீட்டுக்கு அனுப்பி அங்கேயே படிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்திருக்க, இன்று இதோ இப்படி அவள் செல்வாள் என்று எதிர்பார்திருக்கவில்லை.
மோகன் மீது கோபம் எல்லை கடந்தது, காதல் காதலித்தவரை உயர்த்த தானே வேண்டும், இப்படி ஒன்றும் அறியாத வயதில் திருமணம் செய்து எதைச் சாதிக்கப் போகிறான். காதலித்தவனிடம் பொறுமை கூட இல்லையே.. இத்தனைக்கும் அந்தக் குழந்தையிடம் இவனுக்கு என்ன காதல் என்று கோபம் கோபமாய் வந்தது..
அவனும் இரவிலிருந்து தேடுகிறான் தான் ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை, தங்கையை எங்குக் கொண்டு சென்றான் என்று எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.. ஒரு அண்ணனாய் காவல்துறை அதிகாரியாய் அவனிடம் தோற்றுப்போன உணர்வு. சத்தமாய் கத்த வேண்டும் போலிருந்தது. அடக்கிக் கொண்டான்.
மனைவி கீதாஞ்சலி, அவன் நிலையை உணர்ந்து அவனருகில் வந்து நிற்க, அவனுடைய நான்கு வயது பெண் குழந்தையும் அவனிடம் வந்து தூக்குமாறு கையை நீட்ட, குழந்தையைத் தூக்கிக் கொண்டவனுக்கு, தனது வளர்ந்த குழந்தையின் எண்ணம் தான் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
"ப்பா, அவன் வீட்டுக்கு ஆள் அனுப்பி இருக்கேன், அங்க யாரும் இல்லயாம்.. உங்களுக்கு வேறெதாவது அட்ரஸ் தெரியுமா அவனோடது? என்று கேட்க
பாலச்சந்திரனோ "தெரியலையே ரவி, "அவன் என் ஜூனியர் அதுவும் ரெண்டு வருசமா தான் தெரியும், பயங்கர டேலன்ட் அதான் அவன் என் எல்லா கேஸ்லயும் சம்மந்தப்பட்டிருப்பான், அதனாலதான் வீட்டுக்கும் வருவான். அவன பத்தி சாதாரணமா தெரியும் அத தாண்டிப் பெரிசா விசாரிக்கத் தோணல" என்றார் அவர் உடைந்த குரலில்.
"அவன் சரியான நடிகன்ப்பா, அவன் பார்வை எப்போவும் எனக்கு உண்மையானதாப் பட்டதில்லை, அன்னைக்கு நான் போய் இந்தக் காதல் எல்லாம் வேண்டாம், அவ சின்னக் குழந்தைனு அவ்வளவு பேசுனேன். அவனும் நல்லவனா நான் பேசுறது சரினு உணர்ந்து பேசுற போலப் பேசுனாப்பா. நானும் ஒரு நிமிஷம், ரதி படிச்சு முடிச்சதும் அவனுக்கே கொடுக்கலாமானு கூட யோசிச்சேன். ஆனா இப்படி பண்ணுவான்னு எதிர் பார்க்கல, அவன் பண்ணதுக்கு பின்னால ஏதோ காரணம் இருக்கும்னு தோணுதுப்பா, அவனப்பத்தி விசாரிச்சு ரதிய அவன் கிட்ட இருந்து மீட்கணும் மீட்பேன்" என்றவன் அவன் குழந்தையைத் தன் நெஞ்சில் சாய்த்துக்கொள்ள, அவனது மன உணர்வுகள் இதயம் வழியே அவன் குழந்தைக்கும் கடத்தப்பட்டிருந்தது.
_________________________
அங்கே அந்தப் பெரிய திருமண மண்டபமே அத்தனை அழகாய் ஜொலித்தது. 'கனகத்தாரா வெட்ஸ் சிரஞ்சீவி' என்று முன்னே பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டு அதனைச் சூழ பூக்கள், மின் விளக்குகள் என அத்தனை அழகாய் அலங்காரம் செய்யப்படிருந்தது.
இன்னும் சற்று நேரத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. மணப்பெண் அத்தனை அழகாய் அன்றைய நாளில் தேவதையாய் தயாராகியிருந்தாள். அவளது மனம் போலவே முகமும் அத்தனை பிரகாசித்துக் கொண்டிருந்தது.
அந்த நேரம் அவளது தாய் உள்ளே வர, அத்தனை நேரம் புன்னகை வீசிய அவள் இதழ்கள் சட்டெனப் புன்னகையை தொலைக்க, தாயாகப்பட்டவருக்கு மனம் வலிக்கத்தான் செய்தது, இருந்தும் மகள்மீது கொண்ட பாசம் கண்ணை மறைக்க, "தாரா இப்போகூட அம்மா சொல்றத கேளேன்டி கல்யாணம் பண்ணிக்கிற வயசு உனக்கில்லை, இருபதொரு வயசுல கல்யாணம் பண்ணி அதோட பொறுப்ப உன்னால ஹான்டில் பண்ணிக்க முடியாதுடி.. இன்னும் நீ பார்க்க வேண்டியது தெரிஞ்சிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு, அம்மா உன் நல்லதுகாகத்தான் சொல்லுவேன்" என்று அவர் பாட்டுக்குப் பேசிக்கொண்டிருக்க, அவளோ எந்தவித எதிர்வினையும் இல்லாமல் பேசுகிறாயா பேசிக்கொள் என்பது போல் இருந்து கொண்டாள்.
"தாரா உங்கூடத்தான் பேசுறேன், என்ன பாருடி" என்க அவளோ "மா இங்க பாரு இது என் லைப் நான் விருப்பபட்ட படிதான் நடக்கும் நடக்கணும். உன் இஷ்டத்துக்கு பண்ண நான் ஒன்னும் உன் பொம்ம இல்ல, அதவிட என் கல்யாணத்த பத்தி பேசுறதுக்கு உனக்குத் தகுதியும் இல்லை" என்று எடுத்தெரிந்து பேசினாள் எப்போதும் போல
மீண்டும் அவளது தாய் ஏதோ சொல்ல வர, கை நீட்டித் தடுத்தவளோ "எல்லா அம்மாக்களும் தன் குழந்தைக்குக் கல்யாணம் நடக்கும்னு தான் பாப்பாங்க ஆனா நீ, உன்னோட சுயநலத்துக்காக யோசிக்கிற சீப்பான அம்மா. உன்னோட மோடிவ் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும், உனக்கு உன் அழக நல்லா யூஸ் பண்ணிக்கணும், உன் பொண்ணுக்கு கல்யாணம்னதும் உன்ன எல்லாரும் வயசான ஆளா பாத்துடுவாங்கனு உனக்குக் கவலை, அதனால இந்தக் கல்யாணத்தை என்ன வெச்சே நிறுத்த நினைக்கிற, நல்ல நாள் அதுவுமா நான் சந்தோசமா இருந்தா பொறுக்காதே" என்றவள் அங்கிருந்து எழுந்து செல்ல, செல்லும் அவளையே பார்த்திருந்தார் அவளது தாய்.
அந்த நேரம், அவர் தோளில் யாரோ கை வைக்க அவரோ திரும்பிப்பார்க்க, அங்கே அவரது மகன் நரேந்திரன் நின்றிருந்தான்.
"மா இவ எல்லாம் ஒரு ஆளுன்னு உன் எனர்ஜி வேஸ்ட் பண்ணாத, இவ அப்படியே பாட்டி ஜெராக்ஸ்னு உனக்குத் தான் தெரியுமே, சொன்னா கேட்குற ஆளா இவ... எல்லாம் நம்ம மங்கம்மா ட்ரெயினிங் வேறெப்படி இருக்கும். ஆனாலும் உன் மாமியார உன் வயித்துல பெத்தெடுத்த பெருமை உன்ன தான் சேரும்.. அதுலயும் உன் அழகுல அவளுக்குப் பொறாமைமா அதான் இந்தக் குதி குத்திக்கிறா" என்றான் தாயின் மனதை மாற்றும் வண்ணம்,
அப்போதும் தாயின் முகத்தில் தெளிவு இல்லாமல் போக, "இப்போ என்ன உனக்கு? நான் மாமாவ பத்தி நல்லா விசாரிச்சிட்டேன்மா, அப்பா அவர் கிளைண்டோட மகன நம்ம தாராக்கு பார்க்கும் போதே எனக்குத் தெரியும் பெரிசா எங்கயோ காசு மாறுதுனு, அப்போவே விசாரிக்க ஆரம்பிச்சிட்டேன். அவங்க அப்பா கொஞ்சம் நம்ம அப்பா போலத்தான்மா ஆனா மாமா சொக்க தங்கம், எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல, ஆனா ஒரே ஒரு கவலை" என்றவன் நிறுத்த, அந்தத் தாயின் உள்ளம் துடித்தது.
"என்ன நரேன் என்னாச்சு?" என்று பதற்றமாய் வினவ அவனோ, "அட என் செல்லமே" என்று அம்மாவைக் கொஞ்சியவன் "பயப்பட ஒன்னுமே இல்லமா, இந்தப் பஜாரிகிட்ட மாமா மாட்டப் போறாங்களேன்னு தான் அந்தக் கவலையும் கூட" என்று முடிக்க, அவன் முதுகில் அடித்திருந்தார் அவனது தாய்.
"ஒரு நிமிஷம் பயந்தே போய்ட்டேன்டா நரேன், நல்லா விசாரிச்சுட்ட தானே" என்க அவனோ சிரித்தபடி "நான் வேணா சத்தியம் பண்ணட்டுமாமா?" என்றான். அவரோ முறைக்க, "ஓகே மாதாஜி சரண்டர், இப்போ அடியேன் என்ன சொல்லணும், மாமா என்னவிட உங்க அண்ணன விட ஏன் உங்க அப்பாவவிடவும் நல்லவர் குறிப்பா என் அப்பா மாதிரி இல்ல, இப்போ ஓகேவா?" என்க, அவரோ "ராஸ்கல் அப்பாவ கலாய்க்கிறியா?" என்று முதுகில் அடிபோட, தாயின் மனது சற்று மாறியதில் அவனும் சந்தோசமாக அந்த அடியைப் பெற்றுக்கொண்டான்.
அதன் பின் திருமணம் வெகுசிறப்பாய் முடிந்திருந்தது. மகள் செல்லப் போகிறாள் இனி அவளும் வானில் பறக்கும் நேரம் வந்துவிட்டது என மனதை தேற்றிக் கொண்டவர், அவளை வழியனுப்ப முழு மனதாய் தயாராகினார். தாயின் மனதறிந்து அவர் அருகே நரேந்திரன் வந்து நிற்க, அவரோ அவன் கைகளை இருக்கமாகப் பற்றிக்கொண்டார்.
அதன் பின் சடங்குகள் ஒவ்வொன்றாய் முடிய, முதலில் தம்பதியினர் குடும்பத்தில் மூத்தவரான தாராவின் பாட்டி மாங்கம்மாவின் காலில் விழ, அவர்களை வாழ்த்தியவர், கூடவே "இங்க பாரு தாராக்கண்ணு உன் அம்மாபோலச் சீவி சிங்காரிச்சிட்டு இல்லாமப் பக்குவமா நல்லா நடந்துக்கணும் சரியா? நம்ம குடும்ப மானத்தை நீதான்டா காப்பாத்தணும், நம்ம குடும்பம் தழைக்க அந்தக் கடவுள் உனக்குத் துணை இருப்பாரு" என்று மருமகளை அந்த இடத்திலும் தாழ்த்தி பேசாவிட்டால் தூக்கம் வராது என்பது போல அவர் வேலையைச் சரியாய்ச் செய்திருந்தார்.
மாப்பிளை வீட்டாருக்கும் அதில் சிறு முகச்சுளிப்பு இருந்தாலும் பெரியவர் என்பதால் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் உண்மையில் கோபம் வரவேண்டிய அவரது கணவருக்கு இதில் குறை இருந்ததாகத் தெரியவில்லை. கணவனின் குணம் அறிந்ததால் அவரும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அடுத்து அங்கே வீல் செயரில் அமர்ந்திருந்த, தந்தை அருகே சென்ற தாராவும் அவளது கணவனும் காலில் விழுந்து எழும்ப அவரும் அவர்களை வாழ்த்தினார்.
இரண்டு வருடங்களின் முன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் அவர். இப்போது மனைவியின் கவனிப்பில் நன்கு தேறிவிட்டார் தான். ஓரளவுக்கு நன்றாகவே நடக்க முடிகிறது. ஆனால் இன்று தொடர்ச்சியாக நீண்ட நேரம் நின்றதால் முடியாமல் போகவே வீல் செயரில் அமர்ந்திருக்கிறார்.
அடுத்து தாயிடம் வந்த தாராவின் முகத்தில் கோபம் இருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. புகுந்த வீட்டு ஆட்களுக்கு முன் தன் குணத்தை தவறாகக் காட்ட பிடிக்காமல், அமைதியாகத் தாயின் காலில் விழுந்து எழும்பினாள் கடமைக்காக, ஆனால் அவள் போலல்லாமல் மானதாரவே வாழ்த்தித்தான் அனுப்பி வைத்தார் ஒரு தாயாக...
___________________________
அன்று விடுமுறை தினம் என்பதால், சற்று நேரத்துக்கே எழுந்துகொண்டாள் மனோரஞ்சனி "ச்சே, எப்பவும் வேலைக்குப் போற நேரம் தான் ஊர்ப்பட்ட தூக்கம் வரும், எப்போ லீவ்னு வருதோ அன்னைக்கு வராது" என்று தூக்கத்துக்கு ஒரு கொட்டு வைத்தவள், எழுந்ததும் நேரே சென்றது அவளது அறைக்குள்ளேயே இருக்கும் குட்டி நூலகத்துக்குத் தான்.
மனோரஞ்சனி இருப்பத்தைந்து வயது யுவதி. திறமையான வழக்கறிஞரும் கூட, அவள் ஒரு புத்தகப் பிரியை என்பதை விடப் புத்தகப் பேய் என்று சொல்லலாம் அப்படித்தான் அவளது அம்மாவிடம் திட்டு வாங்குவாள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகத்தில் மூழ்குவது அவளக்குப் பிடித்தமான ஒன்று, இப்போதும் அவள் அங்குச் சென்றிருப்பது நேற்றிரவு படித்துவிட்டு பாதியில் வைத்த புத்தகத்தை முடிப்பதற்காகத் தான்.
அது சமீப காலமாக அவளுக்குப் பிடித்த எழுத்தாளர், நாவலாசிரியர் கண்ணகியினுடைய புத்தகம். கவிதை, கட்டுரை, சிறுகதை, தொடர்கதை இப்படி அவரது ஆக்கங்கள் எதுவும் விட்டுவைப்பதில்லை, அவர் எழுதியதும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் இருக்கும். வளர்ந்து வரும் எழுத்தாளர்.
இதோ அவள் படிக்க எடுத்திருப்பது 'பாரதி கண்ணகியானாள்' என்று அதே எழுத்தாளரால் எழுதப்பட்ட, தொடர் கதை ஒன்று தான். பாதி கரை தாண்டியாகிவிட்டது. இரவு தூக்கம் வந்து தடை செய்துவிட்டதென்றால் இப்போது எடுத்தால் தாய் வந்து தடங்கல் செய்கிறார். சலித்துக் கொண்டவள் "என்னமா" என்றாள் தாயின் அழைப்பை உணர்ந்து..
"எழுந்ததும் அதுல உக்காந்துட்டியா? போய்க் குளிடி அழுக்கு மூட்ட, லீவ் நாள்ல உன்ன குளிக்க வைக்கிறதே எனக்குப் பெரிய போராட்டம் தான்"
"ம்ம்ம் அதான் வேலைக்குப் போகும்போது டெய்லி குளிக்கிறேன்ல, லீவ்லயும் குளி குளினு படுத்தாதமா?" என்றவள் அவர் கொண்டு வந்த டீயை பல்லைக் கூட விலக்காமல் குடிக்க, வைத்தியர் அவர் சும்மா இருப்பாரா?
அவளிடமிருந்து அதனை வாங்கியவர் "ஓடு போய் முதல்ல ஃப்ரஷாகிட்டு வா அப்பறம் குடிக்கலாம்" என்க, "ரொம்ப தான் எலி எங்கிட்ட அராஜகம் பண்ணுது, அப்பா வரட்டும் உன்ன உள்ள தள்ளுறேனா இல்லையானு பாரு, நான் தான் வக்கீல் உன்ன வெளிய எடுக்கவே மாட்டேன் பாத்துக்க" என்றவள் பல் துலக்கச் சோம்பேறித்தனப்பட்டு உள்ளே நுழைந்தாள்.
வெளியே நின்ற அவள் தாயோ "உன் அப்பா என்ன அப்படிலாம் பண்ண மாட்டாங்க, அப்படியே பண்ணாலும் அதெல்லாம் உன்ன விடப் பெரிய வக்கீல் எல்லாம் இருக்கு எங்ககிட்ட, மூடிட்டு முதல்ல ப்ரஷ் பண்ணுடி" என்று மனோரஞ்சினிக்கே தாய் என்பதை நிரூப்பித்தார்.
கானல் தொடரும்..
Last edited: