• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் 02

MK31

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
27
13
thanjavur
InShot_20241128_135734632.jpg
காதல் 02

'பெண்கள், யார் இவர்கள்? பெண்கள், ஆண்களின் கைப்பாவைகளா? ஆயிரம் ஆயிரம் பெண்ணியவாதிகள் மண்ணில் தோன்றி இருந்தாலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் பெரிதாக மாற்றம் எதுவும் தோன்றிவிடவில்லையே!

பேசுவதற்கே பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்க எங்ஙனம் பெண்ணியம் பேசுவதாம். அந்தக் காலத்தில் "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" என்று முன்னோர்கள் சொல்லிச் சென்ற பழமொழி இப்போது அவரவர்கள், அவர்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றிக் கொள்ளவில்லையா? இல்லையேல் பழமொழியைத் தான் கொல்லவில்லையா?

கல்லாக இருந்தாலும் கணவனாம் புல்லாக இருந்தாலும் புருஷனாம். எப்படி எல்லாம் மாற்றிக் கொள்கின்றனர். வீட்டில் இதை வைத்துப் பெண்களுக்கு அறிவுரை வேறு வழங்கும், மூடர்களாக இன்றும் நம் சமூகம் இருக்கின்றது என்பதில் கவலையைவிட விரக்தி தான் அதிகமாகத் தோன்றுகிறது.

இதையா நம் முன்னோர்கள் சொல்லிச் தந்தார்கள். "கல்லான் ஆனாலும் கணவன் புல்லன் ஆனாலும் புருஷன்" அதாவது உங்களில் சரிபாதியாக இருக்கும் உங்கள் வாழ்க்கை துணையானவன் படித்திருந்தாலும் படிக்காவனாய் இருந்தாலும் கணவனாக அவனுக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம். அதற்காக அடிமைகளாக, கைப்பாவைகளா இருக்க வேண்டுமென்று அர்த்தமில்லை.

இங்கு பெண்ணியவாதம் என்றால் என்ன என்பதை விளக்குவதற்கு முன் பெண்கள் தாங்கள் யார் என்பதை இந்தச் சமூகத்துக்கு உணர்த்துவதே முதலில் முக்கியமானதாகும்.

யாருக்கு தான் குடும்ப வாழ்வில் சிக்கல் இல்லை, அப்படியென்றால் ஒவ்வொரு பெண்ணும் கணவனுக்கு எதிரே போர்க் கொடி பிடிப்பின் சமூக சீர்குலைவு ஏற்படாதா எனச் சிலர் எண்ணக்கூடும்.

சமூகத்தில் நல்ல ஆண்கள், நல்ல பெண்கள் இருப்பதை போல் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்கள் எனப் பிரிவுகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

பெண்களைப் பூக்கள்போல மிருதுவாய் நடத்தும் ஆண்களும், அவர்கள் சுய தேவை, சுதந்திரத்துக்காகப் பொய்யாகப் பெண்ணியவாதம் செய்யும் பெண்களும் இதே சமூகத்தில் தான் வாழ்கின்றனர்.

இங்கே பெண்ணியவாதம் என்பது அதனைப் பேசும் தனிநபர் சார்ந்து மாறக்கூடியது.

பெண்கள் அடிமைகளல்ல என்று உறுதியாய் உண்மையாய் குரல் கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் கடந்து வந்த ரணங்கள், கடக்க முடியற்சி செய்யும் ரணங்கள், இல்லையேல் முடிவெடுக்கப் போராடும் ரணங்கள் என எத்தனையோ காரணங்கள் புதைந்திருக்கும்.

இப்போதும் குடும்பம் குழந்தை என்று கட்டுப்பட்டு நிற்கும் பெண்களைக் கோழை என்று ஒரு வரையறைக்குள் ஒரு போதும் நிறுத்திவிட முடியாது. பொறுப்புக்கள் என்னும் சுமைக்கயிறு, பாசம் என்னும் விலங்கு, குழந்தைகள் என்னும் கடமை. இப்படி பல ஆயிரம் தடைகள், அதுவும் அவர்கள் விரும்பி ஏற்று, ஆண்களால் சுமக்க முடியாத பாரத்தையும் சேர்த்துச் சுமக்கும் பெண்கள், அவர்கள் கண்ணகியின் மறு உருவங்கள்.

பெண்கள் அடங்கி இருப்பதாக எண்ண வேண்டாம். அவர்கள் மனதில் ஒன்றை நினைக்காமல் யாராலும் எதையும் செய்ய வைத்துவிட முடியாது. அவர்கள் கடமைக்காகவோ, அன்புக்காகவோ, சமூகத்துக்காகவோ என ஏதோ ஒரு காரணத்துக்காகவென்று அவர்களை அவர்களே கட்டுப்படுத்திக் கொள்ளாதவரை யாராலும் பெண் என்னும் காட்டாறை கட்டியாண்டிட முடியாது. கட்டவிழ்த்திடவும் முடியாது.

கண்ணகி மனதில் உள்ள சீற்றம் ஒருநாள் மதுரையில் உள்ள கொடியவர்களை எரித்தது போல இந்த உலகில் உள்ள ஒவ்வொரு கண்ணகியின் சீற்றமும் பெருந்தீயாய் குற்றம் களைய காத்திருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'

இப்படிக்கு,
உங்களில் ஒரு கண்ணகி.

அத்தனை நேரமும் அந்த வாரத்துக்குரிய தலைப்பான பெண்ணியவாதம் குறித்த தன்னுடைய கட்டுரையின் முடிவுரை பகுதியை எழுதி முடித்து, அவரது கட்டுரையைச் சமூக வளைத்தளத்தில் சமர்ப்பித்தார் எழுத்தாளர் கண்ணகி.

சமர்ப்பித்த அடுத்த சில வினாடிகளில், முதல் பதில் வந்தது என்னவோ அவர் மகனிடமிருந்து தான். "மிக அருமையாகச் சொல்லிவிடீர்கள் எழுத்தாளரே, மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்று அனுப்பியவன், அது போதாதென்று அம்மாவை அழைப்பில் பிடித்துவிட்டான்.

"மா கலக்கிட்ட போ, சீக்கிரம் இந்தக் கண்ணகியோட சீற்றத்த பார்க்கவும் ஆவலா இருக்கேன் ரதி டார்லிங். சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாம்மா, அந்த மங்கம்மாக்கும் சேர்ந்து முடிவு ஒன்னு காட்டுவோம்" என்றவன் வாகனம் ஓட்டியபடியே பேச, அது தாய்க்கு அங்கிருந்து வந்த சத்தத்தில் புரிந்து கொள்ள முடிந்தது.

"டேய் நரேன், எத்தன வாட்டி சொல்லுறது பைக் ஓட்டிட்டே பேசாதன்னு கேட்க மாட்டேன்னு இருப்பியா நீ, முதல்ல ஃபோன வெச்சிட்டு ஒழுங்கா வண்டியோட்டி காலேஜ் போய்ச் சேரு" என்க, அவனோ "எழுத்தாளர் டு அம்மாவா? ஓகே ஓகே ரதிதேவி சொன்னா நோ அப்ஜெக்ஷன்" என்றவன் அழைப்பைத் துண்டிக்கப் போக,

"நரேன், ஈவினிங் வீட்டுக்குக் கொஞ்சம் சீக்கிரம் வா" என்றவர் குரலில் ஏதோ மாற்றம் மகனுக்குப் புரிய, அவனோ அதற்கு "என்னாச்சுமா?" என்க, அவரோ "நீ டென்ஷன் ஆகாம வா நரேன் பேசிக்கலாம்" என்றவர் அழைப்பைத் துண்டித்திருந்தார்.

ரதிதேவிக்கு, அவர் எடுத்திருக்கும் முடிவில் அத்தனை உறுதி இருந்தது தான். ஆனால் நரேன் ஒருவன் தான் அவருடைய இப்போதைய கேள்வி. குழந்தைகளுக்காகத் தான் இத்தனை நாள் அவர் அமைதியாக இருந்ததும் கூட. இதோ, இப்போது மகள் திருமணம் செய்து ஒரு மாதம் கடந்திருக்க இனியும் இங்கே இருப்பதில் அவருக்கு விருப்பமில்லை.

இந்த இருப்பத்தி மூன்று வருட திருமண வாழ்வு அவருக்கு அத்தனை வலிகளைக் கொடுத்திருந்தாலும், ஆரம்ப காலத்தில் மோகன் மீது அவர் கொண்ட காதல், நம்பிக்கை இவை இரண்டுக்காக அத்தனையும் தாங்கிக் கொண்டவர் அவர்.

ஆனால் காதல் என்றோ காணாமல் போயிருந்தது. எந்த நொடி என்றெல்லாம் தெரியவில்லை ஆனால் காற்றோடு காதலும் கரைந்து சென்றிருந்தது.

மீதம் இருந்த எந்த நம்பிக்கை ஒன்றுக்காக அவர் அத்தனையும் பொறுத்துக் கொண்டாரோ, அந்தக் நம்பிக்கை அவர் மனதில் இறந்து இதோ இரண்டு வருடங்கள் ஆகிறது.

அப்படியே அமர்ந்திருந்தவர் மனதில் பழைய நினைவுகளின் தாக்கம்.

திருமணம் செய்து கொண்டது பதினேழாம் வயதில், எங்கேயோ பேர் தெரியாத ஊரில் யாரோ ஒருவரின் வீட்டில் தான் முதல் நாள் அவர்களது வாழ்க்கை தொடங்கியிருந்தது.

சிறிய பெண் என்று தனக்காக யோசித்து சேர்ந்து வாழும் நாளை மோகனே தள்ளி வைப்பார் என்று எண்ணியிருந்தவரது கணவர் செய்தது என்னவோ, அன்றே வலிக்க வலிக்க அவருக்குத் தாம்பத்தியம் கற்றுக்கொடுத்தது தான்.

எதிர்த்து வேண்டாம் என்னும் போதெல்லாம் காதலை முன்னிறுத்தினார். அந்தச் சிறிய வயதில் யாரும் இல்லாமல் இவருடன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டவர், கூடவே ஊர் பேர் தெரியாத இடம் வேறு, நம்பிக்கையும் கணவர் மீதுதானே! இதுவெல்லாம் அவர் எதிப்பை தடுத்திருந்தது.

காதலன் கணவன் என்ற போர்வைக்குள் ஒரு கற்பழிப்பு.. அதுவும் பதினெட்டு வயதை கூட அடையாத பெண்ணுடன், தன்னை நம்பி வந்தவள் என்று யோசிக்கும் திறன் கூட இல்லையா?? இல்லை யோசிக்க நினைக்கவில்லையா?? அவருக்கே வெளிச்சம்.

அதன் பின் என்ன, தினம் தினம் அதே பல்லவி தான். விளைவு அடுத்த மாதமே நரேந்திரன் ரதியின் வயிற்றில் தங்கியிருந்தான்.

குழந்தையின் வயிற்றில் இன்னொரு குழந்தை என்ற கதை தான்.

அதனைக் கேள்விப்பட்டு சந்தோசம் கொள்ளவேண்டிய கணவனாகப்பட்ட மோகனுக்கு பயங்கர கோபம். என்னவென்று கேட்டால் இந்தச் சிறிய வயதில் தந்தையாக விருப்பம் இல்லையாம், ஆனால் சிறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள, அவளுடன் தாம்பத்தியம் வைத்துக்கொள்ள மட்டும் இனித்ததாம்.

இதில் குழந்தையைக் களைக்க வேறு சொல்ல, அன்று முதன் முறையாக ரதி அவரது எதிப்பை உறுதியாக வைத்திருந்தார். அதில் மோகன் தான் சற்று விட்டுப்பிடிக்க வேண்டியிருந்தது.

மோகனுக்கு ரதி மீது காதல் என்பதை தாண்டி ஆசை தான் மேலோங்கியிருந்தது.

அதிலும் ரவி அத்தனை எதிர்ப்பாய் நின்று அவர்கள் குடும்பத்தைப் பற்றிப் பெரிதாக உயர்த்தி தான் தகுதி இல்லை போலப் பேசியதில், கோபம் கொண்ட மோகன் தான் ரதியை இப்படி திருமணம் செய்திருந்தார்.

அத்தனை விரைவில் ரதியை விட்டுவிடுவதற்கும் மனதில்லை, ரதியின் அழகில் அத்தனை ஆசை அவரை இழக்கவும் தயாரில்லை.

"ரதி ப்ளீஸ் புரிஞ்சிக்கோ நமக்கு இப்போ பேரண்ட்ஸ் ஆகுற வயசில்லம்மா புரியுதா? உனக்கு அடுத்த பர்த்டே வரும் வரைக்கும் இருக்கனும், அதுக்கு அடுத்த இயர் வர இங்க இருந்தாகனும், அதுக்குள்ள இந்தக் குழந்தை நமக்குத் தேவையா சொல்லு, அங்க ஊருக்குப் போனதும் பெத்துக்கலாம்டா எத்தனை குழந்தை வேணும்னாலும்" என்று எவ்வளவோ பேசிப்பார்த்தும் ரதி அவர் முடிவில் உறுதியாகத் தான் இருந்தார்.

உள்ளுக்குள் அத்தனை கோபம் இருந்தாலும் காட்டிகொள்ளாமல் இருக்க கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. காரணம் தான் காட்டும் கோபத்தில் ரதி இங்கிருந்து செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அவர் முயற்சி எல்லாம் வீணாகி விடுமே! இந்தத் திருமணம் செல்லுபடியாகும் வரை பொறுமை முக்கியம் என்பதை உணர்ந்தவர் அமைதியாக இருப்பதை தவிர வேறென்ன செய்து விட முடியும், பொறுமை காக்கத் தொடங்கினார்.

அடுத்த ஒன்பது மாத்தில் நரேந்திரனை பெற்றெடுத்த ரதியின் கண்களில் அத்தனை மின்னல், குழந்தை வேண்டாம் என்று மறுத்த மோகனுக்கும் தன் குழந்தை என்ற உணர்வு தோன்ற, மகனை அன்பாகவே பார்த்துக்கொண்டார். அதில் ரதிக்கு மனநிறைவு தான்.

இப்படியே நாட்கள் சென்று ரதியின் பதினெட்டாவது பிறந்தநாளும் வந்து சேர்ந்திருக்க, குடும்பமாய் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

இதனைக் கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்த ரவி வர்மன் கண்டது என்னவோ குழந்தையுடன் நிற்கும் அவரது வளர்ந்த குழந்தையைத் தான்.

அதன்பின் என்னவென்று பேச, ஆனாலும் விடாமல் மோகனிடம் மல்லுக்கு நின்றார் தான். ஆனால் மோகனிடமிருந்து எகத்தாளமாகவே பதில் வந்தது.

தங்கைக்காக வந்தவர் அவமானப்பட்டு திரும்பிப் போகும் நிலை தான். ரதிக்கும் அத்தனை கவலையாகவே இருந்தது. ஆனால் மோகனுடன் பேசி வெல்ல முடியாது என்பதும், தான் பேசப்போனால் அண்ணனை இன்னும் பேசுவார் என்றும் அவரது குணம் இத்தனை நாளில் தெரிந்திருந்ததிலும் அமைதியாக நின்று கொண்டார்.

அதன்பின் நாட்கள் அதுபாட்டுக்கு நகர்ந்தது. மோகனின் தாயார் எதுக்கெடுத்தாலும் திட்டத் தொடங்கினார். ஏனென்றும் காரணம் புரியவில்லை, எல்லா வேலையும் அவர் ஒருவராகத்தான் அந்த வீட்டில் செய்கிறார். ஆனால் தன்னை கண்களால் கண்டுவிட்டால் போதும் எதற்காவது திட்டவில்லை என்றால் அவருக்குத் தூக்கம் வராது அந்தளவுக்கு காரணத்தைத் தேடித் தேடி திட்டுவார். அப்படி தான் என்ன செய்துவிட்டோம் என்று ரதி சிந்திக்காத நாளே இல்லை.

அது உலக மாமியார் வழக்கம் என்பது பாவம் ரதிக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

கணவனிடம் மாமியார் பற்றிச் சொல்ல வேண்டாம் என்று இத்தனை நாளாய் மறைத்திருந்தவர், ஒரு நாள் முடியாமல் சொல்லியும் விட,

மோகனோ "இதெல்லாம் ஒரு விஷயமா ரதி வேலைக்குப் போய் வர்ற நான், வெளில எவ்வளவு ஃபேஸ் பண்ணுறேன் தெரியுமா? வீட்டுக்கு வந்து நிம்மதியா இருக்கலாம்னா அதுக்கும் வழி இல்லையா? நீ வீட்டுல சும்மா தான இருக்க, இதெல்லாம் சொல்லி என்ன டென்ஷன் பண்ணனுமா?" என்று கோபமாய் திட்டியவர், வழமை போல் அன்றும் கணவனாய் ரதியை நாடி இருந்தார்.

அவர் சொன்ன 'வீட்டில் சும்மா தானே இருக்க' வார்த்தை காதில் மீண்டும் மீண்டும் ஓட, தன் படிப்பை எப்படி விட்டோம், கேட்டிருக்க வேண்டுமோ என்ற எண்ணம் மூளையை குடைய ஆரம்பிக்க, அடுத்த நாளே மோகன் முன்னே போய் நின்றார். படிப்பைத் தொடர வேண்டுமென்று, மோகனுக்கோ அதில் விருப்பம் இருக்கவில்லை..

எப்போதும் ரதி தனக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு, அதனை நேரடியாகச் சொல்ல முடியாததால் குழந்தைக்கு ஒரு வயது இன்னும் வரவில்லையே! அதன் பின்னர் பார்த்துக்கொள்ளலாமென அப்போது அந்தப் பேச்சுக்கு மோகன் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

அந்த வீடு அவருக்கு அந்நியமாகி போக, குழந்தை நரேன் ஒருவனே அவருக்கு ஆறுதல்.. இப்படியே நாட்களும் கழிய
நரேந்திரனுக்கு ஒரு வயதாகி இருந்தது. மீண்டும் படிக்க வேண்டும் என்று கணவனிடம் போய் நின்றார் ரதிதேவி.

மோகனும் மறுக்க முடியாமல், சரி அதற்கான ஆயத்தத்தை பார்க்கிறேன் என மூன்று மாதம் கால அவகாசம் கேட்டிருந்தார். இதற்கு எதற்கு மூன்று மாதம் என்று யோசனை இருந்தாலும் ரதி என்ன ஏதெனக் கேட்டுக் கொள்ளவில்லை, சம்மதம் சொன்னதே பெரிய விடயமாகத் தான் தோன்றியது.

இதற்கிடையில் அவர்களது திருமணம் தான் பெரிதாய் வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை, திருமணம் வரவேற்பு எங்கேயென, அவனது சக வழக்கறிஞர்களும் தெரிந்தவர்களும் கேட்டுக்கொண்டே இருக்க, மகனின் பிறந்தநாளை பெரிதாகக் கொண்டாடலாமென்று மோகன் திட்டமிட்டிருந்தான்.

அங்குதான் ரதிக்கு வினையே ஆரம்பித்தது. அன்று நிகழ்வில் கலந்து கொண்ட அனைவர் வாயிலும் அரை பட்டார் ரதிதேவி.

அதில் மது அருந்தியபடி பேசிகொண்டிருந்த ஒருவரோ "பரவாயில்லையே மிஸ்டர் மோகன், ஓடிப்போய்க் கல்யாணம் பண்ணீங்கனு கேள்விப் பட்டதும், இவ்வளவு பெரிய பொசிஷன்ல இருக்க நீங்க ஏன் இப்படி பண்ணுனீங்கனு யோசிச்சேன். ஆனா இவ்வளவு அழகான இளமையான பொண்டாட்டி கிடைக்கும்னா யாரா இருந்தாலும் ஓடிப்போகலாம் போலயே, அப்படியே மின்னுறாங்க உங்க வைஃப்" என்றார், அடுத்தவர் மனைவியை இப்படி பேசுகிறோமே என்ற எண்ணம் சிறிதுமின்றி..

மோகனுக்கோ கோபம் உச்சியில் ஏறி இருந்தது. இவர் மட்டுமல்ல வந்திருந்தோர் அனைவரின் பேச்சின் சாரம்சமும் ரதியும் அழகுதான். அவனது நண்பர்கள் என்ற வட்டத்தில் பழகுவர்கள் மட்டும் யோக்கியமானவர்களா என்ன?

எந்த அழகு ரதியின் மோகனுக்கு பிடித்ததோ இன்று அதுவே எரிச்சலை கொண்டு வந்திருந்த உணர்வு.

மோகனோ கோபத்தை அடக்கப் பாடுப்பட்டு கொண்டிருக்க, ரதிக்கும் அது புரிந்தது. ஆனால் அவர் புரிந்து கொண்ட அர்த்தம், மனைவியைப் பேசுவதால் தோன்றிய கோபம் என்பது ஆனால் மனைவி மீதே கோபம் என்று அவர் அறியவில்லையே! அதனால் பேச்சை மாற்ற எண்ணி அவரிடம் வேறு உரையாடலைத் தொடங்க, அதுவோ எங்கோ சென்று, அவர் ஆங்கிலத்தில் பேச இவரும் சாரளமாகப் பேசத் தொடங்கியிருந்தார்.

தனது பன்னிரெண்டாம் வகுப்புவரை ஆங்கில மொழியில் பயின்றவர் நன்றாகக் கற்க கூடிய மாணவியும் கூட, ஆங்கிலம் எந்த அளவுக்கு வருமோ அதே போல் தமிழிலும் கெட்டிக்காரி தான் அவர். அப்படி இருக்கையில் ஒருவர் கேள்வியை ஆங்கிலத்தில் வைத்தால், அதே மொழியில் பதில் சொல்வது இயல்புதானே! ஆனால் அதுவும் அந்நேரம் ரதிக்கு எதிராகவே திரும்பியிருந்தது.

"வாவ்.. எவ்வளவு அழகா இங்கிலிஷ் பேசுறீங்க, எவ்வளவு நேர்த்தியான பேச்சு, பேசாம மோகன் மாதிரி வக்கீலுக்குப் படிங்க, உங்க அப்பா திறம இல்லாமலா போகும்" என்று ரதியிடம் ஆரம்பித்தவர் மோகனிடம் "பாருங்க மோகன், உங்க வைஃப் உங்களுக்கே எதிரா வாதாடுற பெரிய வக்கீலா வருவாங்க" என்க, மோகனுக்கோ சொந்த மனைவி மீதே பொறாமைத் தீப்பற்றி எரிந்தது.

கூடவே, அன்று ரதி மேற்படிப்பை பற்றிப் பேசி இருந்தது ஞாபகம் வர, 'நீ எப்படி படிக்கிறனு நானும் பாக்குறேன்டி' என்று மனதில் எண்ணிக்கொண்டார்.

அன்றிலிருந்து ரதியின் மீது காரணமே இல்லாமல் ஒரு கோபம், அன்றே என்றும் இல்லாமல் வன்மையாக ரதியை நெருங்கி இருந்தார் மோகன்.

அதன் பின் வந்த நாட்களில் மோகனின் செயலில் சிறு மாற்றம் ரதியால் உணர முடிந்தது. எப்பேதும் மோகனின் பேச்சில் வெளிப்படையாக அன்பு தெரியாவிட்டாலும் அவர் தொடுகையில் பேச்சில் ஏதோ ஒரு மூலையில் ரதி தேடும் அந்தக் காதல் இருக்கும் ஆனால் இப்போதெல்லாம் அவருக்கு அது கிடைப்பதேயில்லை.

ஏனென்று அவரே மோகனிடம் கேட்டும் பதில் கிடைக்கவில்லை, ரதியும் விட்டுவிட்டார், அதன் பின் வந்த நாளில் எல்லாம் இரவில் மோகனின் பிடியில் அளவுகதிகமாக வன்மையை உணரத் தொடங்கி இருந்தார் ரதி.

அன்று ஒரு நாள் எழுந்த ரதிக்கோ உடலில் ஏதோ மாற்றம். முதலில் ஒருமுறை தாயாகி இருக்க, அவருக்கு ஏதோ புரிவதை போலிருக்க, உறுதிப்படுத்தும் சோதனையில் குழந்தை உண்டாகியிருப்பது தெரிந்தது.

நரேந்திரன் உண்டாகியிருந்த நாட்களில் ரதி பலவீனமாக இருப்பதாகச் சொல்லிய வைத்தியர் அடுத்த குழந்தையைக் குறைந்தது இரண்டு வருடம் தள்ளிப்போடச் சொல்லி இருக்க, அதற்கான தடுப்பு மாத்திரையை ரதியை தினமும் குடுக்க வைத்து விடுவார் மோகன், கேட்டால் ரதி இல்லாமல் இரவில் இருக்க முடியாது என்று காதல் வசனம் வேறு பேசுவார்.

மாதத்தில் அந்த மூன்று நாட்கள் தப்பித்துக் கொள்வார் ரதி, அப்படி இருக்க இப்போது எப்படி குழந்தை என்று யோசித்தவர், கணவனிடமே கேட்க, சிலநேரங்களில் கடவுளாகத் தர நினைத்தால் நாம் என்ன செய்திட முடியும் என்று கடவுளைக் காரணம் காட்டி இந்த விடயத்தைத் திசை திருப்பியிருந்தார் மோகன்.


அதற்கு மங்கம்மாவிடமிருந்து ரதிக்கு திட்டுகள் தான் பரிசாகியது. கேட்டால் மகனை மயக்கி வைத்ததாகக் காரணம் சொன்னார், ரதிக்கு சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை, இருபது வயதைக்கூட நெருங்கவில்லை இதோ இரண்டாவது குழந்தை, பொறுப்புகள் சுமையாய் கனப்பது போலொரு உணர்வு.

அதன் பின் படிப்பைப் பற்றிப் பேசும் போதெல்லாம் குழந்தையைக் காரணம் காட்டினார் மோகன். படிப்பை நிறுத்த வேண்டியே அந்த மாத்திரைகளைத் தவிர்த்தார். இப்போது விடுவாரா என்ன?

மோகனின் அதீத ஆர்வம் ரதிக்கு ஏதோ போலத்தான் இருந்தது. நரேந்திரன் வயிற்றில் இருந்தபோது கூட மோகனிடம் இவ்வளவு ஆர்வம் தெரியவில்லை, இப்போது அளவுக்கதிகமாகக் குழந்தைமீது ஆர்வம் காட்டுவதாகத் தோன்றியது. இருந்தும் அப்போது அண்ணன் வந்து தங்களை பிரித்து விடுவானோ பதற்றம் அப்படி செய்ய வைத்திருக்கும், இப்போது தான் எந்தப் பிரச்னையும் இல்லையே அதனால் குழந்தையை வரவேற்கிறார் என்றே எண்ணியிருந்தார் ரதி.

அடுத்த குழந்தை கனகாத்தாராவும் இப்போவுலகில் ஜனித்திருந்தாள். அதன் பின் ஒவ்வொரு காரணம் அடுக்கிக்கொண்டே போனார் மோகன், குழந்தை கனகா வளர வேண்டும், பெண்குழந்தைக்கு அம்மா வேண்டும் மகன் பள்ளிக்குச் சென்றபிறகு பார்க்கலாம், குழந்தையை யார் பார்ப்பது? என மோகனிடம் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு காரணம் வரிசை கட்டி நின்றது.

ஒருநாள் இதை விடவே கூடாது பேசிவிடலாம் என்று ரதியும் நேரடியாகவே கேட்டும் விட, மோகணும் வெடித்திருந்தார்.

"ஆமாடி நீ படிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல, படிச்சி என்னத்த கிழிக்கப் போற, அங்கேயும் போய் உன் அழக காட்டி யாரையும் வளச்சு போடப் போறியா? என்ன போல இன்னும் நிறைய இளிச்சவாயன் கிடைப்பான். இப்போவே அழகா இருக்கோம்னு திமிரு, இதுல படிச்சிட்டா கைல பிடிக்க முடியாதே, பேசாம வீட்டுல இருக்குறதுனா இரு, இல்ல பிள்ளைங்கள கொடுத்துட்டு உன் வீட்டுக்குப் போ" என்று கத்தி இருந்தார்.

அதற்கு ரதி எதுவும் பேசவே இல்லை, அமைதியாகக் கைகட்டி மோகனையே பார்த்திருந்தவர் எதுவுமே பேசவில்லை குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

மோகனுக்கு பயமே பிடித்துவிட்டது எங்கே விட்டுச் சென்று விடுவாளோ என்று அவர் இல்லாமல் மோகனால் இருக்க முடியாது என்பது தான் உண்மை. ஆனால் அவர் பயந்து போல எல்லாம் எதுவும் நடக்கவில்லை..

எப்போதும் போலவே இருந்து கொண்டார் ரதி, ஆனால் மோகனிடம் உரிமையான பேச்சுகள் குறைந்திருந்தது. கணவனாக அணுகும் போதும் வழிவிட்டாரே தவிர, அவரிடம் அன்பான தொடுகை எதுவும் இருக்கவில்லை, வருகிறாயா வா.. தொடுகிறாயா தொடு.. பேசவேண்டுமா பேசு, பதில் தானே தருகிறேன். என்று இப்படித்தான் அவர் நடவடிக்கை இருந்தது.

மோகனும் இறங்கிப் போக விருப்பம் இல்லாமல் விட்டுவிட்டார், உரிமையான பேச்சுகள் பஞ்சமாகிப் போனாலும் ஒரு மனைவியாக நடந்து கொள்ள எதிலும் அவர் தவறியதில்லை..

காலப்போக்கில் அந்த வாழக்கையில் தன்னைப் பொருத்தி வாழத்தொடங்கியவருக்கு மனதில் ஒரு வெறுமை தொடர்ந்து கொண்டேயிருந்தது.

மனதில் தோன்றியவற்றுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கத் தொடங்கினார். ஏட்டுக்கல்வி இல்லையேல் என்ன? என்று தன் தொலைபேசியில் புத்தகங்கள் பத்திரிகைகள் என்று வாசித்து அறிவை வளர்க்கத் தொடங்கினார்.

வாசிப்பு தான் அவரை உயிர்போடு வைத்திருந்தது எனலாம். நரேந்திரனுக்கு அப்படியே ரதியின் குணம், கனகத்தாரா பாட்டி மங்கம்மாவின் வளர்ப்பாய் இருக்க ரதி எத்தனை எடுத்துச் சொன்னாலும் கேட்காத குழந்தையாகத் தான் வளர்ந்தாள்.

நரேந்திரனின் பதினாறாம் வயதில் தான் தாயின் எழுத்துகள் அனைத்தையும் வாசித்தவன் அவருக்கு எழுத்துலகம் என்னும் பாதையைக் கைகாட்டி இருந்தான்.

பெற்றவர்களே குழந்தைக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றிருக்கையில் நரேந்திரன் ஒரு தகப்பனாய் மாறி ரதிக்கு வழிகாட்டி இருந்தான். அன்று தொடர்ந்தது ரதியின் மனநிம்மதி தரும் பாதை.

இப்படி வாழ்க்கை சென்று கொண்டிருக்க, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மோகனை பற்றித் தெரிந்து கொண்ட விடயம் அவரை அப்படியே நிலைக்குலைய வைத்திருந்தது.

அதன் பின் அவரோடு இருக்க முடியாமல் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்க, தடையாக இருந்தது என்னவோ அவளது குழந்தைகள் தான். அதனையும் தாண்டிக் குழந்தையையும் அழைத்துச் செல்லலாம் என்று முடிவு எடுத்திருக்கும் வேளையில் தான் மோகனுக்கு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையானார்.

அந்த நிலையில் விட்டுச் செல்ல அவர் மனசாட்சி விட்டுக் கொடுக்கவில்லை, மனிதநேயம் கொண்ட எந்த மனிதனும் அதனைச் செய்யமாட்டான் அதனால் மனைவி என்பதை எல்லாம் தாண்டி, சக மனிதனாகவே மோகனை பார்த்துக்கொண்டார்.

இதோ இப்போது அவர் முடிவை செயல்படுத்தும் காலம் நெருங்கியிருக்க, அதற்காக ரதி தயாராகியும் விட்டார்.

பழைய நினைவுகளின் தாக்கத்திலிருந்து விடுட்டவர், பெருமூச்சுடன் மதிய நேர உணவு சமைப்பதற்காக உள்ளே நுழைந்தார்.

______________________________


அங்கே தாயிடம் பேசிய படி வண்டியை நிறுத்தத்தில் நிறுத்திய நரேந்திரன், சமநிலை தவறி நிறுத்தத்தில் முன்னே நின்றிருந்த ஸ்கூட்டி ஒன்றில் லேசாக மோதிவிட்டான்.

'ஐயையோ இடிச்சிட்டேனே' என்று எண்ணியவன் தொலைபேசியைக் காதிலிருந்து எடுப்பதற்குள், முன்னே நின்றிருந்த ஸ்கூட்டியின் பின்னே அமர்ந்திருந்த பெண் திரும்பிப் பார்த்துவிட்டாள்.

'வாவ் நைஸ் கேர்ள்' என்று எண்ணியவன் முப்பதிரெண்டு பல்லையும் காட்டி இளித்து வைத்தான். அடுத்து ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டிருந்த பெண் இவனைத் திரும்பிப் பார்க்க, அதிர்ச்சியில் சிரிப்பு தன்னால் அடங்கியது.

'அட நம்ம ஷயா டார்லிங் பைக்கா? சிறப்பு' என்று எண்ணியவன் பைக்கை கால்கள் இரண்டாலும் தள்ளிக்கொண்டு அவர்கள் அருகில் வந்தவன் "வெரி சாரிங்க, வேணும்னு இடிக்கல" என்றான் பின்னால் இருந்தவளைப் பார்த்தபடி.

"இட்ஸ் ஓகே" என்றவள் அமைதியாக இருந்து கொள்ள, முன்னே அமர்ந்திருந்தவள் அவனை முறைத்தாள்.

'முறைப்பெல்லாம் பலமா இருக்கு' என்று எண்ணியவன் செல்வதற்கான விளக்கு எரிந்ததும் அங்கிருந்து விடு ஜுட் என்பது போலக் கிளம்பி இருந்தான்.

போகும் அவனையே பார்த்திருந்த, மனோரஞ்சினி "யாரு அக்ஷு இவன், ஒரு மார்க்கமா இருக்கான். உனக்கு முன்னவே தெரியுமா? என்க முன்னே வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த அவளது தங்கை அக்ஷயாவோ "அவன் ஒரு குரங்குப்பய, நான் சொல்லுவேனே எங்க காலேஜ்ல ஒரு வாலில்லாத குரங்கு இருக்குனு அது இவனே தான்" என்றாள் அதில் ரஞ்சனி சத்தமாகச் சிரித்தும் விட, தங்கையும் அவள் புன்னகையில் இணைந்து கொண்டாள்.



கானல் தொடரும்..
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
சூப்பர் எபி 👌❤️

எவ்வளவு கேவலமான புத்தி இந்த மோகனுக்கு 😠

ரதி மோகனைப் பத்தி என்ன தெரிஞ்சிகிட்டா? 🤔

இப்ப என்ன முடிவு எடுத்திருக்கா? 🤔

மாமன் மக படிக்கிற காலேஜ்ல தான் நரேனும் படிக்கிறானா🤩

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 
  • Love
Reactions: MK31

MK31

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 4, 2024
20
27
13
thanjavur
Thank u கா ❤😍
அவன் கேடு கெட்டவன் கா

வரப்போற uds la தெரியும் கா ரதியோட முடிவு..

ஆமாக்கா அவரோட ஆளும் அவ தான் கா மாமன் பொண்ணுனு தெரியாம காதல் விழுந்துட்டாரு
 

MK20

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2023
90
29
18
Tamil nadu
ரதி.... மனமே கனக்குது... சொல்ல வார்த்தையில்லை 🥺🥺. நரேன் நீ நல்லா இருப்ப டா...

நீ ஒரு குரங்குப்பையனாடா 🤣🤣🤭🤭
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️இப்படியும் கணவர்கள் இருக்காங்களே என்ன செய்ய விதி வலியதுன்னு சொல்லுறது போல ரதியின் தலையெழுத்து மோகன் கிட்ட கஷ்டப்படணும்னு இருக்கு 🥺🥺🥺🥺பரவாயில்லை நல்ல மகனை பெற்றெடுத்து விமோச்சனம் கிடைச்சது போல தான். ரவியை பழிவாங்க அவன் தங்கையை அபகருச்சுட்டான் காதல் ங்குற பேருல 🙄🙄🙄🙄🙄🙄🙄