காதல் 03
அக்கா தங்கை இருவரும் நேரே சென்றது அந்த காஃபி ஷாபுக்குத் தான். மனோரஞ்சனி என்னவோ சாதாரணமாகத் தான் அமர்ந்திருந்தாள். ஆனால் அக்ஷயாவில் அப்படி இருக்க முடியவில்லை ஒரு வித பதட்டத்துடன் தான் அமர்ந்திருந்தாள்.
அவர்கள் சொல்லி இருந்த காஃபி வந்ததும் ரஞ்சனி எடுத்துப் பருக, அக்ஷயாவோ வாசலையே பார்த்திருந்தாள்.
"அடியேய்! அக்ஷு என்ன டென்ஷன் உனக்கு? நானே கூலா தானடி இருக்கேன் உனக்கு என்ன டென்ஷன்?" என்றாள் ரஞ்சனி தங்கையைப் பார்த்துப் புன்னகைத்தபடி..
அவளோ "ஏன்டி சொல்ல மாட்ட, நீ கல்லு உனக்கு எங்க உணர்ச்சி எல்லாம் இருக்கு, நீ எல்லாம் சிரிக்கிறதே அபூர்வம் தான் இதுல உனக்குப் பயம் வெக்கம் எல்லாம் வந்துட்டாலும்.. நீ பொண்ணான்னு அடிக்கடி எனக்கே டவுட் வருது" என்ற தங்கையைப் பார்த்து இன்னும் சத்தமாய் சிரித்தாள் ரஞ்சனி.
"அடியேய் உன்ன தான்டி மாப்பிளை பார்க்க வரப்போறாரு எங்க சீனியர் டாக்டர், நீ என்னடான்னா இப்படி கூலா உக்காந்திருக்க கொஞ்சமாச்சும் நேர்வர்ஸ் ஆகுடி?" என்றாள் அக்ஷயா.
அதற்கும் புன்னகைத்த ரஞ்சனியோ "இப்போதானடி பொண்ணானு டவுட் இருக்குனு சொன்ன, இப்போ நேர்வர்ஸ் ஆகச் சொல்லுற, முதல்ல நீ ஒரு முடிவுக்கு வா... இப்போ பொண்ணா நடிக்கணுமா இல்லையா?" என்ற அக்காவை வேற்றுகிரகவாசி போலத்தான் பார்த்து வைத்தாள் அவளது தங்கை.
"எங்க ரஞ்சன் சார் எவ்வளவு சாஃப்ட் தெரியுமாடி? உங்கிட்ட வந்து சிக்க போறாங்கனு நினைக்கும்போது கவலையா வருதுடி.. ஒவ்வொன்னும் அவ்வளவு பொறுமையா சொல்லிக் கொடுப்பாங்க, நாங்ககூட அவருக்குக் கோபமே வராதான்னு ஆச்சரியமா நினைச்சிருக்கோம் தெரியுமா? இத்தனைக்கும் எவ்வளவு பொண்ணுங்க சைட் அடிப்பாங்க தெரியுமா யாரையும் ஹேர்ட் பண்ணாம எட் தி சேம் டைம் அத எங்கரேஜ் பண்ணவும் மாட்டாங்க அவ்வளவு ஹம்பில்" என்று பேசிக்கொண்டே போன தங்கையைத் தடுத்தாள் மனோரஞ்சனி.
"ஹலோ மேடம் உங்க சாருக்கு ஃபிரீ ப்ரோமோஷன் பண்ணது போதும் நிறுத்துறியா? விட்டா நீயே உன் சார்க்கு ப்ரோக்கர் வேல பார்ப்ப போலிருக்கே, உனக்கு நான் தான் அக்கா ஞாபகம் இருக்கா? ஆனாலும் பாரேன் உன் சார் மனிதகுல மாணிக்கம், மிஸ்டர் அபரஞ்சிதனுக்கு இந்த மனோரஞ்சினினு தான் எழுதியிருக்கு அத யாராள மாத்த முடியும்.. பேர் பொருத்தமே பக்காவா இருக்குல" என்று வேண்டுமென்றே தங்கையை வெறுப்பேற்றினாள்.
இவன் தான் மாப்பிளை என்று தெரிந்ததிலிருந்து தங்கை படுத்திய பாடு சொல்லித்தீராதது. அந்தக் கடுப்பிலே தங்கையை வெறுப்பேன்றினாள்.
அதில் அக்காவை முறைத்த அக்ஷயாவோ, "ரொம்ப தான் பண்ணாதடி, உன்ன இன்னும் பிடிக்கும்னு எங்க சார் சொல்லலல" என்றாள்.
அதில் சத்தமாகச் சிரித்த ரஞ்சினியோ "என்ன பார்த்தும் யாராச்சும் பிடிக்கலனு சொல்லுவாங்களா என்ன?" என்று கேட்ட அக்காவின் அழகை பார்த்தவளது மனதிலோ நிச்சயம் மறுக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது. இருந்தாலும் நேரடியாக ஒத்துக்கொள்ள மனம் வராமல், "அதையும் பார்க்கலாம்" என்றாள்.
ரஞ்சினியோ நேரத்தைப் பார்க்க, வருவதாகச் சொன்ன நேரத்துக்கு இன்னும் பத்து நிமிடம் இருந்தது.
"சரி காலைல பார்த்தோமே அந்தப் பையனுக்கும் உனக்கும் இடைல என்ன ஓடுது?" என்க, அக்ஷயாவோ மனதில் 'இவ கண்ணுல இருந்து எதுவும் தப்பாது' என்று எண்ணிக்கொண்டவள் "எனக்குள்ள என்ன? ஒன்னுமில்லயே! நாங்க ஜஸ்ட் ஒரே கிளாஸ் அவ்வளவு தான்" என்றாள்.
"ஓகே ஓகே.. அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்?" என்று கேட்டவள் தான் சொன்னவற்றை நம்பவில்லையெனத் தங்கையானவளுக்குப் புரியவே செய்தது.
அவர்களது காத்திருப்புக்கு சொந்தக்காரன் அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கே வந்திருந்தான்.
__________________
அன்று மாலை நரேந்திரன் வீட்டுக்கு வந்த நேரம், வீட்டின் முன் ஹாலில் தான் அனைவரும் அமர்ந்திருந்தனர். பாட்டி மங்கம்மாவின் குரல் கூடவே தங்கை தாராவின் குரலும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
"உன் மனசுல என்னடி நினச்சிட்டு இருக்க, பேப்பர்ல ரெண்டு எழுத்து கிறுக்குனா நீ என்ன பெரிய புதுமைப் பெண்ணோ? பதினேழு வயசுலயே அடங்காம காதல் கீதல்னு ஓடி வந்தவதானடி ஓடுகாலி, அப்போ மட்டும் என் மகன் சொகுசா தெரிஞ்சான் இப்போ அவனுக்கு உடம்புக்கு முடியலன்னதும் புது மாப்பிளை கேக்குதோ? அதுசரி நீ தான் அழக காட்டி ஊர ஏமாத்துற ஆளாச்சே! எவனும் பெரிய பணக்காரன் சிக்கிட்டான் போலிருக்கு, நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டடி அழிஞ்சி தான் போவ பாரேன்" என்றவர் கத்திக் கொண்டிருக்க, ரதியிடம் எந்த எதிர்ப்பும் இல்லை அமைதியாக நின்றிருந்தார்.
அதில் கோபம் கொண்ட மங்கம்மா "வாயத் திறந்து பேசுடி, அமைதியா இருந்தே சாதிக்கலாம்னு நினைப்பா?" என்க அப்போதும் ரதியிடம் எதிர்வினை இல்லை, மாமியாரை நேர்ப் பார்வை தான் பார்த்து நின்றிருந்தார்.
விடயம் கேள்விப்பட்டு கொதித்துப் போய் வந்திருந்த தாராவுக்கு தாய் மேல் கட்டுக்கடங்காத கோபமும் வெறுப்பும் மேலோங்கி இருக்க, "அதெப்படி பாட்டி அவங்க பேசுவாங்க, அதான் புதுசா ஒன்னு கிடைச்சிருக்குல அந்தத் தைரியம், சீ வெக்கமா இல்ல உனக்கு, பொண்ண கட்டிக் கொடுத்து ரெண்டு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள உனக்குப் புது வாழ்க்கை தேவைப்படுதுல, யாரை பத்தியும் கவலை இல்லை உனக்கு உன் இளமையும் அழகும் வேஸ்ட்டா போய்டக் கூடாது அதான, இத்தனை வருஷம் கூட வாழ்ந்த அப்பாக்கு முடியாதுன்னதும் இப்படியொரு முடிவு. படிக்காட்டியும் நல்ல வித்த எல்லாம் கத்து வெச்சிருக்கமா, நீ பொழச்சிப்ப" என்று அத்தனை வெறுப்பை உமிழ்ந்தாள் தாயின் மீது, ரதிக்கு அந்த வார்த்தைகள் எல்லாம் பெரியதாகத் தெரியவில்லை, உண்மை இல்லாத விடயதுக்கு கவலை கொள்பவர் அவரல்ல, ஆனால் மகள் முகத்தில் தெரிந்த வெறுப்பு ஒரு தயாக அவரை வேதனைப்படுத்தியது உண்மை.
அந்த நேரம் உள்ளே வந்த நரேந்திரனுக்கு பாட்டி, தங்கை பேசியது அனைத்தும் காதில் விழுந்திருக்க, "தாரா மைண்ட் யுவர் வேட்ஸ், யார்கிட்ட என்ன பேசுறோம்னு தெரிந்து பேசக் கத்துக்கோ இன்னொரு வீட்டுக்கு வாழப் போன பொண்ணு மேல கை வைக்க வேணான்னு பாக்குறேன், இல்ல அறைஞ்சி பல்ல கழட்டி இருப்பேன்" என்று தங்கையிடம் கத்தியவன் "பாட்டி, எத்தனையோ முறை சொல்லிட்டேன் அம்மாவ இப்படி பேசாதீங்கனு.. எப்போவும் சொல்லிட்டு மட்டும் இருக்க மாட்டேன். எப்போவும் அம்மாவ ஏதாச்சும் சொல்லிட்டே இருக்கணுமா உங்களுக்கு, அப்படி என்னத்த கண்டுடீங்க?" என்றவன் கோபமாகப் பேச, ரதியோ வேண்டாம் என்பது போல் செய்கை செய்தார். அதுவும் அவரது மாமியார் மங்கம்மா கண்ணில் விழுந்து தொலைத்தது.
"என்னடி நாடகம் ஆடுறியா? சின்னவயசுல இருந்து அவனுக்கு என்னப் பத்தி தப்புத் தப்பா சொல்லிக் கொடுத்து வளர்த்துட்டு, இப்போ நல்லவ போல நடிக்கிற, நல்ல வேள தாராவ உங்கிட்ட விடல... இல்ல அவளையும் உன் இஷ்டத்துக்கு வளர்திருப்ப, அப்பறம் அவளும் உன்னப்போல ஓடுக்காலியாத் தான் ஆகி இருப்பா" என்றவர் மனதில் உள்ள வஞ்சம் எல்லாம் வார்த்தையாய் வெளிவந்தது.
ஒரு வருடம் மகனைத் தன்னைவிட்டு பிரித்துவிட்டாளே, அப்படி அந்த வயதிலேயே மகனை மயக்கி விட்டாளேயென இன்றளவும் கோபம் குறைந்த பாடியில்லை..
நரேந்திரனுக்கோ கோபம் தலைக்கேறினாலும் அமைதியாக இருக்க வேண்டிய நிலை, தான் எது பேசினாலும், பாட்டி கோபத்தை தாயிடமே காட்டுவார் என்பது அவனறிந்தது தானே!
குரலில் கடினப்பட்டு இலகுத்தன்மையை கொண்டு வந்தவனோ "என்னாச்சு பாட்டி ஏன் இப்போ நடு ஹால்ல வெச்சு அம்மாவ திட்டிட்டு இருக்கீங்க?" என்றார்.
அதற்கு மங்கம்மாவோ, "ஆமா உன் அம்மாவ திட்டனும்னு எனக்கு வேண்டுதல் பாரு, எனக்கெதுக்கு வம்பு வேணும்னா உன் ஆமாகிட்டயே கேட்டுக்கோ" என்றவர் முகவாயை திருப்பிக் கொள்ள, நரேன் மனதிலோ 'நீங்க வேண்டுதல் வைக்கலனா தான் அதிசயம்' என்று எண்ணிக்கொண்டவன் "என்னாச்சு மா, ஏன் இப்படியே நிக்கிறீங்க, தாராவும் தனியா வந்திருக்கா" என்க, ரதியிடம் வினவ, அவருக்கோ சங்கடம்.. இருந்தும் சொல்லியாக வேண்டிய கட்டாயமும் இருந்தது.
"நரேன், அம்மா இங்க இருந்து போகப் போறேன். அம்மாக்கு இந்தக் கல்யாண வாழ்க்கை வேணாம். இது இப்போனு இல்ல, நான் முடிவெடுத்து ரெண்டு வருஷம் ஆகுது, ஆனா ஒரு சக மனிசனா நோய்ல விழுந்தவர அப்படியே விட்டுட்டு போக மனசு வரல.. அதனால தான் இந்த ரெண்டு வருசமா ஒரு மனைவியா என் கடமைய செஞ்சேன். ஆனா இனியும் இந்த மனைவி எங்குற விலங்கு எனக்கு வேணாம். நான் போறேன் எனக்கு விவாகரத்து வேணும்" என்றவர் அவர் முடிவைச் சொல்லுகையில் அவர் பேச்சில் அத்தனை உறுதி.
மோகனுக்கு உள்ளே அத்தனையும் ஆட்டம் கண்டு விட்டது. அன்று உண்மை தெரிந்து வீட்டை விட்டுச் செல்கிறேன் என்று சீரியவரை என்ன செய்வதென்று தெரியாமல் அன்று பக்கவாதம் என்ற நாடகத்தைக் கையில் எடுத்திருந்தார். கூடவே அவரது மருத்துவ நண்பரும் இதற்கு உடந்தை. இன்று வரை நாடகம் தொடர்கிறது.
இல்லாத நோய் ஒன்றை இருப்பது போல் கட்டிக்கொள்ள, மோகன் பெரிதும் நடிக்க வேண்டியிருந்தது. அதில் இப்போது குணமாகி விட்டது என்பது போலும் ஒரு நாடகம்.
அவருக்கோ ரதி தன்னில் அடங்கி இருக்க வேண்டும் என்ற ஒரு கொடூர எண்ணம் பரவிப் பல வருடங்கள் ஆகிறது. இன்று அவர் சுதந்திரமாகச் சென்று விட்டார் என்றால் தன்னால் எதுவும் செய்ய முடியாதே என்ற எண்ணம் மனதில் பரவிக் கிடக்க, ஒரு வழக்கறிஞராக யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.
விடயம் என்னவென்று உணர்ந்த நரேந்திரனோ "ம்மா" என்று அழைத்தவனுக்கு அடுத்து என்ன பேசுவதென்று புரியவில்லை தாயின் முடிவு எதுவாக இருப்பினும் அதில் பக்கபலமாக இருப்பது என்பது அவன் முடிவு.
பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டவனோ "உன் முடிவு எதுவா இருந்தாலும் எனக்குச் சம்மதம் ம்மா" என்றவனுக்கு தன் பதிலை எதிர்பார்த்து நிற்கும் தாயின் கண்களில் தெரிந்த உணர்வில் கண்களை மூடி அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டான்.
"என்ன பேசுற நரேன், உனக்குமா புரியல.. இந்த விஷயத்தால் நாம எவ்வளவு தலைகுனிவ சந்திக்கணும் தெரியுமா? அவன் அவன் கேள்விப்பட்டா காரித்துப்புவான் இந்த வயசுல டிவோர்ஸ் கேக்குதான்னு, இதுக்கப்பறம் என் குடும்பத்துல என்னோட மதிப்பு எப்படி இருக்கும்னு நீயே சொல்லேன். இந்தக் கீழ்த்தரமான விசயத்துக்கு நீ சப்போர்ட் வேற பண்ணுறியா?" என்றாள் அவனது தங்கை தாரா.
"உன்ன பத்தி ஏன் அவங்க யோசிக்கணும்னு நினைக்கிற, என்னக்காச்சும் அவங்கள பத்தியோ அவங்க உணர்வுகளைப் பத்தியோ எப்பயாச்சும் நினைச்சு பார்த்திருப்பியா?" என்று எதிர் கேள்வி கேட்ட, அண்ணனிடம் என்ன பதில் சொல்வது என்று தாராவால் முழிக்க மட்டுமே முடிந்தது.
அவளோ "அதுக்குன்னு இந்த வயசுல இதெல்லாம் தேவையா?" என்றாள்.
அதற்கு நரேந்திரனோ "இந்த வயசுல இதத்தான் செய்யணும்னு முடிவு பண்ண நீ யாரு தாரா? இந்த வயசுல தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஒரு வயச சொல்லுறாங்களே! எல்லாருக்கும் அந்த வயசுல கல்யாணம் நடந்துடுதா? இல்லையே, இந்த வயசுல தான் சாகணும்னு ஏதாச்சும் ரூல்ஸ் இருக்கா? அதுவும் இல்ல... அப்பறம் எதுக்கு எல்லாரும் வயச வெச்சு ஓராளோட முடிவ எடை போடுறீங்க?" என்றான். தாராவிடன் பதிலில்லை.
மீண்டும் அவனே "சின்ன வயசுல கல்யாணம் பண்ணிகிட்டா கல்யாணத்துக்கு அலையிறவனு ஒரு பட்டம், இல்லை லேட்டா கல்யாணம் பண்ணிக்கிட்டா முத்துன கத்தரிக்கானு ஒரு பட்டம், பிடிச்சவன் கூட ஓடிப்போய்ட்டா ஓடுகாலினு ஒரு பட்டம், சரி கல்யாணமே பண்ணிக்கலனா ஏதாச்சும் குறை இருக்கும்னு அதுக்கும் ஒரு பட்டம், குழந்தை பெத்துக்கலனா மலடி, புருஷன இழந்துட்டா விதவை, புருசனுக்கு முதல் செத்து போய்ட்டா சுமங்கலி, இதோ வாழ்க்கை வெறுத்து அந்த உறவே வேணான்னு முடிவு பண்ணுனாலும் வயச காரணம் காட்டிவீங்க, இப்படி நீங்களே உங்க பெண் இனத்துக்கு எதுக்கு ப்ராண்டிங் பண்ணுறீங்க? இதே கேள்வி ஏன் ஆண்கள்கிட்ட வரமாட்டேங்கிது? அவங்களுக்கு வேற சட்டம்ல நீங்களா உருவாக்குன சட்டம், இருபது வயசு தொடக்கம் அறுபது வயசு வரை எப்போ வேணா எத்தன வேணா கல்யாணம் பண்ணிக்கலாம் அதுல எந்தக் கேள்வியும் வராது, இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதுனாலும் கல்யாணம் பண்ணிக்காத பொண்ணா தான் தேடுவாங்க, அதுலயும் பொண்டாட்டி செத்துட்டா புது மாப்பிளைனு பேரு, குழந்தை இல்லையா பொண்டாட்டி தலைல பழிய போட்டாச்சு அடுத்த கல்யாணத்துக்கு தயாராகியாச்சு, இதோ அப்பாவும் தானே அம்மாவ கூட்டிட்டு வேற ஊருக்குப் போய்க் கல்யாணம் பண்ணிகிட்டாங்க அப்பறம் ஏன் இத்தனை நாளா, பாட்டி ஒருநாள் கூட ஓடுகாலினு அப்பாவ சொல்லவே இல்லை.. ஓஓ அது பெண்களைக் குறிக்குற சொல்னு உங்க சமூகம் பிரிச்சு வெச்சிட்டாங்களா? என்ன பாட்டி மூச்சுக்கு முன்னூறு தடவ ஓடுகாலினு சொல்லுவீங்களே எங்க சொல்லுங்க பாப்போம்" என்று நரேன் பேசி முடிக்க, அங்கே குட்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி.
அவன் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போய் நின்ற மங்கம்மாவோ "டேய் மோகன் இவ உன் பையன பேசவிட்டு அதுல குளிர்காயிறாடா, இவன உனக்குத் தான் பெத்தாளானு எனக்குச் சந்தேகமா இருக்குடா?" என்ற அம்மாவைப் பார்த்த மோகனோ, "எனக்கும் அந்தச் சந்தேகம் ரொம்ப நாளா இருக்குமா, விடுமா நாய் எங்கயாச்சும் போய்ச் சோத்துக்கு பிச்ச எடுத்துட்டு மறுபடியும் நம்ம கிட்டதான் வரணும்" என்று குரூர புத்தியில் அப்போதும் விடாமல் பேசயவரின் பார்வை மொத்தமும் ரதியிடம் தான்.
'எங்கே என்னை விட்டுப் போய்த் தான் விடுவாயா' என்று கேள்வி கேட்பது போல் ஒரு விறைத்த பார்வை, ரதியோ அவரைப் பார்க்கக் கூடத் தயாராக இல்லை.
நரேந்திரனுக்கு பாட்டியின் பேச்சிலும் அதற்குத் தந்தையின் பதிலும் மொத்தமாய் வெறுத்தே விட்டது. கண்களை மூடித்திறந்தவன், "ம்மா, போய் உன் திங்ஸ் எடுத்துட்டு வா இங்க இருந்து கிளம்பலாம்" என்க, ரதி அவனைப் பார்த்த பார்வையில் அவர் கேள்வி புரிய, "நானும் வருவேன் உன்ன உன் முடிவுல சுதந்திரமா விட்டுவேன் தான். ஆனா தனியா விட்டுட மாட்டேன், ஏன் எனக்கு நீ சம்பாதிச்சு சாப்பாடு போட மாட்டியா?" என்று இறுதியில் அம்மாவை இலகுவாக்கும் பொருட்டு பேசினான்.
அதற்கு மங்கம்மாவோ, "ஆமா உங்கம்மா படிச்ச படிப்புக்கு டாக்டர் வேலையே குடுப்பாங்க பாரு, போப்போய் அவகூட நீயும் பிச்சை எடு அப்போதான் புரியும்" என்க அவனோ அவரை எதிர்ப்பார்வை பார்த்தவன் "அட மங்கம்மா உனக்கு விஷயமே தெரியாதுல, எங்கம்மா எழுதுன ஒவ்வொரு எழுத்தும் இந்த அஞ்சு வருசமா அவங்களுக்கு சோறு போடுது அது உனக்குத் தெரியாதுல, இன்னும் தெரிஞ்சிக்கிட்டு வயிறு பத்தி சாகப்போற, இன்னும் என் அம்மாவோட உழைப்பு மிச்சமா பேங்க்ல பத்திரமா இருக்கு, இனியும் உழைப்பாங்க படிப்பாங்க, சுதந்திரமா வாழுவாங்க, அவரசபட்டு பொட்டுனு போயிடாத எல்லாம் பார்க்கணும்ல அதுக்காகவாவது உனக்கு நீண்ட ஆயுள கொடுனு கடவுள வேண்டிக்கிறேன்" என்றான் திமிராக...
அதன் பின் சரியாக இருபது நிமிடங்களின் பின் ரதிதேவி மீண்டும் பதினேழு வயது பெண்ணாய் சுதந்திரத்தை சுவாசிக்க, அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். கூடவே கவசமாய் மகனும்..
மோகனோ ஒன்றும் செய்யமுடியாத நிலையில் போகும் அவளையே தீப்பார்வை பார்த்தார்.
கானல் தொடரும்...
இப்படிக்கு
உங்கள் பெப்பர் மின்ட் மிட்டாய்
(MK31)